Saturday, July 29, 2017

ஆழ்வார் அமுதம் - நம்மாழ்வார் திருவாய்மொழி

                          இந்த வருஷம் (2017) நம்மாழ்வார் உற்ஸவம் அனுபவிக்க நேரம் இல்லாமல், வார இறுதி நாளில் மட்டும் இரவு நேரம் கிடைக்கநம்மாழ்வார்  உற்ஸவத்தின் போது அனுபவித்த திருவாய்மொழியின் சாரம் என்னளவில், பூர்வர்கள், வ்யாக்யானகர்த்தாக்கள், உரையாசிரியர்கள் கொண்டாடிய அர்த்தங்கள்.. பேரா.அரங்கராசன் அவர்களின் நூலிருந்து படித்தது எல்லாம் சேர்த்து நினைவில் இருந்ததை எழுத முயல, 'தன்னாக்கி என்னால் தன்னை' அவனே எழுதுவித்தான்- அந்த அவன் ஆழ்வாரும்-அழகனும் தான் என்பதில் ஐயமில்லை..

திருவாய்மொழி ஐந்தாம் பத்து 

நம்மாழ்வார் அவதாரத் திருநாள் உற்ஸவத்தின் ஐந்தாம் நாள் இன்று. 

                                            ஆழ்வார் அழுது, அலற்றி, மிரட்டி, உருகி, நாகணமிசை நம்பிரான் சரணே சரண் நம்மைக்கென்று சரணாகதி அடைகிறார் கடைசியாக. ஒரு கவிஞராகப் பார்த்தால் இந்தப்பத்தில் அனைத்து இலக்கிய வகைகளையும் கையாண்டிருக்கிறார்.. முந்தின பத்துக்களில் ஏங்கிக்கொண்டிருந்த ஆழ்வார் இங்கு துவக்கத்தில் கண்ணனைப் போற்றியும், உலகில் உள்ளோரை வாழ்த்தியும் (பொலிக பொலிக என) கவி சொல்லும் போதே, குழந்தை எதையோ மறந்து எதிலையோ கவனம் செலுத்தி, மீண்டும் பழைய நினைவில் அழுவது போலே, ஆசை மிகுந்து பழிக்கு அஞ்சாமல் மடலூரத் துணித்து (மாசறு சோதி-யாம் மடலூர்ந்தும்), மடலூர இயலாத படி இரவு நீள்வதாய் வருந்திக் கூறவும் (ஊரெல்லாம் துஞ்சி), பின் திருக்குறுங்குடி பெருமானை கண்டு வடிவழகில் மயங்கி நிற்க, திடீர்ன்னு ஆவேசம் வந்தது போல தானான தன்மை மேலோங்கி - எல்லாம் யானே என்றுரைக்க, தன்னால் எதுவும் இயலாது என்றுகருதி வானமாமலையில் சரணாகதி பண்ண (ஆறெனக்கு நின் பாதமே சரணாக தந்து), அப்போதும் முடியாமல் தீராத ஆசையுடன் ஆற்றாமை பேசி ஆராவமுதனை அழுது, தொழுது, பாடி அலற்ற( அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னைக்காணும் அவாவில் வீழ்ந்து என்ற படியும் ), மனதிற்கு இனிமை தரும் மலையாள தேசம்-திருவல்லவாழ் புறச் சோலையில் சென்று விழுந்து,காண்பது எஞ்ஞான்று கொலோ என்று உரைத்து, இறுதியாக நாகணமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கென்று, நாள்தோறும் ஏகசிந்தையனாய் இருக்கிறார் குருகூர் சடகோபன் மாறன். இந்த நூறு பாடல்களும் நாயகி நிலையில் பாடியுள்ளார் நம்மாழ்வார். இன்றைய கோஷ்டியில் அனுபவித்த பிறகு பழையத்தைக் கொஞ்சம் புரட்டினேன். வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தார் ஆழ்வார், அவரைப் போல் ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நல்லிருளால், இரவு நீண்டு கொண்டே இருக்கிறது.. ஆனால் இதில் நன்மையே!

                                                மாசறுசோதி பதிகத்தில் (திருவாய்மொழி) நம்மாழ்வார் மடல் ஊர்ந்தார் என்றும், மடல் எடுப்பதாக மிரட்டினார் என்றும் சொல்வதுண்டு, 'யாம் மடலூர்ந்தும்' என்ற படி..

                                               மாசறு சோதி (திருவாய்மொழி-5-3)..நம்மாழ்வார் தன்நிலை போய் பெண் நிலையில், உருகி பின் மடலெடுக்க, அதை உரையாசிரியர்கள் விளக்கும், வகுக்கும் அழகே தனி..நம்பிள்ளை மடலுக்கு தமிழ் இலக்கியத்திலிருந்து தான் மேற்கொள் காட்டி அவதாரிகைகளே 5 செய்துள்ளார்.. பாட்டை எழுதியவர்களைக் காட்டிலும் உரையாசிரியர்கள் விஞ்சி நிற்கிறார்கள் ..!

                           கடல் ஞாலம் செய்தேனும் (திருவாய்மொழி 5-6)
                                              தலைவி தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசுகிறாள்.. அதை தலைவியின் தாயார் ஊராருக்கு, இது என்ன 'ஆவேசமோ' என நொந்து கொள்வதும் தமிழ் இலக்கியங்களில் உண்டு. நம்மாழ்வார் அப்படி பராங்குச நாயகி என்ற தலைவியாகி, தானே தலைவன் என அநுகரித்து ஞானமுத்திரையும் தானுமாய் 'கடல் ஞாலம் செய்தேனும் யானே, கடல் ஞாலம் ஆவேனும் நானே, மலை எடுத்தவனும் யானே...' என்றாற் போலப் பாசுரங்களைச் சொல்லிஇருக்கிறார்..(நோன்பு நோற்பதாகக் கொண்டு ஆண்டாள் திருப்பாவை பாடியது ஆய்ச்சியர்களின் அநுட்டானத்தை அதுகரித்த படியத்தனையிறே)

                                 அதில் வரும் ஒரு பாடலின் வரியில் 'கற்கும் கல்விக்கு எல்லையிலேனே என்னும்' என்கிறார். இதற்க்கு நம்பிள்ளை என்ற உரையாசிரியர் (வ்யாக்யானகர்த்தா) மூன்று விளக்கங்களைத் தருகிறார்..

உருபை விவரிக்கும் போது எல்லா வகைகளிலும் விவரித்து,
எல்லையிலன் =
1. எல்லை (யை) + இலன் = கற்றபரப்புக்கு ஓர் எல்லையில்லை;
2. எல்லை (க்கண்) + இலன் = கல்வியின் எல்லைக்குள்ளே நிற்கிறேன் அல்லேன்;
3. எல்லை (இல்) + அன் = வேதாந்தமாகிய எல்லையின் உளேன்.
இதை தமிழின் இனிமை என்பதா, பாடியவரின் வலிமையா, உரையாசிரியரின் மேதமையா, இவற்றை எல்லாம் வெளிக் கொண்டுவந்த 'அவனையா', யாரைச் சொல்வது


**************************************************************************************************************************************************************************************************************************

திருவாய்மொழி ஆறாம் பத்து

நம்மாழ்வார் அவதார திருநாள் - ஆறாம் நாள்-

                                            மிக உயர்ந்த பாடல்கள். மொத்த திருவாய்மொழிக்கே இரத்தனமாய் இருக்கும் அலர்மேல் மங்கை உரை மார்பனான திருவேங்கடவன் முன்னிட்டு சரணாகதி அடைந்த பாசுரங்கள் இன்று தான். துவக்கத்தில் ஆழ்வார் தமிழ் இலக்கியங்களில் முக்கியமான தூது இலக்கியத்தை முழுதுமாய் பத்து பாடல்களில் அனுபவிக்கிறார். தூதின் வரை மாறாமல் குறுக்கினங்கள், நாரை, குயில், அன்னம், வண்டு, கிளி என அனைத்தையும் தலைவியாகி தலைவனிடம் பாட்டிற்கு ஒன்றாக திருவண்வண்டூரிலிருந்து தூதுவிட, தூதுவிட்டவுடன் கண்ணன் (தலைவன்) வராததால் ஊடல் திறத்தில் 'உன்னுடைய சுண்டாயம் நானறிவன்' என்றுரைத்து, ப்ரணயகலகத்தில் திருவிண்ணகர் (உப்பிலியப்பன் கோவில்) சென்று, மீண்டும் தலைவன் குண விசேஷங்களில் பெரிதும் ஈடுபட்டு கண்ணன் விளையாட்டுக்களை (கிட்டத்தட்ட ஒரு பாகவதம் தசம ஸ்கந்தம்) சொல்லி, தொலைவில்லிமங்கலத்தில் ஆசை மிகுந்து, பித்து பிடித்தது போலாகி தேவபிரானையே தந்தை தாய் என்றடைந்து, இதைக்காணஒண்ணாத தாய், தலைவி பசலை நோய் காண்டவளாய் இழந்தது பற்றி இறங்கிக் கூற (மாலுக்கு- இழந்தது பீடே, பண்பே, மாமை நிறமே, முடிவில் தன்னுடைச் சாயே), தலைவி தலைவன் இருக்கும் திருக்கோளூர் நோக்கிச் சென்று காணும் பொருளெல்லாம் கண்ணனே என்று அலற்றியதாய் தாய் இரங்க (உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான்), அதற்குள் தலைவி, தலைவனுக்கு அடியார்களான பறவைகளைத் தூது விட (பொன்னுலகாளீரோ-புள்ளினங்கள், கிளி, அன்னம்), இதைக் கேட்டவர்கள் நெஞ்சம் எல்லாம் நீராய் உருகி, திருமாலுக்கு பரமபதத்தில் இருக்க முடியாமல் வருமாறு ஆழ்வார் அழைத்து (நீராய் நிலனாய்- காண வாராய் விண்மீதே) நிற்க, அதற்குள் பெருமான் பரமபதத்திலிருந்து ஒரு உயர்வான இடம் தேடி திருமலையில் குதித்து வேங்கடவானாய் இருக்க, நம்மாழ்வார் அவர்ரடிக்கீழ் அமர்ந்து புகுகிறார் கடைசியாக.. (உலகமுண்ட பெறுவாயா- உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே)..

                                       நல்ல கவித்துவத்துடன் ஆழ்வார் இந்த நூறு பாடல்களையும் அமைத்துள்ளார். 'தீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ'.. என்ன அட்டகாசமான வரி.. இரண்டு பதிகங்களில் முழுதும் தூது விடுகிறார். பசலை நோய் தாங்காமல் தன்னுடைய சாயை (நிழலை) இழக்கிறார் தலைவி.. அடடா!.. என்ன தமிழ், கவி!..

                                       துவளில் மாமணிமாடம் - தூமணி மாடம் என்று கொஞ்சம் நிறைய சொல்லவேண்டியது. ஆனால் சிறு விளக்கம், ஏன்னா நம்மாழ்வார் என்றாலே 'திருதொலைவில்லிமங்கலம்' என்று சொல்வதுண்டு..

                                      தூமணி மாடம் (திருப்பாவை) - பரிசுத்தமான மாணிக்கங்கள் பொருத்திய மாடம் கொண்ட ஆய்ப்பாடி/ஸ்ரீவில்லிபுத்தூர்;ஸம்ஸார சம்பந்தமே இல்லாமல் அநவரதம் எம்பெருமானுடன் இருக்கும் நித்யஸூரிகள் போன்றோர்; தலைவி, தோழிமார்களை எம்பெருமானிடத்து ஈடுபட அழைத்து தாய்மாரிடத்தும் (மாமீர்), தோழியிடத்தும் (மாமான் மகள்) கூறுதல்.

                                       துவளில் மாமணி மாடம் (திருவாய்மொழி) - குற்றமற்ற மாணிக்கங்கள் கூட்டி சமைத்த மாடம் கொண்ட திருத்தொலைவில்லிமங்கலம்...துவள் இல்-சில காலம் பிறவிக்கடலுள் நின்று துளங்கி, பின் அப்பற்று விட்டு எம்பெருமானே தஞ்சம் என்று போகும் முக்தர்கள்; ஆழ்வார் (தலைவி) எம்பெருமானிடத்து ஈடுபட்டமை பற்றி தோழி தாய்மாரை நோக்கிக் கூறுவது!.
(பெண் பாவனையில் பாடுவதால் மாணிக்கங்கள் பற்றி பேசுவதாய் அமைந்தது போலும்  )


*************************************************************************************************************************************************************************************************************************

திருவாய்மொழி ஏழாம் பத்து

நம்மாழ்வார் உற்ஸவத்தின் ஏழாம் நாள்;

                                           ஒரு கவிஞர்/தொண்டன் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லும் பதிகங்கள். தன்னையும் ஒரு கவியாக்கி திருவாய்மொழியைப் பாடுவித்த எம்பெருமானுக்கு என்ன கைம்மாறு செய்வதென்று தெரியாமல் பேசுவதாய் இருக்கிறது. ஆழ்வார் தாமான தன்மையில் இந்திரியங்கள் செய்யும் நலிவு பற்றிக் கூறி எம்பெருமானிடம் தஞ்சம் அடைய (உண்ணிலாவிய), இவள் நிலையைக் கண்ட தாயார் தலைவனிடம் (திருவரங்கநாதனிடம்) இவள் திறத்து என் செய்கின்றாயே? என்று கேட்க (கங்குலும் பகலும் - இவள் அழுது, அலற்றி, மோஹித்து, தொழுவது, பெருமூச்சு எறிவது என்றிருக்க), இதைக் கேட்ட தலைவி 'மோஹம் தெளிந்து தானே கூப்பிட வல்லவளாய்' மகர நெடுங்குழைக்காதனான தென் திருப்பேரைக்குத் தானே செல்லத் துணிய(வெள்ளைச் சுரி சங்கொடு), இந்நிலையில் தலைவன் (எம்பெருமான்) இவள் நிலையைக் கண்டு தன்னுடைய விஜய வரலாறுகளைக் காட்ட (ஆழி எழ.), அந்த அவதாரங்களில் தலைவி மோகித்து சிறப்பான இராமாவதாரத்தில் ஈடுபட்டு நிற்க, தலைவனின் குணம், அழகு முதலானவற்றை எண்ணி கண்ணுக்கு நேரே கண்டு அனுபவிக்க மனமுருகி கூப்பிட (பாமரு மூவுலகு), அந்த உருவ அழகில் தன்னை இழந்து அதனால் வந்த வருத்தத்தால் காண்மின்கள் அன்னையர்கள் என்று காட்டும் வகை அறியேன் என்று வருந்த (ஏழையர் ஆவியுண்ணும்), உடனே எம்பெருமான் அவனுடைய விசித்திர சக்தியைக் காட்ட அதில் தலைவி ஆச்சரியப்பட, (மாயா வாமனனே) பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நின் வாச மலர் தண்துழாய் முடி மாயவனே அருளாய் என்று அழைத்து, தன்னாக்கி என்னால் தன்னைக் கவி பாடும்படி வைத்ததற்கு கைமாறில்லை என கூறி (என்றைக்கும் என்னை), திருவாரன்விளையில் (இன்பம்பயக்க) அன்புற்றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களும் ஆகும்கொலோ என்று தீர்ததனுக்கு அற்றபின் மற்றோர் சரண் இல்லையென்று குருகூர் சடகோபன் சரணடைகிறார்...

                                         மேலும் மிக சுவாரஸ்யமான விஷயம் நம்பிள்ளை ஈட்டில் இன்றைய தேவைக்கு ஏற்ற மாதிரி இந்தப் பத்தில் உள்ளது.. அது தமிழர்களின் உரைகளை நம்பிள்ளை போற்றியது. (இது பற்றி விரிவாய் விரைவில்)

தமிழரின் வியாக்கியானங்களையும் நம்பிள்ளை தம் ஈட்டில் பயன்படுத்தியுள்ளார்.

ஈட்டிய வெண்ணெய் உண்டான்
திருமூக்கு எனது ஆவியுள்ளே
மாட்டிய வல் விளக்கின்
சுடராய் நிற்கும் வாலியதே
(திருவாய்மொழி- 7-7-2)

இதில் 'மாட்டிய' என்ற வார்த்தைக்கு 'சுடர் வெட்டிய' என்று பெரியவாச்சான் பிள்ளையும் , நம்பிள்ளையும் பொருள் கொண்டு, விவரிக்கும் போது 'தமிழருடைய' வியக்கியானத்திலிருந்து 'மாட்டிய=ஏற்றிய' என்ற பொருளை எடுத்துக் காட்டுகிறார்.


****************************************************************************************************************************************************************************************************************************

Friday, July 28, 2017

மூன்று புத்தகங்கள்

                             எழுத்தாளர் ஸ்ரீ. முத்து ஸ்ரீனிவாசன் அவர்கள் தந்த ஊக்கத்தால், விரைவாக வாசித்து,  படித்த சூட்டோடு எழுதியது.. மீண்டும் அடுத்த வாசிப்பைத் தொடங்கியதால் இதைச் சேமிக்க வேண்டியதாகிறது:)

பல்லவ பீடம்

                              வெறித்தனமாகப் படித்தேன்னே சொல்லலாம்.. சில மாதங்களுக்கு முன் ஆன்லைன்ல் வாங்கிய 'பல்லவ பீடம்' சரித்திர நாவல், சாண்டில்யன் அவர்கள் படைப்பு. வழக்கம் போல் அலுவலக வேலைகளால் வாரந்தோறும் கல்கி பத்திரிக்கை படிப்பதே பெரிய விஷயமாகி, ஜல்லிக்கட்டில் மக்கள் கூடியதைப் பற்றிய தலையங்கம் கூட பாலமேடு ஜல்லிக்கட்டு நடக்கும் போது தான் படித்தேன்.. (அதனாலென்ன, நம்ப பிரேக்கிங் நியூஸ் தான் இருக்கே, உடனடி அப்டேட்க்கு:) )..நேற்று முன்தினம், சில நாட்களாக பிளான் செய்து சந்திக்க முடியாத ஒரு எஸ்கலேஷன் மீட்டிங், அது அண்டர் ஸ்டாண்டிங் மீட்டிங்ன்னு கூட சொல்லலாம்.. எதிர் பார்த்த வாக்குவாதங்கள், பஞ்சாயத்துக்கள் எல்லாம் முடிந்து கிளம்பவே இரவு பத்தை நெருங்கியது.. அவரசமாக திருவான்மியூர் போகும் பேருந்தில் ஏற, நடத்துனர் ரூ.100-க்கு சில்லறை இல்லை என்று ரூ.10 'நாணயங்களைத்' தள்ளிவிட்டார்.. எல்லாம் சேர்ந்து ஜன்னல் ஓர இருக்கையில் உட்கார்ந்த போது தான் எடுத்தேன் 'பல்லவ பீடம்'.. என்ன ஓட்டம், பேருந்து அல்ல, கதை.... சுவாரஸ்யம், திருப்பங்கள், சாண்டில்யனுக்கே உரிய 'வர்ணனை(!)' எல்லாம் சேர்த்து ~100 பக்கங்கள் வரை ஓடியது 2வது பேருந்து பிடித்து கண்ணகி சிலை நிறுத்தம் வரும் போது... மறுநாள் கைகளும், மூளையும் தேட, பறக்கும் ரயிலும் தொடர்ந்தான் 'பப்ப குமாரன்' என்ற பல்லவ யுவமகாராஜா.. அவ்வப்போது தாமரைச் செல்வியின் நயனங்கள் சாண்டில்யன் எழுத்தில்..பெரும்பாணாற்றுப்படை இலக்கியச் செய்தியோடு கதையைத் துவங்குகிறார் -'மறவர்கள் பகைவர்களின் மாடுகளைக் கொணர்ந்து, கள் குடிப்பர்' என்று.. பின் பல்லவ சாம்ராஜ்யத்தின் வளர்ச்சி, அதை காஞ்சியில் வீழ்த்த நடக்கும் சூழ்ச்சி, களப்பிரர்கள் ஆதிக்கம், படையெடுப்பு, களப்பிரர்கள் பெயர்க்காரணம் இத்யாதிகள் குன்றாத ஸ்வாரஸ்யமாக.. நேற்றும் பேருந்தில் சூழ்ச்சியின் வடிவம், தன்மை எல்லாம் படிக்கும் போது நண்பரிடமிருந்து ஒரு அழைப்பு, நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி ஏதோ கேட்க, 'பல்லவ பீடம்' தான் கையில் இருந்தது., (இதுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ).. 




இளந்திரையன் தன் சிம்மாசனத்தை மண்ணில் புதைக்க, அதைத் தேடுவது தான் கதை., ஆனால் இதுவே பல்லவர்கள் காஞ்சியில் மீண்டும் ஆட்சியை நிலை நிறுத்த வழிசெய்கிறது.. இது வெறும் நாற்காலி சண்டை அல்ல., நாட்டைக்காக்கும் உண்மையான அரசன்/இளவரசு தான் அதை அடைய முடியும் என்ற சத்தியவாக்கோடு நகர்கிறது.. நிருபவர்மர் என்ற சொந்தக்காரர் வில்லன் (இது நேர்ல 'கேட்கற' மாதிரியே இருந்தது).. முடிவில் பப்பகுமாரன் என்ற சிவஸ்கந்தவர்மன் பல்லவ சாம்ராஜ்யத்தை முடிசூடுகிறான், தாமரை செல்வியையும் மணக்கிறார். 2 நாளில் கனவில் கூட வந்தார்கள் இருவரும், மிகவும் நன்றாகத்தான் இருந்தாள் தாமரை, சாண்டிலன் வர்ணித்ததைப் போல (அவர் பாஷையில் சொல்லப் போனால் 'மிகவும் நேர்த்தியாக'..  )!!.. நல்ல வேளை பெரிய மறவன் வரவில்லை.. இதை முடிக்கவேண்டும் என்பதாலோ என்னவோ ஜன்னல் ஓர இருக்கை இரண்டு நாட்களாகவே கிடைத்தது, அதுவும் தலையின் மீது விளக்கோடு..நான் அமர்ந்து படித்ததும் 'பழைய' பல்லவன் பேருந்து 'பீடம்' தான்!.. பல்லவன் தானே அவன் கதையைப் படிக்க உதவுவான்!..
************************************************************************************************************************************************************************************

சேரன் செல்வி
                                  சாண்டில்யன் அவர்களின் அடுத்த நாவல் - 'சேரன் செல்வி'. 456 பக்கங்கள். பல்லவ பீடத்தை விட இருமடங்கு. இதுவும் ஆன்லைனில் வாங்கியது தான். அதே பாணியில் படித்தேன். ஓடும் பேருந்து, ஜன்னலோரம் & தலைக்கு மேல் விளக்குடன்:).. ஒரு வாரத்தில் முடிக்க முடிவு செய்து தொடங்கினேன்., 4-5 நாட்களில் முடித்தாகி விட்டது. திருவல்லிக்கேணி ரயிலில் பயணிக்கும் 90% பேர் மொபைலில் தான் ஏதோ பார்த்துக் கொண்டு வருவார்கள்.. இப்போதெல்லாம் அதிகம் படம் பார்க்கத் துவங்கிவிட்டார்கள்.. இதை படிக்கும் போது கூட அந்தவாரம் வெளியான ஒரு புது தமிழ் படமும் ஓடிக்கொண்டிருந்தது. எல்லாம் 'அம்பானியாரின் அருள்'. நான் மட்டும் புத்தகத்தைப் படித்துக்கொண்டிந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு முதியவர், கஷ்ட்டப்பட்டு எட்டிப் பார்த்தார் புத்தக அட்டையை திருமயிலை இறங்கும் முன். நானே சொல்லிவிட்டேன் 'சார், சாண்டில்யன் நாவல்'.. அவர் ஒருவித புன்னகையோடு போனார். கதை அக்மார்க் சரித்திரக் கதை., எதிர் பார்த்த வர்ணனைகள்.. இம்முறை 'கேரளத்து' வர்ணனை. கதை கேரளம்-கொல்லம் கடல் கரையில் துவங்குகிறது., பாண்டிய இளவரசன்- சேரகுல இளவரசியோடு. 





சேரன் பாண்டியநாடு மீது படை எடுப்பது தான் கதை.. சுந்தர பாண்டியன் தந்தையைக் கொன்று பாண்டிய நாட்டைப் பிடிக்கிறான். அவனோடு போரிட்டு வீர பாண்டியன் பாண்டிய நாட்டை மீட்க்கிறான் முகலாயர் தயவோடு.. நடுவில் கில்ஜியின் கதை.. ஆம். கதையின் முக்கிய அங்கமே மாலிக்கபூர் தளபதி குரூஸ்கானின் படையை விரட்டி, சேரன் ஹிந்து சாம்ராஜ்யம் அமைக்க முயல்வது.. குலசேகரன் ரவிவர்மன் சூப்பர் ஹீரோ போல சித்தரிக்கப்படுகிறார்.. சிவகாமியின் சபதத்தில் வரும் 'மகேந்திர வர்மனை' ஞாபகப்படுத்தினார்..போர் நுணுக்கங்கள், இராஜ தந்திரங்கள், தீர்க்கமான அனுமானங்கள், சமயத்தில் பொருந்தும் முடிவுகள் இத்யாதி என ஒரு அரசர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனைக் கூறுகிறார் சாண்டில்யன். இளவழுதி என்ற பாண்டிய வாலிபனை தளபதியாகக் கொண்டு வீர பாண்டியனை வெல்கிறார் சேரன். இளமதி தான் சேரன் செல்வி., காஞ்சி தேவப் பெருமாளுக்கு தாரை வார்க்கப்பட்டவள்.. இந்த விஷயத்தில் கேரள மாந்த்ரீகர்களை ஒரு பிடி பிடிக்கிறார் சாண்டில்யன்.. வழக்கம் போல் வர்ணிக்கும் நடையே தனி. அதில் வரும் ஒரு வரி -
"சக்கரத்தின் மீது சுழலும் குயவன் கை பாண்டம் போல் அவன் கையின் இஷ்டத்திற்கு வளைந்தாள்" மீதி நாவலில் படிக்கவும்.. ஆனால் தவறாமல் படிக்க வேண்டிய நாவல் வரலாற்றை அறிய, கொஞ்சம் கற்பனையோடு..

***********************************************************************************************************************************************************************************



ஆலவாய் அழகன்


                                  "ஒரு பேரரசு அழிந்து மற்றொரு பேரரசு உதயமாகும் வரலாறு, உலகின் எல்லா நாடுகளிலும், எல்லா காலங்களிலும் ஒரே விதமாகவே அமைவது இயற்கை போலும்!" என்ற வரிகளோடு தான் கதை முன்னுரை வடிக்கப்பட்டுள்ளது.. இது சோழ பேரரசு அழிந்து, பாண்டிய பேரரசு அமைந்து மீன் கொடி பட்டொளி வீசி பறக்கவிடப்படும் கதை.. 'ஆலவாய் அழகன்'- ஜெகசிற்பியன் (புத்தகத்தின் பெயருக்கே வாங்கியது) அவர்கள் எழுதி, விகடனில் தொடராய் வந்தது '60-களில். அதே போல் படிக்கும் பழக்கம்- ஓடும் பேருந்து, இரயில்.. இதை முடிக்கும் போது பேருந்து பள்ளத்தில் விழும் செய்தி ஓடிக்கொண்டிருந்தது.. பாதுகாப்பாகப் படிக்கக்கூட முடியாது போல இனிவரும் நிலைகளில் ..
கதை என்னமோ அக்மார்க் பொன்னியின் செல்வன் தழுவல் போல் இருந்தது. இதற்க்கு முன் படித்த நாவல்கள் இதைப் படிக்க உதவின எனலாம், கொஞ்சம் பொருத்திப் பார்க்க முடிந்தது.. கதையின் காலம் - மூன்றாம் குலோத்துங்கச் சோழன், மூன்றாம் இராஜ இராஜச் சோழன் - 1178 முதல் 1256 வரை.. விக்கிரம பாண்டியன், முதலாம் சடையவர்மன் குலசேகரன் முதலானோர் தோற்று பாண்டியர்கள் சோழருக்கு கப்பம் கட்டி சுதந்திரமில்லாத நாடாக இருந்தனர்.. பாண்டிய வம்சத்தவர் கொற்கையில் (தூத்துக்குடி பக்கம்) இருந்தனர், அங்கு நடக்கும் கடல் வாணிபம் செய்தவர்களை அரசாண்டு.. அங்கு இருந்த இளவல், முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1216-1238), மதுரையை மீட்டு மீண்டும் மீன் கொடியை பறக்கவிட்டான்.. கதையில் பாண்டிய நாட்டின் பெருமை மட்டுமல்ல, பல வரலாற்றுச் செய்திகளும் உள்ளன.. மெய் கண்ட தேவர் சிவா ஞான போதம் எழுதும் போதும், கம்பர் இராமாயணம் அரங்கேற்றிய போதும் கதை நடந்ததாகச் சொல்லப்படுகிறது. புத்த பிக்ஷுக்கள் அரசியலில் இறங்கி, இராஜ ரிஷிகளாய் இருப்பது தெரிகிறது. ஈழப் பெயர் 'மாலனாகித்தி' வித்தியாசமாய் இருக்கிறது.. கதையில் நிறைய கதா பாத்திரங்கள். கம்பமாதேவி, திரைலோக்கியார், நல்லினி, அருள்மொழி தேவி, காங்கேயன், கௌசம்பி இன்னும் பலர்.. அவ்வளவு பேர் துணையோடும் பாண்டியன் நாட்டை மீட்டான். அவன் செய்யும் தவறே பாண்டிய வீழ்ச்சிக்கு பின்னர் வழி வகுக்கிறது.. இவருக்குப் பின்னர் சிலகாலம் சென்று வந்த முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் தான் ஸ்ரீரங்கம் கோவிலில் பல திருப்பணிகளை செய்கிறான்.. 'கோயில் பொன் வேய்ந்த பெருமான்" என்ற பட்டத்தினைப் பெற்றான்.மார்கோ போலோ சொன்ன காலமும் இவருடையது தான்... மறைந்த எழுத்தாளர் (முத்து ஸ்ரீநிவாசன்) தந்த ஊக்கத்தால், இதைப்படிக்க முடிந்தது.. இதற்கு கமெண்ட் சொல்லி மற்றொரு புத்தகம் ரெகமெண்ட் செய்ய அவர் இல்லாதது வருத்தமே. 



புத்தகத்திலிருந்து சில,
* கோவிலுக்கு விடப்பட்ட நிலங்களில், திரிசூல-திருவாழிக் கற்கள் நடப்பட்டு சிவ-விஷ்ணு ஆலயங்கள் பராமரிக்கப்பட்டன.

* இப்போது இருக்கும் மதுரைக்கு தென்கிழக்கே பாழடைந்து கிடக்கும் மதுரை தான் அப்போது பாண்டிய தலை நகரம். அது வைகையின் தென்கரையில் இருந்தது.. ஆற்றுப் போக்கு - காலப் போக்கால் இப்போது உள்ளது போல் மாறியுள்ளது..

* குமரிக்குத் தெற்க்கே அகண்ட நிலப்பரப்பு - ஏழ்தெங்க நாடு, ஏழ் மதுரை நாடு முதலான 49 நாடுகளும், குமரி-கொல்லம் நாடுகளும் சேர்த்து 52 நாடுகளும் இருந்தன..

* சிம்மாசனத்திற்கு கூட பெயர் இருந்தது - காலிங்கராயன் & மழவராயன். சுந்தரபாண்டியன் மழவராயன் என்ற சிம்மாசனம் ஏறினான்.

* திருக்கானப்பேர் (காளையார் கோவில்) - இங்கு தான் பாண்டிய நாட்டின் அக்கசாலை (நாணயம் அச்சடிக்கும் தொழிற்சாலை) இருந்தது. இங்குள்ள கோவிலுக்கு நிறைய நிலங்களை பாண்டியர்கள் தந்துள்ளனர்.

*பாண்டிய நாட்டில் 45 நாடுகளும், 7 கூற்றங்களும் இருந்தது. நிர்வாக வசதிக்காக இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது. பாகனூர் கூற்றம், திருக்கானப்பேர் (காளையார் கோவில்) கூற்றம் சில.. அது போல் களக்குடி நாடு, தென் பறம்பு நாடு , வாடபறம்பு நாடு , திருமல்லி நாடு (இன்றைய ஆண்டாள் கோவில் பகுதி), திரு வழுதி நாடு (இன்றைய ஆழ்வார் திருநகரி பகுதி), திருமலை நாடு (இன்றைய அழகர் கோவில் பகுதி) என்பன சில.

* நாடுகள் சிலவற்றை, குழுவாக சேர்த்து வள நாடு (ஜில்லா) எனப்பட்டது.

* சைவ சமயத்தில் சில உட்பிரிவுகள் இருந்தன. அவற்றை அகச் சமயங்கள் என்றனர் - பாசுபதம், மாவிரதம், காபாலிகம், பைரவம். இவை பல்லவர் காலத்தில், சாளுக்கிய நாட்டிலிருந்து தமிழகத்தில் குடியேறின. சிவனை பல்வேறு பயங்கர வடிவில் அமைத்துக் கொண்டன இந்தச் சமயங்கள். காடுகளில் கோவில் காட்டினார் இவர்கள். காஞ்சி, திருவொற்றியூர், திருவாரூரில் இருந்தனர்.. அதாவது பல்லவர் அரசாண்ட பகுதிகளில்..

* இரண்டாம் பாண்டியப் பேரரசை தொடக்கி வைத்த பாண்டியர்களுள் முதலாம்மாறவர்மன் சுந்தர பாண்டியன் தலையானவன். இவனது வெற்றியைப் போற்றும் கல்வெட்டுப் பாடல்,

              காரேற்ற தண்டலைக் காவிரி நாணனைக் கானுலவும்
              தேறேற்றி விட்ட செழுந்தமிழ்த் தென்னவன் சென்றெதிர்த்து
              தாரேற்ற வெம்படை ஆரியர் தண்டு படத்தனியே
              போரேற்று நின்ற பெருவார்த்தை இன்னும் புதுவார்த்தையே

Saturday, July 22, 2017

புத்தகத் திருவிழாவும் கழிவும் - 2017

செவிக்குணவு இல்லாத போது சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்! (திருக்குறள்)

புவியுள்நான் கண்டதோ ரற்புதம் கேளீர் பூணி மேய்க்கும்இளங் கோவலர் கூட்டத்து
அவையுள் நாகத் தணையான்குழ லூத அமர லோகத் தளவும்சென் றிசைப்ப
அவியுணா மறந்து வானவ ரெல்லாம் ஆயர் பாடி நிறையப்புகுந்து ஈண்டி

செவியு ணாவின் சுவைகொண்டு மகிழ்ந்து  கோவிந்த னைத்தொடர்ந்து என்றும்வி டாரே. (பெரியாழ்வார் திருமொழி)



"விதிவிலக்குகளின் விளைச்சல்களே இன்றைய இளைய வாசகர்கள்.உபநயனத்துக்குச் செய்யும் ஆடம்பரச் செலவுகளின் ஒருபகுதியாக வீட்டுச்சிறுநூலகங்களை அமைக்க இப்போதேய 40-35 வயதுப் பெற்றோர்கள் முன்வரவேண்டும். திருமணங்களுக்கும் பிறந்தநாள்களுக்கும் நூல்களை − அது எதுவானாலும் −பரிசளிக்க நணபர்கள் முன்வரவேண்டும். வாசிப்புப் பழக்கம், மனப்பழக்கம் ஆகிவிடும்."
                   -- எழுத்தாளர் முத்து ஸ்ரீனிவாசன்-நவபாரதி..

              மேலுள்ளவைகள் சிலமாதங்களுக்கு முன் மறைந்த எழுத்தாளரின் வரிகள் என் முகநூல் பக்கத்திலிருந்து.. இதையே முன்னுரையாக வைத்துத் தொடங்குகிறேன்.. இன்று கொஞ்சம் நல்லபடியாகவே நாள் கழிந்தது. காலையில் எப்போதாவது வாங்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ், இன்று கொண்டுவந்த செய்தியால் சென்னையில் புத்தக திருவிழா நடப்பதாக அறிந்தேன். இந்த வருஷ ஆரம்பத்தில் நடந்த போது போக முடியவில்லை என்பதைவிட சற்று விருப்பம் இல்லாமல் இருந்து, திருவல்லிக்கேணி பழைய புத்தகக் கடையில் 'அ.சா.ஞா-தம்பியர் இருவர்' மிகக்குறைந்த விலைக்குவங்கி, ஆன்லைன் மூலம் கொஞ்சம் சாண்டில்யன் புத்தகங்கள் தருவித்துக்கொண்டேன். இருப்பவை படித்தாகிவிட்ட படியால், இம்முறை போகலாம் என்றிருந்தேன். காலையில் ஒரு மாறுவேட போட்டிக்குப் போய் போட்டோகிராபர் வேலை (!) பார்த்துவிட்டு வந்தேன்.. 
                    
                        மாறுவேட போட்டி .. குழந்தைகள் வேடமிட்டால் அந்த அழகே தனி.. 4+ வருஷங்களுக்குப் பிறகு இன்று தான் யுஎஸ்-ல் வாங்கிய டிஎஸ்எல்ஆர்-க்கு (DSLR-Canon-EOS-DS126291) வேலை வந்தது.. அந்தக் காலம் (15-20 வருஷங்கள்) முதல் இன்று வரை ஒரே மாதிரியான வேடங்கள் தான்.:).சமுத்தரக்கனி படத்தில் வருவது போல் ஒரு 'பாய்' அண்ணாச்சி தான் இவைகளை வாடகைக்கு விடுகிறார்.. சில வருஷம் முன் வரை மோடி இல்லை இந்த வேடங்களில் (அவரின் தாக்கம் தெரிந்தது). இப்போது அவரும் சேர்ந்துவிட்டார்.. ஆதிகாலம் தொடங்கி இன்று வரை குழந்தைகளின் அணிவகுப்பு -- கிருஷ்ணர், அவ்வையார், ஜான்சிராணி, நேரு, பாரதி, மோடி, ஸ்பைடர் மேன், மயில், சிங்கம், மரம் இத்யாதிகள் எல்லாம். பரிசு என்ன தேவை?.. இந்தக் குழந்தைகளின் அணிவகுப்பு, ஆனந்தம் மட்டும் போதும். அதுவே பல கோடி பரிசுக்குச் சமம். படங்கள் எடுத்து முடிந்ததும், 'நீங்க ஸ்கூல்-ல அரேன்ஜ் பண்ணின போட்டோ கிராபர் தானே? என் குழந்தையையும் ஒரு படம் எடுத்து வாட்ஸ்ஆப்ல் அனுப்புங்க.' படபடவென்றார் ஒரு குழந்தையின் தாய்.. 'இல்லைங்க நான் சும்மா வந்தேன்.. போட்டோ கிராபர் இல்லை.. பரவாயில்ல எடுத்து அனுப்பறேன்' என்றேன். டிஎஸ்லஆர்-உடன் அலைந்தது நான் மட்டும் போல.. படங்கள் காப்புரிமை கொண்டது :)







                               சரி., பேக் டு புத்தகத் திருவிழா. பேப்பரில் பார்த்து வழக்கம் போல் ரூட் மேப் தேடியபோது கூப்பிடும் தொலைவில், இராயப்பேட்டையில் நடப்பதும், இது பதிப்பாளர் சங்கத்திலிருந்து நடப்பது அல்ல என்றும் தெரிந்தது.. சரி ஏதா இருந்தாலென்ன. நுழையும் போதே கடலை மிட்டாய், நெய் பிஸ்கேட் கடை, கொஞ்சம் தாண்டி கரும்புச்சாறு கடை, அப்பறம் நம்ப மக்கள் விரும்பிப் போகும் கடைகள்.. உங்கள் எண்ணத்தில் தவறு.. புத்தகக்கடைகள் அல்ல.. சிற்றுண்டி சாலை ., அதான் ஹோட்டல்.. மாலை ஐந்து மணிக்கு மக்கள் பிளந்து கட்டிக்கொண்டிருந்தார்கள்.. நடுவில் பெரியவர்கள் பேசும் அரங்கம்.சிலவருஷம் முன் சாப்பாட்டுக்கடை இல்லாமல் புத்தகம் மட்டும் இருந்தது. மக்கள் பட்ட சிரமம் சொல்லிமாளாது. சங்கத்திலிருந்து நடந்த போது சாப்பாட்டுக்கடை மிகவும் பிரம்மாண்டமாய் இருக்கும். நமக்கும், வெளி சாப்பாட்டிற்கும் ரொம்ப தூரம்.. இப்போ புத்தக அரங்கினுள் நுழைந்தேன். 

             எந்த பெரிய மாற்றமும் இல்லை.. வாசகர்கள், விற்பனையாளர்கள், பிரசுரிப்பவர்கள் எல்லாம் மாற்றமின்றி இருந்தார்கள். வழக்கம் போல் காலத்திற்கு ஏற்றார்ப் போல் புத்தகங்கள். சில காலம் முன் கொடிகட்டிப் பறந்த கோபிநாத் நூல்கள் எங்கோ ஒரு கடையில் இருந்தது.. கடைகள் தோறும் கல்கியின் புத்தகங்கள்..காலத்தால் அழியாத 'பொன்னியின் செல்வன்', சிவகாமியின் சபதம், அலைஓசை, பார்த்திபன்கனவு என்று வெவ்வேறு டிசைன்களில் இருந்தது. கல்கி இல்லாத புத்தகத் திருவிழாவை மறந்துவிடுங்கள். வாசகர்கள் வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள். கல்கி இன்னும் பயணிக்கவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது, ஐம்பது வருஷங்கள் போதவில்லை அந்த சரித்திர விஷயங்களுக்கு.. கூடவே சாண்டில்யன், விக்ரமன், கெளதம நீலாம்பரன் ஆகியோரின் சரித்திர எழுத்துக்கள் இருந்தது.. 

                            நாங்கள் தேடிப்போனது கொஞ்சம் தமிழ் இலக்கண, இலக்கியம், சரித்திர நாவல்கள். கூடுமானவரை பர்ஸைப் பதம்பார்க்காமல் வாங்க முடிவு செய்தேன்.. புத்தகங்களின் விலை மிக அதிகமாகவே தெரிந்தது.. ஏதோ ஒரு கடையில் சுஜாதாவின் பழைய புத்தகங்கள் அதே பழைய விலையில் இருந்தது.அதாவது பத்து வருடம் பிந்தைய விலையில்.. கரும்பு தின்ன கூலியா?.பெரும்பாலும் அக-புற நானூறு, எட்டுத்தொகை நூல்கள்-மூலம் தெளிவுரை என்று நிறைய இருந்தது. இம்முறை 'ஜெயலலிதா' பற்றிய புத்தகம் வந்தாகிவிட்டது.. வழக்கம் போல் எம்.ஜி.ஆர், அப்துல் கலாம், தேவர், காமராஜ் என்று பட்டியல் நீண்டது. யாரும் வாங்கியதாத் தெரியவில்லை.. ஆச்சி மானோரமா பற்றியும் இருந்தது. பாரபட்சமே இல்லாமல், 'அறிவோம் ஜோதிடம்' 'வசிய குறிப்புகள்', 'வர்மக்கலை', 'இயற்கை உணவு', 'பிரிட்டன், ஜெர்மன்' லா, இன்ன பிறநாட்டு ஆங்கில  நூல்கள் என்று சகட்டு மேனிக்கு இருக்க, நடுநடுவே பெரியார், மார்சிசம் இத்யாதிகள் எல்லாம் இருந்தது. ஒருவிஷயம் தெளிவாய் இருந்தது-அந்தப்பக்கம் மக்கள் நான் பார்த்தவரை போகவில்லை. கல்கி பதிப்பகம், வானதி பதிப்பகம், கண்ணதாசன் பதிப்பகம் , அல்லையன்ஸ், வைதீக ஸ்ரீ இவை எல்லாம் மிஸ்ஸிங் இம்முறை.

              கவிஞர் வாலி, பாலகுமாரன், தேவாரம், பெரிய புராணம் விளக்கம் புத்தங்கள் எங்கும் கிடைக்கிறது. நாங்கள் தேடிய இலக்கண-இலக்கிய நூல்கள் இல்லை..காந்தியின் சத்திய சோதனை இரண்டு இடங்களில் மட்டும் பார்த்தேன்.. அ.சா.ஞானசம்பந்தம் அவர்களின் ஒரே ஓரு புத்தகம் இருந்தது ஒரு பழைய புத்தக குவியலில், புது விலையில்.. சிறிது தூரம் வந்த பிறகு யாரோ ஒருவர் அந்தப் புத்தகத்தைத் தேடிக்கொண்டிருந்தார்.. கடையில் இருந்த பையன் முழித்துக்கொண்டிருந்தான். கீதா பதிப்பக புத்தகங்கள் பத்து-பதினைந்து என்று கிடைத்தது. கடைசிக்கடையாக மதுரை மீனாட்சி நிலையம்.. எதிர்பார்க்காத ௭௦ வருஷம் முன் பதிப்பாக 'பண்டித' கதிரேச செட்டியார் புத்தகம் இருந்தது, அதே பழைய விலையில்- இரண்டு புத்தகம் பதினைந்து ரூபாய் மட்டும், அதில் இருந்த விஷயங்கள் நிறைய. தேடிப்போன பல கிடைக்காவிட்டாலும், ஆயிரம் வரை இன்று வாங்கிவிட்டோம் நானும் என் அண்ணணும். வாசிப்பு தான் பாக்கி. மக்களை மயக்க நிறைய இருக்கிறது, எழுத்தாளர்களுக்கு பஞ்சமில்லை, நல்லவற்றை தேடிப் பிடிக்கணும், அதைவிட பதிப்பாளர்கள் நல்லவற்றை மீண்டும் பதிப்பிக்கணும். இரா.பி.சேது பிள்ளை, இரா. இராகவையங்கார், மு. இராகவையங்கார். மீனாட்சி சுந்தரனார், உ.வே. சா, கி.வா.ஜா இவர்களின் புத்தகங்கள் மொத்தம் 4-5 கூட இல்லை.. இவர்கள் தான் இந்த புத்தகங்களும், புத்தகத் திருவிழாவும் இருக்க வேரானவர்கள். அவர்களின் எழுத்துக்களை மறுபதிப்பு செய்ய முன்வரவேண்டும். இன்று கொட்டிக்கிடந்த கம்ப இராமாயண உரையை அவர்களை விட யார் உயர்வாய்ச் சொல்லமுடியும்..! எவற்றைக் கழிக்க வேண்டும் என்பது வாசகர்களும், பதிப்பாசிரியர்களும் தான்.. இருவருக்கும் சம பங்குண்டு..  இந்த 10% டிஸ்கவுண்ட் (கழிவு) மட்டுமல்ல!











முடிவில் வாங்கியவைகள்