Wednesday, September 20, 2017

சுண்டல்-புட்டு-செட்டியார் : கொலு அனுபவம்

சுண்டல்-புட்டு-செட்டியார் : கொலு அனுபவம்

"ம்ம்.. உங்களைக்கேட்டா தெரியும்" எதிர்ப்பட்ட அலுவலக நண்பர்கள் பேசியது..
'சொல்லுங்க'..
'இந்த பெருமாள் தசாவதாரம், கொஞ்சம் வரிசையா, சீக்குவன்சா சொல்லுங்க.. உங்களைத்தான் தேடினோம்'.. (நெற்றியில் திருமண்ணோடு அலுவலகம் போவதால் இந்த மாதிரி சில கேள்விகள் எனக்கு பாஸ் செய்யப்படும்:))
'சரி.. மீனோடு ஆமை கேழல் அரி குறல்....'(கடகடவென திருமங்கை ஆழ்வார் பாசுரம் சொன்னேன் தசாவதார வரிசை பற்றி)..
'அட.. மெதுவா தமிழ்ல்ல சொல்லுங்க...'
'!..ஓ..மீன், ஆமை, வராகம்..' , வரிசையில் சொன்னேன்.. 'இது எதுக்கு கேட்டீங்க?'..
'வீட்ல கொலு, தசாவதார செட் இருக்கு.. வரிசை தெரியாது.. அதான்..'..
'எத்தனை படி'
'அஞ்சு படி, கிட்டத்தட்ட பத்து வருஷமா வைக்கறேன்.. போனவருசம் என்னோட சித்தி வச்சாங்க., ஸோ, கவனிக்கல.. அந்த போட்டோ எடுத்து பாக்கணும். அப்போ அந்த புத்தா எந்த எடத்துல வருவாரு.?'
'புத்தர் பத்தி எனக்குத் தெரியாதுங்க.. நான் படிச்ச தமிழ் பாட்டுல அவரு வரல..'..
'இல்ல கடைல அப்படித்தான் இருந்தது..'
அதற்க்கு மேல் நான் ஒன்னும் சொல்லவில்லை.. பேச்சு டார்வின் உயிர் கோட்ப்பாடு பத்தி போக, நானும் வழக்கம் போல் 'டார்வின் புதுசா ஒன்னும் சொல்லல, நம்ப கிட்ட இருந்து சுட்டதுதான்' என்று வாதிட்டேன்.. இது நேற்று அலுவலகத்தில் டீம் நண்பர் ஒருவர் கேட்டது, தொடர்ந்து நடந்த சம்பாஷணைகள்..

                                   இந்த புரட்டாசி மாதம் துவங்கிவிட்டாலே திருவிழாவிற்க்குக் குறையிருக்காது. அலுவலக வேலைக்கும் தான் (ஏதோ மத்த நாளல்ல கம்மியா இருக்கிற மாதிரி). இந்த முறை பலமுனைத் தாக்குதல்-உரலில் அகப்பட்டது போல் இருக்கு இன்னமும்.. அந்த பிரச்சனை முடிந்த பிறகு விரிவாக எழுதறேன். ஒன்னு மட்டும் நன்கு தெரிஞ்சுண்டேன் - ஹானஸ்டி-நியாயமாக இருக்கணும் (ஆன்சைட்- ஆப்ஷோர்எங்க இருந்தாலும்) என்று சொல்லித்திரியும் என்னைப் போன்றவர்களுக்கு எப்போதும் கஷ்டம் தான்..அப்பறம் கொஞ்சமாவது பாலிடிக்ஸ் பண்ணனும். சரி., நானும் என் ப்ரொஜெக்ட்டும் மாறப் போறதில்ல.

கொலு பற்றி கொஞ்சம் சொல்லுங்க இல்ல எழுதுங்க என்று 2-3 நண்பர்கள் கேட்டார்கள்.. சரி பார்க்கலாம், எல்லாத்துக்கும் நேரம் கூடி வரணும்.. இந்த கொலு அனுபவம் பற்றி,  அமெரிக்காவில் இருக்கும் நம்மவர்கள் வீட்டில் நடக்கும் கொலு பார்த்து எழுத முற்பட(2013), முடியாமல் போய் இப்போது தொடர்ந்தேன்.. இந்த கொலு பற்றி நேரடியாக ஆழ்வார்கள் சொல்லவில்லை என்றாலும், இந்த வார்த்தை அப்போது புழக்கத்தில் இருந்திருக்காது.. இதற்கு சமமாக 'நிற்க, நிறுத்தல், வீற்றிருத்தல், திருவோலக்கம்' என்ற வார்த்தைகளை சொல்லலாம்.. முதல் மூன்று வார்த்தைகளும் அநேக இடங்களில் பாசுரங்களில் வருகிறது.. 'திருவோலக்கம்' உரையாசியர்களின் நடைகளில் வருகிறது.. திருவாசகத்தில் (கோயில் மூத்த திருப்பதிகம் ) இந்த வார்த்தை அப்படியே வந்து இன்றைய கொலுவின் அர்த்தத்தைக் காட்டுகிறது..

"தேசா நேசர் சூழ்ந்திருக்குந் திருவோ லக்கஞ் சேவிக்க
ஈசா பொன்னம் பலத்தாடும் எந்தாய் இனித்தான் இரங்காயே" (திருவோலக்கம் - அத்தாணி மண்டபத்தில் வீற்றிருக்கை)

இப்போ ஆழ்வார் பாசுரங்கள் சில... இந்த கொலு நம்மாழவார் காலம் தொட்டே இருந்தது.. ஆம், அவர் கோவிலில் இருக்கும் அர்ச்சாரூபமான பெருமானை கொலு வீற்றிருக்கும் அழகைப் பாடுகிறார்.. பின் ஆண்டாள் கொலு வைத்தாள்..

நம்மாழ்வார் சொல்வது..

வீற்றிருந்து ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம் மா பிளந்தான் தன்னை
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?  

வீற்றிருந்து ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல-
**திருநாட்டில் திருவனந்தாழ்வான் மீது பெரியபிராட்டியாரோடுகூட எழுந்தருளியிருந்து “பொங்கோதஞ் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும், அங்காதுஞ் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான்” என்கிறபடியே உலகமெல்லாம் செங்கோல் செலுத்தி நியமிப்பவனாய், இங்ஙனம் நியமிப்பதற்குறுப்பான ஞானம் சக்திமுதலிய திருக்குணங்கள் நிரம்பப்பெற்றவனாய் தன்னுடைய ப்ரபுத்வத்தினால் கொடுங்கோன்மை காட்டாதே சாந்தியோடே யிருந்து ஆள்பவனாய், ஸ்ரீக்ருஷ்ணாய்த் திருவததரித்துக் கேசிவதம் பண்ணினவெனக்கு எற்றைக்கு மேழேம்பிறவிக்கும் ஒரு குறையில்லை யென்றாராயிற்று.***

மேலும் வானமாலை பதிகத்தின் துவக்கத்தில் நம்மாழ்வார் சொல்வது இப்படி..

"சேற்றுத் தாமரை செந்நெலூடுமலர் சிரீவர மங்கலநகர்,
வீற்றிருந்த எந்தாய். உனக்கு மிகையல்லே னங்கே."

இன்னும் ஒரு படி மேல போய், இப்போ நாம பண்ற கொலுவுக்கு ஏற்ற மாதிரி ஒரு வரி, அதே வானமாலை பதிகத்தில்.,

"தேறு ஞானத்தர் வேத வேள்வியறாச் சிரீவர மங்கலநகர்,
ஏறிவீற்றிருந்தாய். உன்னை எங்கெய்தக் கூவுவனே?"

(வானமாமலைப் பதியிலே குடியேறி பெருமை தோற்ற எழுந்தருளியிருக்குமவனே என்று அர்த்தம்.. கொலுப்படிகளிலும் என்று இப்போ ஒரு ஸ்வாரஸ்யத்திற்கு வச்சுக்கலாம்)..

இப்போ ஆண்டாளுக்கு வரலாம்.. ஆண்டாள் எங்க கொலு வச்சா, அவளே குழந்தை என்று கேட்கலாம்.. "நாமம்ஆயிரம் ஏற்ற நின்ற" என்ற தம் நாச்சியார் திருமொழியில் 'சிற்றில் வந்து சிதையாமே' என கண்ணனைச் சொல்லுகிறார்.. அதாவது ஆண்டாள் உள்ளிட்ட ஆயர்பாடி சிறுமிகள் எல்லாரும் மணல் வீடு கட்டி விடையாடும் போது, கண்ணன் வந்து அதைக் களைத்தான் என்றும், அவ்வாறு செய்ய வேண்டாம் எனவும் ஆண்டாள் ப்ராத்திக்கிறார். இப்போ நம் வீடுகளில் குழந்தைகள் வைக்கும் கொலு போலத்தான் இது., இன்றைய நிலையில், பார்க், ஏர் போர்ட், ரயில்வே ஸ்டேஷன் என்றெல்லாம் குழந்தைகள் தங்கள் பங்கிற்கு வைப்பது போல, ஆண்டாள் அப்போதே இதை துவக்கிவைக்கிறார் என்று கொள்ளலாம்.. இன்னும் கொஞ்சம் அதிகமாக, அதே பதிகத்தின் துவக்கத்தில்,

"நாமமாயிர மேத்தநின்ற நாராயணாநர னேஉன்னை
மாமிதன்மக னாகப்பெற்றா லெமக்குவாதைதவிருமே.."

இதில் 'நின்ற' என்ற சொல்லிற்கு 'நித்ய விபூதியிலே ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கும்' என்றே சொல்கிறது வ்யாக்யானம்.. ஒரு முறை இராமானுசர் ஸ்ரீரங்கம்வீதியில் நடந்து வரும்போது, வாசலில் சிறுவர்கள் மணல் வீடுகட்டி, பெருமாள், புறப்பாடு எல்லாம் செய்வது போல் விளையாடுவதைக் கண்டு சந்தோஷித்தார்.. சிறுவர்களும் இவரை அழைத்து (பொய்க்கா பொய்க்கா)தீர்த்தம், சடாரி முதலின தந்தனர் என்று ஸ்ரீவைஷணவ குரு பரம்பரை சொல்கிறது.. இதுவும் இன்று காணும் கொலு விளையாட்டுக்கு ஒரு அடிப்படை தான்.. இது போல பல இடங்களில் இருக்கும் ஒரு விஷயம், இன்றும் பல்கிப்பெருகி, இரண்டு நாள் அலுவலகம் லீவு போட்டு கொலு பொம்மை அடுக்க, படி செட் பண்ண என்று வளர்ந்திருக்கிறது.. இதுவும் ஒரு வகை பக்தி தான்..

இப்போ நம்ப அனுபவத்திற்கு வருவோம்.. சுஜாதா தீபாவளி பற்றி சொல்லும் அனுபவம் போல, உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் கொலு போன அனுபவம். அதுவும் கரண்ட் இல்லா கிராமங்கள் முதல், கரண்டே போகாத வெளிநாடு வரை.. பெரும்பாலும் இந்த நவராத்ரி ஒட்டியே காலாண்டு தேர்வு விடுமுறை வரும்.. வழக்கம் போல் துவரிமான் போய் சில நாட்கள் தங்குவோம்.. அது இரண்டு புறமும் வீடுகளுள்ள பெரிய அக்ரஹாரம். கொலு வைக்காத வீடுகளே இருக்க முடியாது.. இப்போதிருப்பது போல் ஸ்டீல் படிகள் இருக்காது.. அப்போதைக்கு படிகள் தயார் செய்யப்படும். சிலரிடம் மரப்படிகள் இருக்கும்..

எங்க ஆத்தில் (வீட்டில்) தாத்தாவின் சேர், முக்காலி, பழைய குடங்கள், இரண்டு மூன்று தலைமுறை முந்தின ட்ரங்கு பெட்டிகள், உயர்ந்த கட்டில்கள் எல்லாம் சேர்த்து தான் படி செய்வோம்..மேலே ஒரு வெள்ளை நிற 10x5 வேஷ்டி விரித்தால் ஒன்னும் தெரியாது.. .. வீட்டில் கரண்டும்இருக்காது.. வெளிச்சத்தோடு இந்த ஏற்பாடு முடியும்.. துணியில் சுற்றி, போன வருஷம் வைத்த பொம்மைகளை நாம் தொட முடியாது.. நமக்கு தனியா கீழ பார்க் செய்து விளையாடலாம்.. இதற்க்கு கொல்லைப்புறம் இருக்கும் வைகை ஆற்றிலிருந்து மணல், ஒதுங்கும் கிளிஞ்சல்கள், கூலான் கற்கள், செடி, காட்டுப்பூ எல்லாம் நாங்கள் எடுத்து வருவோம். பெரிய விசாலமான கூடத்தில் இருக்கும் பெரிய ஊஞ்சல் கழற்றிவைக்கப்படும் கொலுவிற்காக.. நானும் பிடிக்கறேன்னு ஒருபக்கம் தூக்குவோம். பார்க்கில் அகழிகள், தெப்பக்குளம் எல்லாம் வைத்து பிளாஸ்டிக் மீன் மிதக்கவிடுவோம்.. காலை எழுந்தவுடன் பல் கூட தேய்க்காமல் அதை வந்து பார்த்து, இரசித்து பலரும் வந்து தூண்டியபின் பல் தேய்க்கவே போவோம். ஆண்பிள்ளைகள் வேலை இதோடு முடியாது.. சாயங்காலம் யார் வீட்டில் கொலு, எவ்வளவு படி, எது உயர்ந்த பொம்மை என்று ஒரு ரவுண்டு போக வேண்டும்.. கடைசிப் படியில் (மேலே) இருக்கும் பொம்மை கிட்டத்தட்ட சீலிங் இடிக்கும் அளவிற்கு இருக்கும் சில வீடுகளில், அவ்வளவு பெரிய பொம்மைகள். கண்டிப்பாக செட்டியார் பொம்மை இருக்கும் சிறு கடையோடு, தசாவதார செட் இதாயத்தி எல்லாம் வழக்கம்.. அந்த நாட்களில் போட்டோ வசதி இல்லாதது இப்போது வருத்தமாய் இருக்கிறது, இருந்தால் இது போல் எழுத மாட்டோம் என்பது வேற விஷயம்..இவையெல்லாம் சில தொலைத்த தருணங்கள் இப்போது. ஊஞ்சல் கட்டுமளவிற்கு கூடத்தை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. நாங்களும் இந்த அவசர யுகத்தில் வாழ்கிறோம் என்றே ஓடுகிறது..

ஒரு நாளைக்கு அதிகபட்சம் பத்து வீட்டிற்கு போவார்கள் பெரியவர்கள்.. அது போல் நம் வீட்டிற்கும் வருவார்கள்.. கண்டிப்பாக பாட்டு உண்டு.. சுஜாதா ஸ்ரீரங்கத்தில் சொல்வது போல் அபத்தமான இருக்காது.. இனிமையாகப்பாடுவார்கள், பக்க வாத்தியம் இல்லாமல்.. 'கிண்கிணி நாதமும் காதினுள் கேட்குதே, என்ன தவம், தாயே யசோதா, மாமவ பட்டாபி இராமா', அம்புஜம் கிருஷ்ணா, பாபநாசம் சிவம் பாடல்கள் என்று உருப்படிகள் போகும்.. ஒரு சிலருக்கு ஒரு பாட்டு மட்டுமே தெரியும்.. ஒன்பது நாளும் அதை அலுக்காமல் பாடுவதையும் கேட்டிருக்கிறேன். சித்தி, அம்மா கூடவே நாம போனதுதான் 'சுண்டல்'.கையில் ஓலையில் செய்த கொட்டான் இருக்கும்..அதில் சுண்டலை நிரப்பிக்கலாம்.. அவ்வப்போது புட்டு, ஏதாவது கேக் செய்வார்கள்.. பெரும்பாலும் சுண்டல் தான்.ஆனால் அந்த ஒன்பது நாளும் சாயங்காலம் போவதே தெரியாது.. 'டேய் இங்க வாங்கடா, இந்தா சுண்டல்' என அதிகமாய் செய்து வேறு வழி இல்லாமல் கொடுத்த வீடுகளும், வாங்கிய தருணங்களும் உண்டு.. இந்த நிகழ்வுகளுக்கு நேர் மாறாய் இருந்தது திருவல்லிக்கேணி கொலு என்று கேள்வி.. இது வரை போனதில்லை..

இந்த அனுபவங்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல் இருந்தது அமெரிக்கா கொலு அனுபவம்.முதல் முறை என்னை அழைத்தார்கள் நியூ ஜெர்சி சன்னதி தெரு (!) நண்பர்கள். நான் வழக்கம் போல் ஆழ்வார் பாசுரம் சொல்லலாம் என்றேன்.. சிறிய திருமடல்..(நமக்கு பாடத்தெரிந்தாலும் யாரும் கேட்கமுடியாது.. பிஎஸ் வீரப்பா பாடுவது போல் இருக்கும் என்பதால், நமக்குத் தெரிந்த ஒரு விஷயத்திற்கு ஐடியா தருவது.. இதுவும் இந்த ஐடி-யில் கத்துண்டது. :) ) எல்லாருக்கும் ஆனந்தம்.. முழு சம்மதமான்னு தெரியாது. ஆனால் மிகச் சிறப்பாய் போனது அந்த வருஷம்.. அமெரிக்காவிலுமா இப்படி கொலு என்று வியந்தேன். சின்ன வித்தாயசம்., சுண்டலோடு முடியாது, ஸ்னாக்ஸ்., நேரத்தைப் பொறுத்து டின்னர் வரை சென்றது. கொட்டான் தேவை இல்லை.. 'டு கோ' அவசியம் இல்லை, இருந்தாலும் தனி பேக் இருந்தது. இளைஞர்கள் வாய்ப்பாட்டு முதல் வாத்தியம் வரை கலங்கினார்கள்.அக்ரஹாரத்தில் நடந்து ஓடியது போல் இல்லாமல், காரை எடுத்துண்டு மத்தியானம் கிளம்பி ஒரு ரவுண்டு அடித்துவிட்டு வரலாம். என்ன வீக் எண்டு தான் போக முடியும். நான் கொலு வைத்து அவர்களை அழைக்கவில்லை என்ற ஒரு வருத்தம் தான்.. சரி எல்லாரும் இந்தியா வாங்கன்னு சொல்லிட்டு வந்தேன்., இங்கயும் வைக்கலைங்கறது வேற விஷயம் :)..பார்க் கட்ட மணல் தேடி ஓடவில்லை.. சில வீடுகளில் ரோபோ வைத்திருந்தார்கள்.. நம்ப மதுரைகாரர் ஸ்ரீ குமார் பழைய கிருஷ்ணரை இந்தியாவிலிருந்து அழைத்து வந்து கஷ்டப்பட்டு சரி செய்த கதையைச் சொன்னார் ஒரு முறை.. சிலர் பேஸ்மென்ட் முழுதும் படி வைத்து நிரப்பியிருந்தனர்.இன்னும் கொஞ்ச நாட்களில் வால்மார்ட்டில் கொலு பொம்மை விற்கும் நாள் வரும். ஸ்ரீ அரங்கராசன் அந்த வருஷம் வைஷ்ணவ கொலு வைத்திருந்தார். எல்லாரும் இந்தியாவையும், கலாச்சாரத்தையும் மறக்க, மாற்றவில்லை.. அங்குள்ள நிலைக்கு மேம்படுத்தி நம் கலாச்சாரத்தை உயர்த்திவருகிறார்கள் அந்த நாடுகளிலும்.. பொலிக, பொலிக, பொலிக!..

நியூ ஜெர்சி கொலு படங்கள்-2013: ஸ்ரீ ஸ்ரீநிவாசன்-ஸ்ரீமதிசாந்தி, ஸ்ரீகுமார், ஸ்ரீ.அரங்கஇராசன், ஸ்ரீ.வெங்கட் கோபி, ஸ்ரீ.புருஷோத்தமன்,ஸ்ரீ சுபாஷ் அவர்களின் இல்லங்களில்..

(20 வருஷத்துக்கு முன்ன துவரிமான்ல கொலு பார்த்த நினைவும், மகிழ்ச்சியும் நேத்து ஸ்ரீகுமார் கொலுவில்! வழக்கம் போல ஒரு ஏக்கமும் தான்!)




















அப்பறம் அந்த தசாவதாரப் பாடல்.. இப்படித்தான் சந்தேகம் வரும்ன்னு ஆழ்வார் வரிசைப்படுத்திப் பாடினது..

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்த்
தானாய் பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னைக் கண்ணபுரத்து அடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன்சொல் தமிழ்மாலை செப்பப் பாவம் நில்லாவே
(திருமங்கை ஆழ்வார் - பெரிய திருமொழி).

ஆனான் ஆளுடையா னென்றஃதேகொண் டுகந்துவந்து,
தானே யின்னருள்செய் தென்னைமுற்றவும் தானானான்,
மீனா யாமையுமாய் நரசிங்கமு மாய்க்குறளாய்,
கானா ரெனாமுமாய்க் கற்கியாமின்னம் கார்வண்ணனே (நம்மாழ்வார்-திருவாய்மொழி)

Saturday, September 16, 2017

ஒரு அணா பூவும், அரை அணா எண்ணெய்யும் - ஸ்ரீ ஜெயந்தி கொண்டாட்டம்

        கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும்||

       வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்*
       கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்**
       எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட*
       கண்ணன் முற்றம் கலந்தளறாயிற்றே**

ஒரு அணா பூவும், அரை அணா எண்ணெய்யும் - ஸ்ரீ ஜெயந்தி கொண்டாட்டம்

'தம்பி, வண்டி மெட்ராஸ் போகுது, நீங்க?'..
நானும் சென்னை தான்,.
சரி எங்க தம்பி?...
திருவல்லிக்கேணி...
ஓஹோ... மைலாப்பூர், கற்பகம் ஹோட்டல் தெரியுமா? வடக்கு மாட தெரு...
தெரியும் சார்..
அட, அது நம்ப ஹோட்டல் தான்..
ஹோ.. அப்படியா?..
என்ன, இப்படி கேட்டுட்டீங்க,. நம்ப மாப்பிளை தான்..
ம்ம்..
"என் கொழுந்தியாவோட, சகலை, அக்கா மாப்பிளை தான்.. திருவல்லிக்கேணியில் கூட நம்ப சொந்தக்காரங்க இருக்காங்க.. கோவில் பக்கத்துல அரிசிக்கடை,. கடை பேரு கூட... ஏம்மா அந்த பேரு ஏன்னா?..".. " இந்த.. நீ சும்மா இருக்கா மாட்ட, நானே காலைல எங்க தனரதுன்னு தெரியாம கடக்கேன்..".. வியாழன் இரவு இரயில் பயணம் சுவாரஸ்யமாய் போய்க்கொண்டிருந்தது இந்த சம்பாஷணைகளோடு.. அந்தம்மாவின் பதிலுக்குப் பின் நானும் அந்த முதியவரும் நேருக்கு நேர் பார்க்கவில்லை.. கிருஷ்ண ஜெயந்தி முடிந்து சென்னை திரும்புகையில், மதுரை இரயிலில் நடந்த உரையாடல்.. இது ஒரு துவக்கத்தின் முடிவு.

சென்ற சனிக்கிழமை வரை ஸ்ரீ ஜெயந்தி (கண்ணன் பிறப்பிற்கு) ஊருக்குப் போவது பற்றி ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கவில்லை.. சென்ற வருஷம் இதே போல் போக தீர்மானித்து கடைசியில் டாஸ்க் ஆர்டர், பில்லிங் இத்யாதிகள் எல்லாம் ஒருசேர்ந்து கம்சன் போல் தாக்க துவரிமான் போகும் பிளான் கேன்சல் ஆனது. இப்போதும் அப்படி ஆக நிறைய வாய்ப்பு இருந்தது. ஏற்கனவே டாஸ்க் ஆர்டர் புதுப்பிக்கும் வேலை துவங்கனும், அதை இந்த வாரம் பாக்கலாம்ன்னு மேனேஜர் சொன்னது நான் ஊர்க்குப் போவதை கிட்டத்தட்ட கைவிடும் நிலைக்கு வந்துவிட்டேன். ஆனால், சனிக்கிழமை வீட்டிலிருந்தது ஒரு போன், கொஞ்சம் உடல்நலம் சரியில்லை, நீ வந்தால் நன்னா இருக்கும் என்று.. சரி, ஏதாவது பேருந்து புடிக்கலாம்ன்னு போனா எல்லாம் புல்ன்னு ஒரு கதை., அப்பறம் ஒரு பேருந்து ஏறி ஊர் போனேன்.. மேனேஜரிடம் சொல்ல, 'சரி ஊருல போய் அந்த டாஸ்க் ஆர்டர் வேல பார்த்துக்கலாம்ன்னு' ஒரு சமாதானம் சொன்னார்..

எதுவுமே இல்லாததற்கு இதுவாவது கிடைத்ததேன்னு காற்றில் கடியனாய் ஓடி அகம் புகுந்தேன். மாற்றி மாற்றி வீட்டு வேலையும், அலுவலக வேலையும் பார்க்க, அவ்வப்போது மழையும் பெய்து பூமியையும் குளிரவைத்தது.
இன்-பேரலல், கிருஷ்ண ஜெயந்தி வேலைகளையும் செய்து வந்தேன். சென்னையிலிருந்து கூடவே ஒரு சின்ன கிருஷ்ணனையும் (தினமும் ஆராதிக்கும்) அழைத்துச் சென்றிருந்தேன்.. அவர் சென்னை வந்து ஒரு வருஷம் கூட ஆகவில்லை, அவருக்கும் ஊரைப்பார்க்கும் ஆசை போல.. இப்படி ஒரு ஏற்ப்பாட்டை அவர் பிறந்தநாளில் அவரே செய்தார் போலும். ஆயர் குல வேந்தன், 'அநுகாரம் முற்றி இடை நடையும், இடைப் பேச்சும், முடை நாற்றமும் தன்னடையே வந்து சேர்ந்த' ஆண்டாள் இருக்கும் சீமையில் கொண்டாடவே விரும்பினான் போலும் திருவல்லிக்கேணியைத் தவிர்த்து. பேக் டு ஸ்ரீஜெயந்தி டே.

பின்மாலை நாலு மணியளவிலிருந்து மழை துவங்கியது. காலை விடிந்தது கூடத் தெரியாதளவிற்கு கரிய மேகங்கள்.. 'கருவுடை மேகங்கள் கண்டால்உன்னைக் கண்டாலொக்கும் கண்கள், உருவுடையாய்உலகேழும் உண்டாக வந்து பிறந்தாய்' என்ற பெரியாழ்வார் சொற்படி தான்வருவதை 'கண்ணனென்னும் கருந்தெய்வம்' காட்டிக்கொண்டிருந்தார்.. பெரியாழ்வார் 'வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி' என்றும், ஆண்டாள் 'மாயனை மன்னு வடமதுரை மைந்தனை' என்றும் பல இடங்களில் மதுராவைக் குறிக்கும் போது 'வட' திசையைக் காட்டி மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.தாங்கள் இருக்கும் திருமல்லி நாட்டின் தலைநகரை
'தென்மதுரை' என்று குறிப்பால் உணர்த்தினார்கள். இதுவே பல்லாண்டு விளைந்த மண்.. இன்றும் மதுரையில் 'மெய் காட்டும் பொட்டல்' இருக்கிறது..(மேன்காட்டுப் பொட்டல் என்று மருவியது இப்போது).வருடத்துக்கு ஒருநாள் பல்லாண்டு வைபவம் அங்கு நடக்கிறது. அன்றும் அப்படியே மதுரா போலவே தோற்றமளித்தது..

ஊரிலே இருந்தும் இம்முறையும் துவரிமான் செல்ல முடியாது போக, காலை லேசான மழை விட்ட நேரத்தில் அங்கு தேர் நடந்திருக்கிறது. சிறிது நேரத்தில் எதிர்பாராமல் வாட்ஸாப்பில் துவரிமான் போட்டோ வந்தது. அந்த நாளில் ஸ்ரீஜெயந்தி எப்படி கொண்டாடினார்கள் என்று கொஞ்சம் பழைய கதைக்குப் போனோம்.. சிறுவர்கள், சிறுமிகள் நல்ல துணி உடுத்திக்கொண்டு (இப்போ இருக்கற மாதிரி கிருஷ்ணன்-ராதே வேஷம் போட்டு ஊர்வலம் போவது போன்ற எல்லாம் அப்போது இல்லை) ஒவ்வொரு வீடாகப் போய் இரண்டு-மூணு வசனங்கள்இருக்கும் அதைச் சொல்லி 'நாளை பிறக்கும் கிருஷ்ணனுக்கு எண்ணெய் கொடுங்கோ' என்று வீடு தோறும் எண்ணெய் வாங்கி கோவிலில் சேர்ப்பது.. 2-3 குழுக்கள் கூட இருக்கும்.. நாங்கள் இருந்த போது கூட அரிசியும், எண்ணெய்யும் வாங்கிய ஞாபகம்.. அப்போது விடுமுறைக்கு குழந்தைகள் நிறைய வருவார்கள்.. இப்போது கிராமங்களே இல்லை., வேற என்ன சொல்ல., இருக்கிற அர்ச்சகர், 3-4 பேர் தான் கடவுளுக்குக் கதி..

**துவரிமான் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி புறப்பாடு** - காளிங்க நர்த்தன கிருஷ்ணன்..






திரளி - சொந்த ஊர் பற்றி தனியாக எழுத நிறைய இருக்கிறது. இந்திய தொல் பொருள் ஆராய்ச்சிப்படி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மக்கள் குடியிருந்தனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இராணி மங்கம்மாள் பற்றிய செவி வழிச் செய்திகளில் திரளியும் வருகிறது.. வெற்றிலையை இடதுகையால் போட்ட தோஷம் நீங்க ஏழு பிராமண கிராமங்களை உருவாக்கி அதில் தெலுங்கு பேசும் பிராமணர்களைக் குடிவைத்து, பெருமாள் கோவிலையும் நிர்மாணம் பண்ணினார். திரளியும் அதில் ஒன்று. முன்னர் தெலுங்கு பேசும் தென்கலை ஸ்ரீ வைஷ்ணவர்கள் இருந்தார்கள் என்றும், பின் அவர்கள் போக தமிழ் பேசும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் வந்தார்கள் என்றும் அசைக்க முடியாத செவி வழிச் செய்தி இன்றும் ஊரில் உலவுகிறது. ஊரின் நடு மத்தியில் அஹ்ரகாரம் 2 பெரிய தெருக்களோடு. 300-400 வீடுகள். .ஆயர்களாய் ஆநிரை மேய்க்கும் கோனார் வீதி ஒருபுறம், மேலும் இரண்டு வீதிகள்.. இன்று அத்தனை வீடுகளும் இல்லை., தெருக்களுக்கான அடையாளங்களும் இல்லை. நல்லி சேர் வயல்கள், மச்சினி மாடங்கள் சூழ்ந்த, எழிலார்ந்த ஊர் எல்லாம் இல்லை.. மழை பெய்தால் மட்டுமே பசுமை, இல்லையேல் வறுமை தான். காரை வீடுகள் (சுண்ணாம்பு காரை) கொஞ்சம், மீதி மண் வீடுகள் தான். கருங்கல்லினாலான கோவில் நல்ல பரப்பளவுடன்.. கோட்டை வாசல் தாண்டி கோவிலுக்குப் போவதைவிட வயலுக்குப் போவதையே வழக்கமாய்க் கொண்டு வாழ்ந்துவந்தனர்.. யஜுர்-சாம வேதம் படித்ததை/கரைக்கண்ட பண்டிதர்கள் இருந்திருக்கிறார்கள், பாடசாலையும் நடந்திருக்கிறது ஒருபுறம், பல வித ஹோமங்களோடு.. (இன்றும் திருவல்லிக்கேணி/ஸ்ரீரங்கம் போன்ற இடங்களில் ஊர் பெயரைச் சொன்னால், அந்தநாளில் திரளியில் இருந்த படித்தவர்கள் பற்றி பலரும் பேசுகிறார்கள்).. மாற்றங்கள் பல வந்தது. இன்றைய நிலையில் வாட்ஸாப்பில் தான் குசலம் ஓடுகிறது.. இதற்க்கென்று தனியாக ஒரு குரூப் இருக்கிறது..

முன்னர் கிருஷ்ணனுக்கு சிறிய பல்லக்கு செய்து கொண்டு காலை- மாலை என்று வீதியில் ஓடுவோம் (என் நினைவில் 2-3 வருஷம் அப்படிப்போனதுண்டு), வீட்டிலுள்ள கிருஷ்ணன் படத்தை வைத்துக் கொண்டு. அவ்வளவு தான் எங்களுக்குத் தெரிந்தது. 'தன்னேறாயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு, வீதியார வருவான்' என்ற ஆழ்வார் பாசுரங்கள் எல்லாம் தெரியாது.வீடுகளில் கிருஷ்ணன் பாதம் இருக்கும், 'இருகாலும்கொண்டு அங்கங்கு எழுதினாற்போல்இலச்சினைப் பட நடந்து' என்ற பெரியாழ்வார் சொன்னதும் தெரியாது.. வீடுதோறும் ஏதாவது ஒரு பக்ஷணம் இருக்கும்.. 'அப்பம் கலந்த சிற்றுண்டி, கன்னலில் லட்டு அவற்றோடு சீடை கார் எள்ளின் உண்டை கலத்திலிட்டு' என்ற பெரியாழ்வார் பாசுரமும் அறியவில்லை எங்களுக்கு.. ஆனால் கண்ணன் எங்களுக்கு ஒரு நண்பன் போலத்தான்.

தலைப்பு பற்றி இன்னும் பேசவில்லை.. ஆம்., 'எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திரு வோணத் திருவிழவில்' என்ற ஊர் ஆழ்வார் (பெரியாழ்வார்) சொன்னது போல், ஊரிலுள்ள ஸ்ரீனிவாசர் திருக்கோவில் கைங்கர்யங்களில் ஈடுபட்டுள்ளனர் எம் முன்னோர்கள்(கிராம முன்சீப் என்ற என்ற எஜமானன் ஸ்தானம்.. வழி வழியா அந்த வேலைதான் (கிராம முன்சீப்)) . இப்போது இருப்பது போல் யாரிடமும் பண வசதி இந்த அளவிற்கு இல்லை., வயல்களும் வானம் பார்த்த பூமி தான். வருஷத்திற்கு இரண்டு-மூன்று முறை தான் பெரிய அளவில் திருமஞ்சனமே நடக்கும். ஸ்ரீ ரங்கம் பெரிய பெருமாள் போல், இங்கும் 'ஈரங்கொல்லி' இருப்பார் பக்கத்து ஊரில் (அச்சம்பட்டி) .. பெருமாள் வஸ்திரங்களை எல்லாம் துவைக்கும் கைங்கர்யம் அவருக்கு. தாயாருக்கு தனியாக வஸ்திரம் தைப்பார்கள். இப்போது அவற்றிக்கு எல்லாம் வேலை இல்லாமல் போனது. அவ்வாறு பெரிய உற்ஸவங்கள் இல்லாத காலத்தில் எங்கள் முன்னோர்கள், பெருமானுக்கு மூன்று உற்ஸவங்களை ஏற்படுத்தி அதற்க்கு கைங்கர்யச் செலவை தாங்கள் தருவதாய் பட்டயம் செய்துள்ளனர்.. அவற்றில் ஒன்று தான் கண்ணன் பிறப்பு.. பட்டையம் சொல்லும் விஷயம் இது தான் 'ஒரு அணாவிற்கு புஷ்பம்; அரை அணாவிற்கு எண்ணெய் சேர்த்து கர்ப்பக்கிரகம் முன் இருக்கும் சரவிளக்கை ஏற்ற வேணும்'.. அந்த நாட்களில் மின்சாரம் இல்லை.. ஸ்ரீனிவாசரை தீர்க்கமாய்ச் சேவிக்க பெரிய விளக்குகள் வேண்டும்., அதற்க்கே இந்த ஏற்பாடு.. இந்த கைங்கர்யம் 5-6 தலைமுறைகளுக்கு முன் வந்திருக்கலாம். எம்பெருமான் கிருபையால் இன்றும்கைங்கர்யம் சிறப்பாக நடக்கிறது..

**திரளி-கௌண்டின்ய நதி** (கௌண்டின்ய முனிவரின் பெயராலும், இங்குள்ள பலர் அந்த கோத்ரத்தைச் சேர்ந்தாலும் இப்பெயர் பெற்றிருக்கலாம்)




கிருஷ்ண ஜெயந்தியன்று, பெரியாழ்வார் திருமொழி முழுதும் சேவிக்கும் வாய்ப்பு இம்முறையும் கிடைத்தது. மொத்தமே 7 பேர் தான். பின்னாடி கோஷ்டி சொல்லக் கூட யாருமில்லை என்ற வருத்தம் வழக்கம் போல்.. இளைஞர்கள் சொந்த ஊருக்கு வருவதில்லை என்ற நிலை., காரணம் யாரைச் சொல்வது. கேட்பதற்கு எம்பெருமான் சித்தமாய் இருக்கிறான்.. இந்த முறை பெய்த மழையில் ஊரின் காட்டாறு 'கௌண்டின்ய நதி' பாலத்தைத் தொட்டுக்கொண்டு போனது. இயற்க்கையின் சூழல் மதுரா போலவே இருந்தது, எங்கும் பசுமை கலந்து., ஆநிரை மேய்க்க கண்ணன் போய் அருமருந்தான இடமாய் இருந்தது.. பெரியாழ்வார் பாசுரங்கள் பலவும் கண்ணன் விளையாட்டுக்களை சொன்னாலும், வேதாந்த அர்த்தங்களை சொல்லும் வண்ணம் இருந்தது.. ஒரு பாடல் மட்டும் என்னை மிகவும் புரட்டிப்போட்டது. ஊருக்குப் கிளம்பும் முன் ஏதோ ஒரு இஸ்யு.. வழக்கம் போல் 'செங்குத்து' (!) டீம் பிரச்சனை.. நானும் சூடாய் ஒரு மெயில் தட்டி, வழக்கம் போல் ப்ராஜெக்ட் ரிலீஸ் கேட்டு மனஜேர்க்கு ஒரு மெயில் போட்ட கையோடு கோவில் கிளம்பினேன்.. சன்னதியில் இந்த பாடல் சொன்ன போது, நான் என்னிடம் இல்லை...

"உனக்குப் பணி செய்திருக்கும் தவமுடையேன் இனி போய் ஒருவன் 
தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்க நின் சாயை அழிவு கண்டாய்
புனத்தினை கிள்ளிப் புதுவவி காட்டிஉன் பொன்னடி வாழ்கவென்று
இனக்குற வர்புதிய துண்ணும் எழில்திரு மாலிருஞ் சோலையெந்தாய்"(பெரியாழ்வார் திருமொழி - 5-3- திருமாலிருஞ்சோலை)

அவ்வளவு தான்!. இதற்குமேல் என்ன சொல்வது..பொட்டிலே அடித்தது போல் இருந்தது. 'பிறர்க்கே உழைத்து ஏழையானேன்' என்ற திருமங்கை ஆழ்வாரின் வரிகள் வந்துபோயின.சரி, இதுவும்-அதுவும் அவனது இன்னருளே என்ற வழக்கமான மன தேற்றலோடு இருந்தேன். வெண்ணெய் பிரசாதம் கண்டருளினார் இந்த வருஷம் விஷேசமாக.. சாற்றுமறை முடிந்து இல்லம் திரும்பினேன். ஆனால் அந்த 'செங்குத்துப்'  பிரச்சனை முடிந்த பாடில்லை, வீட்டிற்கு வந்து மீதமுள்ள மெயில்களுக்கு எல்லாம் ரிப்ளை செய்து இரவை ஓட்டினேன்.. மறு நாள் தான் இரயிலில் மேலுள்ள சம்பாஷணை.. 

Friday, September 8, 2017

செம்மஞ்சேரி ஆண்டாளும் சோழிங்கநல்லூர் பால்கோவாவும்

செம்மஞ்சேரி ஆண்டாளும் சோழிங்கநல்லூர் பால்கோவாவும் -
நாவலூர் அலுவலகம் நாலு வருசமா போனாலும், பேருந்தில் போகும் போது பார்ப்பதுண்டு - குறை தீர்க்கும் கோவிந்தன் ஆலயம் என்று பளீச் வடகலை திருமண்ணோடு.. சரி, இன்னிக்கு சாயங்காலம் போகலாம்ன்னு நினைத்து ஆபிஸ் போனாத்தான், இராத்திரி பத்து மணிக்காவது கிளம்பமுடியும். அப்போ எங்க கோவில் போறது, பெருமாளே ஆண்டாள் சொன்னது மாதிரி (பள்ளிகொள்ளுமிடத்து அடிகொட்டிட) ஸ்ரீரங்கம் போயிருப்பார் தாச்சிக்க(தூங்க). மறுநாளும் இதே கதை தான்.. ஒருமுறை நண்பரை அழைக்க, அவர் வேற ஏதோ தெய்வத்து கோவிலைக் கூறி அழைக்க, பிளான் கேன்சல். அப்பறம் சோழிங்கநல்லூர் வாசத்தில் (உறங்க மட்டும் வீட்டிற்க்கு வருவதால் அது வாசம் தான் ) அந்தக் கோவிலை நினைக்கவே இல்லை. 'என்னில் முன்னம் பாரித்து' என்பது இந்தப் பெருமானுக்கு இருக்காது போல.. அஞ்சு வருசமா பாரிக்கவே இல்லை, கோவில் பக்கத்தில் இருக்கும் கிரௌண்ட்ல் கிரிக்கெட் விளையாடப் போனாலும்.. இன்னிக்கு என்னாமோ பிளான் பண்ணி, கடைசில அங்க போக உத்தேசமானது..

நல்ல, பழமையான கிராமம். ஊரின் பழைய பெயர் 'செம்மன்னன் சேரி'.. இப்போ 'செம்மஞ்சேரி'.. சௌனகர் திருக்கடல்மல்லை போகும் முன் இங்கு வந்ததாகச் சொல்கிறது ஒரு வரலாறு.. கோவில் உடுப்பி மன்னர் ஆட்சியில் கட்டப்பட்டதாக இருக்கலாம். (ஆங்காங்கு தென்கலை திருமண்ணும் இருந்தது ). கோவில் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது.. அட 'சன்னதித் தெரு' என்ற பெரிய போர்டு. அப்பறம் கோவில் வாசல், வாசலில் பூக்கடை.. கிராமம் என்றாலும் ஐடி தாக்கம் நன்றாய் தெரிந்தது விலையில், 'துளசி முழம் 25 ரூவா, முல்லை முழம் 25 ரூவா சாமி'... சரி இந்த ஹெல்மெட் இங்க இருக்கட்டும், என்று பூ வாங்கிக்கொண்டு உள்ளே போக, கோவில் என்பதற்கு உறுதியாக, கார், டூவீலர் பூஜை நடந்து முடிந்திருந்தது, எலுமிச்சம்பழம் நசுக்கப்பட்டு, நம் கால்களிலும் மிதிப்பட்டது. சரி, இவர்கள் 'எல்லாம்' படித்தவர்கள் இல்லை என்ன செய்வது..

நல்ல விசாலமான இடம்.. இந்து சமய அறநிலையத்துறைக்கு நல்ல லக், விண்ணைமுட்டும் கட்டங்கள் நிரம்பி வழியும் இடத்தில் இப்படி ஒரு கோவில்... நுழையும் போதே, வேணுகோபாலன் சந்நிதி. கொடிமரத்தோடு கூடிய 6 சன்னதிகள் கொண்ட கோவில். பழைய கோவில் படத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், கோவில் இப்போது இழைக்கப்பட்டுள்ளது எனலாம். நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீனிவாசர் ஸ்ரீதேவி, பூதேவியோடு, தனிச் சந்நிதியில் அலர்மேல் மங்கை தாயார், ஆண்டாள் எல்லாரும்.. சக்கரத்தாழ்வார் - நரசிம்மர் இல்லாது இப்போ இருக்கற கோவிலா., இராமர் பரிவாரம், அனைத்து ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் திருமேனிகள்.. ,சிறிய வடிவில் அழகிய உற்ஸவ மூர்த்திகள்., சிறிய வாகனங்கள்.. பொதுவாக கும்பகோணம் பக்கம் காணப்படும் 'வெண்ணைக்கு ஆடும் கண்ணன்' (ஒரு கையில் வெண்ணையோடு கொஞ்சம் பிடிவாதமாய் ஆடும் கிருஷ்ணன்) இங்கு இருக்கிறார்.. சென்னையில் வேற எங்கையும் பக்க முடியாது.. ஏதோ நாயக்கர் நிர்வகித்திருப்பார் போல.. 

அர்ச்சகரிடம் சிறிது பேச்சுக் கொடுத்தேன் - 'அண்ணா, முன்ன யாரும் வறதில்ல, ஐடி வந்ததோ, நல்ல கூட்டம், கோவில் வருமானத்திற்கு குறைவில்லை.கோவில் கீழ இறங்கி விழற மாதிரி போயிருத்து.. இந்த ஐடிகாரா தான் முழுசா கட்டியிருக்கா.. வைகுண்ட ஏகாதசிக்கு 25,௦௦௦ பேர் வரா.. கோவில் நன்னா நடக்கறது, பட்டர் தான் இல்லை., நான் மைலாப்பூர், இங்கயே வந்துட்டேன்., அவர் தாசில்தார் ஆபிஸ்ல் வேலை பார்த்து ரிட்டயர்டு ஆனவர், இப்போ சன்னதி பார்க்கரா.. அரசாங்கக் கோவில், உற்ஸவம் எல்லாம் பண்ண முடியாது.. எல்லாத்துக்கும் இவ்வளவு தான்னு ஒரு தொகை சொல்றா...'.. தாயார் சன்னதியில் இருந்த அர்ச்சகர், ஒரு முதியவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்..'இப்போதாவது வந்து கைங்கர்யம் பண்ணனும்னு எண்ணம் வந்ததே, அதுவே தாயார் அனுக்கிரகம், அதுக்கே சந்தோசப்படணும்..' ஆஹா, என்ன ஒரு பெரிய அர்த்தம்.. வேதமும், ஆழ்வாரும் இதைத்தானே சொல்கிறார்கள் (இவையென்ன உலகியற்க்கை), இவரும் இந்த இந்தச் சின்ன கிராமத்தில் சொல்கிறாரே என்ற ஆச்சர்யம்.. திருப்பாவை கல்வெட்டாய் மிளிர்கிறது. அந்தப்பக்கம் அலுவலகம் போறவங்க எல்லாம் இங்க போய்ட்டுவாங்க.. அது வேற உலகம், அவ்வளவு அருமை!"ஓஎம்ஆர் திருப்பதி" என்று மாறும் காலம் வெகு தூரம் இல்லை..இப்போது வரும் தெலுங்கு பேசும் பக்தர் கூட்டம் இதை நிரூபிக்கிறது, மேற்கொண்டு செய்யப்படும் வாகன பூஜைகள் எல்லாம். சீக்கிரம் ப்ரம்மோற்ஸவம் காணுவார் பெருமாள்.. 

கோவிலிருந்து கிளம்பினோம்., நண்பரின் காலில் மீண்டும் எலுமிச்சம்பழம் மிதிப்பட்டது.. கோவிலின் நேர் எதிரில் சிரித்த முகத்தோடு ஜெ.. ஆம்., 'அம்மா உணவகம்'..இராணி மங்கம்மாள் ஒரு நிமிஷம் கண் முன் வந்து போனார்.. இராணி மங்கம்மாள் செய்த நற்காரியங்கள், பேரனாலும், விசுவாசமாய் இருந்தவர்களாலும் அவருக்கு ஏற்பட்ட வருந்தத்தக்க முடிவு/இறப்பு எல்லாம்..

வரும் வழியில் சோழிங்கநல்லூர் அரசு பால் பண்ணையில் பால் சாப்பிட்ட போது (பால்,தினம் வாங்கும் பாக்கெட்டை விட மிக சுவையாக இருந்தது.. இவர்கள் எல்லாம் ஐடி கம்பனிகளில் ஒரு கடை ஓபன் பண்ணலாம்., பணம் அரசுக்காவது போகும்), அங்க பால் கோவாவும் பேமஸ் என்று தெரிந்தது.. சரி ஆண்டாளையும் பார்த்தாச்சு, பால் கோவா வாங்க வேண்டியது தான்.. அட இது நம்ப அரசாங்க முத்திரையோடு, அதான் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தோடு..











more details & photos at temple site ..
http://semmancheri-srinivasa-temple.blogspot.in/