இந்த வருஷம் (2017) நம்மாழ்வார் உற்ஸவம் அனுபவிக்க நேரம் இல்லாமல், வார இறுதி நாளில் மட்டும் இரவு நேரம் கிடைக்கநம்மாழ்வார் உற்ஸவத்தின் போது அனுபவித்த திருவாய்மொழியின் சாரம் என்னளவில், பூர்வர்கள், வ்யாக்யானகர்த்தாக்கள், உரையாசிரியர்கள் கொண்டாடிய அர்த்தங்கள்.. பேரா.அரங்கராசன் அவர்களின் நூலிருந்து படித்தது எல்லாம் சேர்த்து நினைவில் இருந்ததை எழுத முயல, 'தன்னாக்கி என்னால் தன்னை' அவனே எழுதுவித்தான்- அந்த அவன் ஆழ்வாரும்-அழகனும் தான் என்பதில் ஐயமில்லை..
திருவாய்மொழி ஐந்தாம் பத்து
நம்மாழ்வார் அவதாரத் திருநாள் உற்ஸவத்தின் ஐந்தாம் நாள் இன்று.
ஆழ்வார் அழுது, அலற்றி, மிரட்டி, உருகி, நாகணமிசை நம்பிரான் சரணே சரண் நம்மைக்கென்று சரணாகதி அடைகிறார் கடைசியாக. ஒரு கவிஞராகப் பார்த்தால் இந்தப்பத்தில் அனைத்து இலக்கிய வகைகளையும் கையாண்டிருக்கிறார்.. முந்தின பத்துக்களில் ஏங்கிக்கொண்டிருந்த ஆழ்வார் இங்கு துவக்கத்தில் கண்ணனைப் போற்றியும், உலகில் உள்ளோரை வாழ்த்தியும் (பொலிக பொலிக என) கவி சொல்லும் போதே, குழந்தை எதையோ மறந்து எதிலையோ கவனம் செலுத்தி, மீண்டும் பழைய நினைவில் அழுவது போலே, ஆசை மிகுந்து பழிக்கு அஞ்சாமல் மடலூரத் துணித்து (மாசறு சோதி-யாம் மடலூர்ந்தும்), மடலூர இயலாத படி இரவு நீள்வதாய் வருந்திக் கூறவும் (ஊரெல்லாம் துஞ்சி), பின் திருக்குறுங்குடி பெருமானை கண்டு வடிவழகில் மயங்கி நிற்க, திடீர்ன்னு ஆவேசம் வந்தது போல தானான தன்மை மேலோங்கி - எல்லாம் யானே என்றுரைக்க, தன்னால் எதுவும் இயலாது என்றுகருதி வானமாமலையில் சரணாகதி பண்ண (ஆறெனக்கு நின் பாதமே சரணாக தந்து), அப்போதும் முடியாமல் தீராத ஆசையுடன் ஆற்றாமை பேசி ஆராவமுதனை அழுது, தொழுது, பாடி அலற்ற( அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னைக்காணும் அவாவில் வீழ்ந்து என்ற படியும் ), மனதிற்கு இனிமை தரும் மலையாள தேசம்-திருவல்லவாழ் புறச் சோலையில் சென்று விழுந்து,காண்பது எஞ்ஞான்று கொலோ என்று உரைத்து, இறுதியாக நாகணமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கென்று, நாள்தோறும் ஏகசிந்தையனாய் இருக்கிறார் குருகூர் சடகோபன் மாறன். இந்த நூறு பாடல்களும் நாயகி நிலையில் பாடியுள்ளார் நம்மாழ்வார். இன்றைய கோஷ்டியில் அனுபவித்த பிறகு பழையத்தைக் கொஞ்சம் புரட்டினேன். வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தார் ஆழ்வார், அவரைப் போல் ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நல்லிருளால், இரவு நீண்டு கொண்டே இருக்கிறது.. ஆனால் இதில் நன்மையே!
மாசறுசோதி பதிகத்தில் (திருவாய்மொழி) நம்மாழ்வார் மடல் ஊர்ந்தார் என்றும், மடல் எடுப்பதாக மிரட்டினார் என்றும் சொல்வதுண்டு, 'யாம் மடலூர்ந்தும்' என்ற படி..
மாசறு சோதி (திருவாய்மொழி-5-3)..நம்மாழ்வார் தன்நிலை போய் பெண் நிலையில், உருகி பின் மடலெடுக்க, அதை உரையாசிரியர்கள் விளக்கும், வகுக்கும் அழகே தனி..நம்பிள்ளை மடலுக்கு தமிழ் இலக்கியத்திலிருந்து தான் மேற்கொள் காட்டி அவதாரிகைகளே 5 செய்துள்ளார்.. பாட்டை எழுதியவர்களைக் காட்டிலும் உரையாசிரியர்கள் விஞ்சி நிற்கிறார்கள் ..!
கடல் ஞாலம் செய்தேனும் (திருவாய்மொழி 5-6)
தலைவி தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசுகிறாள்.. அதை தலைவியின் தாயார் ஊராருக்கு, இது என்ன 'ஆவேசமோ' என நொந்து கொள்வதும் தமிழ் இலக்கியங்களில் உண்டு. நம்மாழ்வார் அப்படி பராங்குச நாயகி என்ற தலைவியாகி, தானே தலைவன் என அநுகரித்து ஞானமுத்திரையும் தானுமாய் 'கடல் ஞாலம் செய்தேனும் யானே, கடல் ஞாலம் ஆவேனும் நானே, மலை எடுத்தவனும் யானே...' என்றாற் போலப் பாசுரங்களைச் சொல்லிஇருக்கிறார்..(நோன்பு நோற்பதாகக் கொண்டு ஆண்டாள் திருப்பாவை பாடியது ஆய்ச்சியர்களின் அநுட்டானத்தை அதுகரித்த படியத்தனையிறே)
அதில் வரும் ஒரு பாடலின் வரியில் 'கற்கும் கல்விக்கு எல்லையிலேனே என்னும்' என்கிறார். இதற்க்கு நம்பிள்ளை என்ற உரையாசிரியர் (வ்யாக்யானகர்த்தா) மூன்று விளக்கங்களைத் தருகிறார்..
உருபை விவரிக்கும் போது எல்லா வகைகளிலும் விவரித்து,
எல்லையிலன் =
1. எல்லை (யை) + இலன் = கற்றபரப்புக்கு ஓர் எல்லையில்லை;
2. எல்லை (க்கண்) + இலன் = கல்வியின் எல்லைக்குள்ளே நிற்கிறேன் அல்லேன்;
3. எல்லை (இல்) + அன் = வேதாந்தமாகிய எல்லையின் உளேன்.
இதை தமிழின் இனிமை என்பதா, பாடியவரின் வலிமையா, உரையாசிரியரின் மேதமையா, இவற்றை எல்லாம் வெளிக் கொண்டுவந்த 'அவனையா', யாரைச் சொல்வது
**************************************************************************************************************************************************************************************************************************
திருவாய்மொழி ஆறாம் பத்து
நம்மாழ்வார் அவதார திருநாள் - ஆறாம் நாள்-
மிக உயர்ந்த பாடல்கள். மொத்த திருவாய்மொழிக்கே இரத்தனமாய் இருக்கும் அலர்மேல் மங்கை உரை மார்பனான திருவேங்கடவன் முன்னிட்டு சரணாகதி அடைந்த பாசுரங்கள் இன்று தான். துவக்கத்தில் ஆழ்வார் தமிழ் இலக்கியங்களில் முக்கியமான தூது இலக்கியத்தை முழுதுமாய் பத்து பாடல்களில் அனுபவிக்கிறார். தூதின் வரை மாறாமல் குறுக்கினங்கள், நாரை, குயில், அன்னம், வண்டு, கிளி என அனைத்தையும் தலைவியாகி தலைவனிடம் பாட்டிற்கு ஒன்றாக திருவண்வண்டூரிலிருந்து தூதுவிட, தூதுவிட்டவுடன் கண்ணன் (தலைவன்) வராததால் ஊடல் திறத்தில் 'உன்னுடைய சுண்டாயம் நானறிவன்' என்றுரைத்து, ப்ரணயகலகத்தில் திருவிண்ணகர் (உப்பிலியப்பன் கோவில்) சென்று, மீண்டும் தலைவன் குண விசேஷங்களில் பெரிதும் ஈடுபட்டு கண்ணன் விளையாட்டுக்களை (கிட்டத்தட்ட ஒரு பாகவதம் தசம ஸ்கந்தம்) சொல்லி, தொலைவில்லிமங்கலத்தில் ஆசை மிகுந்து, பித்து பிடித்தது போலாகி தேவபிரானையே தந்தை தாய் என்றடைந்து, இதைக்காணஒண்ணாத தாய், தலைவி பசலை நோய் காண்டவளாய் இழந்தது பற்றி இறங்கிக் கூற (மாலுக்கு- இழந்தது பீடே, பண்பே, மாமை நிறமே, முடிவில் தன்னுடைச் சாயே), தலைவி தலைவன் இருக்கும் திருக்கோளூர் நோக்கிச் சென்று காணும் பொருளெல்லாம் கண்ணனே என்று அலற்றியதாய் தாய் இரங்க (உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான்), அதற்குள் தலைவி, தலைவனுக்கு அடியார்களான பறவைகளைத் தூது விட (பொன்னுலகாளீரோ-புள்ளினங்கள், கிளி, அன்னம்), இதைக் கேட்டவர்கள் நெஞ்சம் எல்லாம் நீராய் உருகி, திருமாலுக்கு பரமபதத்தில் இருக்க முடியாமல் வருமாறு ஆழ்வார் அழைத்து (நீராய் நிலனாய்- காண வாராய் விண்மீதே) நிற்க, அதற்குள் பெருமான் பரமபதத்திலிருந்து ஒரு உயர்வான இடம் தேடி திருமலையில் குதித்து வேங்கடவானாய் இருக்க, நம்மாழ்வார் அவர்ரடிக்கீழ் அமர்ந்து புகுகிறார் கடைசியாக.. (உலகமுண்ட பெறுவாயா- உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே)..
நல்ல கவித்துவத்துடன் ஆழ்வார் இந்த நூறு பாடல்களையும் அமைத்துள்ளார். 'தீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ'.. என்ன அட்டகாசமான வரி.. இரண்டு பதிகங்களில் முழுதும் தூது விடுகிறார். பசலை நோய் தாங்காமல் தன்னுடைய சாயை (நிழலை) இழக்கிறார் தலைவி.. அடடா!.. என்ன தமிழ், கவி!..
துவளில் மாமணிமாடம் - தூமணி மாடம் என்று கொஞ்சம் நிறைய சொல்லவேண்டியது. ஆனால் சிறு விளக்கம், ஏன்னா நம்மாழ்வார் என்றாலே 'திருதொலைவில்லிமங்கலம்' என்று சொல்வதுண்டு..
தூமணி மாடம் (திருப்பாவை) - பரிசுத்தமான மாணிக்கங்கள் பொருத்திய மாடம் கொண்ட ஆய்ப்பாடி/ஸ்ரீவில்லிபுத்தூர்;ஸம்ஸார சம்பந்தமே இல்லாமல் அநவரதம் எம்பெருமானுடன் இருக்கும் நித்யஸூரிகள் போன்றோர்; தலைவி, தோழிமார்களை எம்பெருமானிடத்து ஈடுபட அழைத்து தாய்மாரிடத்தும் (மாமீர்), தோழியிடத்தும் (மாமான் மகள்) கூறுதல்.
துவளில் மாமணி மாடம் (திருவாய்மொழி) - குற்றமற்ற மாணிக்கங்கள் கூட்டி சமைத்த மாடம் கொண்ட திருத்தொலைவில்லிமங்கலம்...துவள் இல்-சில காலம் பிறவிக்கடலுள் நின்று துளங்கி, பின் அப்பற்று விட்டு எம்பெருமானே தஞ்சம் என்று போகும் முக்தர்கள்; ஆழ்வார் (தலைவி) எம்பெருமானிடத்து ஈடுபட்டமை பற்றி தோழி தாய்மாரை நோக்கிக் கூறுவது!.
(பெண் பாவனையில் பாடுவதால் மாணிக்கங்கள் பற்றி பேசுவதாய் அமைந்தது போலும் )
*************************************************************************************************************************************************************************************************************************
திருவாய்மொழி ஏழாம் பத்து
நம்மாழ்வார் உற்ஸவத்தின் ஏழாம் நாள்;
ஒரு கவிஞர்/தொண்டன் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லும் பதிகங்கள். தன்னையும் ஒரு கவியாக்கி திருவாய்மொழியைப் பாடுவித்த எம்பெருமானுக்கு என்ன கைம்மாறு செய்வதென்று தெரியாமல் பேசுவதாய் இருக்கிறது. ஆழ்வார் தாமான தன்மையில் இந்திரியங்கள் செய்யும் நலிவு பற்றிக் கூறி எம்பெருமானிடம் தஞ்சம் அடைய (உண்ணிலாவிய), இவள் நிலையைக் கண்ட தாயார் தலைவனிடம் (திருவரங்கநாதனிடம்) இவள் திறத்து என் செய்கின்றாயே? என்று கேட்க (கங்குலும் பகலும் - இவள் அழுது, அலற்றி, மோஹித்து, தொழுவது, பெருமூச்சு எறிவது என்றிருக்க), இதைக் கேட்ட தலைவி 'மோஹம் தெளிந்து தானே கூப்பிட வல்லவளாய்' மகர நெடுங்குழைக்காதனான தென் திருப்பேரைக்குத் தானே செல்லத் துணிய(வெள்ளைச் சுரி சங்கொடு), இந்நிலையில் தலைவன் (எம்பெருமான்) இவள் நிலையைக் கண்டு தன்னுடைய விஜய வரலாறுகளைக் காட்ட (ஆழி எழ.), அந்த அவதாரங்களில் தலைவி மோகித்து சிறப்பான இராமாவதாரத்தில் ஈடுபட்டு நிற்க, தலைவனின் குணம், அழகு முதலானவற்றை எண்ணி கண்ணுக்கு நேரே கண்டு அனுபவிக்க மனமுருகி கூப்பிட (பாமரு மூவுலகு), அந்த உருவ அழகில் தன்னை இழந்து அதனால் வந்த வருத்தத்தால் காண்மின்கள் அன்னையர்கள் என்று காட்டும் வகை அறியேன் என்று வருந்த (ஏழையர் ஆவியுண்ணும்), உடனே எம்பெருமான் அவனுடைய விசித்திர சக்தியைக் காட்ட அதில் தலைவி ஆச்சரியப்பட, (மாயா வாமனனே) பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நின் வாச மலர் தண்துழாய் முடி மாயவனே அருளாய் என்று அழைத்து, தன்னாக்கி என்னால் தன்னைக் கவி பாடும்படி வைத்ததற்கு கைமாறில்லை என கூறி (என்றைக்கும் என்னை), திருவாரன்விளையில் (இன்பம்பயக்க) அன்புற்றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களும் ஆகும்கொலோ என்று தீர்ததனுக்கு அற்றபின் மற்றோர் சரண் இல்லையென்று குருகூர் சடகோபன் சரணடைகிறார்...
மேலும் மிக சுவாரஸ்யமான விஷயம் நம்பிள்ளை ஈட்டில் இன்றைய தேவைக்கு ஏற்ற மாதிரி இந்தப் பத்தில் உள்ளது.. அது தமிழர்களின் உரைகளை நம்பிள்ளை போற்றியது. (இது பற்றி விரிவாய் விரைவில்)
தமிழரின் வியாக்கியானங்களையும் நம்பிள்ளை தம் ஈட்டில் பயன்படுத்தியுள்ளார்.
ஈட்டிய வெண்ணெய் உண்டான்
திருமூக்கு எனது ஆவியுள்ளே
மாட்டிய வல் விளக்கின்
சுடராய் நிற்கும் வாலியதே
(திருவாய்மொழி- 7-7-2)
இதில் 'மாட்டிய' என்ற வார்த்தைக்கு 'சுடர் வெட்டிய' என்று பெரியவாச்சான் பிள்ளையும் , நம்பிள்ளையும் பொருள் கொண்டு, விவரிக்கும் போது 'தமிழருடைய' வியக்கியானத்திலிருந்து 'மாட்டிய=ஏற்றிய' என்ற பொருளை எடுத்துக் காட்டுகிறார்.
****************************************************************************************************************************************************************************************************************************
No comments:
Post a Comment