திருமாலிருஞ்சோலை நின்றான் வாணாதிராயன்
எதிர்பாராமல் சில விஷயங்கள் நடப்பதுண்டு. மூன்றாவது சிறுகதை, வலம் மாத இதழில் வந்ததும் இவ்வகையே.
http://www.valamonline.in/2020/04/thirumaliruncholai.html
------------------------------------------------------------------
கதையின் காலம் பதினான்காம் நூற்றாண்டு. பாண்டியர்கள், வாணாதிராயர்கள் காலம். அரசரின் கோவில் திருப்பணிகள், குரு பக்தி, தேச பக்தி அனைத்தும் கலந்து காண முடிந்தது நம் வரலாறுகளில். பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதிய ‘யதீந்திரப்ரணவ ப்ரபாவம்’ என்ற வைணவ வரலாற்று நூல் மேற்கோலிட்ட விஷயம், கோவில் கல்வெட்டுகளில் உள்ள சில செய்திகள், சமகால நிகழ்வுகள் எல்லாம் கோத்து இந்தக் கதையைப் புனைந்துள்ளேன். மதுரையின் மேலுமொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க, அழகிய தமிழ்ப் பெயர் கொண்ட இடம், பெயரும் திரிந்து வணிக கட்டடங்களோடு இருக்கிறது. பல ஊர்களின் பெயர்கள் திரிந்து தொன்மை மாறி உள்ளன. வரலாற்றிக்குப் பாதிப்பில்லாமல் சில கற்பனைகளும் உண்டு.
*
“பாண்டி மண்டல ஸ்தாபனாச்சாரியார்’ என்ற விருது கொண்ட தாங்கள் ஏனோ ஆழ்ந்த சிந்தனையில் உள்ளீர் போல் தெரிகிறதே மன்னா?” அமைச்சரின் கேள்விக்கு திருமாலிருஞ்சோலை நின்றான் மாவலி வாணாதிராயர் உடனடியாய் பதில் தரவில்லை.
“ஆம் அமைச்சரே.. பாண்டிய நாட்டை அந்நிய ஆட்சியால் ஏற்பட்ட அழிவிலிருந்து மீட்டுக் குழப்பத்தை ஒழித்து மதுரையிலிருந்து ஆட்சி செய்ததால் ‘பாண்டியமண்டல ஸ்தாபனாசாரியன்’ என்றும், புதுக்கோட்டையில் கோலோச்சிய சோழனை வென்று ‘சோழ மண்டல பிரதாபச்சாரியன்’ என்றும் விருது கொண்ட இந்த வாணவராய வம்சம், காஞ்சி வரை பரவியிருந்தாலும் இன்றும் விஜய நகர அரசின் கீழ் தான் இருக்கிறது. இன்று லக்கணதண்ட நாயக்கர் முன் தென்காசி பாண்டியன் இவ்வாறு பேசுவாரென்று துளியும் எதிர்பார்க்கவில்லை. அதுதான் அடுத்தகட்ட யோசனையில் இருந்தேன்..’ மன்னர் அமைச்சரிடம் நீண்ட சிந்தனைக்குப் பின் சொன்னார். அதற்குள் தேர் மதுரை அரண்மையை நெருங்கிக்கொண்டிருந்தது.
அவர்கள் திருசிராமலையிலிருந்து வந்து கொண்டிருந்தனர். அது மிகவும் முக்கியக் காரியமென்பதால் பிரதான அமைச்சர் நரசிங்கத் தேவரும், காரியாதிகாரி பஞ்சவராயரும் உடன் பயணித்தனர். ஒரு சிறு படையும் உடன் இருந்தது.
“அமைச்சரே, நாயக்கர் சொன்ன விஷயம் தொடர்பான முடிவுகள் எடுக்க உடன் மந்திராலோசனை கூட்டம் ஏற்பாடு செய்ய வேண்டும்..”
அவ்வமயம் மன்னர் எதையோ கண்ணுற்றவராய், “தேரோட்டி, சற்றே நிறுத்தும்.. அங்கேதோ கூட்டம் கூடியிருக்கிறதே...” என்றார். அரசன் பார்வை கூட்டத்தின் நடுவில் இருந்த ஒரு துறவியிடம் இருந்தது. அவர் வைணவ சின்னங்கள் தரித்து திருவாழியின் நிறத்தையொத்த திருமேனியோடு இருந்தார். அவரின் திருமேனி ஒளியே அரசனை அங்கிழுத்தது. தேரும் நின்றது. சாரதி தேரை நிறுத்தும் காலம் பதினான்காம் நூற்றாண்டில் நாற்பது வருடங்கள் கடந்திருந்தன. பல அரசியல் குழப்பங்களோடு பாண்டியநாடு விஜயநகரப் பேரரசின் கீழ் இரு பிரிவுகளாய் இருந்தது.
தேரை விட்டு இறங்கி மக்கள் கூட்டம் இருக்குமிடத்திற்குச் சென்றான் மன்னன். உடன் அமைச்சரும் சென்றார்.
அந்த வைணவத் துறவியைச் சுற்றி சிங்கங்கள் போல் எட்டு சிஷ்யர்கள் இருந்தார்கள். அவர் நடு நாயகமாய் நின்று, அந்த இடத்தின் பெருமையைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். மன்னன் வந்ததும் தெரியாமல் அங்கிருந்தவர்கள் அதில் மூழ்கியிருந்தனர். அவர் திருமாலின் பெருமைகளைச் சொல்ல, அரசனும் நின்று கேட்டுக்கொண்டிருந்தார். அவர்கள் நின்ற இடம் பாண்டிய அரண்மனையின் மேல் திசையிலும், கூடல் அழகர் கோவிலுக்கு வடக்கே சற்று தூரத்தில் இருந்தது.
அங்குதான் வைணவ ஆழ்வாரான பெரியாழ்வார், ஸ்ரீவல்லப பாண்டியன் சந்தேகத்திற்குத் தக்க சமாதானம் கூற, பொற்கிழி தானே இறங்கி வந்தது. உடன் திருமாலும் கருடன் மீதேறி வந்து அருளினார். வியூக சுந்தரனான திருமாலின் மீது கண்ணெச்சில் பட்டுவிடக்கூடாதென்று பெரியாழ்வார் ‘பல்லாண்டு’ என்ற தமிழ்ப் பதிகம் பாடினார். இந்தக் கதையைச் சுவைபட, சொல்வன்மை மிக்கவரான வைணவத் துறவியும் சுற்றி இருந்தோர்க்குக் கூறினார் இந்த பாடலோடு.
கோதிலவாமாழ்வார்கள் கூறுகலைக்கெல்லாம்
ஆதி திருப்பல்லாண் டானதுவும் * வேதத்துக்கு
ஓமென்னு மதுபோல் உள்ளத்துக்கெல்லாம் சுருக்காய் *
தான் மங்கலமாதலால்
ஆதி திருப்பல்லாண் டானதுவும் * வேதத்துக்கு
ஓமென்னு மதுபோல் உள்ளத்துக்கெல்லாம் சுருக்காய் *
தான் மங்கலமாதலால்
அன்று பெரியாழ்வார் கருடன் மீது வந்த பெருமானைக் கண்ட இடத்திற்கே சென்றுவிட்டார் அவர். அங்கிருந்த மணல் அன்றொருநாள் பெரியாழ்வார் திருப்பாதம் பட்ட இடமாய் இருந்திருக்கும் என்று கூறி அங்கு வணங்கி, விழுந்து புரண்டார். இந்த பக்தியைக் கண்ட அரசன் தன்னிலையை மறந்தான். அங்கிருந்த சிறு பாலகன் ஒருவர் இவ்வாறு பாடினார்.
ஈதோ கூடல்! ஈதோ புள்ளேறி வந்தவிடம்*
ஈதோ மெய் காட்டிய கரம்பு*
ஈதோ பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான்
பல்லாண்டென்று காப்பிட்ட இடம்*
ஈதோ மெய் காட்டிய கரம்பு*
ஈதோ பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான்
பல்லாண்டென்று காப்பிட்ட இடம்*
அந்த பாடல்களைக்கேட்டு ‘ஆஹா..ஆஹா..’ என்ற பேரொலியோடு அங்கிருந்தவர்கள் எல்லாம் தொழுது நின்றனர். அப்போதுதான் அரசன் அங்கு வந்ததை அந்த வைணவ குழாம் கவனித்தார்கள். அரசன் துறவியின் கால்களில் விழுந்து வணங்கினார்.
மன்னன் தன் விருதுகள் சொல்லாமல், “அடியேன், திருமாலிருஞ்சோலை நின்றான் வாணாதிராயன்..” என்றார். அந்த பக்தி, அவரின் பெயர் எல்லாம் கண்டு மன்னர் வைணவ வழியில் வருபவர் என்று துறவி அறிந்துகொண்டார்.
அருகிருந்த வைணவ அடியார்களில் ஒருவர் துறவி பற்றி, “ஸ்வாமி, அழகிய மணவாள ஜீயர். நாங்கள் கோவிலிருந்து (ஸ்ரீரங்கம்) வருகிறோம். பாண்டிய நாட்டு திவ்ய தேச யாத்திரை போய்க்கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.
“ஸ்வாமிகளைத் தரிசித்தது அடியேன் பாக்யம். இந்த பாண்டிய மண்டலமே பேறு பெற்றது தங்களின் பொன்னடி பட்டதால். இராமானுசரின் மறு அவதாரமான மணவாள மாமுனிகளே அடியார்களோடு இங்கு வந்தது நாங்கள் செய்த புண்ணியம்.”
அரசன், தான் ஏற்கெனவே வைணவத்தில் ஈடுபட்டிருந்ததால் அவர்கள் பற்றி அறிந்திருந்தார். மேலும் அரசரின் முன்னோர் வாணாதிராயர்கள் சில காலம் முன் மதுரையில் ஏற்பட்ட அந்நிய படையெடுப்பில் அங்கிருந்த கோவில்களைப் பாண்டியர்களோடு தோள் தந்து காத்தனர்.
அப்போது அங்கு பிரதான அமைச்சரான திருமலையாழ்வார் மூலம் மீண்டும் வைணவத்தைத் தழுவினர். அவரோடு சேர்ந்து ஸ்ரீரங்கம் உத்ஸவ மூர்த்தியைக் காத்து சேர தேசம் வரை சேர்த்தனர். வாணாதிராயர்கள் சிறந்த நிர்வாகத் தலைவர்களாக பாண்டியர்களுக்கு ஆபத்துக்காலங்களில் உதவினர். பாண்டியர்கள் சார்ந்த மதத்தையே ஏற்று நடந்தனர். திருமலையாழ்வார்தான் பின்னாளில், அரச பதவியைத் துறந்து திருவாய்மொழிப் பிள்ளை என்ற நாமத்தோடு வைணவத்தை வளர்த்து இந்த மாமுனிகளைத் தன் சிஷ்யராய்ப் பெற்றார்.
“நரசிங்கத்தேவரே, இவர்கள் நம் முன்னோர் இராஜாங்க பிரதானி திருமலையாழ்வார் வழி வருபவர்கள். ஒரு வகையில் மதுரையம்பதியை பிறந்த வீடாய்க் கொண்டவர்கள். அடியார்களனைவரையும் நம் அரண்மனை அருகில் இருக்கும் அப்பன் திருவேங்கடமுடையான் மடத்தில் தங்குவதற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யுங்கள்” என்றார் அமைச்சரிடம்.
பின் மாமுனிகளிடம், “அடியேன்... ஸ்வாமிகள் சந்திவேளையில் கூடல் திருக்கோவில் மங்களாசாசனம் செய்யவேணும். அதற்குள் சிறிது இராஜ்ய விஷயம் முடித்துவிட்டு வருகிறேன்.” அவரும் ஆமோதித்து அருள, அனைவரும் செல்லத்தொடங்கினர்.
அரசன் அரண்மனை அடைந்ததும், சிறிது நேரத்தில் இளவரசனோடு மந்திராலோசனை மண்டபம் விரைந்தார். அங்கு, நரசிங்க தேவர், பஞ்சவராயர், சோழக் கோனார் போன்ற தளபதி, அரசு அதிகாரிகளும், சுந்தர சோழபுரத்து நகரத்தார், வட்டாற்று நாட்டார், பின்முடிதாங்கினார் போன்ற ஊர்த்தலைவர்களும் இருந்தனர். அரசனின் உத்தரவின் படி ஊர்த் தலைவர்களும் வந்திருந்தனர்.
‘அவையோரே... நம் நாட்டின் மீது தாக்குதல் இல்லை. ஆனாலும் நாம் இன்று சற்று வித்தியாசமான சூழலில் இருக்கிறோம். அது பற்றித்தான் விவாதிக்க இங்கு கூடியுள்ளோம். அந்நியப் படையெடுப்பில் சிதைந்து போன நம் பாண்டிய மண்டலம், கம்பண்ண உடையாரால் மீண்டு, விஜயநகர அரசர்களுக்குக் கீழ் இருந்தது. அந்தக் காலங்களில் பாண்டிய நேரடி வாரிசு இல்லாததால், பாண்டியர் மண உறவில் வந்த வாணாதிராயர்கள் பாண்டிய மண்டலத்தில் அரசரானோம். ஆனாலும் தென்காசியைத் தலைநகராய்க் கொண்டிருக்கும் கொற்கை பாண்டியர்கள் மதுரையைக் கைப்பற்ற ஏற்கெனவே போர் செய்து தோற்றனர். இப்போதும் பராக்கிரம பாண்டியன் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். இவை எல்லாம் தாங்கள் நன்கு அறிந்தது” என்றார் அரசர். “இரண்டாம் தேவராயரின் அரசியல் அதிகாரி லக்கண தண்ட நாயக்கர் அழைப்பின் பேரில் திருசிராமலையில் ஒரு கூட்டம் நடந்தது. அங்கு பாண்டியனும் வந்திருந்தார். நாங்கள் அங்கு சந்திப்போமென்று இருவருமே எதிர்பார்க்கவில்லை..”
“அரசே, இது என்ன? இருவரும் நேரில்.. தகுந்த பாதுகாப்பு இல்லாமல்.. எதுவும் விபரீதம் நடக்கவில்லையே...?” பதறினார் சோழக் கோனார்.
“அழகர் கிருபையில் விபரீதம் இல்லை. ஆனால் போய் வந்த விஷயம்தான் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருந்தது.”
“என்ன அரசே? பாண்டியர் மீண்டும் ஏதாவது..” என்று பல்லவராயர் சொல்லவும், “இல்லை.. விஜயநகர அரசு தன் ஆளுமையைக் கடல் கடந்து நீட்டிக்க விரும்புகிறது. ஈழம் வரை. ஆம்!. புது யுத்தம்.” சற்றே நிறுத்தித் தொடர்ந்தார். “அவர்கள், நம் படைகளோடு, பாண்டியப் படையும் சேர்த்துக்கொண்டு ஈழத்தைக் கைப்பற்ற நினைக்கின்றனர். ஒரு பெரும்படை விஜயநகரிலிருந்தும் வரும். இவ்வழியே ஈழம் வரை செல்லும்..”
“நாம் ஏற்கெனவே விஜயநகர் ஆட்சிக்குட்படாமல் சில காலமாய் தனியே இருக்கிறோம். ஆனாலும் சுதந்திரமாய்ச் செயல்படவில்லை. இந்தச் சமயத்தில் நாம் எப்படி அவர்கள் படையை அனுமதிப்பது, அதுவும் பாண்டிய படைகளோடு சேர்த்து?” என்றார் அமைச்சர்.
“ஆம் அமைச்சரே. அதுதான் நானும் யோசித்தேன். பாண்டியர்களும் இதற்கு உடன்படவில்லை. பின் நாயக்கரிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டேன்.”
“என்ன அரசே?” அனைவரும் திகைப்பில் கேட்டனர்.
“விஜயநகரப் படைகள் நம் மண்டலத்துக்குள் நுழையாது. இந்தப் போரில் படைகள் நம் பாண்டி மண்டலத்திலிருந்துதான் செல்லும். விஜயநகர முக்கியப் படைகள் மட்டும் வரும். தென்காசி பாண்டியர்களும் இதே போல் உதவுவார்கள். நம் படை தென்காசி தாண்டிச் செல்ல இடையூரில்லை. போரின் வெற்றிக்குப் பின் விஜயநகர அரசிடமிருந்து முற்றும் பிரிந்து பாண்டிமண்டலம் தன்னாட்சி பெறும். இதுவே சாராம்சம்.” அரசர் தொடர்ந்தார். “இப்போது கார்த்திகை மாதம். வரும் மாசி மாதத்தில் நம் படைகள் கிளம்பும். இங்கிருந்து நான் அரச நிர்வாகம் செய்வேன். இளவரசன் சுந்தரத்தோளுடையான் நம் படைகளை வழி நடத்திக் கொண்டு செல்வான். ஊர்த்தலைவர்கள் படைகளைத் தயார் செய்யும் வேலைகளைச் செய்யுங்கள்.”
அனைவரும் இதை ஒத்து தங்கள் கருத்துக்களைச் சொன்னார்கள்.
“நல்லது மன்னா. இளவரசரின் இந்த முதல் போரில் நாம் வெற்றிபெறுவோம். இந்த வெற்றியின் மூலம் நம் இளவரசரும் பாண்டிமண்டல நவ ஸ்தாபனாச்சாரியர் என்று புகழ்பெறுவார்” என்றார் அமைச்சர்.
யுத்தம் காரணமாய் மாவடை, மரவடை, பொன்வரி போன்ற வாசற்கணக்கு வரிகள் திருத்தப்பட்டன. படைகள் செல்லும் வழியில் இருக்கும் குடவர், கோவனவர், பூவிடுவார், தழையிடுவார், அணுக்கர் போன்ற பிரிவுகளுக்குத் தகுந்த உத்தரவுகள் சேர்க்கப்பட்டன. மேலும் பல முடிவுகள் எடுத்து, திருவோலை வரைவர் மூலம் ஓலைப்படுத்தினர்.
அமைச்சர் அப்பன் மடம் சென்று பார்வையிட்டு மாலையில் கூடலழகர் கோவிக்குச் சென்றார். அங்கு மணவாள மாமுனிகள், கோவிலைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்த கிருதுமால் நதியில் மாலை அனுட்டானம் முடித்துவிட்டு அடியார்களுடன் சென்று சுந்தரராஜப் பெருமானைத் தரிசித்தார். பின் அமைச்சரிடம் மன்னனின் வைணவ கோவில் கைங்கர்யங்கள் பற்றிக் கேட்டார்.
“அரசர் திருமாலிருஞ்சோலை அழகரிடம் அளவில்லா அன்பு கொண்டவர். அங்கு ஸ்வர்ண விமானம் செய்வித்து, மேலும் பல கைங்கர்யங்கள் செய்ய ஏற்பாடு செய்வித்து வருகிறார். இதற்கு திருவளவன் சோமயாஜி என்பாரை நியமித்துள்ளார். திருமாலிருஞ்சோலையில் முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியரது இராஜ்ய அதிகாரி சோலைமலைப் பெருமாள் ‘வாணாதிராயர் மடம்’ என்று ஒன்றை ஸ்தாபித்து அடியார்களுக்கு அமுது செய்வித்திருந்தார். இப்போது மன்னர் அதைப் புனர்நிர்மாணம் செய்துள்ளார். ‘பெரியநம்பி திருமாலிருஞ்சோலை நின்றான் நிருவாகம்’ என்று பல வைணவ சந்நிதிகளுக்கு நிவந்தம் தந்துள்ளார்” என்று மேலும் பல திருப்பணி பற்றி நரசிங்கதேவர் சொல்லிக் கொண்டிருந்தார். மன்னரும் சிறிது நேரத்தில் அங்கு வந்தார்.
மாமுனிகள் அடியார் குழாங்களோடு திருவோலக்கம் கொண்டிருந்தார். அவரின் சொல்வன்மையில் அனைவரும் அசையாமல் இருந்தனர். பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு பற்றி மாமுனிகள் வ்யாக்யானம் செய்து கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் மன்னர் தனியே சந்தித்து உபதேசம் பெற்றார்.
மன்னருடன், இளவரசன் சுந்தரத்தோளுடையான், பட்டத்தரசி ஸ்ரீரங்கநாயகியார், அம்மான் நீலங்கரையார் அனைவரும் இருந்தனர். அரசன் திருமாலிருஞ்சோலை கோவிலில் செய்துவரும் கருவறை, மற்றை சந்நிதி, தங்க விமான கைங்கர்யங்கள் எல்லாம் கேட்டு மாமுனிகள் மிகவும் சந்தோஷித்து, அவர்கள் அனைவரையும் மறுநாள் உதயத்தில் வரச் சொன்னார்.
மறுநாள் அரசன் வைகை ஆற்றங்கரையில் காலிங்கராயன் படித்துறை சென்று புனித நீராடி குடும்பத்தோடு கோவில் விரைந்தார். அவர்கள் அனைவருக்கும் அங்கேயே பஞ்ச ஸம்ஸ்காரங்கள்1 செய்து வைத்தார் மணவாள மாமுனி. பின்னர் அன்று பின்னிரவே கிளம்பி, கூராகுலத்தம தாசர் அவதரித்த சிறுநல்லூர், திருப்புல்லாணி, திருவழுதி நாட்டு திருக் குருகூர்2, மார்கழி நீராட்டு உற்ஸவம் திருமல்லிநாட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் என்று திவ்ய தேச யாத்திரை வழியைச் சொன்னார் மாமுனிகள். அது கேட்டு மகிழ்ந்து ஆண்டாள் நாச்சியாரின் சில பாசுர அர்த்தங்களைக் கேட்க விரும்பினான் மன்னன்.
அவரும் ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில் ‘சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ்சோலையெங்கும்..’ என்ற திருமாலிருஞ்சோலை பாசுரங்களைச் சில மணிகளில், ‘இந்த உலகமே கண்ணனின் விளையாட்டு. வீட்டைப் பண்ணி விளையாடும் அவனையே சரணடைய வேண்டும்’ என்று வெகுவாக விளக்கிச் சொன்னார். அவர்கள் யாத்திரை கிளம்பும் நேரம் வந்தது. ஆச்சாரியார் நடந்து போனால் யாத்திரை குறித்த நேரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் போக முடியாது என்று எண்ணி, பொன்னாலும், இரத்தினங்களாலுமான திருப்பல்லக்கை மன்னர் சமர்ப்பித்து கார்த்திகை மாதப் பனி தாக்காமல் பனிப் போர்வையோடு அன்று இரவே கிளம்பினர். அவர்கள் வைகை நதியை ஒட்டியே போனார்கள்.
அதிகாலை வேளை வந்ததும், ஒரு கிராமத்தில் பல்லக்கை இறக்க, மாமுனிகளும் அங்கு நதியில் நீராடி, தன் அனுஷ்டானம் செய்யும் போது, அரசன் திருமாலிருஞ்சோலை நின்றான் பல்லக்கு தாங்கி வந்த கோலத்தோடு இருப்பது கண்டு வியந்து “உறங்காவில்லி தாசரோ?”3 என்று வினவி, “நீரும் அவரைப்போல் அரச குலத்தில் வந்து ஆச்சாரிய பக்தியால் இவ்வாறு பல்லாக்கும் சுமந்து இரவெல்லாம் நடந்து வந்துள்ளீரே?” என்று அருளினார். “இந்த ஊரை தாங்கள் கடாக்ஷிக்க வேண்டும்” என்று அரசன் வேண்டியபடி அந்த ஊர்க்கு ‘அழகிய மணவாள நல்லூர்’4 என்று திருநாமமிட்டார் ஆச்சாரியார்.
மன்னரும் சந்தோஷித்து மதுரை நோக்கிக் கிளம்பினான். அவரது குரு பக்தி கண்டு அனைவரும் மகிழ்ந்தனர். மன்னரைப்போல் குடிகளும் மாறத் தொடங்கினர்.5
மதுரையில் இளவரசன் போருக்கு ஆயத்த வேலைகளைத் தீவிரமாய்ச் செய்தான். அனைத்து நாட்டுக்கும் தானே நேரில் பார்வையிட்டு வந்தான். சில நாட்களில் தூதுவர்கள் மூலம் நாயக்கரின் செய்தி வந்தது. மன்னன், இளவரசனோடு சேர்ந்து படைகளின் வியூகங்களைச் செய்தார். தென்காசி பாண்டியன் சற்றே இணக்கமாய் இருந்தான்.
இந்த வேலைகளில் ஆச்சாரியரின் யாத்திரை பற்றியும் கேட்டு வந்தான் வாணாதிராயர். அவர்கள் சற்றே தாமதத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தாலும் அங்கு, ஆண்டாள் நாச்சியார் தானே அருளி, மார்கழி நீராட்டு உற்ஸவத்தை மாமுனிகள் பொருட்டு நீடித்ததைக் கேட்டு மகிழ்ந்தான்.
தை கடைசியில் படைகள் பாளையங்களிலிருந்து கிளம்பின. நாயக்கரின் படையும் வந்தது. சுந்தரத் தோளுடையான் படைகளை நடத்திப் போனான். பராக்கிரம பாண்டியன் தென்காசி படையோடு அணிவகுத்து வந்தான். சிறுவயதானாலும் இளவரசன் வீரம், கம்பீரம் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர். ஒரு திங்களுக்கு உள்ளாகவே படைகள் இலங்கை அடைந்தன. இதை அறிந்து இலங்கை மன்னனும் போருக்குத் தாயாராய் இருந்தான். பெரும் போர் மூண்டது.
வாணாதிராயன் சாமர்த்தியமாக மற்றொரு படையை இராமநாதபுரம் கடல் வழியே அனுப்பியிருந்தார். எதிர்பாராத தாக்குதலால் இலங்கைப் படை குலைந்தது. இருந்தாலும் சில திங்கள் போர் நீடித்தது. வாணாதிராயன், இளவரசன் பற்றிய முன்னுக்குப் பின் முரணான செய்தியால் கலக்கமுற்றான். மனக்கவலை அதிகமாகிக் கொண்டே போனது. பட்டத்தரசி ஸ்ரீரங்கநாயகியாருடன் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாள் நாச்சியாரை வணங்க எண்ணினான்.
அது ஆடி மாதம்., ஆண்டாள் நாச்சியார் திருஅவதார உற்ஸவமான திருவாடிப்பூர உத்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்று மூன்றாம் நாள். ஆண்டாள் நாச்சியார் திருமல்லி நாட்டில் இருக்கும் பொன்பற்றி விழுப்பரைய நல்லூர் என்ற சுந்தரதோள் விண்ணகர்6 கிராமத்திற்கு எழுந்தருளி ஒரு நாள் முழுதும் இருப்பார். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் வருவார். வாணாதிராயர் அன்று முழுதும் காத்துக்கொண்டிருந்தார்.
ஆண்டாள் நாச்சியார் மீண்டும் வர ஸ்ரீவில்லிபுத்தூர் காலதாமதமானது. ஆண்டாளைத் தரிசிக்க முடியவில்லையே என்ற கவலையும், இளவரசர் பற்றிய கவலையும் அரசருக்கு அதிகமானது. சில நேரம் கழித்து ஆண்டாள் சகல பரிவாரங்களோடு ஸ்ரீவில்லிபுத்தூர் அடைந்தார். அரசரும் ஆனந்தமாய் தரிசிக்க, அங்குள்ள கோபுரத்தடி மண்டபத்தில் பல்லாண்டு இசைப்பாரான அரையர்கள் நாச்சியார் திருமொழியை இசை அபிநயத்தோடு சமர்ப்பித்தனர். அதுவும், வாணாதிராயர் மாமுனிகளிடம் கேட்ட ‘சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ்சோலையெங்கும்..’ என்ற திருமாலிருஞ்சோலை பதிகம்.
‘சுந்தரத் தோளுடையான்’, ‘ஏறுதிருவுடையான்’ என்று சொல்லும் போதும், ‘செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வார்களே’ என்று அரையர்கள் இசைஅபிநயம் பிடிக்கும் போதும் அரசன் தன் நிலை மறந்து கண்ணீர் பெருக்கிக்கொண்டிருந்தான். மன்னருக்குக் கோவில் மரியாதைகள் செய்யப்பட்டன.
இரண்டொரு நாட்களில் தூதுவன் மூலம் இளவரசன் பற்றிய நற்செய்தி வந்தது. பாண்டியபடைகள் வெற்றி பெற்று சுந்தரத்தோளுடையான் தலைமையில் மதுரை நோக்கி வருகின்றன. மன்னன் சந்தோஷித்து, தன் மனக்குறை தீர திருவமுது, திருமாலை, திருவிளக்கு மற்றும் நித்யபடிக்கு திரளிற் பற்றில்7 உள்ள மாங்குளம் என்ற ஊரைத் தானமாகத் தருவதாய் ஸ்ரீரங்கநாத பிரியன் என்ற திருவோலை வரைவார் மூலம் பட்டோலைப்படுத்தினார். பின்னர் அது கோவிலில் கல்வெட்டாய் எழுதப்பட்டது
‘.. சூடிக்கொடுத்தருளிய நாச்சியாற்குத் திருவாடித் திருநாள் நம் குறையறுப்பாகக் கொண்டருளும் படிக்கு இந்தத் திருநாளுக்கு வேண்டும் அமுதுபடி கரியமுது சாத்துபடி திருப்பரிவட்டம் திருமாலை திருவிளக்கும் மஞ்சள்காப்பு, கற்பூரம், குங்குமம் கண்டருளத் திருக்காப்பு சூடம் உட்பட வேண்டும் நைவேத்தியங்களுக்கும் உட்பட்ட வகைக்கு விட்ட வீர நாராயண வளநாட்டுத் திரளில் பற்றில் மாங்குடி ஆன சுந்தரத்தோள நல்லூர்... அழகர் திருவுள்ளம்....’
மதுரை வந்து சிலநாட்களில் வெற்றிக்கொண்டாட்டம் நடந்தது. மன்னர் தனியாக நாணயங்கள் வெளியிட்டார். ‘சமரகோலாகலன்’ ஒருபுறம், கருடன் மறுபுறம் என்று ஒரு நாணயமும், பாண்டிய சின்னமான மீனின் மீது கருடன் அமர்வது போலவும், கருடன், சங்கு, சக்கரம் உள்ளது போலவும் இருந்தது மற்றை நாணயங்களும் வெளியிட்டார். திருமாலிஞ்சோலை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய வைணவத் தளங்களுக்கு நிறைய கைங்கர்யம் செய்தான்.
திருமாலிருஞ்சோலை அழகருக்கு பச்சைக் கற்பூரம், சந்தனம், வாசனாதி திரவியங்கள் அரைக்க அழகிய அம்மிக்கல்லை குழவியோடு தந்தான். அதில் தம் ஆச்சாரியரான மணவாள மாமுனிகளையும், அவரின் முக்கிய எட்டு அடியார்களையும் நினைக்கும் வண்ணம், எட்டு சிங்கங்கள் தாங்கும் அந்த அம்மியின் அடியில் ‘திருமாலிருஞ்சோலை நின்றான் மாவலி வாணாதிராயர் உறங்காவில்லி (தா)ஸந் ஆன சமரகோலாகலன்..’ என்று பொறித்தான்.
மற்றைய சைவக் கோவில்களுக்கும் அநேக திருப்பணிகள் செய்ய பாண்டிய மண்டலத்தில் வைதீக மதம் மீண்டும் தழைத்தது. பின்னாளில் சுந்தர தோளுடையானும் அது போலவே பல நல்ல பணிகளைச் செய்தான். பல கோவில்களைப் புதுப்பித்தான். குடிகளும் மகிழ்ச்சியாய் இருந்தனர்.
-
அடிக்குறிப்புகள்:
No comments:
Post a Comment