'இந்த தேசம் முழுவதும் ப்ரஹ்ம தேஜஸ் உள்ள வேதமறிந்தவர்கள் உண்டாகட்டும். இந்த நாட்டில் அரசர்களும், ஆயுதங்களும், வீர்ய சௌர்யமும் உண்டாகட்டும். பசுக்கள் முதலியவைகள் நன்கு உண்டாகட்டும். பெண்கள் நாகரீகமாக திகழட்டும். பருவம் தோறும் நல்ல மழை பெய்யட்டும். மரங்களும், செடிகளும், பயிரும் வளரட்டும். நமது நாட்டிலுள்ள உள்ள எல்லோரின் யோக க்ஷேமம் வளர்ச்சி அடையட்டும். நமது நாட்டை ஆளும் அரசன் புத்தி கூர்மையுடன் மக்கள் நலம் விரும்பும் வீரனாக திகழட்டும்.' (வேத கருத்து, சர்மா சாஸ்திரி அவர்கள், முகநூல் )
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்; என்று மடியும் இந்த அடிமையின் மோகம்!!
இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள்
ஈந்ததும் இந்நாடே -- இதை வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?
காலை 6:10 மணிக்கு பால் வாங்கப் போகும் போதே கவனித்தேன். ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திருவல்லிக்கேணி கோவில் வாசலில் இந்நாட்டின் மூவர்ணக்கொடி பட்டொளி வீசிப் பறந்தது.சைமாவில் 8:30-க்கு கொடியேற்றம் என்று கேள்விப்பட்டு கொஞ்சம் லேட்டா போன, கொடி ஏற்றி அனைவரும் கலைந்திருந்தார்கள். வாசல் தெளித்து வித-வித கோலங்கள் போடப்பட்டிருந்தது. ஆண்டாள் சொன்னது போல் -வெள்ளை நுண் மணல் கொண்டு இத்யாதி.. ஆம் இதுவும் ஒரு நோன்பு தான்- விடுதலை நோன்பு. இதில் செய்த தியாகங்கள் தான் எத்தனை, எத்தனை!. நினைத்துக்கொண்டே தெற்கு மாட வீதி சுற்றி வந்தேன். ஒரு பேனர் என்னை ஏதோ செய்தது, அமைச்சரின் வருகையை முன்னிட்டு வைக்கப்பட்டது.. எத்தனையோ தியாகங்கள் செய்த தியாகிகளை நினைக்க முடியவில்லை நம்மால்.!
இன்று சுதந்திரக்காற்றைச் சுவாசித்து ~69 ஆண்டுகள் ஆகிறது. எத்தனை பேர் தங்களின் இன்னுயிரை, தங்களின் வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறார்கள். இந்த நாடே அடிமைப்பட்டு இருக்கும் போது எனக்கு எதற்குத் திருமணம்? நான் மட்டும் எவ்வாறு உணவு உண்பது? காந்தி உண்ணாவிரதம் இருக்கும் போது நாம் மட்டும் சாப்பிடுவது சரியா?, ஏதோ அந்நிய நாட்டில் வடிவமைத்த துணியை எப்படி அணிவது? எல்லாம் கேட்டது அந்தக்காலத்தில் தான். ஆம் அந்தக்காலம்!. இவை எல்லாம் இன்று நினைப்பது கூடக் கஷ்டம். அதற்க்கே ஆள் இருக்காது. மின்ன எல்லாம் எங்க அலுவலகத்தில், சுதந்திரதினம் பற்றி ஒரு மெயிலாவது வரும். கொடியாவது ஏற்றுவார்களா என்று தெரியவில்லை..
இரெண்டொரு நாள் முன்ன ஒரு மெயில், அலுவலகத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் என்று. நான்கூட யாராவது தியாகியையோ, இல்ல நெல்லை கண்ணன் போன்றவர்களையோ அழைத்து ஏதாவது நிகழ்ச்சி நடத்துவார்கள்ன்னு நினைத்தேன்.. தவறு என் போன்றவர்களிடத்தில் தான். வெள்ளியன்று விண் அதிர டிரம்ஸ் சத்தம். காற்றுக்கூட நுழைய முடியாத ஒடிசி கதவுகளை இந்தச் சத்தம் அசைத்தது. வழக்கம் போல் 5-6 பேர் கண்ணாடி வழியே எட்டிப் பார்த்தனர். நான் இருக்கையிலிருந்து பார்க்கும் போது 4-5 ஆண்கள் குறுக்கும்-நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தனர். என் டீமில் இருந்த ஒருவர் சொன்னார் 'இண்டிபெண்டென்ஸ் டே செலிப்ரேஷன், பேஷன் ஷோ'.. 'ஓஹோ' என்றேன். சற்று நேரம் கழித்து ரஹ்மான் வந்தே மாதரம் பாட்டிற்கு கொஞ்ச பேர் ஆடிக் கொண்டிருந்ததாகக் கேள்விப்பட்டேன். (ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்று பாரதியார் சொன்னதை நிகழ்ச்சி நடத்துபவர்கள் தவறாக நினைத்துக் கொண்டார்கள் போல). சரி. இதுவும் ஒரு வகை சுதந்திரம் தான். பேசவோ, எழுதவோ உரிமை இல்லாத நிலையைக் கடந்து, முகநூல் போன்ற சமூக தளங்களில் சகட்டு மேனிக்கு எழுதவும், பேருந்துகளில் சக பயணியர்களைக் கூச்சலிட்டு முடிந்த வரை தொந்தரவு செய்வதுமாக சுதந்திரம் விரிவடைந்திருக்கிறது. அவ்வளவு ஏன் பட்டப்பகலில் வெட்டிக்கொல்லும் நிலையில் சுதந்திரம் இருக்கிறது. என்றுமே ஒரு பொருளை இலவசமாகவோ, உழைப்பில்லாமலோ வாங்கினால் அதற்க்கு மதிப்புத் தெரியாது. இப்போதைக்கு சுதந்திரமும் அப்படித்தான். இந்தமுறை திங்கட்கிழமை வந்ததால் 3 நாள் விடுமுறை என்ற மகிழ்ச்சி நிலையில் தான் சுதந்திரம் இருக்கிறது. இதைப் பெற என்னென்ன தவம், தியாகங்கள் செய்தார்கள் என்பதைக் கூட எடுத்துச் சொல்ல, கேட்க நாம் பொறுமையாக இல்லை. ஒன்னுக்கும் உதவாத சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளை (பட்டிமன்றம், சிறப்புத் திரைப்படம், பீச் காற்று) என்று முடிக்கிறோம். அடுத்த தலைமுறைக்கு இந்த சுதந்திரத்தின் மதிப்பை தெரிய வைக்க நாம் முயன்றதில்லை, முயலவும் போறதில்லை!
மதுரை வீரத்திற்கும், பற்றிக்கும் சிறப்பு வாய்ந்தது தான். மதுரையைச் சேர்ந்த சில தியாகிகள்..
சோழவந்தான் ஸ்ரீனிவாச வரதன்- பத்மாசனி தம்பதி |
மதுரை கே.எஸ்.பரமன் |
மதுரை A.வைத்தியநாத ஐயர் | மதுரை எம்.என்.ஆதிநாராயணன். |
சுந்தரராஜ ஐயங்கார். | எம்.ஆர்.எஸ்.மணி |
மதுரை கே.என்.கிருஷ்ணன் ஐயர் | ஏ.வி.செல்லையா. |
மதுரை தியாகி ஸ்ரீநிவாச ஆழ்வார் - வி.கே.டி.பங்கஜத்தம்மாள் |
எம். சிவசாமி. |
மதுரை எஸ்.வி.கே. தாஸ். | து. நவநீதகிருஷ்ணன். |
மதுரை தியாகராஜ சிவம் (திருமங்கலம் சுப்பையர்) |
மதுரை டாக்டர் ஜார்ஜ் ஜோசப் |
திம்மநத்தம் கே.ஆர்.தங்கமுத்து | மதுரை ஸ்ரீநிவாச ஐயங்கார் |
மு. பழனியாண்டி சேர்வை | சோழவந்தான்முனகல பட்டாபிராமய்யா |
தியாகி வை.சங்கரன் | துவரிமான் இராமசாமி ஐயங்கார் |
திருமங்கலம் புலி மீனாக்ஷி சுந்தரம் |
சிறு துளி போல, இந்த இருவரை பற்றிப் படித்தாலே போதும், மேலே பார்த்த போஸ்டர் ஓட்ட மனது இடம் தராது.
தியாகி ஸ்ரீனிவாச வரதன்-பத்மாசனி அம்மாள்:
மதுரையைச் சேர்ந்தவர்கள். ஆச்சாரமான பிராமண குடும்பத்தைச் சார்ந்தவர்கள். மதுரை-சோழவந்தானில் பெரும் தனம் படைத்தவர்கள். பாரதியாருக்கு நெருக்கமானவர்கள். 'உன் சொத்தை விற்று பத்திரிக்கை நடத்த பணம் அனுப்பு'ன்னு பாரதி உரிமையோடு கேட்க, உடனே செய்தார் வரதன். 1922-கள்ளுக்கடை மறியலில் (இன்றைய டாஸ்மாக் இல்ல:( ) கைதாகி சிறை செல்ல, மனைவியும் அவர் வழியில் நாட்டுக்கு சேவை செய்ய வந்தார். பாரதி பாடல் பாடி வீடு வீடாக கதர் துணி விற்றார். 1930-ல் மதுரை ஜான்சி ராணி பூங்காவில் போலீசாருக்கு சவால் விடுத்துப் பேசி கைதாகி 3 மாத கர்ப்பிணியாக சிறை சென்றார். சரியான உணவு இல்லை, தானே சமைக்க அனுமதி இல்லை. அனுமதி கேட்டு 1 வாரம் உண்ணாவிரதம் இருந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டு கருவும் கலைந்தது. இந்நாட்டிற்குப் பிறக்கும் முன்பே ஒரு உயிர் தியாகமானது. சிறையிலிருந்து வெளியே வந்து மீண்டும் போராட்டம், கூட்டம், சொற்பொழிவுகள். இவரது பேச்சிற்க்கே தனிக் கூட்டம், மக்கள் உணர்ச்சியைத் தட்டி எழுப்பிவிட்டார்.ஏற்கனவே 3 குழந்தைகளைத் தியாகம் செய்து, நான்காவது முறையாக கர்பம் தரித்த போது, சுப்ரமணிய சிவத்துடன் காவிரி நடைப்பயணம். 8 மாத சிசுவோடு நடை. எந்நேரமும் குழந்தை பிறக்கலாம் என்றபோதும் ஒக்கேனக்கல் வரை நடந்து சென்று சுதந்திர பிரச்சாரம், பாரதி பாடல்கள் என்று தன் மீது அக்கறை இல்லாது, நாட்டையே செல்வமாகக் கருதினார். நடு வீதியில் குழந்தை பிறந்தது. சீதோஷண நிலை காரணமாக 3 நாட்களில் அந்தக் குழந்தையையும் நாட்டிற்கு அர்ப்பணித்தார். ஒரு சில நாள் ஓய்விற்குப் பிறகு மீண்டும் சுதந்திர போராட்டம். 1936-ல் தன்னையும் இந்நாட்டிற்காகத் தியாகம் செய்தார்.
வைத்தியநாத ஐயர் பற்றித் தெரியாதவர்கள் மதுரையில் இருக்க முடியாது. அது போல் அவரின் மகன் சங்கரன் அவர்களையும். குடும்பமே விடுதலைப் போரில் இறங்கி தியாகம் செய்தது.
தஞ்சை வெ. கோபாலன் எழுதிய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள் நூலிலிருந்து...
வை. சங்கரன்
ஏ.வி.சங்கரன், எம்.ஏ.,பி.எல். இவர் 1942இல் சென்னை சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது மகாத்மா காந்தி ஆகாகான் அரண்மனையில் உண்ணாவிரதம் இருக்கிறார் என்ற செய்தி கேட்டுத் தானும் உண்ணாவிரதம் இருந்து, மறியலிலும் ஈடுபட்டார். இவர் மறியல் செய்தமைக்காக அன்றைய இந்திய பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் 6 மாத காலம் தண்டனை விதிக்கப்பட்டார். இவர் ஒருமுறை திருச்சி தேவர் அரங்கத்தில் நடந்த எம்.ஆர்.ராதாவின் கீமாயணம் நாடகம் பார்க்கப் போயிருந்தார். அந்த நாடகத்தில் எம்.ஆர்.ராதா ராமனை இழிவு படுத்தியும், சீதையைப் பற்றிக் கொச்சையாகப் பேசியும் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது எழுந்து சங்கரன், நீங்கள் சொல்லும் இந்த 'கீமாயண'க் கதைக்கான விஷயங்கள் எந்த நூலில் இருக்கிறது. இவற்றுக்கு ஏதேனும் ஆதாரங்கள் உண்டா என்று கேள்வி எழுப்பினார். திராவிட இயக்க நிகழ்ச்சிகளில் இதுபோன்ற நியாயமான கேள்விகளை யாராவது கேட்டால் என்ன ஆகுமோ அது அன்று சங்கரனுக்கு ஆயிற்று. இது நமது சுதந்திர இந்தியாவில் எல்லா உரிமைகளும் பெற்றிருந்த நேரத்தில், அரசாங்கத்தால் அல்ல குடிமக்களில் ஒரு பகுதியினரால் வழங்கப்பட்ட தீர்ப்பு. எனினும் மதுரை ஏ.வி.ஐயர் குடும்பம் ஒரு தியாகக் குடும்பம்.
************விடுதலையைப் போற்றுவோம்! பாரத மாதாவிற்கு மங்களம்! நித்ய ஜெய மங்களம்! வந்தே மாதரம்!****************
No comments:
Post a Comment