Friday, July 28, 2017

மூன்று புத்தகங்கள்

                             எழுத்தாளர் ஸ்ரீ. முத்து ஸ்ரீனிவாசன் அவர்கள் தந்த ஊக்கத்தால், விரைவாக வாசித்து,  படித்த சூட்டோடு எழுதியது.. மீண்டும் அடுத்த வாசிப்பைத் தொடங்கியதால் இதைச் சேமிக்க வேண்டியதாகிறது:)

பல்லவ பீடம்

                              வெறித்தனமாகப் படித்தேன்னே சொல்லலாம்.. சில மாதங்களுக்கு முன் ஆன்லைன்ல் வாங்கிய 'பல்லவ பீடம்' சரித்திர நாவல், சாண்டில்யன் அவர்கள் படைப்பு. வழக்கம் போல் அலுவலக வேலைகளால் வாரந்தோறும் கல்கி பத்திரிக்கை படிப்பதே பெரிய விஷயமாகி, ஜல்லிக்கட்டில் மக்கள் கூடியதைப் பற்றிய தலையங்கம் கூட பாலமேடு ஜல்லிக்கட்டு நடக்கும் போது தான் படித்தேன்.. (அதனாலென்ன, நம்ப பிரேக்கிங் நியூஸ் தான் இருக்கே, உடனடி அப்டேட்க்கு:) )..நேற்று முன்தினம், சில நாட்களாக பிளான் செய்து சந்திக்க முடியாத ஒரு எஸ்கலேஷன் மீட்டிங், அது அண்டர் ஸ்டாண்டிங் மீட்டிங்ன்னு கூட சொல்லலாம்.. எதிர் பார்த்த வாக்குவாதங்கள், பஞ்சாயத்துக்கள் எல்லாம் முடிந்து கிளம்பவே இரவு பத்தை நெருங்கியது.. அவரசமாக திருவான்மியூர் போகும் பேருந்தில் ஏற, நடத்துனர் ரூ.100-க்கு சில்லறை இல்லை என்று ரூ.10 'நாணயங்களைத்' தள்ளிவிட்டார்.. எல்லாம் சேர்ந்து ஜன்னல் ஓர இருக்கையில் உட்கார்ந்த போது தான் எடுத்தேன் 'பல்லவ பீடம்'.. என்ன ஓட்டம், பேருந்து அல்ல, கதை.... சுவாரஸ்யம், திருப்பங்கள், சாண்டில்யனுக்கே உரிய 'வர்ணனை(!)' எல்லாம் சேர்த்து ~100 பக்கங்கள் வரை ஓடியது 2வது பேருந்து பிடித்து கண்ணகி சிலை நிறுத்தம் வரும் போது... மறுநாள் கைகளும், மூளையும் தேட, பறக்கும் ரயிலும் தொடர்ந்தான் 'பப்ப குமாரன்' என்ற பல்லவ யுவமகாராஜா.. அவ்வப்போது தாமரைச் செல்வியின் நயனங்கள் சாண்டில்யன் எழுத்தில்..பெரும்பாணாற்றுப்படை இலக்கியச் செய்தியோடு கதையைத் துவங்குகிறார் -'மறவர்கள் பகைவர்களின் மாடுகளைக் கொணர்ந்து, கள் குடிப்பர்' என்று.. பின் பல்லவ சாம்ராஜ்யத்தின் வளர்ச்சி, அதை காஞ்சியில் வீழ்த்த நடக்கும் சூழ்ச்சி, களப்பிரர்கள் ஆதிக்கம், படையெடுப்பு, களப்பிரர்கள் பெயர்க்காரணம் இத்யாதிகள் குன்றாத ஸ்வாரஸ்யமாக.. நேற்றும் பேருந்தில் சூழ்ச்சியின் வடிவம், தன்மை எல்லாம் படிக்கும் போது நண்பரிடமிருந்து ஒரு அழைப்பு, நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி ஏதோ கேட்க, 'பல்லவ பீடம்' தான் கையில் இருந்தது., (இதுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ).. 




இளந்திரையன் தன் சிம்மாசனத்தை மண்ணில் புதைக்க, அதைத் தேடுவது தான் கதை., ஆனால் இதுவே பல்லவர்கள் காஞ்சியில் மீண்டும் ஆட்சியை நிலை நிறுத்த வழிசெய்கிறது.. இது வெறும் நாற்காலி சண்டை அல்ல., நாட்டைக்காக்கும் உண்மையான அரசன்/இளவரசு தான் அதை அடைய முடியும் என்ற சத்தியவாக்கோடு நகர்கிறது.. நிருபவர்மர் என்ற சொந்தக்காரர் வில்லன் (இது நேர்ல 'கேட்கற' மாதிரியே இருந்தது).. முடிவில் பப்பகுமாரன் என்ற சிவஸ்கந்தவர்மன் பல்லவ சாம்ராஜ்யத்தை முடிசூடுகிறான், தாமரை செல்வியையும் மணக்கிறார். 2 நாளில் கனவில் கூட வந்தார்கள் இருவரும், மிகவும் நன்றாகத்தான் இருந்தாள் தாமரை, சாண்டிலன் வர்ணித்ததைப் போல (அவர் பாஷையில் சொல்லப் போனால் 'மிகவும் நேர்த்தியாக'..  )!!.. நல்ல வேளை பெரிய மறவன் வரவில்லை.. இதை முடிக்கவேண்டும் என்பதாலோ என்னவோ ஜன்னல் ஓர இருக்கை இரண்டு நாட்களாகவே கிடைத்தது, அதுவும் தலையின் மீது விளக்கோடு..நான் அமர்ந்து படித்ததும் 'பழைய' பல்லவன் பேருந்து 'பீடம்' தான்!.. பல்லவன் தானே அவன் கதையைப் படிக்க உதவுவான்!..
************************************************************************************************************************************************************************************

சேரன் செல்வி
                                  சாண்டில்யன் அவர்களின் அடுத்த நாவல் - 'சேரன் செல்வி'. 456 பக்கங்கள். பல்லவ பீடத்தை விட இருமடங்கு. இதுவும் ஆன்லைனில் வாங்கியது தான். அதே பாணியில் படித்தேன். ஓடும் பேருந்து, ஜன்னலோரம் & தலைக்கு மேல் விளக்குடன்:).. ஒரு வாரத்தில் முடிக்க முடிவு செய்து தொடங்கினேன்., 4-5 நாட்களில் முடித்தாகி விட்டது. திருவல்லிக்கேணி ரயிலில் பயணிக்கும் 90% பேர் மொபைலில் தான் ஏதோ பார்த்துக் கொண்டு வருவார்கள்.. இப்போதெல்லாம் அதிகம் படம் பார்க்கத் துவங்கிவிட்டார்கள்.. இதை படிக்கும் போது கூட அந்தவாரம் வெளியான ஒரு புது தமிழ் படமும் ஓடிக்கொண்டிருந்தது. எல்லாம் 'அம்பானியாரின் அருள்'. நான் மட்டும் புத்தகத்தைப் படித்துக்கொண்டிந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு முதியவர், கஷ்ட்டப்பட்டு எட்டிப் பார்த்தார் புத்தக அட்டையை திருமயிலை இறங்கும் முன். நானே சொல்லிவிட்டேன் 'சார், சாண்டில்யன் நாவல்'.. அவர் ஒருவித புன்னகையோடு போனார். கதை அக்மார்க் சரித்திரக் கதை., எதிர் பார்த்த வர்ணனைகள்.. இம்முறை 'கேரளத்து' வர்ணனை. கதை கேரளம்-கொல்லம் கடல் கரையில் துவங்குகிறது., பாண்டிய இளவரசன்- சேரகுல இளவரசியோடு. 





சேரன் பாண்டியநாடு மீது படை எடுப்பது தான் கதை.. சுந்தர பாண்டியன் தந்தையைக் கொன்று பாண்டிய நாட்டைப் பிடிக்கிறான். அவனோடு போரிட்டு வீர பாண்டியன் பாண்டிய நாட்டை மீட்க்கிறான் முகலாயர் தயவோடு.. நடுவில் கில்ஜியின் கதை.. ஆம். கதையின் முக்கிய அங்கமே மாலிக்கபூர் தளபதி குரூஸ்கானின் படையை விரட்டி, சேரன் ஹிந்து சாம்ராஜ்யம் அமைக்க முயல்வது.. குலசேகரன் ரவிவர்மன் சூப்பர் ஹீரோ போல சித்தரிக்கப்படுகிறார்.. சிவகாமியின் சபதத்தில் வரும் 'மகேந்திர வர்மனை' ஞாபகப்படுத்தினார்..போர் நுணுக்கங்கள், இராஜ தந்திரங்கள், தீர்க்கமான அனுமானங்கள், சமயத்தில் பொருந்தும் முடிவுகள் இத்யாதி என ஒரு அரசர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனைக் கூறுகிறார் சாண்டில்யன். இளவழுதி என்ற பாண்டிய வாலிபனை தளபதியாகக் கொண்டு வீர பாண்டியனை வெல்கிறார் சேரன். இளமதி தான் சேரன் செல்வி., காஞ்சி தேவப் பெருமாளுக்கு தாரை வார்க்கப்பட்டவள்.. இந்த விஷயத்தில் கேரள மாந்த்ரீகர்களை ஒரு பிடி பிடிக்கிறார் சாண்டில்யன்.. வழக்கம் போல் வர்ணிக்கும் நடையே தனி. அதில் வரும் ஒரு வரி -
"சக்கரத்தின் மீது சுழலும் குயவன் கை பாண்டம் போல் அவன் கையின் இஷ்டத்திற்கு வளைந்தாள்" மீதி நாவலில் படிக்கவும்.. ஆனால் தவறாமல் படிக்க வேண்டிய நாவல் வரலாற்றை அறிய, கொஞ்சம் கற்பனையோடு..

***********************************************************************************************************************************************************************************



ஆலவாய் அழகன்


                                  "ஒரு பேரரசு அழிந்து மற்றொரு பேரரசு உதயமாகும் வரலாறு, உலகின் எல்லா நாடுகளிலும், எல்லா காலங்களிலும் ஒரே விதமாகவே அமைவது இயற்கை போலும்!" என்ற வரிகளோடு தான் கதை முன்னுரை வடிக்கப்பட்டுள்ளது.. இது சோழ பேரரசு அழிந்து, பாண்டிய பேரரசு அமைந்து மீன் கொடி பட்டொளி வீசி பறக்கவிடப்படும் கதை.. 'ஆலவாய் அழகன்'- ஜெகசிற்பியன் (புத்தகத்தின் பெயருக்கே வாங்கியது) அவர்கள் எழுதி, விகடனில் தொடராய் வந்தது '60-களில். அதே போல் படிக்கும் பழக்கம்- ஓடும் பேருந்து, இரயில்.. இதை முடிக்கும் போது பேருந்து பள்ளத்தில் விழும் செய்தி ஓடிக்கொண்டிருந்தது.. பாதுகாப்பாகப் படிக்கக்கூட முடியாது போல இனிவரும் நிலைகளில் ..
கதை என்னமோ அக்மார்க் பொன்னியின் செல்வன் தழுவல் போல் இருந்தது. இதற்க்கு முன் படித்த நாவல்கள் இதைப் படிக்க உதவின எனலாம், கொஞ்சம் பொருத்திப் பார்க்க முடிந்தது.. கதையின் காலம் - மூன்றாம் குலோத்துங்கச் சோழன், மூன்றாம் இராஜ இராஜச் சோழன் - 1178 முதல் 1256 வரை.. விக்கிரம பாண்டியன், முதலாம் சடையவர்மன் குலசேகரன் முதலானோர் தோற்று பாண்டியர்கள் சோழருக்கு கப்பம் கட்டி சுதந்திரமில்லாத நாடாக இருந்தனர்.. பாண்டிய வம்சத்தவர் கொற்கையில் (தூத்துக்குடி பக்கம்) இருந்தனர், அங்கு நடக்கும் கடல் வாணிபம் செய்தவர்களை அரசாண்டு.. அங்கு இருந்த இளவல், முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1216-1238), மதுரையை மீட்டு மீண்டும் மீன் கொடியை பறக்கவிட்டான்.. கதையில் பாண்டிய நாட்டின் பெருமை மட்டுமல்ல, பல வரலாற்றுச் செய்திகளும் உள்ளன.. மெய் கண்ட தேவர் சிவா ஞான போதம் எழுதும் போதும், கம்பர் இராமாயணம் அரங்கேற்றிய போதும் கதை நடந்ததாகச் சொல்லப்படுகிறது. புத்த பிக்ஷுக்கள் அரசியலில் இறங்கி, இராஜ ரிஷிகளாய் இருப்பது தெரிகிறது. ஈழப் பெயர் 'மாலனாகித்தி' வித்தியாசமாய் இருக்கிறது.. கதையில் நிறைய கதா பாத்திரங்கள். கம்பமாதேவி, திரைலோக்கியார், நல்லினி, அருள்மொழி தேவி, காங்கேயன், கௌசம்பி இன்னும் பலர்.. அவ்வளவு பேர் துணையோடும் பாண்டியன் நாட்டை மீட்டான். அவன் செய்யும் தவறே பாண்டிய வீழ்ச்சிக்கு பின்னர் வழி வகுக்கிறது.. இவருக்குப் பின்னர் சிலகாலம் சென்று வந்த முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் தான் ஸ்ரீரங்கம் கோவிலில் பல திருப்பணிகளை செய்கிறான்.. 'கோயில் பொன் வேய்ந்த பெருமான்" என்ற பட்டத்தினைப் பெற்றான்.மார்கோ போலோ சொன்ன காலமும் இவருடையது தான்... மறைந்த எழுத்தாளர் (முத்து ஸ்ரீநிவாசன்) தந்த ஊக்கத்தால், இதைப்படிக்க முடிந்தது.. இதற்கு கமெண்ட் சொல்லி மற்றொரு புத்தகம் ரெகமெண்ட் செய்ய அவர் இல்லாதது வருத்தமே. 



புத்தகத்திலிருந்து சில,
* கோவிலுக்கு விடப்பட்ட நிலங்களில், திரிசூல-திருவாழிக் கற்கள் நடப்பட்டு சிவ-விஷ்ணு ஆலயங்கள் பராமரிக்கப்பட்டன.

* இப்போது இருக்கும் மதுரைக்கு தென்கிழக்கே பாழடைந்து கிடக்கும் மதுரை தான் அப்போது பாண்டிய தலை நகரம். அது வைகையின் தென்கரையில் இருந்தது.. ஆற்றுப் போக்கு - காலப் போக்கால் இப்போது உள்ளது போல் மாறியுள்ளது..

* குமரிக்குத் தெற்க்கே அகண்ட நிலப்பரப்பு - ஏழ்தெங்க நாடு, ஏழ் மதுரை நாடு முதலான 49 நாடுகளும், குமரி-கொல்லம் நாடுகளும் சேர்த்து 52 நாடுகளும் இருந்தன..

* சிம்மாசனத்திற்கு கூட பெயர் இருந்தது - காலிங்கராயன் & மழவராயன். சுந்தரபாண்டியன் மழவராயன் என்ற சிம்மாசனம் ஏறினான்.

* திருக்கானப்பேர் (காளையார் கோவில்) - இங்கு தான் பாண்டிய நாட்டின் அக்கசாலை (நாணயம் அச்சடிக்கும் தொழிற்சாலை) இருந்தது. இங்குள்ள கோவிலுக்கு நிறைய நிலங்களை பாண்டியர்கள் தந்துள்ளனர்.

*பாண்டிய நாட்டில் 45 நாடுகளும், 7 கூற்றங்களும் இருந்தது. நிர்வாக வசதிக்காக இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது. பாகனூர் கூற்றம், திருக்கானப்பேர் (காளையார் கோவில்) கூற்றம் சில.. அது போல் களக்குடி நாடு, தென் பறம்பு நாடு , வாடபறம்பு நாடு , திருமல்லி நாடு (இன்றைய ஆண்டாள் கோவில் பகுதி), திரு வழுதி நாடு (இன்றைய ஆழ்வார் திருநகரி பகுதி), திருமலை நாடு (இன்றைய அழகர் கோவில் பகுதி) என்பன சில.

* நாடுகள் சிலவற்றை, குழுவாக சேர்த்து வள நாடு (ஜில்லா) எனப்பட்டது.

* சைவ சமயத்தில் சில உட்பிரிவுகள் இருந்தன. அவற்றை அகச் சமயங்கள் என்றனர் - பாசுபதம், மாவிரதம், காபாலிகம், பைரவம். இவை பல்லவர் காலத்தில், சாளுக்கிய நாட்டிலிருந்து தமிழகத்தில் குடியேறின. சிவனை பல்வேறு பயங்கர வடிவில் அமைத்துக் கொண்டன இந்தச் சமயங்கள். காடுகளில் கோவில் காட்டினார் இவர்கள். காஞ்சி, திருவொற்றியூர், திருவாரூரில் இருந்தனர்.. அதாவது பல்லவர் அரசாண்ட பகுதிகளில்..

* இரண்டாம் பாண்டியப் பேரரசை தொடக்கி வைத்த பாண்டியர்களுள் முதலாம்மாறவர்மன் சுந்தர பாண்டியன் தலையானவன். இவனது வெற்றியைப் போற்றும் கல்வெட்டுப் பாடல்,

              காரேற்ற தண்டலைக் காவிரி நாணனைக் கானுலவும்
              தேறேற்றி விட்ட செழுந்தமிழ்த் தென்னவன் சென்றெதிர்த்து
              தாரேற்ற வெம்படை ஆரியர் தண்டு படத்தனியே
              போரேற்று நின்ற பெருவார்த்தை இன்னும் புதுவார்த்தையே

No comments:

Post a Comment