Friday, October 4, 2013

பக்தி-காதல்-மடல்

மடல் இலக்கியம் 

             பெருந்தெருவெ*ஊராரிகழிலும் ஊராதொழியேன் நான்*
              வாரார் பூம் பெண்ணை மடல்! (சிறிய திருமடல்)

**பெரிய தெருவழியே என்னை ஊரிலுள்ளாரெல்லாரும் பழித்தாலும் நான், நீண்டு அழகிய பனை மட்டையைக் கொண்டு மடலூர்வதை நிறுத்தமாட்டேன்-மடலூர்ந்தே தீர்வேன்.**

             மற்றிவைதான்*உன்னியுலவா வுலகறிய வூர்வன்நான்,
             முன்னிமுளைத்தெழுந்தோங்கி யொளிபரந்த,*
              மன்னியம்பூம் பெண்ணை மடல்* (பெரிய திருமடல்)

**இப்படியாகவுள்ள மற்றும் பல செய்கைகளும் நினைத்து முடிய மாட்டா, அப்படிப்பட்ட சேஷ்டிதங்களை யெல்லாம் உலகத்தாரறியும்படி பிரகரப்படுத்திக் கொண்டு பரகால நாயகியாகிய நான், முன்னே முளைத்து எழுந்து வளர்ந்து விளங்குகின்ற சிறந்த அழகிய பனைமடலைக் கொண்டு மடலூரக்கடவேன்.**

             மடல் இலக்கியம் பற்றிக் கேள்விப் பட்டதுண்டு. ஆனால், மடலூர்தல் எதற்க்காக, ஏன் தலைவன் மட்டும் மடலூர வேண்டும், அதனால் என்ன விளைவு வரும் இது போல படித்ததில்லை. நவராத்திரி தொடங்குவதால், திருமங்கை ஆழ்வாரின் சிறிய திருமடல் சேவிக்கலாம் என்று எடுக்கும் போது மடல் பற்றி சற்றே படிக்கலாம் என்ற எண்ணம். மடல் பற்றிப் படித்த பிறகு தான் திருமங்கை மன்னனின் பக்தியின் வெறி/ஆழம் கொஞ்சம் யூகிக்க முடிகிறது. மேற்ச்சொன்ன இரண்டும் அவரின் சிறிய திருமடல் - பெரிய திருமடல் வரிகள் தான்.

          மடலூர்தல் சங்க கால வழக்கம். தலைவனும் தலைவியும் காதலிக்கிறார்கள். பெற்றோர்கள் எதிர்ப்பு திருமணத்திற்கு. அடுத்து இந்தக் காலம் போல் வீட்டிற்க்குத் தெரியாமல் திருமணம் செய்துவிட்டு , தொலைபேசியில் தகவல் சொல்லாமல், ஊராரின் உதவியை நாடுகிறான் தலைவன் 'மடலூர்தல்/மடலேறுதல்' என்னும் வழியில்!. இதில் இன்னொரு வகையும் உண்டு - தன்னை விரும்பாத காதலியை நினைத்து, தலைவியின் தோழியிடம் அச்சுறுத்தி மடலேறுதல். இதற்க்கு கைக்கிளை ஒழுக்கம். முன்னர் சொன்னபடி மடலூர்ந்து மணமுடித்தால் -  பெருந்திணை ஒழுக்கம்.


               சரி. அப்படி  'மடலூர்தல்/மடலேறுதல்' என்றால்? நம்ப ஊரு பக்கம் நொங்கு வண்டி கட்டி அத இழுத்து ஓடியது தான் எனக்குத் தெரியும். ஆனா இந்த முறைப் படி பனை மரத்து மட்டைல ஒரு குதிரை வண்டி கட்டி, அதுல உக்காந்து போகணும். யூகிக்க கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு- இது வரை பார்த்ததில்லை. இன்னும் கொஞ்சம் விவரமா -

            "பனை மரத்தின் கிளை பனை மட்டை எனப்படும். இது இரண்டு பக்கங்களிலும் கூரிய முள் போன்ற பாகங்களைக் கொண்டிருக்கும். இந்தப் பனைமரத்தின் கிளையால் குதிரை போன்ற உருவம் செய்வர். இதன் மேல் காதல் கொண்ட தலைவன் ஏறி அமர்ந்திருப்பான். இதன் கீழ் உருளை பொருத்தப்பட்டிருக்கும். இதில் கயிற்றைக் கட்டி இழுத்துச் செல்வர். இதுவே மடல் எனப்படும்.

               பனை மரக்கிளையால் செய்த குதிரையில் மயில் தோகை (பீலி), பூளைப்பூ, ஆவிரம்பூ, எருக்கம் பூ ஆகிய பூக்களால் தொடுத்த மாலையை அணிவிப்பர். மடல் ஏறும் தலைவன் உடம்பு முழுதும் சாம்பல் பூசியிருப்பான். கையில் ஒரு கிழியைப் (ஓவியம் வரையப்பட்ட துணி) பிடித்திருப்பான். ஊரின் நடுவில் உள்ள நான்கு தெருக்கள் சந்திக்கும் இடத்திற்குச் செல்வான். தான் செய்த மடலின் மேல் ஏறி இருந்து, தன் கையில் உள்ள கிழியின் மேல் பார்வையை வைத்துக் கொண்டிருப்பான். வேறு எந்த உணர்வும் அவனிடம் காணப்படாது. தீயே தன் உடலில் பட்டாலும் அவனுக்குத் தெரியாது. மழை, வெயில், காற்று எதைப் பற்றியும் கவலைப் பட மாட்டான். இவ்வாறு தலைவன் மடலில் ஏறியதும் ஊரார்/நண்பர்கள் அதை இழுப்பர். தலைவன் தலைவியைப் பற்றிப் பாடிக் கொண்டிருப்பான். இதுவே மடல் ஏறுதல் என்பதாகும்."

                இது நடந்ததென்னா, ஊரார் எல்லாம் வந்து தலைவி வீட்டில் பேசி மனமுடிப்பர்! இது ஒரு முறை - பெற்றோர் எதிர்த்தாலும் பின்னர் இவ்வாறு செய்து திருமணம் செய்வது. மற்றொரு முறையில், தலைவியை மடலூருவேன் என்று மிரட்டி சம்மதம் வாங்குவது.  இப்போதுள்ள நிலைக்கு முன்னோடிகள் எனலாம். இரண்டுமே காதலில் முதிர்ந்து வேறு வழியில்லாமல் செய்வது. ஒரு முறை மடலேறிய தலைவன் காதலி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லையென்றால் மறுமுறை மடலேறுவதில்லை. தன் வாழ்வை முடித்துக் கொள்வான்.

             மடலேறுதலைப் பாடும் நூல் மடல் எனப்படுகிறது. இன்று படித்த திருமங்கை மன்னனின் மடல், தமிழ்மொழியில் முதன் முதலில் தோன்றிய மடல் இலக்கியங்கள் - சிறிய திருமடல், பெரிய திருமடல். பல ஸ்வரஸ்ய விஷயங்கள்.

**பெண்கள் மடலூர்தல் இல்லை என்ற பழைய மரபை மாற்றி, திருமங்கை ஆழ்வார் மிகுந்த பக்தியால் இறைவனைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் பாவித்து மடலேறுவதாக அமைத்தது -- சிறிய திருமடல், பெரிய திருமடல்.

**இறைவன் மீது எல்லை இல்லாத காதல் கொண்டுள்ளாள் தலைவி. தலைவனாகிய இறைவனை அடைவதற்குரிய முயற்சியாகத் தலைவி மடல் ஏறுவேன் என்று கூறுகின்றாள்.

**இங்கு பாடப்படுவது உலகியல் காதல் அல்ல. காமம் காரணமாகிய காதலும் அல்ல. இது பேரின்பக் காதல் ஆகும்.

**அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருள்களின் தன்மைகளை அறியலாம்.

**இரு மடல்களிலும் தலைவனாகிய இறைவனின் பெருமைகளைப் புரிந்து கொள்ளலாம்.

**ஒரு பாடல் முழுதும் ஒரே எதுகையோடு பாடுவது மிகக்கடினம். திருமங்கை ஆழ்வார் பாடிய சிறிய திருமடல் 'ர'கர வரிசை எதுகையோடு பாடியுள்ளார்.  'நாராயண' சப்தத்தின் இரண்டாம் எழுத்தை (ர) சிறிய திருமடலில் கையாண்டிருப்பது மடலின் உச்சம்.

**சிறிய திருமடல் பாடல் முழுதும் பின்வரும் எதுகையோடு இருக்கும்
காரார் மணினிர கண்ணனூர் விண்ணகரம்
சீரார் கணபுரம் சேரை திருவழுந்தூர்
காரார்க் குடந்தை கடிகை கடல்மல்லை
ரார் பொழில் சூழ் இடவந்தை நீர்மலை
சீராரும் மாலிரும் சோலை திரு மோகூர் !

**மடலின் உயர்ந்த அர்த்தங்களை அறிய நிறைய படித்திருக்க வேண்டும்.  'மடலின் அர்த்தங்கள் புரிய சொல்பவர் 80 வயதும், கேட்பவர் 60 வயதும் கடந்திருக்க வேண்டும்' என்று சிறிய திருமடலின் சிறப்பை வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி சொல்லியிருக்கிறார்.

**நடந்ததை, வருங்காலத்தில் நடக்கயிருப்பதை நெல் மணிகள் வைத்து குறித்துக் கூறுவது போல் அமைத்திருப்பது சிறியதிருமடலின் சிறப்பு. இது இன்று வரை எங்கள் ஊர் பக்கங்களில் காண்கிறேன்.

**சங்க இலக்கியங்களில், அக இலக்கியங்களில் மடல் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. கலித்தொகை என்ற நூலில் மடலூர்தல் பற்றிய செய்தி இடம் பெறுகிறது. ஆனாலும், திருமங்கை ஆழ்வார் தான் இந்த முறையில் இரு இலக்கியங்கள் படைத்திருக்கிறார்.

**இலக்கண வரை மாறாமல் இயற்றப்பட்ட இலக்கியம். ஆழ்வாரின் பக்தியின் முதிர்ந்த நிலை, வேறு வழியில்லாமல் செய்யப்படும் மடலூர்தலைக் கையாண்டிருப்பது அவரின் பக்தியின் உச்சத்தை ஒரு முனையிலும், தலைவனாகிய இறைவனை மிரட்டுவதாகவும்(!) உள்ளது.

                    3-4 நாட்களாக இனம் புரியாத பாதிப்பு/வெறுமை, இதைக் கொஞ்சம் படித்ததில் சற்றே பக்குவப்பட்டுவிட்டது. வரும் வாரத்தில், இங்குள்ள அனைவரும் தங்கள் வீடுகளில் கொலு வைத்து அழைத்துள்ளதால் அங்கு சென்று வந்து மேலும் பல எழுதலாம் என்றிருக்கிறேன்.!