US-ல் இளவேனிற்க் காலம்
இளவேனிற்க் காலம் (Spring) தான் , ஆனால் இரண்டு நாட்களாக இங்கு ஓரளவு நல்ல மழை - விட்டு,விட்டுப் பெய்துகொண்டிருக்கிறது. இங்கு மட்டும் பருவம் தவறாமல் எப்படி மழை பெய்கிறது என்பது பற்றி சற்றே யோசித்தேன்.ஆண்டாளின் பாடல் தான் நினைவிற்கு வந்தது.'தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து' , மிக உயர்ந்த சிந்தனையோடு பாடப்பட்டது. அவ்வாறு மழை பெய்யக் காரணம் என்ன என்று பழைய தமிழ் இலக்கியத்திலும் சொல்லப்பட்டுள்ளது.
திருக்குறளில், பத்தினிப் பெண்களுக்கு ஏற்றம் தரும் விதமாக 'பெய்யெனப் பெய்யு மழை' என்கிறார் திருவள்ளுவர்.
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை. (திருக்குறள்)
'திரிகடுகம்' என்ற நூலில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.
நல்ல மனைவி , தீமையை விலக்கி நன்மையைச் செய்கின்ற அரசன், நோன்புகளை முறைப்படி நடத்துகிறவன் ஆகியோர் சொன்னால் மழை
பொழியுமென்கிறார்.
கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி கொண்டன
செய்வகை செய்வான் தவசி கொடிதொரீஇ
நல்லவை செய்வான் அரசன் இவர்மூவர்
'பெய்'யெனப் பெய்யும் மழை. (நல்லாதனாரின் திரிகடுகம்)
விவேகசூடாமணியில் இதே போன்ற 3 காரணங்களைச் சொல்கிறார்.
தன்னலமற்று வேதமோதும் வேதியர்க்காக ஒரு மழை, நீதி வழுவா நிலை நின்ற செங்கோல் மன்னன் ஆட்சிக்கு ஒரு மழை, பத்தினிப் பெண்களுக்கு ஒரு மழை என்பது கணக்கு
வேதம் ஓதிய வேதியர்க்கு ஒர் மழை
நீதி மன்னர் நெறியனுக்கு ஓர் மழை
மாதர் கற்புடை மங்கையர்க்கு ஓர் மழை
மாதம் மூன்று மழைஎனப் பெய்யுமே. (ஆதிசங்கரின் விவேகசூடாமணி)
எல்லாவற்றையும் பார்க்கும் போது, சுஜாதா 'ஸ்ரீரங்கத்து கதை'களில் சொன்னது தான் நினைவிற்கு வருகிறது. பாதி பிராமணர்கள் அமெரிக்காவில் தான் இருக்கிறார்கள் என்பார். தன்னலமற்று வேதமோதும் வேதியர்கள் நிறையபேர் இங்கு இருக்கிறார்கள்:). இலக்கியத்தில் சொல்வது உண்மை தான்.
No comments:
Post a Comment