வயிற்றுக்கும் ஈயப் படும்! (திருக்குறள்)
புவியுள்நான் கண்டதோ ரற்புதம் கேளீர் பூணி மேய்க்கும்இளங் கோவலர் கூட்டத்து
அவையுள் நாகத் தணையான்குழ லூத அமர லோகத் தளவும்சென் றிசைப்ப
அவியுணா மறந்து வானவ ரெல்லாம் ஆயர் பாடி நிறையப்புகுந்து ஈண்டி
செவியு ணாவின் சுவைகொண்டு மகிழ்ந்து கோவிந்த னைத்தொடர்ந்து என்றும்வி டாரே. (பெரியாழ்வார் திருமொழி)
"விதிவிலக்குகளின் விளைச்சல்களே இன்றைய இளைய வாசகர்கள்.உபநயனத்துக்குச் செய்யும் ஆடம்பரச் செலவுகளின் ஒருபகுதியாக வீட்டுச்சிறுநூலகங்களை அமைக்க இப்போதேய 40-35 வயதுப் பெற்றோர்கள் முன்வரவேண்டும். திருமணங்களுக்கும் பிறந்தநாள்களுக்கும் நூல்களை − அது எதுவானாலும் −பரிசளிக்க நணபர்கள் முன்வரவேண்டும். வாசிப்புப் பழக்கம், மனப்பழக்கம் ஆகிவிடும்."
-- எழுத்தாளர் முத்து ஸ்ரீனிவாசன்-நவபாரதி..
மேலுள்ளவைகள் சிலமாதங்களுக்கு முன் மறைந்த எழுத்தாளரின் வரிகள் என் முகநூல் பக்கத்திலிருந்து.. இதையே முன்னுரையாக வைத்துத் தொடங்குகிறேன்.. இன்று கொஞ்சம் நல்லபடியாகவே நாள் கழிந்தது. காலையில் எப்போதாவது வாங்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ், இன்று கொண்டுவந்த செய்தியால் சென்னையில் புத்தக திருவிழா நடப்பதாக அறிந்தேன். இந்த வருஷ ஆரம்பத்தில் நடந்த போது போக முடியவில்லை என்பதைவிட சற்று விருப்பம் இல்லாமல் இருந்து, திருவல்லிக்கேணி பழைய புத்தகக் கடையில் 'அ.சா.ஞா-தம்பியர் இருவர்' மிகக்குறைந்த விலைக்குவங்கி, ஆன்லைன் மூலம் கொஞ்சம் சாண்டில்யன் புத்தகங்கள் தருவித்துக்கொண்டேன். இருப்பவை படித்தாகிவிட்ட படியால், இம்முறை போகலாம் என்றிருந்தேன். காலையில் ஒரு மாறுவேட போட்டிக்குப் போய் போட்டோகிராபர் வேலை (!) பார்த்துவிட்டு வந்தேன்..
மாறுவேட போட்டி .. குழந்தைகள் வேடமிட்டால் அந்த அழகே தனி.. 4+ வருஷங்களுக்குப் பிறகு இன்று தான் யுஎஸ்-ல் வாங்கிய டிஎஸ்எல்ஆர்-க்கு (DSLR-Canon-EOS-DS126291) வேலை வந்தது.. அந்தக் காலம் (15-20 வருஷங்கள்) முதல் இன்று வரை ஒரே மாதிரியான வேடங்கள் தான்.:).சமுத்தரக்கனி படத்தில் வருவது போல் ஒரு 'பாய்' அண்ணாச்சி தான் இவைகளை வாடகைக்கு விடுகிறார்.. சில வருஷம் முன் வரை மோடி இல்லை இந்த வேடங்களில் (அவரின் தாக்கம் தெரிந்தது). இப்போது அவரும் சேர்ந்துவிட்டார்.. ஆதிகாலம் தொடங்கி இன்று வரை குழந்தைகளின் அணிவகுப்பு -- கிருஷ்ணர், அவ்வையார், ஜான்சிராணி, நேரு, பாரதி, மோடி, ஸ்பைடர் மேன், மயில், சிங்கம், மரம் இத்யாதிகள் எல்லாம். பரிசு என்ன தேவை?.. இந்தக் குழந்தைகளின் அணிவகுப்பு, ஆனந்தம் மட்டும் போதும். அதுவே பல கோடி பரிசுக்குச் சமம். படங்கள் எடுத்து முடிந்ததும், 'நீங்க ஸ்கூல்-ல அரேன்ஜ் பண்ணின போட்டோ கிராபர் தானே? என் குழந்தையையும் ஒரு படம் எடுத்து வாட்ஸ்ஆப்ல் அனுப்புங்க.' படபடவென்றார் ஒரு குழந்தையின் தாய்.. 'இல்லைங்க நான் சும்மா வந்தேன்.. போட்டோ கிராபர் இல்லை.. பரவாயில்ல எடுத்து அனுப்பறேன்' என்றேன். டிஎஸ்லஆர்-உடன் அலைந்தது நான் மட்டும் போல.. படங்கள் காப்புரிமை கொண்டது :)
சரி., பேக் டு புத்தகத் திருவிழா. பேப்பரில் பார்த்து வழக்கம் போல் ரூட் மேப் தேடியபோது கூப்பிடும் தொலைவில், இராயப்பேட்டையில் நடப்பதும், இது பதிப்பாளர் சங்கத்திலிருந்து நடப்பது அல்ல என்றும் தெரிந்தது.. சரி ஏதா இருந்தாலென்ன. நுழையும் போதே கடலை மிட்டாய், நெய் பிஸ்கேட் கடை, கொஞ்சம் தாண்டி கரும்புச்சாறு கடை, அப்பறம் நம்ப மக்கள் விரும்பிப் போகும் கடைகள்.. உங்கள் எண்ணத்தில் தவறு.. புத்தகக்கடைகள் அல்ல.. சிற்றுண்டி சாலை ., அதான் ஹோட்டல்.. மாலை ஐந்து மணிக்கு மக்கள் பிளந்து கட்டிக்கொண்டிருந்தார்கள்.. நடுவில் பெரியவர்கள் பேசும் அரங்கம்.சிலவருஷம் முன் சாப்பாட்டுக்கடை இல்லாமல் புத்தகம் மட்டும் இருந்தது. மக்கள் பட்ட சிரமம் சொல்லிமாளாது. சங்கத்திலிருந்து நடந்த போது சாப்பாட்டுக்கடை மிகவும் பிரம்மாண்டமாய் இருக்கும். நமக்கும், வெளி சாப்பாட்டிற்கும் ரொம்ப தூரம்.. இப்போ புத்தக அரங்கினுள் நுழைந்தேன்.
எந்த பெரிய மாற்றமும் இல்லை.. வாசகர்கள், விற்பனையாளர்கள், பிரசுரிப்பவர்கள் எல்லாம் மாற்றமின்றி இருந்தார்கள். வழக்கம் போல் காலத்திற்கு ஏற்றார்ப் போல் புத்தகங்கள். சில காலம் முன் கொடிகட்டிப் பறந்த கோபிநாத் நூல்கள் எங்கோ ஒரு கடையில் இருந்தது.. கடைகள் தோறும் கல்கியின் புத்தகங்கள்..காலத்தால் அழியாத 'பொன்னியின் செல்வன்', சிவகாமியின் சபதம், அலைஓசை, பார்த்திபன்கனவு என்று வெவ்வேறு டிசைன்களில் இருந்தது. கல்கி இல்லாத புத்தகத் திருவிழாவை மறந்துவிடுங்கள். வாசகர்கள் வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள். கல்கி இன்னும் பயணிக்கவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது, ஐம்பது வருஷங்கள் போதவில்லை அந்த சரித்திர விஷயங்களுக்கு.. கூடவே சாண்டில்யன், விக்ரமன், கெளதம நீலாம்பரன் ஆகியோரின் சரித்திர எழுத்துக்கள் இருந்தது..
நாங்கள் தேடிப்போனது கொஞ்சம் தமிழ் இலக்கண, இலக்கியம், சரித்திர நாவல்கள். கூடுமானவரை பர்ஸைப் பதம்பார்க்காமல் வாங்க முடிவு செய்தேன்.. புத்தகங்களின் விலை மிக அதிகமாகவே தெரிந்தது.. ஏதோ ஒரு கடையில் சுஜாதாவின் பழைய புத்தகங்கள் அதே பழைய விலையில் இருந்தது.அதாவது பத்து வருடம் பிந்தைய விலையில்.. கரும்பு தின்ன கூலியா?.பெரும்பாலும் அக-புற நானூறு, எட்டுத்தொகை நூல்கள்-மூலம் தெளிவுரை என்று நிறைய இருந்தது. இம்முறை 'ஜெயலலிதா' பற்றிய புத்தகம் வந்தாகிவிட்டது.. வழக்கம் போல் எம்.ஜி.ஆர், அப்துல் கலாம், தேவர், காமராஜ் என்று பட்டியல் நீண்டது. யாரும் வாங்கியதாத் தெரியவில்லை.. ஆச்சி மானோரமா பற்றியும் இருந்தது. பாரபட்சமே இல்லாமல், 'அறிவோம் ஜோதிடம்' 'வசிய குறிப்புகள்', 'வர்மக்கலை', 'இயற்கை உணவு', 'பிரிட்டன், ஜெர்மன்' லா, இன்ன பிறநாட்டு ஆங்கில நூல்கள் என்று சகட்டு மேனிக்கு இருக்க, நடுநடுவே பெரியார், மார்சிசம் இத்யாதிகள் எல்லாம் இருந்தது. ஒருவிஷயம் தெளிவாய் இருந்தது-அந்தப்பக்கம் மக்கள் நான் பார்த்தவரை போகவில்லை. கல்கி பதிப்பகம், வானதி பதிப்பகம், கண்ணதாசன் பதிப்பகம் , அல்லையன்ஸ், வைதீக ஸ்ரீ இவை எல்லாம் மிஸ்ஸிங் இம்முறை.
கவிஞர் வாலி, பாலகுமாரன், தேவாரம், பெரிய புராணம் விளக்கம் புத்தங்கள் எங்கும் கிடைக்கிறது. நாங்கள் தேடிய இலக்கண-இலக்கிய நூல்கள் இல்லை..காந்தியின் சத்திய சோதனை இரண்டு இடங்களில் மட்டும் பார்த்தேன்.. அ.சா.ஞானசம்பந்தம் அவர்களின் ஒரே ஓரு புத்தகம் இருந்தது ஒரு பழைய புத்தக குவியலில், புது விலையில்.. சிறிது தூரம் வந்த பிறகு யாரோ ஒருவர் அந்தப் புத்தகத்தைத் தேடிக்கொண்டிருந்தார்.. கடையில் இருந்த பையன் முழித்துக்கொண்டிருந்தான். கீதா பதிப்பக புத்தகங்கள் பத்து-பதினைந்து என்று கிடைத்தது. கடைசிக்கடையாக மதுரை மீனாட்சி நிலையம்.. எதிர்பார்க்காத ௭௦ வருஷம் முன் பதிப்பாக 'பண்டித' கதிரேச செட்டியார் புத்தகம் இருந்தது, அதே பழைய விலையில்- இரண்டு புத்தகம் பதினைந்து ரூபாய் மட்டும், அதில் இருந்த விஷயங்கள் நிறைய. தேடிப்போன பல கிடைக்காவிட்டாலும், ஆயிரம் வரை இன்று வாங்கிவிட்டோம் நானும் என் அண்ணணும். வாசிப்பு தான் பாக்கி. மக்களை மயக்க நிறைய இருக்கிறது, எழுத்தாளர்களுக்கு பஞ்சமில்லை, நல்லவற்றை தேடிப் பிடிக்கணும், அதைவிட பதிப்பாளர்கள் நல்லவற்றை மீண்டும் பதிப்பிக்கணும். இரா.பி.சேது பிள்ளை, இரா. இராகவையங்கார், மு. இராகவையங்கார். மீனாட்சி சுந்தரனார், உ.வே. சா, கி.வா.ஜா இவர்களின் புத்தகங்கள் மொத்தம் 4-5 கூட இல்லை.. இவர்கள் தான் இந்த புத்தகங்களும், புத்தகத் திருவிழாவும் இருக்க வேரானவர்கள். அவர்களின் எழுத்துக்களை மறுபதிப்பு செய்ய முன்வரவேண்டும். இன்று கொட்டிக்கிடந்த கம்ப இராமாயண உரையை அவர்களை விட யார் உயர்வாய்ச் சொல்லமுடியும்..! எவற்றைக் கழிக்க வேண்டும் என்பது வாசகர்களும், பதிப்பாசிரியர்களும் தான்.. இருவருக்கும் சம பங்குண்டு.. இந்த 10% டிஸ்கவுண்ட் (கழிவு) மட்டுமல்ல!
முடிவில் வாங்கியவைகள்
No comments:
Post a Comment