"ம்ம்.. உங்களைக்கேட்டா தெரியும்" எதிர்ப்பட்ட அலுவலக நண்பர்கள் பேசியது..
'சொல்லுங்க'..
'இந்த பெருமாள் தசாவதாரம், கொஞ்சம் வரிசையா, சீக்குவன்சா சொல்லுங்க.. உங்களைத்தான் தேடினோம்'.. (நெற்றியில் திருமண்ணோடு அலுவலகம் போவதால் இந்த மாதிரி சில கேள்விகள் எனக்கு பாஸ் செய்யப்படும்:))
'சரி.. மீனோடு ஆமை கேழல் அரி குறல்....'(கடகடவென திருமங்கை ஆழ்வார் பாசுரம் சொன்னேன் தசாவதார வரிசை பற்றி)..
'அட.. மெதுவா தமிழ்ல்ல சொல்லுங்க...'
'!..ஓ..மீன், ஆமை, வராகம்..' , வரிசையில் சொன்னேன்.. 'இது எதுக்கு கேட்டீங்க?'..
'வீட்ல கொலு, தசாவதார செட் இருக்கு.. வரிசை தெரியாது.. அதான்..'..
'எத்தனை படி'
'அஞ்சு படி, கிட்டத்தட்ட பத்து வருஷமா வைக்கறேன்.. போனவருசம் என்னோட சித்தி வச்சாங்க., ஸோ, கவனிக்கல.. அந்த போட்டோ எடுத்து பாக்கணும். அப்போ அந்த புத்தா எந்த எடத்துல வருவாரு.?'
'புத்தர் பத்தி எனக்குத் தெரியாதுங்க.. நான் படிச்ச தமிழ் பாட்டுல அவரு வரல..'..
'இல்ல கடைல அப்படித்தான் இருந்தது..'
அதற்க்கு மேல் நான் ஒன்னும் சொல்லவில்லை.. பேச்சு டார்வின் உயிர் கோட்ப்பாடு பத்தி போக, நானும் வழக்கம் போல் 'டார்வின் புதுசா ஒன்னும் சொல்லல, நம்ப கிட்ட இருந்து சுட்டதுதான்' என்று வாதிட்டேன்.. இது நேற்று அலுவலகத்தில் டீம் நண்பர் ஒருவர் கேட்டது, தொடர்ந்து நடந்த சம்பாஷணைகள்..
கொலு பற்றி கொஞ்சம் சொல்லுங்க இல்ல எழுதுங்க என்று 2-3 நண்பர்கள் கேட்டார்கள்.. சரி பார்க்கலாம், எல்லாத்துக்கும் நேரம் கூடி வரணும்.. இந்த கொலு அனுபவம் பற்றி, அமெரிக்காவில் இருக்கும் நம்மவர்கள் வீட்டில் நடக்கும் கொலு பார்த்து எழுத முற்பட(2013), முடியாமல் போய் இப்போது தொடர்ந்தேன்.. இந்த கொலு பற்றி நேரடியாக ஆழ்வார்கள் சொல்லவில்லை என்றாலும், இந்த வார்த்தை அப்போது புழக்கத்தில் இருந்திருக்காது.. இதற்கு சமமாக 'நிற்க, நிறுத்தல், வீற்றிருத்தல், திருவோலக்கம்' என்ற வார்த்தைகளை சொல்லலாம்.. முதல் மூன்று வார்த்தைகளும் அநேக இடங்களில் பாசுரங்களில் வருகிறது.. 'திருவோலக்கம்' உரையாசியர்களின் நடைகளில் வருகிறது.. திருவாசகத்தில் (கோயில் மூத்த திருப்பதிகம் ) இந்த வார்த்தை அப்படியே வந்து இன்றைய கொலுவின் அர்த்தத்தைக் காட்டுகிறது..
"தேசா நேசர் சூழ்ந்திருக்குந் திருவோ லக்கஞ் சேவிக்க
ஈசா பொன்னம் பலத்தாடும் எந்தாய் இனித்தான் இரங்காயே" (திருவோலக்கம் - அத்தாணி மண்டபத்தில் வீற்றிருக்கை)
இப்போ ஆழ்வார் பாசுரங்கள் சில... இந்த கொலு நம்மாழவார் காலம் தொட்டே இருந்தது.. ஆம், அவர் கோவிலில் இருக்கும் அர்ச்சாரூபமான பெருமானை கொலு வீற்றிருக்கும் அழகைப் பாடுகிறார்.. பின் ஆண்டாள் கொலு வைத்தாள்..
நம்மாழ்வார் சொல்வது..
வீற்றிருந்து ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம் மா பிளந்தான் தன்னை
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?
வீற்றிருந்து ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல-
**திருநாட்டில் திருவனந்தாழ்வான் மீது பெரியபிராட்டியாரோடுகூட எழுந்தருளியிருந்து “பொங்கோதஞ் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும், அங்காதுஞ் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான்” என்கிறபடியே உலகமெல்லாம் செங்கோல் செலுத்தி நியமிப்பவனாய், இங்ஙனம் நியமிப்பதற்குறுப்பான ஞானம் சக்திமுதலிய திருக்குணங்கள் நிரம்பப்பெற்றவனாய் தன்னுடைய ப்ரபுத்வத்தினால் கொடுங்கோன்மை காட்டாதே சாந்தியோடே யிருந்து ஆள்பவனாய், ஸ்ரீக்ருஷ்ணாய்த் திருவததரித்துக் கேசிவதம் பண்ணினவெனக்கு எற்றைக்கு மேழேம்பிறவிக்கும் ஒரு குறையில்லை யென்றாராயிற்று.***
மேலும் வானமாலை பதிகத்தின் துவக்கத்தில் நம்மாழ்வார் சொல்வது இப்படி..
"சேற்றுத் தாமரை செந்நெலூடுமலர் சிரீவர மங்கலநகர்,
வீற்றிருந்த எந்தாய். உனக்கு மிகையல்லே னங்கே."
இன்னும் ஒரு படி மேல போய், இப்போ நாம பண்ற கொலுவுக்கு ஏற்ற மாதிரி ஒரு வரி, அதே வானமாலை பதிகத்தில்.,
"தேறு ஞானத்தர் வேத வேள்வியறாச் சிரீவர மங்கலநகர்,
ஏறிவீற்றிருந்தாய். உன்னை எங்கெய்தக் கூவுவனே?"
(வானமாமலைப் பதியிலே குடியேறி பெருமை தோற்ற எழுந்தருளியிருக்குமவனே என்று அர்த்தம்.. கொலுப்படிகளிலும் என்று இப்போ ஒரு ஸ்வாரஸ்யத்திற்கு வச்சுக்கலாம்)..
இப்போ ஆண்டாளுக்கு வரலாம்.. ஆண்டாள் எங்க கொலு வச்சா, அவளே குழந்தை என்று கேட்கலாம்.. "நாமம்ஆயிரம் ஏற்ற நின்ற" என்ற தம் நாச்சியார் திருமொழியில் 'சிற்றில் வந்து சிதையாமே' என கண்ணனைச் சொல்லுகிறார்.. அதாவது ஆண்டாள் உள்ளிட்ட ஆயர்பாடி சிறுமிகள் எல்லாரும் மணல் வீடு கட்டி விடையாடும் போது, கண்ணன் வந்து அதைக் களைத்தான் என்றும், அவ்வாறு செய்ய வேண்டாம் எனவும் ஆண்டாள் ப்ராத்திக்கிறார். இப்போ நம் வீடுகளில் குழந்தைகள் வைக்கும் கொலு போலத்தான் இது., இன்றைய நிலையில், பார்க், ஏர் போர்ட், ரயில்வே ஸ்டேஷன் என்றெல்லாம் குழந்தைகள் தங்கள் பங்கிற்கு வைப்பது போல, ஆண்டாள் அப்போதே இதை துவக்கிவைக்கிறார் என்று கொள்ளலாம்.. இன்னும் கொஞ்சம் அதிகமாக, அதே பதிகத்தின் துவக்கத்தில்,
"நாமமாயிர மேத்தநின்ற நாராயணாநர னேஉன்னை
மாமிதன்மக னாகப்பெற்றா லெமக்குவாதைதவிருமே.."
இதில் 'நின்ற' என்ற சொல்லிற்கு 'நித்ய விபூதியிலே ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கும்' என்றே சொல்கிறது வ்யாக்யானம்.. ஒரு முறை இராமானுசர் ஸ்ரீரங்கம்வீதியில் நடந்து வரும்போது, வாசலில் சிறுவர்கள் மணல் வீடுகட்டி, பெருமாள், புறப்பாடு எல்லாம் செய்வது போல் விளையாடுவதைக் கண்டு சந்தோஷித்தார்.. சிறுவர்களும் இவரை அழைத்து (பொய்க்கா பொய்க்கா)தீர்த்தம், சடாரி முதலின தந்தனர் என்று ஸ்ரீவைஷணவ குரு பரம்பரை சொல்கிறது.. இதுவும் இன்று காணும் கொலு விளையாட்டுக்கு ஒரு அடிப்படை தான்.. இது போல பல இடங்களில் இருக்கும் ஒரு விஷயம், இன்றும் பல்கிப்பெருகி, இரண்டு நாள் அலுவலகம் லீவு போட்டு கொலு பொம்மை அடுக்க, படி செட் பண்ண என்று வளர்ந்திருக்கிறது.. இதுவும் ஒரு வகை பக்தி தான்..
இப்போ நம்ப அனுபவத்திற்கு வருவோம்.. சுஜாதா தீபாவளி பற்றி சொல்லும் அனுபவம் போல, உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் கொலு போன அனுபவம். அதுவும் கரண்ட் இல்லா கிராமங்கள் முதல், கரண்டே போகாத வெளிநாடு வரை.. பெரும்பாலும் இந்த நவராத்ரி ஒட்டியே காலாண்டு தேர்வு விடுமுறை வரும்.. வழக்கம் போல் துவரிமான் போய் சில நாட்கள் தங்குவோம்.. அது இரண்டு புறமும் வீடுகளுள்ள பெரிய அக்ரஹாரம். கொலு வைக்காத வீடுகளே இருக்க முடியாது.. இப்போதிருப்பது போல் ஸ்டீல் படிகள் இருக்காது.. அப்போதைக்கு படிகள் தயார் செய்யப்படும். சிலரிடம் மரப்படிகள் இருக்கும்..
எங்க ஆத்தில் (வீட்டில்) தாத்தாவின் சேர், முக்காலி, பழைய குடங்கள், இரண்டு மூன்று தலைமுறை முந்தின ட்ரங்கு பெட்டிகள், உயர்ந்த கட்டில்கள் எல்லாம் சேர்த்து தான் படி செய்வோம்..மேலே ஒரு வெள்ளை நிற 10x5 வேஷ்டி விரித்தால் ஒன்னும் தெரியாது.. .. வீட்டில் கரண்டும்இருக்காது.. வெளிச்சத்தோடு இந்த ஏற்பாடு முடியும்.. துணியில் சுற்றி, போன வருஷம் வைத்த பொம்மைகளை நாம் தொட முடியாது.. நமக்கு தனியா கீழ பார்க் செய்து விளையாடலாம்.. இதற்க்கு கொல்லைப்புறம் இருக்கும் வைகை ஆற்றிலிருந்து மணல், ஒதுங்கும் கிளிஞ்சல்கள், கூலான் கற்கள், செடி, காட்டுப்பூ எல்லாம் நாங்கள் எடுத்து வருவோம். பெரிய விசாலமான கூடத்தில் இருக்கும் பெரிய ஊஞ்சல் கழற்றிவைக்கப்படும் கொலுவிற்காக.. நானும் பிடிக்கறேன்னு ஒருபக்கம் தூக்குவோம். பார்க்கில் அகழிகள், தெப்பக்குளம் எல்லாம் வைத்து பிளாஸ்டிக் மீன் மிதக்கவிடுவோம்.. காலை எழுந்தவுடன் பல் கூட தேய்க்காமல் அதை வந்து பார்த்து, இரசித்து பலரும் வந்து தூண்டியபின் பல் தேய்க்கவே போவோம். ஆண்பிள்ளைகள் வேலை இதோடு முடியாது.. சாயங்காலம் யார் வீட்டில் கொலு, எவ்வளவு படி, எது உயர்ந்த பொம்மை என்று ஒரு ரவுண்டு போக வேண்டும்.. கடைசிப் படியில் (மேலே) இருக்கும் பொம்மை கிட்டத்தட்ட சீலிங் இடிக்கும் அளவிற்கு இருக்கும் சில வீடுகளில், அவ்வளவு பெரிய பொம்மைகள். கண்டிப்பாக செட்டியார் பொம்மை இருக்கும் சிறு கடையோடு, தசாவதார செட் இதாயத்தி எல்லாம் வழக்கம்.. அந்த நாட்களில் போட்டோ வசதி இல்லாதது இப்போது வருத்தமாய் இருக்கிறது, இருந்தால் இது போல் எழுத மாட்டோம் என்பது வேற விஷயம்..இவையெல்லாம் சில தொலைத்த தருணங்கள் இப்போது. ஊஞ்சல் கட்டுமளவிற்கு கூடத்தை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. நாங்களும் இந்த அவசர யுகத்தில் வாழ்கிறோம் என்றே ஓடுகிறது..
ஒரு நாளைக்கு அதிகபட்சம் பத்து வீட்டிற்கு போவார்கள் பெரியவர்கள்.. அது போல் நம் வீட்டிற்கும் வருவார்கள்.. கண்டிப்பாக பாட்டு உண்டு.. சுஜாதா ஸ்ரீரங்கத்தில் சொல்வது போல் அபத்தமான இருக்காது.. இனிமையாகப்பாடுவார்கள், பக்க வாத்தியம் இல்லாமல்.. 'கிண்கிணி நாதமும் காதினுள் கேட்குதே, என்ன தவம், தாயே யசோதா, மாமவ பட்டாபி இராமா', அம்புஜம் கிருஷ்ணா, பாபநாசம் சிவம் பாடல்கள் என்று உருப்படிகள் போகும்.. ஒரு சிலருக்கு ஒரு பாட்டு மட்டுமே தெரியும்.. ஒன்பது நாளும் அதை அலுக்காமல் பாடுவதையும் கேட்டிருக்கிறேன். சித்தி, அம்மா கூடவே நாம போனதுதான் 'சுண்டல்'.கையில் ஓலையில் செய்த கொட்டான் இருக்கும்..அதில் சுண்டலை நிரப்பிக்கலாம்.. அவ்வப்போது புட்டு, ஏதாவது கேக் செய்வார்கள்.. பெரும்பாலும் சுண்டல் தான்.ஆனால் அந்த ஒன்பது நாளும் சாயங்காலம் போவதே தெரியாது.. 'டேய் இங்க வாங்கடா, இந்தா சுண்டல்' என அதிகமாய் செய்து வேறு வழி இல்லாமல் கொடுத்த வீடுகளும், வாங்கிய தருணங்களும் உண்டு.. இந்த நிகழ்வுகளுக்கு நேர் மாறாய் இருந்தது திருவல்லிக்கேணி கொலு என்று கேள்வி.. இது வரை போனதில்லை..
இந்த அனுபவங்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல் இருந்தது அமெரிக்கா கொலு அனுபவம்.முதல் முறை என்னை அழைத்தார்கள் நியூ ஜெர்சி சன்னதி தெரு (!) நண்பர்கள். நான் வழக்கம் போல் ஆழ்வார் பாசுரம் சொல்லலாம் என்றேன்.. சிறிய திருமடல்..(நமக்கு பாடத்தெரிந்தாலும் யாரும் கேட்கமுடியாது.. பிஎஸ் வீரப்பா பாடுவது போல் இருக்கும் என்பதால், நமக்குத் தெரிந்த ஒரு விஷயத்திற்கு ஐடியா தருவது.. இதுவும் இந்த ஐடி-யில் கத்துண்டது. :) ) எல்லாருக்கும் ஆனந்தம்.. முழு சம்மதமான்னு தெரியாது. ஆனால் மிகச் சிறப்பாய் போனது அந்த வருஷம்.. அமெரிக்காவிலுமா இப்படி கொலு என்று வியந்தேன். சின்ன வித்தாயசம்., சுண்டலோடு முடியாது, ஸ்னாக்ஸ்., நேரத்தைப் பொறுத்து டின்னர் வரை சென்றது. கொட்டான் தேவை இல்லை.. 'டு கோ' அவசியம் இல்லை, இருந்தாலும் தனி பேக் இருந்தது. இளைஞர்கள் வாய்ப்பாட்டு முதல் வாத்தியம் வரை கலங்கினார்கள்.அக்ரஹாரத்தில் நடந்து ஓடியது போல் இல்லாமல், காரை எடுத்துண்டு மத்தியானம் கிளம்பி ஒரு ரவுண்டு அடித்துவிட்டு வரலாம். என்ன வீக் எண்டு தான் போக முடியும். நான் கொலு வைத்து அவர்களை அழைக்கவில்லை என்ற ஒரு வருத்தம் தான்.. சரி எல்லாரும் இந்தியா வாங்கன்னு சொல்லிட்டு வந்தேன்., இங்கயும் வைக்கலைங்கறது வேற விஷயம் :)..பார்க் கட்ட மணல் தேடி ஓடவில்லை.. சில வீடுகளில் ரோபோ வைத்திருந்தார்கள்.. நம்ப மதுரைகாரர் ஸ்ரீ குமார் பழைய கிருஷ்ணரை இந்தியாவிலிருந்து அழைத்து வந்து கஷ்டப்பட்டு சரி செய்த கதையைச் சொன்னார் ஒரு முறை.. சிலர் பேஸ்மென்ட் முழுதும் படி வைத்து நிரப்பியிருந்தனர்.இன்னும் கொஞ்ச நாட்களில் வால்மார்ட்டில் கொலு பொம்மை விற்கும் நாள் வரும். ஸ்ரீ அரங்கராசன் அந்த வருஷம் வைஷ்ணவ கொலு வைத்திருந்தார். எல்லாரும் இந்தியாவையும், கலாச்சாரத்தையும் மறக்க, மாற்றவில்லை.. அங்குள்ள நிலைக்கு மேம்படுத்தி நம் கலாச்சாரத்தை உயர்த்திவருகிறார்கள் அந்த நாடுகளிலும்.. பொலிக, பொலிக, பொலிக!..
நியூ ஜெர்சி கொலு படங்கள்-2013: ஸ்ரீ ஸ்ரீநிவாசன்-ஸ்ரீமதிசாந்தி, ஸ்ரீகுமார், ஸ்ரீ.அரங்கஇராசன், ஸ்ரீ.வெங்கட் கோபி, ஸ்ரீ.புருஷோத்தமன்,ஸ்ரீ சுபாஷ் அவர்களின் இல்லங்களில்..
(20 வருஷத்துக்கு முன்ன துவரிமான்ல கொலு பார்த்த நினைவும், மகிழ்ச்சியும் நேத்து ஸ்ரீகுமார் கொலுவில்! வழக்கம் போல ஒரு ஏக்கமும் தான்!)
அப்பறம் அந்த தசாவதாரப் பாடல்.. இப்படித்தான் சந்தேகம் வரும்ன்னு ஆழ்வார் வரிசைப்படுத்திப் பாடினது..
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்த்
தானாய் பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னைக் கண்ணபுரத்து அடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன்சொல் தமிழ்மாலை செப்பப் பாவம் நில்லாவே
(திருமங்கை ஆழ்வார் - பெரிய திருமொழி).
ஆனான் ஆளுடையா னென்றஃதேகொண் டுகந்துவந்து,
தானே யின்னருள்செய் தென்னைமுற்றவும் தானானான்,
மீனா யாமையுமாய் நரசிங்கமு மாய்க்குறளாய்,
கானா ரெனாமுமாய்க் கற்கியாமின்னம் கார்வண்ணனே (நம்மாழ்வார்-திருவாய்மொழி)
No comments:
Post a Comment