Saturday, August 27, 2016

கிருஷ்ண ஜெயந்தி - துவரிமான்


                                           कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन |
                                          मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि ||

"கன்னலில் லட்டு அவற்றோடு சீடை கார் எள்ளின் உண்டை கலத்திலிட்டு"

"அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து சொப்பட நான் சுட்டுவைத்தேன்"

"செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்காரம் நறுநெய் பாலால் பன்னிரண்டு திருவோணம் அட்டேன் பண்டும் இப் பிள்ளை பரிசு அறிவன்"

"கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கொருத்திக்கு அவ்வளை கொடுத்து நல்லன நாவற் பழங்கள் கொண்டு"

"ஒருகாலில் சங்கு ஒருகாலில் சக்கரம் உள்ளடி பொறித்து அமைந்த. இருகாலும் கொண்டு, அங்கங்கு எழுதினாற்போல் இலச்சினைப் பட நடந்து"
                                                                                                                                                                                 (பெரியாழ்வார்  திருமொழி) 

                            இந்த பிரசாத விஷயத்தில் கூட பாண்டி நாட்டு ஆழ்வார்களை (!) மிஞ்சமுடியாது. கண்ணனுக்குப் பார்த்துப் பார்த்து என்ன கொடுக்க வேண்டும் என்று தாயுள்ளத்தோடு பொங்கும் பரிவாலே பாடியிருக்கிறார் பெரியாழ்வார். இன்றும் நம் இல்லங்களில் செய்யும் பக்ஷணங்கள் முதல் வீட்டில் கிருஷ்ண பாதம் வரைவது வரை எல்லாம் ஆழ்வார் பாடியதிலிருந்து தான் வந்திருக்கும்.
                                              கண்ணன் சொன்னது போல் அலுவலகக் கடமையை மட்டுமே செய்து கொண்டிருக்க வேண்டியதாகிவிடுகிறது பல நேரங்களில். இந்த வருஷம்  கிருஷ்ண ஜெயந்தியும் அப்படித்தான் போனது. நமக்கு சொந்த வேல இருப்பது கிளைண்ட்க்குக்கோ, சேல்ஸ், ப்ரீ-சேல்ஸ் டீமுக்கு எல்லாம் எப்படி தெரியும்ன்னு தெரியல. ஆவணி அவிட்டம் தொடங்கிய உடனே 'வி நீட் திஸ் ப்ரோபோசல் பை ஈவினிங்' என்று ஒரு மெயில். நாம அனுப்பினா உடனே அதை ஏற்றுக்கொண்டால் அவர்கள் கௌரவம் சற்று இளைப்பாறும். அதனால 4-5 ரெவ்யு மீட்டிங் (review meeting). அப்பறம் இன்னொரு இஸ்யு (issue) டெலிவரி பக்கம்.. நம்ப ஆஃஷோர் (offshore) பசங்கள வச்சு வேல பாக்கறது வைகைல எதிர் நீச்சல் போடுற மாதிரி - ஒன்னு தண்ணீர் இருக்காது, இல்லை வெள்ளம் வரும், அதும் இல்லைன்னா முட்டி அளவு தான் தண்ணி இருக்கும். பண்ணின தப்பையே 10 நாள் கழிச்சு தான் சொல்லுவான். அப்பறம் கிளைண்ட் முன்னாடி நாம தான் வாய்தா வாங்கணும். அவன் எவ்வளவு அடிச்சாலும் வலிச்ச மாதிரியே காட்டிண்டு வேலை பாக்கணும். அதே வேலைல 4-5 நாள் போக கிருஷ்ணன் பிறப்பும் வந்தது. அப்பவும் சொல்லிவச்ச மாதிரி ஒரு மெயில் 'வி நீட் திஸ் ப்ரோபோசல் asap அண்ட் லோட் தி ரிசோர்ஸஸ் பை டுமாரோ'.. அதாவது வேலை பார்க்க ஒருவித ஒப்பந்தம் தயார் செய்வதோடு, அதற்க்கு ஆட்களும் நாளை முதல் வேணும் என்பது தான் அது.பார்த்ததும் பலமான சிரிப்பு தான் வந்தது. சமைக்கறவனுக்குத்தான் தெரியும் கைவசம் சரக்கு இருக்கா இல்லையான்னு.

                                              இருக்கற பிரச்சனை பத்தாது இதுவேறயான்னு ஒரு எண்ணத்தோட டெலிவரி, ஆடிட் என மேலும்  பலவித பிரச்சனைகளையும் கையாளவேண்டியதானது. கிருஷ்ண பிறப்பிற்கு ஊருக்குப் போகலாம் என்ற எண்ணத்தையே மாற்றவேண்டியதானது. சரி, ஆத்திலாவது அதைக் கொண்டாடலாம்ன்னு பார்த்தா அதுக்கும் வழி இல்லாம போனது. ஒருத்தி மகனாய் கிருஷ்ணன் ஓரிரவில் பிறந்து ஒளித்து வளரும் போது தான் வீடு வர முடிந்தது. (அதாவது 4-5 சாமம் கடந்து). இந்தமுறை கிருஷ்ண பிறப்பிற்கு துவரிமான் போய் தேர் சேவித்துவிட்டு வரலாம்ன்னு ஒரு எண்ணம். அது நிறைவேறாததால், ஸுந்தரிடம் போட்டோவாவது முகநூல் மூலம் அனுப்பு என்றேன். இப்போதைக்கு அது தான் ஒரே வழி. பல திவ்ய தேச உற்ஸவங்களையும் அதுலயே சேவிக்கும்படி ஏற்பாடாகிறது. (பலரின் செல்பிகளோடு :( )

                                               துவரிமான் - மதுரை அருகே 1 காத தூரம் (6-7 கி.மீ) இருக்கும் ஒரு வைகை கரைக் கிராமம். திருமால் மச்சாவதாரம் செய்த கிருதுமால் நதி உற்பத்தியாகும்  இடம். ஸ்ரீரங்கம் மாதிரியே இந்த ஊரை வைகையும், கிருதுமாலும் இரண்டாகப் பிரிக்கின்றன. சுமார் 400-500 வருஷங்களுக்கு முன் காஞ்சிபுரத்திலிருந்து தென்திசை நோக்கி வந்த பிராம்மணக் குடும்பங்கள் இந்த நதிக்கரையில் அக்ரஹாரம் அமைத்து தங்கலாயினர். மேலத்தெரு, கீழத்தெரு, அக்ரஹாரம் என்றே ஊர் அமைப்பு இன்றுவரை. தங்கள் பேரில் 'வாங்கீபுரம்','தூப்புல்' என்று அடைமொழி வைத்திருப்பர் இன்றும். வடகலை ஸம்ப்ரதாயத்தைப் பின்பற்றுபவர்கள். நதிகளால் பிரிக்கப்பட்டதால் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரெங்கநாதர் திருக்கோவில் நிர்மாணம் செய்து உற்ஸவங்கள் நடத்திவந்தனர். ஊரில் வேதம் படித்தவர்கள் தான் அதிகம். தமிழ்மறைக்கு கொஞ்சம் முக்கியத்துவம் இருக்கும். அஹோபிலமடம் அழகியசிங்கர் சஞ்சாரம் வரும்போது இங்கு தான் 2-3 மாதம் இருப்பார். ஊரே கோலாகலமாய் இருக்கும். 'வெள்ளை நுண் மணல் கொண்டு தெருவணிந்து' என்ற ஆண்டாள் பாசுரத்திற்கு ஏற்றார்ப் போல் வீதி எங்கும் கோலம், பட்டிணப்பிரவேசம், ததியாராதனம் இத்யாதிகள்.

                                           ஊரில் 4-5 குடும்பம் மட்டுமே தென்கலை ஸம்ப்ரதாயத்தவர்கள் (பாண்டிய தேசத்தைப் பொறுத்தவரை இது போன்ற பிரிவினை இல்லை). ஆனால் பாகுபாடும் இன்றி தான் இன்றுவரை இருக்கிறார்கள். வைகை நிறைய வெள்ளம் மாதிரி எப்போதும்தண்ணி ஓடும். கிழக்கு ஆற்றங்கரையை ஒட்டிய வீடு எங்களோடது. ஒரு சமயத்தில் ஆற்றங்கரை போகும் வழியில் ஒரு அரசமரம் மட்டும் இருந்தது. திடீரென்று ஒரு பிள்ளையார் வந்தார். அப்பறம் கொஞ்சம் பெரிய பிள்ளையார் வந்தார்..கொஞ்ச நாளில் அது பிள்ளையார் மேடு ஆற்றங்கரை என்றானது. மடத்து அழகியசிங்கர் ஒரு பாறை மீது நின்று 'இது நன்னா இருக்கே' என்று போட்டோ எடுத்ததாக இன்றும் ஒரு படம் மடத்தில் இருக்கிறது. இந்த ஊரில் 40-வது பட்டம் அழகியசிங்கர் பிருந்தாவனம் இருக்கிறது. (என்னுடைய மூதாதையர்கள் இங்கு ஆராதன கைங்கர்யம் செய்துவந்தனர்). ஊரில் பட்டைப்பெயர் இல்லாத மனிதர்களே இல்லை அல்லது வீட்டிற்கு ஒரு பெயர் இருக்கும். அதிகாலையில் ஸ்ரீனிவாசன் மாமா (பிச்சம்மா பாட்டியின் கணவர்) மிகவும் உரத்த குரலில் சஹஸ்ரநாமம் சொல்லிக்கொண்டு வீதி வருவார் என்று அம்மா சொல்லக்கேட்டிருக்கிறேன். அதைக்கேட்டு அனைவரும் அரைகுறை தூக்கம் களைந்து எழுந்து வருவர். கொஞ்ச நேரத்தில் வேதம் சொல்லிக்கொண்டு 2-3 பேர் - அப்பு தாத்தா, இராமஸ்வாமி தாத்தா, யஜு வேத ஜெகந்நாதன் மாமா,  என் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் எல்லாரும் ஆற்றங்கரையில் ஸ்நானம், சந்தி செய்யப்போவார்கள் (வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து). மார்கழி மாதம் முழுக்க பஜனை (என் நினைவில் இராஜா - கண்ணன் மாமா). அம்பி மாமா கிருஷ்ண ப்ரேமி பஜனை.. அப்பறம் வயல்களில் வேலை, சிலர் அரசாங்க, டிவிஎஸ் வேலை என்று போவார்கள், குழந்தைகளுக்குப் பாட்டு இத்யாதிகள் எல்லாம்.. கிட்டத்தட்ட ஆழ்வார் சொல்வது போல் 'வேதம் ஒலியும் விழா ஒலியும் பிள்ளை குழாம் விளையாட்டு ஒலியும் அறா' எப்போதும் இருக்கும். சுமார் 35+ வருஷம் மின்ன மும்பையைச் சேர்ந்த இந்த ஊர்க்காரர் சிறு கிருஷ்ணனுக்கு தேர் செய்ய ஏற்பாடாகி, 5-6 அடி உயரத்தில் தேர் செய்தார்கள். தேரை எங்க வைப்பது என்று யோசித்து பிருந்தாவனத்தில் எழுந்தருள பண்ணினார்கள் (பிருந்தாவனத்தே கண்டோமே என்று ஆண்டாள் சொல்வது போல்). அப்பறம் வருஷம் தோறும் கிருஷ்ண ஜெயந்தி அன்று காலையில் திருமஞ்சனம், சாயங்காலம் 3-4 மணிக்கு தேரை வெளியே கொண்டுவந்து, அதற்குரிய ஹோமம், பலி இத்யாதிகள் செய்து, கிருஷ்ணனை எழுந்தருளச்செய்ய 6 மணி புறப்பாடு தொடங்கும். உபய-வேத கோஷ்டிகளோடு குட்டி கண்ணன் வீதி வருவான் - கிட்டத்தட்ட -'தன்னேராயிரம் பிள்ளைகளோடு, வீதியார வருவான்' என்று ஆண்டாளும், பெரியாழ்வாரும் சொல்வது போல் வீதி நிறைய ஜனங்கள் இருப்பார்கள், தட்டுக்களோடும். சிறுவயதில் சிகப்பு பட்டு கட்டிக்கொண்டு குட்டித் தேர் இழுத்த நினைவு இன்றும் இருக்கிறது.

                                            காலத்தின் வளர்ச்சி அந்த ஊரையும் விட்டு வைக்கவில்லை. ஊரின் பாதியை மதுரையின் அடுக்ககங்கள் வந்துவிட்டன. ஊரைவிட்டு பலரும் சென்னையில் வந்து செட்டிலாகிவிட்டனர். வீடுகள் பூட்டப்பட்டு (சுஜாதா சொல்வது போல்) வீட்டில் ஒரு பிள்ளை அமெரிக்காவில் இருக்க, 50-60 பேர் மட்டுமே ஊரைக் காத்துக்கொண்டிருக்கின்றனர். 'நான் பேருக்குத்தான் மதுரை., ஆனா துவரிமானுக்கே  6-7 தடவை தான் போயிருக்கேன். போகணும்னு தான் பாக்கறேன். முடியலை'ன்னு 2 நாள் முன்ன ஒரு என் தலைமுறை நண்பர் முக நூல் மூலமாக ஆதங்கப்பட்டார். சொந்த ஊரிலிருந்து வந்த எல்லாரும் அதே மனோ நிலையில் தான் இருக்கிறோம். 4-5 வருஷங்களாக  தேர் காலையில் முடிந்துவிடுகிறது. முதல் நாளே திருமஞ்சனம். (அதனாலென்ன, ஆயர்பாடி மக்களே கார்த்திகைக்கு கார்த்திகை தலை இருப்ப உடம்பு குளிப்பர் என்கிறது பாகவதம். கண்ணனைப்பற்றி கேட்க வேண்டுமா? :)). இம்முறையும் காலை 8-8:30 மணிக்கே தேர் புறப்பாடானது. பெரியாழ்வார்  திருமொழி முன்னால் போக, காளிங்க நர்த்தனனாக கண்ணன் புறப்பாடு கண்டருளினார். முன்னர் இருந்த பல ஒலிகள் இல்லை என்பதே ஒரு வருத்தம். என்னுடைய பிளான் மிஸ் ஆனதில் அந்த டாஸ்க் ஆர்டர்ருக்கும் பங்குண்டு!







(படத்தில் - இராகவன் மாமா, சீனு மாமா, அர்ச்சகர் சுந்தரவரதன், வாத்யார் மாமா,  சேஷாத்ரி-நாராயணன்-சேகர் மாமா, வெங்கட்ராகவன் மாமா, பிரபு அண்ணா.. முன்ன இது போன்ற பூச்சரங்கள் இல்லாத தேர் தான் இருக்கும்)

                         சுந்தரின் தயவால் 4-5 படங்கள் பதிய முடிந்தது. 'கூடி இருந்து குளிர்ந்து'  என்பது மீண்டும் மலர 'குறை ஒன்றும் இல்லாத கோவிந்த'னைப் பிராத்திப்போம். சுஜாதா ஸ்ரீரங்கத்து தேவதைகளில் சொல்வது போல் அனைவருக்குள்ளும் ஒரு  'ஸ்ரீரங்கத்து தேவதை' இருக்கும். பார்க்கலாம். இதன் தொடர்ச்சியை முடிந்தவரை..!

No comments:

Post a Comment