Monday, June 5, 2017

கடலைக் காகிதத்தில் காந்தியம்

இரண்டும் வெவ்வேறு காலங்களில் எழுதியது.. ஆனாலும் நிலை ஒன்று தான், என்றும் மாறாது!

ஐடி-யும் அர்த்த சாமமும்: 

நேரம் நள்ளிரவை நெருங்கி கொண்டிருந்தது.. சின்ன முள், பெரிய முள் இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு இந்த இரவின் நேரத்தைக் குறைத்துக் கொண்டிருந்தது, விடியலை நோக்கி.. வழக்கத்தை விட கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேலையும், வந்த எஸ்கலேசன் மீட்டிங், மெயில் எல்லாம் முடித்துக் கொண்டு மனதில் தோன்றிய ஆழ்வார் பாசுரங்களை அசை போட்டுக் கொண்டு வந்துகொண்டிருந்தேன்.. அலுவலக நண்பர் டைடல் வரை ட்ராப் தருவதால் (அவருக்கு நன்றி) நேரம் மிச்சமானாலும்,பறக்கும் ரயிலை திருவான்மியூர் சிக்கனலிலிருந்து அண்ணாந்து பாக்கவே முடிகிறது..நம்ப கிரகம் அம்புட்டு தான் போல..சரி வேற வழி இல்லை.. பஸ் பயணம் தான்.. சிக்னல் தாண்டி நிற்காத பஸ் பின்னால் ஓடிப் பிடித்தேன். ஐஜி ஆபீஸ் சிக்கனலில் நடத்துனரிடம் 'சார், குயின் மேரிஸ் ஸ்டாப்'.. என்றேன் சன்னமாக.. 'நீங்க கண்ணகி தான் டிக்கெட் எடுத்தீங்க.. இங்க நிக்கணுமா?'.. ஏற்ற-இறக்கத்துடன் பார்த்தார்.. 'சரி.. போங்க'.. கண நேரத்தில் பஸ் புறப்பட்டது, அதில் இருந்த ஆறு பேருடன்.. அங்கிருந்து விவேகானந்தர் இல்லம் வரை, நடை பாதையில் பலரும் உறங்குவார்கள்- பிச்சை எடுப்பவர்கள், கை வண்டி இழுப்பவர்கள், மற்றும் அந்த வகையில் இருப்பவர்கள்.. இன்று அவர்கள் அனைவரும் உறங்கத் துவங்கி விட்டார்கள். ஒரே ஒருவர் மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார், தோற்றம் பிச்சை எடுப்பவர் போலிருந்தது.. சரி.. நானோ வந்தியத்தேவனோட பசியோடு நடந்து வந்து கொண்டிருந்தேன்.. கை நிறைய இல்லாவிட்டாலும், மனசு நிறைய சம்பாதித்தாலும் நான் சாப்பிடுவது என் கையில் இல்லை.. இது தான் எனக்கும் அவருக்கும் உள்ள - ஒத்துமையா-வேற்றுமையான்னு தெரியல. விவேகானந்தர் இல்லம் அருகில் ஒரு பசு மாடு , ரோட்டின் இரு புறமும் நின்று நிதானித்து பார்த்து சாலையைக் கடந்து, சிறிது ரோட்டின் ஓரத்தில் நடந்து கடற்கரை சென்று படுத்துக் கொண்டது.. மனிதர்கள் கூட இப்படி கடப்பார்களான்னு தெரியாது. மிக அழகாய் இருந்தது..
இது போன்ற வாழ்க்கையை நீங்களும் அனுபவிக்க வேண்டுமா.. ஒன்னும் பெருசா பண்ண வேணாம்.. ஒரு ஐடி கம்பெனியில், யுஎஸ்-க்கு 'வேலை' செய்யும் ஒரு டெவெலப்மென்ட் ப்ராஜெக்ட்ல் சேர்ந்து விடுங்கள்.. 'செங்குத்து' ப்ராஜெக்ட்ல் சேர்ந்தால் இவற்றை அனுபவிக்க முடியாது.. 'கிடைமட்ட' ப்ராஜெக்ட்டாக இருக்கணும்.. பிறகு, அர்த்த ஜாமத்தில் நடக்கும் அதிசயங்கள் கூட காணலாம்.. உங்களுக்கு இரசனை வேணும்.. இது தான் வாழ்க்கை என்று புரிந்து கொள்ள வேண்டும்.. அவ்வளவு தான்!..
வீட்டினுள் நுழைந்ததும் இந்த பாரதியார் பாடல் ஓடிக்கொண்டிருந்தது 'நிற்பதுவே நடப்பதுவே'.. அதில் இருந்த கடைசி வரிகள், இன்றைய டச்சிங் வரிகள்.. நிதர்சன வரிகள்.. (அதற்குள் 2-3 ஆன்சைட் அழைப்புகள் இத்யாதிகளில் பாடலை ஒரு வரி கூட கேட்க முடியாமல் போனது.. சுயத்தையும் இழக்கிறோம் பல நேரங்களில்)
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்; இந்தக் காட்சி நித்தியமாம்.


**************************************************************************************************************************************************************************************************************
05-Jun.

காந்திய உணவு:

இன்று நம்மாழ்வார் அவதார திருநாள் - எட்டாவது உற்ஸவம். 

அலுவலகத்திலிருந்து கிளம்பும்போதே இங்கு கோவிலில் தீர்த்தம், பிரசாதம் கொடுத்திருப்பார்கள். ஏதோ இப்போதாவது கிளம்ப முடிந்ததே என்று நினைத்துக் கொண்டேன். அந்தக் காலத்தில் இந்த கணினி துறை இல்லை, இரவில் வேலை செய்பவர்கள் எல்லாம் அரக்கர்களுக்கு ஒப்பாகச் சொல்லப்பட்டது., பிரம்ம முகூர்த்தத்திலிருந்து அன்றைய வேலைகளைத் தொடங்க வேண்டும். அதற்க்கு ஏற்றார்ப் போல் கோவில் திருவிழாக்கள் எல்லாம் இருந்தன. இன்றோ பாதிநாள் வீட்டிற்க்கு வரும்போதே பிரம்ம முகூர்த்தம் வந்துவிடுகிறது., மாத்யானிகம் சேர்த்தே செய்துவிட வேண்டியதாகிறது. ஒரு வகையில் இரவில் வேலை செய்வது என் அனுபவத்தில் உடம்புக்கு மிக கெடுதி. சாப்பாடு நினைத்த போது கிடைக்காது, அதுவும் செரிக்காது, சரியான தூக்கம் இருக்காது., ரூமில் தங்குபவர்களுக்கு இன்னும் சிரமம் அதிகம்., கூட இருப்பவர்கள் எல்லாம் வேலைக்குச் செல்வதால் கரண்ட் பில், பேப்பர் பையன், கேபிள், டெலிபோன்கார்களுக்கு நாமே பதில் சொல்ல வேண்டிவரும்.

சரி, இன்று கிளம்பும் வரை என்னடா எந்த ஒரு எஸ்கலேஷன் வரலைன்னு நினைத்தேன், அதற்குள் ஒரு மீட்டிங்ல் நாளை வரவிருக்கும் எஸ்கலேஷன் தெளிவாகத் தெரிந்தது. இப்போதெல்லாம் இதைப்பற்றி கவலைப்படுவதே இல்லை. கடலில் அலை என்றும் ஓயாது என்பதைவிட காய்த்த மரம் தான் கல்லடி படும். சூரியனின் ஒளியை எந்த எஸ்கலேஷனும் மறைக்காது என்ற மன நிலைக்கு வந்துவிட்டேன். இப்படி வரும் எஸ்கலேஷன் பெரும்பாலும் சூன்யமாகத்தான் முடியும். அதற்குள் நம்மைத் தற்காத்துக்கொள்ள தேவையான எவிடென்ஸ் தயார்நிலையில் வைக்கணும். இந்த ஐடி உலகத்துல ஈமெயில் தான் புரூப். அப்படியே பக்காவா இருந்தாலும் நமக்கு அதிர்ஷ்டம் இல்லைன்னா பழி நம் தலைக்குத்தான். நம்ம காலைவார கூடவே இரெண்டு பேரு இருப்பான், எதிரணி முழுதும்.

'ஆதி மூலமே'ன்னு கஜேந்திரன் கூப்பிட/கதற, யாரையோ கூப்பிடுவதாய் எண்ணி மற்ற தெய்வங்கள் பின் வாங்க, விஷ்ணு காப்பாற்றினார். நம்ப மெய்லும் அப்படித்தான்., என்ன தான் நாம் நியாயமாய் இருந்து கத்தி-கதறினாலும் யாரையோ கூப்பிடுவதாய் இருப்பார்கள். உதவிக்கு வந்தால் அவர் கம்பெனியிலிருந்து வெளியேறுபவராக இருக்கலாம். இப்படி எல்லாம் இருக்கும் இடங்களில் வேலை செய்வது சங்கடமாய் இருந்தாலும் இது தான் வாழ்க்கை என்று பலருக்கும் பழகிப் போய்விட்டது. இன்று அந்த அளவிற்கு இன்னும் போகவில்லை என்றாலும், இனம் தெரியாத ஒரு எதிர் பார்ப்புடன் வீடு நோக்கி பயணித்தேன். இன்றும் அந்த நண்பர் திருவான்மியூர் வரை லிப்ட் தர, இன்றைய கிரகம் கொஞ்சம் அட்வான்ஸாக இருந்தது. அப்போது தான் ட்ரெயின் போக அடுத்து அரை மணி நேரம் காக்க வேண்டியிருந்தது. பெரும்பாலும் வெளியில் சாப்பிடுவதில்லை என்றாலும், இந்த காந்திய உணவு நிலகடலை மட்டும் வாங்குவதுண்டு. இன்றும் டைடல் வாசலில் வாங்கினேன். சாப்பிட்ட பிறகு அந்த பேப்பரைப் படிப்பதுண்டு. இரெண்டு வாரம் முன்பு அன்று காலை வந்த ஆனந்த விகடனில் தான் கடலை வந்தது. அந்த அளவில் தான் அதன் தரம் உள்ளதோ, தெரியவில்லை, அதாவது விகடன்!..

இன்றும் அது போல பிரித்துப் படித்தேன். ஏதோ ஆங்கில பத்திரிக்கை. அரவிந்தன் நீலகண்டன் என்ற பெயர் இருக்க(ஸ்வராஜ் பத்திரிக்கையில் அரவிந்தன் நீலகண்டன் அவர்களிடமிருந்து இ்து போன்ற கட்டுரை எதிர் பார்க்காதது :) ) ,மேலும் படிக்கத் தொடங்கினேன். காந்திய உணவோடு வந்ததால் செய்தியும் காந்தியைப் பற்றியது. காந்தியின் வழிகாட்டுதல்கள் என்ற அடிப்படையில் அமைந்த கட்டுரை. துவக்கமே அட்டகாசம்.. சர்.சி.வி.இராமன் - காந்தி பற்றிக் கூறியது நோபல் பரிசு வழங்கும் அரங்கில் ஒரே கறுப்பின அடையாளமாக. எனக்கு என்னமோ இராமன் சுதந்திரப்போராட்டத்தில் இருந்திருப்பார் என்றே நினைத்தேன். மேலும் காந்தியின் கொள்கைகள், கிராமப்புறத்தை மேம்படுத்த சொன்ன யோசனைகள், அதை எவ்வாறு பின் வந்தவர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர், உள்நாட்டு உற்பத்திப் பெருக்கம், அதன் சந்தை, முதலீடுகள் அது பற்றி அவர் சொன்னது, யோசனை சொன்ன திட்டங்கள் என்று கட்டுரை நீண்டது.

கடலை தந்தது ஒரு பேப்பரில்., அதன் அடுத்த பகுதியைத் தொடர முடியாமல், ஆவலால் அடுத்த ட்ரெயின் விட்டாலும் பரவாயில்லை என அந்த கடலைக்காரரிடம் கேட்டேன்..

'சார், அது முடிஞ்சிருச்சு., விகடன்ல வேணுமா?' என்றார்.. 'அது முடிஞ்சிருச்சு' என்பது எ்னக்கு வேறு மாதிரித்தான் உணர முடிந்தது..

ஆம்!. இன்றைய சூழலில் காந்தியும் முடிந்தார்; காந்தியமும் முடிந்தது.. !..

"வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம்!" என்பது ஏட்டில் மட்டுமே உள்ளது இப்போது! :(

"He provided decisive inputs to the current discourse on eco-technologies"..

"His vision contained preamble for decentralized, transparent, alternative technologies adapted to local technologies"..

(இது தான் அந்த கடலை மடித்த பேப்பர்.. வீடுவரை மேலும் கசக்காமல் எடுத்து வந்தேன்)




No comments:

Post a Comment