Monday, May 27, 2013

எடுக்கவோ? கோக்கவே?



'Long Week end (Memorial day)' -3 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்தது. நாளை முதல் அலுவலக வேலை. (விடுமுறையிலும் அலுவலக வேலை தான் செய்தேன்:) ). பலவற்றைப் பட்டியலிட்டு வைத்தேன் வெளிக்கிழமை இரவே., ஒரு நாள் நம்மாழ்வார் உற்சவத்தில் சென்றது. இரண்டு நாளாவது எதாவது படிக்கலாம் என்றிருந்தேன். வழக்கம் போல் வீணாகவே சென்றது. நண்பர்களிடம் முத்துக்கள் பற்றி ஏதோ பேச்சு வந்த போது, பின்வரும் பாடல்/நிகழ்வு பற்றிக் காண வேண்டும் என்று தோன்றியது. கம்பராமாயணத்திலிருந்து இப்போது வில்லிபாரதத்தைப் புரட்டினேன். 

குந்தியிடம், அவளுடைய மூத்த மகன் 'கர்ணன்' தான் என்று சொல்லிய கிருஷ்ணன், அவனிடமிருந்து 2 வரங்களை வாங்கி வருமாறு கூறுகிறான்.துரியோதனனிடமிருந்துவிலகி பாண்டவரிடம் சேருமாறு குந்தி கர்ணனிடம் கேட்க, துரியோதனன் தன்னிடம் கொண்ட நம்பிக்கையின் காரணமாகவும், செஞ்சோற்றுக் கடன் கழிப்பதுமே தன் கடமை என்றும் கூறி அவனை விட்டு அகல மறுக்கிறான். அதற்க்குச் சான்றாக, தானும், துரியோதனன் மனைவியும்(பானுமதி) சொக்கட்டான் விளையாடிய போது, அவள் எழுந்து ஓடியதைத் தவறாக நினைத்து , அவள்மேகலையைப் பற்றி இழுக்க முத்துக்கள் சிதறி ஓடியது. அங்கு வந்த துரியோதனன் அதை 'எடுக்கவோ? கோர்க்கவோ?' என்றான். இவ்வாறு தன் மீது நம்பிக்கை கொண்டதாகக் கூறுகிறான்.



எதற்கு எங்கு தேடியும் சரியான விளக்கம் எனக்குக் கிடைக்கவில்லை. நெல்லை கண்ணன் சார் கூறியது தான் சரியாய்ப்பட்டது. முத்துக்களை எடுத்துக் கோர்க்கும் வகையில் தான் உள்ளதாகவும், தன் மனது சஞ்சலப்படவில்லை என்பதைக் காட்டவே 'எடுக்கவோ? கோர்க்கவோ?' என்றான், துரியோதனன். மிகச் சரி தான்!

'மடந்தை பொன்-திரு மேகலை மணி உகவே மாசு
அறத் திகழும் ஏகாந்த
இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப, "எடுக்கவோ?
கோக்கவே?'" என்றான்;
திடம் படுத்திடு வேல் இராசராசனுக்குச் செருமுனைச்
சென்று, செஞ்சோற்றுக்
கடன் கழிப்பதுவே, எனக்கு இனிப் புகழும், கருமமும்,
தருமமும்!' என்றான். (வில்லிபாரதம்)

மதுரைக்காஞ்சி

பொழுது புலரும் விடியலில், மதுரை எவ்வாறு இருந்தது, இதோ 'மதுரைக்காஞ்சி'யில்..

"ஓதல் அந்தணர் வேதம் பாட,
சீர் இனிது கொண்டு, நரம்பு இனிது இயக்கி,
யாழோர் மருதம் பண்ண, காழோர்
கடுங் களிறு கவளம் கைப்ப, நெடுந் தேர்ப்
பணை நிலைப் புரவி புல் உணாத் தெவிட்ட"

இது போல் 780 பாடல்களில் மதுரையின் மாண்பை விவரிக்கிறது மதுரைக்காஞ்சி! தமிழகத்தில் எந்த நகரத்திற்கும் இப்படி தனியாக ஒரு சங்க நூல் இருந்ததாக தெரியவில்லை! மாமதுரை போற்றுவோம்!


*******************************************************************************************


இரவு வேளையில், இரண்டாம் சாமத்தில், மதுரை நகரின் நிலை பற்றிய ‘உணவு வணிகர்’ குறித்த சங்க காலத்து பாடல்:

நல்வரி இறாஅல் புரையும் மெல் அடை
அயிர் உருப்பு அற்ற ஆடு அமை விசயம்
கவவோடு பிடித்த வகை அமை மோதகம்
தீஞ்சோற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க (மதுரைக் காஞ்சி, பா. வரிகள்: 624 - 627)

சங்க காலத்தில் இனிப்பு அடை, மோதகம் விற்கும் வணிகர் பற்றிய தகவலுடன், இரவு நேரத்தில் மதுரை நகரில் உண்பதற்குப் பல சிற்றுண்டிக் கடைகள் இருந்தன என்று அறிய முடிகின்றது.


************************************************************************************************************
பெருநில வேந்தர்களின் வெற்றிச் சிறப்பு, போர்த்திறம், போரைத் தடுத்து அறிவு புகட்டுதல், வள்ளல் தன்மையை பாராட்டுதல், வாழ்கையின் அகம், புறம் இன்னும் பலவற்றை உள்ளடக்கிய எட்டுத்தொகை நூல்களை மறந்து விட்டோம். அவை என்னவென்றாவது ஒரு சின்ன 'Refresh' பண்ணலாம்...

"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐந்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை".

'வாகை சூடவா' படம் தான் தெரியும். வேந்தர்கள் போரில் வென்றால் 'வாகை' மலர் சூடி வருவார்கள் (Ref: புறநானுறு) என்பது இந்த படம் பார்க்கும் போது யார் நினைவிற்கும் வராது என்பது வருத்தப்பட வேண்டிய விஷயமே!
*********************************************************************************

திருநாவுக்கரசரின் திருத்தாண்டகம்



சிவகாமியின் சபதம் என்றவுடன் நினைவுக்கு வருவது திருநாவுக்கரசரின் திருத்தாண்டகத்தில் அகத்துறை தழுவி அமைந்த பதிகம் --

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!!

***************************************************************************************


வான் கலந்த மாணிக்க வாசக -நின்
வாசகத்தை நான் கலந்து பாடுங்கால்
தேன் கலந்து பால் கலந்து
செழுங்கனித் தேன் சுவை கலந்து
ஊன் கலந்து உயிர் கலந்து
உவட்டாமல் இனிப்பதுவே!!

ஆலவாய் (மதுரை மாநகரத்தின் கதை)



இன்று படித்தது- ஆலவாய் (மதுரை மாநகரத்தின் கதை) பற்றிய பதிவில்.,
***********************************************************************************************************
1755-ம் ஆண்டு கர்னல் ஹெரான் திருமோகூருக்கு படையுடன் சென்று அங்குள்ள கோவிலைச் சிதைத்து, சூறையாடி, மக்களுக்கு இன்னல் பல விளைவித்தார். இதைப் பொறுக்காத கள்ளர்கள் பழிவாங்க, ஆங்கிலேயர் சூறையாடிய பொருட்களை ஒட்டகங்களில் ஏற்றிக்கொண்டு திருச்சிக்குத் திரும்புகையில் அவர்களைத் தாக்கி திருடிச் சென்ற சிலைகளையும் பொருட்களையும் கோவிலுக்கு மீட்டனர். (18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் பாண்டி நாட்டில் ஒட்டகங்களை சுமை தூக்கும் வாகனங்களாக்குகின்றர்! ஆச்சரியம் தான்.)

1812-ல் ரௌஸ் பீட்டர் (ரௌஸ் பாண்டியன் என்றும் பெயர் பெற்றவர்) மதுரை கலெக்டர் ஆனார். அவரை ஒரு மழைநாளில் ஒரு சிறுமி இடியால் நாசமாகவிருந்த வீட்டிலிருந்து கைபிடித்து அழைத்து வெளியேற்றி உயிர் காப்பாற்றியதாக “பீட்டர் பாண்டியன் அம்மானை” சொல்கிறது. அச்சிறுமி மீனாட்சி அம்மனே என்று நம்பிய பீட்டர் அம்மனுக்கு விலை உயர்ந்த கற்கள் நிறைய பதித்த தங்க மிதியடிகளை அளித்தார். இன்றும் அம்மனின் குதிரை வாகன புறப்பாட்டின் போது அம்மன் இம்மிதியடிகளையே அணியக்காணலாம்.

1704-1705-ம் ஆண்டு சௌராஷ்டிரர்கள் பூணூல் அணியலாமா என்ற வழக்கு ராணி மங்கம்மாள் முன் வந்த போது, அவர்களும் வடநாட்டிலிருந்து வந்த அந்தணர்களே ஆகையால் அவர்கள் பூணூல் அணியலாம் என்று கவிதார்க்க சிம்மம், தண்டலம் வெங்கட கிருஷ்ணய்யங்கார் போன்றோர் அடங்கிய அறிஞர் குழு தீர்மானிக்க, ராணி மங்கம்மாள் அவ்வாறே ஆணை இட்டாள். சாசனம் தெலுங்கில் உள்ளது.
*********************************************************************************************

ஈரடி வெண்பா



பள்ளி முதல் ஆண்டுமலரில் பிரசுரமாகி, பாராட்டுப் பெற்ற என்னுடைய simple ஈரடி வெண்பா! அதன் பிறகு அதற்க்கு மூடு விழா கண்டுவிட்டேன்.. :)

மரங்கள் அனைத்தும் மாயமாய் மாறினால்
மாள்வது மாந்தர்கள் தான்!

மாற்றங்கள் வந்தால்தான் மண்தீமை திய்ந்திங்கே
ஒற்றுமை ஓங்கும் உயர்ந்து!

குறுந்தொகையில் ஆரியர்



இன்று படித்தது., குறுந்தொகையில், மத்தள ஓசைக்கு ஏற்ப கயிற்றின் மீது ஆடுபவர்கள் 'ஆரியர்' என்று குறிக்கப்படுகிறது.

வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார்கொல் அளியர் தாமே 'ஆரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி'
வாகை வெண் நெற்று ஒலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னி யோரே.

இது எனக்கு புதிய செய்தி தான்.. பத்திரிக்கைகளுக்கு பூணூல் போடுபவர்களுக்கு இது FYI.,

தன் திரு நாமத்தைத் தானும் சாத்தியே



வியப்போடு இதைப் படித்தேன்., இராமன் தன் திருமணத்திற்குத் தயாராகும் போது, திருமஞ்சனம் கண்டு, நெற்றியில் திலகம்/திருமண் இட்டு வந்தான் என்பதைக் கம்பன், 'திருநாமம்' என்ற சொல்லாலேயே அழைக்கிறார்., இன்று 'திரு-நாமம்' என்பது நகைப்புக்குரிய சொல்லாகவே வழங்கப்படுகிறது.. பாவம், அவர்களுக்கு எங்கு கம்பனையும், தமிழையும் பற்றித் தெரியப்போகிறது..

என்றும். நான்முகன் முதல் யாரும். யாவையும்.
நின்ற பேர் இருளினை நீக்கி. நீள் நெறி
சென்று மீளாக் குறி சேரச் சேர்த்திடு
தன் திரு நாமத்தைத் தானும் சாத்தியே. (கடிமணப் படலம்)

கம்பர் காளியைப் பந்தம்பிடியென்று பாடியது



கம்பர், இராமாயணத்தைப் பெரும்பான்மை வெண்ணெய்நல்லூரிலும், சிறுபான்மை ஒற்றியூரிலும் இருந்துபாடினரெனவும், ஒற்றியூரில் இவரிருந்தபோது இந்நூலை இரவிலே பாடினரெனவும், அக்காலத்து மாணாக்கர் பலர் பிந்தாமலெழுதுவதற்கு அவ்வூர்க் காளியைத் தீப்பந்தம் பிடிக்கப் பாடினரெனவும் பின்வரும் பாடலால் அறியலாம்.,

***கம்பர் காளியைப் பந்தம்பிடியென்று பாடியது****

ஒற்றியூர் காக்க வுறைகின்ற காளியே
வெற்றியூர்க் காகுத்தன் மெய்ச்சரிதை - பற்றியே
நந்தா தெழுதுதற்கு நல்லிரவின் மாணாக்கர்
பிந்தாமற் பந்தம் பிடி. (தமிழ் நாவலர் சரிதை)

'புதிய ரஷ்யா ' என்ற கவிதையில் பாரதி

இன்று படித்ததில் என்னைப் பாதித்தது:

'புதிய ரஷ்யா ' என்ற கவிதையில் பாரதி, ஜார் சக்கரவர்த்தி ஆட்சியில் இரஷ்ய நாட்டில் பொய், சூது, தீமை எல்லாம் மலிந்திருந்தன என்கிறார்.
இது அன்றைய ரஷ்யா பற்றியது. ஆனால், ஒவ்வொரு வரியும் இன்றைய இந்தியாவில் நடைபெறுகிறது. உழுது விதைத்தவனுக்கு உணவில்லை. இன்னும் கொஞ்ச வருடங்களில் உழுவதற்கு இடமே இருக்காது!:( மாற்றம் வேண்டும்!

உழுது விதைத்து அறுப்பாருக்கு உணவில்லை;
பிணிகள் பல உண்டு; பொய்யைத்
தொழுது அடிமை செய்வார்க்குச் செல்வங்கள்
உண்டு; உண்மை சொல்வோர்க் கெல்லாம்
எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு;
தூக்குண்டே இறப்பது உண்டு.

சடகோபர் அந்தாதி

**மேதினியில் வைகாசி விசாகத்தில் அவதரித்தோன் வாழியே
வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே**

தோன்றா உபநிட தப்பொருள் தோன்றலுற் றார்தமக்கும்
சான்றாம் இவைஎன் றபோதுமற் றென்பலகா லும்தம்மின்
மூன்றா யினவும் நினைந்து ஆரணத் தின்மும் மைத்தமிழை
ஈன்றான் குருகைப் பிரான்எம் பிரான்தன் இசைக்கவியே! (கம்பர் -சடகோபர் அந்தாதி)

அறுவகை யாய சமயமும் ஐவகைத் தாம்புலனும்
உறுவகை யால்சொன்ன ஓட்டம்எல் லாம் ஒழு வித்தொருங்கே
பெறுவகை ஆறெனச் செய்த பிரான்குரு கூர்ப்பிறந்த
சிறுவகை யார்அவ ரைத்தொழு தோம்எம்மைத் தீண்டுகவே.(கம்பர் -சடகோபர் அந்தாதி)
********************************************************************************

வாழி எதிராசன் வாழி எதிராசன் வாழி எதிராசன்
என வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில்
தாழ்த்துவார் விண்ணோர் தலை.

அறுசமயச் செடி அதனை அடியறுத்தான் வாழியே
அறமிகு நல்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாரும் எதிராசன் இணையடிகள் வாழியே
சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி … இனி திருப்போடெழில்
ஞானமுத்திரை வாழி
வாழியரோ தக்கோர் பரவுந் தடஞ்சூழ் பெரும்பூதுர் முக்கோல்
பிடித்த முனி
********************************************************************************

ThiruvAimozhi in JET ashram, NewJersey

Amazing moments from yesterday. Yes., We completed Thiruvaimozhi khosti in ~7 hrs with multilingual bhakthas. We have celebrated vaikaasi vishakam in 'JET ashram, NJ' and we chanted the entire thiruvaimozhi in 2days. We were able to finish till 6th centum (4 hrs!) of thiruvaimozhi yesterday ('ulaga munda pEruvaayaa' saathumarai) and today, we completed with 'soozhlnthagandru' & Edu saathumurai. A real 'empErumAnAr dharisanam' with multilingual bhakthas & bhagavathaas. No one read entire Thiruvaimozhi before but managed to chant like khosti/sevakaalam with their own language books. Another spl, one of the bhakthas, made fresh 'thulasi mala' to VAKULABHARANAN (nammazhwar).
Pranams to my acharya/Guru Shri. U.Ve. TNC.Parthasarathy mama, who taught thiruvaimozhi, without that i can't get this great 'satsangam' here.




Tuesday, May 21, 2013

இராமர் பச்சை

**இராமர் பச்சை***

  'தேவாங்கர் சத்திரம்' என்று ஒரு சத்திரம், மதுரை விளக்குத் தூண் பகுதியில்.
ஒரு பெரிய கூடம் (hall). அதில் 4-5 கைநெசவில் உருவாகும் புடவைகள் விற்க்கும் துணிக்கடைகள் இருக்கும். பெரும்பாலும் 9 கஜம் (Yards) புடவை வாங்கவே அங்கு வருவார்கள். அங்கு முதலாளி-தொழிலாளி கிடையாது. நெசவாளர்களின் சொந்தக் கடைகள்.'சுந்தரம் சாரீஸ்' என்று ஒரு கடை தான் எங்கள் வாடிக்கை. நல்ல தரமானதாக இருக்கும். சிறு வயதில் நாங்கள் பண்டிகைக் காலங்களில் புடவை வாங்க அங்கு அம்மா, சித்தியோடு செல்வதுண்டு. கல்லாவில் இருப்பவர் , துணி எடுத்துப் போடுபவர்களின் முகங்கள் இன்னும் என் நினைவில் உண்டு. ஒவ்வொரு முறையும் 'அந்த 'இராமர் பச்சை' கலர் புடவை (6 / 9 கஜம்) எடுத்துப் போடுங்கோ' என்ற வார்த்தைகளைக் கேட்டிருக்கிறேன். (அங்கு மட்டுமல்ல, பல இடங்களில்:)). 'இராமர் பச்சை' நிறம் என்று உள்ளதாக நினைத்ததுண்டு! பல முறை யோசித்ததுண்டு,7-8 அடி உயர மனிதன், நீலம்/பச்சை நிறத்தில் இருந்தால் எப்படி இருக்கும்? இது சிறு வயதில் என் இராமனைப் பற்றிய ஒரு உருவகம். ஏறத்தாழ எல்லா படங்களிலும் அவ்வாறே இருக்கும். இன்று ஏனோ இது என் மனதில் பட, கம்பராமாயணத்தைத் திறந்தேன். அவதாரம் முதல், கம்பன் இராமனின் நிறத்தை, மை மற்றும் கரிய முகிலுக்கு ஒப்பாகவே சொல்கிறார். அவ்வளவு கருப்பு.. 'பொன்னார் மேனியனே' (சிகப்பு) என்று நாவுக்கரசர் சிவனைக் கூறுகிறார். நிறத்தில் என்ன இருக்கிறது, குணத்தில் தான் இருக்கிறது. இராமன் நிறம் தான் கருமை - இருள் அகற்றும் ஒளி படைத்தவன். கம்பனைப் படித்தவுடன் இன்று நேரில் காண்கிறேன் , '7-8 உயர மனிதன் மை போன்ற கருமை நிறத்தில்'..



         

**பிரளயத்தின்போது எல்லா உலகங்களையும் தனது வயிற்றிலே அடக்கி; அரிய மறைகளாலும் தெரிந்து கொள்ள
இயலாத பரம்பொருளாகிய அப்பரமனை; அஞ்சமனம் போன்று கரிய
மேகக் கொழுந்தின் அழகைக் காட்டிநிற்கும் ஒளிவடிவாய்த்
திகழ்பவனை; திறமையுடைய கோசலை, உலகம் மங்கலம் பொருத்த. ஈந்தாள்.**

ஒரு பகல் உலகு எலாம்
உதரத்து உள் பொதிந்து
அரு மறைக்கு உணர்வு அரும்
அவனை, அஞ்சனக்
கரு முகில் கொழுந்து எழில்
காட்டும் சோதியைத்,
திரு உறப், பயந்தனள்
திறம் கொள் கோசலை. (பால காண்டம்-திரு அவதாரப் படலம்)

**பாற்கடலைக் கடைந்த போது நஞ்சு தம்மை அழிப்பதற்கு எழுந்து வர; நடுங்கி, பிறைச்
சந்திரனை அணிந்துள்ள சிவந்த சடைமுடியினான சிவபிரானை அடைக்கலம் அடைந்த தேவர்களைப் போல்; கொடுஞ் சினமுடைய அரக்கர்களுக்கு அஞ்சி; வேள்விச் சாலையிலிருந்த முனிவர்கள் எல்லாம் மை போன்ற நிறத்தை உடைய இராம பிரானே!; நாங்கள் உன் அடைக்கலம் என்றார்கள்.**

நஞ்சு அட எழுதலும் நடுங்கி நாள் மதிச்
செஞ் சடைக் கடவுளை அடையும் தேவர் போல்
வஞ்சனை அரக்கரை வெருவி மாதவர்
‘அஞ்சன வண்ண; நின் அபயம் யாம் ‘என்றார்.(பால காண்டம்-வேள்விப் படலம்)

**அஞ்சன மை போன்ற கருநிறங் கொண்ட
(திருமாலாகிய) இராமனும்; தாமரைப்
பூவில் வாழ்பவளாம் திருமகளாகிய சீதையும், நாளை (ஒருவகையிலும்)
குறைவில்லாத திருமணம் கூடுவார்கள் என்று முரசறைந்த செய்தி
கேட்டவுடன்; சூரியன்,தனது குலமைந்தனான இராமனின் திருமணக் கோலத்தைக் காணத் தனது ஒப்பற்ற தேர்மேல் தன் சிவந்த ஒளிக்கற்றைகளால் இருளைக் கீறிக் உதித்தான்.**

அஞ்சன ஒளியானும்,
அலர் மிசை உறை வாளும்,
எஞ்சல் இல் மணம் நாளைப்
புணர்குவர் எனலோடும்,
செஞ் சுடர் இருள் கீறித்
தினகரன் ஒரு தேர் மேல்
மஞ்சனை அணி கோலம்
காணிய என வந்தான். (பால காண்டம்)

US-ல் இளவேனிற்க் காலம்

US-ல் இளவேனிற்க் காலம்

                     இளவேனிற்க் காலம் (Spring) தான் , ஆனால் இரண்டு நாட்களாக இங்கு ஓரளவு நல்ல மழை - விட்டு,விட்டுப் பெய்துகொண்டிருக்கிறது. இங்கு மட்டும் பருவம் தவறாமல் எப்படி மழை பெய்கிறது என்பது பற்றி சற்றே யோசித்தேன்.ஆண்டாளின் பாடல் தான் நினைவிற்கு வந்தது.'தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து' , மிக உயர்ந்த சிந்தனையோடு பாடப்பட்டது. அவ்வாறு மழை பெய்யக் காரணம் என்ன என்று பழைய தமிழ் இலக்கியத்திலும் சொல்லப்பட்டுள்ளது.

திருக்குறளில், பத்தினிப் பெண்களுக்கு ஏற்றம் தரும் விதமாக 'பெய்யெனப் பெய்யு மழை' என்கிறார் திருவள்ளுவர்.

            தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
            பெய்யெனப் பெய்யு மழை. (திருக்குறள்)

'திரிகடுகம்' என்ற நூலில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.
நல்ல மனைவி , தீமையை விலக்கி நன்மையைச் செய்கின்ற அரசன், நோன்புகளை முறைப்படி நடத்துகிறவன் ஆகியோர் சொன்னால் மழை
பொழியுமென்கிறார்.

             கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி கொண்டன
             செய்வகை செய்வான் தவசி கொடிதொரீஇ
             நல்லவை செய்வான் அரசன் இவர்மூவர்
            'பெய்'யெனப் பெய்யும் மழை. (நல்லாதனாரின் திரிகடுகம்)

விவேகசூடாமணியில் இதே போன்ற 3 காரணங்களைச் சொல்கிறார்.
தன்னலமற்று வேதமோதும் வேதியர்க்காக ஒரு மழை, நீதி வழுவா நிலை நின்ற செங்கோல் மன்னன் ஆட்சிக்கு ஒரு மழை, பத்தினிப் பெண்களுக்கு ஒரு மழை என்பது கணக்கு

                வேதம் ஓதிய வேதியர்க்கு ஒர் மழை
                நீதி மன்னர் நெறியனுக்கு ஓர் மழை
                மாதர் கற்புடை மங்கையர்க்கு ஓர் மழை
                மாதம் மூன்று மழைஎனப் பெய்யுமே. (ஆதிசங்கரின் விவேகசூடாமணி)

எல்லாவற்றையும் பார்க்கும் போது, சுஜாதா 'ஸ்ரீரங்கத்து கதை'களில் சொன்னது தான் நினைவிற்கு வருகிறது. பாதி பிராமணர்கள் அமெரிக்காவில் தான் இருக்கிறார்கள் என்பார். தன்னலமற்று வேதமோதும் வேதியர்கள் நிறையபேர் இங்கு இருக்கிறார்கள்:). இலக்கியத்தில் சொல்வது உண்மை தான்.

Sunday, May 19, 2013

நடந்தாய் வாழி காவிரி

நடந்தாய் வாழி காவிரி


                              காவிரி கண்காணிப்புக் குழு 'கன்னித் தீவு' கதை போல் தொடர்கிறது. தமிழகம் உச்ச நீதிமன்றக் கதவுகளைத் தட்டுகிறது. ஏதோ தோன்றியது , காவிரித்தாய் பற்றிப் படிக்க வேண்டுமென்று. சிலப்பதிகாரப் பக்கங்களைப் புரட்டினேன். இளங்கோவின் வர்ணனை இது நதியா, இல்லை கடலா அல்லது கண்மாயா என்று தோன்றுமளவிற்கு காவிரி ப்ரவாகம் எடுத்து ஓடியிருக்கிறது. எங்கள் ஊர்களில் எல்லாம் கண்மாய்ப் பாசனம் தான். கரைகளில் முட்டி மோதும் அலையும், காலாங்கரை/வாய்க்காலில் ஓடும் நீரின் வேகத்தையும் கண்டிருக்கிறேன்.நான் அவ்வளவாக இந்த சுகங்களை அனுபவித்ததில்லை. வானம் பார்த்த எங்கள் ஊரில் தண்ணீர் வரும்போது பார்த்திருக்கிறேன். வைகை ஆற்றில் சில முறை பார்த்திருக்கிறேன். நான் இன்றுள்ள வறண்ட காவிரியைத் தான் பார்த்திருக்கிறேன். 

                            இளங்கோவின் வர்ணனையை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. காவிரியின் வேகமும், அழகும் அந்த அளவிற்கு இருந்திருக்கிறது.
புதிய நீர் வந்தது கண்டு உழவரும், மக்களும் ஆரவாரம் செய்யும் ஓசையும், மதகிலே தேங்கிச் செல்லுதலால் உண்டாகும் ஓசையும் கேட்டதாகக் கூறுகிறார்.

உழவ ரோதை மதகோதை
உடைநீ ரோதை தண்பதங்கொள்
விழவ ரோதை சிறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி
விழவ ரோதை சிறந்தார்ப்ப 
நடந்த வெல்லாம் வாய்காவா
மழவ ரோதை வளவன்றன்
வளனே வாழி காவேரி. (புகார்க் காண்டம்-கானல் வரி)

                               'நடந்தாய் வழி காவேரி' என்பதால் தானோ , இன்று நடந்து வருகிறாள் போல கர்நாடகத்திலிருந்து:(

Saturday, May 18, 2013

வெள் எருக்கஞ் சடைமுடியான் வெற்பு எடுத்த திருமேனி

இராவணன் திருக்கயிலாய மலையைத் தூக்கியதாகப் படித்திருக்கிறேன். ஆனால் இதுவரை அது பற்றிய குறிப்புகளைப் படித்ததில்லை. இன்று சற்றே 'Google' செய்த போது பின்வரும் பாடல்கள் கிடைத்தன. கம்பரும் அந்த நிகழ்ச்சிப் பற்றிச் சொல்லிருக்கிறார் (வெள் எருக்கஞ் சடைமுடியான் வெற்பு எடுத்த). திருஞானசம்பந்தரின் திருமுறையிலும் சொல்லப்பட்டிருக்கிறது.

இலங்கைக் கிறைவன் விலங்க லெடுப்பத்
துலங்கவ் விரல் ஊன்றலும் தோன்றலனாய்
வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான்
அலங்கல் லிவளை அலராக் கினையே. (திருஞானசம்பந்தரின் திருமுறை)

இலங்கைக்கு அரசனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்த போது, அவனது ஆற்றல் அழியுமாறு விளங்கும் தனது காற்பெருவிரலை ஊன்றிய அளவில் அவன் செய்வதறியாது இடர்ப்பட்டு மீண்டு, வலமாக வந்து பணிந்து வரம் கொண்ட மருகற்பெருமானே! மாலைசூடி மணம் கொள்ள இருந்த இவளுக்குத் துன்பம் வரச்செய்தனையே! இது தக்கதோ?
*************************************************************
‘வெள் எருக்கஞ் சடைமுடியான் வெற்பு எடுத்த
திருமேனி, மேலும் கீழும்
எள் இருக்கும் இடனின்றி, உயிர் இருக்கும்
இடன்நாடி, இழைத்தவாறோ?
“கள் இருக்கும் மலர்க்கூந்தல் சானகியை
மனம் சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் ‘‘ எனக் கருதி, உடல் புகுந்து,
தடவியதோ ஒருவன் வாளி? (இராவணன் வதைப் படலம்)

Friday, May 17, 2013

இராமபிரான் திருஅவதாரம்

***இராமபிரான் திருஅவதாரத்தைப் பின் வரும் பாடலால் கம்பன் கூறுகிறான். நிலமகள் மகிழ்ச்சியில் ஓங்க, வானுலகில் வாழும்
தேவர்களும் மகிழ்ச்சியினால் எழுந்து துள்ளி ஆட, கடக ராசியில், புனர்பூச நக்ஷத்ரத்தில் அவதரித்தான் இராமன். இங்கு சித்திரை மாதமும், நவமியும் கூறப்படவில்லை. (பங்குனி என்ற ஒரு கருத்தும் உண்டு).***

ஆயிடை. பருவம் வந்து அடைந்த எல்லையின்.
மா இரு மண்மகள் மகிழ்வின் ஓங்கிட.
வேய் புனர்பூசமும். விண்ணுளோர்களும்.
தூய கற்கடகமுc. எழுந்து துள்ளவே. (திரு அவதாரப் படலம்-103).

**மற்றை மூவரும் அடுத்தடுத்த நக்ஷத்திரத்திலேயே அவதரித்ததாக கம்பன் கூறுகிறார்!***

பரதன் - "பூசமும் மீனமும் பொலிய"
இலக்குவன் - "அளைபுகும் அரவினோடும் (ஆயில்யம்)"
சத்ருக்கனன் -- "மடங்கலும் மகமுமே"

(புனர்பூசம்-பூசம்-ஆயில்யம்-மகம் என்பதே வரிசை)

ஆசையும் விசும்பும் நின்று அமரர் ஆர்த்து எழ
வாசவன் முதலினோர் வணங்கி வாழ்த்து உறப்
பூசமும் மீனமும் பொலிய நல்கினாள்
மாசு அறு கேகயன் மாது மைந்தனை. (திரு அவதாரப் படலம்-106).

தளை அவிழ் தரு உடைச் சயிலகோபனும்
கிளையும் அந்தரம் மிசைக் கெழுமி ஆர்த்து எழ
அளை புகும் அரவினோடு அலவன் வாழ்வு உற
இளையவள் பயந்தனள் இளைய வீரனை.(திரு அவதாரப் படலம்-107).

படம் கிளர் பல் தலைப் பாந்தள் ஏந்து பார்
நடம் கிளர்தர மறை நவில நாடகம்
மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட
விடம் கிளர் விழியினாள் மீட்டும் ஈன்றனள்.(திரு அவதாரப் படலம்-108)

*********************************************************************************


ததஸ்ச த் வாத ஸே மாஸே சைத்ரே நவாமிகே திதௌ
நஷத்த்ரே திதி தை வத்யே ஸ்வோச்ச ஸ்ம்ஸ்தே ஷூ பஞ்சஸூ
க்ரஹேஷீ கர்க்கடே லக் நே வாக்பதா விந்து நா ஸஹ‌
ப்ரோத் யமாந்ந் ஜக ந்நாத ம் ஸர்வ லோக நமஸ்க்ருதம்
கௌஸல்யா ஜநயத் ராமம் ஸர்வலஷன ஸம்யுதம்
---இது ராமனின் ஜாதக் குறிப்பை மிகத் துல்லியமாகச் சொல்லும் வால்மீகியின் ஸ்லோகம்
இதுவே கம்பனை
"ஆயிடைப் பருவம் வந்து அடைந்த எல்லையின்
மாயிரு புவிமகள் மகிழ்வின் ஓங்கிட
வேய்புனர் பூசமும் விண்ணுளோர் புகழ்
தூயகர்க் கடகமும் எழுந்துள்ளவே"
----என ராமனின் ஜாதகமாக தமிழில் எழுத வைத்தது
*********************************************************************************

Thursday, May 16, 2013

ஹிட்லர்

"பல முட்டாள்கள் சேர்ந்து நடத்துவது ஜனநாயகம் என்றால், அதை விட ஒரு புத்திசாலியின் சர்வாதிகாரம் மேல்!" என்று ஹிட்லர் சொன்னதாக இன்று எங்கோ படித்தேன். அது உண்மையானால், பலவற்றில் இந்தியாவிற்குப் பொருந்தும் கசப்பான உண்மை:(

***********************************************************************
ராமானுஜம்: உலகமே கண்டு வியந்த மனிதர்களில், இவரும் ஒருவர். இன்று அவரின் 125 வது ஜெயந்தி! ராமானுஜம் திருவல்லிக்கேணியில் (அனுமந்தராயன் கோவில் தெரு) சிலகாலம் தங்கிய வீட்டிருக்கு அருகில் நாங்கள் 6 ஆண்டுகள் இருந்தோம். அந்த வீட்டைப் பார்த்து நாங்கள் பல நாட்கள் வியப்பதுண்டு!. 1.5 ஆண்டுகளுக்கு முன்பே அந்த வீட்டை இடித்து 'apartment' கட்ட துவங்கிவிட்டார்கள். அந்த வீட்டில் பல குடும்பங்கள் இன்று இருக்கும். 'Genius' என்பதற்கு அகராதியின் பொருள் இவர் தான். இன்று இயங்கும் 'ATM' இவரின் theorem தான். வசதிகள் இல்லாத காலத்தில், வாய்ப்புகள் பல வார்த்து, கணிதமே வாழ்க்கையாய் வாழ்ந்தவர். இன்றோ நாம் '5*6' என்பதற்கு விடை காண 'கைபேசி' - 'calculator' தேடுகிறோம் !ராமானுஜம்
***************************************************************************
இன்று படித்ததில் ரசித்தது! நம் அரசியல்வாதிகளின் உத்திகள்-
ஹிட்லர் தனது ஊடக அணுகுமுறைகள் மற்றும் போர் உத்திகள் குறித்து கூறியவற்றில் சில:
"பெரிய பொய்யர்கள், பெரிய மந்திரவாதிகளுக்கு ஒப்பானவர்களே"
"தாங்கள் ஆட்சி செய்யும் மக்கள் சிந்திக்கும் ஆற்றல் இல்லாதவர்களாக இருப்பது அரசுகளின் அதிர்ஷ்டம்தான்"
"உண்மை ஒரு விஷயமே இல்லை; வெற்றிதான் முக்கியம்"
"பொய்யைப் பெரிதாகச் சொல்லுங்கள், அதை எளிமைப்படுத்துங்கள், அதேபொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லுங்கள், நிச்சயமாக மக்கள் அதை நம்பிவிடுவார்கள்"
******************************************************************************

இராமன் ஸந்த்யாவந்தனம் செய்தமை பற்றிக் கம்பன்

***இராமன் ஸந்த்யாவந்தனம் செய்தமை பற்றிக் கம்பன்***

இன்று அலுவலகத்திலிருந்து வரும் வழியில், ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி அண்ணாவின் ஸந்த்யவந்தனம் உபன்யாசம் (iphone app-la தான்) கேட்டுக்கொண்டு வந்தேன். அதன் முக்கியத்துவம் பற்றி மிகவும் அருமையாக, அவருக்கே உரிய பாணியில் சொன்னார். இராமரும், கிருஷ்ணரும் ஸந்த்யவந்தனம் செய்ததாக வால்மீகி இராமாயணம், மகாபாரதத்திலிருந்து குறிப்புகளோடு விளக்கினார். இல்லம் விரைந்ததும் கம்ப இராமாயணத்தைப் புரட்டினேன். கம்பனும் பல இடங்களில் இது பற்றிக் குறிப்பிடுகிறார்.



சந்தி வந்தனைத் தொழில் முடித்து தன் நெடும்
புந்தி நொந்து, இராமனும் உயிர்ப்ப, பூங் கணை
சிந்தி வந்து இறுத்தனன், மதனன்; தீ நிறத்து
அந்தி வந்து இறுத்தது; கறுத்தது அண்டமே. (யுத்த காண்டம்).

இது காட்டில் சீதையைத் தொலைத்து வாடும் போது ஸந்த்யவந்தனம் செய்ததைக் கூறுகிறது. சூர்ப்பணகை இராமனைக் காணும் இடத்திலும் (**சந்தி நோக்கினன் இருந்தது கண்டனள்**) ஸந்த்யாவந்தனம் பற்றிக் கூறுகிறார். சுமந்திரன் இராமனைக் கங்கைக் கரையில் விட்டுச் சென்ற போது ஸந்த்யாவந்தனம் செய்ததாக உபன்யாசங்களில் கேட்டதுண்டு. அது பற்றிக் கம்பராமாயணத்தில் நான் தேடிய போது கிடைக்கவில்லை.
இராமன் தான் எந்த நிலையில் இருந்தாலும் ஸந்த்யாவந்தனத்தை நிறுத்தியதில்லை என்பதையும், தனக்கு விதிக்கப்பட்ட க்ரியையை மீறக்கூடாது என்பதயுமே இது காட்டுகிறது. இராமனின் பாதையில் சிறிதாவது செல்ல நாளையிலிருந்து முயல்கிறேன்!

Monday, May 13, 2013

ஸ்ரீரங்கம் ப்ரனவாகார விமானம்

****கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கம்! ஸ்ரீரங்கம் ப்ரனவாகார விமானம்****

வீடணனுக்கு இராமன் தங்கள் குலத்தார் தொழுத பிரணவாகார விமானமும், அரங்கனையும் கொடுத்தருளினார் என இராமாயணக் கதைகள் கூறுகின்றன. இதுவே இன்றைய ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஒன்பது கலசங்களுடன் கூடிய விமானம். இது பற்றி கம்பராமாயணத்தை ஆராய்ந்த போது கீழுள்ள பாடல் மட்டுமே கிடைத்தது. 



என்று உரைத்து, அமரர் ஈந்த
எரிமணிக் கடகத்தோடு
வன்திறல் களிறும், தேரும்,
வாசியும், மணிப்பொன் பூணும்,
பொன்திணி தூசும், வாசக்
கலவையும், புதுமென் சாந்தும்,
நன்று உற, அவனுக்கு ஈந்தான்
நாகணைத் துயிலில் தீர்ந்தான். (விடை கொடுத்த படலம்)

பாடல் விளக்கம்:
பாம்பணைத் துயிலை நீக்கி அவதரித்த இராமன், வீடணனுக்கு நன்மை பொருந்த;தேவர்கள் கொடுத்த ஒளிவீசும் மணிகள் அழுத்திய கடகத்தோடு, களிறும் தேரும் வாசியும் மணிப்பொன் பூணும் பொன்திணி தூசும் வாசக் கலவையும் புதுமென் சாந்தும் கொடுத்தான் என்றே கம்பர் சொல்கிறார்.

Rutgers Universityயில் 3 மணி நேரம்

Rutgers Universityயில் 3 மணி நேரம் (05/13/2013): 

                      கர்நாடக இசைக் கச்சேரி செல்லும் நண்பர்கள் இல்லாதால் இன்றும் தனியாகவே சென்றேன். எனக்கு மிக விருப்பமானவர்களின் கச்சேரி - Priya Sisters (Sri.M A. Krishnaswami - Violin; Sri Neyveli Skanda Subramanian - Mridangam). இருவரின் குரலையும் பிரித்தே பார்க்க முடியாது என்பதை இன்று உணர்தேன். நடந்த இடம் - 'Rutgers University campus'. என்னைப் பொருத்தவரை கிட்டத்தட்ட 70% இந்தியர்கள் வசிக்கும் பகுதி, அதிலும் 50% நம்மவர்கள் (நம்படவா தான் ஜாஸ்தி :)). வெளிநாட்டில் இருப்பதை ஒரு ~3 மணி நேரம் மறந்தேன். நான் எதிர்பார்த்துச் சென்ற இரண்டு பாடல்கள் 'list'ல் இருந்தது. 

                    கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பாடலோடு அட்டகாசமான தொடக்கம். அடுத்து நம்ப, 'பாபநாசம் சிவன்' அவர்களின் 
ஸ்ரீ வாதாபி கணபதியே நின் திருவடியே (சகானா) சும்மா chance-se இல்ல! அப்பறம் பிதாமகர் தியாகராஜரின் 2 கீர்த்தனைகள். 
காருபாரு சேயுவாரு கலரே நீவலே சாகேத நகரினி (முகாரி) , என்னடு ஜூதுனோ இன குல திலக (கலாவதி). தியாகராஜரின் இராமர் அங்கு இருப்பதாகவே உணர்ந்தேன். சிறிதும் சப்தம் இல்லாது ஒரு ஆலயமாகவே இருந்தது.

                    நான் எதிர் பார்த்துச் சென்ற 'ஜகஜ்ஜனனீ சுஹபாணீ கல்யாணி' மிகுந்த ஆரவாரத்துடன் முடிய, அன்னமாச்சாரியாரின் 'நிகம நிகமாந்த' ultimate. (all time favorite:)). அடடா, மேலும் இரண்டு சாய் பஜன்.நீண்ட நாட்களுக்குப் பிறகு ~3 மணி நேரம் பயனுள்ளதாக, என்னை அறியாமல் செலவிட்ட மகிழ்ச்சியில் வெளியே வரும் போது, அவர்களிடம் (Priya Sisters) இரு வார்த்தைகள் பேசியதில் அதை விட மகிழ்ச்சி! அலுவலக வேலை இருந்தாதால், Malladi Brothers கச்சேரி கேட்காமல் வீடு வந்து சேர்ந்தேன்!

             (சில இராகங்கள் அங்கு தெரிந்தது, மற்றவை Google தான்:). நம்ப ஊர் மாதிரி 'Indian Snacks' என்ற பலகையுடன் வடை, காபி இத்யாதி. இங்கும் இதைச் சுவைக்க பலர் வந்திருந்தார்கள் (!). பக்கத்திலேயே 'Donkin Donuts' வேறு.)