Saturday, March 1, 2025

தாள்பற்றக் கனாக் கண்டேன்

 தாள்பற்றக் கனாக் கண்டேன்     

பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. 'கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான் கனை இருள் அகன்றது காலை அம்பொழுதாய்' என்று ஆழ்வார் சொன்னது போல் திருவரங்க மாநகரில் இருளை அகற்றும் தூய சுடராய் இல்லை.சோழனின் அகஇருள் இன்னும் சூழ்ந்து கொண்டு தான் இருந்தது. கோவில் யானை எந்த ஆரவாரமும் இல்லாமல் கீழை வாசல் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கோவிலின் ஸ்தலத்தார்கள், வைணவர்கள் கோவிலுக்குள் செல்ல, விஸ்வரூபம் நடக்கவிருந்தது. வடகாவிரியின் நீர்ப்போக்கை எதிர்த்து ஒரு சிறு ஓடத்தின் மூலம் வந்த இருவர் உத்தர வீதிகளில் நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களின் பார்வை அங்கு நடக்கும் தினசரி விஷயங்களில் சென்றது. அவ்வளவு உற்சாகமாக நடக்கவில்லை என்று அவர்களால் யூகிக்க முடிந்தது. இராமானுஜரும், கூரத்தாழ்வானும் ஊரில் இல்லாத காலம். முதலியாண்டான் நியமித்த சிலர் மட்டும் கோவில் நிர்வாகத்தை நடத்தி வந்தனர். தலைவனைப் பிரிந்த தலைவி போல் அவர்களும் மிகவும் வருந்திக் காணப்பட்டனர்.மிகவும் இளைய பிராயத்தவரான கந்தாடை ஆண்டான் அன்று அங்கு வந்திருந்தார். ஓடத்திலிருந்து வந்த இருவரும் அவரைச் சந்தித்துப் பேசிச் சென்றனர். அன்றிரவு திருவரங்கத்திலிருந்து கிளம்பிய அவர்கள் மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம் சென்று அங்கிருந்தவர்களிடம் ஆலோசனை செய்துவிட்டு மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தை அடைந்தனர்.

அது ஹொய்சாள தேசத்தின் மலைப் பகுதி. வேலபுரி என்ற பேலூருக்கு அருகில் இருந்த ஒரு குகைப் பகுதி. பெரும்பாலும் மக்கள் அதிகம் கூடாத இடமாகவே இருக்கும். அதிலிருந்தது தான் சில முக்கிய அரசாங்க தீர்மானங்கள் எடுக்கப்படும். சில மைல் தூரத்தில் சென்ன கேசவப் பெருமாள் கோவில் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. ஏராளமான சிற்பிகளும், மக்களும் தங்கள் பங்களிப்பைத் தந்து கொண்டிருந்தனர். எம்பெருமான் ஸ்ரீ கிருஷ்ணருக்கே உரிய கோவிலாக அது உருவாகி, சில திங்களில் ஸம்ப்ரோக்ஷணம் நடக்கவிருந்தது. அதற்குள் சில திட்டமிட்ட வேலைகளை முடிக்க எண்ணியிருந்தார் ஹொய்சாள பேரரசின் மன்னர் ஸ்ரீ விஷ்ணுவர்தன். அவருக்குத் தண்டநாயகமாக, தளபதியாக இருந்தது கங்கராஜன். மிகச் சிறந்த வீரர் என்பதை விட, விவேகத்தோடு சில சாமர்த்திய முறைகளைக் கையாண்டு வருபவர். அவரின் அழைப்பின் பெயரில் தான் அந்த இருவர் அங்கு வந்திருந்தனர். 

குதிரையின் குளம்படி சப்தம் கேட்டு, நாகனும், நரசிங்கனும் ஆயத்தமானார்கள். ஆஜானுபாகுவான, நல்ல உயரமான கம்பீர தோற்றத்துடன் கங்கராஜன் அங்கு வந்து சேர்ந்தார். மூவரும் அங்கிருந்த மண்டபத்திற்குச் சென்றனர்.

'சென்ற வேலையெல்லாம்..' என்று ஆரம்பித்தார் கங்கராஜன்.

'மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஸ்ரீரங்கம் சென்றோம். அங்கு சோழர்களின் நிர்பந்தம் குறைந்தபாடில்லை.நகரமே ஆச்சாரியார் இல்லாமல் சோபை இழந்து இருக்கிறது. ஆயினும், குலோத்துங்கன் சற்று உடல் நலம் குன்றியிருப்பதாகத் தெரிகிறது.' என்றார் நரசிங்கன்.

'விக்ரமன்..'

'நம் தேசத்திலிருந்து அங்கு செல்ல இருப்பதாகத் தெரிகிறது'

'சரி தான்' என்று ஏதோ யோசித்துத் தொடர்ந்தார் கங்கராஜன்.

'ஸ்ரீரங்கத்தில் கோவில் நிர்வாகம் எல்லாம்?'

'தடையின்றி நடக்கிறது என்று தான் ஆண்டான் சொல்கிறார். ஆனாலும் அரச நிர்பந்தங்கள் அதிகமாகி, கோவிலின் வரவு, வரி எல்லாம் சரியாக வருவதில்லை. நாங்கள் பார்த்தவரை வைணவர்கள் சேர்ந்து இந்த இக்கட்டான நிலையைச் சமாளிப்பதாகத் தெரிகிறது. நம் அரசர் மூலம் ஒரு தீர்வு வந்தால் நல்லது.'

'அதனால் தானே நாம் இங்கிருக்கிறோம்' என்று தளபதி சொல்லிக்கொண்டிருந்தபோதே மற்றொரு குதிரையின் சப்தம் கேட்டது.

'ஆ! அரசரா?' என்று மூவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

'மன்னா, தாங்கள் இங்கு வருவதாக தகவல் இல்லையே. நீங்கள் உத்தரவிட்டால் நாங்களே வந்திருப்போம்' என்றார் தளபதி.

முகத்தோடு மூடியிருந்த துணியையும், மேய்ப்பவர் அணியும் தலைப்பாகையையும் அவிழ்த்தார்.உதிக்கும் காலைக் கதிரவன் போன்ற நிறம், நெடுமால் என்று சொல்லும் அளவிற்கு நெடிய உயரம், நெற்றியில் வைணவச் சின்னங்கள்.என்னதான் தன்னை வேடம் போட்டு மறைத்துக் கொண்டாலும் பெயருக்கு ஏற்றாற்போல் தனியாகக் கண்டு கொண்டுவிடலாம் என்ற தோற்றப் பொலிவு கொண்டிருந்தார் மன்னர் விஷ்ணுவர்தன். ஹொய்சாள சாம்ராஜ்யத்தின் நிகரற்ற மன்னனாக ஆட்சி செய்து வருவதோடு, கட்டிடக் கலையில் மிகுந்த ஆர்வத்தோடு, பலரும் போற்றும் வகையில் கற்றளிகளைச் சமைத்து வருகிறார். முக்கியமாக வேலபுரியில் இருக்கும் சென்ன கேசவர் கோவில், பீமா நதிக்கரையில் பண்டரிபுரம் கோவில்.

'இருக்கட்டும் தளபதியாரே. சென்ன கேசவர் கோவிலின் கட்டுமான வேலைகளின் நடுவில், இவர்கள் இருவரும் இவ்வழி சென்றதைக் கண்டேன். கண்டிப்பாக ஏதாவது முக்கியச் செய்தி இருக்கும் என்று நினைத்து இங்குவந்து சேர்ந்தேன்.' என்றார் மன்னர்.

'! மன்னரிடமிருந்து யாரும் தப்பிக்கமுடியுமா?. இவர்கள் திருவரங்கம், மேலைக் கோட்டையிருந்து வருகின்றனர்.'

'அங்கு நிலைமை எப்படி இருக்கிறது? ஆச்சாரியர் நலம் தானே?'

'ஆம் மன்னா. ஆச்சாரியர் இராமானுஜர் நலம். கல்யாணி புஷ்கரணி என்ற மிகப் பெரிய ஏரியை கட்டி முடித்துவிட்டார்.அருகிலுள்ள கிராமங்களில் சென்று நம் தர்மத்தை வளர்த்து வருகிறார். ஆனாலும் திருவரங்கம்  என்றதும் மூர்ச்சையாகி விடுகிறார்.'

இதைக்கேட்ட மன்னனின் கண்களில் குளம் போல் ததும்பியது.

'ஆச்சாரியர் நம் தேசத்தில் இருப்பது நமக்குத் தான் பெருமை. ஆனாலும், இப்படியொரு சந்தர்ப்பத்தைக் கொண்டு அவர் இங்கு வந்திருப்பது தான் கவலையாக இருக்கிறது. அவர் என்னை ஆட்கொண்டது, இதோ இந்த சென்ன கேசவர் கோவில் அருகில் தான். அப்போது வட தேச யாத்திரை முடித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார். நானோ புறச்சமயத்தைப் பின்பற்றி வந்தேன். மற்றைய மதங்களை எல்லாம் வெறுத்தும் வந்தேன். அவரின் தரிசனம் கிடைத்த பின் தான் என் உள்ளம் மாறியது. என் பேரும் கூட. பிட்டி தேவர் என்ற சமண பெயர் விஷ்ணுவர்தன் என்றும் மாறியது. வைணவ  நல்லொழுக்கங்களின் மூலம் அனைவரையும் நேசிக்கத் தோன்றியது. அப்போது ஸ்ரீராமானுஜர், ஸ்ரீபாஷ்யம் என்ற உயர்ந்த உரை எழுதிக் கொண்டிருந்தார் எனக்கும் நல்விஷயங்களைச் சொன்னார்.

ஒரு வைணவப் பண்டிதரிடம் 'இறைவன் எவ்வாறு இருக்கிறான்? நாம் எப்படி தரிசிக்கலாம்? என்று கேட்டேன்'. அதற்க்கு அவர், நம்மாழ்வார் இயற்றிய ஒரு பாசுரத்திற்கு ஸ்ரீராமானுஜர் தந்த ஒரு விளக்கத்தைச் சொன்னார்.

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தி,  தாமரைக் கண்ணன்என் நெஞ்சினூடே
                புள்ளைக் கடாகின்றஆற்றைக் காணீர், என்சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்
                வெள்ளச் சுகம்அவன் வீற்றிருந்த, வேத ஒலியும் விழா ஒலியும்
                பிள்ளைக் குழா விளையாட்டுஒலியும்  அறா, திருப்பேரெயில் சேர்வன் நானே! 

 இதில்  ஆழ்வார் பராங்குசநாயகி என்ற பெண் பாவனையில், தாய்மாரும், தோழியும் தடுத்தாலும், திருப்பேர் சென்றே தீருவேன் என்று துணிந்து செல்கிறார். அவ்வாறு செல்லும் அவளின் நெஞ்சினுள்ளே அந்தந்த ஸ்வரூபத்தோடு கண்ணன் இருக்கிறான் என்கிறார் ஆழ்வார். நான் கேட்ட கேள்விக்கு அந்த வைணவர் இராமானுஜர் சொன்னதாகச் சொன்ன பதிலும் இதுவே. ஆனால் அதுவே அவரை உபாசனை செய்பவர்கள் எளிதில் அறிய விக்கிரஹ வடிவமாய் இருக்கிறார் என்று எம்பார் சொன்னதாகவும் அந்த வைணவர் சொன்னார். அதன் பிறகு தான் சென்ன கேசவனைக் கூட எவ்வாறு தரிசிக்க வேண்டுமென்று தெரிந்து கொண்டேன். ஒரு நிமிஷம் மூர்ச்சையாகி, பின் தெளிந்து அடுத்தகட்ட விஷயங்கள் பற்றி ஆலோசனை செய்து சில தகவல்களைச் சொல்லிச் சென்றார்.

சில தினங்களில் சோழர் ஆக்கிரமிப்பில் இருந்த கங்கவாடி மீது தளபதி கங்கராஜன் படையெடுத்தான். அங்கு சோழ பிரதிநிதியாய் இருந்த அதியமான் பணிய மறுத்து, தாமோதரன், நரசிங்கவர்மனுடன் சேர்ந்து போர் புரிந்தான். அப்போது சோழ நாட்டில் நிலவிய குழப்பங்களில், சோழ இளவரசன் விக்கிரமன் அங்கு சென்று உதவவில்லை. போரும் விஷ்ணுவர்தனுக்குச் சாதகமாகவே சில நாட்களில் முடிந்தது. போரின் வெற்றி பற்றி பேலூர் செப்புடுகளில் பொரித்தனர்  ஹொய்சாளகள்.மன்னர் விஷ்ணுவர்தன், 'தலைக்காடு கொண்டா..' என்று விருதுகளோடு விஜயாபிஷேகம் செய்து, கங்காபுரி முழுதும் ஆட்சி செய்து கொண்டிருந்தார்.

சில மாதங்களில் ஆஷாட ஏகாதசி நாள் வந்தது. அது வைணவர்களுக்கு மிகவும் உகந்த நாள். விஷ்ணுவர்தன் சென்ன கேசவ கோவில் திருப்பணிகள்  முடித்துவிட்டு, அப்போது பண்டரிபுரம் கோவிலின் புனர் நிர்மாண வேலைகளைத் தொடங்கியிருந்தார். சில மைல் தூரத்தில் மன்னர் இருந்ததால், அன்றைய பரிக்ரமா என்ற பக்தி நடையிலும் இறங்கினார். மன்னர் பண்டரிபுரம் வருவதால், ஊரே கோலாகலம் பூண்டது. மக்கள் அதிகமாக வந்திருந்தனர். மன்னரும், மக்களோடு சேர்ந்து பண்டரிபுரம் பரிக்ரமா தொடங்கினார். உயர்ந்த நதியான சந்திரபாஹாவில் புனித நீராடி, ஊர் முழுதும் வலம் வந்தார். கோவில் தெருவின் இரு மடங்கிலும் கடைகள் இருந்தன. பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. விளக்கொளியில் கடையில் உள்ள கிருஷ்ணன் பொம்மைகள், இவர்தான் விட்டலனா? என்று எண்ணும் வண்ணம் இருந்தார். வண்ண குங்குமம், சந்தனம், மர பொம்மைகள், கண்ணனுக்குப் பிடித்த பதார்த்தவகைகள் கொண்ட கடைகள் என பலவும் அந்த ஒளியில் மின்னியது.

பண்டரிபுரம் ப்ரதிக்ஷணம் முடிந்து மன்னர் கோவிலை அடைந்திருந்தார். மாலை நேர பூஜைகள் நடக்க, பெரிய மணியோசையும்,சங்கொலியும் கேட்டது. கோவிலுக்கு நான்கு வாசல்கள். கிழக்கு வாசல் முகமாக மன்னர் உள்ளே சென்றார். அப்போது கட்டப்பட்டிருந்த மண்டபத்தில் அமர்ந்து சில பாடல்களை மன்னர் மனமுருகிப் பாடினார். பதினாறு கால் மண்டபம் அவரை வரவேற்றது. ஆங்காங்கு மாடங்கள்.ஒரு மாடத்தில் இருக்கும் நரசிம்மரை தரிசித்தார். அவர் மனது முழுதும் இராமானுஜர் பற்றியே இருந்தது. இராமானுஜர் சோழ மன்னர் செய்த செய்கையால் மேலை நாடுகளில் கைங்கர்யம் செய்வதும், திருவரங்கம் திரும்பாததும் மனதில் ஒரு பெரிய வடுவாகவே இருந்தது. நரசிம்மரைத் தரிசிக்கும் போதும் இராமானுஜர் உபதேசித்த சில மந்திரங்கள்,ஆண்டாளின் 'மாரி மழை முழஞ்சில்' என்ற திருப்பாவை எல்லாம் மனமுருகிச் சொன்னார்.மனதில் ஏற்பட்ட தளர்வோடு அங்கிருந்த ஒரு தூணில் சாய்ந்தார். கண்களை விழித்தார். அந்த மண்டபத்திலிருந்து பாண்டு ரங்கனின் திருமுகம் தெரிந்தது.

 'ஆ!.. நல்ல செய்தி..' என்ற கங்கராஜனின் சப்தம் கேட்டு திரும்பினார். மிகவும் முக்கியமான விஷயமாக பிரதானி சிம்மவர்மன் கங்கராஜனின் காதுகளில் ஏதோ சொன்னார்.

'மன்னா.. பிரதானி  நல்ல செய்தியோடு வந்திருக்கிறார். நம் ஆச்சாரியார் இன்னும் இரு தினங்களில் திருவரங்கம் திருப்புகிறார். சோழ நாட்டில் நிலவிய குழப்பங்கள் ஒருவாறு தீர்ந்தது..' என்றார் கங்கராஜன்

மன்னர் விஷ்ணுவர்தன் தன் நிலையில் இல்லை. 'அந்த பாண்டுரங்கன் என் வார்த்தைகளைக் கேட்டுவிட்டான். இப்போது தான் திருப்பாவையில் '..உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய சீரிய சிங்காசனத்திருந்து யாம்வந்த காரியம் ஆராய்ந்து அருள்..' என்று வேண்டினேன். அதோ பாண்டுரங்கன்..' என்று ஒரே ஓட்டமாய் ஓடினார் மன்னர்.விட்டலன் இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு 'அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்தஸ்ஸர்வம் ப்ரவர்த்ததே, அனைத்திற்கும் காரண காரியம் நானே..' என்பது போல் சிரித்துக் கொண்டிருந்தான். காதுகளில் மகர அணிகலன்கள். அவற்றைக் கண்டதும் மன்னரின் மனதில்,இராமானுஜர் உபதேசித்த நம்மாழ்வார் திருவாய்மொழியின் '...தென்திருப் பேரெயில் வீற்றிருந்த மகர நெடுங்குழைக் காதன் மாயன்..' என்ற வரிகள் ஓடியது. பாண்டுரங்கனின் மார்பில் திருமகள் தரிசனம் தந்தார்.

 'என் திருமகள் சேர் மார்வனே! என்னும் என்னுடை ஆவியே என்னும்,
             நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே! என்னும்,
             அன்று உருவேழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே! என்னும்,
             தென் திருவரங்கம் கோயில் கொண்டானே..'

என்ற வரிகள் மன்னருக்கு நினைவில் வர, மன்னர் ஓடிச்  சென்று பாண்டுரங்கனின் கால்களைப் பிடித்துக் கொண்டு, அவன் பாதங்களை கண்ணநீர் கொண்டு திருமஞ்சனம் செய்தார்.செங்கல் மீது நிற்கும் அவன் திருவடிகளுக்கு அவையே புஷ்பங்களாய் மாறின.

 

'ஆம் அவனே ரங்கன், அதுவே அரங்கம்..' என்று பாட்டி மூர்ச்சையானார்.இந்தக் கதையைக் கேட்டுக் கொண்டு பாட்டியின் மடியில் படுத்திருந்த வைஜெயந்தி திடுக்கிட்டு எழுந்தாள்.

***




'அம்மா..அம்மா.. நேரமாச்சு எழுந்திரிமா.. கெட் அப் சூன்.. அப்பா வான்டஸ் டு டெல் சம்திங்..' என்று நான்கு வயதைத் தொடும் பரத் எழுப்ப, பாட்டியின் மடியிலிருந்து எழுவது போன்ற நினைவில் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுந்தாள். பரத் இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு நின்றான். அவளுக்கு விட்டலனாகவே தெரிந்தது.

ஒருவாறு சமாளித்து அமர்ந்தாள். பாட்டி பெயர் ரெங்கநாயகி. பெயருக்கு ஏற்றார்ப் போல் படிதாண்டா பத்தினி தான். ஊரும் ஸ்ரீரங்கம். வேறு ஊர்கள் சுற்றியதில்லை. நேரில் போகாவிட்டாலும் விட்டலன் மீது அளவு கடந்த அன்பு,பக்தி. வைஜெயந்திக்கு அவ்வப்போது கதைகள் சொல்லி தூங்கவைப்பாள்.பத்து வயதில் பாட்டி சொன்ன கதைகளில் ஒன்று தான் அந்தக்கதை, சற்றே அவளுக்குக் கனவாய் இன்று வந்தது.

'சரி சீக்ரம் கிளப்பு. இன்று பண்டரிபுரம் போகலாம்..' என்ற கணவரின் வார்த்தைகள் கேட்ட வைஜெயந்திக்கு, தான் கனவில் இல்லை என்பதை உறுதிப்படுத்த சில நிமிடங்கள் தேவைப்பட்டது. அவர்களின் வீட்டிலிருந்து பண்டரிபுரம் 2-3 மணி நேரம்.அன்று ஏனோ 'ரங்கம்மா மாஜி ரங்கம்மா' என்ற விட்டல் தாஸின் பாடல் மூன்று-நான்கு முறை காரில் ஒலித்தது.பாட்டி ரெங்கத்தின் நினைவு தான் வந்தது. காரில் அமர்ந்தது முதல், கனவில் வந்த பாட்டி சொன்ன கதை எல்லாம் வீசிஆர்-ன் ரீவைண்ட் போல் மீண்டும் மீண்டும் ஓடியது. அவர்கள் பயணித்த மாருதியின் வேகத்தை விட அவளின் மன வேகம் பல மடங்கு இருந்தது.

சந்திரபாஹா நதி நீரோட்டம் இல்லாமல் இருந்தது.தலையில் நீரைத் தெளித்துக் கொண்டாள். கோவிலுக்குச் செல்லும் வழியில் எதிர்பட்டவரிடம் 'இது தானே விட்டலன் கோவில்..' என்று கேட்டது, மீராவில் 'இது தானே பிருந்தாவனம்.. ' என்று எம்.எஸ் கேட்பது போலிருந்தது. அதே போல் புரந்தரதாசர் பாடல்களைப் பாடிக்கொண்டே ஓடினாள். அவள் தன்னையும் மறந்தாள். கனவில் கண்ட கடைகள் நிஜத்திலும் இருந்தது. கிழக்கு நுழைவு வாயில் தெரிந்தது. மன்னர் நுழைந்த இடம், இப்போது நாமதேவர் வாயில். நாமதேவர் படி ,  நாமதேவரைத் தரிசனம் செய்தாள்.

அதோ மகா மண்டபம். மன்னர் ஆனந்தமாய்ப் பாடிய இடத்தில் இன்று பஜனை பாடிக்கொண்டிருந்தனர். பதினாறு தூண்கள், சீரிய சிங்கமாய் நரசிம்மர். அருகில் வெள்ளியால் பூணப்பட்ட கருட ஸ்தம்பம், புரந்தரதாசர் தூண் என்றனர் அருகில் வந்தவர்கள். அவளுக்கு மன்னர் சாய்ந்த தூண் தான் தெரிந்தது. தாஸரின் கீர்த்தனையைப் பாடி வலம் வந்தாள். அதோ பாண்டுரங்கனின் முகம்.. இடுப்பில் குழந்தையோடுகூட்டத்தின் நடுவில் ஓடினாள்..திருப்பதியில் ஜருகண்டி போல் மராத்தியில் ஏதோ சொன்னார்கள்.

மகர நெடுங்குழைக் காதுகளைக் கண்டாள், விவரிக்க முடியாத அதரம், அதில் தவழும் புன்னகை, மார்பில் திருமகள், 'மாம் ஏகம்' என்று சொல்லும் வகையில் இடுப்பில் ஒய்யாரமாக கைகள், செங்கல்வராயனாய் செங்கல் மேல் திருவடி.. தென் திருவரங்கம் கோவில் கொண்டானே என்ற ஆழ்வார் வரிகள், கனவில் மன்னர் கண்ட அதே தரிசனம். தன் நிலை மறந்தாள். பாண்டு ரங்கன் திருவடிகளில் விழுந்தாள்.தலையில் தெளித்த சந்திரபாஹா நதி நீர், கண்களில் ததும்பியது. இன்று வைஜயந்தியின் கண்ணீரும் மன்னர் விஷ்ணுவர்தன் கண்ணீரோடு கலந்தது. 'தண்தாமரை சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள்' என்று நம்மாழ்வார் தாமரை சுமக்கும்  திருவடியில் சொல்லால் மாலைகள் சூட்டினேன் என்றார். இங்கோ செந்தாமரை நிறத்தில் இருக்கும் செங்கல் மீது நின்ற இந்த பாண்டுரங்கனுக்கு இவளின் கண்ணீரே தாமரை மலராய் விட்டலனின் பாதங்களைத் தாங்கியது, மாலையாய் வழிந்து வட்டமிட்டது. வைஜயந்தியின் 'ரெங்கம்மா..' என்ற பெருத்த குரல் கேட்டு விட்டலன் சிரித்துக் கொண்டிருந்தான், அவளருகில்.

Tuesday, April 23, 2024

காரைக்கிணறு கழிச்சேன்

சித்திரை உற்சவம் பற்றி எழுதுவதை பலரும் படிப்பதில் மகிழ்ச்சிசிலர் எந்தப் புத்தகம் என்று கேட்கிறார்கள்குறிப்பிட்ட புத்தகம் என்று இல்லைபல இடங்களில் (புத்தகம்கல்வெட்டுதரவுகள்ஆராய்ந்து எழுதுகிறேன்நன்றி.. 🙏


இன்று எதிர்சேவை பற்றி.. 



நேற்று நாயக்கர் மாசி திருநாளை சித்திரைத் திருநாளா மாற்றியது பற்றி பார்க்கும் போதே அழகர் வந்ததுனாலஅவரை நேர்ல போய் பார்க்கலாம்னு போனாஎப்பவும் சொல்ற அதே டயலாக் தான் 'போனவருஷத்த விடகூட்டம் அதிகம்எமைக்க முடியலசாமி அதுக்குள்ள அம்பலகாரர் மண்டகப்படி வந்திருச்சுஎன்று கூடநடந்து வந்தவர்கள் சொன்னார்கள்.


எதிர் சேவை - அதாவது எதிர் கொண்டு சேவை சாதிப்பதுசேவை தருவது/பெறுவதுமுன்னரே சொன்னதுபோல் இப்போது நடத்தப்படும் உற்ஸவங்கள் பெரும்பாலும் நாயக்கரின் வருகைக்குப் பின் வந்திருக்கலாம்நேற்றுஉண்மையில் எதிர் சேவை தான்நாங்க அவரை நோக்கிப் போக அவர் என்னை நோக்கி வர நம்மாழ்வார்சொன்ன மாதிரி 'என்னில் முன்னம் பாரித்து'ன்னு அவர் வேக வேகமா நம்ப கிட்ட ஓடிவந்தாருதூரத்தில்அனுமாரின் பச்சைக் கொடி தெரிந்தது,சரி அப்போ அவரு அங்க தான் இருக்காருன்னு போனேன்.. 


அம்பலகாரர் மண்டகப்படி - விசாலமான கல்மண்டபம்தற்போது பாலம்கட்டியதால் அதன் அழகுகுறைந்திருந்தது.சில வருடம் முன்பு வரை இருட்டற நேரத்துல அதன் வாசலில் நடக்கும் வான வேடிக்கைபார்க்கவே கூட்டம் வரும்.இப்போ வெயிலோடு முடிகிறது


அழகர் வெளியே வந்து கொண்டிருந்தார்.. டன் டன் என்ற மணி சப்தத்தோடு 'வாராரு வாராரு அழகர் வாராருபாடல் விண்ணைப் பிளக்கஇளசுகள் எல்லாம் குத்தாட்டம் போட்டார்கள்..நவவித பக்தில இதுவும் ஒன்னுதான்எங்க அழகருக்கு அது தான் பிடிச்சிருக்கு.. கள்ளர் திருக்கோலம்.. ஏன் மதுரைக்குள்ள வரும் போதுஇப்படிவிழா நடத்தியது நாயக்கர் தானகொஞ்சம் வரலாற்றில் பின்னோக்கிப் போகலாமா?.. 


இப்போ நிக்கிற இடத்திலிருந்தே போகலாம்.. அம்பலகாரர்கள் - நாட்டுத் தலைவர்கள்ன்னு சொல்லலாம்ஒருகுறிப்பிட்ட ஜாதி/இனக் குழுவிற்குத் தலைவர்கள்.அவர்களுக்குள் நடக்கும் பிரச்சனைகளைத்தீர்த்துவைப்பவர்கள்சமயங்களில் நாட்டளவில்..முதத்தரையர்கள்கள்ளர் பிரிவில் இவ்வாறுஇருந்திருக்கிறார்கள்.அதாவது பெரிய வீட்டுக்காரரு..


இங்க நாயக்கருக்கு போர் சமயங்களில் இவர்கள் மிகவும் உதவியிருக்கிறார்கள்.அந்த வகையறாவில் ஒருவர்மண்டபத்திற்குத் தான் அழகர் நுழைகிறார் மதுரையில்அப்படி வர அழகர் கள்ளர்கள் (மேலை நாடுமேலூர்பகுதிகீழை நாடு - சிவகங்கை பகுதிஅணியும் அணிகலன்களை அணிந்தே வருகிறார்அப்படி என்ன? - வண்டிக்கடுக்கன்,வளரித்தடிகம்புமறக்கொண்டைதண்டை.. 


அது எப்படி இருக்கும் - வண்டிக்கடுக்கன் காது மடலோடு ஒட்டியதில்லைமிகப் பெரிய காது வளையம்,  அடிப்புறத்தில் கல்வைத்துக் கட்டப்படுகிறதுவளரித்தடி(Vellari Thade/ Boomrang) ஆங்கிலேயர்கள் வியந்தஒருவகை ஆயுதம்தடி போன்ற கம்புகீழ் நாட்டுக் கள்ளர் ஆண்கள் இடுகின்ற கொண்டைதலையில் உருமால்/தலைப்பாகை - இவையே கள்ளர் வேடத்தின் தோற்றமாகும்அழகரும் அந்தக்கால கள்ளர் மரபின்தோற்றத்தையே புனைந்து வரும் செய்தி உறுதிப்படுகிறதுஅதாவது 'பெரியாம்பளஎன்று சொல்லும் மூத்தவர்போல..


'செயி வளரி தன்னைத் திருமால் முதலையின் மேல் பேசிவிட்ட சக்கரம் போல்..என்ற அம்மானைப் பாடல்ஒன்று சொல்கிறதுஇங்க அழகரும் சக்கரத்திற்குப் பதிலா வளரி கொண்டுவந்தார் போல..இரண்டும் போனாதிரும்ப எய்தவரிடமே வரும்.. 


சரிஅழகர் ஏன் அப்படி வரணும்?.. இது திருமலை நாயக்கருக்கு சிறிது காலம் கழித்து வந்திருக்கலாம் என்றுயூகிக்கமுடிகிறது.கல்வெட்டுக்களிலோ,ஆழ்வார் பாசுரங்களிலோ இந்த அணிகலன்கள் பற்றிய செய்திகள்இல்லை.அழகர் கிள்ளை விடு தூது கூட இவை பற்றிச் சொல்லவில்லைஇந்த கள்ள வேடம் 300 ஆண்டுகளுக்கு உட்பட்டதாய் இருக்கலாம்இது தொடர்பான செய்தி நாட்டுப்புற அழகர் வர்ணிப்புப் பாடல்கள்மூலம் கிடைக்கிறது


முன் காலத்தில் அழகர் மலையிலிருந்து மதுரைக்கு வரும் வழியில் அழகர் ஊர்வலம் கள்ளர்களால்வழிமறிக்கப்படுகிறது.அழகர் நகைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன.எங்கும் ஒரே கலவரம்சற்று நேரத்தில்கொள்ளை கூட்டத்தலைவனுக்கு இரு கண்களும் பார்வை இழந்துவிடுகிறது.அவர்கள் நிலையை உணர்ந்துஅழகரிடம் வேண்டுகின்றனர்.


அழகர் அவர்களை மன்னித்துஅங்கே பிரசன்னமாகி 'மலை திரும்பும் வரை கோவில் உண்டியல்களை காக்கும்பொறுப்பை/மிகப்பெரிய கைங்கர்யத்தைக் கொடுக்கிறார்'. தலைவனுக்கும் கண்பார்வைவருகிறது..அவர்களும் தங்களின் அணிகலன்களைத் தந்து அவற்றை அழகர் அணிந்து அறுவென்றும் என, "தமர்உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானேஎன்று ஆழ்வார் சொன்னது போல் அவர்கள் சொல்வதை அழகரும்ஏற்றுக்கொண்டு அவர்களின் உருவத்தைத் தானும் பூண்டு கள்ளழகராகவே மதுரை வருகிறார்


இது தொடர்பாக ஒரு சிறு சடங்கு மட்டுமே இப்பொழுதுநடைபெறுகிறதுஇது 17ம் நூற்றாண்டின்பிற்பகுதியில் நடந்திருக்கலாம்இது நடந்தது கள்ளந்திரி மண்டபம் அல்லது காரைக்கிணறு என இருகருத்துக்கள் உள்ளன.


இது சம்பத்தப்பட்ட அழகர் வர்ணிப்புப் பாடல் வரிகள்.. (காயாம்பு என்றே அழகரை நாடார் அழைப்பது இங்குவழக்கம்.. 'காயாமலர் வண்ணன்என்றே ஆழ்வாரும் சொல்கிறார்)


கள்ளர் வழி மறித்து - காயாம்புமேனியை கலகமிகச்செய்தார்கள் வள்ளலாரப் போது ... 

நரசிங்க மூர்த்தி இப்போது கள்ளருக்கு கண்ணு தெரியாமலப்போ - என் செய்வோமென்று கள்ளர் மயங்கிநின்றார் ** புண்ணாகி நொந்து கள்ளர்காயாம்பூ மேனியிடம் புலம்பியேயெல்லாரும் வழிவம்சமாய்நீலமேகத்திற்கு வந்தடிமை செய்யுகிறோம் ஒளிவு தெரியும் படி திறக்க” என வேண்ட  


உடனே அழகர் "நான் வண்டியூர் சென்று மீண்டும் மலைக்குத் திரும்பும் வரை என் உண்டியலைத் தூக்கிக்கொண்டு வாருங்கள்என்று கட்டளையிட்டார்


"காரைக்கிணர் கடந்தார் - என்னையன் கள்ளர் பயமே தீர்ந்தார்"; "காரைக்கிணறு கழிச்சேன் - கள்ளர் வேஷம்போட்டேன் போட்டேன்என்ற வரிகள் மற்றோர் பாடலில் வருவதால்இந்நிகழ்வு காரைக்கிணறு பகுதியில்நடந்திருக்கலாம் என்றும் எண்ண முடிகிறதுகாரைக்கிணறு என்ற சிற்றூர் அருகில் உள்ளது. 


அழகரின் இந்த கள்ளர் வேடத்திற்கு நாயக்கர் கால அரசியல் ரீதியாக பல காரணங்கள் சொன்னாலும்அழகர்நம்மாழ்வார் சொன்ன '..திருமாலிருஞ்சோலை வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து..என்றவரிகளை மெய்ப்பிப்பதாகவே தெரிகிறது


கள்ளழகர் அம்பலகாரர் மண்டகப்படியிலிருந்து மற்ற மண்டபடிகளுக்கு வரஅனுமார் பச்சைக்கொடியோடுநாங்களும் ஓடிக்கொண்டிருந்தோம்.அங்கே வாசலில் பெரியவர் ஒருவர் அழகரின் அருள் வேண்டி தள்ளாதவயதிலும் தடியோடு நின்று கொண்டிருந்தார்அவரைச் சூழ்ந்து போட்டோ கிராஃபர்கள் அழகரைப் படம்எடுத்துக் கொண்டிருந்தார்கள்


சுருக்க எழுதியே மற்றதை கவர் செய்ய முடியவில்லை... 


அடுத்து - (திருமாலைஆண்டான்ஆயிரம் பொன் சப்பரம்பேசும் பெருமாள்-தீர்த்தவாரி.. 

-- கிரி 04/23, குதிரை வாகனம்வண்டியூர்


வளரித்தடி 



வண்டிக்கடுக்கன், கொண்டை 






தண்டை