Tuesday, August 11, 2015
நாடாளும் மன்றமா!?
எத்தனையோ பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் நாட்டை வழி நடத்திய இடம், சில ஆண்டுகளாகவே செயல்படாமல் அல்லது செயல்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது.. இதற்க்கு கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரும் காரணம்.. ஒரு விதத்தில் ஓட்டளித்த மக்கள், நாமும் தான்.
இந்தக் கட்டுரை, H.இராமகிருஷ்ணன் சில வருஷத்திற்கு முன்ன எழுதியது.. தலைவர்கள்-மக்கள் யாருமே இந்த மாதிரி கட்டுப்பாட்டோடு இல்லை, அப்படி எதிர் பார்ப்பதும் தவறு..
"தலைநகர் டில்லியில், 1958ம் ஆண்டு, அரசுச் செயலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த என் மாமாவின் வீட்டிற்கு, கல்லூரி விடுமுறையில் சென்றிருந்த நேரம். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து மக்களவைக்கான நுழைவுச்சீட்டை அவர் பெற்றுத் தந்தார். அவை நடவடிக்கைகள் துவங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே, நான் நுழைவு வாயிலில் ஆஜர் ஆனேன். என்னைப் பார்வையாளர் மாடத்திற்கு அழைத்துச் சென்றனர். சபாநாயகர் வந்து அமர்ந்த உடன், அவை நடவடிக்கைகள் துவங்கின. அப்போது, எம்.அனந்தசயனம் அய்யங்கார் தான் சபாநாயகராக இருந்தார். ஜவகர்லால் நேரு, பிரதமர். எதிர்வரிசையில் ஆச்சார்ய கிருபளானி. நேரு மருமகன் இந்திராவின் கணவர்- பெரோஸ் காந்தி, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் ஹரிதாஸ் முந்த்ரா சம்பந்தப்பட்ட, 'ஊழல்' விவகாரத்தை எழுப்பிய நேரம்.
(இதையடுத்து, அமைச்சர், டி.டி.கிருஷ்ணமாச்சாரி ராஜினாமா செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது என்பது வேறு விஷயம்!) நான் பார்வையாளர் மாடத்தில், காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தேன். அவையின் அலுவலர் ஒருவர் என்னிடம் வந்து, 'காலுக்கு மேல் கால் போட்டு இங்கு உட்காரக் கூடாது; உங்கள் காலையோ, காலணியையோ உயர்த்துவது அவமரியாதை என, என் காதருகே, பணிவாக, ஆனால், கண்டிப்புடன் கிசுகிசுத்தார். நானும், என்னுடன் அமர்ந்திருந்த ஒருவரும் அவையில் நடப்பதைப் பற்றி, பிறருக்குச் சற்றும் கேட்காத குரலில் பேசிக் கொண்டிருந்தோம். அலுவலர் ஒருவர், எங்களிடம் வந்து, 'தயவு செய்து இங்கே பேசாதீர்கள்' என்று பணிவுடன் எச்சரித்துச் சென்றார். அவையில், பேசுபவரின் குரல் தவிர, எந்த ஓசையும் கிடையாது. அவ்வப்போது சபாநாயகர் ஐயங்கார் மட்டும் இடைமறித்து, ஏதேனும் பேசுவார். பிரதமர் நேரு, அவைக்குள் வரும் போதும் சரி, அவையிலிருந்து வெளியே செல்லும் போதும் சரி, அவைத் தலைவரை நோக்கி, தலை குனிந்து வணங்குவார். அவையை விட்டுச் செல்லும் போது, இரண்டொரு அடி பின்னோக்கியே சென்றுவிட்டுத் தான் திரும்புவார். கிருபளானி போன்றவர்கள் சொல்வதை மிகக் கவனமாகக் கேட்டு, அதற்கு மிகுந்த பணிவுடன் பிரதமர் பதிலளிப்பார்."
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment