Friday, September 8, 2017

செம்மஞ்சேரி ஆண்டாளும் சோழிங்கநல்லூர் பால்கோவாவும்

செம்மஞ்சேரி ஆண்டாளும் சோழிங்கநல்லூர் பால்கோவாவும் -
நாவலூர் அலுவலகம் நாலு வருசமா போனாலும், பேருந்தில் போகும் போது பார்ப்பதுண்டு - குறை தீர்க்கும் கோவிந்தன் ஆலயம் என்று பளீச் வடகலை திருமண்ணோடு.. சரி, இன்னிக்கு சாயங்காலம் போகலாம்ன்னு நினைத்து ஆபிஸ் போனாத்தான், இராத்திரி பத்து மணிக்காவது கிளம்பமுடியும். அப்போ எங்க கோவில் போறது, பெருமாளே ஆண்டாள் சொன்னது மாதிரி (பள்ளிகொள்ளுமிடத்து அடிகொட்டிட) ஸ்ரீரங்கம் போயிருப்பார் தாச்சிக்க(தூங்க). மறுநாளும் இதே கதை தான்.. ஒருமுறை நண்பரை அழைக்க, அவர் வேற ஏதோ தெய்வத்து கோவிலைக் கூறி அழைக்க, பிளான் கேன்சல். அப்பறம் சோழிங்கநல்லூர் வாசத்தில் (உறங்க மட்டும் வீட்டிற்க்கு வருவதால் அது வாசம் தான் ) அந்தக் கோவிலை நினைக்கவே இல்லை. 'என்னில் முன்னம் பாரித்து' என்பது இந்தப் பெருமானுக்கு இருக்காது போல.. அஞ்சு வருசமா பாரிக்கவே இல்லை, கோவில் பக்கத்தில் இருக்கும் கிரௌண்ட்ல் கிரிக்கெட் விளையாடப் போனாலும்.. இன்னிக்கு என்னாமோ பிளான் பண்ணி, கடைசில அங்க போக உத்தேசமானது..

நல்ல, பழமையான கிராமம். ஊரின் பழைய பெயர் 'செம்மன்னன் சேரி'.. இப்போ 'செம்மஞ்சேரி'.. சௌனகர் திருக்கடல்மல்லை போகும் முன் இங்கு வந்ததாகச் சொல்கிறது ஒரு வரலாறு.. கோவில் உடுப்பி மன்னர் ஆட்சியில் கட்டப்பட்டதாக இருக்கலாம். (ஆங்காங்கு தென்கலை திருமண்ணும் இருந்தது ). கோவில் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது.. அட 'சன்னதித் தெரு' என்ற பெரிய போர்டு. அப்பறம் கோவில் வாசல், வாசலில் பூக்கடை.. கிராமம் என்றாலும் ஐடி தாக்கம் நன்றாய் தெரிந்தது விலையில், 'துளசி முழம் 25 ரூவா, முல்லை முழம் 25 ரூவா சாமி'... சரி இந்த ஹெல்மெட் இங்க இருக்கட்டும், என்று பூ வாங்கிக்கொண்டு உள்ளே போக, கோவில் என்பதற்கு உறுதியாக, கார், டூவீலர் பூஜை நடந்து முடிந்திருந்தது, எலுமிச்சம்பழம் நசுக்கப்பட்டு, நம் கால்களிலும் மிதிப்பட்டது. சரி, இவர்கள் 'எல்லாம்' படித்தவர்கள் இல்லை என்ன செய்வது..

நல்ல விசாலமான இடம்.. இந்து சமய அறநிலையத்துறைக்கு நல்ல லக், விண்ணைமுட்டும் கட்டங்கள் நிரம்பி வழியும் இடத்தில் இப்படி ஒரு கோவில்... நுழையும் போதே, வேணுகோபாலன் சந்நிதி. கொடிமரத்தோடு கூடிய 6 சன்னதிகள் கொண்ட கோவில். பழைய கோவில் படத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், கோவில் இப்போது இழைக்கப்பட்டுள்ளது எனலாம். நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீனிவாசர் ஸ்ரீதேவி, பூதேவியோடு, தனிச் சந்நிதியில் அலர்மேல் மங்கை தாயார், ஆண்டாள் எல்லாரும்.. சக்கரத்தாழ்வார் - நரசிம்மர் இல்லாது இப்போ இருக்கற கோவிலா., இராமர் பரிவாரம், அனைத்து ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் திருமேனிகள்.. ,சிறிய வடிவில் அழகிய உற்ஸவ மூர்த்திகள்., சிறிய வாகனங்கள்.. பொதுவாக கும்பகோணம் பக்கம் காணப்படும் 'வெண்ணைக்கு ஆடும் கண்ணன்' (ஒரு கையில் வெண்ணையோடு கொஞ்சம் பிடிவாதமாய் ஆடும் கிருஷ்ணன்) இங்கு இருக்கிறார்.. சென்னையில் வேற எங்கையும் பக்க முடியாது.. ஏதோ நாயக்கர் நிர்வகித்திருப்பார் போல.. 

அர்ச்சகரிடம் சிறிது பேச்சுக் கொடுத்தேன் - 'அண்ணா, முன்ன யாரும் வறதில்ல, ஐடி வந்ததோ, நல்ல கூட்டம், கோவில் வருமானத்திற்கு குறைவில்லை.கோவில் கீழ இறங்கி விழற மாதிரி போயிருத்து.. இந்த ஐடிகாரா தான் முழுசா கட்டியிருக்கா.. வைகுண்ட ஏகாதசிக்கு 25,௦௦௦ பேர் வரா.. கோவில் நன்னா நடக்கறது, பட்டர் தான் இல்லை., நான் மைலாப்பூர், இங்கயே வந்துட்டேன்., அவர் தாசில்தார் ஆபிஸ்ல் வேலை பார்த்து ரிட்டயர்டு ஆனவர், இப்போ சன்னதி பார்க்கரா.. அரசாங்கக் கோவில், உற்ஸவம் எல்லாம் பண்ண முடியாது.. எல்லாத்துக்கும் இவ்வளவு தான்னு ஒரு தொகை சொல்றா...'.. தாயார் சன்னதியில் இருந்த அர்ச்சகர், ஒரு முதியவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்..'இப்போதாவது வந்து கைங்கர்யம் பண்ணனும்னு எண்ணம் வந்ததே, அதுவே தாயார் அனுக்கிரகம், அதுக்கே சந்தோசப்படணும்..' ஆஹா, என்ன ஒரு பெரிய அர்த்தம்.. வேதமும், ஆழ்வாரும் இதைத்தானே சொல்கிறார்கள் (இவையென்ன உலகியற்க்கை), இவரும் இந்த இந்தச் சின்ன கிராமத்தில் சொல்கிறாரே என்ற ஆச்சர்யம்.. திருப்பாவை கல்வெட்டாய் மிளிர்கிறது. அந்தப்பக்கம் அலுவலகம் போறவங்க எல்லாம் இங்க போய்ட்டுவாங்க.. அது வேற உலகம், அவ்வளவு அருமை!"ஓஎம்ஆர் திருப்பதி" என்று மாறும் காலம் வெகு தூரம் இல்லை..இப்போது வரும் தெலுங்கு பேசும் பக்தர் கூட்டம் இதை நிரூபிக்கிறது, மேற்கொண்டு செய்யப்படும் வாகன பூஜைகள் எல்லாம். சீக்கிரம் ப்ரம்மோற்ஸவம் காணுவார் பெருமாள்.. 

கோவிலிருந்து கிளம்பினோம்., நண்பரின் காலில் மீண்டும் எலுமிச்சம்பழம் மிதிப்பட்டது.. கோவிலின் நேர் எதிரில் சிரித்த முகத்தோடு ஜெ.. ஆம்., 'அம்மா உணவகம்'..இராணி மங்கம்மாள் ஒரு நிமிஷம் கண் முன் வந்து போனார்.. இராணி மங்கம்மாள் செய்த நற்காரியங்கள், பேரனாலும், விசுவாசமாய் இருந்தவர்களாலும் அவருக்கு ஏற்பட்ட வருந்தத்தக்க முடிவு/இறப்பு எல்லாம்..

வரும் வழியில் சோழிங்கநல்லூர் அரசு பால் பண்ணையில் பால் சாப்பிட்ட போது (பால்,தினம் வாங்கும் பாக்கெட்டை விட மிக சுவையாக இருந்தது.. இவர்கள் எல்லாம் ஐடி கம்பனிகளில் ஒரு கடை ஓபன் பண்ணலாம்., பணம் அரசுக்காவது போகும்), அங்க பால் கோவாவும் பேமஸ் என்று தெரிந்தது.. சரி ஆண்டாளையும் பார்த்தாச்சு, பால் கோவா வாங்க வேண்டியது தான்.. அட இது நம்ப அரசாங்க முத்திரையோடு, அதான் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தோடு..











more details & photos at temple site ..
http://semmancheri-srinivasa-temple.blogspot.in/

No comments:

Post a Comment