Sunday, May 10, 2015

தென்கொள் திசைக்குத் திலதம் - எதிர் சேவை


நம்ம குல சாமி
பலபல நாழம்சொல்லிப் பழித்த சிசுபாலன்தன்னை*
அலவலைமைதவிர்த்த அழகன்அலங் காரன்மலை*
குலமலைகோலமலை குளிர்மாமலை கொற்றமலை*
நிலமலைநீண்டமலை திருமாலிருஞ் சோலையதே**
ஆயிரம்தோள்பரப்பி முடியாயிரம் மின்னிலக*
ஆயிரம்பைந்தலைய அனந்தசயனன் ஆளும்மலை*
ஆயிரமாறுகளும் சுனைகள்பலவாயிரமும்*
ஆயிரம்பூம்பொழிலுமுடை மாலிருஞ் சோலையதே**
(பெரியாழ்வார் திருமொழி)
சந்தொடுகாரகிலும் சுமந்துதடங்கள்பொருது*
வந்திழியும்சிலம்பாறுடை மாலிருஞ்சோலைநின்ற*
சுந்தரனை சுரும்பார்குழல்கோதை தொகுத்துரைத்த*
செந்தமிழ்பத்தும்வல்லார் திருமாலடிசேர்வர்களே**
(நாச்சியார் திருமொழி)
சூர்மயிலாயபேய்முலைசுவைத்துச் சுடுசரம்அடுசிலைத்துரந்து*
நீர்மையிலாததாடகைமாள நினைந்தவர்மனம்கொண்டகோயில்*
கார்மலிவேங்கைகோங்கலர் புறவில்கடிமலர்குறிஞ்சியின்நறுந்தேன்*
வார்புனல்சூழ்தண்மாலிருஞ்சோலை வணங்குதும்வாமட நெஞ்சே**
(திருமங்கையாழ்வார் திருமொழி)
கிளரொளியிளமை கெடுவதன்முன்னம்*
வளரொளிமாயோன் மருவியகோயில்*
வளரிளம்பொழில்சூழ் மாலிருஞ்சோலை*
தளர்விலராகில் சார்வதுசதிரே**
செங்சொற் கவிகாள். உயிர்காத்தாட் செய்மின் திருமா லிருஞ்சோலை*
வஞ்சக்கள்வன் மாமாயன் மாயக்கவியாய்வந்து* என்
நெஞ்சுமுயிருமுள் கலந்து நின்றார் அறியாவண்ணம்* என்
நெஞ்சுமுயிரும்அவைடுண்டு தானேயாகிநிறைந்தானே**
('தலைவர்' நம்மாழ்வார் திருவாய்மொழி)


மாயோன் மேய காடுறை உலகமும்** (தொல்காப்பியம்)

கள்ளணி பசுந்துளவினவை கருங்குன்று அனையவை*
ஒள்ளொளியவை ஒரு குழையவை*
புள்ளணி பொலங்கொடியவை*
வள்ளணி வளைநாஞ்சிலவை*
சலம்புரி தண்டு ஏந்தினவை*
வலம்புரி வய நேமியவை*
வரிசிலை வய அம்பினவை*
புகர் இணர் சூழ் வட்டத்தவை*
புகர் வாளவை... ** (பரிபாடல்-திருமாலிருஞ்சோலை அழகர்)

                                                                                         கோவிந்தோ!
********************************************************************************************************************************************************************************************************************

                                                 ஆம். இந்தப் பதிவும் ஒரு வித பயணக் கட்டுரை தான். ஆழ்வார்களாலும், பரிபாடல், மதுரைக் காஞ்சி , சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்களிலும் பரந்து பாடப்பட்ட திருத்தலம் திருமாலிருஞ்சோலை-அழகர் கோவில். ஆழ்வார்கள் 108 பாசுரங்காளால் மங்களாசாசனம் செய்தனர். மேலுள்ள பாடல்கள் அவற்றுள் சில. வருடம் தோறும் சுந்தரராஜப் பெருமாள் வைகை வருவார். அது தான் எங்களுக்கு முக்கியப்பண்டிகை-திருவிழா. சித்திரை மாதம் வந்தது பற்றி அறிய எனக்கு 2 வழி - எதிர் வீட்டில் இருக்கும் மாமரம் காய்க்கும்; அழகர் வைகை வருதல்.

                                                இந்த முறை அவர் வந்தது கொஞ்சம் 'Long Week end', Labour day ஒட்டியே.. என்னைப் போன்றோருக்கு உதவ. கடந்த 4 வருசமா அவரையும், கூட்டத்தையும் பாக்க முடியாததால், இந்தமுறை 'ப்ராஜெக்ட் ரிலீஸ்' வாங்கியாவது போகவேண்டும் என்றிருந்தேன். ஆனால் அதற்க்கு அவசியம் இல்லாமல் 1 நாள் எக்ஸ்ட்ரா leaveல் கிளம்ப, கடைசி வரை train டிக்கெட் confirm ஆகவில்லை. இருக்கவே, இருக்கு கூடல் எக்ஸ்பிரஸ். ஆனா எனக்கு என்னமோ vaigai தான் எப்போவும் பெஸ்ட் காலை நேரப் பயணத்துக்கு. ஒரு நாள் முழுதும் trainல் கழிய, மறுநாள் சித்திரைப் பொருட்காட்சி போக திட்டமிட்டோம். அது வருடம் தோறும் நடக்கும் அழகர் வருகையை ஒட்டி.. இந்தமுறை அங்கு சென்றேன். உள்ளே நுழையும் போதே ஆபீஸ்லேர்ந்து ஏதோ ஒரு issue சம்பந்தமா 'ரெட் அலெர்ட்' மெயில். சரி என்ன செய்ய. அதுக்கு ஏதோ reply பண்ண, 'இங்க வந்தும் வேலையா?' என்றது ஒரு குரல், கேட்காமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தது iphoneனை நெருடியபடி விரல்கள். பொருட்காட்சி - அதே கடைகள், இந்த முறை எதை எடுத்தாலும் ரூ.10/- கடைகள் தான்.. கொஞ்சமும் பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இராட்டினம். அதுதான் ride/rider!.. இதுக்கு மட்டும் ரூ.10 கட்டணம் இல்லை :(.. அதே பெரிய அப்பளம், பஜ்ஜிக் கடைகள்..ரூ.200 விலை சொன்னாலும் யாரும் எதிர்த்துக் கேட்கவில்லை. பெரிய அப்பள எண்ணெய் வாடை கொஞ்சம் வயிற்றைப் பிரட்டியது.. 10-15 வருடம் முன்பு அங்க சுத்தியது கண் முன் ஓடியது.

                                            அப்போது துவரிமானிலிருந்து வந்து போவோம் பெரியவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு. எங்களுக்கு என்று தனியாக பைசா (!) தர மாட்டார்கள். (பெரும்பாலும் அப்போது சட்டையில் பையே இருக்காது)..பெரிதாக சாப்பிட வாங்க மாட்டோம். ஏதாவது ஒரு இராட்டினத்தில் ஏறினாலே அதிசயம். விளையாட பந்து, கொஞ்சம் பொம்மை மட்டும் வாங்குவோம்.. கண்டிப்பாக தண்ணீர் பீச்சி அடிக்கும் துப்பாக்கி, ஓலை/காகிதத்தில் தயாரான காத்தாடி இருக்கும் எங்க லிஸ்ட்ல். இப்போது அது இல்லை அங்கு., மாறாக நீர்க்குமிழ் விடும் துப்பாக்கி மட்டும் இருந்தது. சிறு பையன்கள் கூட ரூ.100-200 என்று வைத்துக் கொண்டு திரிந்தார்கள். பாரபச்சமின்றி எல்லாரிடமும் செல்போன், ஸ்மார்ட் போன் இருக்கிறது.  8:30 மணிக்கு நெ 68 கடைசி பஸ் பிடிக்க தமுக்கத்திலிருந்து ஓடுவோம் பெரியார் பஸ் ஸ்டாண்ட் நோக்கி துவரிமானுக்கு. இப்போது வாசலில் ஷேர் ஆட்டோ, கால் டாக்ஸி இத்யாதி. ஆனால் அது போல் என்னவோ வாழ்க்கையை அனுபவிக்க முடியவில்லை.







               மதுரைக்குக் கொஞ்சமும் சம்பந்தமிலாத பாவ்பாஜி, பாணி பூரி கடைகள்.. இளநீர் கடைகள் இல்லை, கரும்புச் சாறு கடை இருந்தது கொஞ்சம் ஆறுதல்.. உணவில் கூட நம் வழிமுறைகளை விட்டு திசை மாறுகிறோம். கடைகளில் இருந்த பொருட்களில் பெரிய மாறுபாடு-மின்ன குழந்தைகள் விளையாட சைக்கிள் பொம்மை இருக்கும், இப்போது மருந்துக்குக் கூட இல்லை.. வழக்கம் போல் ரூ.10 பிளாட்பார புத்தகங்கள், குண்டூசி, பின் இத்யாதி..அரசு விளம்பரம், துறை சார்ந்த அரங்கம்.. மக்களுக்கு ஒரு 10-15 நாள் ஒரு மாற்றம், 2-3 மணிநேரத்திற்கு. HR&CE, அரங்கம் மட்டும் என்னைக் கவர்ந்தது- பெரிய பொம்மைகளுடன்..ஒன்று மட்டும் மாறவில்லை - விளம்பரங்களுக்கு அதே ஆண்-பெண் குரல்கள். வருடம் பல ஆனாலும் இன்றைய பொருட்கட்க்கும் பேசிக்கொண்டிருந்தனர்.  1431 பயோரியா, கோபால் பல்பொடி விளம்பரங்களும் இருந்தது!

எதிர் சேவை :



                 எதிர் சேவை சேவிக்க எதிர் நோக்கியிருந்தேன். வீட்டிக்கு வந்ததும், லோக்கல் கேபிள் டிவியில் அழகர், மலையிலிருந்து புறப்படும் காட்சி -லைவ் - போஸ்ட்-லைவ் என்ற படி ஒளிபரப்பானது. நல்ல முயற்சி. என்ன கூட்டம். எங்க அழகர்ன்னா சும்மாவா. எதிர் சேவை அலங்காரத்துடன் முதல் நாள் புறப்படும் அழகர், கோவில் உள்-பிரகாரங்களில் புறப்பாடு கண்டருளி, பதினெட்டாம் படி கருப்பு கோவில் வருவார். அங்கு கருப்புவிடம், கோவில் சாவி, நகை விவரம் கொடுத்துக் கிளம்புவார். அழகர் திரும்பும் வரை கோவில் பாதுகாப்பு கருப்பு வசம்.. இந்த கருப்பு கோவில், அழகர் கோவில் பிரதான வாசல் தான், சிலைகள்  இல்லை. 4-5 பெரிய அருவாள்கள், வடக்கு பெரிய கோபுர வாசல் தான் கருப்பு இருப்பிடம்.. அந்த வாசல் என்றும் திறக்கப்படாது. கதவு, அரிவாள், கோபுரப் படிகளுக்குத் தான் பூஜை, தனியாக பூசாரிகள். கருப்பு அந்த பக்கம் இருக்கும் பலருக்கும் குல தெய்வம். இன்றும் இங்கு கருப்பு பலருக்கும் ஆவேசிப்பது கண்கூடு. பெரியாழ்வாரும், ஆண்டாளும் இங்கு வந்த போது, கருப்பு கதையைக் கேட்டு ஆண்டாள் வியந்ததாக ஒரு கர்ண பரம்பரைக் கதை (செவி வழிச் செய்தி) உள்ளது. கருப்பு காவல் தெய்வமானதற்க்கு ஒரு கதை உண்டு இந்த முறை அப்படிக் கேட்டது--- வெகு காலம் முன்னாடி, அழகர் அழகில் மயங்கி அவரைக் கொள்ளை அடிக்க ஒரு கூட்டம் முடிவு செய்து, மலையாள மாந்திரிக வேடத்தில் 18 பேருடன் வந்தது. அவர்கள் உடம்பில் மை பூசி, சன்னதியில் மறைந்து, கோவில் நடை சாற்றியவுடன், கொள்ளையடிக்க திட்டமிட்டனர். அழகரோ கள்ளன்..அவரிடம் இது நடக்குமா. அவர் அர்ச்சகர் பரமசுவாமி கனவில் வந்து, இதைக்கூறி ஒரு மாற்று ஏற்பாடு கூறினார். அதன் படி அர்ச்சகர் மறுநாள் இரவு ஆவி பறக்க திருவமுது (அன்னம்) படைக்க, அந்த ஆவியில் 18 பேரின் மை வேடம் கலைந்தது. மையோடு அவர்களின் உள்ள அழுக்குகளும் கலைந்தது.. எல்லாரும் அழகரிடம் சரணாகதி அடைந்தனர்.. அது முதல் அவர்கள் தான் அழகரின் காவலாளிகள்.. 18 பேரும், 18 படிகளாய் மாறி அழகர் மலையைக் காத்து வருகிறார்கள். 60-70 முன்னால் கூட , அழகர் கோவில் இரவு நடை சாற்றி விட்டு, அர்ச்சகர் சாவியை கருப்பு வாசலில் வைத்து விட்டு தான் சென்றுவிடுவார். மறுநாள் வரை சாவி அங்கயே இருக்கும்..இப்போது அது நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை, மாறாக சாவியை வைத்து விட்டு, பின் எடுத்துச் சென்று விடுவதாகக் கேள்வி. எப்படியும் கருப்பு மலையைக் காத்துக்கொண்டிருக்கிறார்.

 

                                           அழகர் மதுரை வரதுக்கு முக்கியமான காரணம், மண்டூகமாக உரு மாற சாபம் பெற்ற ஸுதபஸ் முனிவருக்கு (மண்டூக மகரிஷி) சாப விமோச்சனம் தருவதற்கு. அப்பறம் அழகரை அன்னியப் படை எடுப்பின் போது காப்பாற்றிய மக்களுக்கு அவர்களின் இருப்பிடம் வந்து சேவை தர. இதை திருமலை நாயக்கர் மாற்றி சித்திரையில் நடக்கும் மீனாக்ஷி திருக்கல்யாணத்துடன் இணைத்தார். முன்னர் தேனூர் மண்டபம் வரை வந்த அழகரை, மதுரை வைகை வரை எழுந்தருளச் செய்தது திருமலை நாயக்கரையே சாரும்..திருக்கல்யாணத்திற்க்கு திருப்பரங்குன்றத்தில் இருந்து பவளக்கனிவாய்ப் பெருமாள் வருவதால், வேறு ஏதோ கதை புனையப்பட்டுவிட்டது பின்னர். முன்னர் அழகர் உத்சவம் மாசி மாதம் நடந்ததாக அறியப்படுகிறது. அழகர் உத்சவம் மதுரையில் மட்டும் 5 நாட்கள். - எதிர் சேவை, வைகை எழுந்தருளல், சேஷ-கருட வாகனப் புறப்பாடு, அனதராயர் பல்லக்கு, பூ பல்லக்கு. இதுல எங்க ஜெனங்களுக்கு முக்கியம் -எதிர் சேவை, ஆற்றில் இறங்குவது-அதுலையும் முக்கியமா என்ன நிறப் பட்டு போர்த்தின்டு வரான்னு பாக்க மட்டும் கூட்டம் வரும்.

                                           அழகர், மலையிருந்து கிளம்பும் போது 'கள்ளர்' (திருடன்) வேடத்தோடு, கையில் ஒரு கோல் கொண்டு, தன்னுடைய அழகை கண்ணாடியில் பார்த்த படியே கிளம்புவார். இதற்க்கு என்னைப் பொறுத்தவரை ஒரு காரணம் - மலையில் ஆண்டாள் நாச்சியார் அழைத்தபடி சுந்தரராஜனாக (காண்க: மேலுள்ள 'சந்தொடுகாரகிலும்' பாடல்) இருந்துவிட்டு, திருவாய்மொழியை சங்கப் பலகை ஏற்றிய மதுரை வரும்போது, நம்மாழ்வார் அழைத்தபடி 'வஞ்சக் கள்வன், மாமாயனாக' (காண்க: மேலுள்ள 'செஞ்ச்சொற்க் கவிகாள்' பாடல்)மதுரையம்பதிக்கு விஜயம் செய்து நம்மாழ்வார் ஈரச் சொல்லிற்கு ஏற்றம் தருக்கிறார் அழகர்.




                                             இந்த முறை எதிர் சேவை பார்க்க சாயங்காலம் போனேன்.. தல்லாகுளம் கோவில் stopல் இறங்கி பார்த்தா, அப்போ தான் ரியல் மதுரை பார்த்த உணர்வு.. தெருவெல்லாம் கூட்டம்.. மதுரைக் காஞ்சி வரிகள் தான் ஞாபகம் வந்தது.. மக்கள் முகங்களில் மகிழ்ச்சிக்கு அளவில்லை, அழகரை வரவேற்பதில்.. தெருவெல்லாம் நீர், மோர் பந்தல்கள் தாக சாந்திக்கு, வீதிகளில் தோரணங்கள், ரோடுகளில் சுண்ணாம்புப் பட்டைகள் இத்யாதிகள் என ஒரு கலை கட்டியிருந்தது.. ஒரு குறுக்குத் தெரு வழியாக 'அம்பலகாரர் மண்டகப்படி' அடைந்தேன். போகும் வழியில் 48 நாட்கள் விரதம் இருந்து அழகரைக் காண வரும் 'திரி எடுத்து ஆடுபவர்கள், துருத்தி பீச்சுபவர்கள் எல்லாம் அங்கங்கு இருக்க, நிறையப் பேர் அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கினர்.பலரிடம் பூஜை செய்யப்பட்ட அரிவாள், பூண் போட்ட தடி, அதற்க்கான உடையோடு இருந்தனர். ஒரு 5:30 மணி இருக்கும் - உண்டியல் வண்டிகள் அணிவகுத்து வந்தன, அப்பறம் திருவிழாவிற்கு மகுடம் போல் பெரிய விசிறிகள், திரி எடுத்தவர்கள் எல்லாம் வர, பின்னால் மல்லிகைப் பூ குடை வந்தது. பச்சை ஆஞ்சநேயர் கொடி வர, நம்ப அழகர் வாகனம் காட்சியளித்தது. கொஞ்ச நேரத்தில் அழகர் ஓடி வந்தார் எதிர் பார்த்து இருந்த எங்களுக்கு எதிர் சேவை தந்தார்! ஆஹா! இதற்குத் தானே காத்திருந்தோம்.
















                                                   'ஒரு நாள் காண வாராய் விண் மீதே' என்று ஆழ்வார் அழைத்த படி, இன்று எங்களைக்/நாங்கள் காண இந்த அற்பமான ரோட்டில் வந்தார்.. ஆண்டாள் நாச்சியார் சொல்லும் சுந்தரத் தோளுடையான், ஸுந்தரபாகு ஸ்தவத்தில் கூரத்தாழ்வான் அனுபவித்த 'ஸுந்தராயத புஜம்' அவர் கூறியது போலவே - ஸுஸுந்தரஸ்யாஸ்ய.. இதைக் காண பதினாலாயிரம் கோடிக் கண்கள் போறாது..'அம்பலகார மண்டகப்படியை' எங்களால் அந்தக் கூட்டத்தில் நெருங்க முடியவில்லை.. வானை முட்டும் அளவிற்கு 'வாராரு,வாராரு அழகர் வாராரு' பாடல். உறுமி மேளத்திற்கு ஏற்ப பெருமானை எழுந்தருளச் செய்தனர் ஸ்ரீ பாதம்தாங்கிகள். வாத்திய கோஷம் வேறு. அங்கு கிட்டத்தட்ட 1 மணி நேரம் எழுந்தருளிஇருந்தார். வான வேடிக்கைகள் அதற்குள்.. இதுவரை பார்க்காதது.. இவற்றை  எல்லாம்  வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அங்கயே 1 மணி நேரத்திற்கு மேல் இருந்து மேலும் 2 மண்டகப் படிகளில் சேவித்து விட்டு திரும்பினேன்.. கூட்டம் காரணமாக கோரிப்பாளையம் நோக்கி நடந்தேன்.தமுக்கம் கடக்கும் போது 'எதிர் சேவை, ஆற்றில் இறங்கும் வைபவம் நடப்பதால், பொருட்காட்சி இரவு முழுதும் திறந்திருக்கும்' என்ற அறிவிப்பு மைக்கில்.எதிர் சேவை அழகரைப் பார்த்ததில், உடலில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா சார்ஜ் ஏற்றிக் கொண்டு, நாளை கூட்டத்தில் குதிரையில் மிதந்து வரும் அழகரைக் காணும் ஆவலோடு வீடு நோக்கி விரைந்தேன். வைகை ஆற்றுப் பாலத்தைக் கடக்கும் போது, மக்கள் கூட்டம் இரவு 8:30 மணிக்கு. அங்கு வந்து தங்கத் துவங்கிவிட்டனர்.

காட்சிகள், நிகழ்வுகள்
** 'அப்பன் காளை' எனப்படும் கோவில் மாடு இப்போது வாகனத்தில் அழைத்து வரப்பட்டது.
** எம்பெருமானுக்கு கண்டருளச் செய்யும் பதார்த்தங்கள் தனியாக ஒரு வண்டியில் வந்தது.
** மின்ன உண்டியல்கள் ஒரு மாட்டுவண்டியில், நிறைய வைக்கலோடு தான் வரும். இந்த முறை 1-2 மட்டுமே மாட்டுவண்டியில் வந்தது .
** உண்டியல்கள் சாரை சாரையாய், அழகிய திருநாமத்தோடு, பலத்த போலீஸ் பாதுகாப்போடு பணியாளர்களால் எடுத்துச் செல்லப்பட்டது.
** மதுரையில் ஒரு வழக்கம் இருக்கு - ஒரு குவளை/பாத்திரத்தில் (முன்னர் பித்தளை, வெண்கலம் மட்டுமே), நாட்டு சக்கரை, சுக்கு கலந்து, அழகர் வரும் போது அதில் கற்ப்பூரம் ஏற்றி அவருக்குக் காண்பிப்பார்கள். பின் அதை எடுத்து அனைவருக்கும் கொடுப்பார்கள். இந்தமுறை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
**ஆழ்வார்களின் ஈரச்சொல்லான 'திவ்ய ப்ரபந்தம்' அழகர் புறப்பாட்டிற்கு முன் சேவிக்கப்படுகிறது. அழகரோ ஊர், ஊராய் ஓடுவதால் ஒரு வாகனத்தில் 5-6 பேர் 'திவ்ய ப்ரபந்தம்'  அனுபவித்துப் போகிறார்கள். 
** கொஞ்சம் இருண்ட மாலை வேளையில், அம்பலகார மண்டகப்படியில் வான வேடிக்கை மிகவும் பிரபலம். 1 மணி நேரத்திற்கும் மேல் அங்கு அழகர் இருப்பார். நாம் பக்கத்தில் போய் சேவிக்க எல்லாம் முடியாது. 
** என்ன தான் ஆழ்வார்கள், தமிழ் புலவர்கள் அழகரைப் பாடியிருந்தாலும், இன்னைக்கு மதுரைல அழகர்க்குப் புடுச்ச பாட்டு கள்ளழகர் படத்தில் வரும் 'வாராரு, வாராரு அழகர் வாராரு' தான். 
** 'ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி'ன்னு ஆண்டாள் நாச்சியார் சொன்ன  மாதிரி, இந்த திருவிழா முழுதும் கேட்கும் கோஷம் கோவிந்த நாமம். அதுவும் திரி எடுத்து ஆடுபவர்கள் 'கோவிந்தோ' என்றே விண்ணை முட்டுமளவு அழைக்கிறார்கள். இதுவே அழகர் மலை தென் திருமலை என்பற்கு சான்று.
** சாமியாடிகள், அழகர் வருந்துபவர்கள் (அதாவது தமக்குள் வர வைப்பவர்கள்), அழகர் வர்ணிப்பு பாடல்கள் பாடுபவர்கள் என்றெல்லாம் இருந்திருக்கிறார்கள். இப்போது கொஞ்சம் குறைவு/இல்லை. 20 வருடத்திற்கு முன், மதுரை AM ரேடியோவில் ஒலிபரப்பானதை கேசட்டில் பதிந்து வைத்துள்ளேன். CD-க்கு எப்படியாவது convert பண்ணனும்..
** ஒருபக்கம் நின்றாலே போதும். கூட்டம் நம்மை அதுவாகவே அழைத்துக் கொண்டு போய் விடும்.
** 'அரங்கன் சொத்தை அளக்க முடியும், அழகன் சொத்தை அளக்க முடியாது'ன்னு ஒரு சொற்றொடர் இருக்கு எங்க பக்கத்துல.
** நம்மாழ்வார் பாடியது போல் - இளமை கெட்டுவிடுவதற்க்கு முன் அழகரை அடையவேண்டும். (காண்க மேலுள்ள - கிளரொளி இளமை). அதனால் தானோ என்னவோ, குழந்தைகளுக்கு முதல் மொட்டை அங்குதான் மதுரைக்கார்களுக்கு.

மேலுள்ள பரிபாடல் பாடலின் பொருள் -
"கருந்துளசி மாலை அணிந்தவன்; கருங்குன்றம் போன்றவன்; ஒளிக்கு ஒளியானவன்;ஒரு காதில் குழை அணிந்தவன்;பொலிவுறும் கருடக்கொடி உடையவன்;மேலும் கீழும் வளைந்திருக்கும் கலப்பை கொண்டவன்;சிலம்பாறு என்னும் நீர் வளைந்தோடும் வில்லை உடையவன்;சங்கும், சக்கரமும் கொண்டவன்;வரிந்த வில்லில் வலிமை மிக்க அம்பு கொண்டவன்;புள்ளி புள்ளியாக அமைந்த பூங்கொத்து விசிறி கொண்டவன்;புள்ளி போட்ட வாள் ஏந்தியவன்"
இது மிகச் சரியாக கள்ளழகர்  மதுரை வரும் கோலத்தைக் காட்டுகிறது இந்தப் பாடல். இன்றும் இவற்றோடு தான் அழகர் வருகிறார்!


No comments:

Post a Comment