Monday, August 7, 2017

மதுரையின் பெண்ணரசி - இராணி மங்கம்மாள்

இராணி மங்கம்மாள்
                                    இராணி மங்கம்மாள் அவர்களை பற்றி ஏதாவது படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தேடிய போது எழுத்தாளர் முத்து ஸ்ரீனிவாசன் அவர்கள் இந்தப் புத்தகத்தை சஜ்ஜஸ்ட் செய்தார். இந்த புத்தகத் திருவிழா போனதின் நோக்கம் இதையும் வாங்கத்தான். முதல் வரிசையிலேயே ஒரு கடையில் இருந்தது. எழுத்தாளர் நா.பார்த்தசாரதி, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் இருக்கும் நதிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். எனக்குத்தெரிந்து இந்த ஊர் மூன்று எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறது - நா.பார்த்தசாரதி, முத்து ஸ்ரீனிவாசன், நரசய்யா(நரசிம்மன்). மூவரிடத்திலும் நான் இராணி மங்கம்மாள் பற்றி ஒரு விஷயத்தைப் படித்திருக்கிறேன். நரசய்யா அவர்கள் 'ஆலவாய்-மதுரை மாநகரத்தின் கதை' என்று ஒரு ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதியுள்ளார். மதுரை பற்றி கல்வெட்டு சான்றுகளோடு, மிக ஆழமான விஷயமுள்ள புத்தகம்.. மதுரையில் பண்டைய காலம் எப்படி இருந்தது, கள்ளர்கள் வெள்ளையர்களை விரட்டி திருமோகூர்-அழகர் கோவில் நகைகளை மீட்டது, பாண்டிய-நாயக்கர்களின் ஆட்சி, மீனாட்சி கோவிலின் பூஜை முறை, அதை ஆங்கிலேயர்கள் முறைப்படுத்தியது, மிராசு நியமித்தல், மங்கம்மா ஆட்சி நிர்வாகம் இப்படி பல சுவாரஸ்ய தொகுப்புகளாக, ஆதாரங்களுடன் திரட்டியிருக்கிறார் நரசய்யா.
                                 தீபம். நா.பார்த்தசாரதி அவர்களின் இராணி மங்கம்மாள் கதை, ஆதாரங்களைக் குறிப்பிடாமல் இயல்பாக நடந்தது போல் நகர்கிறது. அவர் ஆராய்ந்து எழுதியிருந்தாலும், மேற்கொள் தரப்படவில்லை சாண்டில்யன் போல் ஆங்காங்கு. கண்டிப்பாக வாங்கி படித்து, பாதுகாக்க வேண்டிய புத்தகம்.. புத்தகத்தைப் படிக்கும் போது 'பாகுபலி-2' ஓடிக்கொண்டிருந்தது. அதில் வரும் மகிழ்மதி இராணி சிவகாமி (ரம்யா கிருஷ்ணன்) கனகச்சிதமாகப் பொருந்தினார்.கதை முழுவதும் எனக்கு அந்த முகம் தான் தெரிந்தது. மங்கம்மாள் போல் தான் அவரும், குழந்தைகளைக் காப்பாற்றி அரசை நிர்வகித்தார். பெண்கள் நேரடியாக போரில் இறங்குவது கிடையாது, ஜான்சி இராணி விதிவிலக்காக இருக்கலாம். இராணி மங்கம்மாளும் அவ்வாறே. திறமையான நிர்வாகி. நேரடிப் போர்களைத் தவிர்த்து, பணிய வேண்டிய இடத்தில் பணிந்து, போர் புரிய வேண்டிய இடத்தில் தளபதிகளை வைத்துப் போரிட்டு பதினெட்டு ஆண்டுகள் நிர்வாகம் சேர்த்தார் எனில் சாதாரண விஷயமில்லை. அது எப்படிசாத்தியம், நம்ப ஐடி-ல கூட இன்டெர்னல் ப்ராஜெக்ட் மட்டும் பார்ப்பவர்கள் இருப்பார்கள், அவர்கள் கிளைன்ட் கூட நேரடியா வேல செய்யாம ப்ராஜெக்ட் திறம்பட நடத்துவார்கள்., அது ஒரு கலை. அது மாதிரித் தான் மங்கம்மாளும். வரும் பிரச்சனை, வரப்போகும் பிரச்சனை எல்லாம் திறம்பட கையாண்டு, போர்களைக் குறைத்து நாட்டை பலப்படுத்தினார், என்பதை விட வளப்படுத்தினார்.
                                        1689 முதல் 1704 வரை மதுரையை ஆண்ட மங்கம்மாள் காப்பாட்சியாளராகவே இருந்தார். எழுத்தாளர் மதுரை என்பதால் பல இடங்களில் அந்த வாசனை வருகிறது. கதை சித்திரைத் திருவிழாவிலிருந்து துவங்குகிறது. இன்றைய காந்தி ம்யூசியம் தான் மங்கம்மாள் அரண்மனை. தமுக்கம் தான் தோட்டம், விளையாட்டுத் திடல் எல்லாம். மங்கம்மாள் திரிசிராமலையையும் (திருச்சி), மதுரையையும் தலைமையாகக் கொண்டு ஆண்டுள்ளார். திருமலை நாயக்கர் ஆட்சியின் கீழ் மதுரை, திருச்சி மட்டுமல்லாது, கோவை, சேலம் , திருவிதாங்கூர் என்று பரவி இருந்தது. அவரின் ஆட்சியில் விஜய நகர பேரரசு கொஞ்சம் வலுவில்லாமல் இருந்தது, இவரின் இறைப்பணி, மக்கள் பணி எல்லாம் இவரை ஒரு பொற்கால ஆட்சியாளராக மாற்றியது. அவரின் பின் அறுவர் ஆட்சி செய்தாலும் கடைசிவரை வரலாற்றில் நிலைத்தது இராணி மங்கம்மாள். நாயக்கர்க்கே இருந்த இறைபணி இவர் ஆட்சியிலும் தொடர்ந்தது. ஆனால், நாயக்கர் மகாலுக்கு இவர் போனதில்லை, அதை விரும்பவும் இல்லை என்று இப்புத்தகம் சொல்கிறது.
                                        தனக்கு தனி அரண்மையை ஏற்படுத்தி இரண்டு தலைமுறைகளை ஆட்சியில் வைத்தார். இவரின் தந்தை லிங்கப்ப நாயக்கர் பெரிய இன்ஸ்பிரஷன். 'ஆறு கரடு முரடாய் ஓடி, பின் அமைதியாகி, மக்களுக்கு பயன்பட்டு கடலில் கலக்கும். அது போல் இருக்க வேண்டும்' இது இராணி மங்கம்மாளுக்கு தந்தை சொல்லித்தந்து ஒரு தைரியசாலியாக வளர்த்தார். கணவர் சொக்கப்ப நாயக்கருக்கு பின் பெரிய அரசை பதினைந்து வயது மகன் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் மூலம் நிர்வகித்தார். எதிர்பாராமல் இவர் மகன் அரசனானான். பெரிய போர்கள் செய்யவில்லை. அன்னை மங்கம்மாள், பிரதானி-இராயசம் அச்சையாவிடமும் ஆலோசனை செய்து ஆட்சி நடத்தினார். கிழவன் சேதுபதி இராமநாதபுரம் சீமையை ஆண்டான். அவர், நாயக்கருக்கு கப்பம் கட்டாமல் இருந்து தன்னை தனி அரசனாக அறிவித்துக்கொண்டார். சேதுபதி புத்தியில் சிறந்தவர். மறவர் சாம்ராஜ்யம் அமைக்க முடிவு செய்தார். மக்களும் உதவினார். அவர் என்ன சொன்னாலும் செய்ய, உயிரையும் கொடுக்க. அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர், இராமநாதபுரம் போர் தொடுக்க அதை சாதுர்யமாகக் கையாண்டு, தீர்த்தயாத்திரையாக மாற்றினார் சேதுபதி. இவரின் பலத்தால் தான் இன்று வரை, இராமநாதபுரம், மதுரை, சிவகங்கை பகுதிகள் மறவர் மக்கள் உள்ளதாய் இருக்கிறது. இவர் கடைசிவரை சிம்மசொப்பனமாக இருந்தார்.
                                           ஏழே ஆண்டுகள் அரசராய் வாழ்ந்த அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் அம்மை நோயால் இறக்க, சில மாதங்களில் அவரின் ஒரே மனைவியும் இறக்க, மங்கம்மாள் மீண்டும் இராணியானார். பச்சிளம் குழந்தை, தன் பேரன் விஜயரங்க சொக்கநாத நாயக்கருக்கு (1706 முதல் 1731) காப்பாளராக இருந்து ஆட்சி நடத்தினார். இராணி எதிர்பார்த்தது போல் பேரன் இல்லை. ஒருநாள் பேரன் தன்னைக் கொலை செய்வது போல் கனவில் கண்டார். இவரின் கனவு பல பலித்தது. அது போல் இதுவும். பேரனை தான் நேரடியாக வளர்க்க முடியாமல், அரண்மைனயில் இருக்கும் சிலர் நாயக்கருக்கு துர்-புத்திமதி சொல்லி தூண்டிவிட்ட, இராணிக்கு எதிராகத் திரும்பினார். இராயசத்துடன் இவரை இணைத்துப் பேசி, தன்னை அரசராக்கும் படி நிர்பந்த்தித்தார். இராணியே இவரைக் காவலில் வைக்க, அதிலிருந்து தப்பித்து, மங்கம்மாளை சிறைப்படுத்தினார். சாதாரணமானதல்ல, தனி அறையில் பட்டினி சிறை. ஆட்சியைக் கைப்பற்ற மந்திரி, சேனை எல்லாவற்றையும் 'சரி' காட்டினார். அன்ன சத்திரம், கோவில் பணிகள், மக்கள் நல திட்டங்கள் எல்லாம் தந்து மதுரையை ஆண்ட பெண்ணரசி முடியில் பட்டினியில் 40 நாட்கள் வாடி இறந்தார். அதோடு நாயக்கர் சாம்ராஜ்யம் மறையத் தொடங்கியது. 1732 இல் நாயக்க மன்னர் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் வாரிசு இல்லாமல் இறந்தபோது அவனது மனைவி மீனாட்சிக்கு ஆட்சிப் பொறுப்புக் கிடைத்தது. எனினும் அரசுரிமைப் போட்டியில் அவருக்கு உதவி செய்யும் சாக்கில் தலையிட்ட கர்நாடக நவாப்பின் மருமகனான சாந்தா சாகிப் அவரை சிறைப்பிடித்து மதுரை அரசையும் கைக்கொண்டார். இதன் மூலம் மதுரை நாயக்கர் வம்சம் ஒரு முடிவுக்கு வந்தது.மங்கம்மாளின் ஆட்சித்திறமை, நிர்வாகம், மக்கள் பணி எல்லாம் பின்னர் வந்த எவராலும் நிறைவு செய்யப்படாமல், இன்று வரை வெற்றிடமாகவே உள்ளது. அந்த சமூகம் சார்ந்த சிந்தனையில் ஆட்சி சென்றிருந்தால் கூட மதுரையும், திருச்சியுமாவது முன்னேறியிருக்கும்.


சில ஸ்வாரயங்கள் (சில புத்தகத்தில் நேரடியாக சொல்லப்படவில்லை ) -

** திருவிதாங்கூர் போர், மைசூர் போர், இராமாநாதபுரம் முற்றுகை என சில வெற்றிகளை தளவாய் நரசிம்மரையா மூலம் பெற்றார். நம்ப கதை மாதிரி தான். எங்கனாலும் நல்ல டீம் லீட் வேணும். இல்ல ப்ராஜெக்ட் பிரச்சனை தான்.
** முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சி செய்த போது, அவுரங்கசீப் என்ற மொகலாய மன்னர், தம் செருப்பை, நாடெங்கும் ஊர்வலமாக அனுப்பினார். அச்செருப்புக்கு எல்லாரும் மரியாதை செய்ய வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் வீரமிக்க முத்துவீரப்பர் அந்தச் செருப்பைத் தன் காலில் அணிந்து கொண்டு “உங்கள் மன்னர் இன்னொரு செருப்பை அனுப்பவில்லையா?” எனக் கேட்டார்.
** முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் பிரச்சனைகளை திறம்பட தாயும், மகனும் தீர்த்து வைத்தனர்.
** சௌராட்டிர மக்கள் மதுரையில் நிறைய இருந்தனர். ஒரு பிரச்சனையில் ஒரு குழு அமைத்து, அவர்களும் ஆவணி அவிட்டம் செய்யலாம், பிராமணர்கள் போல் பூணல் அணிய ஒரு சட்டம் போட்டார். அதுபற்றி தெலுங்கில் சாசனம் உள்ளது.
** மைசூர் இராஜ சிக்கதேவர் காவேரியில் தண்ணீர் தர மறுத்தலால்,பெரும் படை திரட்டி தளவாய் மூலம் காவேரி அணையை உடைக்க திட்டமிட்டு பாதி தூரம் சென்றுவிட்டார். அதற்குள் மழை அதிகமாகி அணை தன்னாலேயே உடைந்தது.
** கோவில் பணிகள் அளவில்லாது செய்தார். பெரு வெள்ளத்தின் போது, ஒரு நாள் கனவில் கொள்ளிடத்தில் தாம் புதைந்துள்ளதாக இறைவன் இவர் கனவில் கூற, அப்போது காவேரி வெள்ளம் வந்தது. மக்களுக்கு உதவி செய்து, ஒரு இடத்தில் தோண்ட அங்கு கிடைத்த சிலைகளை வைத்து கோவில் கட்டினார்.
** ஒருமுறை, தன்னை மறந்து இடது கையால் வெற்றிலை போட, அதனால் ஆட்சிக்கு தீங்கு வரக்கூடாது என்று எண்ணி, பல திருக்கோவில்களுக்கு தர்மங்கள் செய்தார். ஏழு ஏகாதசி கிராமங்கள் அமைத்து அதில் பிராமணர்களைக் குடிஅமர்த்தினார். திரளி, நதிக்குடி, அச்சன்தவிர்த்தான் இன்னும் நான்கு கிராமங்கள் என்று ஒரு செவி வழி செய்தியும் உள்ளது. அங்கு தெலுங்கு பேசும் வைஷ்ணவர்களைக் குடிஅமர்த்தினார்... இது போல் காரணத்தால், உ.வே.சா. பிறந்த உத்தமதானபுரம் தஞ்சை மன்னரால் உருவாக்கப்பட்டது. ஒரு இடது கை வெற்றிலைக்கே இப்படி.. இப்போது ஒன்னும் சொல்றதுக்கில்லை.
** அன்ன சத்திரங்கள் கட்டினார். மனிதர்களுக்கு மட்டுமில்ல.. சாலை வழி நெடுக நீர் தொட்டிகள் அமைத்து, ஆடு-மாடு போன்ற உயிரினங்களுக்கும் பசியாற்றினார். இன்றும் மங்கம்மாள் சத்திரம் மதுரையில் உள்ளது.. ஆனால் சத்திரமாக இல்லை, வணிக நிறுவனங்கள், அரசு அலுவலங்கள் இருக்கு. பொது மக்களுக்காக குடிநீர் ஊரணிகள், கிணறுகள் ஆகியவற்றைத் தோண்டச்செய்தார்.
** ஒருமுறை, இராணியின் உறவினர் மரண தண்டனை தவறு செய்ய, நீதிபதிகள் செய்வதறியாது திகைத்தபோது, மங்கம்மாள் உரிய தீர்ப்பு வழங்கினார் உறவினர் என்றும் பாராமல்.
**மங்கம்மாள் மதுரை சித்திரை திருவிழாவை தவறவிட்டதில்லை, அழகர் வைகை வருவது உட்பட. திருவிழாவின் ஒரு நாள் மங்கம்மாள் செங்கோல் மீனாக்ஷி முன் வைத்து வழிபடுவார். அது இன்றும் நடைமுறையில் உள்ளது.
**கடைசி வரை கிழவன் சேதுபதி சூப்பர் ஹீரோவாகி, வெல்ல முடியாதவராக இருந்தார். மதுரையையும் பிடித்தார் மங்கம்மாள் மறைவுக்குப்பின்.
** அவர் ஆட்சிக்கு உட்பட்ட இடம் தவிர, எங்கும் கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சேதுபதியின் பங்காளி-தடியத்தேவர் மூன்று மனைவியர்களை விவகாரத்து செய்துவிட்டு கிறிஸ்துவமதம் மாறினார். இது பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி, தாக்குதல் அதிகமானது. மற்ற இடங்களில் நிறைய மத மாற்றங்கள், ஆசையினால் நடைபெற்றன. மங்கம்மாள் அவற்றை ஆதரிக்காமலும், எதிர்க்காமல் அனைவரையும் ஒருகுடி மக்களாகப் பார்த்தார்.
** திவ்ய பிரபந்தங்களுக்கும், அரங்கனுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். இறக்கும் தருவாயில் இவர் மகன் கூட திருவரங்க வைஷ்ணவரின் குரலில் 'துளங்கு நீள்முடி' பாசுரம் கேட்டதாக புத்தகம் சொல்கிறது.
** இன்றும் மதுரை பக்கம் சொல்லப்படும் பல செவிவழிச் செய்திகளுக்கும், கர்ண பரம்பரை கதைகளுக்கும் காரணமாகி இருந்தாலும், சிறந்த நிர்வாகியாகவும், ஆட்சியாளராகவும் சரித்திரத்தில் இடம் பெற்றார் மங்கம்மாள். சோழவந்தான் அருகில் அணைப்பட்டி என்ற கிராமத்தில் வைகை பாய்ந்து ஓடும் ஆற்றங்கரையில், பாலம் கட்ட முயல, பாலம் பல முறை இடிந்து போனது. மங்கம்மாள் அங்கு சென்று 3 நாள் உண்ணாமல் விரதம் இருந்தார். கனவில் ஆஞ்சநேயர் வந்து கோவில் கட்டக் சொல்ல, அங்கு ஒரு கோவில் கட்டினார். இது இன்றும் உள்ளது. நாங்கள் சென்ற போது கேட்ட கதை. இவை போன்ற பல செய்திகள் மக்களின் வாழ்வில் ஒன்றிக் கலந்துள்ளது. மக்கள் மனதில் என்றும் நிலைத்து நின்றார் மதுரை மீனாக்ஷி அம்மனைப்போல்.


Image may contain: 1 person


Image may contain: 1 person


Image may contain: one or more people and people standing

Image may contain: 1 person, standing

No comments:

Post a Comment