Sunday, February 1, 2015

புத்தக காட்சி - வியாபாரம்

புத்தக காட்சி, வியாபாரம்

பூண்ட வத்தம் பிறர்க்கடைந்து தொண்டு பட்டுப் பொய் நூலை மெய் நூல் என்று என்றும்  ஓதி மாண்டு *
அவத்தம் போகாதே வம்மின் எந்தை என் வணங்கப் படுவானை* 
கணங்கள் ஏத்தும் நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை நின்ற வூர் நித்திலத்தைத் தொத்தார் சோலை*
காண்டவத்தைக் கன லெரி வாய்ப் பெய்வித்தானைக் கண்டது நான் கடல் மல்லைத் தலசயனத்தே (பெரிய திருமொழி 2-5-2)

                     மேலுள்ள பாடல் திருமங்கை ஆழ்வார் மாமல்லபுரம் பற்றி பாடினது. அவர் ரொம்ப தெளிவா எது மெய் நூல், எது பொய் நூல்ன்னு சொல்லிட்டார் அவரோட பார்வையில்! அதாவது அபத்தமான விஷயங்களைச் சொல்லும் நூற்களை,மெய்யான நூல்ன்னு நினைத்து, படித்து வீணாகாமல் மாமல்லபுரத்தில் இருக்கும் திருமாலை அடைய வாருங்கள். சரி இங்க சொல்லப் போற விஷயமும் புத்தகம் பற்றியது தான்.ஆனா எது மெய், பொய் நூல்ன்னு சொல்ற அளவுக்கு எனக்குத் தெளிவு இல்ல. இதுவும் ஒருவித பயணக் கட்டுரை தான்!

                       மெட்ராஸ்ல வருசா வருஷம் நடக்கற புத்தக கண்காட்சி, விற்பனையில் மொத்த வருமானம் பல கோடிகள். அதில் என் பங்கு சில நூறுகள் இருக்கும்  வருடம் தோறும். 2 வருசமா US ல இருந்தனால அந்த முதலீடு இல்ல. இந்த வருடம் 10+ நாட்கள் கண்காட்சி நடந்தாலும், இறுதியில் தான் போக நேரம் இருந்தது..

                         18/01 அன்னிக்கு, சமஸ்கிருத கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்து நடத்தின விழாவிற்கு போனேன். தேசத்தின் உயர்ந்த மொழி, எல்லாரும் படித்து, பாதுகாக்க வேண்டிய மொழி. நமக்கு அதன் பெருமைகள் தெரியவிடாமல் நம் திராவிட கட்சிகளின் வெத்து கோஷம் கொஞ்ச வருசத்துக்கு ஜெயித்து வருது. எல்லாம் இன்னும் கொஞ்ச வருடம் தான் செல்லும். நான் அலுவலகத்தில் பார்க்கும் பலரும் ஹிந்தி படிக்காமல் போனது பற்றி வருத்தம் கலந்த ஏக்கத்துடன் தான் இருக்கின்றனர். ஒரு முறை Night cab டிரைவர் கூட வருத்தப்பட்டார். அடுத்த தலைமுறையில் அனைவரும் ஹிந்தி, sanskrit மகத்துவம் தெரிந்தவர்களாகத் தான் இருப்பர். அன்றைய 'Samskritha Sangeetha Sandhyaa' மிகவும் சிறப்பாக Organize செய்யப்பட்டு, உற்ச்சாகமாய் நடந்தது - கணேஷ் ஐயர் தான் இதன் பிரதான Organizer. Volunteerகளின் பங்களிப்பு ஏராளம். பிரின்சிபால், குரு, அலுவலக சப்போர்ட் தாராளம்.  பிரின்சிபால் பேசியபோது, 'ஜல்லிக்கட்டு' நம் பாரம்பரிய விளையாட்டு; 64 கலைகளில் முக்கியமாகச் சொல்லப்பட்டுள்ளது. சமஸ்கிருத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள மூன்று வித இசை - கீதம், நாட்டியம், வாத்தியம்' என்ற பல நல்ல விஷயங்களை அனைவரும் பகிர்ந்து கொண்டனர். சமஸ்கிருதத்திலேயே 2 மணி நேரம் இசை. நான் பாதியேலே கிளம்பி புத்தகக் கண்காட்சி போனேன்.

**Sankrit College -Certificate Course Student's Function - 'Samskritha Sangeetha Sandhyaa' **




               புத்தகக் காட்சியில் சரியான கூட்டம்.கிட்டத்தட்ட கடைசி நாள் என்பதால்! ஆயிரம், ஆயிரம் புத்தகங்கள். எல்லா கடைகளிலும் நம்மை அழைத்த படி நிற்கிறார் 'வல்லவரையன் வந்தியத்தேவன்', அது தான் நம்ப கல்கியின் அமர காவியம் 'பொன்னியின் செல்வன்'. எனக்கென்னமோ 'கல்கியின் புத்தக கண்கட்சி'யின்னு மாற்றி வைக்கலாம். நான் 3 வருஷம் மின்ன புத்தக கண்காட்சி போன போது 'ஆஹா, ஓஓஹோ'ன்னு விற்ற புத்தகம் ஒரு கடையில் கூட இல்ல.. இதிலிருந்தே புரிந்தது அந்த எழுத்தக்களின் வலிமை. நல்ல எழுத்துக்களை காலக் கரையான்கள் அழிப்பதில்லை - கல்கியின் கைவண்ணம் போல்.
                      நான் போன இடத்தில் எல்லாம் ஒருவர் கேட்டுக் கொண்டே வந்தார்   'சார், அலை ஓசை இருக்கா'. அப்போதெல்லாம் என்மனதில் 'சீதா' மட்டுமே வந்து போனார். பழைய DD தமிழ் சீரியலும். தினமலர் Stallல் வாங்க நினைத்தது உ.வே சாவின் 'என் சரித்திரம்'. அடுத்த முறைக்கு சேமித்துள்ளேன். பார்க்கலாம். எல்லா கடைகளிலும் மக்கள் நுழைந்து பார்வையிட்டுச் சென்றனர். மூலைக்கு மூலை ஒரு டீ, காப்பி விற்க 2 வாலிபர்கள்., விலை தான் கையைச் சுட்டது!. 10-12 ரூபாய். ஒரு சாதாரண டீக்கடை வைத்தால் கூட 8 ரூபாயில் முடிந்திருக்கும். சரி போனது 'பிரபல' (!) எழுத்தாளர்கள் இருந்த இடம். ஏழைகளுக்கு அங்கு என்ன வேலை., என்ன விலையானாலும் வாங்க வேண்டியது தானா.கம்யூநிசம், சோசலிசம் எல்லாம் எழுத்துக்களில் தான். அவர்களின் வாதம், வீர ஆவேசம் எல்லாம் புதிய தலைமுறை, News7, தந்தி -டிவிகளில் மட்டும் தான். இங்க விக்கறதுக்கும் எழுத்தாளர்களுக்கும் சம்பந்தமில்லை. (!)
                   உள்ளே எல்லாருக்கும் இடம் இருந்தது. எந்த வித ஏற்றத் தாழ்வு இல்லாத வகையில். ஆமாங்க., கொஞ்ச தூரம் போயி அப்படியே  திரும்பினா 'என்னோடு ஆழ்ந்து தியானம் செய்பவர்களுக்கு 2 அடி மேல வர மாதிரி இருக்கும்'ன்னு 'ஜன்னல் திறந்தா காத்து வரும்' சாமியோட ஸ்டால்/கடை.. அனைவரும் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டியது. வேற என்ன சொல்றது., ஆனா அங்கயும் கொஞ்ச பேரு போயிட்டு தான் வரான்.

**Part of Crowd in Book Stall**


**நம்ப சாமியோட கடை இந்த பக்கம் தான்**





           வழக்கம் போல் வானதி பதிப்பகத்தில்  -'கௌதம நீலம்பரம்- ஆலவாய் அழகன்' நூலும், விக்கரமனின் 'வந்தியதேவன் வாள்'ம் வாங்கினேன். நான் தேடி போன இராஜாஜி, கல்கி இராஜேந்திரன் புக் மிஸ்ஸிங்.. Bangaloreருந்து FaceBook message செய்த இராமகிருஷ்ணன் மீனாக்ஷி சுந்தரதிற்க்காக 'திருக்குறள் - உரை'. மு.வ. உரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கல்கியின் சரித்திர நாவல் தான் எல்லா இடத்திலையும் குவிந்து இருந்தது..அனைவரும் அதை வாங்கியும் சென்றனர். சுஜாதாவின் புத்தகங்களை வாங்கியபடி ஒரு கூட்டம் இருந்தது. விலை கொஞ்சம் அதிகம் தான். அந்த எழுத்துக்களுக்குத் தரலாம் ஆனா அந்த எழுத்தாளனை அடைந்ததான்னு தெரியல!:(.... வாங்கினத படித்தாலே போதும் என்ற நிறைவோடு வெளியே வந்தேன். அங்க தான் செம காமடி..

                       மக்கள் சித்திரை திருவிழா பொருட்காட்சி வந்த மாதிரி பஞ்சு மிட்டாய், உயர்தர கடைகளின் காப்பி, சமோசா இத்யாதிகளை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தனர். எதுவுமே 10 ரூபாய்க்குக் கீழ இல்ல.சரியான குப்பை தொட்டிகளும் இருந்தமாதிரி தெரியல.. வாங்கின புத்தகங்களையும், அந்த குப்பைகளையும் கைகளில் வைத்திருந்தனர், அப்பறம் அத கீழ போட்டனர்.மக்கள் மாறலைன்னு சொல்றதவிட,  புத்தக எழுத்துக்கள் சரியானவற்றை இன்னும் போதிக்கவில்லை. அவ்வளவு தான் சொல்ல முடியும். Policeகாரர்களைக் கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

***உயர் தர விலையில் உணவு வகைகள், கடைகள்***






                      எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்குத் தான் விலை. அதன் வலிமைக்குத் தான்.வரலாற்றின் பக்கங்களில் நிற்கும் எழுத்துக்களை உள்ளடக்க வேண்டும். மொத்தத்தில் கல்கி போன்றோரின் பெயரைச் சொல்லி ஒவ்வொரு முறையும் இந்த வியாபாரம் நடக்கிறது போல தான் எனக்கு இருக்கு. இன்றைய எழுத்தாளர்களைப் போல் கல்கி 'ராயல்டி' கேட்டா அவ்வளவு தான்.. சமூகம், பிரித்துப் பார்க்க முடியாத ஒரு மாயையில் தான் இருக்கிறது.. சரி. எல்லாத்தையும் என் எழுத்தால மாத்த முடியாது.

               இதை எழுதத் தொடங்கியது போது என்னோட பர்சனல் மெயில் boxல் வந்தது கிருஷ்ணா ப்ரேமியின் இந்த பொன் மொழிகள்.தற்ச்செயலாக இவை வந்ததாக எனக்குத் தோன்றவில்லை.ஒவ்வொன்றும் இரத்தினங்கள்!

  • புத்தகத்தைப் படித்துப்பார்த்து அடுக்கிக்கொண்டே செல்லாதே. இதனால் அனுபவஞானம் வந்துவிடாது. ஆகாயத்திலுள்ள வீண்மீன்களை எண்ணுகின்றவன் வானசாஸ்திரியாகி விடுவானா?
  • சாஸ்திரப் பண்டிதர் மூலம் நீ அக்ஞானத்தை விலக்கிக் கொள்ள முடியாது. அவர்கள் எண்ணெய், திரி எல்லாம் போட்டிருந்தும் ஏற்றப்படாத தீபம் போன்றவர்கள். அவர்களால் அக்ஞான இருள் எப்படி விலகும்? எனவே அனுபவஞானியை குருவாக அடை.
  • கடலின் காம்பீர்யத்தைக் கண்ட நதிகள் அடக்கத்துடன் அதில் விழுகின்றன. ஆனால் அதே நதிகள் நாட்டில் ஓடும்பொழுது கம்பீரமாய் ஓடுகின்றன. அதுபோல் உன் கல்வியும் மேதையும் உலகைத் திகைக்கச் செய்தாலும் உண்மையான ஞானியைக் காணும் பொழுது தானே ஒடுங்கிவிடும்.
  • சின்னக்குழந்தை திண்னையில் ஏறிக்கொண்டு, நான் அம்மாவை விடப் பெரியவனாகி விட்டேன் என்பதைப் போலத்தான் புத்தகத்தை படித்துவிட்டு அதனால் நான் பெரியவனென்று சொல்வது.
  • புத்தகம் பலபேருக்குப் பாடம் சொல்லித்தருமேயன்றி தான் படிக்காது. அதுபோல் தன்வரை ஞானமில்லாதவர் பிறருக்குச் சொல்வதுண்டு.

திருமங்கை ஆழ்வார் பாசுரத்தின் எளிய விளக்கம் (PBAnna): காட்டுத் தீயில் வர்ஷித்தாற் போலே நோவு படுகிற சம்சாரத்திலே காணப் பெற்றேனே பிறரை(நீசர்களை) ஆச்ரயித்து அவர்களுக்கு அடிமை செய்தும் அபத்தங்களான பாஹ்யமதச்சுவடிகளை யதார்த்தமான சாஸ்த்ரமாகக் கொண்டு எப்போதும் (அந்தச் சுவடிகளையே) வாசித்துக்கொண்டிருந்து முடிந்து பாழாய்ப் போகாமல் உஜ்ஜீவிக்க வாருங்கள்; எனக்குத் தந்தையானவனும் என்போல்வாரும் வணங்குதற்கு உரியவனும் ஞானிகளின் கூட்டங்களாலே துதிக்கப்படுபவனும் அளவிறந்த அப்படிப்பட்ட வஸ்துவாக உள்ளவனும் காளமேகம் போன்றவனும் அஸ்மத் ஸ்வாமியானவனும் திருநின்றவூரில் எழுந்தருளியிருக்கிற முத்துக்கோவை போலக் குளிர்ந்த வடிவையுடையவனும் பூங்கொத்துகள் நிறைந்த சோலைகளையுடைய காண்டவவனத்தை ஜ்வலிக்கிற அக்நியினுடைய வாயிலே புகுவித்தவனுமான பெருமானை நான் கண்டது கடல்மல்லைத் தலசயனத்தே!