சித்திரை உற்சவம் பற்றி எழுதுவதை பலரும் படிப்பதில் மகிழ்ச்சி! சிலர் எந்தப் புத்தகம் என்று கேட்கிறார்கள். குறிப்பிட்ட புத்தகம் என்று இல்லை. பல இடங்களில் (புத்தகம், கல்வெட்டு, தரவுகள்) ஆராய்ந்து எழுதுகிறேன். நன்றி.. 🙏
இன்று எதிர்சேவை பற்றி..
நேற்று நாயக்கர் மாசி திருநாளை சித்திரைத் திருநாளா மாற்றியது பற்றி பார்க்கும் போதே அழகர் வந்ததுனாலஅவரை நேர்ல போய் பார்க்கலாம்னு போனா, எப்பவும் சொல்ற அதே டயலாக் தான் 'போனவருஷத்த விடகூட்டம் அதிகம், எமைக்க முடியல, சாமி அதுக்குள்ள அம்பலகாரர் மண்டகப்படி வந்திருச்சு' என்று கூடநடந்து வந்தவர்கள் சொன்னார்கள்.
எதிர் சேவை - அதாவது எதிர் கொண்டு சேவை சாதிப்பது, சேவை தருவது/பெறுவது. முன்னரே சொன்னதுபோல் இப்போது நடத்தப்படும் உற்ஸவங்கள் பெரும்பாலும் நாயக்கரின் வருகைக்குப் பின் வந்திருக்கலாம். நேற்று, உண்மையில் எதிர் சேவை தான், நாங்க அவரை நோக்கிப் போக அவர் என்னை நோக்கி வர நம்மாழ்வார்சொன்ன மாதிரி 'என்னில் முன்னம் பாரித்து'ன்னு அவர் வேக வேகமா நம்ப கிட்ட ஓடிவந்தாரு. தூரத்தில்அனுமாரின் பச்சைக் கொடி தெரிந்தது,சரி அப்போ அவரு அங்க தான் இருக்காருன்னு போனேன்..
அம்பலகாரர் மண்டகப்படி - விசாலமான கல்மண்டபம். தற்போது பாலம்கட்டியதால் அதன் அழகுகுறைந்திருந்தது.சில வருடம் முன்பு வரை இருட்டற நேரத்துல அதன் வாசலில் நடக்கும் வான வேடிக்கைபார்க்கவே கூட்டம் வரும்.இப்போ வெயிலோடு முடிகிறது.
அழகர் வெளியே வந்து கொண்டிருந்தார்.. டன் டன் என்ற மணி சப்தத்தோடு 'வாராரு வாராரு அழகர் வாராரு' பாடல் விண்ணைப் பிளக்க, இளசுகள் எல்லாம் குத்தாட்டம் போட்டார்கள்..நவவித பக்தில இதுவும் ஒன்னுதான். எங்க அழகருக்கு அது தான் பிடிச்சிருக்கு.. கள்ளர் திருக்கோலம்.. ஏன் மதுரைக்குள்ள வரும் போதுஇப்படி? விழா நடத்தியது நாயக்கர் தான? கொஞ்சம் வரலாற்றில் பின்னோக்கிப் போகலாமா?..
இப்போ நிக்கிற இடத்திலிருந்தே போகலாம்.. அம்பலகாரர்கள் - நாட்டுத் தலைவர்கள்ன்னு சொல்லலாம். ஒருகுறிப்பிட்ட ஜாதி/இனக் குழுவிற்குத் தலைவர்கள்.அவர்களுக்குள் நடக்கும் பிரச்சனைகளைத்தீர்த்துவைப்பவர்கள். சமயங்களில் நாட்டளவில்..முதத்தரையர்கள், கள்ளர் பிரிவில் இவ்வாறுஇருந்திருக்கிறார்கள்.அதாவது பெரிய வீட்டுக்காரரு..
இங்க நாயக்கருக்கு போர் சமயங்களில் இவர்கள் மிகவும் உதவியிருக்கிறார்கள்.அந்த வகையறாவில் ஒருவர்மண்டபத்திற்குத் தான் அழகர் நுழைகிறார் மதுரையில். அப்படி வர அழகர் கள்ளர்கள் (மேலை நாடு- மேலூர்பகுதி, கீழை நாடு - சிவகங்கை பகுதி) அணியும் அணிகலன்களை அணிந்தே வருகிறார். அப்படி என்ன? - வண்டிக்கடுக்கன்,வளரித்தடி, கம்பு, மறக்கொண்டை, தண்டை..
அது எப்படி இருக்கும் - வண்டிக்கடுக்கன் காது மடலோடு ஒட்டியதில்லை, மிகப் பெரிய காது வளையம், அடிப்புறத்தில் கல்வைத்துக் கட்டப்படுகிறது. வளரித்தடி(Vellari Thade/ Boomrang) ஆங்கிலேயர்கள் வியந்தஒருவகை ஆயுதம், தடி போன்ற கம்பு, கீழ் நாட்டுக் கள்ளர் ஆண்கள் இடுகின்ற கொண்டை, தலையில் உருமால்/தலைப்பாகை - இவையே கள்ளர் வேடத்தின் தோற்றமாகும். அழகரும் அந்தக்கால கள்ளர் மரபின்தோற்றத்தையே புனைந்து வரும் செய்தி உறுதிப்படுகிறது. அதாவது 'பெரியாம்பள' என்று சொல்லும் மூத்தவர்போல..
'செயி வளரி தன்னைத் திருமால் முதலையின் மேல் பேசிவிட்ட சக்கரம் போல்..' என்ற அம்மானைப் பாடல்ஒன்று சொல்கிறது. இங்க அழகரும் சக்கரத்திற்குப் பதிலா வளரி கொண்டுவந்தார் போல..இரண்டும் போனாதிரும்ப எய்தவரிடமே வரும்..
சரி, அழகர் ஏன் அப்படி வரணும்?.. இது திருமலை நாயக்கருக்கு சிறிது காலம் கழித்து வந்திருக்கலாம் என்றுயூகிக்கமுடிகிறது.கல்வெட்டுக்களிலோ,ஆழ்வார் பாசுரங்களிலோ இந்த அணிகலன்கள் பற்றிய செய்திகள்இல்லை.அழகர் கிள்ளை விடு தூது கூட இவை பற்றிச் சொல்லவில்லை. இந்த கள்ள வேடம் 300 ஆண்டுகளுக்கு உட்பட்டதாய் இருக்கலாம். இது தொடர்பான செய்தி நாட்டுப்புற அழகர் வர்ணிப்புப் பாடல்கள்மூலம் கிடைக்கிறது.
முன் காலத்தில் அழகர் மலையிலிருந்து மதுரைக்கு வரும் வழியில் அழகர் ஊர்வலம் கள்ளர்களால்வழிமறிக்கப்படுகிறது.அழகர் நகைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன.எங்கும் ஒரே கலவரம். சற்று நேரத்தில்கொள்ளை கூட்டத்தலைவனுக்கு இரு கண்களும் பார்வை இழந்துவிடுகிறது.அவர்கள் நிலையை உணர்ந்துஅழகரிடம் வேண்டுகின்றனர்.
அழகர் அவர்களை மன்னித்து, அங்கே பிரசன்னமாகி 'மலை திரும்பும் வரை கோவில் உண்டியல்களை காக்கும்பொறுப்பை/மிகப்பெரிய கைங்கர்யத்தைக் கொடுக்கிறார்'. தலைவனுக்கும் கண்பார்வைவருகிறது..அவர்களும் தங்களின் அணிகலன்களைத் தந்து அவற்றை அழகர் அணிந்து அறுவென்றும் என, "தமர்உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே" என்று ஆழ்வார் சொன்னது போல் அவர்கள் சொல்வதை அழகரும்ஏற்றுக்கொண்டு அவர்களின் உருவத்தைத் தானும் பூண்டு கள்ளழகராகவே மதுரை வருகிறார்.
இது தொடர்பாக ஒரு சிறு சடங்கு மட்டுமே இப்பொழுதுநடைபெறுகிறது. இது 17ம் நூற்றாண்டின்பிற்பகுதியில் நடந்திருக்கலாம். இது நடந்தது கள்ளந்திரி மண்டபம் அல்லது காரைக்கிணறு என இருகருத்துக்கள் உள்ளன.
இது சம்பத்தப்பட்ட அழகர் வர்ணிப்புப் பாடல் வரிகள்.. (காயாம்பு என்றே அழகரை நாடார் அழைப்பது இங்குவழக்கம்.. 'காயாமலர் வண்ணன்' என்றே ஆழ்வாரும் சொல்கிறார்)
“கள்ளர் வழி மறித்து - காயாம்புமேனியை கலகமிகச்செய்தார்கள் வள்ளலாரப் போது ...
நரசிங்க மூர்த்தி இப்போது கள்ளருக்கு கண்ணு தெரியாமலப்போ - என் செய்வோமென்று கள்ளர் மயங்கிநின்றார் ** புண்ணாகி நொந்து கள்ளர், காயாம்பூ மேனியிடம் புலம்பியேயெல்லாரும் வழிவம்சமாய், நீலமேகத்திற்கு வந்தடிமை செய்யுகிறோம் ஒளிவு தெரியும் படி திறக்க” என வேண்ட
உடனே அழகர் "நான் வண்டியூர் சென்று மீண்டும் மலைக்குத் திரும்பும் வரை என் உண்டியலைத் தூக்கிக்கொண்டு வாருங்கள்" என்று கட்டளையிட்டார்.
"காரைக்கிணர் கடந்தார் - என்னையன் கள்ளர் பயமே தீர்ந்தார்"; "காரைக்கிணறு கழிச்சேன் - கள்ளர் வேஷம்போட்டேன் போட்டேன்" என்ற வரிகள் மற்றோர் பாடலில் வருவதால், இந்நிகழ்வு காரைக்கிணறு பகுதியில்நடந்திருக்கலாம் என்றும் எண்ண முடிகிறது. காரைக்கிணறு என்ற சிற்றூர் அருகில் உள்ளது.
அழகரின் இந்த கள்ளர் வேடத்திற்கு நாயக்கர் கால அரசியல் ரீதியாக பல காரணங்கள் சொன்னாலும், அழகர்நம்மாழ்வார் சொன்ன '..திருமாலிருஞ்சோலை வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து..' என்றவரிகளை மெய்ப்பிப்பதாகவே தெரிகிறது.
கள்ளழகர் அம்பலகாரர் மண்டகப்படியிலிருந்து மற்ற மண்டபடிகளுக்கு வர, அனுமார் பச்சைக்கொடியோடுநாங்களும் ஓடிக்கொண்டிருந்தோம்.அங்கே வாசலில் பெரியவர் ஒருவர் அழகரின் அருள் வேண்டி தள்ளாதவயதிலும் தடியோடு நின்று கொண்டிருந்தார். அவரைச் சூழ்ந்து போட்டோ கிராஃபர்கள் அழகரைப் படம்எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
சுருக்க எழுதியே மற்றதை கவர் செய்ய முடியவில்லை...
அடுத்து - (திருமாலை) ஆண்டான், ஆயிரம் பொன் சப்பரம், பேசும் பெருமாள்-தீர்த்தவாரி..
-- கிரி 04/23, குதிரை வாகனம், வண்டியூர்.
வளரித்தடி