Saturday, September 16, 2017

ஒரு அணா பூவும், அரை அணா எண்ணெய்யும் - ஸ்ரீ ஜெயந்தி கொண்டாட்டம்

        கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும்||

       வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்*
       கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்**
       எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட*
       கண்ணன் முற்றம் கலந்தளறாயிற்றே**

ஒரு அணா பூவும், அரை அணா எண்ணெய்யும் - ஸ்ரீ ஜெயந்தி கொண்டாட்டம்

'தம்பி, வண்டி மெட்ராஸ் போகுது, நீங்க?'..
நானும் சென்னை தான்,.
சரி எங்க தம்பி?...
திருவல்லிக்கேணி...
ஓஹோ... மைலாப்பூர், கற்பகம் ஹோட்டல் தெரியுமா? வடக்கு மாட தெரு...
தெரியும் சார்..
அட, அது நம்ப ஹோட்டல் தான்..
ஹோ.. அப்படியா?..
என்ன, இப்படி கேட்டுட்டீங்க,. நம்ப மாப்பிளை தான்..
ம்ம்..
"என் கொழுந்தியாவோட, சகலை, அக்கா மாப்பிளை தான்.. திருவல்லிக்கேணியில் கூட நம்ப சொந்தக்காரங்க இருக்காங்க.. கோவில் பக்கத்துல அரிசிக்கடை,. கடை பேரு கூட... ஏம்மா அந்த பேரு ஏன்னா?..".. " இந்த.. நீ சும்மா இருக்கா மாட்ட, நானே காலைல எங்க தனரதுன்னு தெரியாம கடக்கேன்..".. வியாழன் இரவு இரயில் பயணம் சுவாரஸ்யமாய் போய்க்கொண்டிருந்தது இந்த சம்பாஷணைகளோடு.. அந்தம்மாவின் பதிலுக்குப் பின் நானும் அந்த முதியவரும் நேருக்கு நேர் பார்க்கவில்லை.. கிருஷ்ண ஜெயந்தி முடிந்து சென்னை திரும்புகையில், மதுரை இரயிலில் நடந்த உரையாடல்.. இது ஒரு துவக்கத்தின் முடிவு.

சென்ற சனிக்கிழமை வரை ஸ்ரீ ஜெயந்தி (கண்ணன் பிறப்பிற்கு) ஊருக்குப் போவது பற்றி ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கவில்லை.. சென்ற வருஷம் இதே போல் போக தீர்மானித்து கடைசியில் டாஸ்க் ஆர்டர், பில்லிங் இத்யாதிகள் எல்லாம் ஒருசேர்ந்து கம்சன் போல் தாக்க துவரிமான் போகும் பிளான் கேன்சல் ஆனது. இப்போதும் அப்படி ஆக நிறைய வாய்ப்பு இருந்தது. ஏற்கனவே டாஸ்க் ஆர்டர் புதுப்பிக்கும் வேலை துவங்கனும், அதை இந்த வாரம் பாக்கலாம்ன்னு மேனேஜர் சொன்னது நான் ஊர்க்குப் போவதை கிட்டத்தட்ட கைவிடும் நிலைக்கு வந்துவிட்டேன். ஆனால், சனிக்கிழமை வீட்டிலிருந்தது ஒரு போன், கொஞ்சம் உடல்நலம் சரியில்லை, நீ வந்தால் நன்னா இருக்கும் என்று.. சரி, ஏதாவது பேருந்து புடிக்கலாம்ன்னு போனா எல்லாம் புல்ன்னு ஒரு கதை., அப்பறம் ஒரு பேருந்து ஏறி ஊர் போனேன்.. மேனேஜரிடம் சொல்ல, 'சரி ஊருல போய் அந்த டாஸ்க் ஆர்டர் வேல பார்த்துக்கலாம்ன்னு' ஒரு சமாதானம் சொன்னார்..

எதுவுமே இல்லாததற்கு இதுவாவது கிடைத்ததேன்னு காற்றில் கடியனாய் ஓடி அகம் புகுந்தேன். மாற்றி மாற்றி வீட்டு வேலையும், அலுவலக வேலையும் பார்க்க, அவ்வப்போது மழையும் பெய்து பூமியையும் குளிரவைத்தது.
இன்-பேரலல், கிருஷ்ண ஜெயந்தி வேலைகளையும் செய்து வந்தேன். சென்னையிலிருந்து கூடவே ஒரு சின்ன கிருஷ்ணனையும் (தினமும் ஆராதிக்கும்) அழைத்துச் சென்றிருந்தேன்.. அவர் சென்னை வந்து ஒரு வருஷம் கூட ஆகவில்லை, அவருக்கும் ஊரைப்பார்க்கும் ஆசை போல.. இப்படி ஒரு ஏற்ப்பாட்டை அவர் பிறந்தநாளில் அவரே செய்தார் போலும். ஆயர் குல வேந்தன், 'அநுகாரம் முற்றி இடை நடையும், இடைப் பேச்சும், முடை நாற்றமும் தன்னடையே வந்து சேர்ந்த' ஆண்டாள் இருக்கும் சீமையில் கொண்டாடவே விரும்பினான் போலும் திருவல்லிக்கேணியைத் தவிர்த்து. பேக் டு ஸ்ரீஜெயந்தி டே.

பின்மாலை நாலு மணியளவிலிருந்து மழை துவங்கியது. காலை விடிந்தது கூடத் தெரியாதளவிற்கு கரிய மேகங்கள்.. 'கருவுடை மேகங்கள் கண்டால்உன்னைக் கண்டாலொக்கும் கண்கள், உருவுடையாய்உலகேழும் உண்டாக வந்து பிறந்தாய்' என்ற பெரியாழ்வார் சொற்படி தான்வருவதை 'கண்ணனென்னும் கருந்தெய்வம்' காட்டிக்கொண்டிருந்தார்.. பெரியாழ்வார் 'வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி' என்றும், ஆண்டாள் 'மாயனை மன்னு வடமதுரை மைந்தனை' என்றும் பல இடங்களில் மதுராவைக் குறிக்கும் போது 'வட' திசையைக் காட்டி மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.தாங்கள் இருக்கும் திருமல்லி நாட்டின் தலைநகரை
'தென்மதுரை' என்று குறிப்பால் உணர்த்தினார்கள். இதுவே பல்லாண்டு விளைந்த மண்.. இன்றும் மதுரையில் 'மெய் காட்டும் பொட்டல்' இருக்கிறது..(மேன்காட்டுப் பொட்டல் என்று மருவியது இப்போது).வருடத்துக்கு ஒருநாள் பல்லாண்டு வைபவம் அங்கு நடக்கிறது. அன்றும் அப்படியே மதுரா போலவே தோற்றமளித்தது..

ஊரிலே இருந்தும் இம்முறையும் துவரிமான் செல்ல முடியாது போக, காலை லேசான மழை விட்ட நேரத்தில் அங்கு தேர் நடந்திருக்கிறது. சிறிது நேரத்தில் எதிர்பாராமல் வாட்ஸாப்பில் துவரிமான் போட்டோ வந்தது. அந்த நாளில் ஸ்ரீஜெயந்தி எப்படி கொண்டாடினார்கள் என்று கொஞ்சம் பழைய கதைக்குப் போனோம்.. சிறுவர்கள், சிறுமிகள் நல்ல துணி உடுத்திக்கொண்டு (இப்போ இருக்கற மாதிரி கிருஷ்ணன்-ராதே வேஷம் போட்டு ஊர்வலம் போவது போன்ற எல்லாம் அப்போது இல்லை) ஒவ்வொரு வீடாகப் போய் இரண்டு-மூணு வசனங்கள்இருக்கும் அதைச் சொல்லி 'நாளை பிறக்கும் கிருஷ்ணனுக்கு எண்ணெய் கொடுங்கோ' என்று வீடு தோறும் எண்ணெய் வாங்கி கோவிலில் சேர்ப்பது.. 2-3 குழுக்கள் கூட இருக்கும்.. நாங்கள் இருந்த போது கூட அரிசியும், எண்ணெய்யும் வாங்கிய ஞாபகம்.. அப்போது விடுமுறைக்கு குழந்தைகள் நிறைய வருவார்கள்.. இப்போது கிராமங்களே இல்லை., வேற என்ன சொல்ல., இருக்கிற அர்ச்சகர், 3-4 பேர் தான் கடவுளுக்குக் கதி..

**துவரிமான் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி புறப்பாடு** - காளிங்க நர்த்தன கிருஷ்ணன்..






திரளி - சொந்த ஊர் பற்றி தனியாக எழுத நிறைய இருக்கிறது. இந்திய தொல் பொருள் ஆராய்ச்சிப்படி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மக்கள் குடியிருந்தனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இராணி மங்கம்மாள் பற்றிய செவி வழிச் செய்திகளில் திரளியும் வருகிறது.. வெற்றிலையை இடதுகையால் போட்ட தோஷம் நீங்க ஏழு பிராமண கிராமங்களை உருவாக்கி அதில் தெலுங்கு பேசும் பிராமணர்களைக் குடிவைத்து, பெருமாள் கோவிலையும் நிர்மாணம் பண்ணினார். திரளியும் அதில் ஒன்று. முன்னர் தெலுங்கு பேசும் தென்கலை ஸ்ரீ வைஷ்ணவர்கள் இருந்தார்கள் என்றும், பின் அவர்கள் போக தமிழ் பேசும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் வந்தார்கள் என்றும் அசைக்க முடியாத செவி வழிச் செய்தி இன்றும் ஊரில் உலவுகிறது. ஊரின் நடு மத்தியில் அஹ்ரகாரம் 2 பெரிய தெருக்களோடு. 300-400 வீடுகள். .ஆயர்களாய் ஆநிரை மேய்க்கும் கோனார் வீதி ஒருபுறம், மேலும் இரண்டு வீதிகள்.. இன்று அத்தனை வீடுகளும் இல்லை., தெருக்களுக்கான அடையாளங்களும் இல்லை. நல்லி சேர் வயல்கள், மச்சினி மாடங்கள் சூழ்ந்த, எழிலார்ந்த ஊர் எல்லாம் இல்லை.. மழை பெய்தால் மட்டுமே பசுமை, இல்லையேல் வறுமை தான். காரை வீடுகள் (சுண்ணாம்பு காரை) கொஞ்சம், மீதி மண் வீடுகள் தான். கருங்கல்லினாலான கோவில் நல்ல பரப்பளவுடன்.. கோட்டை வாசல் தாண்டி கோவிலுக்குப் போவதைவிட வயலுக்குப் போவதையே வழக்கமாய்க் கொண்டு வாழ்ந்துவந்தனர்.. யஜுர்-சாம வேதம் படித்ததை/கரைக்கண்ட பண்டிதர்கள் இருந்திருக்கிறார்கள், பாடசாலையும் நடந்திருக்கிறது ஒருபுறம், பல வித ஹோமங்களோடு.. (இன்றும் திருவல்லிக்கேணி/ஸ்ரீரங்கம் போன்ற இடங்களில் ஊர் பெயரைச் சொன்னால், அந்தநாளில் திரளியில் இருந்த படித்தவர்கள் பற்றி பலரும் பேசுகிறார்கள்).. மாற்றங்கள் பல வந்தது. இன்றைய நிலையில் வாட்ஸாப்பில் தான் குசலம் ஓடுகிறது.. இதற்க்கென்று தனியாக ஒரு குரூப் இருக்கிறது..

முன்னர் கிருஷ்ணனுக்கு சிறிய பல்லக்கு செய்து கொண்டு காலை- மாலை என்று வீதியில் ஓடுவோம் (என் நினைவில் 2-3 வருஷம் அப்படிப்போனதுண்டு), வீட்டிலுள்ள கிருஷ்ணன் படத்தை வைத்துக் கொண்டு. அவ்வளவு தான் எங்களுக்குத் தெரிந்தது. 'தன்னேறாயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு, வீதியார வருவான்' என்ற ஆழ்வார் பாசுரங்கள் எல்லாம் தெரியாது.வீடுகளில் கிருஷ்ணன் பாதம் இருக்கும், 'இருகாலும்கொண்டு அங்கங்கு எழுதினாற்போல்இலச்சினைப் பட நடந்து' என்ற பெரியாழ்வார் சொன்னதும் தெரியாது.. வீடுதோறும் ஏதாவது ஒரு பக்ஷணம் இருக்கும்.. 'அப்பம் கலந்த சிற்றுண்டி, கன்னலில் லட்டு அவற்றோடு சீடை கார் எள்ளின் உண்டை கலத்திலிட்டு' என்ற பெரியாழ்வார் பாசுரமும் அறியவில்லை எங்களுக்கு.. ஆனால் கண்ணன் எங்களுக்கு ஒரு நண்பன் போலத்தான்.

தலைப்பு பற்றி இன்னும் பேசவில்லை.. ஆம்., 'எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திரு வோணத் திருவிழவில்' என்ற ஊர் ஆழ்வார் (பெரியாழ்வார்) சொன்னது போல், ஊரிலுள்ள ஸ்ரீனிவாசர் திருக்கோவில் கைங்கர்யங்களில் ஈடுபட்டுள்ளனர் எம் முன்னோர்கள்(கிராம முன்சீப் என்ற என்ற எஜமானன் ஸ்தானம்.. வழி வழியா அந்த வேலைதான் (கிராம முன்சீப்)) . இப்போது இருப்பது போல் யாரிடமும் பண வசதி இந்த அளவிற்கு இல்லை., வயல்களும் வானம் பார்த்த பூமி தான். வருஷத்திற்கு இரண்டு-மூன்று முறை தான் பெரிய அளவில் திருமஞ்சனமே நடக்கும். ஸ்ரீ ரங்கம் பெரிய பெருமாள் போல், இங்கும் 'ஈரங்கொல்லி' இருப்பார் பக்கத்து ஊரில் (அச்சம்பட்டி) .. பெருமாள் வஸ்திரங்களை எல்லாம் துவைக்கும் கைங்கர்யம் அவருக்கு. தாயாருக்கு தனியாக வஸ்திரம் தைப்பார்கள். இப்போது அவற்றிக்கு எல்லாம் வேலை இல்லாமல் போனது. அவ்வாறு பெரிய உற்ஸவங்கள் இல்லாத காலத்தில் எங்கள் முன்னோர்கள், பெருமானுக்கு மூன்று உற்ஸவங்களை ஏற்படுத்தி அதற்க்கு கைங்கர்யச் செலவை தாங்கள் தருவதாய் பட்டயம் செய்துள்ளனர்.. அவற்றில் ஒன்று தான் கண்ணன் பிறப்பு.. பட்டையம் சொல்லும் விஷயம் இது தான் 'ஒரு அணாவிற்கு புஷ்பம்; அரை அணாவிற்கு எண்ணெய் சேர்த்து கர்ப்பக்கிரகம் முன் இருக்கும் சரவிளக்கை ஏற்ற வேணும்'.. அந்த நாட்களில் மின்சாரம் இல்லை.. ஸ்ரீனிவாசரை தீர்க்கமாய்ச் சேவிக்க பெரிய விளக்குகள் வேண்டும்., அதற்க்கே இந்த ஏற்பாடு.. இந்த கைங்கர்யம் 5-6 தலைமுறைகளுக்கு முன் வந்திருக்கலாம். எம்பெருமான் கிருபையால் இன்றும்கைங்கர்யம் சிறப்பாக நடக்கிறது..

**திரளி-கௌண்டின்ய நதி** (கௌண்டின்ய முனிவரின் பெயராலும், இங்குள்ள பலர் அந்த கோத்ரத்தைச் சேர்ந்தாலும் இப்பெயர் பெற்றிருக்கலாம்)




கிருஷ்ண ஜெயந்தியன்று, பெரியாழ்வார் திருமொழி முழுதும் சேவிக்கும் வாய்ப்பு இம்முறையும் கிடைத்தது. மொத்தமே 7 பேர் தான். பின்னாடி கோஷ்டி சொல்லக் கூட யாருமில்லை என்ற வருத்தம் வழக்கம் போல்.. இளைஞர்கள் சொந்த ஊருக்கு வருவதில்லை என்ற நிலை., காரணம் யாரைச் சொல்வது. கேட்பதற்கு எம்பெருமான் சித்தமாய் இருக்கிறான்.. இந்த முறை பெய்த மழையில் ஊரின் காட்டாறு 'கௌண்டின்ய நதி' பாலத்தைத் தொட்டுக்கொண்டு போனது. இயற்க்கையின் சூழல் மதுரா போலவே இருந்தது, எங்கும் பசுமை கலந்து., ஆநிரை மேய்க்க கண்ணன் போய் அருமருந்தான இடமாய் இருந்தது.. பெரியாழ்வார் பாசுரங்கள் பலவும் கண்ணன் விளையாட்டுக்களை சொன்னாலும், வேதாந்த அர்த்தங்களை சொல்லும் வண்ணம் இருந்தது.. ஒரு பாடல் மட்டும் என்னை மிகவும் புரட்டிப்போட்டது. ஊருக்குப் கிளம்பும் முன் ஏதோ ஒரு இஸ்யு.. வழக்கம் போல் 'செங்குத்து' (!) டீம் பிரச்சனை.. நானும் சூடாய் ஒரு மெயில் தட்டி, வழக்கம் போல் ப்ராஜெக்ட் ரிலீஸ் கேட்டு மனஜேர்க்கு ஒரு மெயில் போட்ட கையோடு கோவில் கிளம்பினேன்.. சன்னதியில் இந்த பாடல் சொன்ன போது, நான் என்னிடம் இல்லை...

"உனக்குப் பணி செய்திருக்கும் தவமுடையேன் இனி போய் ஒருவன் 
தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்க நின் சாயை அழிவு கண்டாய்
புனத்தினை கிள்ளிப் புதுவவி காட்டிஉன் பொன்னடி வாழ்கவென்று
இனக்குற வர்புதிய துண்ணும் எழில்திரு மாலிருஞ் சோலையெந்தாய்"(பெரியாழ்வார் திருமொழி - 5-3- திருமாலிருஞ்சோலை)

அவ்வளவு தான்!. இதற்குமேல் என்ன சொல்வது..பொட்டிலே அடித்தது போல் இருந்தது. 'பிறர்க்கே உழைத்து ஏழையானேன்' என்ற திருமங்கை ஆழ்வாரின் வரிகள் வந்துபோயின.சரி, இதுவும்-அதுவும் அவனது இன்னருளே என்ற வழக்கமான மன தேற்றலோடு இருந்தேன். வெண்ணெய் பிரசாதம் கண்டருளினார் இந்த வருஷம் விஷேசமாக.. சாற்றுமறை முடிந்து இல்லம் திரும்பினேன். ஆனால் அந்த 'செங்குத்துப்'  பிரச்சனை முடிந்த பாடில்லை, வீட்டிற்கு வந்து மீதமுள்ள மெயில்களுக்கு எல்லாம் ரிப்ளை செய்து இரவை ஓட்டினேன்.. மறு நாள் தான் இரயிலில் மேலுள்ள சம்பாஷணை.. 

No comments:

Post a Comment