போது அவிழ் தளவமொடு பிடவு, அலர்ந்து கவினிப்
பூ அணி கொண்டன்றால் புறவே
பேர் அமர்க்கண்ணி! ஆடுகம், விரைந்தே. (ஐங்குறுநூறு-412)
இயற்கையை விட்டு நாமும் தள்ளி வந்து கொண்டிருக்கிறோம். நம் நாட்டில் என்னென்ன பூக்கள் இருந்தன என்று சங்ககாலப் பாடல்கள் மூலம் தான் அறியலாம். கடைகளில் காண்பது கொஞ்சம் சிரமம் தான்.
Onsite வந்ததிலிருந்து கோஷ்டி - திவ்யப்ரபந்தம் எல்லாம் கொஞ்சம் குறைந்துவிட்டது.சேரி., நம்ப ஆத்துல இருக்கற கிருஷ்ணன் ஒம்மாசிக்காவது ஏதாவது பண்ணலாம்ன்னு 5 நாள் உற்சவம் ஆரம்பித்தோம். தினமும் 100 பெரியாழ்வார் திருமொழி. இன்றோடு 3 நாள், 3ம் பத்துடன் முடிந்தது. தினமும் பெரியாழ்வார் என்னை அழவைக்காமல் விடுவதில்லை என்று பாட்டு எழுதியிருக்கிறார். 'வெண்ணை அளைந்த குணுங்கும்' என்று வெண்ணைப் பிரசாதம், பூச்சூட்டல், காப்பிடல்.. அப்பப்பா!. ஆத்தில் பிறந்தக் குழந்தைக்குக் கூட இப்படிப் பார்த்து பார்த்துப் பண்ணுவோமான்னு தெரியல. அதனால தான் 'பொங்கும் பரிவாலே பட்டர் பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர்'.
நான் சிறுவயதில், திருமங்கலத்தில் இருந்தபோது ஆழ்வார்கள் பன்னிருவர் என்று மட்டும் தெரியும். திருப்பாவை-பல்லாண்டு (2 பாட்டு மட்டும்) தெரியும். அப்போது local கோவில்ல 'கிஷ்டு கானம்' கேசட் போட்டு speakerல connect பண்ணுவா. அதுல வர - புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே, கோகுலத்தில் ஒரு நாள் ராதை, ஆயர்பாடி மாளிகையில் இவை எல்லாம் தான் எனக்குத் தெரிந்த பெருமாள் பாடல்கள் (கிட்டத்தட்ட ஆழ்வார்க்கு ஒப்பாகா நினைத்திருக்கிறேன்).
பின்னர் ஒரு நாள், திரளி கோவில் திருவோண உற்சவத்தில் ஏதோ ஈர்ப்பு ஏற்ப்பட்டு திருவாய்மொழி புஸ்தகம் எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். இப்போது படிக்கத் தொடங்கியிருக்கிறேன். கொஞ்சம் முன்னேற்றம். ஏதோ அவர் பக்கம் கொஞ்சம் என்னை இழுத்திருக்கிறார். (காந்தம் போல). 2 வாரமா நம்ப ஸ்ரீகுமார், ரங்கா ஸ்ரீநிவாசன் (http://rangasrinivasan.blogspot.com), புருஷோத்தமன் எல்லாம் தினமும் 10 mail .ஒரே சத் விஷயங்கள் தான். இங்க இருக்கப்போற கொஞ்ச நாட்களுக்கு நல்ல சத்-சங்கம் கிடைத்தது மகிழ்ச்சி. விஷயத்துக்கு வரேன்.
பெரியாழ்வார் புஷ்பக் கைங்கர்ய செய்ததால் தானோ அவரின் பாடல்களில் நிறைய பூக்கள் பற்றிய செய்திகளைக் காணலாம். யாராவது மலர்கள் பற்றி Phd பண்ணனும்னா இந்தத் திருமொழில வர பாடல்களைக் கொஞ்சம் படித்தால் போதும். இன்று படித்த பாடல்களில் 'காயா மலர்' என்று அறிமுகம் செய்கிறார். நீல நிற மலர். ஆதலால் அதை கண்ணனின் நிறத்திற்கு ஒப்பிடுகிறார். மற்ற ஆழ்வார்களின் பாடல்களில் காயா மலர் பற்றிக் கூறப் படவில்லை (நம்மாழ்வார் மட்டும் சொன்னதாக ஞாபகம்).
இந்தப் பாடலைப் படிக்கும் போது 'அழகர் கோவில் -அழகர் வர்ணிப்பு பாடல்கள்' நினைவுக்கு வந்தது. நான் சிறுவயதில் கேட்ட அந்தப் பாடல்களில் 'காயாம்பூ வண்ணா' என்று வரும். இறைவனைத் தங்களுக்குள் இருத்தும் ஒருவகை நாட்டுப் புறப் பாடல். அழகர் கோவில் பிராகாரங்களில் கிராமத்து மக்கள் கூட்டாக அமர்ந்து இதைப் பாடிக் கேட்டிருக்கிறேன். பாடும் சிறிது நேரத்தில் அருள் வந்து , குறி கூறுவார் பாடுபவர்!.
காயா மரம் முல்லை நிலத்தில் வளரும். முல்லை நிலத் தலைவன் திருமால்.அந்த மலர் நிறத்தில் கண்ணன் இருப்பது வியப்பில்லை. 'கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும்' என்று சொல்லும் பெரியாழ்வார் அப்படி உவமைப்படுத்திச் சொன்னதும் வியப்பில்லை.
அஞ்சுட ராழிஉன் கையகத் தேந்தும் அழகாநீ பொய்கை புக்கு
நஞ்சுமிழ் நாகத்தி னோடு பிணங்கவும் நான்உயிர் வாழ்ந்தி ருந்தேன்
என்செய்ய என்னை வயிறு மறுக்கினாய் ஏதுமோ ரச்ச மில்லை
கஞ்சன் மனத்துக்கு உகப்பன வேசெய்தாய் காயாம்பூ வண்ணம் கொண்டாய். (பெரியாழ்வார் 3-3-6)
ஆரம்பத்தில் சொன்ன, ஐங்குறுநூறு என்ற எட்டுத் தொகை நூலில் முல்லை திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது போல ஒரு பாடல். அதிலும் இந்த காயா மலர் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
பெரியாழ்வார் பல பூக்களை பற்றிச் சொல்லிருக்கிறார். விரிவாக எழுத வேண்டும்.
"அவியுணா மறந்து வானவ ரெல்லாம் ஆயர் பாடி நிறையப்புகுந்து ஈண்டி
செவியு ணாவின் சுவைகொண்டு மகிழ்ந்து கோவிந்த னைத்தொடர்ந்து என்றும்வி டாரே." (3-6-7).
வள்ளுவரின் 'சிறிது வயிற்றிக்கும் ஈய்யப்படும்' என்பது கூட இதிலிருந்து வந்திருக்கலாம்.
அவரின் பிள்ளைத் தமிழும் அபாரம். அவர் தான் முதலில் பிள்ளைத் தமிழ் என்ற செய்யுளைத் தொடங்கினார். இன்னும் பல உருக்கமான பாடல்களோடு இன்றைய 3ம் திருமொழியை முடித்தேன்.