Thursday, August 13, 2015

திருமங்கலம் தந்த தியாகி

                                      எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
                                   நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு

                                   சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே

                                   இதைத் தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே.

                                   உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
                                   வீணில் உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.

                                   விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம்

                                   வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம்.

                                   நாமிருக்கும் நாடு நமதுஎன்ப தறிந்தோம்

                                   இது நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம்

                                   இந்தப் பூமியில் எவர்க்கும்இனி அடிமை செய்யோம்
                                   பரி பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்.

                            பள்ளிப் பருவத்தில் நியாபகம் இருக்கும் சில விஷயங்களில், 10ம் வகுப்பு சங்கரன் சார் சொல்லும் சில விஷயங்கள்,ஒரு விதத்தில் என்னைக் கவர்ந்தது.. மிகவும் பழைய காலத்து மனிதர் எங்களைப் பொருத்தவரை. வயதிலும், ஞானத்திலும் சற்றே உயர்ந்தவர் மற்ற ஆசிரியர்களைப் பொருத்தமட்டில். பள்ளியில் எக்கநோமிக்ஸ் எடுக்கும் ஒரே வாத்யார்.. அவரின் வீடு, மீனாக்ஷி அம்மன் கோவில் அக்ரஹாரத்தில் இருக்கும். விடுமுறை, பிரதோஷ காலங்களில், பஞ்சகட்சத்தோடு கோவில் கைங்கர்யத்தில் இருப்பதைப் பாத்திருக்கேன். பரிக்க்ஷை நேரத்தில் அவர் தரும் முக்கியமான கேள்விகளுக்கு தனி மவுசு. பெரும்பாலும் அப்படி தரதை விரும்பமாட்டார். ஒருதடவை நாங்கள் ஆவலோடு கேள்வி நோட்ஸ் எடுக்க, 100+ கேள்விகள் கொடுத்து 'இது எல்லாம் படிங்க, கண்டிப்பா இதை விட்டு வெளிலேர்ந்து வராது'ன்னு சொல்லி அவர் போன பிறகு தான் தெரிந்தது புத்தகத்தில் இருந்த எல்லாமே அதில் அடங்கியிருந்தது. அவரின் சமாதானம்-'முக்கிய கேள்வி கொடுத்தா அத மட்டும் படிப்ப, படிக்கற வசுல எல்லாத்தையும் படிக்கணும்'.. உண்மை. எனக்கு இன்று வரை உந்துதலாக இருக்கும் வார்த்தைகள். அவரை பள்ளி முடிந்த பிறகு சந்திக்கவில்லை. 'காண்போம் கற்ப்போம்' பார்த்து அதிலிருந்து கேள்விகள் எடுத்துவருவார்.  இன்னும் நிறைய உள்ளது அந்த வகுப்புகள் பற்றி எழுத.. டைம்க்குக் காமெடி அவருக்கு கைவந்தது.. எங்களுக்கு அது புரிய கொஞ்சம் நேரம் ஆகும்.  15+ வருஷத்திற்குப் பின்ன, 'சிறந்த எம்ப்ளாயி' அவார்ட் கொடுக்கும் நிகழ்ச்சியில் அவரைப் பார்த்தேன்.. சரியாக என்னை அடையாளம் கண்டு கேட்டார்..'என் மாப்பள வாங்கறார், அதான் நானும் வந்தேன்'.. 100+ பேர் இருந்த அரங்கில், அவர் முன்னாடி நான் அவார்ட் வாங்குவது சற்றே உயர்வாக இருந்தது. இது போல் இதுவரை 6 முறைக்கு மேல் வாங்கினாலும், அன்று என்னுடைய வீட்டிலிருந்து யாரும் வரவில்லை, அவரைத் தவிர.. அந்த பரபரப்பில் அவருடைய காண்டக்ட் வாங்க மறந்துவிட்டேன். சரி. தலைப்பு வரேன். 



                                   சுதந்திரத்திற்குப் பாடுபட்டவர்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம். அவர்களின் நினைவுகளையும்.. திருமங்கலத்தில் மீனாஷி சுந்தரம் என்ற ஒரு தியாகி இருந்தார். எங்களுக்கு 'புலி ஐயர்' என்றே பரிச்சயம். சங்கரன் சார் வீட்டிக்கு அருகில் அவர் வீடு.. நல்ல விசாலமான அக்ரஹாரத்து வீடு.. கொஞ்சம் வெளிச்சம் கம்மி..எனக்கு 7-8 வயதில் அவர் திண்ணையில் அமர்ந்திருந்தபோது பார்த்ததாக ஞாபகம். அது அவர் தானா என்றும் தெரியாது.. சங்கரன் சார் அடிக்கடி அவர் பற்றி சொல்லுவார். மாணவர்களுக்கு இது போலச் சொல்ல வேண்டும் .. இப்போ இருக்கா, சொன்னா கேட்பார்களா இரண்டிற்கும் விடை இல்லை. நாம் இழந்ததில் இதுவும் ஒன்னு. சார் சொன்னது 'புலி  ஐயர், காமராஜரை சென்னையில் சந்தித்த போது, காமராஜர் ஐயரிடம் என்ன வேணும் என்று கேட்க, ஐயர் 'ஒரு தடவ ப்ளைட்டைப் பார்க்கன்னு சொன்னாராம். காமராஜர் தன் சொந்த செலவில் இவரை மதுரைக்கு  ப்ளைட்டில் அனுப்பி வைத்தார்'.. இதை வேறு எங்கு தேடியும் எனக்குக் கிடைக்கவில்லை. காமராஜர் முதல்வராய் இருந்த போது இவருக்கு Rs.200 கண் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். அதில் மீதியைக் கூட இவர் திரும்ப அனுப்பி வைத்துவிட்டார். புலி ஐயர் தன் வீட்டை 'தானத்திற்கு' எழுதி வைத்துவிட்டார். அதாவது பொது ஜன சேவைக்கு. அவருக்குப் பிறகு அந்த வீடு 'கழகக் கண்மணிகள்' வசம் போனது. அதை மீட்க பலரும் போராடி பலனில்லை.. அந்த வீடு கொஞ்சம் கொஞ்சமாக இடிந்து, திண்ணை மட்டும் இருந்தது.. அதன் பிறகு என்ன ஆனதுன்னு தெரியல.. இன்னும் அரசியல்வாதிகள் கையில் இருப்பதாகக் கேள்வி. அரசு கையில் அல்ல.அதை அபகரிக்கவும் இதே சுதந்திரம் தான் வழி தந்தது. அரசு சார்பில் ஏதோ கட்டிடம் கட்டியதாகக் கேள்விப்பட்டேன்.. சரியாக நினைவில்லை.. திருமங்கலம், மீனாஷி அம்மன் கோவில் அருகில், மெயின் ரோட்டில், பல கோடி மதிப்புடன் இருக்கும் அந்த வீடு /இடம். விலை மதிப்பில்லா சுதந்திரத்தை, நமக்கு வாங்கித்தந்த அந்த மாமனிதரின் சொத்து விலை பேசப்படலாம், அவரின் சுதந்திரச் சொத்தை விலை சொல்ல முடியாது.. அவைப் பற்றி கூகிள் செய்தபோது கிடைத்தது பின்வரும் கட்டுரை...

                              

இந்தத் தொகுப்பு தஞ்சை வெ. கோபாலன் எழுதிய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள் நூலிலிருந்து எடுத்தது

1919இல் பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஜாலியன்வாலாபாக் எனும் இடத்தில் ஜெனரல் டயர் என்பவன் இரக்கமில்லாமல், ஆண், பெண் குழந்தைகள் ஆயிரக்கணக்கானோரை பீரங்கி வைத்துச் சுட்டுக் கொன்றது இந்திய சுதந்திர வரலாற்றில் ஆங்கிலேயரின் கறை படிந்த வரலாற்று நிகழ்ச்சி. உலகம் முழுவதும் இந்த அரக்கத்தனமான செயல் கண்டனத்துக்கு உள்ளானது. மனித இனமே வருந்தி தலைகுனிந்த போது ஜெனரல் டயர் மட்டும் பெருமிதத்தோடு சொன்னான், குண்டுகள் தீர்ந்துவிட்டன, இல்லாவிட்டால் இன்னமும் பல உயிர்களைப் பறித்திருப்பேன் என்று. என்ன ஆணவம்? என்ன திமிர்? இந்தச் செயலை இந்திய தேசபக்தர்கள் நாடெங்கணும் கூட்டங்கள் கூட்டி மக்களிடம் சொல்லி, ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக மக்கள் உணர்வுகளைத் திரும்பச் செய்து கொண்டிருந்தனர். அப்படிப்பட்டதொரு கூட்டம் 1920இல் திருமங்கலத்தில் நடந்தது. கூட்டத்தில் பேசியவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவரும், சென்னை சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக இருந்தவருமான கிருஷ்ணசாமி சர்மா என்பவராவர். இவர் இதற்கு முன்பும் வ.உ.சி. கைதானதை எதிர்த்து கரூரில் பேசிய பேச்சு தேசவிரோதம் என்று சிறையில் அடைக்கப்பட்டவர். மாபெரும் தியாகி. தமிழக மக்களால் மறக்கப்படக்கூடாதவர் ஆனால் மறக்கப்பட்டவர். இப்படிப்பட்ட தேசபக்தரின் வீராவேசப் பேச்சைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு தனக்கு வயது 16தான் என்பதைக்கூட மறந்து காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து தேசசேவையில் ஈடுபட்டவர் திருமங்கலம் புலி மீனாட்சிசுந்தரம். இவரது தந்தையார் பெயர் சுப்பிரமணிய ஐயர்.

காங்கிரசில் சேர்ந்ததோடு தனது பணி முடிந்துவிட்டதாக இவர் கருதவில்லை. ஊர் ஊராகச் சுற்றத் தொடங்கினார். மக்களிடம் ஆவேசமாகப் பேசி அவர்கள் உள்ளங் களிலெல்லாம் தேசபக்தி விதையைத் தூவினார். மதுரை மாவட்டத்தில் குறிப்பாக திருமங்கலம் தாலுகாவில் இவரால் தயார் செய்யப்பட்ட வீர இளைஞர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இவர் தேச சேவையில் ஈடுபட்ட நாள் முதலாக இந்தப் பகுதியில் எங்கு பார்த்தாலும் பொதுக்கூட்டங்கள், மகாநாடுகள், போராட்ட பிரச்சாரம் என்று இவர் ஈடுபடாத நிகழ்ச்சிகளே இல்லையெனலாம். இவர் வேறு எவரையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கமாட்டார். தானே முன்னிருந்து அனைத்து வேலைகளையும் செய்து முன்னணியில் இருப்பார். ஒரு காரியத்தைத் தொடங்கிவிட்டால் போதும், அது முடியும் வரை கண் துஞ்சார், பசி அறியார், கருமமே கண்ணாயிருப்பார். தலைவர் தீரர் சத்தியமூர்த்திக்கு இவரிடம் அன்பு அதிகம். இந்த இளம் வயதில் இப்படியொரு தேசாவேசமா? இவருக்குத் தகுந்த ஆதரவு கொடுத்தால், இவர் பல அரிய காரியங்களைச் செய்து முடிக்கும் ஆற்றல் மிக்கவர் என்பதனை தலைவர் உணர்ந்தார். தீரர் சத்தியமூர்த்தி இவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் மாநிலக் குழு உறுப்பினராக சேர்த்தார். தொடர்ந்து காங்கிரசுக்குத் தலைமை வகித்த எஸ்.சீனிவாச ஐயங்கார், முத்துரங்க முதலியார், எம்.பக்தவத்ஸலம், காமராஜ் ஆகியோரிடம் இவருக்கு நல்ல தொடர்பும் செல்வாக்கும் இருந்து வந்தது.

1930 இந்திய சுதந்திரப் போரில் ஓர் முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில்தான் மகாத்மா உப்பு சத்தியாக்கிரகம் தொடங்கினார். தமிழகத்தில் திருச்சி யிலிருந்து வேதாரண்யம் வரை தலைவர் ராஜாஜி உப்பு சத்தியாக்கிரக தொண்டர் படையை அணிவகுத்து அழைத்துச் சென்றார். அதே சமயம், மாகாணத்தின் தலைநகரத்தில் ஸ்ரீமதி துர்க்காபாய் தலைமையிலும், டி.பிரகாசம் தலைமையிலும் உப்பு சத்தியாக்கிரகம் நடந்தது. அதில் ஆதிகேசவலு நாயக்கர், ம.பொ.சிவஞானம் போன்றோர் கலந்து கொண்டனர். அந்த சென்னை போராட்டத்துக்குப் பல தொண்டர்களைத் தயார் செய்து அனுப்பி வைத்தார் மீனாட்சிசுந்தரம். இந்தத் தொண்டர் படைக்கு இவரே தலைவராக இருந்து வழிகாட்டலானார். இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு ஆறு மாத சிறை தண்டனை பெற்றார்.

1931இல் நாடக நடிகராக இருந்து சுதந்திரத்துக்காகப் போராடிக் கொண்டிருந்த தியாகி விஸ்வநாத தாஸ் திருநெல்வேலியில் நடைபெற்ற நாடகத்தில் மக்களை விடுதலைக்குத் தூண்டும் விதமாக தேசபக்திப் பாடலை பாடினார் என்று வழக்குத் தொடர்ந்தார்கள். விஸ்வநாத தாஸ் கைது செய்யப்பட்டார். இவருக்காக வழக்காடும்படி கோயில்பட்டி சென்று வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை மீனாட்சிசுந்தரம் கேட்டுக் கொண்டார். வ.உ.சி.யும் சம்மதித்து வழக்கை எடுத்துக் கொண்டார்.

1932இல் சட்ட மறுப்புப் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் தீவிரம் காட்டியதற்காக மீனாட்சிசுந்தரம் கைது செய்யப்பட்டு இரண்டரையாண்டுகள் தண்டனை பெற்றார். இந்த தண்டனையை இவர் திருச்சிச் சிறையில் கழித்தார். 1941ஆம் வருஷத்தில் தனிநபர் சத்தியாக்கிரகம் அறிவிக்கப்பட்டது. அப்போது மூண்டிருந்த இரண்டாம் உலகப் போரில் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் யுத்த எதிர்ப்புப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. அதில் மீனாட்சிசுந்தரம் வேகம் காட்டினார். இதற்காக இவர் கைது செய்யப்பட்டு 4 மாத சிறைதண்டனை பெற்று மதுரை சிறையில் கழித்தார்.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு மத்திய அரசு இவருக்குத் தாமிரப்பட்டயம் கொடுத்து கெளரவித்தது. இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது என்பதற்காக இவர் ஓய்ந்து உட்கார்ந்து விடவில்லை. மாறாக தேச நிர்மாணப் பணிகளில் அதே ஆர்வத்தையும் சுறுசுறுப்பையும் காட்டி உழைத்தார். திருமங்கலத்தில் அமைந்துள்ள மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்துக்கு புனருத்தாரணம் செய்வித்துக் கும்பாபிஷேகமும் செய்து வைத்தார். தேசபக்தி எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு தெய்வ பக்தியும் உடையவர். தன்னை நாட்டுக்காக அர்ப்பணித்துக் கொண்டு விட்ட காரணத்தால் இவர் திருமணம் செய்துகொள்ளாமலே நாட்டுக்காக உழைக்க உறுதிபூண்டுவிட்டார். வாழ்க தியாகி புலி மீனாட்சிசுந்தரம் புகழ்!

No comments:

Post a Comment