வெம்பியெரி கானகமு லாவுமவர் தாமினிது மேவு நகர்தான்
கொம்புகுதி கொண்டு குயில் கூவ மயிலாலு மெழிலார் புறவு சேர்
நம்பியுறை கின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நன்னு மனமே - பெரிய திருமொழி 5-10-6
(மரக்கொம்புகளில் தமது தோகைகளை அசைத்து அசைத்து குயில்கள்
கூவ, மயிலினங்கள் ஆடிக்கொண்டிருக்க எழில் நிறைந்த பொழில் சூழ்ந்த
சோலைகளால் சூழப்பட்ட இந்த நந்திபுர விண்ணகரத்தில்தான் தன்
மனைவியொடும் தம்பியொடும் கொடிய கானகமெல்லாஞ் சுற்றித்திரிந்த
ராம்பிரான் உறைகிறான் )
குடைத்திறல் மன்னவ னாயொருகால் குரங் கைப்படை யா,மலை யால்கடலை*
அடைத்தவ னெந்தைபி ரானதி டம்மணி மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி*
விடைத்திறல் வில்லவன் நென்மெலியில் வெருவச்செரு வேல்வலங் கைப்பிடித்த*
படைத்திறல் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே* -பெரிய திருமொழி
(நென்மெலியென்னும் நகரத்தில் காளையின் வலிவுபோன்ற வலிவையுடையனான வில்லவனென்கிற அரசன் அஞ்சி நடுங்கும்படி யுத்தத்திற்குக் கருவியான வேற்படையை வலக்கையிலே பிடித்தவனும் ஆயதங்களை ஆளத்தக்க மிடுக்கை யுடையனுமான பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே)
இன்று, சுதந்திர தினம். அலுவலகத்தில் தேசியக் கொடி கொடுக்க முற்படும் போது (ஒரு ஈமெயில் மூலம் தகவல் சொல்லி), 'ஸ்வீட்ஸ் அட் மை டெஸ்க்' என்ற மெயில்-க்குக் காட்டும் அக்கரையில் பாதி கூட யாரும் காட்டவில்லை. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. ஒருவர் என்னிடம் வாதிட்டார், இன்று ஒரு உலக நடிகர் பேசுவது போல் -எது சுதந்திரம் என்று.. கொஞ்சமல்ல, நிறையவே கவலையாக இருக்கிறது.. நாம் சுதந்திரத்தின் பெருமையை, ஆனந்தத்தை இழந்து வருகிறோம்.நாம் பட்ட அடிமைத்தனம் என்ன என்பதைத் தெரியாமலே அடுத்த தலைமுறை வளர்கிறது, நம் கல்வியும் போதிக்கவில்லை. சரி அதிருக்கட்டும்.
'பெற்ற தாயினும் பிறந்த பொன்னாடும், நற்றவ வானினும் நனி சிறந்தனவே'. இந்த பொன்மொழிகள் எந்தக் காலத்திலும் பொருந்தும். பொதுவாக, நம் நாட்டு விடுலைக்குப் பாடுபட்டவர்களைப் பற்றி எழுதுவது இந்த நாளில் என்றிருந்தது. சற்றே மாறுதலாக, பாண்டியன்-பல்லவன் பற்றி எழுத முற்பட, வழக்கம் போல் நம் 'சாண்டில்யன்' துணைகொண்டு. இவர்களுக்குள் நடந்ததும் ஒரு சுதந்திரப்போர் தான். பரங்கியர் நம் நாட்டில் ஊடுருவி, நம் சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டதால் நாம் போராடி அதை மீட்டோம். இதே நிலை தான் ஆதி முதல் ஆண்ட மன்னர்களிடத்தும். தங்கள் எல்லையை ஒரு மன்னர் விஸ்தீரிக்க நினைக்க, மற்றவரின் சுதந்திரம் அதனால் பறிபோகிறது. பெரும் போர்கள் நிகழ்ந்தது, வாழை அடி வாழையாக.
புத்தகத்தில் படங்கள் எதுவும் இல்லை. இந்த முறை நாமே ஒரு படம் வரையலாம் என்று எடுத்து சில மணிகள் செலவிட்டு வரைந்தது இந்தப்படம். உள்-வெளி கோட்டைகள், பல்லவ மன்னன் நிர்மாணித்த வைகுந்தப் பெருமாள் கோவில், மன்னன் (மல்லனோ, பாண்டியனோ உங்கள் யூகம்), நீள் விழி. இந்தப் புத்தகத்தின் மூலம், பள்ளியில்-கல்லூரியில் கற்ற வரைகலைக்கு புத்துயிர் கொடுக்க முடிந்தது. மெஷின் ட்ராயிங், இன்ஜினியரிங் ட்ராயிங் எல்லாம் வரைந்து, இப்போது மன்னர் முகம், கோட்டை எல்லாம் வரைய கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது.
'நீள்விழி' என்ற இந்த நாவல் ஜடிலன் பராந்தக நெடுஞ்சடையன் என்ற பாண்டிய மன்னனுக்கும், நரசிம்மவர்மன் (சிவகாமியின் சபதம்) வழியின் ஐந்தாவது தலைமுறைக்கும் சில நாட்களே நடந்த பெரும் போர். சிவகாமியின் சபதத்தில் கல்கி எப்படி மகேந்திர வர்மனின் இராஜ தந்திரங்கள், போர் முறை பற்றிக் கூறினாரோ, அது போல் இங்கு சாண்டில்யன் பாண்டியனை ஒரு சூப்பர் ஹீரோவாக சித்தரித்துள்ளார்., உண்மையும் அது தான். ஜடிலன் இருந்த வரை பல்லவர்கள் தலை எடுக்க முடியவில்லை. கதை நடக்கும் காலம் ஏழாம் நூற்றாண்டு. தமிழகத்தில் வைணவம் விரைந்து வளர்ந்து, பல சாம்ராஜ்யபதிகள் வைணவர்களாக இருந்தார்கள். பராந்தகனும், பல்லவ மல்லனும் 'பரம வைஷ்ணவர்கள்' என்று இந்த நூல் முடிவு வரை கூறுகிறது (நூல் மட்டுமல்ல, செப்பேடுகளும்) வைஷ்ணவ லக்ஷணம் என்ன என்பது உட்பட.
சாண்டில்யன் என்ற பாஷ்யம் ஐயங்கார் ஒரு வைஷ்ணவர். அவர் இது சம்பந்தமாக கற்ற கல்வி, கண்ட விஷயங்கள் எல்லாம் கற்பனையின் விழுதாய் கதையில் நுழைந்துள்ளது. ஜடிலன் ஒரு வேதாந்தி என்று அறிமுகம் செய்துவிட்டு வேதாந்த விஷயங்கள் எல்லாம் அவ்வப்போது நுழைக்கிறார். சாண்டில்யனின் சொல் விளையாட்டு இதில் கொஞ்சம் வெளிப்படுகிறது. அது பற்றி அவரின் நெருங்கிய உறவினர் சொன்ன ஒரு நிகழ்வு. நான் அமெரிக்காவில் பணியின் காரணமாய் இருந்த போது அங்கு கிடைத்த நண்பர்களில் முக்கியமானவர் - அரங்கராசன் ஸ்ரீநிவாசன் (http://rangasrinivasan.blogspot.in/). இவருக்கும் இந்தக்கதைக்கும் என்ன சம்பந்தம்- திருமங்கையாழ்வாரும், சாண்டில்யனும் தான். திருமங்கையாழ்வார் எனில் மயலே பெருகும் எண்ணமுடையவர் அரங்கராசன்., நந்திவர்மன் வைஷ்ணவனாதலால் நிறைய கோவில் கைங்கர்யங்கள் செய்துள்ளான். பன்னிரு ஆழ்வார்களில் கடைசியான திருமங்கையாழ்வார், நந்திவர்மனின் போர்த் திறம், கோவில் திருப்பணி பற்றி 'பரமேச்சுவர விண்ணகரம்' என்ற திவ்ய தேசத்தைப்பற்றி சொல்லி, மன்னனையும் பாடியுள்ளார் (மேலுள்ள பாடல் பார்க்க. இது போல் பத்து பாடல்களை பாடியுள்ளார்).
நாதன் கோவில் என்ற நந்திபுர விண்ணகரம் என்ற ஊரையும் இந்த மன்னனே ஸ்தாபித்தார். மன்னர்கள் என்னதான் கோவில் கட்டிச் சென்றாலும் இன்று பாதுகாக்க வேண்டியது நம் கடமை. இல்லைன்னா யுனெஸ்கோ வரை நம் 'புகழ்' நாறிவிடும். நம்ப அரங்கராசன் இதை மட்டுமே ஒரு வேலையாக/கைங்கர்யமாக எடுத்து தஞ்சைச் சுற்றியுள்ள வைணவ கோவில்களில் 'பெரும்' பொருட்செலவு செய்து திருப்பணிகளை/கைங்கர்யங்களைச் செய்து வருகிறார். முக்கியமாக, திருவாலி என்ற வைணவ திவ்ய தேசத்தை தன் சொந்த ஊராகவே மாற்றி கைங்கர்யம் (இவை பற்றி வேறு பதிவில் கூடுதலாக) பல செய்து வருகிறார். அரசன் கட்டியதைக் காக்க 'அரங்கத்தரசு' (அரங்கராசன்) தான் வர வேண்டும். அரசாங்க உதவி எதிர்பார்க்காமல் நாமே இது போன்ற புராதன கோவில்களைக் காக்க வேண்டும். இவர் சாண்டில்யனின் உறவினர் . ஒரு முறை சாண்டில்யன், இவரின் மிருதங்க அரங்கேற்றத்திற்கு வந்த போது சொன்னது இது தன்னுடைய வாழ்த்துரையில் - "இவன் (அரங்கராசன்) பாட்டுக்கு வாசிக்கறானா?, இல்லை இவன்பாட்டுக்கு வாசிக்கறானா? என்றில்லாமல் அருமையாக வாசித்தான்". சாண்டில்யனின் வார்த்தை விளையாட்டுக்களில் இது ஒரு ரியல் டைம் சாம்பிள்.
பேக் டு நீள்விழி
இரண்டாம் நந்திவர்மன் என்கிற பல்லவ மல்லன் 732 - 796-களில் தென்னிந்தியாவை ஆண்ட பல்லவ மன்னன். பல்லவ மன்னன் பரமேச்வரவர்மனுக்கு குழந்தை இல்லாததால், அமைச்சர்கள் கம்போடியா சென்று அங்கிருந்த பல்லவ வம்சாவளி அரசர்களை அழைக்கின்றனர். யாரும் வர மறுக்க, நந்திவர்மன் பன்னிரண்டு வயதில் அரியணை ஏறுகிறார் தமிழகம் வந்து, காஞ்சியைத் தலைமையாகக் கொண்டு. இவர் காலத்தில் பல்லவ சாம்ராஜ்யம் விரிகிறது என்பதை விட, பாண்டியர்களை எதிர்த்து காப்பாற்றினார் என்றே சொல்லலாம். அந்த தலைமுறை பாண்டியர்கள் மிகவும் வலு உடையவர்களாக இருந்தனர்..ஏழாம் நூற்றாண்டிற்கு முன் தமிழகத்தில் வாதாபி சாளுக்கியர்,காஞ்சி பல்லவர், மதுரை பாண்டியர்கள் மாமன்னர்களாக தன்னை உயர்த்திக்கொள்ள பெரும் போர்கள் செய்தனர். பின், சாளுக்கியர் சற்றே பின்வாங்க, பல்லவர் ஆதிக்கம் அதிகமானது. சோழநாடும் பல்லவர்களுக்கு அடிமைப்பட்டிருந்தலால் பாண்டியர்கள் சோழப் படையின் துணைகொண்டு பல்லவர்களை எதிர்த்தனர். சிலவற்றில் வெற்றியும் பெற்று, பல்லவர்கள் மேலும் தங்கள் எல்லையில் வராதவாறு பார்த்துக் கொண்டனர். ஆனால், முழுதும் பல்லவ சாம்ராஜ்யத்தை அழிக்க முற்படவில்லை.
கதை முழுதும் 'பெண்ணாகடம்' என்ற காவிரிக்கரை ஊரில் நடக்கிறது. சோழ நாடு, பல்லவ நாட்டிற்கு அடிமையாய் இருக்கிறது. தஞ்சை போகும் வழியில் காவிரிக்கரையில் ஒரு ஊரை கோட்டைகளோடு உருவாக்கி சோழ நாட்டைப் பலப்படுத்த நினைக்கிறார் சோழன், தர்மாதிகாரி துணையோடு. கதையில் 5-6 முக்கிய கதாபாத்திரங்கள் தான். தர்மாதிகாரி, ஜடிலன் பாண்டியனை (765-815) பல்லவர்களுக்கு எதிராக போர் புரிய அழைக்கிறார். நல்ல வீரனை அனுப்ப, நாமே போகலாம்ன்னு பாண்டியனே வாரான் இந்த பெண்ணாகடத்திற்கு. நீள்விழி, அழகும், நீள் விழிகளும் பொருந்திய சோழன் மகள். அவளை அடையவும் இந்த போர் எனலாம். கொங்கு தேச அரசரும், பல்லவனும் அதற்க்கு முயன்றனர். இடையில் நம்ப பாண்டியன், "கடைசியில் அவள் இடையைப் பற்றியதும் பாண்டியனே!" (சாண்டில்யன் பாஷையில் சொல்வதானால்). நீள்விழி இந்த பெண்ணாகடத்தில் இருக்கிறார், சொந்த நாட்டில் சிறை போல். இந்த ஊர் உள் கோட்டை, வெளிக்கோட்டை, வாவி, தோப்புகள் என்று நதிக்கரையில் சொர்க்கம் போல் நிர்மாணிக்கப்பட்டது. ஊருக்கு ஒரு உளவாளி இருப்பது போல், சோழனின் தளபதி- விஜயன் பல்லவனின் உளவாளி.
பாண்டியன் ஒரு சாதாரண மனிதன் போல் உள்ளே நுழைகிறான். சோழர்களின் பரம்பரை வாள் இவனிடம் ஒப்படைக்கப்படுகிறது. அது மிகப்பழமையானது, கரிகாற்ச் சோழன் வீசிய, பிடியில் வைரங்கள், இரத்தினங்கள் பதித்த வாள். அதைவைத்து பல்லவ மன்னனோடு சண்டையிடுகிறார். கரிகாற்ச் சோழனுக்கு பின் ஏழு தலைமுறைக்கு இது பயன்படாது. ஒரு அரச வேதாந்தி தான் இதைப் பயன்படுத்தி நாட்டை மீட்பர் என்று ஓலையில் எழுதப்பட்டதாக சொல்கிறார் தர்மாதிகாரி-மாறன்காரி (இவரும் வைஷ்ணவர், மதுரைச் சேர்ந்தவர், சோழனிடன் இருந்தார் என்கிறது வரலாறு) . கேட்கவே வேண்டாம், ஜடிலன் வேதாந்த மழையே வர்ஷிக்கிறான். 'பெரிய சாம்ராஜ்யத்தை நிர்வகிக்க பெரிய படை வேண்டும், இல்லை வெற்றி கொள்ளப்பட்ட அரசர்கள் சிற்றரசர்களாக இருக்க வேண்டும்' .. இது இன்று வரை உண்மை என்பதை பல தருணங்களில் காணலாம்.
அரச குமாரியின் தனி 'வாவி'யின் அழகை வர்ணிக்க சாண்டில்யனுக்கு கேட்கவா வேண்டும், கூடவே நீள்விழி வேறு. ஜடிலன் திட்டமிடுவது விஜயன் மூலமாக நந்திவர்மனுக்குத் தெரிகிறது. அதற்குள் ஜடிலன் உள்-வெளி கோட்டைகளைப் பலப்படுத்துகிறார். 'மதுரை' கூல வணிகன் அப்போது முதல் இருந்திருக்கிறார்கள். அவர்க்கு ஒரு ஓலை மூல செய்தி செல்கிறது ஜடிலனிடத்திருந்து. சில நாட்களில் மதுரை முத்துக்கள் எல்லாம் வந்து இறங்கி வியாபாரத்தளமாகிறது பெண்ணாகடம். காலத்திற்கு ஏற்றாற்போல், இதுல ஒரு வைஷ்ணவ துறவி தான் பல்லவனின் அந்தரங்க உளவாளி. பிற்காலங்களில் புத்த துறவிகள் இருந்திருக்கிறார்கள். நந்திவர்மன் படை வருவதற்குள் உட்கோட்டை முழுதும் இருந்த வணிகர்கள், பாண்டிய வீர்களாக மாறுகிறார்கள். பல்லவன் படை காவேரியின் அக்கரையில் தங்கி, படை எடுக்க தயாராகிறது. போர் முரசு கொட்டுகிறது., ஜடிலன் பொறுத்திருந்து பாய்ந்து, தாக்குகிறார். பல்லவன் புரவிப்படை மட்டும் வைத்துத் தாக்க, பாண்டியன் பாகுபலி படம் போல் சரம் போல் அம்புகளைப் பொழிந்து, புரவிப்படையை காலாட்படையாக மாற்றுகிறார். பல்லவன் நிலை குலைய, பாண்டியனை நேரடி சண்டைக்குப் போகிறார். கடும் சண்டைக்குப் பிறகு, பல்லவன் தலையில் பாண்டியன் அடிக்க பல்லவன் சரிக்கிறார். பாண்டியன் அவரைக் கொல்லாமல் 'மாவீரன், ஒரு வைஷ்ணவனைக் கொல்லக் கூடாது' என்கிறார். பல்லவர் படை பின்வாங்க பின் நடப்பது நமக்கே தெரியும். சாண்டில்யன் வரிகளில் முடிவுரை - 'புரவியின் மீதிருந்த நீள்விழியின் இடையைச் சுற்றி பாண்டியன் இடது கையும் ஊர்ந்தது'..
மேலும் சில விஷயங்கள்:
* "பரம வைஷ்ணவன் தானாகி நின்றிலங்கு மணி நீள் முடி நில மன்னவன்" என்று பாண்டியனை சீவரமங்கல செப்பேடுகள் சொல்கிறது.
* கதையில் வைஷ்ணவ சின்னங்கள் (ஸ்ரீ சூர்ணம்) தரித்து மன்னர்களும், மற்றவர்களும் இருந்ததாய் சொல்லப்படுகிறது.
* நந்திவர்மன்-II அவரின் பேரன் நந்திவர்மன்-III .. இவருக்குத்தான் தமிழ் இலக்கியமான 'நந்திக் கலம்பகம்' பாடப்பட்டது. தமிழ் புலவர்கள் அறம் பாடி அழிப்பர் என்பதைக் காட்டவே இது எழுதப்பட்டு, அதை மன்னனே நிரூபிக்கிறார். அதில் வரும் பாடலுக்கு ஏற்ப அவரே இறக்கிறார் தமிழ் சொல்லை மெய்ப்பிக்க.. அதாவது, புலவர்களின் அறச் சொல்லுக்கு வலிமையுண்டு என்பதை விளக்க. இப்போது நினைக்கலாம் என்ன வகையில் தமிழ் பாடல்கள் உள்ளதென்று.
* பல்லவ நாட்டை அறுபத்தைந்து ஆண்டுகள் ஆண்ட இரண்டாம் நந்திவர்ம பல்லவன் மிகச் சிறந்த திருமால் பக்தனாகத் திகழ்ந்தான். பல பழைய கோயில்களைப் புதுப்பித்தான். புதிய கோயில்களைக் கட்டினான். காஞ்சியில் உள்ள வைகுந்தப் பெருமாள் கோயில் (பரமேசுவர விண்ணகரம்), முக்தேசுவரர் கோயில், கூரத்தில் உள்ள கேசவப் பெருமாள் கோயில் முதலியன இரண்டாம் நந்திவர்ம பல்லவன் கட்டிய கோயில்களாம். சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சிபுரத்தின் மீது படையெடுத்து வந்து இரண்டாம் நந்திவர்ம பல்லவனை வென்று காஞ்சியைக் கைப்பற்றினான். கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட மற்றக் கோயில்களுக்குத் தாராளமாக நன்கொடைகள் தந்து, சில காலம் காஞ்சியில் தங்கியிருந்துப் பின்னர் சாளுக்கிய நாடு திரும்பினான். பகை அரசனையும் பக்தி எனும் சரடு பிணைத்திருந்ததை இதனால் அறிய முடிகிறது. (தமிழ் விர்ச்சுவல் லைப்ரரி - tamilvu)
* பாண்டியரது செல்வாக்கு வளர்வதைக் கண்ட நந்திவர்ம பல்லவன் கொங்கு மன்னருடனும், கேரள மன்னருடனும் தகடூரை ஆண்ட அதியமானுடனும் உடன்படிக்கை செய்து கொண்டு வலிய கூட்டணியை அமைத்தான். பாண்டியன் இக்கூட்டணியை வென்றான். கொங்கு நாடு பாண்டியர் வசமானது. கொங்கு அரசன் பாண்டியனால் சிறை பிடிக்கப்பட்டான். அதியமான் தோற்றான். பாண்டிய நாட்டுப் படை பல்லவ நாட்டை ஊடுருவிச் சென்றது. தஞ்சை மாவட்டத்தின் மையத்தில் உள்ள, ‘இடவை' எனும் இடத்தில் பாண்டியன் பாசறையை அமைத்தான். பாண்டியனை வெல்வதற்கு நந்திவர்ம பல்லவன் செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது. சாளுக்கிய மன்னன் இரண்டாவது விக்கிரமாதித்தன் காஞ்சியின் மீது படையெடுத்து, வந்து, வென்று கைலாசநாதர் கோவிலுக்கு நன்கொடைகள் வழங்கிச் சென்றான். இராட்டிரகூட மன்னன் தந்திதுர்கனுக்கும், பல்லவ நந்திவர்மனுக்கும் போர் நடந்தது. பல்லவமன்னன், இராட்டிரகூட மன்னன் மகள் ரேவாவை மணந்து கொள்ளவே, பகை நட்பாக மாறியது. பல்லவரது செல்வாக்கு சரியத் தொடங்கியதை இந்நூற்றாண்டு அரசியல் வரலாறு பதிவு செய்கிறது. (தமிழ் விர்ச்சுவல் லைப்ரரி - tamilvu)
No comments:
Post a Comment