சில தினங்களுக்கு முன் வந்த கனவு, அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த தொடர் உண்மைச் சம்பவங்களைக் கோர்த்து, சற்றே தேவையான கற்பனை கலந்து, சில பெயர்கள், கால மாற்றத்தோடு, விஷயங்களில் சமரசம் இல்லாமல் எழுதப்பட்டது.
அது மிக நீண்ட அக்ராஹார வீதி. சில சதமானங்களுக்கு முன் மூன்று வீதிகள், நானூறு குடும்பங்கள் கூட இருந்ததாக அவன் வீட்டில் பேசிக்கேட்டதுண்டு. இப்போதைய நகர சுழற்சி வேகத்திற்கு இந்தத் தொன்மையான கிராமமும் தப்பவில்லை. தற்போது 20 வீடுகள் இருந்தாலும் 7-8 குடும்பங்கள் மட்டுமே இருக்கிறது. கதையின் களம் திருமங்கலம் அருகில் இருக்கும் இன்றைய நிலையில் சிறு கிராமம். கதையின் காலம் இராஜீவ் காந்தி பிரதமராகவும், சித்தன் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் நேரம். இதைச் சொல்வதற்கு காரணம் உண்டு. கதையின் கிராமத்திற்கு பேருந்து வசதிகள் இல்லாமல் இருந்தது. அந்த கிராமப் பெண்மணி இராசம்மாளின் முயற்சியால் சித்தன் மூலம் பேருந்து வந்து சில தினங்களே ஆகியிருந்தது. சரி அதான் பேருந்து வந்துவிட்டதே இப்போ என்ன என்பவர்களுக்கு, கதையின் முக்கிய பாத்திரம் நரசிம்மன் அவ்வாறு இயக்கப்பட்ட பேருந்திற்காக திருமங்கலத்தில் ஒரு மணிநேரமாக காத்திருந்தான். 'மாலிக்காபூரையே பார்த்தவருடா நம்மூர் பெருமாளு' என்று அவனுக்குச் சரி சமமாய்ப் பழகும் முந்தைய தலைமுறைகள் சொல்வதுண்டு. மேலும் பல பழைய நிகழ்வுகளும் அவ்வப்போது சொல்லுவார்கள். அவற்றை அசை போட்டுக்கொண்டு ஜன்னல் ஓரத்தில் கண்ணயர்ந்தான். இராஜம்மாள் பாட்டியும் அதே பேருந்தில் அமர்ந்திருந்தார். ஊர் அருகில் வந்தது என தங்கையா பாறையின் கிணற்றிலிருந்து வந்த குளிர் காற்று அவனை எழுப்பியது.
ஐப்பசி மாத அடை மழை. கண்மாய்களில், காலாங்கரைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நரசிம்மன் சென்ற காரணம் அதே ஐப்பசி மாத உற்சவ நிகழ்ச்சிக்கே. வைணவ ஆச்சாரியரான அழகிய மணவாள மாமுனிகளின் திருஅவதார திருநாள். அந்த கிராமத்தில் அவரின் வழி வந்தவர்கள் நிரம்ப இருந்தனர். திருவவதார உற்சவத்தைத் அவர்கள் பத்து நாட்கள் நடத்தினர். திவ்ய தேசம் போல் தினமும் ஆழ்வார்கள் திவ்ய பாசுரங்கள், வேதம் எல்லாம் சேவிக்கப்பட்டது. மாமுனிகளின் திருமேனியை பிரதிஷ்டை செய்தவர்கள் இதை பெரிய விழாவாகவே கொண்டாடினர்.
நரசிம்மன் ஊருக்குள் சென்று கொண்டிருந்த நாள், இராஜம்மாள் பாட்டி வீட்டின் அருகில் உள்ள வீடு.பாட்டியோடு சேர்ந்து நடந்து போனான். உற்சவத்தின் ஆறாம் நாள். நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியின் ஆறாம் பத்து அப்போது தான் ஆரம்பமாகிக் கொண்டிருந்தது. அது ஒரு விசாலமான கூடம். அங்கிருந்த பாதுகைகளுக்கு ஆராதனம் நடந்தது. அவை மணவாள மாமுனிகள் பாதுகை என்று ஊரார் சொல்வதுண்டு. திருக்கோஷ்டியூரிலிருந்து வந்திருந்த சாரியார் நடுநாயகமாக திருவாய்மொழி சேவித்துக் கொண்டிருந்தார்.
ஆழ்வார் தூது விடும் பாசுரங்கள் துவங்கியது.நரசிம்மன் அந்த கோஷ்டியில் சேர்ந்து கொண்டான். தமிழ் இலக்கியங்களில் முக்கியமான தூது இலக்கியத்தை முழுதுமாய் பத்து பாடல்களில் அனுபவிக்கிறார். தூதின் வரை மாறாமல் குறுகினங்கள், நாரை, குயில், அன்னம், வண்டு, கிளி என அனைத்தையும் நம்மாழ்வார் தலைவியாகி தலைவனிடம் பாட்டிற்கு ஒன்றாக திருவண்வண்டூரிலிருந்து தூதுவிட,
தூதுவிட்டவுடன் தலைவனாகிய கண்ணன் வராததால் ஊடல் திறத்தில் 'உன்னுடைய சுண்டாயம் நானறிவன்' என்றுரைத்து, ப்ரணயகலகத்தில் திருவிண்ணகர் உப்பிலியப்பன் கோவில் சென்று, மீண்டும் தலைவனின் குண விசேஷங்களில் பெரிதும் ஈடுபட்டு கண்ணன் விளையாட்டுக்களை, பாகவத தசம ஸ்கந்தம் அளவிற்குச் சொல்லி, திருத்தொலைவில்லிமங்கலத்தில் ஆசை மிகுந்து, பித்து பிடித்தது போலாகி தேவபிரானையே தந்தை தாய் என்றடைந்து, இதைக்காண சகிக்கமாட்டாத தாய், தலைவி பசலை நோய் கண்டவளாய் இழந்தது பற்றி இறங்கி, மாலுக்கு இழந்தது பீடே, பண்பே, மாமை நிறமே என்று அலற்றி முடிவில் தன்னுடைச் சாயே என்ன, தலைவி தலைவன் இருக்கும் திருக்கோளூர் நோக்கிச் சென்று உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே என்று அலற்றியதாய் தாய் இரங்க,
அதற்குள் தலைவி, தலைவனுக்கு அடியார்களான புள்ளினங்கள், கிளி, அன்னம் போன்ற பறவைகளைத் தூது விட, இதைக் கேட்டவர்கள் நெஞ்சம் எல்லாம் நீராய் உருக, திருமாலுக்கு பரமபதத்தில் இருக்க முடியாமல் வருமாறு ஆழ்வார் அழைத்து நிற்க, அதற்குள் பெருமான் பரமபதத்திலிருந்து ஒரு உயர்வான இடம் தேடி திருமலையில் குதித்து வேங்கடவானாய் நிற்கும் சமயம், நம்மாழ்வார் அவர்ரடிக்கீழ் அமர்ந்து புகுகிறார் கடைசியாக உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே என்று. இவையெல்லாம் அனுபவித்துச் சொல்லும் போதே நரசிம்மனுக்குக் கண்களில் தரைதாரையாக கண்ணீர் பெருகிற்று. அங்கிருந்த சாரியார் அந்த பக்தியை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். அவர்கள் இதை அனுபவித்ததும் திருவேங்கடமுடையான் கோவில் கொண்ட அந்த தொன்மையான கிராமம்.
எல்லாம் முடிந்த பின் அவர் நரசிம்மனிடம் பேசிக்கொண்டிருந்தார். இருவரும் ஆழ்வாரின் பக்தி நிலை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தனர். சாரியார் நன்கு வைணவம் கற்றவர். மணவாள மாமுனிகள் எவ்வாறு திருவாய்மொழி ஈடு சாதித்தார், அதற்க்கு ஸ்ரீரங்கம் அரங்கநாதப் பெருமான் எவ்வாறு அனுகரித்தார், அப்போது கோவில் அண்ணன் திருமாளிகையில் நடந்தது என்ன, என்பன போன்ற பல விஷயங்களை சொல்லிக்கொண்டிருந்தார். திடீரென சாரியார் மூர்ச்சையாகி நிறுத்தினார்.பின்,
கொடியா அடுபுள் ளுடையானே! கோலக் கனிவாய்ப் பெருமானே!
செடியார் வினைகள் தீர்மருந்தே! திருவேங் கடத்தெம் பெருமானே!
நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேனே.
இந்தப் பாசுரத்தை உரக்கச் சொன்னார். பின் சாரியார் நரசிம்மனை நோக்கி,
'இதை பற்றித் தெரியுமா?'
'ஆழ்வார் எம்பெருமானைக் காண ஒரு நோன்பும் அனுஷ்டிக்காதிருந்துங்கூட, எம்பெருமான் திருவடியைக் காண கண நேரமும் ஆற்றாது தவிக்கிறார்.' என்றான் நரசிம்மன்.
'சரி.ஆனால் இது ஒரு ஐதீக நிர்வாகம் இருக்கு'
'அது என்ன ஸ்வாமி?'
'அது பட்டர் சொன்னதாக ஈட்டில் வருகிறது. ஒருவர் பராசர பட்டரிடம் 'பெருமான் அமுது செய்யும் போது என்ன பாசுரம் சொல்ல வேண்டும் என்று கேட்க, பட்டரோ 'அடியேன் மேவி அமர்கின்ற அமுதே, பச்சைமாமலைபோல் மேனி' என்ற பாசுரங்கள் சொல்லாம் என்கிறார். இதில் ஆழ்வார் 'அமுதே' என்று சொல்வது 'அவனே மற்றெல்லாமும்' என்பது போல், நாம் அவனுக்கு கொடுக்கும் திருவமுதைக் காட்டுகிறது. மேலும் இந்த ரெண்டு பாசுரங்களிலும் ஆறு திருப்பெயர்களைச் சொல்கிறார்கள் ஆழ்வார்கள். அறுசுவை போல.இதை இந்த கிரகத்தில் அனுபவிப்பது சிறந்தது. இந்த உற்சவங்களை நடத்தும் வெங்கடேசன் ஸ்வாமி தீக்ஷை பெற்று பெருமானுக்கு தளிகை கைங்கர்யம் செய்கிறார். அதாவது திருஅமுது' என்று புன்முறுவலுடன் சாரியார் எழுந்திருக்க நரசிம்மனும் வீடு அடைக்கிறான்.
மூன்று நாட்கள் கழித்து மீண்டும் ஊருக்குப் பயணப்படுகிறான். அன்றும் பேருந்து கிடைக்காமல் நேரமாகிறது. கிராமத்திலுள்ள பள்ளி வாத்தியார் வீட்டின் அருகே செல்லும் போதே திருவாய்மொழி சேவாகாலம் நிறைவடைந்து எல்லாரும் வெளியே வருவது தெரிகிறது. நரசிம்மன் சற்றே வேகமாக ஓடினான்.
'இப்போ தான் வரயா.. கோஷ்டி முடிஞ்சுருச்சே.. உள்ள வா..' என்று அழைத்துக் கொண்டு போகிறார்கள் வெங்கடேசனும் அவரின் தர்ம பத்தினி லட்சுமி அம்மாளும். இருவரும் நரசிம்மனோடு நன்கு பேசுகிறார்கள். லட்சுமி அம்மாள் தன் கால்களில் ஏதோ காயம் என்று சொல்கிறார். ஒரு பெரிய தட்டில் பழமும், சம்பாவனையாக சில பணமும் தருகிறார்கள். நரசிம்மன் அவர்களை சாஷ்ட்டாங்கமாக வணங்கி பெற்றுக் கொள்கிறான். பெருமாளுக்குக் கொண்டுவந்ததை அவர்களிடம் தருகிறான் நரசிம்மன். அதற்குள் வெங்கடேசன் ஏதோ பட்டையம் போல் எடுத்துக் கொண்டு வருகிறார்.
நம் சீயாவுக்கு திருநாள் கொண்டாட
நம்பிமார்களுக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் அன்னம் போனகம் கண்டு தெளிய மேட்டில் ஒருபங்கும்,அதன் கிழக்கே ஒரு கானி வருவாயும், நம் கூட்டத்தார் குடுக்கும் வராகனும் ...'
'இது மாமுனி உற்ஸவம் நடக்க பண வசதி பற்றி சொல்லிருக்கு. முழுசா படிக்க முடியல..' என்றான் நரசிம்மன் வெங்கடேச ஸ்வாமியிடன்.
'டிங்டங்.. கன.. கன...'என பலமுறை மணிச் சப்தம் ஒலிக்க, 'சார்.. சார் ..' என்ற பெரிய குரல் கேட்டு நரசிம்மன் திடுக்கிட்டு எழுந்தான். சில வினாடிகள் அவன் எங்கு இருக்கிறான் என்று அவனால் யூகிக்க முடியவில்லை. அதற்குள் வாசலில் மீண்டும் பால்காரன் முருகன் விரைந்து சப்தமிட்டான். சற்றே சுதாரித்த பின் தான் நரசிம்மனுக்கு கனவிலிருந்து விடுபட்டது நினைவிற்கு வந்தது.
ஏதோ ஞாபகம் வர, எழுந்து நின்று தினசரியில் தேதி, வருடம் ,கிழமை எல்லாம் பார்த்தான். மீண்டும் மணி ஒலிக்க பால் வாங்கி வருவதற்குள், அவன் புத்தி பேதலித்தது போல் உணர்ந்தான். காரணம் இல்லாமல் இல்லை. அன்றைய தினமும் ஐப்பசி மாதம், ஒரு வெள்ளிக்கிழமை, மணவாள மாமுனிகள் அவதார உற்ஸவத்தின் முதல் நாள்.
இது போல் 3-4 வெள்ளிக்கிழமைகளுக்கு முன் தான் அந்த செய்தி வந்தது. தன் பிள்ளைகளோடு பட்டிணத்தில் இருந்த லக்ஷ்மியம்மாள் திடீரென்று ஆசாரியன் திருவடி அடைந்துவிட்டார், வெங்கடேசன் மாமா நலமாக இருக்கிறார் என்று. கனவை சற்றே அசை போட்டுப் பார்த்தான் நரசிம்மன். தூக்கி வாரிப் போட்டது என்று சொல்லவேண்டியதில்லை.அப்போது தான் கனவில் லக்ஷ்மி அம்மாள் அவனுடன் பேசிக்கொண்டிருந்தார். அவரின் மறைவால் மாமுனிகள் உற்ஸவம் இந்த வருடம் பத்து தினங்கள் நடக்கவில்லை என்பதை அவன் அறிந்திருந்தான். அந்த நினைவுகளிருந்து விடுபட்டு அலுவலக வேலைகளைப் பார்க்கத் தொடங்கினான் நரசிம்மன்.
இரண்டு தினங்களில் அருகிலிருந்த மடத்தில் ஒரு உபன்யாசம் நடந்து கொண்டிருந்தது. உபன்யாசகர் பேசிக்கொண்டிருந்தார். நரசிம்மன் உள்ளே சென்று அமர்ந்தான்.
'இன்று உன்னதமான நாள். மணவாள மாமுனிகள் திருஅவதார உற்சவதில் அவரது அஷ்ட திக் கஜங்களில் ஒருவரான பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் இயற்றிய 'அந்திமோபாய நிஷ்டை' என்கிற கிரந்தம் பற்றி சொல்லப் பணித்துள்ளனர். அதில் 'ஆசார்ய அபிமானமே உத்தாரகம்', அதாவது சிஷ்யனிடத்தில் ஆசார்யனின் கருணையே சிஷ்யனின் கைங்கர்ய ப்ராப்திக்கு வழி, ஆசாரியனிடத்தில் முழுதும் அடிபணிந்து நிற்றலே எல்லையான வழி என்றும் அதற்கு மணவாள மாமுனிகள் நேரடி உபதேசங்களைத் தாம் ஒரு எழுத்தாணி போல் எழுதியதாக நூலாசிரியர் சொல்கிறார். சாதாரணமாக எல்லாரிடமும் ஒரு கேள்வி வருகிறது. இந்தக் கலியில் எம்பெருமான் நம்மிடம் பேசுவாரா? என்று.
ஆம்!. பேசுவார். நாம் தான் புரிந்துகொள்வதில்லை. இந்த நூலில் மூன்று விதங்களில் எம்பெருமான் நம்மிடத்தில் பேசுவார் என்று வருகிறது. ஸ்வப்ன முகேந,ஆச்சர்ய முகேந,அர்சக முகேந. அதாவது கனவின் மூலம், ஆசாரியன் மூலம், அர்ச்சகர் மூலம் எம்பெருமான் பேசுவான்.
அதாவது கனவில் வந்து ஒரு விஷயத்தைச் சொல்வார். எதுபோல என்னில் சீதை அசோகவனத்தில் இருக்கும் போது, சீதை சகல அலங்காரத்தோடு வடக்கு நோக்கிச் செல்வதாக திரிசடை கனவு கண்டதாய்ச் சொல்கிறார். அதுபோலவே நடந்தது. ஆண்டாள் நாச்சியார் கண்ட வாரணமாயிரம் கனவு.
அடுத்து, ஆசாரியன் நம்மைத் தடுத்தாட்க்கொண்டு நம்மைத் திருத்த நமக்கு நல்விஷயங்களைப் போதிப்பார். கோவிலில் அர்ச்சகர் திருவாராதனம் முடிந்த பின் அவர் சொல்லும் வார்த்தைகள் 'அர்ச்சக முகேந ஹரி:' என்ற வாக்கியத்தின் அர்த்தம்.அது எம்பெருமானே சொல்வது போல '..
மேலும் உபன்யாசம் தொடர்ந்து கொண்டிருந்தது. நரசிம்மனுக்கு மனம் அதில் லயிக்கவில்லை. 'ஸ்வப்ன முகேந' என்ற வார்த்தைகள் மட்டும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்க வீடு வந்தான்.
சில மணி நேரத்தில் லேண்ட் லைன் ஒலித்தது. மறுபுறம் 'நரசிம்மா, நான் ராமானுஜம் பேசறேன். இந்த தடவை மாமுனி உற்ஸவத்தை ரெண்டு நாள் மட்டும் வெச்சுக்கலாம்ன்னு பார்க்கறோம். லக்ஷ்மி மாமி போய் இரண்டு மாசம் தான் ஆகறது. முதல் நாள் சாயங்காலம், ஐப்பசி மூலத்தன்னிக்கு முடிக்கலாம்.நீ கோஷ்டிக்கு வரணும். சீனுகிட்டையும் சொல்லிருக்கேன். அவனும் வருவான். நான் ஊர்ல இருக்க மாட்டேன்… ' நரசிம்மன் சரி என்று மட்டும் பதில் சொல்ல முயன்றான். அதற்கே வார்த்தைகள் கண்கள் வழி நீராய் ஓடியது. அருகிலிருந்த சேரில் அமர்ந்து யோசிக்கத் தொடங்கினான்.
இராமானுஜம் சொன்னது போல் திருவாய்மொழி ஈட்டுப் பெருக்கரான மணவாள மாமுனிகளுக்கு திருவாய்மொழி முழுதும் சேவாகாலம் சேவிக்கச் சென்றான் நரசிம்மன். சீனுவோடு சேர்ந்து இரண்டு நாட்கள் பூர்ணமாய், மிக அமைதியான சூழலில், டைம் பிக்ஸ் பண்ணாது நிதானமாய் கோஷ்டி நடந்தது. இருவரும் முடிந்து வெளியே வரும் போது மழை வெளுத்து வாங்கியது.
'மாரி மாறாத தண்ணம்மலை வேங்கடத் தண்ணலை, வாரி வாறாத பைம்பூம் பொழில்சூழ் குருகூர்நகர்..' இந்த பாசுரம் நிதர்சனம். நம்ப திருவாய்மொழி சேவித்தது திருவேங்கடமுடையான் சன்னதியில். உடனே மழை வந்தது..' என்றார் அர்ச்சகர் கிருஷ்ணன். 'அர்ச்சக முகேந' என்று முணுமுணுத்தான் நரசிம்மன்.
வீடு வரும் வரை அவன் தன் நிலையில் இல்லை. இரவு ஓர் ஊழியாய் நீண்டது போல் இருந்தது. மறுநாள் அவனின் சிறு பெண் கோலம் போட,அவன் மனதில் எதையோ ஓட்டிக் கொண்டே அதையே கவனித்துக் கொண்டிருந்தான். மாவிலைக் கொத்துக் கோலம். ஐந்து வரிசை.ஒவ்வொரு புள்ளியையும் திருப்பாவையின் வரிகள் சொல்லி இணைத்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு கோட்டின் இணைப்பிற்கும் ஸ்வப்ன முகேந, ஆச்சாரிய முகேந, அர்ச்சக முகேந என்று சொல்லிக்கொண்டிருந்தான் நரசிம்மன். திடுக்கிட்டு எழுந்தான்..
'ஆம் - திருநாடு சென்ற மாமி வந்த கனவு, ராமானுஜம் டெலிபோன் கால், அர்ச்சகர் கிருஷ்ணனின் திருவாய்மொழி வரிகள் . . ஸ்வப்ன முகேந, ஆச்சாரிய முகேந, அர்ச்சக முகேந.. ஆச்சரியர்ன்னா ராமானுஜர், மாமுனிகளே அவரின் அவதாரம் தான..'
நிலை தடுமாறி மீண்டும் மீண்டும் அந்த வரிகளையே சொல்லிக்கொண்டிருந்தான்..எம்பெருமான் ஏதாவது ஒரு வகையில் எழுத்தாணிகளை உருவாக்குகிறான். 'செந்தமிழ் வேதியர் சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடும் நாள்..' என்று மாமுனிகள் திருநாள் பாட்டு அருகிலிருந்த மடத்திலிருந்து நரசிம்மன் செவிகளில் பாய்ந்தது. தன்னை அறியாமல் கைகளைக் கூப்பினான்.