Sunday, December 14, 2014

பன்னாட்டு நிறுவனத்தில் பாரதி திருவிழா


          வியப்புமிகும் புத்திசையில் வியத்தகுமென் 
                கவிதையினை, வேந்தனே, நின்
          நயப்படுசந் நிதிதனிலே நான்பாட 
             நீகேட்டு நன்கு போற்றி,
         ஜயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள், 
             பொற்பைகள், ஜதிபல் லக்கு
         வயப்பரிவா ரங்கள்முதற் பரிசளித்துப் 
              பல்லூழி வாழ்க நீயே!

(எட்டயபுரம்-1919 ஆம் வருடம் மேமாதம் 2 தேதி - சுப்பிரமணிய பாரதி)
(பல்சுவை : தன்வரலாறும் பிற பாடல்களும்;சுயசரிதை;சீட்டுக்கவிகளும் ஓலைத்தூக்கும்)

                            பல வருடங்களாக எனக்கிருந்த கனவு ஒரு 2 நாள் மின்ன நிறைவேறியது - பூரணமாக.. ஆம்!. மிகக்கொடிய வறுமையிலும் தேசத்தைப் பற்றியே சிந்தித்தார் பாரதி. சீட்டுக் கவியில் ஜதி பல்லக்கு கேட்டார், எனக்கு அந்த ஜதி பல்லக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. எந்த வீதியில் பாரதி கால்கள் பதிந்ததோ, எந்த வீதியில் தினமும் பெருமாள் புறப்பாடு கண்டருள்வாரோ அந்த வீதில் ஜதி பல்லக்கு. 4 நாட்கள் நடக்கும்  உற்சவம் பாரதிக்கு. ஏற்பாடுகள் பிரமாதமாகச் செய்திருந்தனர் 'வானவில் பண்பாட்டு' மையத்தினர்.. ஆனால் வந்திருந்த பிரபலங்களிடத்தில் அதில் கொஞ்சம் தொய்வு  இருந்தது.. ஆம், இங்கும் குரூப் போட்டோ, ஷெல்பி போட்டோ, அப்பறம் பாரதி கூட சேர்ந்து போட்டோ!:(.. சரி.. இந்த மாதிரி ஒரு சுதந்திர நிலையைத் தானே பாரதி தேடினான்.

பாரதி திருவிழா - திருவல்லிக்கேணி 11/12/14

                                     பிரபலங்கள் என்று அறியப்பட்டவர்களில், சினிமா சாராத நபர்கள் குறைவு.. கலந்துகொண்டவர்களில் கொஞ்ச வயசு பசங்க கொஞ்சம் தான்-என் போன்றவர்கள்.. காலை முதல் பெய்த மழை கொஞ்சம் இடைவெளி கொடுக்க,~9:30 மணிக்கு விழா துவங்கப்பட்டது. ஜதி பல்லக்கில் கம்பீரமாக பாரதி வீற்றிருந்தார்.. பலரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.வந்திருந்த சினிமா பிரபலம் ஒருவர், என்னருகில் இருந்தவரைப்பார்த்து 'ஏன்பா, உன்கிட்ட கேமரா இருக்கோ, நான் பாரதி பக்கத்துல நிக்கறேன் 2 போட்டோ எடுத்துரேன்' என்றபடி அவரை அழைத்துச் செல்ல அவரும் மொபைல் போன்ல் கஷ்டப்பட்டு பூ போடுவது போலவும் என்று 2-3 snap எடுத்தார்.. கண்டிப்பாக அடுத்த சில  மணி நேரங்களில் அவரின் facebook பக்கத்தில் அந்த படங்கள் அலங்கரித்திருக்கும். 'கேளடா மானிட, இங்கு கீழோர், மேலோர் இல்லை' என்ற பாரதி பாட்டு ஒரு நிமிடம் என் செவியில் ஒலித்தது..






பாரதியின் வம்சம் - ஸ்ரீ. இராஜ்குமார் பாரதி



                  விழாவிற்கு பாரதியின் வம்சத்தில் வந்த இராஜ்குமார் பாரதி வந்திருந்தார். சினிமா பிரபலங்கள் பக்கம் பேசியதைப் போன்று யாரும் அவரிடம் பேசவில்லை. அவரும் எந்த மேட்டுமையும் இன்றி பாரதியின் வம்சம் , நிறை குடம் என்பதை நிரூபித்தார். அவர் உட்காரக் கூடவில்லை.. செல்பி, பாரதியோடு போட்டோ எதுவும் எடுத்துக்கல.. 2-3 டிவி சேனல் மட்டும் அவரை பேட்டி கண்டன..


                               மயிலாப்பூர் பள்ளி மாணவிகளின் நடனம் அப்பறம் பாரதி ஜதி பல்லக்கு துவக்க விழா உரை.. வா.வே.சு அவர்கள் மிகவும் அருமையாகப் பேசினார். 'அத்திரம் பூ, அஞ்சலிப் பூ என்பது யாது., பாரதிக்கு தேசிய விழா எடுக்க வேண்டும்; சீட்டுக் கவியில் பாரதி கேட்ட ஜதி பல்லக்கு என்பன பலவற்றைப் பற்றிப் பேசி அசத்தினார் (ரமணன் சார் கட்டித் தழுவினார்:)).. ஜதி பல்லக்கு சினிமா, பிஜேபி தலைவர்களோடு கிளம்பியது.. நான் பின்னால் நடந்து சென்றேன்.. ஒரு ஆச்சர்யம்- என் பக்கத்தில், என் கையில் உரசியது போல பாரதியின் வம்சம்..என்ன ஒரு எளிமை. ஆஹா.. இதைவிட எனக்கு என்ன வேண்டும்... தெற்கு மாட வீதி முழுதும் நான் அவர் கூடவே சென்றேன்.. பின்னால் நடந்தவர்கள் நாங்கள் 2-3 பேர் தான்.. முன்புறம் குழந்தைகளின் நடனம். 'பாரத சமுதாயம் வாழ்கவே' பாடலுக்கு ஆடினார்கள்.. எத்தனையோ நாட்கள் பெருமாள் உற்சவத்தில் திவ்யப் பிரபந்தம் சொல்லிக் கொண்டு அந்த வீதியில் நடந்திருக்கிறேன்.ஆனால் இன்று பாரதி வம்சத்தாரோடு நடந்தது புது கம்பீரம் கிடைத்தது (என்னை அறியாமலே). பாரதி சொன்ன மாதிரி, 'புது சக்தி பிறக்குது மூச்சினிலே'..அவரிடம் பேச நினைத்தேன்.. வார்த்தைகள் தடுத்தன. இருவரும் பாரதியின் பாடல்களை ரசித்துக் கொண்டு நடந்தோம். அது போதும்.


பாரதியின் வம்சம் - ஸ்ரீ. இராஜ்குமார் பாரதி - ஜதி பல்லக்கின் பின் , பாரதி பாடலை ரசித்த படி..



கீழுள்ள பாடலோடு பல்லக்கு அவர் வீட்டை அடைந்தது.. அங்கும் சில புதிய சினிமா பிரபலங்கள் வந்திருந்தனர்..  ஆரத்தி எடுக்கப்பட்டது.. ஒருவர் 'சார், இத எங்க, எப்படி கொட்டனும்' என்றார் அருகில் இருந்த வைணவ மாமாவிடம்..


   
'ஓம் சக்தி,ஓம் சக்தி,ஓம்' பாடல், நித்யஸ்ரீ குரலில்.  இந்தப் பாடலுக்கு இந்தக் குரல் தான்!

https://www.youtube.com/watch?v=hCT0atl717Y&list=PL2o1DP4l0OenG1yi0jnBVYKWykzdblgys&index=1


                              என்னைக் கவந்தவர்கள் - ஸ்ரீ.இராஜ்குமார் பாரதி, இசைக் கவி இரமணன் சார், வா.வே.சு. சார். மிகச்சிறந்த ஒருங்கிணைப்பு.. Thanks and big salute to 'வானவில் பண்பாட்டு மன்றம்'. உண்மையான பக்தர்கள், தேசாபிமானிகள் நிறைய வந்திருந்தனர்.. உணர்ச்சிகரமாக பாடல்களைப் பாடினர். சில பிரபலங்கள் பாதியிலேயே கிளம்பிவிட்டனர்!

                                    பலவித கேள்விகளோடு (!), உற்சாகமாக அலுவலகம் கிளம்பினேன்.. சேரி., இப்போவாவது தலைப்புக்கு வரேன்.. நம்ப IT கம்பெனில யாருக்காவது டீம்ல இருக்கறவனுக்கு பிறந்தநாள் கொண்டாட ஒரு கூட்டமே இருக்கும்.ஒரு collection போட்டு, கேக் வாங்கி, cafeteria/canteenல் கூட்டமாகக் கூடி, மெழுகுவர்த்தி அனைத்து, கேக் வெட்டியவுடன், அதை எடுத்து விருப்பபட்டவர்களின் முகத்தில் பூச வேண்டும்.. கேக் உண்பதைக் குறைத்து, அதை எப்படி எல்லாம் வீணடிப்பது என்றே பாக்கணும்.. இது western கலாச்சாரம் என்று சொன்னால் தவறு.. அங்கு கூட யாரும் முகத்தில் பூசி வீணடிப்பதில்லை.. இது மாதிரி ஒரு கன்றாவிலும் நான் பங்குகொண்டதில்ல.. 2010 என்னோட பிறந்தநாளைக்கே நான் போகாமல் அனைவரும் கொண்டாடினர்.. அப்பறம் பெரும்பாலும் என்னை யாரும் அழைப்பதில்லை.. ரொம்ப நல்லதுன்னு விட்டுடேன்.. IT கம்பெனி இப்படி இருக்க பாரதியாருக்கு எங்க போய் கொண்டாடுவது. நானும், வினோத்தும் 2-3 நாளாக '' விஜயிடம் கேட்டுப் பார்த்தோம்.. அவரோ, 'ஜி ட்ரை பண்றேன்.. ஆனா இதுக்கு எல்லாம் யாரும் அவ்வளவு கேர் எடுத்துக்க மாட்டாங்க' என்றே சொன்னார்.. (ஆனால் மற்ற 'Fun activities, கிறிஸ்துமஸ் activities' இத்யாதிகளுக்கு கொஞ்சம் முக்கியத்துவம் தரப்பட்டது) 7-8 வருசமா இத எல்லாம் பார்த்த எனக்கு, அதுவும் உண்மை, சாத்தியமற்றது என்றே தோன்றியது..  இன்று சுதந்திரமாக இருக்கும் நமக்கு, அதை அனுபவிக்கும் நமக்கு, அதன் விலை தெரியவில்லை. 'தண்ணீர் விட்டா வளர்த்தோம்;சர்வேசா! செந்நீரால் காத்தோம்' என்ற பாரதியின் பாடல் தான் ஓடியது. என் டீம்லையும் நிறைய பேர் நல்ல பற்றோடு தான் இருக்கிறார்கள்.. ஆனால் இருக்கும் இடம், சூழ்நிலை, நடப்பு வட்டம் தான் அதற்க்கு இடம் தரவில்லை..  இருந்தாலும் ட்ரை பண்ணலாம்னு ஒரு எண்ணம்..
                          வினோத் கொஞ்சம் சப்போர்ட் பண்ணினான்..'செந்தமிழ் நாடென்னும்...., எந்தையும் தாயும்..., யாமறிந்த மொழிகளிலே..' என்று பாடிய கவிக்கு கேக் வெட்ட மனம் உட்படவில்லை.. நான், இராம், வினோத் மற்றும் மீனாக்ஷி சுந்தர் காரப்பாக்கம் போய் ஸ்வீட் பாக்ஸ் வாங்கி வந்தோம்.. பாரதியார் படத்தை என்னோட deskல் ஒட்டினேன். பாரதி கவிதைகள் புத்தகத்தை அருகில் வைத்தேன். வினோத் கொஞ்சம் அவசரப்பட எல்லாருக்கும் மெயில் அனுப்பினேன் -
'It is Great day for us - Bharathi's Birthday. Please serve sweets yourself at my office' என்று. அப்போதுதான் பலருக்கும் பாரதி பிறந்தநாள் பற்றித் தெரிந்தது. விஜய் வந்து எனக்குக் கை குலுக்கினார்..ETL டீம்மில் இருந்தவர் 'Who is பாரதி' என்று கேட்டது காதில் விழுந்தது..நான் கொஞ்சம் விலக்கினேன்.. 'ஓ பாரதியாரா?' என்று சட்டென்று பிடித்துக்கொண்டார்.  'நீங்க பாரதி இரசிகரா?'என்று மற்றுமொரு குரல் அதே ETL டீம்லிருந்து.. இல்ல 'பக்தன்'. எப்போதும் history பத்தி பேசும் சிவா, என் சீட்க்கு வந்து 'சூப்பர், கலக்கல்' என்றார். நானோ 'கலக்கியது பாரதி' என்றேன். Desk வந்து ஸ்வீட் எடுக்காதவர்களுக்கு ஹரி அவரவர் இடத்திற்கே போய்க் கொடுத்தார்.. அதை பார்க்க ரொம்ப சந்தோசமாய் இருந்தது.. 'சினிமா பிரபலங்கள் இல்ல, உணவு வீணாகவில்லை'. மிகவும் அமைதியாக முடிந்தது எங்கள் பாரதி விழா பன்னாட்டு அலுவலகத்தில்.. ஆனால் இதன் மூலம் கொஞ்சபேராவது பாரதி பற்றி அன்று ஒரு நாளாவது படித்தனர்.. அடுத்த தலைமுறைக்கு இதைக் கொஞ்சமாவது எடுத்துச் சென்ற உணர்வு இருந்தது.. இராம் ஒரு படி மேலே போய், பாரதி படத்தை ஒட்டியவுடன் நன்றாக கை எடுத்துக் கும்பிட்டான்.. அவனை அறியாமல்.. ஆம்..பாரதி தான் வணங்கத்தக்கவர்..ஒரு நாளோடு முடியவில்ல எங்களோட பாரதி விழா., மறுநாளும் தொடர்ந்தேன் அலுவலகத்தில், வேறொரு கோணத்தில்.





                       நேற்று நடந்த (14/12) பாரதி விழாவில் விசாக ஹரியின் கதாகாலக்ஷேபம்.. பாரதியின் கண்ணன் பாட்டு பற்றி. அருமை..ருக்மணி கல்யாணத்தில் பாரதி பாடல்கள்!:)




மேலுள்ள பாரதியின் பாடல் பற்றி குறிப்பு (tamilvu):
(ஸ்ரீ பாரதியார் புதுவையிலிருந்து வெளியேறிய பிறகு, எட்டயபுரத்தில் சிறிது லம் வசித்து வந்தார். ஜீவனத்திற்கு மிகவும்கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காலம்.இருந்தாலும் ஜமீந்தாரை நேரில் கண்டு, அவரது ஆதரவைப் பெறுவதற்கு விரும்பவில்லை. ஏனெனில், ஏற்கனவே இந்தசமஸ்தானச் சேவகத்தை உதறிவிட்டு வெளியேறியவர். மேலும், கவர்ன்மெண்டாரால் பாரதிக்கு ஏற்பட்டிருந்த தடைகளெல்லாம் இப்பொழுது நீங்கப்பட்டிருந்த போதிலும், பாரதியாருக்கு உதவி செய்தால் தனக்கு ஏதேனும் பாதகமேற்படுமோவென்று ஜமீந்தார் பயங்கொண்டிருந்தார். ஆதலின், பாரதியார் தனக்கு இச்சமயம் சரியான ஆதரவும் மரியாதையும கிடைக்காது என்று கருதி, வறுமையின் கொடுமையைப் பொறுத்துக்கொண்டிருந்தாரே யொழிய, ஜமீந்தாரின் உதவியை நாட வில்லை. ஆனால், இவர் படும் கஷ்டத்தைச் சகிக்காமல் இவரது நண்பர்களும் பந்துக்களும் இவரை மிகவும் நிர்ப்பந்திக்கவே, ந்தாருக்கு இவ்விரண்டு சீட்டுக் கவிகளையும் எழுதியனுப்பினார்.12 ரூபாய்க்குச் சேவகஞ் செய்துவந்த பழைய “சுப்பையா” வாகத் தன்னைக் கருதாமல் கவியரசனைப் புவியரசன் தக்கபடி ஆதரிக்கவேண்டு மென்பதை இந்தப் பாக்கள் நன்கு விளக்குகின்றன.
-- பாரதி பிரசுராலயத்தினர் குறிப்பு.)