Tuesday, April 3, 2018

சிந்து பூ மகிழும் சிந்துபட்டி


"சௌலப்யத்திற்கு எல்லை நிலம் அர்ச்சாவதாரம்"

"எய்துமவர்க்கு இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது" - மணவாள மாமுனிகள்

"தமர் உகந்தது எவ்வுருவம்? அவ்வுருவந் தானே;
தமருகந்தது எப்பேர்?மற் றப்பேர் - தமருகந்து,
எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே?
அவ்வண்ணம் ஆழியா னாம்" - பொய்கையார்

எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை, வானவர் வானவர் கோனொடும்,
சிந்துபூ மகிழும் திருவேங் கடத்து,
அந்த மில்புகழ்க் காரெழில் அண்ணலே - திருவாய்மொழி, நம்மாழ்வார்

(நித்யஸூரிகள் தங்களில் தலைவரான ஸேனை முதலியரோடு கூட
தூவின புஷ்பங்கள் செவ்விகுன்றாதிருக்கப்பெற்ற திருமலையில் மூடியில்லாத புகழையுடையவனும் நீலநிறத்தழகுடையனுமான எம்பெருமான் எம்குலநாதன் )

'வணங்கும் துறைகள் பலபலவாக்கி' என்ற ஆழ்வார் வாக்கிற்கிணங்க, எம்பெருமான் பல இடங்களில், நம்மில் ஒருவனாய் இருக்கிறான்.. அப்படியாக அர்ச்சவதாரங்களில் இருந்து 'பின்னானார் வணங்கும் சோதியாகி', பல திவ்ய தேசங்கள், அபிமான தளங்களில் இருந்து நம்மை காத்து வருகிறான்.. அது போல் மதுரை பக்கத்து தளங்களில், நிறைய உண்டு.. பெரும்பாலும் நாயக்கர்கள் அபிவிருத்தி பண்ணினது.. பாண்டியர்கள் பெரும்பாலும் சைவர்கள், ஜடாவர்மன் மட்டும் வைஷ்ணவனாகி நிறைய கைங்கர்யம் செய்துள்ளான்.. நாயக்கர்கள் இருபுறமும் இருந்தாலும் பெரும்பாலும் வைஷ்ணவ முறைப்படியே வாழ்ந்து, கோவில்களை நிர்மாணித்து, காத்து வந்துள்ளனர்.. அந்த வகையில், மதுரை-உசிலம்பட்டி அருகில் உள்ளது 'சிந்துபட்டி' என்ற கிராமத்து கோவில். முழுக்க முழுக்க நாயக்கர்கள் நிர்மாணம் செய்து, இன்று வரை அவர்களாலேயே பாதுகாக்கப்பட்டு வருகிறது.


இந்த ஊரில் மிகவும் பழைய வெங்கடாஜலபதி திருக்கோவில் இருக்கிறது.. இந்தப்பக்கம் உள்ள பலருக்கும் 'குல தெய்வம்'.. திருப்பதிக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகள் எல்லாம் இங்கு செலுத்துவார்கள். நான் இந்த முறை போனதும் திருமலைக்குப் போனமாதிரி தான் இருந்தது.. எவ்வளவோ நாம் ட்ரை பண்ணுவோம் திருமலைக்கு, கடைசியில் 'அவர்' தீர்மானிப்பது தான் நடக்கும்..அது போல இந்த ஊருக்கும் நடந்ததிலிருந்தே தெரிந்தது, இது திருமலை என்று.ஏதோ சிலநாட்களாய் கடுப்பான வேலையில் உழன்று வர,திடீரென்ற பிளான், அதுவும் சனிக்கிழமை. சரி போய்விடலாமென்று மதுரையிலிருந்து கிளம்பினோம்.

 'செக்கானூரணி ஊரிலிருந்து ஒரு 2-3 மைல் வந்து இடது பக்கம் திரும்புங்க, ஒரே பாதை தான். ஒத்தையடி பாதை கணக்கா போகும் திடியன் மலை வரைக்கும்.. அங்க இடதுபக்கம் திரும்புங்க.. அப்பறம் திருமங்கலம் ரோடு வரும்.. வழில யாரும் இருக்க மாட்டாங்க கேட்க கூட'.. நம்ப நிகில் ஆட்டோக்காரர் மதுரையிலிருந்து வந்த ஓலா (!) டிரைவர்கிட்ட சொன்னது.. சொன்னது போலவே ஒத்தையடி பாதை, இருபுறமும் வயல். நெல் இருந்திருக்கும்.. சில இடங்களில் வெண்டைக்காய், கத்தரிக்காய் போட்டிருந்தார்கள்.. வழியில் குழப்பம் வர, கேட்க ஆள் இல்லாமல், 'சார், கூகுளை பாருங்க' டிரைவர் சொன்னார்:).. இருந்த சிக்கனலில் மேப் லோட் ஆனது.. ஓரளவிற்கு மேல் டெக்னாலஜி கைகொடுக்கவில்லை.. வழியில் இருந்த கைலி கட்டிய ஒருவரிடம் கேட்டோம்.. 'ஸ்ட்ரெயிட்டா போங்க'.. சில நிமிடங்களில் 'சிந்துபட்டி' வந்தது...

கோவில் இருக்கும் இடமும், ஊருக்கும் சம்பந்தமில்லாமல் இருந்தது.. கிராமத்து கோவில் என்பது சரியாய் இருந்தது.. மாட வீதிகள், அஹ்ரகாரங்கள் எல்லாம் இப்போது இல்லை.. கோவிலுக்கு நேரே ஒரே வீதி, அதில் தான் உற்ஸவர் புறப்பாடு வருவார்.. ஆடு, மாடு , கோழி எல்லாம் ஓடிக்கொண்டிருந்தது.. முன்னொருமுறை போனபோது கோவில் வாசலில் ஒலித்த கண்ணதாசன் சினிமா பாடல் இந்த முறை இல்லை என்ற ஒரு ஆறுதல் .. கோவிலின் உட்புறம் நேர்மாறாய் அமைந்தது.. நாயக்கர்கள் கட்டிடக்கலை என்று பார்த்தவுடன் சொல்லலாம்.. தூணுக்குத்தூண் ஒரு நாயக்கரின் சிற்பம் இருக்கும்.

வாசலில் பெரிய கோபுரம்.. அதைக்கடந்து உள்ளே நுழையும் முன், கோபுர வாசலில், இரண்டு யானை சிலைகள், கவனிப்பாரற்று இருந்தது மேலும் வருத்தமாய் இருந்தது.. கொடி மரம்.. இங்கு கொஞ்சம் வித்தியாசமானது.. மேலே கருடன்.. இதற்க்கு இங்கே 'கம்பம்' என்று வழங்கி 'கம்பம் கழுவுதல்' நடக்கிறது.. அதாவது கொடிமரத்திற்கு திருமஞ்சனம், பூஜைகள் எல்லாம் தனி. 'விபூதி' தரப்படுகிறது.. இதில் 'கருப்பன்' இருப்பதாய் நம்புகிறார்கள்..

சற்றே உள்ளே போக, 'அலர்மேல் மங்கை' தாயார் திருச்சானூர் போலவே, 'அல்லி நாள் தாமரை மேல் ஆரணங்கின் இன் துணைவி'யாக தாமரை மேல் வீற்றிருக்கிறார்..  பெருமாள் சன்னதி தனி.. கூடலழகர் போல் சாயலில், நின்ற திருக்கோலத்தில் உபய நாச்சிமாரோடு வெங்கடாஜலபதி.. உற்ஸவர் அழகு சொல்லிமாளாது.. கொஞ்சம் கள்ளழகர் போல் இருந்தார், மூர்த்தி சிறியவராய்.. 'ஓங்கி உலகளந்த உத்தமன்', கீர்த்தி பெரிதாய் இருப்பார்.. நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், இராமானுசர், மணவாளமாமுனிகள் என்று எல்லாம் ஆச்சாரியர்களும் பழைய கால உற்ஸவ மூர்த்திகளாய் இருந்தார்கள் உற்ஸவ மூர்த்தியாய்.. எனக்கு அன்று  ஒரு யோகம், உபநிஷத், திராவிட வேதம் எல்லாம் தனியாய்ச் சொல்ல.. இது போன்ற கோவில்களில் தான் அமர்ந்து சொல்ல வேண்டும்.. பெருமான் அருமையாய் திருச்செவிமடுத்தார்.. நாம் என்ன சொன்னாலும் தடுக்க ஆள் இல்லை.. கேட்க பெருமான் இருந்தார்..அருகிலிருக்கும் திடியன் மலை சிவன் கோவில் நடராஜர் இங்கு இருக்கிறார் பாதுகாப்பு கருதி.. சற்றே வேதனை.. அவர்க்கென்ற நியமன பூஜைகள் இல்லை.. வைணவ முறையோடு வாழ்கிறார் அன்று நான் சொன்ன ஆழ்வார் பாசுரங்களை கேட்டுக்கொண்டு பொன்னார் மேனியன் அம்பலத்தாடும் கூத்தனாய்..

கோவிலைச் சுற்றி வந்தேன்.. கொஞ்சம் கவலையாய் இருந்தது. வசந்த மண்டபம், ஊஞ்சல் மண்டபம், யாகசாலை (மண்டபம்), பரமபத வாசல், வாகன மண்டபம் எல்லாம் பழைய காலக் கற்களால் கட்டப்பட்டு இருந்தது.. இவற்றில் எல்லாம் உட்சவம் கண்டருளி வருஷங்கள் பலவானது தெரிந்தது அங்கிருந்த குப்பைகளைக் காணும் போது..வேலி போட்ட வாகன மண்டபத்திலிருந்து யானையும் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது. 'ஆதிமூலமே' என்று அழைத்தவுடன் 'ஆணைக்கு நீ அருள் செய்தமையால்' என்ற ஆழ்வார் சொற்படி எப்போது இந்த ஸ்ரீனிவாசர் இந்த யானைக்கும் அருள் புரிவார் என்று தெரியவில்லை. கருடன் தன கைகளை உயர்த்தி 'எம்பெருமான் தன் வரவு பார்த்தே' அமர்ந்திருந்தார். மற்றை வாகனங்களும் இருந்தனர் அவர்களின் பயன் முழுமையடையாமல்.. ஒரே காரணம் உற்ஸவம் எதுவும் நடப்பதில்லை..

                 மேலும் என்னை வெகுவாய்க் கவர்ந்தது தூண்கள் தான்.. அனைத்துத் தூண்களிலும் ஒரு நாயக்கரின் சிலை, கையைக் கூப்பிக்கொண்டு, நம்மை அழைப்பது போலும், எம்பெருமானைத் தொழுவது போலவும்.. ஒரு இடத்தில் உற்றுக் கவனித்தேன்.. திருமலை நாயக்கரின் சிலை இருந்தது.. இடையில் குறுவாளுடன், கொஞ்சம் வயிறு பெருத்து.. அருகில் பாண்டிய சிறப்பச் சின்னமான 'யாழி' செதுக்கப்பட்திருந்தது.. இங்கும் பாண்டியர்களின் கைங்கர்யம் இருந்திருக்கலாம் என்றே நினைத்தேன். கொடிமரத்தின் மேலே கருடன் போன்று இருந்தது.. மதுரைப்பக்கங்களில் இது போல் பார்த்த நினைவில்லை. கேரளாவில் இதுபோல் இருந்தது.

மதியம் 12-க்கு மேல் ஆகியும் பக்தர்கள் ஒவ்வொருவராய் வந்து கொண்டுதான் இருந்தார்கள். கையில் வந்த பட்டர் ஸ்வாமி மிகவும் பொறுமையாய் தனித்தனியாய் அர்ச்சனை, கொடிமர (கம்பம்) பூஜை என்று மாறி மாறி செய்து கொண்டிருந்தார் உணவு கூட உண்ணாமல். ஒரு மணிக்கு அவரிடம் (உப்பிலி ஸ்ரீனிவாசன்) பேச்சுக்கொடுத்தேன்.. 'அண்ணா, இது நாயக்கர் கால கோவில்.. இப்போ அரசாங்கம் பாக்கறது.. ஆனா 20 பட்டி நாயக்கர்கள் தான் இன்னமும் கைங்கர்யம் பண்றா. அவாளோட கண்ட்ரோல் தான். 2003-ல ஸம்ப்ரோக்ஷணம் ஆச்சு. அப்பறம் ஒரு வருஷம் பிரம்மோற்சவம் ஆச்சு.. அப்பறம் உற்ஸவம் எடுத்துப்பண்ண ஆள் இல்லை. புரட்டாசி சனி, கார்த்திகை, ஸ்ரீ ஜெயந்தி, நவராத்ரி இது எல்லாம் விஷேஷம். பெருமாள் புறப்பாடு இருக்கும்.. இங்க ௩ பேர் தான்  பெருமாள் கைங்கர்யத்திற்கு இருக்கோம்..அது தான் கொஞ்சம் கஷ்டமாய் இருக்கு.. இருந்தாலும் பரம்பரையா பாக்கறோம்.. கோவில் தல வரலாறுன்னா, நிறைய குடும்பம் ஆந்திராவிலேர்ந்து தெற்கு நோக்கி வரா. இந்த ஊர்ல ஒரு நாள் தங்கரா.. இந்த பெருமாள் 'பழைய பெருமாள் கோவில்'ன்னு கண்மாய்க்குள்ள இருந்தார்.. போய் ஆராதனம் பண்ண முடியலை.. அதனால 'புளியந் தோப்பான' இந்த இடத்துல அந்த ஆந்திர நாயக்கர்கள் எல்லாம் கோவில் எழுப்பி, பெருமாளை கண்மாயிலிருந்து எழுந்தருளப்பணறா.. '.. சொல்லி முடிக்கும் போது கோவில் நடை சாத்த மணியானதை அரசாங்க அலுவலர் சுட்டிக்காட்டினார். 'சரி' என்று கிளம்பினோம். ஏதோ ஒரு குழப்பம்.. சட்டென்று தோன்றியது கோபுரத்தைத் தாண்டும் போது, 'நம்மாழ்வார் அவதரித்து இருந்ததும் புளிய மரம் தானே.. 'அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே' என்று திருமலை வேங்கடேசனிடம் சரணாகதி அடைந்ததும், 'ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழிவிலா அடிமை செய்ய வேண்டும்' என்று அதே திருமலையப்பனிடம் தானே கைங்கர்ய பிராப்தி வேண்டியதும் என்று இவர் புளிய மர நிழலைத் தேர்ந்தெடுத்த காரணம் தெரிந்தது.. வாசலில் வந்த போது மேலும் ஒரு அதிர்ச்சி.. கோபுரத்தின் இரண்டு புறமும் அழகிய கல் யானைகள் பராமரிப்பின்றி. எதிரே பெருமான் எழுந்தருளும் அருமையான மண்டபம், அக்ரஹார வீதியோடு..

இது அசப்பில் ஆழ்வார் திருநகரி அமைப்பில் இருந்தது.. ஒருபுறம் யாழி, மறுபுறம் யானை என்று.. பாவம், யானைகளும், யாழிகளும் இன்றைய சிமெண்ட் ரோடு கலாச்சாரத்திற்கு பலியாகி, பாதி தான் தெரிந்தார்கள்.. . ஆழ்வார் திருநகரியை ஒத்த அமைப்பு.. சிலவருடம் முன் போட்ட சிமெண்ட் ரோட்டில் அவற்றின் நெற்றி வரைமூடப்பட்டு மண்ணில் புதைந்து, மூச்சு விட சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. ~600 ஆண்டுகள் பழமையான கட்டிடக்கலை. கண்ணெதிரே மண்ணில் புதையுண்டு இருந்தது.இதைச் செதுக்கிய சிற்பி இப்போது இங்க வந்திருக்க வேண்டும்.. அவர் தான் இது போல் செய்தவர்களை கேள்வி கேட்பர்.. நமக்கு இதன் பழமையும், புராதானமும், மதிப்பும் தெரியவில்லை. . நேரமாக அங்கிருந்து கிளம்பினோம்.. கொஞ்சம் கூகிள் செய்ய, புளியந்தோப்பு என்பதற்கு தெலுங்கில் "சிந்தபண்டு தோப்பு" என்று போட்டிருந்தார்கள். நாயக்கர்களால் அதே மருவி  'சிந்து பட்டி' ஆகியிருக்கலாம் என்றும் சொன்னது..

எனக்கு ஓரளவே உடன்பாடு அதில்.. நம்மாழ்வார் திருவாய்மொழி மூன்றாம் பத்தில் 'சிந்து பூ மகிழும் திருவேங்கடம்' என்று மங்களாசாசனம் செய்கிறார்(பாசுர விளக்கம் மேலே) .. இதுவே மருவி 'சிந்து பட்டி' என்று வந்திருக்கலாம்.. ஆழ்வார் சூட்டின பெயர்.. சில நாள் முன் ஸ்ரீ. சுஜாதா தேசிகன் அவர்கள் ஒரு கோவில் பற்றி எழுதினர். வருவதற்கு ஆள் இல்லாமல் இருந்தது என்று.. இந்தக் கோவில் அது போல் இல்ல. 'அடியாரும் வானவரும் அரம்பையரும்' நிரம்ப வருகிறார்கள் ஆனால் எம்பெருமானிடத்தில் கைங்கர்யம் செய்ய ஆள் இல்லை. அதற்கும்,  நின்ற உற்ஸவம் தொடர்ந்து நடக்கவும் 'அவனல்லால் சரணில்லை' என்றபடி அவரே அதற்கும் அருள்புரியட்டும், அந்த யானைகளும், யாழிகளும் மூச்சுவிடவும் சேர்த்து.!

--கிரி, சென்னை, 04/04..