Sunday, December 17, 2017

சங்கத் தமிழ்மாலை - திருப்பாவை

 பட்டர் பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை: 

       கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்*
        சோதி மணி மாடம் தோன்றும் ஊர்*
        நீதியால் நல்ல பக்தர் வாழும் ஊர்*
        நான்மறைகள் ஓதுமூர்*
        வில்லிபுத்தூர் வேதக் கோனூர்**

        பேதநன்கறி வார்களோடிவை பேசினால்பெரி திஞ்சுவை
        யாமொன்றறி யாதபிள்ளைக ளோமைநீநலிந் தென்பயன்
        ஓதமாகடல் வண்ணாஉன்மண வாட்டிமாரொடு சூழறும்
        சேதுபந்தம் திருத்தினாயெங்கள் சிற்றில்வந்து சிதையேலே
                                                            (நாச்சியார் திருமொழி - 2.7)

                                     பெரிய வீதியில் 'வெள்ளை நுண் மணல் கொண்டு தெருவணிந்து  வெள்வரைப்பதன்  முன்னம் துறை படிந்து' எல்லாம் கடந்து பல வருஷங்கள் ஆகிறது.. அகண்ட வீதியில் போட்டி போட்டு அம்மா போட்ட கோலத்திற்கு வண்ணம் தந்து ( காப்பி தூள் காய வைத்து, பூசணிப் பூவை சாண உருண்டையில் வைத்து), அதைப் பாதியில் நிறுத்தி மார்கழி பஜனை சேர்ந்து, திருப்பள்ளியெழுச்சி பொங்கல் வாங்கி வீடு வந்த அந்த துவரிமான் டிசம்பர் விடுமுறை நாட்களை மறக்க முடியாது. இப்போது காலம் மாறி, (நிஜ) பஜனை கூட வாட்சப் குழுவிலோ, கான்பெரென்ஸ் காலிலோ நடக்கலாம்.. அது தொலைவில் இல்லை.. இரண்டு நாள் முன்பாகவே இருக்கும் வாட்சப், முகநூல் நண்பர்கள்-குழுக்கள் எல்லாம் மார்கழி பற்றி பழைய புதிய செய்திகளைப் அனுப்பத்தொடங்கிவிட்டார்கள். இதுவும் ஒருவகையில் கூடி இருந்து குளிர்ந்து தான்.ஒரு மாதம் முழுதுமே ஒரு ஆழ்வார், ஒரு தமிழ் பதிகத்திற்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டது இது ஒன்று தான். ஒரு காரணம் ஆண்டாள், மற்றொன்று அவரின் அண்ணனான இராமானுசர் என்னும் மாமுனி செய்த உபகாரம்ன்னு சொல்லலாம். நான் தினமும் நெற்றில் திருநாமம் இட்டு செல்வதால் (அமெரிக்கா கிளைண்ட் லொகேஷன் உட்பட) சில ஆந்திர-தெலுங்கு நண்பர்கள் திருப்பாவை பற்றி பேசுவதுண்டு. அதில் ஒருவர் சொன்னபோது ஆச்சர்யப்பட்டேன் - ' திருப்பாவையை சந்தை முறையில், தீக்ஷை எடுத்து கத்துக்கணும் என்று என் வீட்டில் சொன்னார்கள்; யாராவது சொல்லித்தர இருக்கிறார்களா?' - சொன்னவர் தெலுங்கு நண்பர். நானோ பாட்டையே புத்தகம் வைத்து மனனம் செய்தவன். கிருஷ்ண தேவராயர் 'ஆமுக்த மால்யதா' என்று ஒரு இலக்கியமே தெலுங்கில் எழுதி ஆண்டாளின் மீதான தன் பக்தியைக் காட்டினார். இது நம் தமிழில் இருக்கும் ஐயம்பெரும் காப்பியம் போல் தெலுங்கில். வழக்கம் போல் தமிழில் உள்ள பக்தி இலக்கிய பெருமையை அடுத்தவர் சொல்லித் தெரியவேண்டிய நிலையில் இன்றைய சமூகம் உள்ளதென்பது வேறு.

இதை எழுதும் போது, சிலநாள் முன் நாசா சொன்ன 'இராமர் பாலம்' பற்றிய வீடியோ வந்தது வாட்சப் மூலம். இதற்க்கு 'சேது பந்தம்' என்று மங்களாசாசனம் செய்ததே ஆண்டாள் தான். இன்றும் அரசாங்க முத்திரை ஆண்டாள் கோபுரமே, ஆண்டாள் சொன்ன பேரே அந்த திட்டத்திற்கு. தமிழில் பெண்களுக்கு ஏழு பருவங்கள் சொல்வதுண்டு - பேதை, பெதும்பை,மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை,பேரிளம் பெண். இதில் பேதை பருவம் எட்டு வயது வரை.. ஆண்டாள் பேதை பருவத்திலேயே சொன்னது திருப்பாவை- நாச்சியார் திருமொழி. அது எப்படி சாத்தியமென்னில்,
               * அவரே பூமிபிராட்டியின் அவதாரம். இதை நாச்சியார் திருமொழியில் சொல்கிறார் - "பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்குப் பண்டொருநாள் மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம் தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசியிருப்பனகள்"  என்று வராஹர் தனக்கு உபதேசித்த வார்த்தைகளை சொல்கிறார்..
               * விஷ்ணுவை தன் சிந்தையில் எப்போதும் வைத்திருக்கும் பெரியாழ்வார் திருமகளாய் பிறந்தது. அதாவது அவரையே தனக்கு ஆச்சார்யனாய்ப் பற்றி, அவரிடம் தான் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக, ஆழ்வாருக்குப் ப்ரியமான எம்பெருமான் (விஷ்ணு) மீது பக்தியை வளர்த்துக் கொண்டு, கண்ணனைக் கொண்டாடியதோடு மட்டுமில்லாமல், தானே இடைப் பெண்ணாய் மாறி பாவை நோன்பும் நோற்றாள். இது விஷயமாக ஆண்டாளே நாச்சியார் திருமொழியில் சொல்வது ' வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டுமே '  என்று.

                      "ஹேமந்தே ப்ரதமே மாஸே.." என்ற ஸ்ரீமத் பாகவத புராண ஸ்லோகத்தில் ஆயர்பாடிச் சிறுமிகள் கண்ணனை வேண்டி கார்த்தியாயினி தேவியைக் குறித்து விரதம் இருந்தார்கள் என்று சொல்கிறது. அதையே தான் இருக்கும் தெற்குக் கோடியில் அனுஷ்டித்தாள் ஆண்டாள். எப்படி என்று பெரியவாச்சான் பிள்ளை திருப்பாவை அவதாரிகையில் சொல்கிறார் "அநுகாரம் முற்றி இடை நடையும், இடைப் பேச்சும், முடை நாற்றமும் தன்னடையே வந்து சேர்ந்தது".. அதாவது பக்தி (காதல்) மேலிட்டு,எல்லாவற்றிலும் 'நானே தானாயிடுக' என்ற நிலை.. இதே போல் நம்மாழ்வாரும் 'கடல் ஞாலம் செய்தேனும் யானே' என்ற திருவாய்மொழி முழுதும் அனுபவிக்கிறார். ஆண்டாளைப் பொறுத்தவரை, ஸ்ரீவில்லிபுத்தூர் தான் 'ஆயர்பாடி' (இது தென் மதுரையின் திருமல்லி வளநாடு, ஆகவே இது கோகுலம் ஆவதில் வியப்பில்லை); இங்குள்ளவர்களே ஆயர் குலத்தவர்கள்; வடபெரும் கோவிலுடையானே கண்ணன்; இவை எல்லாம் சேர்ந்த போது ஆண்டாளின், நடை, உடை, பேச்சு எல்லாம் மாறியது.. (பிராமணப் பெண்ணான ஆண்டாள் - கோழி அழைப்பது, எருமை சிறுவீடு என்றெல்லாம் தன் பாசுரத்தில் ஆயர் பேச்சுக்கள் பேசியது முதல்). இதெல்லாம் சரி, உடலின் நாற்றம் எப்படி மாறும் - அதீத பக்தியில் அதைப்பற்றிய நினைப்பே இருக்க 'முடை நாற்றம்' தோன்றியது..

சென்ற முறை திரளி போன போது 1935-ம் வருஷம் வெளியான ஒரு புத்தகத்திலிருந்து எடுத்தது



ஆழ்வார்கள் யாவரும் எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப்பெற்று, சம்சாரி சேதனர்களை அவர் தம் உறக்கத்துநின்று எழுப்பினார்கள்; ஆண்டாளோ தானே பூமிப்பிராட்டியானதால் தானே சென்று எம்பெருமானை எழுப்பிச் சேதனர் பால் அவனுக்குள்ள ரக்ஷண பாத்யதையை அறிவுறுத்தினாள். இதை "ஆழ்வார் எல்லாரும் எம்பெருமானிடத்திருந்து மயர்வற மதிநலம் அருளப் பெற்று நம்மை எழுப்பினார்கள் இந்த ஜீவாத்ம உஜ்ஜீவிக்கைக்காக. ஆண்டாள் நித்ய ஸூரியான படியால், எம்பெருமானை எழுப்பி நம்மை உஜ்ஜீவிக்கிறார் (நம்பிள்ளை திருவாய்மொழி, திருவிருத்த வ்யாக்யானம்) ". திருப்பாவை பெருமையை பலவாறும் வியக்கியானகர்த்தாக்கள் சொல்லியிருக்கிறார்கள் - 'வேதமனைத்திற்கும் வித்து கோதை தமிழ் ஐஐந்தும் ஐந்து' என்ற எளிய வரியில் சொல்லிவிடலாம். எம்பெருமான்-ஆச்சாயர் வைபவம் - பாகவத கைங்கர்யம் என்ற மூன்று முக்கிய நிலைகளில் திருப்பாவை பாடப்பட்டுள்ளது..இதை ஈட்டிலில் சொல்லப்பட்ட ஒரு கதையால் அறியலாம் - எம்பெருமானாரிடம் சிஷ்யர்கள் தேவரீர் திருப்பாவை வ்யாக்யாநித்தருள வேணுமென்னா நிற்க, அவர், “திருப்பல்லாண்டு எம்பெருமானுக்கு மங்களாசாசனஞ்செய்யும் ப்ரதம பர்வம் ஆரும் சொல்லலாம், திருப்பாவையோ பாகவத கைங்கர்யஞ்சொல்லும் சரம பர்வம் ஆராலும் சொல்லுப்போகாது” என்றாராம். எம்பெருமானார், மேலும், எம்பெருமானோடேயே எப்போதுமுள்ள நாய்ச்சிமாராலும் அவனோட்டை சம்பந்தத்தை ஆண்டாள் போலச் சொல்லவொண்ணாது, ஆழ்வார்கள் எல்லாரும் கூடினாலும் ஆண்டாள் போலச் சொல்லவோண்ணாது என்றாராம். (koyil.org)

ஊரின் பெருமையைச் சொல்லித் தலைக்கட்டமுடியாது.. இரண்டு ஆழ்வார்கள் அவதாரம் செய்தது. ஆயர்பாடியோடு ஒப்பீடும் படி தான் இந்த ஊர் இருந்தது என்பதற்கு பல மேற்கொள்கள் இருக்கின்றன.
** அன்னவயல் புதுவை - மென்னடை அன்னம் பறந்து விளையாடும் என்றவிடத்தில், எப்படி அன்னம் பால்-தண்ணீர் இரண்டையும் தனியாய் பிரிக்குமாப் போலே ஸ்ரீவில்லிபுத்தூர் மாந்தர்கள் எல்லாம் அன்னம் போல் எம்பெருமான்பக்கலில் மட்டும் தன்னை ஈடுபடுத்தினார்கள்.

** சீர்மல்கு ஆய்ப்பாடி என்று ஆய்ப்பாடிக்கு மங்களாசாசனம் செய்கிறார் ஆண்டாள் திருப்பாவையில்.. தான் ஆய்ப்பாடியாய்க் கண்ட ஸ்ரீவில்லிபுத்தூரும் அவ்விதமே என்பதனை மணவாள மாமுனிகள் 'பாரில் சீராரும் வில்லிபுத்தூர் மதியாரும் ஆண்டாள் தோன்றிய ஊர்' என்று தம் உபதேசரத்னமாலையில் சொல்கிறார். இதற்க்கு வ்யாக்யானம் செய்த பிள்ளை லோகம் ஜீயர்  "இவர்கள் தான் வாழ்வாக வந்துதித்தவர்களாகையாலே ஊர்களும் 'சீரும் செல்வமும் எங்கும் தழைத்திருக்கும் படி ஸம்பத் வ்ருத்தியை உடைய ஸ்ரீவில்லிபுத்தூர். அதாவது பொன்னும் மணியும் முத்தும் சேர்ந்தார்ப் போலே, பொன்னடியையுடைய ஸ்ரீவில்லிபுத்தூர் உறைவானையும், மணிவல்லி என்னும் படி ஸ்த்ரீரத்னமான நாச்சியாரையும், முத்தாகரமான சோதியில் அவதரித்து, 'இக்கரையேறி இளைத்திருந்தேன்' என்னும்படி ஒரு கரை சேர்ந்திருக்கிற முக்த ப்ராயரான ஆழ்வாரையும் உடைத்தாயிருக்கையாலே நிரவாதிக நித்ய ஸ்ரீயை உடையாதாயிருக்கை..... 'சீர்மல்கு ஆய்ப்பாடிச் செல்வத்திற்ப்போலே ஆழ்வாரும் திருமகளாரும் கோபஜந்மத்தை ஆஸ்தானம் பண்ணி குணானுபவைக யாத்திரையாய்ப் போருகையாலே 'மலிபுகழ்வண்குருகூர்' என்கிறபடியே கிருஷ்ண குணங்களாலே பூர்ணமாயிருக்கையைப் பற்றச் சொல்லவுமாம்"

திருப்பாவையின் அறிய கருத்து, செய்திகளை பலரும் வ்யாக்யானங்கள் செய்திருக்கிறார்கள்/செய்ய விழைந்திருக்கிறார்கள். அண்மையில் கேட்ட ஒரு உபன்யாசத்தின் சாரம்.. திருப்பாவை பாசுரங்களை மூன்று பகுதிகளாகப் பிரிக்கின்றனர் பூர்வர்கள். முதல் ஐந்து பாசுரங்கள், அடுத்த பத்து பாசுரங்கள், அடுத்த பதினைந்து பாசுரங்கள் என்று வகைப்படுத்தி அர்த்தம் சொல்லலாம். பெரியாழ்வார் சொல்வது போல் 'அப்போதைக்கப்போது என் ஆராவமுதமாய்' திருப்பாவை ஒவ்வொருமுறை படிக்கும் போதும் ஒரு விஷேச அர்த்தம் தரும், ஆனால் எல்லாம் ஒரே நேர் கோட்டில் செல்லும் - முடிவு 'இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாமாட் செய்வோம்'..

                               நம்மாழ்வார் முதல் பாசுரத்தில் பிரணவத்தை மறைத்து காட்டுகிறார் - உயர்வற-மயர்வற-அயர்வரும்; திருப்பாண் ஆழ்வார் மூன்று பாசுரங்களில் இதைக் காட்டுகிறார் - அமலன் - உகந்த - மந்தி எனத் தொடங்கும் பாசுரங்கள்... கம்பராமாயணமும், பரிபாடலும் - உலகம் என்றே தொடங்கும். ஆண்டாள் ப்ரணவத்தை விரித்துக் காட்ட திருப்பாவை முப்பதும் செப்பினாள். திருமந்திரம் என்பது சாஸ்திரம். அதில் ப்ரணவம் மந்த்ர ஷேசம். ப்ரணவம் அ-உ-ம என்ற எழுத்துக்களால் (குண சந்தி என்ற சம்ஸ்கிருத இலக்கணத்தால்) உருவானது. நாராயண உபநிஷத் இப்படிச் சொல்கிறது. "ப்ரத்யகானந்தம் பிரம்ம புருஷன் ப்ரணவஸ்யரூபம்|  அகார உகார மகார இதி|".. பரமபுருஷன் (பரமாத்மா) ப்ரணவ ரூபமாய் இருக்கிறார். அந்த ப்ரணவம் மூன்று எழுத்துக்களால் அமைகிறது. அகார உகார மகார ரூபமாய் இருக்கையாலே மூன்று அஷரமாய் இருக்கும்;
இவை ஓரோர் அஷரங்கள் ஓரோர் அர்த்தங்களுக்கு வாசகம் ஆகையாலே மூன்று பதமாய் இருக்கும்; இம் மூன்று பதமும் கூடி ஓர் அர்த்த விஷேஷத்தைக் கொடுக்கும். நம் திருப்பாவை, இந்த மூன்று அக்ஷரங்களை (எழுத்துக்களை) கொண்டதாய் இருக்கிறது என்று(ம்) அர்த்தம் காட்டப்படுகிறது.

முதல் ஐந்து பாசுரங்கள் - மார்கழி, வையம், ஓங்கி, ஆழிமழை, மாயனை எனத் தொடங்கும் பாசுரங்கள்..
  *  'அ'கார வாச்யனான எம்பெருமான் விஷ்ணுவைக் குறிக்கும். பாசுரங்கள் முழுதும் எம்பெருமான் பற்றியே வியாபித்து இருக்கும். அவன் ஒருவனே தஞ்சம் என்பதனை 'நாராயணனே நமக்கே' என்ற முதல் பாடலில் காட்டுகிறார்.
  * பகவதே விஷயம்- 'விண்ணோர்கருமணிக்கத்தை அமுதை' என்கிறபடி, நாராயண விஷயமான பஞ்ச ஸ்வரூபங்களை ஐந்து பாசுரங்களில் வைக்கிறார் ஆண்டாள் - பரத்வம், வியூகம், விபவம், அந்தர்யாமி , அர்ச்சை என்ற ஐந்து நிலைகள்.
 * சேஷித்த விஷயம்; அதாவது சேஷத்வம்;
* காரண விஷயம் - 'காரணம் தானே' என்று ஆழ்வார் சாதித்த படி.
* மந்தர சேஷமாய், ஸ்வரூப விஷயமாய், சாஸ்திரமாய் இருக்கும். கீதையின் பிரதம சர்க்கத்தின் பொருளைக் கொடுக்கும்.
* திருமந்திரத்தின் அர்த்தமான திருமொழியின் சாராம்சமாய், பர ஸ்வரூபத்தைக் காட்டுகிறது.
* 'நாராயணாய வித்மஹே' என்பதின் விவரணம்; வேதத்தின் சிரஸாய், பரம ரஹஸ்யமாய் இருக்கும் வேதம் சொன்ன எம்பெருமானின் வடிவைக் காட்டுகிறது..

இரண்டாவது பத்து பாசுரங்கள் - புள்ளும், கீசுகீசு, கீழ்வானம், தூமணி, நோற்றுச்சுவர்க்கம், கற்றுக்கறவை, கனைத்திளம், புள்ளின்வாய், உங்கள்புழக்கடை, எல்லே எனத் தொடங்கும் பாசுரங்கள்..

* 'உ' கார சப்தத்தின் வாசியைச் சொல்லும். அதாவது பாகவத விஷயமாய்   உள்ளது.
* அனைத்து பாசுரங்களில் பட்சி பற்றியே வரும். அதாவது அவற்றை ஆச்சாரியனாக கண்டு, எம்பெருமானிடத்தில் நம்மைச் சேர்க்கும் விஷயமாக காட்டுகிறார். 'சேர்ப்பார்களைப் பக்ஷிகளாக்கி' என்றது  'ஆச்சார்ய ஹிருதயம்' .
* நர விஷயம் - நர நாராயணனை உலகத்து என்ற திருமொழி படி.
* கருட விஷயம், ஜீவாத்ம உத்தாரணமாய், ஆச்சாரியனைப் பற்றி.
* சரண்ய விஷயம்- பாரதந்திரியம் பற்றிச் சொல்லும்
* ரூப, காரிய விஷயமாய், த்வயம் பற்றியது இப்பத்தும்.
* திருவாய்மொழியின் சாராத்தமாய், 'வாசு தேவாய தீமஹி'  என்ற அர்த்தம் பொருந்தி, ஆச்சரியனைப் பற்றினால் 'நாயகனாய்' கோவில் வாசல் புகலாம் என்கிறது இப்பாசுரங்கள்.

மூன்றாவது பதினைந்து பாசுரங்கள் - நாயகனாய், அம்பரமே, உந்துமதகளிற்றன், குத்துவிளக்கு, முப்பத்து, ஏற்ற, அங்கண், மாரிமழை, அன்றிவ்வுலகம், ஒருத்திமகனாய், மாலேமணிவண்ணா, கூடாரை, கறவைகள், சிற்றம் சிறுகாலே, வங்கக்கடல் எனத் தொடங்கும் பாசுரங்கள் ஜீவாத்மாக்கள் செய்யவேண்டிய அனுஷ்ட்டானங்கள் பற்றியது..

* 'ம'கார சப்தத்தின் பொருள் சொல்லும் பாசுரங்கள்.
* பக்தி-ப்ரபக்தி-அனுஷ்டான விஷயமாய் (நாயகனாய்) எம்பெருமானுக்கு மங்களாசாசனம் (அன்றிவுலகம் இத்யாதி).
* ஆச்சார விஷயமாய், போக்கியத்து விஷயம் கைங்கர்யம் என்பதைக் காட்டுகிறார் - 'உனக்கே நாமாட்ச் செய்வோம்'.
* சரம ஸ்லோக அர்த்தமாய் , இயற்பா சொல்லும் விஷயங்களை, வேதத்தின் அடி போல், 'விஷ்ணு ப்ரசோதயாத்' என்று சொல்லி, ஜீவாத்மாக்களை உஜ்ஜீவிக்க ஆச்சார அனுஷ்ட்டான விஷயங்களைச் சொல்கிறது இந்தப் பதினைந்து பாசுரங்களும்.

இவை போல் வராகர் சொல்லும் உபாயமாக 'நாம சங்கீத்தனம்' பற்றியே பூமிப்பிராட்டின் அவதாரமான ஆண்டாள் சொல்கிறார்.. 'பாடி' என்ற சப்தம் அநேக இடங்களில் திருப்பாவையில் வருவதும் இதை விளக்கும்..
'பரமன் அடி பாடி', 'உத்தமன் பேர் பாடி',  'வாயினால் பாடி' இத்யாதிகளோடு 'பாடிப்பறை கொண்டு' என்று முடிக்கிறார் ஆண்டாள் இறுதியில்.. 'பேசியிருப்பனகள்' என்று நாச்சியார் திருமொழியில் சொல்வது திண்ணம்...!


*திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே; பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே; மறுவாரும் திருமல்லி வளநாடு வாழியே; வண்புதுவை நகர் கோதை மலர் பாதங்கள் வாழியே*

No comments:

Post a Comment