Thursday, August 13, 2015

திருமங்கலம் தந்த தியாகி

                                      எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
                                   நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு

                                   சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே

                                   இதைத் தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே.

                                   உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
                                   வீணில் உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.

                                   விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம்

                                   வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம்.

                                   நாமிருக்கும் நாடு நமதுஎன்ப தறிந்தோம்

                                   இது நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம்

                                   இந்தப் பூமியில் எவர்க்கும்இனி அடிமை செய்யோம்
                                   பரி பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்.

                            பள்ளிப் பருவத்தில் நியாபகம் இருக்கும் சில விஷயங்களில், 10ம் வகுப்பு சங்கரன் சார் சொல்லும் சில விஷயங்கள்,ஒரு விதத்தில் என்னைக் கவர்ந்தது.. மிகவும் பழைய காலத்து மனிதர் எங்களைப் பொருத்தவரை. வயதிலும், ஞானத்திலும் சற்றே உயர்ந்தவர் மற்ற ஆசிரியர்களைப் பொருத்தமட்டில். பள்ளியில் எக்கநோமிக்ஸ் எடுக்கும் ஒரே வாத்யார்.. அவரின் வீடு, மீனாக்ஷி அம்மன் கோவில் அக்ரஹாரத்தில் இருக்கும். விடுமுறை, பிரதோஷ காலங்களில், பஞ்சகட்சத்தோடு கோவில் கைங்கர்யத்தில் இருப்பதைப் பாத்திருக்கேன். பரிக்க்ஷை நேரத்தில் அவர் தரும் முக்கியமான கேள்விகளுக்கு தனி மவுசு. பெரும்பாலும் அப்படி தரதை விரும்பமாட்டார். ஒருதடவை நாங்கள் ஆவலோடு கேள்வி நோட்ஸ் எடுக்க, 100+ கேள்விகள் கொடுத்து 'இது எல்லாம் படிங்க, கண்டிப்பா இதை விட்டு வெளிலேர்ந்து வராது'ன்னு சொல்லி அவர் போன பிறகு தான் தெரிந்தது புத்தகத்தில் இருந்த எல்லாமே அதில் அடங்கியிருந்தது. அவரின் சமாதானம்-'முக்கிய கேள்வி கொடுத்தா அத மட்டும் படிப்ப, படிக்கற வசுல எல்லாத்தையும் படிக்கணும்'.. உண்மை. எனக்கு இன்று வரை உந்துதலாக இருக்கும் வார்த்தைகள். அவரை பள்ளி முடிந்த பிறகு சந்திக்கவில்லை. 'காண்போம் கற்ப்போம்' பார்த்து அதிலிருந்து கேள்விகள் எடுத்துவருவார்.  இன்னும் நிறைய உள்ளது அந்த வகுப்புகள் பற்றி எழுத.. டைம்க்குக் காமெடி அவருக்கு கைவந்தது.. எங்களுக்கு அது புரிய கொஞ்சம் நேரம் ஆகும்.  15+ வருஷத்திற்குப் பின்ன, 'சிறந்த எம்ப்ளாயி' அவார்ட் கொடுக்கும் நிகழ்ச்சியில் அவரைப் பார்த்தேன்.. சரியாக என்னை அடையாளம் கண்டு கேட்டார்..'என் மாப்பள வாங்கறார், அதான் நானும் வந்தேன்'.. 100+ பேர் இருந்த அரங்கில், அவர் முன்னாடி நான் அவார்ட் வாங்குவது சற்றே உயர்வாக இருந்தது. இது போல் இதுவரை 6 முறைக்கு மேல் வாங்கினாலும், அன்று என்னுடைய வீட்டிலிருந்து யாரும் வரவில்லை, அவரைத் தவிர.. அந்த பரபரப்பில் அவருடைய காண்டக்ட் வாங்க மறந்துவிட்டேன். சரி. தலைப்பு வரேன். 



                                   சுதந்திரத்திற்குப் பாடுபட்டவர்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம். அவர்களின் நினைவுகளையும்.. திருமங்கலத்தில் மீனாஷி சுந்தரம் என்ற ஒரு தியாகி இருந்தார். எங்களுக்கு 'புலி ஐயர்' என்றே பரிச்சயம். சங்கரன் சார் வீட்டிக்கு அருகில் அவர் வீடு.. நல்ல விசாலமான அக்ரஹாரத்து வீடு.. கொஞ்சம் வெளிச்சம் கம்மி..எனக்கு 7-8 வயதில் அவர் திண்ணையில் அமர்ந்திருந்தபோது பார்த்ததாக ஞாபகம். அது அவர் தானா என்றும் தெரியாது.. சங்கரன் சார் அடிக்கடி அவர் பற்றி சொல்லுவார். மாணவர்களுக்கு இது போலச் சொல்ல வேண்டும் .. இப்போ இருக்கா, சொன்னா கேட்பார்களா இரண்டிற்கும் விடை இல்லை. நாம் இழந்ததில் இதுவும் ஒன்னு. சார் சொன்னது 'புலி  ஐயர், காமராஜரை சென்னையில் சந்தித்த போது, காமராஜர் ஐயரிடம் என்ன வேணும் என்று கேட்க, ஐயர் 'ஒரு தடவ ப்ளைட்டைப் பார்க்கன்னு சொன்னாராம். காமராஜர் தன் சொந்த செலவில் இவரை மதுரைக்கு  ப்ளைட்டில் அனுப்பி வைத்தார்'.. இதை வேறு எங்கு தேடியும் எனக்குக் கிடைக்கவில்லை. காமராஜர் முதல்வராய் இருந்த போது இவருக்கு Rs.200 கண் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். அதில் மீதியைக் கூட இவர் திரும்ப அனுப்பி வைத்துவிட்டார். புலி ஐயர் தன் வீட்டை 'தானத்திற்கு' எழுதி வைத்துவிட்டார். அதாவது பொது ஜன சேவைக்கு. அவருக்குப் பிறகு அந்த வீடு 'கழகக் கண்மணிகள்' வசம் போனது. அதை மீட்க பலரும் போராடி பலனில்லை.. அந்த வீடு கொஞ்சம் கொஞ்சமாக இடிந்து, திண்ணை மட்டும் இருந்தது.. அதன் பிறகு என்ன ஆனதுன்னு தெரியல.. இன்னும் அரசியல்வாதிகள் கையில் இருப்பதாகக் கேள்வி. அரசு கையில் அல்ல.அதை அபகரிக்கவும் இதே சுதந்திரம் தான் வழி தந்தது. அரசு சார்பில் ஏதோ கட்டிடம் கட்டியதாகக் கேள்விப்பட்டேன்.. சரியாக நினைவில்லை.. திருமங்கலம், மீனாஷி அம்மன் கோவில் அருகில், மெயின் ரோட்டில், பல கோடி மதிப்புடன் இருக்கும் அந்த வீடு /இடம். விலை மதிப்பில்லா சுதந்திரத்தை, நமக்கு வாங்கித்தந்த அந்த மாமனிதரின் சொத்து விலை பேசப்படலாம், அவரின் சுதந்திரச் சொத்தை விலை சொல்ல முடியாது.. அவைப் பற்றி கூகிள் செய்தபோது கிடைத்தது பின்வரும் கட்டுரை...

                              

இந்தத் தொகுப்பு தஞ்சை வெ. கோபாலன் எழுதிய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள் நூலிலிருந்து எடுத்தது

1919இல் பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஜாலியன்வாலாபாக் எனும் இடத்தில் ஜெனரல் டயர் என்பவன் இரக்கமில்லாமல், ஆண், பெண் குழந்தைகள் ஆயிரக்கணக்கானோரை பீரங்கி வைத்துச் சுட்டுக் கொன்றது இந்திய சுதந்திர வரலாற்றில் ஆங்கிலேயரின் கறை படிந்த வரலாற்று நிகழ்ச்சி. உலகம் முழுவதும் இந்த அரக்கத்தனமான செயல் கண்டனத்துக்கு உள்ளானது. மனித இனமே வருந்தி தலைகுனிந்த போது ஜெனரல் டயர் மட்டும் பெருமிதத்தோடு சொன்னான், குண்டுகள் தீர்ந்துவிட்டன, இல்லாவிட்டால் இன்னமும் பல உயிர்களைப் பறித்திருப்பேன் என்று. என்ன ஆணவம்? என்ன திமிர்? இந்தச் செயலை இந்திய தேசபக்தர்கள் நாடெங்கணும் கூட்டங்கள் கூட்டி மக்களிடம் சொல்லி, ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக மக்கள் உணர்வுகளைத் திரும்பச் செய்து கொண்டிருந்தனர். அப்படிப்பட்டதொரு கூட்டம் 1920இல் திருமங்கலத்தில் நடந்தது. கூட்டத்தில் பேசியவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவரும், சென்னை சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக இருந்தவருமான கிருஷ்ணசாமி சர்மா என்பவராவர். இவர் இதற்கு முன்பும் வ.உ.சி. கைதானதை எதிர்த்து கரூரில் பேசிய பேச்சு தேசவிரோதம் என்று சிறையில் அடைக்கப்பட்டவர். மாபெரும் தியாகி. தமிழக மக்களால் மறக்கப்படக்கூடாதவர் ஆனால் மறக்கப்பட்டவர். இப்படிப்பட்ட தேசபக்தரின் வீராவேசப் பேச்சைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு தனக்கு வயது 16தான் என்பதைக்கூட மறந்து காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து தேசசேவையில் ஈடுபட்டவர் திருமங்கலம் புலி மீனாட்சிசுந்தரம். இவரது தந்தையார் பெயர் சுப்பிரமணிய ஐயர்.

காங்கிரசில் சேர்ந்ததோடு தனது பணி முடிந்துவிட்டதாக இவர் கருதவில்லை. ஊர் ஊராகச் சுற்றத் தொடங்கினார். மக்களிடம் ஆவேசமாகப் பேசி அவர்கள் உள்ளங் களிலெல்லாம் தேசபக்தி விதையைத் தூவினார். மதுரை மாவட்டத்தில் குறிப்பாக திருமங்கலம் தாலுகாவில் இவரால் தயார் செய்யப்பட்ட வீர இளைஞர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இவர் தேச சேவையில் ஈடுபட்ட நாள் முதலாக இந்தப் பகுதியில் எங்கு பார்த்தாலும் பொதுக்கூட்டங்கள், மகாநாடுகள், போராட்ட பிரச்சாரம் என்று இவர் ஈடுபடாத நிகழ்ச்சிகளே இல்லையெனலாம். இவர் வேறு எவரையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கமாட்டார். தானே முன்னிருந்து அனைத்து வேலைகளையும் செய்து முன்னணியில் இருப்பார். ஒரு காரியத்தைத் தொடங்கிவிட்டால் போதும், அது முடியும் வரை கண் துஞ்சார், பசி அறியார், கருமமே கண்ணாயிருப்பார். தலைவர் தீரர் சத்தியமூர்த்திக்கு இவரிடம் அன்பு அதிகம். இந்த இளம் வயதில் இப்படியொரு தேசாவேசமா? இவருக்குத் தகுந்த ஆதரவு கொடுத்தால், இவர் பல அரிய காரியங்களைச் செய்து முடிக்கும் ஆற்றல் மிக்கவர் என்பதனை தலைவர் உணர்ந்தார். தீரர் சத்தியமூர்த்தி இவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் மாநிலக் குழு உறுப்பினராக சேர்த்தார். தொடர்ந்து காங்கிரசுக்குத் தலைமை வகித்த எஸ்.சீனிவாச ஐயங்கார், முத்துரங்க முதலியார், எம்.பக்தவத்ஸலம், காமராஜ் ஆகியோரிடம் இவருக்கு நல்ல தொடர்பும் செல்வாக்கும் இருந்து வந்தது.

1930 இந்திய சுதந்திரப் போரில் ஓர் முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில்தான் மகாத்மா உப்பு சத்தியாக்கிரகம் தொடங்கினார். தமிழகத்தில் திருச்சி யிலிருந்து வேதாரண்யம் வரை தலைவர் ராஜாஜி உப்பு சத்தியாக்கிரக தொண்டர் படையை அணிவகுத்து அழைத்துச் சென்றார். அதே சமயம், மாகாணத்தின் தலைநகரத்தில் ஸ்ரீமதி துர்க்காபாய் தலைமையிலும், டி.பிரகாசம் தலைமையிலும் உப்பு சத்தியாக்கிரகம் நடந்தது. அதில் ஆதிகேசவலு நாயக்கர், ம.பொ.சிவஞானம் போன்றோர் கலந்து கொண்டனர். அந்த சென்னை போராட்டத்துக்குப் பல தொண்டர்களைத் தயார் செய்து அனுப்பி வைத்தார் மீனாட்சிசுந்தரம். இந்தத் தொண்டர் படைக்கு இவரே தலைவராக இருந்து வழிகாட்டலானார். இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு ஆறு மாத சிறை தண்டனை பெற்றார்.

1931இல் நாடக நடிகராக இருந்து சுதந்திரத்துக்காகப் போராடிக் கொண்டிருந்த தியாகி விஸ்வநாத தாஸ் திருநெல்வேலியில் நடைபெற்ற நாடகத்தில் மக்களை விடுதலைக்குத் தூண்டும் விதமாக தேசபக்திப் பாடலை பாடினார் என்று வழக்குத் தொடர்ந்தார்கள். விஸ்வநாத தாஸ் கைது செய்யப்பட்டார். இவருக்காக வழக்காடும்படி கோயில்பட்டி சென்று வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை மீனாட்சிசுந்தரம் கேட்டுக் கொண்டார். வ.உ.சி.யும் சம்மதித்து வழக்கை எடுத்துக் கொண்டார்.

1932இல் சட்ட மறுப்புப் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் தீவிரம் காட்டியதற்காக மீனாட்சிசுந்தரம் கைது செய்யப்பட்டு இரண்டரையாண்டுகள் தண்டனை பெற்றார். இந்த தண்டனையை இவர் திருச்சிச் சிறையில் கழித்தார். 1941ஆம் வருஷத்தில் தனிநபர் சத்தியாக்கிரகம் அறிவிக்கப்பட்டது. அப்போது மூண்டிருந்த இரண்டாம் உலகப் போரில் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் யுத்த எதிர்ப்புப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. அதில் மீனாட்சிசுந்தரம் வேகம் காட்டினார். இதற்காக இவர் கைது செய்யப்பட்டு 4 மாத சிறைதண்டனை பெற்று மதுரை சிறையில் கழித்தார்.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு மத்திய அரசு இவருக்குத் தாமிரப்பட்டயம் கொடுத்து கெளரவித்தது. இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது என்பதற்காக இவர் ஓய்ந்து உட்கார்ந்து விடவில்லை. மாறாக தேச நிர்மாணப் பணிகளில் அதே ஆர்வத்தையும் சுறுசுறுப்பையும் காட்டி உழைத்தார். திருமங்கலத்தில் அமைந்துள்ள மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்துக்கு புனருத்தாரணம் செய்வித்துக் கும்பாபிஷேகமும் செய்து வைத்தார். தேசபக்தி எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு தெய்வ பக்தியும் உடையவர். தன்னை நாட்டுக்காக அர்ப்பணித்துக் கொண்டு விட்ட காரணத்தால் இவர் திருமணம் செய்துகொள்ளாமலே நாட்டுக்காக உழைக்க உறுதிபூண்டுவிட்டார். வாழ்க தியாகி புலி மீனாட்சிசுந்தரம் புகழ்!

Tuesday, August 11, 2015

நாடாளும் மன்றமா!?


                              எத்தனையோ பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் நாட்டை வழி நடத்திய இடம், சில ஆண்டுகளாகவே செயல்படாமல் அல்லது செயல்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது.. இதற்க்கு கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரும் காரணம்.. ஒரு விதத்தில் ஓட்டளித்த மக்கள், நாமும் தான்.

இந்தக் கட்டுரை, H.இராமகிருஷ்ணன் சில வருஷத்திற்கு முன்ன எழுதியது.. தலைவர்கள்-மக்கள் யாருமே இந்த மாதிரி கட்டுப்பாட்டோடு இல்லை, அப்படி எதிர் பார்ப்பதும் தவறு..


"தலைநகர் டில்லியில், 1958ம் ஆண்டு, அரசுச் செயலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த என் மாமாவின் வீட்டிற்கு, கல்லூரி விடுமுறையில் சென்றிருந்த நேரம். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து மக்களவைக்கான நுழைவுச்சீட்டை அவர் பெற்றுத் தந்தார். அவை நடவடிக்கைகள் துவங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே, நான் நுழைவு வாயிலில் ஆஜர் ஆனேன். என்னைப் பார்வையாளர் மாடத்திற்கு அழைத்துச் சென்றனர். சபாநாயகர் வந்து அமர்ந்த உடன், அவை நடவடிக்கைகள் துவங்கின. அப்போது, எம்.அனந்தசயனம் அய்யங்கார் தான் சபாநாயகராக இருந்தார். ஜவகர்லால் நேரு, பிரதமர். எதிர்வரிசையில் ஆச்சார்ய கிருபளானி. நேரு மருமகன் இந்திராவின் கணவர்- பெரோஸ் காந்தி, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் ஹரிதாஸ் முந்த்ரா சம்பந்தப்பட்ட, 'ஊழல்' விவகாரத்தை எழுப்பிய நேரம். 









                        (இதையடுத்து, அமைச்சர், டி.டி.கிருஷ்ணமாச்சாரி ராஜினாமா செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது என்பது வேறு விஷயம்!) நான் பார்வையாளர் மாடத்தில், காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தேன். அவையின் அலுவலர் ஒருவர் என்னிடம் வந்து, 'காலுக்கு மேல் கால் போட்டு இங்கு உட்காரக் கூடாது; உங்கள் காலையோ, காலணியையோ உயர்த்துவது அவமரியாதை என, என் காதருகே, பணிவாக, ஆனால், கண்டிப்புடன் கிசுகிசுத்தார். நானும், என்னுடன் அமர்ந்திருந்த ஒருவரும் அவையில் நடப்பதைப் பற்றி, பிறருக்குச் சற்றும் கேட்காத குரலில் பேசிக் கொண்டிருந்தோம். அலுவலர் ஒருவர், எங்களிடம் வந்து, 'தயவு செய்து இங்கே பேசாதீர்கள்' என்று பணிவுடன் எச்சரித்துச் சென்றார். அவையில், பேசுபவரின் குரல் தவிர, எந்த ஓசையும் கிடையாது. அவ்வப்போது சபாநாயகர் ஐயங்கார் மட்டும் இடைமறித்து, ஏதேனும் பேசுவார். பிரதமர் நேரு, அவைக்குள் வரும் போதும் சரி, அவையிலிருந்து வெளியே செல்லும் போதும் சரி, அவைத் தலைவரை நோக்கி, தலை குனிந்து வணங்குவார். அவையை விட்டுச் செல்லும் போது, இரண்டொரு அடி பின்னோக்கியே சென்றுவிட்டுத் தான் திரும்புவார். கிருபளானி போன்றவர்கள் சொல்வதை மிகக் கவனமாகக் கேட்டு, அதற்கு மிகுந்த பணிவுடன் பிரதமர் பதிலளிப்பார்."

Sunday, May 10, 2015

தென்கொள் திசைக்குத் திலதம் - எதிர் சேவை


நம்ம குல சாமி
பலபல நாழம்சொல்லிப் பழித்த சிசுபாலன்தன்னை*
அலவலைமைதவிர்த்த அழகன்அலங் காரன்மலை*
குலமலைகோலமலை குளிர்மாமலை கொற்றமலை*
நிலமலைநீண்டமலை திருமாலிருஞ் சோலையதே**
ஆயிரம்தோள்பரப்பி முடியாயிரம் மின்னிலக*
ஆயிரம்பைந்தலைய அனந்தசயனன் ஆளும்மலை*
ஆயிரமாறுகளும் சுனைகள்பலவாயிரமும்*
ஆயிரம்பூம்பொழிலுமுடை மாலிருஞ் சோலையதே**
(பெரியாழ்வார் திருமொழி)
சந்தொடுகாரகிலும் சுமந்துதடங்கள்பொருது*
வந்திழியும்சிலம்பாறுடை மாலிருஞ்சோலைநின்ற*
சுந்தரனை சுரும்பார்குழல்கோதை தொகுத்துரைத்த*
செந்தமிழ்பத்தும்வல்லார் திருமாலடிசேர்வர்களே**
(நாச்சியார் திருமொழி)
சூர்மயிலாயபேய்முலைசுவைத்துச் சுடுசரம்அடுசிலைத்துரந்து*
நீர்மையிலாததாடகைமாள நினைந்தவர்மனம்கொண்டகோயில்*
கார்மலிவேங்கைகோங்கலர் புறவில்கடிமலர்குறிஞ்சியின்நறுந்தேன்*
வார்புனல்சூழ்தண்மாலிருஞ்சோலை வணங்குதும்வாமட நெஞ்சே**
(திருமங்கையாழ்வார் திருமொழி)
கிளரொளியிளமை கெடுவதன்முன்னம்*
வளரொளிமாயோன் மருவியகோயில்*
வளரிளம்பொழில்சூழ் மாலிருஞ்சோலை*
தளர்விலராகில் சார்வதுசதிரே**
செங்சொற் கவிகாள். உயிர்காத்தாட் செய்மின் திருமா லிருஞ்சோலை*
வஞ்சக்கள்வன் மாமாயன் மாயக்கவியாய்வந்து* என்
நெஞ்சுமுயிருமுள் கலந்து நின்றார் அறியாவண்ணம்* என்
நெஞ்சுமுயிரும்அவைடுண்டு தானேயாகிநிறைந்தானே**
('தலைவர்' நம்மாழ்வார் திருவாய்மொழி)


மாயோன் மேய காடுறை உலகமும்** (தொல்காப்பியம்)

கள்ளணி பசுந்துளவினவை கருங்குன்று அனையவை*
ஒள்ளொளியவை ஒரு குழையவை*
புள்ளணி பொலங்கொடியவை*
வள்ளணி வளைநாஞ்சிலவை*
சலம்புரி தண்டு ஏந்தினவை*
வலம்புரி வய நேமியவை*
வரிசிலை வய அம்பினவை*
புகர் இணர் சூழ் வட்டத்தவை*
புகர் வாளவை... ** (பரிபாடல்-திருமாலிருஞ்சோலை அழகர்)

                                                                                         கோவிந்தோ!
********************************************************************************************************************************************************************************************************************

                                                 ஆம். இந்தப் பதிவும் ஒரு வித பயணக் கட்டுரை தான். ஆழ்வார்களாலும், பரிபாடல், மதுரைக் காஞ்சி , சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்களிலும் பரந்து பாடப்பட்ட திருத்தலம் திருமாலிருஞ்சோலை-அழகர் கோவில். ஆழ்வார்கள் 108 பாசுரங்காளால் மங்களாசாசனம் செய்தனர். மேலுள்ள பாடல்கள் அவற்றுள் சில. வருடம் தோறும் சுந்தரராஜப் பெருமாள் வைகை வருவார். அது தான் எங்களுக்கு முக்கியப்பண்டிகை-திருவிழா. சித்திரை மாதம் வந்தது பற்றி அறிய எனக்கு 2 வழி - எதிர் வீட்டில் இருக்கும் மாமரம் காய்க்கும்; அழகர் வைகை வருதல்.

                                                இந்த முறை அவர் வந்தது கொஞ்சம் 'Long Week end', Labour day ஒட்டியே.. என்னைப் போன்றோருக்கு உதவ. கடந்த 4 வருசமா அவரையும், கூட்டத்தையும் பாக்க முடியாததால், இந்தமுறை 'ப்ராஜெக்ட் ரிலீஸ்' வாங்கியாவது போகவேண்டும் என்றிருந்தேன். ஆனால் அதற்க்கு அவசியம் இல்லாமல் 1 நாள் எக்ஸ்ட்ரா leaveல் கிளம்ப, கடைசி வரை train டிக்கெட் confirm ஆகவில்லை. இருக்கவே, இருக்கு கூடல் எக்ஸ்பிரஸ். ஆனா எனக்கு என்னமோ vaigai தான் எப்போவும் பெஸ்ட் காலை நேரப் பயணத்துக்கு. ஒரு நாள் முழுதும் trainல் கழிய, மறுநாள் சித்திரைப் பொருட்காட்சி போக திட்டமிட்டோம். அது வருடம் தோறும் நடக்கும் அழகர் வருகையை ஒட்டி.. இந்தமுறை அங்கு சென்றேன். உள்ளே நுழையும் போதே ஆபீஸ்லேர்ந்து ஏதோ ஒரு issue சம்பந்தமா 'ரெட் அலெர்ட்' மெயில். சரி என்ன செய்ய. அதுக்கு ஏதோ reply பண்ண, 'இங்க வந்தும் வேலையா?' என்றது ஒரு குரல், கேட்காமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தது iphoneனை நெருடியபடி விரல்கள். பொருட்காட்சி - அதே கடைகள், இந்த முறை எதை எடுத்தாலும் ரூ.10/- கடைகள் தான்.. கொஞ்சமும் பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இராட்டினம். அதுதான் ride/rider!.. இதுக்கு மட்டும் ரூ.10 கட்டணம் இல்லை :(.. அதே பெரிய அப்பளம், பஜ்ஜிக் கடைகள்..ரூ.200 விலை சொன்னாலும் யாரும் எதிர்த்துக் கேட்கவில்லை. பெரிய அப்பள எண்ணெய் வாடை கொஞ்சம் வயிற்றைப் பிரட்டியது.. 10-15 வருடம் முன்பு அங்க சுத்தியது கண் முன் ஓடியது.

                                            அப்போது துவரிமானிலிருந்து வந்து போவோம் பெரியவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு. எங்களுக்கு என்று தனியாக பைசா (!) தர மாட்டார்கள். (பெரும்பாலும் அப்போது சட்டையில் பையே இருக்காது)..பெரிதாக சாப்பிட வாங்க மாட்டோம். ஏதாவது ஒரு இராட்டினத்தில் ஏறினாலே அதிசயம். விளையாட பந்து, கொஞ்சம் பொம்மை மட்டும் வாங்குவோம்.. கண்டிப்பாக தண்ணீர் பீச்சி அடிக்கும் துப்பாக்கி, ஓலை/காகிதத்தில் தயாரான காத்தாடி இருக்கும் எங்க லிஸ்ட்ல். இப்போது அது இல்லை அங்கு., மாறாக நீர்க்குமிழ் விடும் துப்பாக்கி மட்டும் இருந்தது. சிறு பையன்கள் கூட ரூ.100-200 என்று வைத்துக் கொண்டு திரிந்தார்கள். பாரபச்சமின்றி எல்லாரிடமும் செல்போன், ஸ்மார்ட் போன் இருக்கிறது.  8:30 மணிக்கு நெ 68 கடைசி பஸ் பிடிக்க தமுக்கத்திலிருந்து ஓடுவோம் பெரியார் பஸ் ஸ்டாண்ட் நோக்கி துவரிமானுக்கு. இப்போது வாசலில் ஷேர் ஆட்டோ, கால் டாக்ஸி இத்யாதி. ஆனால் அது போல் என்னவோ வாழ்க்கையை அனுபவிக்க முடியவில்லை.







               மதுரைக்குக் கொஞ்சமும் சம்பந்தமிலாத பாவ்பாஜி, பாணி பூரி கடைகள்.. இளநீர் கடைகள் இல்லை, கரும்புச் சாறு கடை இருந்தது கொஞ்சம் ஆறுதல்.. உணவில் கூட நம் வழிமுறைகளை விட்டு திசை மாறுகிறோம். கடைகளில் இருந்த பொருட்களில் பெரிய மாறுபாடு-மின்ன குழந்தைகள் விளையாட சைக்கிள் பொம்மை இருக்கும், இப்போது மருந்துக்குக் கூட இல்லை.. வழக்கம் போல் ரூ.10 பிளாட்பார புத்தகங்கள், குண்டூசி, பின் இத்யாதி..அரசு விளம்பரம், துறை சார்ந்த அரங்கம்.. மக்களுக்கு ஒரு 10-15 நாள் ஒரு மாற்றம், 2-3 மணிநேரத்திற்கு. HR&CE, அரங்கம் மட்டும் என்னைக் கவர்ந்தது- பெரிய பொம்மைகளுடன்..ஒன்று மட்டும் மாறவில்லை - விளம்பரங்களுக்கு அதே ஆண்-பெண் குரல்கள். வருடம் பல ஆனாலும் இன்றைய பொருட்கட்க்கும் பேசிக்கொண்டிருந்தனர்.  1431 பயோரியா, கோபால் பல்பொடி விளம்பரங்களும் இருந்தது!

எதிர் சேவை :



                 எதிர் சேவை சேவிக்க எதிர் நோக்கியிருந்தேன். வீட்டிக்கு வந்ததும், லோக்கல் கேபிள் டிவியில் அழகர், மலையிலிருந்து புறப்படும் காட்சி -லைவ் - போஸ்ட்-லைவ் என்ற படி ஒளிபரப்பானது. நல்ல முயற்சி. என்ன கூட்டம். எங்க அழகர்ன்னா சும்மாவா. எதிர் சேவை அலங்காரத்துடன் முதல் நாள் புறப்படும் அழகர், கோவில் உள்-பிரகாரங்களில் புறப்பாடு கண்டருளி, பதினெட்டாம் படி கருப்பு கோவில் வருவார். அங்கு கருப்புவிடம், கோவில் சாவி, நகை விவரம் கொடுத்துக் கிளம்புவார். அழகர் திரும்பும் வரை கோவில் பாதுகாப்பு கருப்பு வசம்.. இந்த கருப்பு கோவில், அழகர் கோவில் பிரதான வாசல் தான், சிலைகள்  இல்லை. 4-5 பெரிய அருவாள்கள், வடக்கு பெரிய கோபுர வாசல் தான் கருப்பு இருப்பிடம்.. அந்த வாசல் என்றும் திறக்கப்படாது. கதவு, அரிவாள், கோபுரப் படிகளுக்குத் தான் பூஜை, தனியாக பூசாரிகள். கருப்பு அந்த பக்கம் இருக்கும் பலருக்கும் குல தெய்வம். இன்றும் இங்கு கருப்பு பலருக்கும் ஆவேசிப்பது கண்கூடு. பெரியாழ்வாரும், ஆண்டாளும் இங்கு வந்த போது, கருப்பு கதையைக் கேட்டு ஆண்டாள் வியந்ததாக ஒரு கர்ண பரம்பரைக் கதை (செவி வழிச் செய்தி) உள்ளது. கருப்பு காவல் தெய்வமானதற்க்கு ஒரு கதை உண்டு இந்த முறை அப்படிக் கேட்டது--- வெகு காலம் முன்னாடி, அழகர் அழகில் மயங்கி அவரைக் கொள்ளை அடிக்க ஒரு கூட்டம் முடிவு செய்து, மலையாள மாந்திரிக வேடத்தில் 18 பேருடன் வந்தது. அவர்கள் உடம்பில் மை பூசி, சன்னதியில் மறைந்து, கோவில் நடை சாற்றியவுடன், கொள்ளையடிக்க திட்டமிட்டனர். அழகரோ கள்ளன்..அவரிடம் இது நடக்குமா. அவர் அர்ச்சகர் பரமசுவாமி கனவில் வந்து, இதைக்கூறி ஒரு மாற்று ஏற்பாடு கூறினார். அதன் படி அர்ச்சகர் மறுநாள் இரவு ஆவி பறக்க திருவமுது (அன்னம்) படைக்க, அந்த ஆவியில் 18 பேரின் மை வேடம் கலைந்தது. மையோடு அவர்களின் உள்ள அழுக்குகளும் கலைந்தது.. எல்லாரும் அழகரிடம் சரணாகதி அடைந்தனர்.. அது முதல் அவர்கள் தான் அழகரின் காவலாளிகள்.. 18 பேரும், 18 படிகளாய் மாறி அழகர் மலையைக் காத்து வருகிறார்கள். 60-70 முன்னால் கூட , அழகர் கோவில் இரவு நடை சாற்றி விட்டு, அர்ச்சகர் சாவியை கருப்பு வாசலில் வைத்து விட்டு தான் சென்றுவிடுவார். மறுநாள் வரை சாவி அங்கயே இருக்கும்..இப்போது அது நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை, மாறாக சாவியை வைத்து விட்டு, பின் எடுத்துச் சென்று விடுவதாகக் கேள்வி. எப்படியும் கருப்பு மலையைக் காத்துக்கொண்டிருக்கிறார்.

 

                                           அழகர் மதுரை வரதுக்கு முக்கியமான காரணம், மண்டூகமாக உரு மாற சாபம் பெற்ற ஸுதபஸ் முனிவருக்கு (மண்டூக மகரிஷி) சாப விமோச்சனம் தருவதற்கு. அப்பறம் அழகரை அன்னியப் படை எடுப்பின் போது காப்பாற்றிய மக்களுக்கு அவர்களின் இருப்பிடம் வந்து சேவை தர. இதை திருமலை நாயக்கர் மாற்றி சித்திரையில் நடக்கும் மீனாக்ஷி திருக்கல்யாணத்துடன் இணைத்தார். முன்னர் தேனூர் மண்டபம் வரை வந்த அழகரை, மதுரை வைகை வரை எழுந்தருளச் செய்தது திருமலை நாயக்கரையே சாரும்..திருக்கல்யாணத்திற்க்கு திருப்பரங்குன்றத்தில் இருந்து பவளக்கனிவாய்ப் பெருமாள் வருவதால், வேறு ஏதோ கதை புனையப்பட்டுவிட்டது பின்னர். முன்னர் அழகர் உத்சவம் மாசி மாதம் நடந்ததாக அறியப்படுகிறது. அழகர் உத்சவம் மதுரையில் மட்டும் 5 நாட்கள். - எதிர் சேவை, வைகை எழுந்தருளல், சேஷ-கருட வாகனப் புறப்பாடு, அனதராயர் பல்லக்கு, பூ பல்லக்கு. இதுல எங்க ஜெனங்களுக்கு முக்கியம் -எதிர் சேவை, ஆற்றில் இறங்குவது-அதுலையும் முக்கியமா என்ன நிறப் பட்டு போர்த்தின்டு வரான்னு பாக்க மட்டும் கூட்டம் வரும்.

                                           அழகர், மலையிருந்து கிளம்பும் போது 'கள்ளர்' (திருடன்) வேடத்தோடு, கையில் ஒரு கோல் கொண்டு, தன்னுடைய அழகை கண்ணாடியில் பார்த்த படியே கிளம்புவார். இதற்க்கு என்னைப் பொறுத்தவரை ஒரு காரணம் - மலையில் ஆண்டாள் நாச்சியார் அழைத்தபடி சுந்தரராஜனாக (காண்க: மேலுள்ள 'சந்தொடுகாரகிலும்' பாடல்) இருந்துவிட்டு, திருவாய்மொழியை சங்கப் பலகை ஏற்றிய மதுரை வரும்போது, நம்மாழ்வார் அழைத்தபடி 'வஞ்சக் கள்வன், மாமாயனாக' (காண்க: மேலுள்ள 'செஞ்ச்சொற்க் கவிகாள்' பாடல்)மதுரையம்பதிக்கு விஜயம் செய்து நம்மாழ்வார் ஈரச் சொல்லிற்கு ஏற்றம் தருக்கிறார் அழகர்.




                                             இந்த முறை எதிர் சேவை பார்க்க சாயங்காலம் போனேன்.. தல்லாகுளம் கோவில் stopல் இறங்கி பார்த்தா, அப்போ தான் ரியல் மதுரை பார்த்த உணர்வு.. தெருவெல்லாம் கூட்டம்.. மதுரைக் காஞ்சி வரிகள் தான் ஞாபகம் வந்தது.. மக்கள் முகங்களில் மகிழ்ச்சிக்கு அளவில்லை, அழகரை வரவேற்பதில்.. தெருவெல்லாம் நீர், மோர் பந்தல்கள் தாக சாந்திக்கு, வீதிகளில் தோரணங்கள், ரோடுகளில் சுண்ணாம்புப் பட்டைகள் இத்யாதிகள் என ஒரு கலை கட்டியிருந்தது.. ஒரு குறுக்குத் தெரு வழியாக 'அம்பலகாரர் மண்டகப்படி' அடைந்தேன். போகும் வழியில் 48 நாட்கள் விரதம் இருந்து அழகரைக் காண வரும் 'திரி எடுத்து ஆடுபவர்கள், துருத்தி பீச்சுபவர்கள் எல்லாம் அங்கங்கு இருக்க, நிறையப் பேர் அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கினர்.பலரிடம் பூஜை செய்யப்பட்ட அரிவாள், பூண் போட்ட தடி, அதற்க்கான உடையோடு இருந்தனர். ஒரு 5:30 மணி இருக்கும் - உண்டியல் வண்டிகள் அணிவகுத்து வந்தன, அப்பறம் திருவிழாவிற்கு மகுடம் போல் பெரிய விசிறிகள், திரி எடுத்தவர்கள் எல்லாம் வர, பின்னால் மல்லிகைப் பூ குடை வந்தது. பச்சை ஆஞ்சநேயர் கொடி வர, நம்ப அழகர் வாகனம் காட்சியளித்தது. கொஞ்ச நேரத்தில் அழகர் ஓடி வந்தார் எதிர் பார்த்து இருந்த எங்களுக்கு எதிர் சேவை தந்தார்! ஆஹா! இதற்குத் தானே காத்திருந்தோம்.
















                                                   'ஒரு நாள் காண வாராய் விண் மீதே' என்று ஆழ்வார் அழைத்த படி, இன்று எங்களைக்/நாங்கள் காண இந்த அற்பமான ரோட்டில் வந்தார்.. ஆண்டாள் நாச்சியார் சொல்லும் சுந்தரத் தோளுடையான், ஸுந்தரபாகு ஸ்தவத்தில் கூரத்தாழ்வான் அனுபவித்த 'ஸுந்தராயத புஜம்' அவர் கூறியது போலவே - ஸுஸுந்தரஸ்யாஸ்ய.. இதைக் காண பதினாலாயிரம் கோடிக் கண்கள் போறாது..'அம்பலகார மண்டகப்படியை' எங்களால் அந்தக் கூட்டத்தில் நெருங்க முடியவில்லை.. வானை முட்டும் அளவிற்கு 'வாராரு,வாராரு அழகர் வாராரு' பாடல். உறுமி மேளத்திற்கு ஏற்ப பெருமானை எழுந்தருளச் செய்தனர் ஸ்ரீ பாதம்தாங்கிகள். வாத்திய கோஷம் வேறு. அங்கு கிட்டத்தட்ட 1 மணி நேரம் எழுந்தருளிஇருந்தார். வான வேடிக்கைகள் அதற்குள்.. இதுவரை பார்க்காதது.. இவற்றை  எல்லாம்  வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அங்கயே 1 மணி நேரத்திற்கு மேல் இருந்து மேலும் 2 மண்டகப் படிகளில் சேவித்து விட்டு திரும்பினேன்.. கூட்டம் காரணமாக கோரிப்பாளையம் நோக்கி நடந்தேன்.தமுக்கம் கடக்கும் போது 'எதிர் சேவை, ஆற்றில் இறங்கும் வைபவம் நடப்பதால், பொருட்காட்சி இரவு முழுதும் திறந்திருக்கும்' என்ற அறிவிப்பு மைக்கில்.எதிர் சேவை அழகரைப் பார்த்ததில், உடலில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா சார்ஜ் ஏற்றிக் கொண்டு, நாளை கூட்டத்தில் குதிரையில் மிதந்து வரும் அழகரைக் காணும் ஆவலோடு வீடு நோக்கி விரைந்தேன். வைகை ஆற்றுப் பாலத்தைக் கடக்கும் போது, மக்கள் கூட்டம் இரவு 8:30 மணிக்கு. அங்கு வந்து தங்கத் துவங்கிவிட்டனர்.

காட்சிகள், நிகழ்வுகள்
** 'அப்பன் காளை' எனப்படும் கோவில் மாடு இப்போது வாகனத்தில் அழைத்து வரப்பட்டது.
** எம்பெருமானுக்கு கண்டருளச் செய்யும் பதார்த்தங்கள் தனியாக ஒரு வண்டியில் வந்தது.
** மின்ன உண்டியல்கள் ஒரு மாட்டுவண்டியில், நிறைய வைக்கலோடு தான் வரும். இந்த முறை 1-2 மட்டுமே மாட்டுவண்டியில் வந்தது .
** உண்டியல்கள் சாரை சாரையாய், அழகிய திருநாமத்தோடு, பலத்த போலீஸ் பாதுகாப்போடு பணியாளர்களால் எடுத்துச் செல்லப்பட்டது.
** மதுரையில் ஒரு வழக்கம் இருக்கு - ஒரு குவளை/பாத்திரத்தில் (முன்னர் பித்தளை, வெண்கலம் மட்டுமே), நாட்டு சக்கரை, சுக்கு கலந்து, அழகர் வரும் போது அதில் கற்ப்பூரம் ஏற்றி அவருக்குக் காண்பிப்பார்கள். பின் அதை எடுத்து அனைவருக்கும் கொடுப்பார்கள். இந்தமுறை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
**ஆழ்வார்களின் ஈரச்சொல்லான 'திவ்ய ப்ரபந்தம்' அழகர் புறப்பாட்டிற்கு முன் சேவிக்கப்படுகிறது. அழகரோ ஊர், ஊராய் ஓடுவதால் ஒரு வாகனத்தில் 5-6 பேர் 'திவ்ய ப்ரபந்தம்'  அனுபவித்துப் போகிறார்கள். 
** கொஞ்சம் இருண்ட மாலை வேளையில், அம்பலகார மண்டகப்படியில் வான வேடிக்கை மிகவும் பிரபலம். 1 மணி நேரத்திற்கும் மேல் அங்கு அழகர் இருப்பார். நாம் பக்கத்தில் போய் சேவிக்க எல்லாம் முடியாது. 
** என்ன தான் ஆழ்வார்கள், தமிழ் புலவர்கள் அழகரைப் பாடியிருந்தாலும், இன்னைக்கு மதுரைல அழகர்க்குப் புடுச்ச பாட்டு கள்ளழகர் படத்தில் வரும் 'வாராரு, வாராரு அழகர் வாராரு' தான். 
** 'ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி'ன்னு ஆண்டாள் நாச்சியார் சொன்ன  மாதிரி, இந்த திருவிழா முழுதும் கேட்கும் கோஷம் கோவிந்த நாமம். அதுவும் திரி எடுத்து ஆடுபவர்கள் 'கோவிந்தோ' என்றே விண்ணை முட்டுமளவு அழைக்கிறார்கள். இதுவே அழகர் மலை தென் திருமலை என்பற்கு சான்று.
** சாமியாடிகள், அழகர் வருந்துபவர்கள் (அதாவது தமக்குள் வர வைப்பவர்கள்), அழகர் வர்ணிப்பு பாடல்கள் பாடுபவர்கள் என்றெல்லாம் இருந்திருக்கிறார்கள். இப்போது கொஞ்சம் குறைவு/இல்லை. 20 வருடத்திற்கு முன், மதுரை AM ரேடியோவில் ஒலிபரப்பானதை கேசட்டில் பதிந்து வைத்துள்ளேன். CD-க்கு எப்படியாவது convert பண்ணனும்..
** ஒருபக்கம் நின்றாலே போதும். கூட்டம் நம்மை அதுவாகவே அழைத்துக் கொண்டு போய் விடும்.
** 'அரங்கன் சொத்தை அளக்க முடியும், அழகன் சொத்தை அளக்க முடியாது'ன்னு ஒரு சொற்றொடர் இருக்கு எங்க பக்கத்துல.
** நம்மாழ்வார் பாடியது போல் - இளமை கெட்டுவிடுவதற்க்கு முன் அழகரை அடையவேண்டும். (காண்க மேலுள்ள - கிளரொளி இளமை). அதனால் தானோ என்னவோ, குழந்தைகளுக்கு முதல் மொட்டை அங்குதான் மதுரைக்கார்களுக்கு.

மேலுள்ள பரிபாடல் பாடலின் பொருள் -
"கருந்துளசி மாலை அணிந்தவன்; கருங்குன்றம் போன்றவன்; ஒளிக்கு ஒளியானவன்;ஒரு காதில் குழை அணிந்தவன்;பொலிவுறும் கருடக்கொடி உடையவன்;மேலும் கீழும் வளைந்திருக்கும் கலப்பை கொண்டவன்;சிலம்பாறு என்னும் நீர் வளைந்தோடும் வில்லை உடையவன்;சங்கும், சக்கரமும் கொண்டவன்;வரிந்த வில்லில் வலிமை மிக்க அம்பு கொண்டவன்;புள்ளி புள்ளியாக அமைந்த பூங்கொத்து விசிறி கொண்டவன்;புள்ளி போட்ட வாள் ஏந்தியவன்"
இது மிகச் சரியாக கள்ளழகர்  மதுரை வரும் கோலத்தைக் காட்டுகிறது இந்தப் பாடல். இன்றும் இவற்றோடு தான் அழகர் வருகிறார்!


Thursday, April 9, 2015

நல்லதோர் வீணை -கார்ப்பரேட் கையில்

                எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன்
               முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே - அவர்
                சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே - இதை
                வந்தனை கூறி மனதில் இருத்தி என் வாயுற வாழ்த்தேனோ - இதை
                வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று வணங்கேனோ? (பாரதி)

                    கருப்புச்சட்டை போட்டவரின் பேட்டி பரபரப்பை எட்டும் இந்த வேளையில் இதை முடிக்கனும்க்ற எண்ணம் இல்ல.. நீண்ட நாளாக வெளியிட முடியாமல் போய், சேரி இன்னிக்காவது முடிக்கலாம்னு ஒரு வேகத்தில் எழுதியது. இது எந்த மத-சமயத்திற்கு எதிரானது இல்ல.. இன்றைய இளைஞர் வட்டம், IT துறை எப்படி இருக்குன்னு என்னோட பார்வையில்.                
                     7-8 வயசு இருக்கும். திருமங்கலத்தில் ஒரு கிறிஸ்டியன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.. நன்றாக ஞாபகம் இருக்கு, வியாழன் மாலை 2-3 Prayer Time. Father's room முன்ன உக்கார்ந்து பக்திப் பாடல்கள் பாடனும் - ஆம், கிருஸ்துவ மதம் பற்றி. ஒரு கேசட் playerல பாட்டு ஓடும்.அப்போது ஒரு விவரமும்தெரியாது.. என்ன இருக்கோ அத பாடுவோம். அப்போது அது என்னைப் பொறுத்த வரை ஒரு பொதுக் கடவுள். பல சமயங்களில் பைபிள் படிக்கச்சொல்லுவார்கள்.. ஒவ்வொரு ஆண்டு விழாவின் போதும் கிறிஸ்து மதம் சம்பந்தப்பட்ட படத்தோடு ஏதாவது ஒரு Calender.அப்பறம் ஒரு ஹிந்து நாடார் Schoolல சேர்ந்தேன். அங்கு எந்த சமயம் பற்றிய வகுப்புகளும்இல்லை. இது ஒரு சின்ன உதாரணம் - ஹிந்து மதம் எதையும் திணிப்பதில்லை என்பதற்கு. மத்த மதத்தில் எல்லாரையும் இப்படி என்று சொல்லிவிட முடியாது. சரி - இதுக்கும் சொல்லப்போற விஷயத்திற்கும் சம்பந்தம் கொஞ்சம் உண்டு..
                                    இதுவும் IT கம்பெனி பத்தியது தான். ஒவ்வொரு வருஷமும் டிசம்பர் மாதம் எல்லாருக்கும் வேலைகொஞ்சம் கம்மியா இருக்கும். சில year end activities இருக்கலாம். மத்த படி US Client  80% வேலை கம்மிதான், 'Thanks giving’ கடந்த பிறகு, அந்த நேரத்துல நாம சும்மா இருக்க முடியுமா.. ஏதாவது செஞ்ச மாதிரியேகாட்டனும். சும்மா ஒரு training எடுக்கணும் இல்ல போகனும்..நமக்கு சம்பந்தமே இல்லாட்டினாலும்,ஒரு வருசமா என்ன பண்ணினோம்னு ஒரு 'Case Study Report’ (அத client தான் சொல்லணும் :-)), ஏதாவது சாதித்திருந்தா அதுக்கு ஒரு Presentation PPT. உண்மையாகவே இத Client பார்த்தா அவன் clean bold தான்.. பல நேரங்களில் client பார்த்தா 'சொந்தக் காசுல...' இத்யாதின்னு தான் தோனும்.. சரி. அது அவரவர் வேலை.. இப்படி வெட்டியா இருக்கும் ஒவ்வொரு IT Companyலேயும் December 2-3 வாரத்துல HR/Admin team கிட்டயிருந்து ஒரு மெயில்வரும். ‘It is year end., lets celebrate last days of this year, we have many fun activities. Stay on this page’ன்னு ஒரு மெயில். அப்பறம் நம்ப பசங்க கொஞ்ச பேருக்கு என்ன வரும்ன்னு ஒரு வித காத்திருப்பு.. அடுத்த நாளே இன்னொரு மெயில் ‘Many Fun Celebrations. Watch this page’ - அப்படின்னு ஒரு மெயில். இப்படியே 2-3 நாள் புலி வருது கதை தான். நம்ப அத பத்தி எல்லாம் கவலைபடாம வேலைய பாக்க வேண்டியது தான். எனக்கு எப்பவுமே இந்த டிசம்பர் வந்தாலே year endக்குள்ள முடிக்க வேண்டிய வேலை நெறைய இருக்கும். So இத பத்தி எல்லாம் பாக்க நேரம் நெறைய இருக்காது. 2 நாள் கழிச்சு ‘Lets have Christmas Celebrations for this year end.. Decorate your cube/office for this. We will come and validate. Exciting Prices for individual/Team.’ அது ஏன் பொங்கல், தீபாவளிக்கு இப்படி மெயில் வரதில்லைன்னு எனக்கும் ரொம்ப நாளாக சந்தேகம் இருக்கு. விடை தான் தெரியல. சற்றே நம்மோட பண்டிகைகளையும், கலாச்சாரத்தையும் மறந்தும், மறைக்கவும் முயல்கிறோம், தெரிந்தே.Pizza & Burger மட்டும் உணவல்ல.

                                 இந்த முறை Company முழுவதும் அது போல நடக்க வில்லை. அந்தந்த Team மட்டும் தனியாக இதைச் செயல்'படுத்தின'.. ஏன்னா client பொங்கல் கொண்டாடி, சொந்த பந்தங்களோடு சேர்ந்து தீபாவளி கொண்டாடி, பட்டாசு கொளுத்தி, தமிழ் புத்தாண்டு கொண்டாடும் அவர்களுக்கு நாம கைம்மாறு செய்யனுமே.. அதுனால நாமும் Christmas & NewYear இத எல்லாம் Celebrate பண்ணனும்.. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் வசனம் ITக்கு என்றைக்கும் பொருந்தும்..நாமளும் அடிமைகளானாலும் மிகவும் திறமைசாலிகள்.. நமக்கு ஸ்வயமா யோசிக்க முடியாது.. பகுத்து பார்க்கத் தெரியாது.. சேரி. இருக்கட்டும். இது அவரவர் விருப்பம்.. ஆனால் ஒரு டீம்ல/கம்பெனில இத நடைமுறைப்படுத்துவது ரொம்ப தவறு.. Chirstmas/New Yearன்னு சொல்லாமல் வெறும் Decorationன்னு சொல்லி ஊக்கம் தரலாம்.. சில இடங்களில் அப்படி நடப்பதாக கேள்வி..Client என்ன பண்ணினாலும் நாமும் பண்ணக் கூடாது..  இதுக்கு மேல என்னால சொல்ல முடியல.. விஷயத்துக்கு வரேன்.. HR/Adminகிட்ட இருந்து மெயில் வராதனால, 30 கொண்ட Team Levelல கொண்டாட முடிவெடுத்து ஒரு மெயில் அனுப்பபட்டது..  பல முறை என்னோடு பேசிப் பார்த்தார்கள் (வேற யாரு நம்ப விஜய் தான்).. நான் Topic/Decoration Theme தருவதாக இல்லை.என்னோட டீம்ல யாரும் அவ்வளவு interest கட்டல. ஒரு முறை discuss பண்ணிட்டு, சரி இது நமக்கு சரிப்பட்டு வராதுன்னு விட்டுடேன். அது தான் ஒரு அதிக குளிரூட்டப்பட்ட ஒரு conference room போய் சும்மா ஒரு மணி நேரம் கலந்துரையாடல்-Discussion. அங்க நடக்கற Discussion எதுக்கும் முடிவு எட்டிய மாதிரி இதுவரை தெரியவில்லை. மற்றேல்லாரும் களத்தில், அது தான் அவனவர் cubical decorationல இறங்கினர். ஒரு conditionனோடு நானும் இறங்கினேன்.. எந்த மதமும் இல்லாமல் வேற ஏதாவது ஒரு theme.. கடைசி நேரத்துல வேட்புமனு தாக்கல் பண்ற மாதிரி '1947' என்று ஒரு theme கொடுத்தோம்.. கொடுத்தேன்னே சொல்லலாம்..நம்மிடமே ஆயிரம் ஆயிராமா கொட்டிக்கிடக்கும் போது, அடுத்தவர் பண்டிகையும், கலாச்சாரத்தையும் கொண்டாடுவது சரியல்ல.. அதை ஒதுக்குவதும் சரியல்ல., நம்முடைய கலாச்சாரத்தை முன்னிறுத்த வேண்டும்றது என் எண்ணம்! ஒன்னு மட்டும் நிச்சயம். என்னக்கு RSS-காரன்ற முத்திரை குத்தப்படும். (ஏற்கனவே நெற்றியில் திருநாமம் இட்டு போவதால் ஒருவித சந்தேகம் இருக்கு. இதனால அது ஊர்கிதம் ஆகும்)..கண்டிப்பாக பரிசு கிடைக்காது.. ஆனா இதனால் 2-3 பேர் நாட்டப் பத்தி யோசித்தாலே என் வெற்றி நிச்சயம். 

                         1947 - இத இப்படி செயல்படுத்துவதுன்னு தெரியாமல் ஒரு 30 நிமிட யோசனைக்குப் பின், 1947 வரை நடந்த முக்கியமான விஷயங்கள், நிகழ்வுகள், காந்தியின் போராட்டங்கள், நாம் மறந்த, அறியாத பல தேசத்தலைவர்கள் - இவற்றை எல்லாம் விளக்க முடிவெடுத்தேன். டீம்ல யாரும் இதுக்கு சப்போர்ட் பண்ண மாட்டார்கள் என்ற தீர்க்கமான முடிவோடு கொஞ்சம் பேசிப்பார்த்தேன். கிட்டத்தட்ட எல்லாருக்கும் ஒருவித தயக்கம், அப்பறம் ஏற்றுக்கொண்டனர். 

                       நம் சுதந்திர போராட்டத்தில் இருந்த முக்கிய போராட்டங்களில் கீழுள்ள 5-6 போராட்டங்களை மையமாக வைத்து இத பிளான் செய்தோம். Vinoth, Vinayagam கொஞ்சம் activeவாக இருந்து 3 வர்ணத்தில் ஒரு Arch போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினர். Venkat, Suresh, Meenkashi Sundar எல்லாம் நிறையவே உதவி செய்தனர் - முழுமையாகச் செயல்படுத்தினர்.
  • மீரட் புரட்சி, சிப்பாய் கலகம். மங்கள் பாண்டே(1857)
  • ஜாலியன் வாலா பாக் -1919
  • ஸ்வயராஜ் இயக்கம் (1920)
  • ஒத்துழையாமை இயக்கம் (1920-21)
  • உப்புச் சத்யாக்ரகம் (1931)
  • வெள்ளையனே வெளியேறு (1942)

நுழைவாயில்


ஜாலியன் வாலா பாக் -1919 - Recent photo









Dhandi March - Swaraj Movement
மீரட் புரட்சி, சிப்பாய் கலகம். மங்கள் பாண்டே(1857)







வேதாரண்யம் உப்பு சத்யாக்ரஹ்கம்





Quit India Movement


























பாரத மாதா


இத்யாதி Decoration



எங்க Team

தலைவர்
                                  நடுவில் நான் கொஞ்சம் Power Point slides ரெடி செய்தேன். அதில் இந்த போராட்டங்கள் பற்றிய அறிய படங்கள், கொஞ்சம் பாரதி பாடல்கள் எல்லாம் சேர்த்து 10-15 Printout எடுத்தேன். ஒரு office/seatக்கு 2-3 ஒட்டினோம்.இவை எல்லாம் நடுவர்கள் வர 2-3 மணிக்கு மின்ன ஆரம்பித்து முடிக்கப்பட்டது. மத்த எல்லா டீம்மையும் பார்த்தா அசுர வேகத்துல நெறைய செலவு செஞ்சு அழகுபடுத்தினர். ஆனா எல்லாத்துலயும் ஒரு வித Christmas பத்தின விஷயம் இருந்தது. நாடு- தேசம்ன்னு வச்சது எங்க டீம் மட்டும் தான்;இதை கொஞ்சம் எக்ஸ்ட்ரா பெருமையோடு சொல்லலாம்.                              
                                     
                                     எல்லாத்துலயும் விட ஹைலைட் - 2 பாரதமாதா படம், பூவோடு அலங்காரம். அத பார்த்த எல்லாரும் 'இது லக்ஷ்மி படம்' தானேன்னு முதல்ல கேட்க,கற்ப்பூரம் ஏற்றி கொஞ்சம் பூஜை மட்டும் செய்யல. 
                     

                             நடுவர்கள், எங்க Managerகள் தான், 5 மணிக்கு வந்தனர்.. 3வது team எங்களோடது.. யாரும் இத விளக்க தயாராக இல்ல. இப்போதும் நானே களத்தில் இறங்கினேன்.நான் இது மாதிரி பேசியதில்ல, என் முன்னால் வைகோ தான் தெரிந்தார் இதற்க்கு எல்லாம். கிட்டத்தட்ட 10-15 நிமிஷம் இந்த போராட்டங்களை எல்லாம் விளக்கினேன். கல்கி கிருஷ்ணமூர்த்தி, கல்கி சதாசிவம், திரு.வி.க, காமராஜ், கக்கன், இராஜாஜி, சுப்பிரமணிய சிவா, பாரதி, காந்தி, கோகலே இவர்கள் எல்லாம் அந்த இடங்களில் இருந்தனர் - Photo வடிவில். பல இளைஞர்களுக்கும் முக்கியமான பலரின் முகங்கள் தெரியவில்லை. அவர்களின் சாதனைகளாவது தெரிந்தால் போதும். But அதுவும் தெரியல. சேரி. இன்றைய நிலைக்கு நாமும் ஒரு காரணம். எந்த விழாவாக இருந்தாலும் நம் தேசம், கடந்து வந்த பாதை பத்தி கொஞ்சம் சொல்லணும். அத நாம பண்றதில்ல. எனக்கு மூச்சு முட்டியது அந்த போராட்டங்கள் பத்தி சொல்லி முடிப்பதற்குள். 3 முக்கிய இரயில் சம்பவம் பத்தி சொன்னேன் - காந்தியின் South Africa அனுபவம், காந்தியின் மதுரை அனுபவம், வீர வாஞ்சிநாதனின் வீரச் செயல். 'STDன்னா வரலாறு தானா'ன்னு கொஞ்ச பேரு கேட்ட மாதிரி இருந்தது அந்த விளக்கத்திற்குப் பிறகு.. நடுவர்கள் 'பிரமாதம்'ன்னு சொல்லிக் கிளம்பினர். (அதன் முழு அர்த்தம் sanskritல் தெரிந்து நான் மட்டும் வியந்தேன். இதுவும்  நம் மொழிய வச்சு அரசியல் செய்ததால் வந்த விளைவு).

                     எல்லாரிடமும் நல்ல வரவேற்பு.. ஆனா நாங்க பெருசா செலவு செஞ்சு Decorate பண்ணல, ஏன்னா அங்க இருந்த பல தலைவர்களும் எளிமையை விரும்பினர். நாங்களும் கொஞ்சம் அத செயல்படுத்தினோம். அப்பறம் எதிர்பார்த்தது போலவே எங்களுக்கு கடைசி இடம் தான். காரணம் தெரியல - நாங்க நிறைய செலவு செய்யல, decoration Attractiveவாக இல்ல, எந்த சமயம் பத்தியும் பேசல, முக்கியமா Topic விட்டு விலகியே போனோம், அதாங்க நாங்க (நான்) christmas கொண்டாடவில்ல.. இது மாதிரி இருக்கலாம்ன்னு என்னோட கருத்து.. சரி இருக்கட்டும். இது மாதிரி ஒரு விழாவிற்கு (Decoration) ஏற்பாடு செய்து, decoration board வைத்து, தொடங்கிவைத்த Vijai, Anu Prasad இரண்டு பேரும் கடைசி வரை கொஞ்சம் Tensionனோடு தான் இருந்தனர்.. கடைசியில் இதில் வெற்றியும் பெற்றனர்.. ஆம். அவர்களால் தான் எங்க டீமினாலும் இது போன்ற ஒரு நல்ல விஷயத்த எல்லார் முன்னாடியும் கொண்டு போக முடிந்தது.. Big Salute to those 2! 

                        எங்களால் முடிந்தது ஒரு 4-5 பேருக்கு அன்னிக்கு தேச உணர்வு கொண்டுவந்தது. எனக்கு ஏறத்தாழ RSS முத்திரை ஏறிவிட்டது. முதல் வாரம் பாரதி பிறந்தநாள், அடுத்த வாரம் பாரத மாதாவோடு விழா.. நான் இதற்கு எல்லாம் கவலைப் படவில்லை..அனைவரும் மற்றதை எடுத்துவிட்டனர். நான் மட்டும் இன்னும் பாரதி படத்த இன்னும் ஒட்டிவைத்துள்ளேன்.இவைதான்  எனக்கு என்றும் நிரந்தர Decoration, அடையாளம்., எனக்கு மட்டுமல்ல, நமக்கும், நம் நாட்டிற்கும்!

               தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? சர்வேசா! இப்பயிரைக்
                   கண்ணீரால் காத்தோம்!
              பஞ்சமும் நோயும் நின் மெய்யடி யார்க்கோ ?
                  பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ ?
             விண்ணில் இரவிதனை விட்டுவிட்டு எவரும்போய்
                  மின்மினி கொள்வாரோ ? 
              மண்ணில் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
                    மாண்பினை இழப்பாரோ ?


விடை தெரியாத இந்தக் கேள்விகள் என்னுள் இன்றும் ஓடுகிறது!


நல்லதோர் வீணை செய்தேன், அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?

என்று தணியும் இந்த சுதந்திர தாகம், என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?