ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை,
நான் மறை முது நூல் முக்கட் செல்வன்,
ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய
பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர்
கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும் (அகநானூறு)
பொருள்: உலகமெல்லாம்பரவும் நன்மை பொருந்திய நற்புகழையுடைய, நான்குவேதங்களாய பழைய நூலை அருளிய முக்கண்ணையுடையபரமனது, ஆலமுற்றம் என்னுமிடத்து, அழகுபெற இயற்றப்பெற்ற, பொய்கையைச் சூழ்ந்துளபொழிலின்கண்ணே, சிற்றிலிழைத்துவிளையாடும் சிறுமிகளது, (கைசெய் பாவைத் துறைக்கண்) அழகுறச் செய்யப்பெற்ற பாவைகளையுடைய துறையின்கண்ணே, வந்து தங்குவதும், மகரக் கொடியினைஉச்சியிற்கொண்ட வானைத்தோயும் மதிலையும், முடிஅறியப்படாதவாறு சேணின்கண் உயர்ந்த நல்லமாடங்களையுடையதும் ஆகிய, காவிரிப் பூம் பட்டினத்தையுடைய நல்ல சோழநாட்டின் கண்ணதாகும்!
ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து
மாயிருந் திங்கள் மறுநிரை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்
புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப
வெம்பா தாக வியனில வரைப்பென
அம்பா ஆடலின் --பரிபாடல்
ஆண்டாள் என்ற பெயர் கூட எங்கள் வீடுகளில் வாழந்து தான் வருகிறது. சமீபத்தில் நூறு வயதை நெருங்கிய ஆண்டாள் என்ற பெயருடைய பாட்டியொருவர் ஆசார்யன் திருவடி அடைந்தார்/இறந்தார். அவருக்கு இப்பெயர் நூறு வருஷங்களுக்கு முன் வைக்கப்பட்டுள்ளதென்றால் ஆண்டாள் என்ற தெய்வப்புலவரை எங்களைப் போன்றோர் இன்றும் போற்றி வருவது புதிதல்ல. இன்றும் தமிழகத்தில் நான் அறிந்த வரையில் ஆண்டாள் தவிர வேறு எந்த புலவரின்/கவியின் பெயர்கள் வைக்கப்படுவதில்லை. தமிழ் இனம்/தேசியம் என்று பேசுபவர்கள் கூட (ஆதி) தமிழ் புலவர்களின் பெயர்களை வைப்பதில்லை என்பதைவிட பெரும்பாலும் இயற்ப்பெயரை மறைத்து வேறு பெயர்களே வைத்திருக்கிறார்கள்.. சரி.. எது எப்படியோ போகட்டும்.. ஆண்டாள் தமிழை கொஞ்சம் பார்க்கலாம் என்ற எண்ணம் உருவாக்கிய அனைவருக்கும் நன்றி சொல்லவேண்டும்.'நான் கண்ட நல்லதுவே' என்பது போல் எனக்குத் தெரிந்த/படித்த சில தமிழ் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஆண்டாள் பாடல்களில் சொல்லலாம் என்ற சிறு முயற்சி ..
ஆண்டாளின் காலம் இன்ன தான் என கூறும் அளவிற்கு எனக்கு அருகதை இல்லை. வைஷ்ணவ குருபரம்பரைகள் படி, ஆழ்வார்களின் காலத்தை இது தான் என குறிக்க முடியாது., மிகவும் முற்பட்டது என்கிறது. இராகவையங்கார் உட்பட பலரும் பல்வேறு ஆராய்ச்சி செய்துள்ளனர். என்னைப் பொருத்தவரை, பெரியாழ்வார்-ஆண்டாள் இருவரும் 5-ம் நூற்றாண்டின் பிற்பகுதியோ, 6-ம் நூற்றாண்டின் முற்பகுதியோ இருக்கலாம். ஏழாம் நூற்றாண்டில் திருமங்கை ஆழ்வார் வந்துவிட்டபடியால் இவர்கள் அதற்க்கு வெகு முந்தியவர்களாய் இருப்பார்கள். இவர்களின் மொழி நடைகளும், இலக்கண வகைகளும் நம்மாழ்வாருக்கு பிந்தையதையும், திருமங்கை ஆழ்வாருக்கு முந்தையதையும் இருப்பதாய் அமைகிறது.
பெரியாழ்வார் பற்றி பிறிதொரு சமயத்தில் விரிவாய் எழுத வேண்டும். இப்போதைக்கு அவரின் பெண்/சிஷ்யை ஆண்டாள். இவருக்கு 'கோதா' என்றே திருநாமம் இட்டதாய் சொல்லப்படுகிறது. இதற்க்கு மாலை என்ற பொருள்உள்ளதால் இப்பெயர் வைத்திருக்கலாம் என்றாலும் வேத காலத்தில் 'கோதா' என்ற சாமவேத பாண்டித்யம் பெற்ற பெண் ஒருவரின் பெயரையே இட்டதாயும் சொல்லலாம்.. 'வேத தொழிலாளர்கள் வாழ் வில்லிபுத்தூர்' என்பதனால் பெரியாழ்வார் இப்பெயர் வைத்தலில் ஆச்சர்யம் இல்லை. இவர்களின் தமிழ் புலமையை ஆராயக் கூடாது என்று வைணவ முறை சொன்னாலும், அந்த தமிழில் உள்ள இனிமையை,நடையை கண்டிப்பாக மேடையேற்ற வேண்டும்.
அதற்க்கு முன் இவர்கள் வாழ்ந்த இடத்தை கொஞ்சம் நோக்க வேண்டும். இருந்தது பாண்டிய நாடு. அதாவது கடைச்சங்க காலம். ஆம்! மொழிக்கு சங்கம் வைத்து வளர்த்ததும் இந்த நாட்டில், அதுவும் என் ஊரில் தான்.. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தெற்க்கே குமரிக்கடல் அருகில் இருந்த ஒரு பெரிய நில பரப்பில், இரண்டு ஆறுகளுக்கு நடுவில், வடமதுரையின் பரத வம்சத்தவரின் வாரிசுகளால் தெற்கே 'மதுரை' என்ற நாடு உருவாக்கப்பட்டது. முதல் சங்கம் 549 அறிஞர்களும், ஏழு பாண்டிய மன்னர்கள் உட்பட 4449 தமிழ் புலவர்களுடன் திகழ்ந்தது. தொல்காப்பியம், முதுநாரை, பரிபாடல் முதலான நூல்கள் உருவாயின. பின் இடை சங்க காலம் 3700 ஆண்டுகள் இருந்தது. ஐந்து பாண்டிய மன்னர்கள் உட்பட 3700 கற்றறிந்த தமிழ் புலவர்களால் அலங்கரிக்கப்பட்டு, கலி, குருகு, அகவல் முதலானவை உருவாயின.
இதையும் கடல் கொண்டுபோக, பாண்டியன் முடத்திருமாறன் தற்போது இருக்கும் மதுரையின் சற்றே தெற்கே மதுரையை வைகை நதியின் கரையில் நிர்மாணித்தான். இதில் வந்தது கடைச் சங்கம். இப்போ நமக்கு தேவையானது. இதில் 49 அறிஞர்கள், 449 புலவர்களும் இருக்க, எட்டுத்தொகை - பத்துப்பாட்டு நூல்களும் உருவாயின. இதன் முடிவில் பக்தி இலக்கியங்கள் தோன்றியிருக்கலாம். பாண்டிய நாட்டை ஏழு கூற்றங்களாகவும், 45 நாடுகளாகவும் பிரித்து, அவற்றில் ஏழு குழுக்களாக பிரித்து 'வளநாடு' என்று பெயரிட்டனர் நிர்வாக வசதிக்காக. இதில் (45 ) ஒரு நாடாக இருப்பது 'திருமல்லி வளநாடு'.. நம் பெரியாழ்வார், ஆண்டாள் அவதரித்த நாடு. இன்றும் 'திருமல்லிவளநாடு வாழியே' என்று நாங்கள் தினமும் 'ஆண்டாள் வாழிதிருநாமத்தில்' சொல்வதுண்டு, ஆண்டாளின் மீதும், அவர் தந்த தமிழின் மீதுள்ள பற்றினால். இப்போது கொஞ்சம் தெளிவாகும் இவர்களின் தமிழ் எப்படி உன்னதமானது என்று.. அவற்றை இன்றைய கால ஓட்டத்தில் காண்பது கூடாது.. மேலும், நான்காம் சங்கம் அமைத்தவர்களில் முக்கியமான 'செந்தமிழ்' நாராயண ஐயங்கார் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்தவர் என்பதும் இந்த ஊருக்கும்-தமிழுக்கும் உண்டான தொடர்பை அறிவிக்கும். என்னுடைய கொள்ளு பாட்டனார் திரளி ஸ்ரீ திருமலை ஐயங்கார் செந்தமிழ் ஆசிரியரிடம் பயின்று நான்காம் தமிழ் சங்கத்தில் இருந்திருக்கிறார்.
ஆண்டாள் இரண்டு உயர்ந்த நூல்களைக் கொடுத்துள்ளார் தமிழ் இலக்கணம், தொன்மை மாறாமல் தன் தந்தையின் வழி கொண்டு. திருப்பாவை - இது பாவை நோன்பு பற்றியது என்று அவரே அறிவிக்கிறார் (நாமும் நம் பாவைக்கு.. (2 ) என்கிற வரிகளில்). சரி., இது தமிழர்களுக்கு ஏற்புடையதா? என்று ஒருவட்டம் கூறலாம். கண்ணனை அடைய ஆயர்கள் நோன்பு இருந்தபடிக்கு ஆண்டாளும் இருக்கிறார் என்று வைணவம் கூறுகிறது. இதோ, தமிழ் இலக்கிய சான்று.. மேலே கூறிய பாடல்கள், சங்க இலக்கியத்தில் பாவை விரதம் பற்றி கூறுகிறது. பெண்கள் மார்கழி பௌர்ணமி தொடங்கி , தை பௌர்ணமி வரை பொய்கைகளிலும், சுனைகளிலும் நீராடி பாவை நோன்பு இருந்தனர். இதை 'தைந்நீராட்டல்' என்கிறது மேலுள்ள பரிபாடல். ஆண்டாள் செய்வதும் அதுவே.. அவரே தன் முதல் பாடலில் சொல்கிறார், 'மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்' என்று.. இது தமிழரிடத்திலும் இருந்திருக்கிறது.
ஒரு வைணவ தமிழராய் ஆண்டாள் பயணிக்கிறார். திருப்பாவை ஒருவகை 'கலிப்பா' - எட்டடிநாற்சீர் ஒருவிகற்ப கொச்சகக்கலிப்பா. ஒரு நாளைக்கு ஒரு பாடல் வீதம் முப்பது பாடல்கள் இலக்கணம் மாறாமல்.
சில வியந்து பார்த்தது..
* இவருக்கு முன் தோன்றிய மற்றை ஆழ்வார்கள் தாலாட்டு பாடினாலும், 'பாவை பாட்டு' என்ற பெயரில் துயில் எழுப்பும் பாசுரம் பாடுகிறார், இறைவனுக்கும், அடியார்க்கும்.
* மார்கழி என்று ஒரு தமிழ் மாதத்தின் பெயர் கொண்டு தொடங்குவது வேறுயாரும் செய்யாதது.
* தீ/நெருப்பு தான் மற்றைய பூதங்களை தன்னகத்தே அடக்கும், ஆதலால் 'தீயினில் தூசாகும்' என்கிறார் ஏனைய பஞ்ச பூதங்களைக் கூறாமல்.
* மூன்று அடி கேட்ட வாமனன் விஷ்ணுவை மூன்று இடங்களில் கூப்பிடுகிறார் - 'ஓங்கி உலகளந்த', ' அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த' 'அன்று இவ்வுலகம் அளந்தாய்'
* நல்ல மழை பொழிவதும், நல்ல கணவன் அமைய வேண்டுவதும் பாவை நோன்பு என்று பரிபாடல் சொல்வது போல், 'ஆழி மழை' பாசுரத்தால் மழை வேண்டுகிறார், அதுவும் 'வாழ உலகினில்' என்று 'மழை தீங்கின்றி' பெய்ய வேண்டுகிறார்..
* தமிழுக்கே உண்டான சிறப்பு ழகரம் 11 இடங்களில் கையாளுகிறார். 'ஆழி, மழை, ஆழியுள், ஊழி, பாழியன், ஆழிபோல், தாழாதே, சர மழை, வாழ, மார்கழி நீராட, மகிழ்ந்து'
* இது போல் ழகரத்தை இவரது தந்தை பெரியாழ்வார் ஒன்பது இடங்களில் சொல்கிறார் - குழலிருண்டு,குழல்முழைஞ்சு, குமிழ்த்து, கொழித்திழிந்த,குழல்முழவம்,விரித்ததமிழ்வல்லார்,குழலைவென்ற.. இதற்க்கு மேல் இவர்களின் கவித்துவத்தை, தமிழ் ஆளுமையை என்னவென்று சொல்வது..
* பாடுதல் என்ற ஒரு செயலை முப்பது பாடல்களிலும் கொண்டுவருவது சிறப்பு. பதிமூன்று இடங்களில் பாடுதல் பற்றி குறிப்பிடுகிறார். 'பரமன் அடி பாடி' என்று தொடங்கி 'பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சன்மானம்' என்பது வரை..
* "பாடிப் பறை கொண்டு" என்ற இடத்தில் ஒரு விஷேஷ சந்தி காணலாம். 'பாடி பறை கொண்டு' என்றால் ஒரு அர்த்தமும், 'பாடிப் பறை கொண்டு' என்பதால் மற்றொரு அர்த்தமும் வரும். புணர்ச்சி/சந்தி இலக்கணத்தில் இது 'தோன்றுதல்' வகை. ஒரு மெய் எழுத்து தோன்றியது ஒரு விசேஷ அர்த்தம் தர என்பதை அப்படி அமைத்திருக்கிறார் ஆண்டாள். நிலைமொழியில் உயிர் ஈறும், வருமொழியில் மெய் முதல் வந்தாலும் சந்தி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், பாடப்படும் விஷேச அர்த்தம் கருதி, 'ப்' என்ற சந்தி சேர்க்கிறார். அதாவது பாடுதலையே ஒரு பறை(பலன்)யாக கேட்கிறார்.
* பிற்காலத்தில் இது போன்று இயற்கை இருந்தது தெரியாமல் போகும் என்பதை கணித்து, பறவைகள், காலங்கள் பற்றி பாடலோடு சொல்கிறார்.
* புள் (கருடன்), கீசுகீசென்று கத்தும் ஆனைச் சாத்தன், கறவைகள், குயிலினங்கள், இளஞ்சிங்கம்
* 'வெள்ளைவிளி சங்கின் பேரரவம்', 'ஆனைச் சாத்தன் கலந்து பேசின பேச்சரவம்', 'எருமை சிறு வீடு மேய்வான்', 'தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய', 'கணங்கள் பல கறந்து', 'நினைத்து முலை வழியே நின்று பால் சோர', 'வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று', 'செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய்கூம்பின', 'தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்' என்று விடியற்காலை முதல் நடக்கும் ஒவ்வொரு செயலையும், இயற்கையோடு நம் இணைந்த வாழ்வையும் அற்புதமாய் பாடல்கள் ஆறு முதல் பதினைந்து வரை விவரிக்கிறார்.
* 'பறை' என்ற சொல் அதிகஅளவில் கையாளப்படுகிறது வேறுவேறு அர்த்தங்களில்.. ஆனால் வைணவ உரையாசிரியர்கள் சொல்வது 'கண்ணனை அடைவது'..
* ' சிம்ம கர்ஜனை' என்ற வட மொழி சொல்லுக்கு தமிழ் மூலம் இல்லாமல், ஆண்டாள் 'முழக்கம்' என்று சொல்கிறார். 'மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு' என்ற படி.
* 'மெள்ள எழுந்து' என்று காலையில் மெதுவாய் எழவேண்டும்.. எப்படி என்று உரையாசிரியர்கள் சொல்வது 'கர்ப்பிணி தாய் எழுந்திருப்பது போல்'..
* கோவை, ஆற்றுப்படை, அந்தாதி, கலம்பகம், சதகம், உலா, பரணி, பிள்ளைத் தமிழ், தூது, மடல், பள்ளு, குறவஞ்சி, மாலை, பத்து, பதிகம் என்று சிற்றிலக்கிய வகைகளை தொல்காப்பியம் துணைகொண்டு பிரிக்கிறார்கள்.
* இவற்றில் ஆண்டாள் பத்து, பதிகம், தூது கொண்டு செய்கிறார். பத்து பாடல்கள் கொண்டது 'பத்து'; அதற்க்கு மேல் வருவது 'பதிகம்'.
* நாச்சியார் திருமொழி என்று ஒரு பிரபந்தம் பாட அதில் 11 பத்துக்களும், 3 பதிகங்களும் பாடியுள்ளார். மொத்தம் 143 பாடல்கள்.
* அன்னம், மயில், கிள்ளை (கிளி), மேகம், பூவை, பாங்கி, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு என்னும் பத்தும் தூது விடலாம் என்கிறது 'இரத்தின சுருக்கம்' என்ற நூல்.அந்த வழியில், 'விண்ணீலமேலப்பு' என்ற பத்தில் திருவேங்கடவனுக்கு 'மேகத்தை' தூதுவிடுகிறார்.
* தையொரு திங்கள், மாசி முன்னால், பங்குனி நாள் என்று தமிழ் மாதங்களை தன் பாடலில் குறிக்கிறார்.
* பிள்ளைத்தமிழ் என்பது ஒருவகை பிரபந்தங்களில் ஒன்று. அரசன், தெய்வம் ஆகியோரை குழந்தைகளாய்க் கொண்டு பாடுவது. காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் ஆகிய பத்து பருவங்கள் சொல்லலாம். பெரியாழ்வார் கண்ணனை குழந்தையாய்க் கொண்டு பிள்ளைத்தமிழ் இலக்கியம் பாடினார். ஆண்டாள் அவர் பாடாமல் விட்ட 'சிற்றில்' பருவத்தை 'நாமமாயிரம்' என்ற பத்தில் பாடுகிறார் 'சிற்றில் வந்து சிதையாதே' என்று கண்ணனிடம் 'தன் மணல் வீடுகளை கலைக்காதே'என்று பிள்ளைத் தமிழாய்ப் பாடுகிறார்.
* 'வாரணமாயிரம்' என்ற பதிகத்தில் இந்து முறை திருமணங்களை விரிவாய்ச் சொல்கிறார் - "தோரணம் நாட்டி, பரிசுடைப் பந்தர்க்கீழ், மந்திரக் கோடி உடுத்தி மணமாலை அந்தரி சூட்டி, காப்புநாண் கட்டி, மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றி, தீவலம் செய்து, அம்மி மிதித்து, பொறிமுகம் தட்டி, மஞ்சமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்".. இதுவே இந்து திருமண சட்டத்திலும் இப்போதுள்ள சடங்குகள். இது போல் விரிவாய் எந்த தமிழ் இலக்கியமும் சொல்லவில்லை. பின்னாளில் வந்த கந்தரநுபூதி மட்டும் கொஞ்சம் சொல்கிறது.
* பெருந்திரளான மக்களின் வாழ்வியல் சார்ந்த நிகழ்வுகளையும், அன்றாடம் பயன்படுத்தப்படும் செய்திகளையும்/சொற்களையும் ஆண்டாள் அந்தக் காலத்தில் சொல்வது, அதுவும் அவரின் ஐந்து வயதில் சொல்வது பக்தியல்லால் வேறு என்ன. அவர் சொல்லும் சில சொற்கள் - 'புழக்கடை', 'முள்ளுமில்லா சுள்ளி', 'மேலாப்பு', 'கண்ணாலம்', 'எல்லே', 'கட்டி அரிசி' என்பன பல இன்றும் புழக்கத்தில் இருப்பது அவரின் தெய்வத்தன்மையே.
இது போல் இன்னும் பல தமிழ் சார்ந்த விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படியாக ஆண்டாள் அரங்கனையும், தமிழையும் ஆண்டாள். அவற்றதோடு நம்மையும் ஆள்கிறார் என்று சொல்லவும் வேண்டுமோ?.. 'இவையும் சிலவே' என்பது போல மேலும் பகிர்வோம் முடிந்தபோது அவனதருளால். இவையாவும் காலத்தால் அழிக்க முடியாத அருள் தங்கிய ஈரச் சொற்கள். நம்பிள்ளை தன் திருவாய்மொழி வ்யாக்யானத்தில் இவ்வாறு முடிப்பார் - 'ஆழ்வார்க்குப் பின்பு நூறாயிரம் கவிகள்போறும் உண்டாய்த்து. அவர்கள் கவிகளோடு கடலோசையோடு வாசியற்று'.. இன்றைய நிலைக்கு அது தான் சிறந்த வரிகள். ஆழ்வார்கள், நாயன்மார்கள், சங்க புலவர்கள் போன்றோரின் இலக்கியங்கள் என்றும் நிலைத்து நிற்பவை, மற்றவை கடலோசையோடு கரைந்து போகும் தன்மை உடையது கண்கூடு..!
--கிரி பிரசாத் கண்ணன், திரளி.
No comments:
Post a Comment