Friday, November 24, 2023

ஏகாதசியும் ஏஎஸ்ஐயும்

ஏகாதசியும் ஏஎஸ்ஐயும்

நேற்று (11/23) கைசிக ஏகாதசி. மதுரையில் இந்தவாரம் ASI-யால் நடத்தப்படும் தொல்லியல் (குடைவரைக் கோவில் சம்பந்தமான) கண்காட்சிக்குப் போகலாம் என்றிருந்தேன். துவக்க நிகழ்ச்சி நடப்பது அவ்வளவு விவரமாய்த் தெரியாது.மறுநாள் தினமலர், ஸ்ரீ.கிருஷ்ணன் அவர்களின் ட்விட்டர் பக்கம், மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களின் உரை எல்லாம் பார்த்த போது தான், ச்ச மதுரையில இருந்தும் போகலையே என்று தோன்றியது. 

கைசிக ஏகாதசி என்பதால் வீட்டில் பெருமானுக்கு திருவாராதனம் முதலியன முடித்து கிளம்பினேன். ஆம், கோவிலுக்கு போவது போல, சுத்தமாய், ஏகாதசி விரதமிருந்து.. போற இடம் புனிதமானது, பாக்க போற விஷயமும் உன்னதமானது. ஆண்டாள் முதல் பாசுரத்தில் சொன்னது சொல் 'மதி' நிறைந்த நன்னாளாகப் பெற்றேன். 

இந்த கைசிக ஏகாதசிக்கு நிறைய சிறப்புகள் இருக்கு. திருக்குறுங்குடி நம்பி சன்னதியில், கைசிக பண்ணில் நம்பியைப் பாடி பாணன் ஒருவர் மோக்ஷம் பெற்றார், 'பாடிப் பறை' கொண்டு என்பது போல. 

12ம் நூற்றாண்டில் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த பாரசர் பட்டர், கைசிக புராணம் வாசித்து பெருவீடு பெற்றார். இதை குருபரம்பரை இவ்வாறு சொல்கிறது - "ஒரு கைசிக துவாதசியன்று பெருமாள் ஸந்நிதியிலே பராசர பட்டர் கைசிக புராணம் வாசித்தருளிய அழகினில் உகந்து, ‘பட்டரே உமக்கு மேல்வீடு தந்தோம்‘ என்று அருளிச் செய்ய, இவரும் ‘மஹா ப்ரசாதம்‘ என்று அங்கீகரித்தருளி பெருமாள் தம்மை விசேஷ கடாக்ஷம் செய்தருளின உபகாரத்தைச் சிந்தித்து.....திருநெடுந்தாண்டகத்திற்கு அர்த்தம் அருளிச் செய்யா நிற்கச் செய்தே ‘அலம்பிரிந்த நெடுந்தடக்கை‘ என்கிற பாட்டுக்கு அர்த்தமருளிச் செய்கிறபோது, ‘அஞ்சிறைப்புள் தனிப்பாகன்‘ என்கிறவிடத்திலே‘பறவையேறு பரம்புருடா நீ யென்னைக்கைக் கொண்டபின், பிறவியென்னும் கடலும் வற்றிப் பெரும்பதம் ஆகின்றதால்‘ என்று இத்தை இரட்டித்து அநுஸந்தித்தருளித் திருக்கண்களை மலரவிழித்துத் திருமேனியைச் சிலிர்ப்பித்துப் புன்முறுவல் செய்து....."

16ம் நூற்றாண்டு ஸ்ரீரங்கம் கல்வெட்டு ஒன்று, ஹாரீத கோத்திரத்து வேத வியாஸ பட்டர் வம்சத்தார் தந்த கொடை பற்றிச் சொல்கிறது. அன்று நம்பெருமாள் சித்திர மண்டபம் எழுந்தருளி 360 போர்வைகள் சாற்றிக்கொண்டு இருப்பார். இந்த போர்வை சாற்றுதல் அனைத்து வைணவ கோவில்களிலும் இப்போது நடைமுறைக்கு வந்துவிட்டது. கிட்டத்தட்ட அதே காலத்தில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் நிறைய கொடைகள் தந்ததாக topographigal list/கோவிலொழுகு சொல்கிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நாளில் ASI கண்காட்சி செல்வது 'யாம் பெறும் சன்மானம்'. வீட்டிலிருந்து ~40 கி.மீ தூரம். இரண்டு பேருந்துகள் பயணம். தெப்பக்குளத்திற்கு 4ம் நம்பர் போகும். அந்த காலத்துல.. என்று அம்மா சொன்னதும், எனக்கும் அதே குழப்பம், இப்போது என்ன பேருந்தோ என்று. அங்கிருந்தே நடத்துனரிடம் விசாரிக்க '4ம், 32ம் போகும் தம்பி..இங்க தான் வரும்'. அவர்காட்டிய இடத்தில் இருந்தேன், நிமிர்த்தேன்.பச்சை நிற சிக்னலுக்கு நடுவே கூடல் அழகர் கோவில் 'அஷ்டாங்க விமானம்' தெரிந்தது. ஸம்ப்ரோக்ஷணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தது. பச்சை திரைச்சீலைகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்தது. நம்ப தான் நுரைக்கே திரை கட்டிய ஊராச்சே.

சரி,இந்த அஷ்டாங்க அமைப்பு விமானத்தில் 8 உறுப்புகள் கொண்டதாய் அமையும். 6 உறுப்புகள் கொண்டது ஷடங்கம்.  "6 அங்கங்களுடன் உபபீடம், உபகிரீவம் சேர்ந்தது அஷ்டாங்கம்"என்கிறார் நாகஸ்வாமி அவர்கள். மதுரையில் கருவறை ஒன்றன் மீது ஒன்றாக 3 இருக்கும். குப்தர்கள் கோவிலில் இது போல் இருப்பதாய் படித்திருக்கிறேன்.  மஹாபலிபுரம் தர்மராஜா கோவில்,காஞ்சி வைகுண்ட பெருமாள் கோவில் இது போல் ஒன்றன் மேல் ஒன்றாக கருவறைகள் உள்ளது. அஷ்டாங்கம் ஆகம அடிப்படையில் இல்லை, கட்டிட அமைப்பில் தான் இந்த வேறுபாடு என்றும் கூறுவதுண்டு. முடிந்தால் ஸம்ப்ரோக்ஷணத்திற்குச் செல்லவேண்டுமென்று, நீண்ட காத்திருப்பிற்கு  பின் தெப்பக்குளம் நோக்கிக் கிளம்பினேன், கட்டபொம்மனைப் பார்த்துக் கொண்டே. 

கொஞ்சம் டெக்னாலஜியும் யூஸ் பண்ணலாம் என்று கூகிள் மேப் ஆன் செய்தேன். அது சைக்கிள் போகும் பாதை போல் மதுரையின் சந்துகளில் வழி காட்டியது. பேருந்து கியர் சிமெண்ட் சாக்கால் உரையிடப்பட்டிருந்தது. குறுக்கும் நெடுக்கும் நடப்பவர்கள், ட்ரை சைக்கிள் ஓட்டுபவர்கள் எல்லாம் பேருந்து ஓட்டுனரின் கோவத்திற்கு ஆளானார்கள். நடத்துனர் 'மஹால், நாயக்கர் மஹால்..' என்று ஒரு சப்தம் போட்டார். திருமலை நாயக்கர் கையில் வாளோடு, நெற்றில் வைணவச் சின்னத்தோடு ஜன்னல் வழியே காட்சி தந்தார். மஹாலுக்கும் பழம் பெருமை உள்ளது. 'ஒரு பஸ் நடுவுல இல்லை. பூராம் இந்த 2 வீலர்.. எவ்வளவு நேரம் பாருங்க சார் இங்க வரதுக்கு..' என்று இறங்கப்போகும் என்னிடம் ஓட்டுநர் சொன்னது அந்த கூகுள் மேப் அம்மணியின் குரலுக்குப் பதிலாக. 


அலைகடலென இருக்கும் குளம். நாயக்கரால் கட்டப்பட்டது. பசேல் என்று மைய மண்டபம். இராணி மங்கம்மாள் கண்ட கனவும், சிறுவயதில் தண்ணீர் இல்லாத குளத்தில் நடந்து மைய மண்டபம் சென்று, பாட்டி, அம்மா என எல்லாருடன் நாங்களும் அமர்ந்து சாப்பிட்டதும் தான் என் நினைவுக்கு வந்தது. 'நேரா போய் லெப்ட்..' என்று சென்ட்ரல் நடத்தும் கண்காட்சிக்கு வழி சொன்ன செக்யூரிட்டி காட்டிய திசையில் பழைய ஞாபகத்தில் ரைட்ல் நடந்தேன். என்னை வளர்த்த தியாகராஜர் பொறியியல் கல்லூரி போன்றே அமைப்பு. தனியாக ஒரு அரங்கம். 

வழக்கமான அரசு கண்காட்சியில் இருக்கும் பெரியவர்களின் படங்கள் நம்மை வரவேற்கவில்லை. மாறாக 1000 வருடங்கள் பின்னால் சென்றது போன்று இருந்தது. துவார பாலகர்களின் சிற்பங்களோடு நுழைவு தூண்கள். உள்ளே, கையில் கரும்போடு மகிபாலன்பட்டி பிள்ளையார், அவர் பற்றிய குறிப்பு. பின், இந்திய குடவரை, தமிழக குடவரை, தென் தமிழக குடவரை என்று பகுத்து சிறப்பான விளக்கத்தோடு படித்துக் கொண்டே தொடர்ந்தேன். 

ASI ஆய்வாளர் திரு.முத்து அவர்கள் வந்து சிலவற்றை விவரித்தார். யாரோ ஒருவர் என்னுடைய கிராமம் நக்கீரர் பிறந்த ஊர் என்று தவறாய் போர்டு வைக்க, அதற்க்கு என்னுடைய RTIக்கு ASI விளக்கம் தந்ததும் பற்றிச் சொன்னேன். அதற்குள் நாயக்கர் கட்டிடக்கலை, மதுரை - ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழியிலுள்ள மண்டபங்கள், என் கிராமத்தில் உள்ள மங்கம்மாள் சாலை, பெரிய மேடு இத்யாதி என்று பேச்சு நீண்டது.கல்லூரியில் பயிலும் மேலும் இருவர் வர, நான் நகர்ந்தேன். 

குடுமியான் மலை., ஆஹா. அமைச்சர் சொன்ன அந்த இசைக்கல்வெட்டு பற்றி படத்தோடு, 'எட்டிற்கும் ஏழிற்கும் இவை உரிய' என்று கடைசி வரி, அதற்குரிய விளக்கம். வீர வைணவன் அல்ல, இருந்தாலும் எனக்கு என்னமோ 'அஷ்டாசரம் ஏழு உலகத்திற்கும் உரியது' என்றே தோன்றியது :).



தொடர்ந்து கீழ குடைவரைக்கோயில் (திருச்சி), மலையக்கோயில் (புதுக்கோட்டை), பிள்ளையார்பட்டி, திருவெள்ளறை, திருப்பைஞ்ஞீலி (திருச்சி), தான்தோன்றிமலை, மலையடிப்பட்டி கோவில்கள், குண்ணாண்டார் கோவில், நார்த்தாமலை, அரிட்டாபட்டி, மாங்குடி, திருக்கோகர்ணம் என்று போய்க்கொண்டிருந்தேன். என்னையும் மறந்து அந்த இடங்களுக்கே சென்றது போல் இருந்தது. திடீரென்று ஒரு பறவை தூது சென்றது போல் இருந்தது.. அட ஆமாம், 'மெய்யானை மெய்ய மலையானை, சங்குஏந்தும் கையானை ' என்று திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த 'திருமெய்யம் குடவரை'."விடலையைச் சென்று காண்டும் மெய்யத்துள்ளே" என்று ஆழ்வார் சொல்கிறார். அதாவது 'இப்பாலையான பூமியைத் தனக்கு இருப்பிடமாக்கினபடியாலே பாலைநிலமான ஸம்ஸாரத்துக்குத் தலைவனானவனை' என்று பெரியவாச்சான் பிள்ளை வியக்காயனம் செய்கிறார். இவற்றை மனதில் அசைபோட்டுக்கொண்டு நகர்ந்தேன். அப்போதே நேரம் 5யை நெருங்கிக்கொண்டிருந்தது. பாறைக்குளம், அயன்குடி, தேவர்மலை, பிரான்மலை, திருக்கோளக்குடி,குன்றக்குடி, மாங்குளம், குன்னத்தூர்,  திருப்பரங்குன்றம், ஆனைமலை, செவல்பட்டி என்று வேகமாக நடந்தேன். 





அதற்குள் பள்ளி மாணவர்கள் இருவர் வர, அவர்களுக்கு சில குடவரை பற்றி விளக்கினேன். விஷ்ணு அருகில் கருடன் நின்று வணங்குவது போன்ற சிற்பம், அதற்கான மாதிரி இவற்றைக் காட்டி சொன்ன போது அவர்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஆழ்வாரின் (தலைவி) தூதுவனாக தலைவனிடம் கருடன் வந்தது போலவே எனக்குத் தெரிந்தது. கருடன் முகத்தில் அவ்வளவு பவ்யம். எனக்கு ''பொன்னுலகாளீரோ.." (6-8-1) என்ற திருவாய்மொழியில்  'நன்னலப் புள்ளினங்காள்..' என்ற சொல் தான் நினைவிற்கு வந்தது. புள்ளினங்காள் என்று ஆழ்வார் பொதுவாகச் சொன்னாலும் நன்னலம் என்பதால் ஞான-அனுஷ்டானம் நிரம்பப்பெற்ற (ஆசார்யன்) என்று சொல்லலாம். அது இந்த கருடனுக்குப் பொருந்தும். இந்த குடவரை ஆழ்வாரின் வாக்கின் படியே 'கருடன் விடு தூதாய்' அமைந்தது போலும். (புள் - கருடன் -புள்ளரையன் கோவில்) 




நடுவில் கல்வெட்டில் படி எடுப்பது பற்றிய விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தார் திரு.பழனிகுமார் அவர்கள்.பள்ளி மாணவர்கள் தானும் செய்ய வேண்டும் என்று ஆர்வமாய் கை நீட்டினர். 3D ஹோலோகிராம் மூலம் சித்தன்ன வாசலுக்கே அழைத்துச் சென்றனர் ASI குழுவினர். நானும் உணர்ச்சி வசப்பட்டு சித்தன்ன வாசல் தூணை தொடச் சென்றேன், அது அலங்காநல்லூர் பள்ளி ஆசிரியர் என்று குரல் வந்தது. சில மாணவர்கள் அங்கு நடந்த கட்டுரைப்போட்டி முடித்துக்கொண்டு வந்தனர். 



விட்ட இடத்திருந்து மீண்டும் தொடர்ந்தேன்.என் தோற்றத்தைப் பார்த்து வெளிநாட்டவர் என்று நினைத்தார் போல ஒரு மாணவன். என்னருகில் ஓடி வந்து ' திஸ் ஸ் அவர் தமிழ் கல்ச்சர்' என்று ஆங்கிலத்தில் அந்த குடைவரை படங்களைக் காட்டி உணர்ச்சிப் பெருக்கோடு சொன்னார்.'தம்பி நானும் தமிழ் தான்பா..' என்று சொல்ல இருவரும் சிரித்துக்கொண்டே நகர்ந்தோம். 

அனைத்து குடவரை படங்களிலும் அது எவ்வாறு உருவாக்கப்பட்டது என்று structure, க்யூஆர் கோட், அந்த இடத்தை பற்றிய மேப், தேவையான இடங்களில் சங்ககாலப் பாடல், அந்த கோவிலில் சிறப்பு அம்சம் பொருந்திய ஒன்று என்று பெரிய விளக்கங்கள், அந்த குடவரை போலவே மாதிரிகள் எல்லாம் கண்டிப்பாக பொறுமையாகப் பார்க்க வேண்டியது. அவசரத்தில் புகைப்படம் எடுத்து வந்தேன், மெல்ல அசை போட. கொஞ்சம் archeology படித்தும் மதுரையில் இது பற்றி விவாதிக்க நண்பர்கள் இல்லை என்று நினைத்தேன். அங்கிருந்தவரிடம் கூறிய போது சில குழுக்கள் பற்றிச் சொன்னார். எனக்கு அது சரியான குழுவா என்று கணிக்க முடியவில்லை. ASI இது போன்றவற்றில் கொஞ்சம் அதிகம் கவனம் செலுத்தி,மாவட்டம் தோறும் சில 'நல்ல' குழுக்களை உருவாக்கலாம். 






வெளியில் 'சார் டீடைல் பீட் பேக் வேணும்' என்று தெலுங்கிலும், மலையாளத்திலும் கலந்த ஆங்கிலத்தில் ASI நண்பர்கள் சொன்னார்கள். எழுதிக் கொடுத்து வெளியே வந்தேன். வாசல் தெப்பக்குளத்தில் சிரசு வெட்டப்பட்ட நந்தி சிலை இருந்தது. காதலர்கள் அமரும் வகையில் அருகில் இரும்பு நாற்காலிகள். முகத்தை மூடியபடி இருவர். 

பேருந்தில் ஏறினேன். ' திஸ் ஸ் அவர் தமிழ் கல்ச்சர்' என்று குடைவரைக் கோவில்களைக் காட்டி அந்த மாணவன் சொன்னதே என் காதுகளில் ஒலித்தது. அவ்வாறு சொல்ல வைத்த ASI, மத்திய அரசு, மாண்புமிகு அமைச்சர் ஸ்ரீமதி. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும், TS.கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றிகள். ஊர்கள் தோறும் இது போல் நடத்த வேண்டும் என்பதே தமிழர்களின் வேண்டுகோள்.








No comments:

Post a Comment