தொண்டு ஆம் இனமும் இமையோரும் துணை நூல் மார்வின் அந்தணரும்
அண்டா எமக்கே அருளாய் என்று அணையும் கோயில் அருகு எல்லாம்
வண்டு ஆர் பொழிலின் பழனத்து வயலின் அயலே கயல் பாயத்
தண் தாமரைகள் முகம் அலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே!
(திருமங்கை ஆழ்வார் - பெரிய திருமொழி)
"தொண்டு செய்பவர்களான பாகவதர்களுடைய ஸமூஹமும், நித்யஸூரிகளும், யஜ்ஞோபவீதத்தோடு கூடின மார்வையுடைய பிராமணர்களும், ‘தேவனே, எங்களுக்கே அருள் புரிய வேணும்’ என்று சொல்லிக்கொண்டு வந்து சேர்ந்து நிற்கிற கோவிலாயும்,சுற்றுப்பிரதேசங்களெங்கும், வண்டுகள் நிறைந்திருக்கப்பெற்ற சோலைகளிலுண்டான நீர்நிலங்களில், கழனிகளிடத்துள்ள கயல் மீன்கள் வந்து துள்ள அதனால் குளிர்ந்ததாமரை மொக்குகள் முகம் விகஸிக்கப் பெற்றதாயுமுள்ள ஸாளக்ராமத்தை நெஞ்சே!, அடை"
உபகர்மா- ஆவணி அவிட்டம் :
ப்ராமண (தற்போதைய) புருஷர்கள் கொஞ்சம் குதூகலமாய்க் கொண்டாடும் பண்டிகை (!). ஆம் காலப்போக்கில் அப்படித்தான் ஆகிவருகிறது. வேதம் கற்கத் தொடங்கும் நன்னாள் தான் இந்த உபகர்மா நாள். சென்னையில் உள்ள பலரும் தங்கள் சொந்த ஊருக்குப் போக 2-3 மாதம் முன்பே டிக்கெட் புக் செய்து எதிலும் இல்லாத ஒரு வேகத்தை இதில் காட்டுவார்கள். மேனேஜரிடம் ஆவணி அவிட்டம் பற்றி புரிய வைத்து லீவு வாங்குவது இப்போதைக்கு கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது. கிட்டத்தட்ட ஒன்னும் தெரியாத கிளைன்ட் கிட்ட கூட சைன்-ஆப் வாங்கறமாதிரி தான். டீம்ல இருக்கற ஒருத்தனே மேனேஜர் கிட்ட 'இதுக்கு எல்லாம் ரொம்ப நேரம் ஆகாது. நான் காலையில் 6 மணிக்கே முடிச்சுடுவேன்னு சொல்லிடுவான்'.. அதுக்கு அப்பறம் நம்ப எங்க லீவ் கேட்டு கிடைப்பது. இதில் கொஞ்சம் விதிவிலக்கு இருக்கு. சமயங்களில் ஒர்க் ப்ரம் ஹோம்ன்னு சொல்லிண்டு இந்த கர்மாக்களை கொஞ்சம் ஸ்ரத்தையா செய்யலாம். 2 வருஷம் முன்ன வரை பிடிஎப் டாக்குமெண்ட் ஈமெயில்-களில் பறக்கும். அதை ஒடிசி-யில் இருக்கும் பிரிண்டர் உதவியால் பிரிண்ட் எடுத்தனர். இந்த வருஷம் வாட்ஸப் மூலம் உபாகர்மா மந்திரங்கள் பறந்தன. முதல்நாள் நண்பர் திருமலை வாட்ஸப்பில் ஷேர் செய்ய, அமெரிக்கா நண்பர்கள் வழக்கம் போல் ஒரு கேள்வி கேட்டனர் - ஆவணி அவிட்டம் என்று? இன்றா? நாளையோ?.. இந்தியா நேரம் படி , அமெரிக்கா நேரம் படி இத்யாதி என்று பல பதில்கள் பரிமாறப்பட்டன. ரெங்கா தனக்கே உண்டான படி 'காரிமாறன்' டைரி படி என்று பதில் அனுப்பி, 2-3 திருமொழி வியாக்யானங்களும் அனுப்பினார். அங்குள்ள பலருக்கும் இன்னும் ஒரு சந்தேகம் வரும் - "பாரத வர்சே பரதக் கண்டே சொல்லனுமா இல்ல அமெரிக்கா கண்டே இத்யாதி" சொல்லனுமான்னு!.ஸ்ரீகுமார் மதுரைக்காரர் என்பதை அடிக்கடி நிரூபிப்பார்.. இந்தமுறையும் 'என்ன ஸ்பெஷல் தளிகைன்னு' ஒரு வாட்ஸப் அனுப்பினார். பலரும் பதிலுக்கு அப்பத்தின் போட்டோவோடு அனுப்ப மகிழ்ச்சியோடு போனது அந்த தருணங்கள். இதில் கொஞ்சம் டாஸ்க் ஆர்டர் அர்ஜெண்சி இஸ்யு தள்ளிவைக்கப்பட்டது என் பக்கம் :).. அதற்குள் முகநூல் முழுவதும் சோ எழுதிய 'எங்கே பிராமணன்?' கேள்வி-பதில் பகுதியிலிருந்து 'உபகர்மா' பற்றி நிறைய ஷேர் செய்யப்பட்டன. யூஸ்ல் இருக்கும்போது வெளிய தண்ணீர் கூட சாப்பிடமுடியாதபடி கஷ்டப்பட்டதும் உண்டு. சரி. அது வேற தனிக்கதை!
ஊரிலுள்ள எல்லாரும் ஒன்று கூடி பூணல் போட்டுக்கொள்வது, தர்ப்பிப்பது, ஸமிதாதானம், ஹோமம் செய்வது, மௌஞ்சி-மான் தோல்-தண்டம், பட்டு வேஷ்டி சகிதமாக பிரம்மச்சாசரிகள் வருவது என்று ஒரே குதூகலமாய் இருக்கும். துவரிமானில் தலை ஆவணி அவிட்டம் கொண்டாடியது இன்றும் நினைவில் இருக்கிறது - காலை 5-6 மணிக்கே வைகையில் வாத்தியார் ஜெகந்நாதன் சுவாமி இருந்தார். நாங்கள் 7 மணிக்குத்தான் போக - 'பரவாயில்ல. சூரியன் உதிச்சு 1 1/2 நாழிகைக்கு அப்பறம் தான் ஆரம்பிக்கணும்ன்னு சமாதானம் சொல்லி, பூணல் போட்டுவைத்து ஆத்திற்கு வர 9-10 மணி கிட்ட ஆனது.. வீதியில் தலை ஆவணியவிட்ட குழந்தைகளுக்கு ஆராத்தி எடுத்தனர் வீடு தோறும். காயத்ரி அன்று, எல்லாரும் ஜெபம் செய்து கொண்டிருந்தனர்.. ஒரு மாமா மட்டும் ஜெபம் செய்து 10-15 நிமிஷம் கழித்து 'வாத்தியார் மாமா, என்ன மந்தரம் சொல்லி ஜெபம் செய்யணும்ன்னு?' கேட்டாரே ஒரு கேள்வி!. இன்றளவும் மறக்க முடியாதது. இப்போது நிலைமை கிட்டத்தட்ட தலை கீழ். ஆனாலும் அனைவரும் ஒரு உற்சாகத்தோடு, முடிந்தவரை பந்துக்களோடு கூடி கொண்டாடுவது மகிழ்ச்சியே!. நான் பார்த்த பிடிஎப்-ல் 'நன்னா ஜலம் ஓடும் இடத்தில் இருந்து கொண்டு செய்யவும்' என்று போட்டிருந்தது. அச்சுப் பிழையாகக் கூட இருக்கலாம் :(.
இதை ஒரு வித தயக்கத்தோடு தான் எழுதினேன். ~2 மாதம்முன்பு கிளைண்ட் விசிட். அதாவது நமக்கு மறைமுகமாக படி அளக்கும் முதலாளிகளில் ஒருவர் வருவார்.. ஒடிசி முழுதும் நடப்பார். அவரை சூழ்ந்து கொண்டு 'எப்போதுமே கோர்ட்டு போட்டு இருக்கும்' அக்கௌன்ட் மேனேஜர் - சேல்ஸ் டீம், ஆன்சைட் மேனேஜர், இங்கிருக்கும் மேனேஜர்கள் எல்லாம் புடை சூழ வருவார்கள். என் ப்ராஜெக்ட் பங்கிற்கு என்னையும் அழைத்தார்கள். எனக்குத் தனியாக ஒரு அறிமுகம் தரப்பட்டது. வழக்கம் போல் திருமண்-ஸ்ரீசூர்ணம், வழக்கத்திற்கு மாறாக பார்மல்ஸ்-ல் (!) இருந்தேன், கிட்டத்தட்ட மாத்யானிக காலம். அதன் பிறகு வேறொரு நண்பரைப் பற்றி அறிமுகம் தொடங்கியது -'...ஹி இஸ் நாட் ஹியர். ஹி வெண்ட் பார் ப்ரேயர் டு நியர். திஸ் இஸ் ரம்ஜான் மண்த். ஆஸ்பீசியஸ் டு ஹிம்'.. கேட்ட அவர் புரிந்து கொண்டு கொஞ்சம் பாராட்டி,'தட்ஸ் பைன்' என்றார். (இதில் 3 மதத்தினரும் சம்பந்தப்பட்டு இருந்தனர்..:) சொன்னவர், கேட்டவர், சொல்லப்பட்டவர்).. எனக்கு கொஞ்சம் சுருக்கென்றிருந்தது. நாம் 3 வேளை சந்தியாவந்தனம் செய்யணும். அது முறையாகச் செய்யச் சாத்தியப்படவில்லை. நமக்கு அலுவலகத்தில் அனுமதி கிடைக்குமான்னு தெரியாது. ஆனால் அந்த நண்பர் கிளைண்ட் விசிட் என்று கூடாகக் கவலைப்படாமல் தொழுகைக்குச் சென்றார். (நாம் அப்படி போவோமா, போனால் நம்மை அத்தோடு (!) விடுவார்களான்னு அடுத்த விஷயம்). சந்தியாவந்தனம் இந்த அளவில் தான் இருக்கிறது. பெரும்பாலும் பணிக்குச் செல்லும் பலரும் இவ்வாறாகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது. காலாதீத ப்ராயச்சித்தார்த்தம் என்பது ஸந்தியாவந்தனங்களின் நடுவே வழக்கமாகி விட்டது.
2 நாள் மின்ன ஒரு உபநயனத்தில் கூடலூர் சுந்தர் அண்ணா கேட்டது 'எதை வைத்து உபகர்மா நாள் கொண்டாடப்படுகிறது?' .. அங்கேயே எனக்குத் தெரிந்த வரை சொன்னேன். இது பற்றி அண்மையில் வாங்கிய புத்தகத்தில் (ஸங்கேஷ தர்ம சாஸ்த்ரம்) சொல்லப்பட்ட உபநயனம்-யக்ஞோபவீதம் பற்றி சில குறிப்புகள்..
* கர்ப்பத்திலிருந்து 8-வது மாதம் உபநயனம் செய்ய வேண்டும். அதாவது குழந்தையின் 7-வது வயது. இதே போல் ஷத்ரியன் கர்ப்பத்திலிருந்து 11-வது, வைஷ்யன் 12-வது வருஷத்திலும் முறையே வசந்த, க்ரீஷ்ம, சரத் ருதுவிலும் செய்ய வேண்டும். இதில் தவறியவர்களுக்கு வசிஷ்ட்டர் சொல்வது , உத்தாலக மகரிஷியால் சொல்லப்பட்ட விரதம் செய்து உபநயனம் செய்ய வேண்டும்.. அது மிகவும் கஷ்டமானது. 8 நாள் சுத்த உபவாசம் செய்யணும், மேலும் பல நியமங்களோடு, கிட்டத்தட்ட 4 மாத காலம் விரதம். 16-வது வயதிலும் செய்யலாம்ன்னு மனு சொல்கிறார் காலாதீத ப்ராயச்சித்ததோடு. (ஆபஸ்தம்பர்)
* பிராமணனுக்கு பருத்தி பஞ்சாலும் (நாம் எல்லாம் தமிழர்கள், நமக்கு எப்பவுமே ஆழ்வார் தான் மேற்கொள்.. திருமங்கை ஆழ்வார் தெளிவாக 'துணை நூல்' என்று சொல்கிறார்) , க்ஷத்திரியனுக்கு சணலினாலும், வைச்சியனுக்கு ஆட்டு ரோமத்தாலும் செய்யப்பட்டது யக்ஞோபவீதம் (மனு).
*உபவீதம் - பிரமச்சாரி, திரிதண்டி ஸந்யாஸிகளுக்கு ஒன்று, க்ருகஸ்தர், வநஸ்தர்களுக்கு இரண்டும்., மூன்றாவது உபவீதம் உத்தரீயம் இல்லாவிட்டால் தரிக்க வேண்டும்.
*சிகை, உபவீதம் இல்லாமல் செய்யும் கர்மா பலன் தராது.
* உபவீதம், வஸ்த்ரம், ஆச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும் சொம்பு, செருப்பு இவைகளை மற்றவர்கள் உபயோகப்படுத்தக் கூடாது.
*சௌசம் போகும் காலங்களில் பூணலை மாலையாக்கி காதுகளில் சுற்றிக் கொள்ளவேண்டும்,.இல்லாவிடில் புதுப் பூணல் மாற்றிக் கொள்ளவேண்டும்.
*உபநயனம் ஆகி 4 நாட்கள் தீக்ஷ. அப்போது பூணல் இருந்தாலோ, காணாமல் போனாலோ ஒரு வியாகிருதி ஹோமம் செய்து மீண்டும் யக்ஞோபவீதம் தரிக்க வேண்டும்
* தண்டதாரணம் - பிராம்மண பிரம்மச்சாரிக்கு - பில்வம், பாலாசம்; ஷத்ரியனுக்கு - ஆல் கருங்காலி; வைச்யனுக்கு - அரசு அத்தி இந்த மரங்களில் தண்டம் தரித்துக் கொள்ளவேண்டும்.
* கிருஷ்ண யஜுர் வேதிகள் சிராவண மாதத்தில் (ஆவணி) உதயவ்யாப்தியான பௌர்ணமியிலும், ருக்வேதிகள் சிராவண மாதத்தில் (ஆவணி) ச்ராவண (திருவோணம்) நக்ஷத்திரத்தில் உபாகர்மா செய்ய வேண்டும். (கார்க்கியார்)
* கிருஷ்ண யஜுர் வேதிகள் - பூர்ணிமையும்,ப்ரதமையும் 1 1/2 நாழிகைக்குப் பிறகு மத்தியானத்தினுடைய ( ஸங்க காலம்) முன் சேருமேயானால் அன்றே உபாகர்மா, காயத்ரி செய்ய வேண்டும். ஸங்க காலத்திற்கு முன் பூர்ணிமையும்,ப்ரதமையும் சேருமேயானால் முதல் நாள் உபாகர்மா, மறுநாள் காயத்ரி-ஸமிதாதானம் செய்ய வேண்டும்.
*உதயத்திலிருந்து 12 நாழிகைக்கு மேல் வ்யாப்தி உள்ள ஹஸ்த நக்ஷத்திரத்தில் பாத்ரபத (புரட்டாசி) மாஸத்தில் சாமவேதிகள் உபாகர்மா செய்ய வேண்டும். (சூரியன் ஸிம்ஹராசியில் இருக்க ஹஸ்த நக்ஷத்ரம் கூடிய பஞ்சமி திதியிலும்)
* ஈர வேஷ்டியுடன்உபகர்மாவும் மற்ற எந்த கர்மாவும் செய்யக்கூடாது. (சாண்டில்யர்)
* உபவீதத்தை 9 நூல் உள்ளதாகச் செய்து மூன்று நூல்களைக் கீழாகவும் , 9 நூல்களை மேலாகவும் முருக்கி,பிறகு முடிச்சுப் போட்டு , ப்ரதிஷ்டை செய்து தரித்துக் கொள்ளவேண்டும். நவதந்து தேவதைகள், க்ரந்தி தேவதைகள் இவர்களை ஆவாஹனம் செய்து , சூரியனுக்கு காண்பித்தால் உபவீதம் தயாராகும்.மேலும் சில விதிகளும் உண்டு.
துவரிமானில் பெரிய கூடத்தில் என்னுடைய தாத்தாவும், அவருடைய அண்ணாவும் மிகவும் ஆச்சாரமாக கூடம் முழுக்க நின்று பூணல் நூற்பது இன்றும் கண்கள் முன்னால் இருக்கிறது. நாங்கள் இங்கும் அங்கும் ஓட முடியாமல் வேடிக்கை பார்ப்போம். அதன் பிறகு ஆத்தில் ஆச்சாரமாக உபவீதம் நூற்பவர்களைப் பார்க்கவில்லை. சில விஷயங்கள் நினைவில் மட்டும் இருக்கும், மீண்டும் அது போல் ஒரு காலம் வராது!
No comments:
Post a Comment