நிறை கடல் முகந்து உராய், நிறைந்து, நீர் துளும்பும் தம்
பொறை தவிர்பு அசைவிடப் பொழிந்தன்று, வானம்;
நிலம் மறைவது போல் மலிர் புனல் தலைத் தலைஇ,
மலைய இனம் கலங்க, மலைய மயில் அகவ,
மலை மாசு கழியக் கதழும் அருவி இழியும் (1 – 5)
புகை, பூ, அவி ஆராதனை, அழல், பல ஏந்தி,
நகை அமர் காதலரை நாள் அணிக் கூட்டும்
வகை சாலும், வையை வரவு. (11-13)
வைகையில் வரும் வெள்ளம் பற்றிப் பரிபாடல் என்ற சங்க நூல் கூறுவது.
"பிள்ளையார் மேடு ஆத்தங்கரைல குளிச்சிட்டு வர இவ்வளவு நேரமா? தளிகையாக இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும். பெருமாள் சேவிசிட்டு வாங்கடா. செல்லம்மாகிட்ட தயிர் வாங்கி வச்சிருக்கேன். கொஞ்சம் பழேதும் , மலை வடு, நார்த்தங்கா போடறேன். இப்போதைக்கு சாப்பிடுங்கோ. மத்யானம் தளிகை சாப்டலாம்" - இது எங்களுடைய சிறு வயதில் மதுரை-துவரிமானுக்கு விடுமுறைக்கு செல்லும் போது என் பாட்டியிடமிருந்து சொல்லும் வசனங்கள். அப்போது எல்லாம் (வெறும் 10-15 வருஷம் முன்னாடி தான் :( ). நாங்க வைகைல போய் தான் குளிப்போம்.
ஆண்-பெண் என்று தனியாக ஆற்றங்கரை. 'பிள்ளையார் மேடு' எனப்படும் எங்கள் வீட்டின் கொல்லைபுறம் உள்ள ஆற்றங்கரை சற்று மேடானது. ஒரு பிள்ளையார் சிலை இருக்கும். வெள்ளம் வரும் போது ரோட்டிற்க்கே வைகை வருவாள். போகும் வழியில் இருபுறமும் தென்னை மரம் , இலவம் பஞ்சு மரம், ஆற்றங்கரையில் நாணல், ஊமத்தம் பூ , காட்டுச் செடிகள் எல்லாம். பளிங்கு போல் ஆற்று நீர். வெள்ளத்தின் போது சற்றே செம்மண் நிறத்தில். அங்கு தான் பல் தேய்ப்பது , காலைக் கடன் , குளியல், சந்தியாவந்தனம் எல்லாம். முடித்துவிட்டு வீடு வர 10 மணி ஆகும். (பாட்டிகாலை 6 மணிக்கே ஆற்றங்கரை போய்விட்டு வந்திடுவாள்)அப்போது தான் மேல சொன்ன டயலாக் ஒலிக்கும். அப்படியே வாழ்க்கை இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. :(.
அக்ரஹாரத்தின் கடைசியில்/முதலில் ரெங்கராஜ பெருமாள் சந்நிதி. நின்ற திருக்கோலம்-இரண்டு நாச்சிமார்களுடன். அதனருகில் அழகியசிங்கர் பிருந்தாவனம். 40-வது பட்ட ஜீயராக இருந்தவர் ரங்கநாத சடகோப யதீந்திரதேசிகர். 1913 ஏப்ரலில் அகோபிலமடத்தில் பட்டம் ஏற்றுக் கொண்டார். அக்காலத்தில் அகோபிலம் ஷேத்திரத்திற்கு யாரும் போவதில்லை. மந்திரசித்தி கற்ற இவர் அங்கிருந்த பிரம்மராட்சஷர், ஜடாமுனிகளை விரட்டினார். இதன்பின், பக்தர்கள் அகோபிலம் வந்து நவ நரசிம்மரை வழிபடத் தொடங்கினர். 1923ல் யாத்திரையாக வந்து மதுரை கூடலழகரைத் தரிசித்தார். அப்போது துவரிமான் பகுதியில் தங்கியபோது நோய்வாய்ப்பட்டார்.1923 ஜனவரி 14ல் பரமபதம் அடைந்தார்.அங்கு பிருந்தாவனம் எழுப்பப்பட்டது.இன்றும் மேற்ச்சொன்ன நம்பிக்கையோடு பலரும் வந்து அவருடைய பிருந்தாவனத்தில் வணங்கிச் செல்கின்றனர்.பலரும் மிளகு வைத்து வணங்கி அதை மருந்தாகச் சாப்பிடுகின்றனர்.
என்னுடைய தாத்தா -கோவிந்தையங்கார், அவருடைய அண்ணா-சுந்தராஜயையங்கார் ,அவர்களின் முன்னோர்கள் எல்லாம் அர்ச்சகர்களாக இருந்து பல ஆண்டுகள் வாழ்நாள் இறுதி வரை கைங்கர்யம் செய்துள்ளனர் இந்தக் கோவிலில். நானும் விடுமுறைக்குக் செல்லும் போது முடிந்ததைச் செய்வேன்.
சரி, விஷயத்திற்கு வரேன். செல்லம்மா என்ற அந்த பாட்டி பசு-எருமை தயிர்ன்னு தனி-தனியா கொண்டுவருவாள். அழகர் கோவில், புல்லூத்து (துவரிமான் அருகில் இருக்கும் ஒரு சிறு அருவியோடு சேர்ந்த காடு) இங்கெல்லாமிருந்து மாவடு வரும் -உருட்டு வடு மற்றும் கிளி மூக்கு வடு என்றெல்லாம். அது தான் ஊறுகாய்- மாசி மாதம் தொடங்கி அந்த வருடம் முழுதும். காலை சமையல் நேரமானால் பழைய சாதம்-மா வடு தான். ஆஹா! அதற்க்கு ஈடு -இணை எந்த உலகத்து உணவுக்கும் வராது. சில சமயம் அதனோடு மாம்பழம்!
அந்த வாழ்க்கைப் பற்றி சொல்ல தனியாக ஒரு blog வேணும். இன்று அந்த வைகையும் இல்லை-அந்த வாழ்க்கையும் இனி வராது. இயற்கையோடு இயைந்த வாழ்வு , காலையில் குளிப்பது, நாமே துவைப்பது, குளித்த பின் நம்மைப் படைத்த இறைவனுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்குவது , பிறகு உண்பது, இயற்கையாய் விளையும் பொருட்களை உண்பது இது போன்ற பலவற்றைக் கற்றுக் கொடுத்தது. இன்று வரை அப்படியே இருக்கிறேன்.
அப்போதெல்லாம் பசித்துப் புசி- குளித்துக் குடி-கசக்கிக் கட்டு இது போன்ற சங்க காலப் பாடல்கள் தெரியாது-எல்லாம் நம் வாழ்வோடு கலந்திருந்ததால்!. இவை எல்லாம் இக்கால சிறுவர்களிடம் குறைவது கொஞ்சம் வருத்தமே. அது இருக்கட்டும்.அந்த நேரத்தில் வைகை பற்றி ஒரு கவிதைப் போட்டி. 'கடலைச் சேராத வைகை நதி' என்ற தலைப்பில் DD-தமிழ் channelக்கு மரபு கவிதை எல்லாம் எழுதியிருக்கிறேன்.(இன்றும் வைகை கடலைச் சேர்வதில்லை நேரடியாக. இராமநாதபுரம் பெரிய கண்மாய் தான் அது சேருமிடம்) வைகை என்ற ஒரு நதியே இன்னும் கொஞ்ச காலத்தில் இல்லாமல் போகும். மணல் மாபியா, ஆக்கிரப்புகள்! உண்மையிலேயே இராமநாதபுரம்-RSபுரம் பெரிய கண்மாய் கூட சேராது! பரிபாடல் வரிகளை மீண்டும் படித்தேன். இயற்கையை விட்டு நாமும் விலகி வந்துவிட்டோம். இயற்க்கை நம்மை விலக்கவில்லை!
No comments:
Post a Comment