Tuesday, May 21, 2013

இராமர் பச்சை

**இராமர் பச்சை***

  'தேவாங்கர் சத்திரம்' என்று ஒரு சத்திரம், மதுரை விளக்குத் தூண் பகுதியில்.
ஒரு பெரிய கூடம் (hall). அதில் 4-5 கைநெசவில் உருவாகும் புடவைகள் விற்க்கும் துணிக்கடைகள் இருக்கும். பெரும்பாலும் 9 கஜம் (Yards) புடவை வாங்கவே அங்கு வருவார்கள். அங்கு முதலாளி-தொழிலாளி கிடையாது. நெசவாளர்களின் சொந்தக் கடைகள்.'சுந்தரம் சாரீஸ்' என்று ஒரு கடை தான் எங்கள் வாடிக்கை. நல்ல தரமானதாக இருக்கும். சிறு வயதில் நாங்கள் பண்டிகைக் காலங்களில் புடவை வாங்க அங்கு அம்மா, சித்தியோடு செல்வதுண்டு. கல்லாவில் இருப்பவர் , துணி எடுத்துப் போடுபவர்களின் முகங்கள் இன்னும் என் நினைவில் உண்டு. ஒவ்வொரு முறையும் 'அந்த 'இராமர் பச்சை' கலர் புடவை (6 / 9 கஜம்) எடுத்துப் போடுங்கோ' என்ற வார்த்தைகளைக் கேட்டிருக்கிறேன். (அங்கு மட்டுமல்ல, பல இடங்களில்:)). 'இராமர் பச்சை' நிறம் என்று உள்ளதாக நினைத்ததுண்டு! பல முறை யோசித்ததுண்டு,7-8 அடி உயர மனிதன், நீலம்/பச்சை நிறத்தில் இருந்தால் எப்படி இருக்கும்? இது சிறு வயதில் என் இராமனைப் பற்றிய ஒரு உருவகம். ஏறத்தாழ எல்லா படங்களிலும் அவ்வாறே இருக்கும். இன்று ஏனோ இது என் மனதில் பட, கம்பராமாயணத்தைத் திறந்தேன். அவதாரம் முதல், கம்பன் இராமனின் நிறத்தை, மை மற்றும் கரிய முகிலுக்கு ஒப்பாகவே சொல்கிறார். அவ்வளவு கருப்பு.. 'பொன்னார் மேனியனே' (சிகப்பு) என்று நாவுக்கரசர் சிவனைக் கூறுகிறார். நிறத்தில் என்ன இருக்கிறது, குணத்தில் தான் இருக்கிறது. இராமன் நிறம் தான் கருமை - இருள் அகற்றும் ஒளி படைத்தவன். கம்பனைப் படித்தவுடன் இன்று நேரில் காண்கிறேன் , '7-8 உயர மனிதன் மை போன்ற கருமை நிறத்தில்'..



         

**பிரளயத்தின்போது எல்லா உலகங்களையும் தனது வயிற்றிலே அடக்கி; அரிய மறைகளாலும் தெரிந்து கொள்ள
இயலாத பரம்பொருளாகிய அப்பரமனை; அஞ்சமனம் போன்று கரிய
மேகக் கொழுந்தின் அழகைக் காட்டிநிற்கும் ஒளிவடிவாய்த்
திகழ்பவனை; திறமையுடைய கோசலை, உலகம் மங்கலம் பொருத்த. ஈந்தாள்.**

ஒரு பகல் உலகு எலாம்
உதரத்து உள் பொதிந்து
அரு மறைக்கு உணர்வு அரும்
அவனை, அஞ்சனக்
கரு முகில் கொழுந்து எழில்
காட்டும் சோதியைத்,
திரு உறப், பயந்தனள்
திறம் கொள் கோசலை. (பால காண்டம்-திரு அவதாரப் படலம்)

**பாற்கடலைக் கடைந்த போது நஞ்சு தம்மை அழிப்பதற்கு எழுந்து வர; நடுங்கி, பிறைச்
சந்திரனை அணிந்துள்ள சிவந்த சடைமுடியினான சிவபிரானை அடைக்கலம் அடைந்த தேவர்களைப் போல்; கொடுஞ் சினமுடைய அரக்கர்களுக்கு அஞ்சி; வேள்விச் சாலையிலிருந்த முனிவர்கள் எல்லாம் மை போன்ற நிறத்தை உடைய இராம பிரானே!; நாங்கள் உன் அடைக்கலம் என்றார்கள்.**

நஞ்சு அட எழுதலும் நடுங்கி நாள் மதிச்
செஞ் சடைக் கடவுளை அடையும் தேவர் போல்
வஞ்சனை அரக்கரை வெருவி மாதவர்
‘அஞ்சன வண்ண; நின் அபயம் யாம் ‘என்றார்.(பால காண்டம்-வேள்விப் படலம்)

**அஞ்சன மை போன்ற கருநிறங் கொண்ட
(திருமாலாகிய) இராமனும்; தாமரைப்
பூவில் வாழ்பவளாம் திருமகளாகிய சீதையும், நாளை (ஒருவகையிலும்)
குறைவில்லாத திருமணம் கூடுவார்கள் என்று முரசறைந்த செய்தி
கேட்டவுடன்; சூரியன்,தனது குலமைந்தனான இராமனின் திருமணக் கோலத்தைக் காணத் தனது ஒப்பற்ற தேர்மேல் தன் சிவந்த ஒளிக்கற்றைகளால் இருளைக் கீறிக் உதித்தான்.**

அஞ்சன ஒளியானும்,
அலர் மிசை உறை வாளும்,
எஞ்சல் இல் மணம் நாளைப்
புணர்குவர் எனலோடும்,
செஞ் சுடர் இருள் கீறித்
தினகரன் ஒரு தேர் மேல்
மஞ்சனை அணி கோலம்
காணிய என வந்தான். (பால காண்டம்)

No comments:

Post a Comment