Tuesday, August 27, 2013

முல்லை நிலத்தில் காயா மலர்

காயா, கொன்றை, நெய்தல், முல்லை,
போது அவிழ் தளவமொடு பிடவு, அலர்ந்து கவினிப்
பூ அணி கொண்டன்றால் புறவே
பேர் அமர்க்கண்ணி! ஆடுகம், விரைந்தே. (ஐங்குறுநூறு-412)

                  இயற்கையை விட்டு நாமும் தள்ளி வந்து கொண்டிருக்கிறோம். நம் நாட்டில் என்னென்ன பூக்கள் இருந்தன என்று சங்ககாலப் பாடல்கள் மூலம் தான் அறியலாம். கடைகளில் காண்பது கொஞ்சம் சிரமம் தான்.

          Onsite வந்ததிலிருந்து கோஷ்டி - திவ்யப்ரபந்தம் எல்லாம் கொஞ்சம் குறைந்துவிட்டது.சேரி., நம்ப ஆத்துல இருக்கற கிருஷ்ணன் ஒம்மாசிக்காவது ஏதாவது பண்ணலாம்ன்னு 5 நாள் உற்சவம் ஆரம்பித்தோம். தினமும் 100 பெரியாழ்வார் திருமொழி. இன்றோடு 3 நாள், 3ம் பத்துடன் முடிந்தது. தினமும் பெரியாழ்வார் என்னை அழவைக்காமல் விடுவதில்லை என்று பாட்டு எழுதியிருக்கிறார்.  'வெண்ணை அளைந்த குணுங்கும்' என்று வெண்ணைப் பிரசாதம், பூச்சூட்டல், காப்பிடல்.. அப்பப்பா!. ஆத்தில் பிறந்தக் குழந்தைக்குக் கூட இப்படிப் பார்த்து பார்த்துப் பண்ணுவோமான்னு தெரியல. அதனால தான் 'பொங்கும் பரிவாலே பட்டர் பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர்'.

           நான் சிறுவயதில், திருமங்கலத்தில் இருந்தபோது ஆழ்வார்கள் பன்னிருவர் என்று மட்டும் தெரியும். திருப்பாவை-பல்லாண்டு (2 பாட்டு மட்டும்) தெரியும். அப்போது local கோவில்ல 'கிஷ்டு கானம்' கேசட் போட்டு speakerல connect பண்ணுவா. அதுல வர - புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே, கோகுலத்தில் ஒரு நாள் ராதை, ஆயர்பாடி மாளிகையில் இவை எல்லாம் தான் எனக்குத் தெரிந்த பெருமாள் பாடல்கள் (கிட்டத்தட்ட ஆழ்வார்க்கு ஒப்பாகா நினைத்திருக்கிறேன்).

           பின்னர் ஒரு நாள், திரளி கோவில் திருவோண உற்சவத்தில் ஏதோ ஈர்ப்பு ஏற்ப்பட்டு திருவாய்மொழி புஸ்தகம் எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். இப்போது படிக்கத் தொடங்கியிருக்கிறேன். கொஞ்சம் முன்னேற்றம். ஏதோ அவர் பக்கம் கொஞ்சம் என்னை இழுத்திருக்கிறார். (காந்தம் போல). 2 வாரமா நம்ப ஸ்ரீகுமார், ரங்கா ஸ்ரீநிவாசன் (http://rangasrinivasan.blogspot.com), புருஷோத்தமன் எல்லாம் தினமும் 10 mail .ஒரே சத் விஷயங்கள் தான். இங்க இருக்கப்போற கொஞ்ச நாட்களுக்கு நல்ல சத்-சங்கம் கிடைத்தது மகிழ்ச்சி. விஷயத்துக்கு வரேன்.

           பெரியாழ்வார் புஷ்பக் கைங்கர்ய செய்ததால் தானோ அவரின் பாடல்களில் நிறைய பூக்கள் பற்றிய செய்திகளைக் காணலாம். யாராவது மலர்கள் பற்றி Phd பண்ணனும்னா இந்தத் திருமொழில வர பாடல்களைக் கொஞ்சம் படித்தால் போதும். இன்று படித்த பாடல்களில் 'காயா மலர்' என்று அறிமுகம் செய்கிறார். நீல நிற மலர். ஆதலால் அதை கண்ணனின் நிறத்திற்கு ஒப்பிடுகிறார். மற்ற ஆழ்வார்களின் பாடல்களில் காயா மலர் பற்றிக் கூறப் படவில்லை (நம்மாழ்வார் மட்டும் சொன்னதாக ஞாபகம்).




             இந்தப் பாடலைப் படிக்கும் போது 'அழகர் கோவில் -அழகர் வர்ணிப்பு பாடல்கள்' நினைவுக்கு வந்தது. நான் சிறுவயதில் கேட்ட அந்தப் பாடல்களில் 'காயாம்பூ வண்ணா' என்று வரும். இறைவனைத் தங்களுக்குள் இருத்தும் ஒருவகை நாட்டுப் புறப் பாடல். அழகர் கோவில் பிராகாரங்களில் கிராமத்து மக்கள் கூட்டாக அமர்ந்து இதைப் பாடிக் கேட்டிருக்கிறேன். பாடும் சிறிது நேரத்தில் அருள் வந்து , குறி கூறுவார் பாடுபவர்!.


         காயா மரம் முல்லை நிலத்தில் வளரும். முல்லை நிலத் தலைவன் திருமால்.அந்த மலர் நிறத்தில் கண்ணன் இருப்பது வியப்பில்லை. 'கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும்' என்று சொல்லும் பெரியாழ்வார் அப்படி உவமைப்படுத்திச் சொன்னதும் வியப்பில்லை.

    அஞ்சுட ராழிஉன் கையகத் தேந்தும் அழகாநீ பொய்கை புக்கு
    நஞ்சுமிழ் நாகத்தி னோடு பிணங்கவும் நான்உயிர் வாழ்ந்தி ருந்தேன்
    என்செய்ய என்னை வயிறு மறுக்கினாய் ஏதுமோ ரச்ச மில்லை
    கஞ்சன் மனத்துக்கு உகப்பன வேசெய்தாய் காயாம்பூ வண்ணம் கொண்டாய்.                                                                                                               (பெரியாழ்வார் 3-3-6)

ஆரம்பத்தில் சொன்ன, ஐங்குறுநூறு என்ற எட்டுத் தொகை நூலில் முல்லை திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது போல ஒரு பாடல். அதிலும் இந்த காயா மலர் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

பெரியாழ்வார் பல பூக்களை பற்றிச் சொல்லிருக்கிறார். விரிவாக எழுத வேண்டும்.

"அவியுணா மறந்து வானவ ரெல்லாம் ஆயர் பாடி நிறையப்புகுந்து ஈண்டி
செவியு ணாவின் சுவைகொண்டு மகிழ்ந்து கோவிந்த னைத்தொடர்ந்து என்றும்வி டாரே." (3-6-7).
               வள்ளுவரின் 'சிறிது வயிற்றிக்கும் ஈய்யப்படும்' என்பது கூட இதிலிருந்து வந்திருக்கலாம்.

             அவரின் பிள்ளைத் தமிழும் அபாரம். அவர் தான் முதலில் பிள்ளைத் தமிழ் என்ற செய்யுளைத் தொடங்கினார். இன்னும் பல உருக்கமான பாடல்களோடு இன்றைய 3ம் திருமொழியை முடித்தேன்.

Thursday, August 22, 2013

கோபிகா ஜீவன ஸ்மரனம்! கிருஷ்ணன் வந்தே ஜகத்குரும்!

                      "புளி புளிப்பாக இருந்தாலும் பாத்திரம் துலக்க உபயோகமாகிறது. ஆனால் வேறு கசப்போ, இனிப்போ, உப்போ பாத்திரத்தைத் துலக்க உபயோகப்படுவதில்லை. அதுபோல் புராணங்களிலுள்ள ஸம்பவங்கள் தற்போது நம்ப முடியாவிட்டாலும் அதுதான் உண்மையான் ஆத்மசுத்தியைத் தருகிறது. மற்ற சுவைகளை சுத்தம் செய்வதற்கு உதவாததுபோல் வேறு உலகப் புத்தகங்கள் ஆத்மசுத்தியைத் தராது." --அண்ணா

                          ஸ்ரீ கிருஷ்ணா ப்ரேமி அண்ணாவின் 83 நாள் தொடர் 'மஹா பாரத' உபன்யாசம் இன்றோடு முடிந்தது.  வியக்கத்தக்க உபன்யாசம். சனாதன தர்மம், இராஜ தர்மம், ரிஷி தர்மம், பிராமண தர்மம், ஷத்ரிய தர்மம், பாரதத்தின் சிறப்பு-தர்மம், கிருஷ்ண லீலை ., வேதம், உபநிஷத் எல்லாவற்றிலிருந்தும் மேற்கோள்கள்.  ஆஹா. அவருக்கு இணை அவர் தான்!




                           பரிஷித் பட்டாபிஷேகத்தோடு முடித்தார். திருவல்லிக்கேணி பாசுரம், அதன் விளக்கம் அருமை. துவாரகையில் மறைந்த கண்ணன், திருவல்லிக்கேணியில் தோன்றினார். பாபு இராஜேந்திர பிரசாத் திருவல்லிக்கேணி கோவில் வீதியில் காரில் செல்ல மறுத்து நடந்து சென்றதாகவும், காரணம் கேட்டதற்கு 'நான் இந்தியாவிற்கு இராஜாவாக இருந்தாலும், உலகத்திற்கு இராஜா கிருஷ்ணன் தான். அவர் முன்னாடி காரில் அமர்ந்து 'ஜம்முனு' போகக்கூடாது. அவர்வந்து ஓட்டினா நான் உக்கார்ந்து போறேன்'  என்று நகைச்சுவையோடு சொன்னாலும் நடந்தே சென்றாராம். (இன்றைய நிலை சற்றே கண் முன்னாடி வந்து போனது:(). விவேகானந்தர் , பார்த்தாவுக்கு எழுதிய கடிதமும் இன்றைய உபன்யாசத்தில்!. இவை எல்லாம் 'குவலையத்தோர் தொழுதேத்தும்' வரிகளுக்கு! தினமும் அசத்தாலான நேரடி ஒளிபரப்பு (Live Streaming).





                      நடுநடுவே விசாகா ஹரி காலக்ஷேபம். A Grade Singer என்ன; A+++ கூடச் சொல்லலாம். அண்ணன்வின் சாயல் அப்படியே உபன்யாசத்தில்.
கண்டிப்பாக நாளையும் 9:30 AM EST க்கு srisrianna.com link click செய்து காத்திருப்பேன்.  அத்யயன உத்சவம் முடிந்தாலும் 21ம் நாள் காலையிலேயே கோவிலுக்குப் போறமாதிரி.:)

Wednesday, August 21, 2013

ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரதக்கண்டே!

             ஒரு சில பண்டிகைகள் குடும்பத்தோடு, இல்ல ஊர்ல இருக்கற நிறையாப் பேரோடு கொண்டாடினாத் தான் நல்லா இருக்கும். அந்த வகையாரா தான் உபகர்மா (ஆவணி அவிட்டம்). வருடத்திற்கு ஒரு முறை வருவதால், பல இடங்களில் செய்த அனுபவம்.
             ஆறு, குளம் இந்தமாதிரி நீர் நிலைகளுக்கு காலையிலேயே சென்று சென்றுவிடுவர். 'batch by batch' நடக்கும் . கிட்டத்தட்ட 10-11 வரை கூட நடக்கும். 'எல்லாரும் வந்துட்டா. தலை ஆவணி அவிட்ட பசங்க எல்லாம் அரசக் குச்சியோட வாரா. ஆலாத்தி கரைச்சு வைக்கணும்'  என்று சொல்லிக்கொண்டே ஆரத்தி கரைத்து வைத்து நாங்கள்  வந்ததுடன் எடுத்து வாசலில் கோலத்தின் நடுவே சேர்ப்பர்.
             வைகைக் கரையில் முதல் உபகர்மா செய்த அனுபவம் இன்னும் கண்களின் முன்னால். வைகை நிறைய தண்ணீர். அப்போது நான் முடிக்க மட்டும் 10 மணி ஆகிவிட்டது. சூரியன் உதயமாகி 1.5 நாழிகை ஆனா பிறகு தான் துவங்க வேண்டுமென்று அப்போது படித்ததை பள்ளியில் அடுத்த வருடம் லீவ் வாங்கும் போது பயன் படுத்த வேண்டியதாகிவிட்டது. இன்று (2 நாளும்) யாரும் அந்த வைகை பக்கம் கூட போகல. வைகையிலும் தண்ணீர் இல்லை, யாருக்கும் அவ்வளவு நேரம் இல்லை.:(.



                1-2 முறை குளக்கரையில் செய்த அனுபவம். USல் 2 ஆவணி அவிட்டம் செய்தாகிவிட்டது. சென்னைக்கும் இதற்கும் ஒரு வேறுபாடுமில்லை. Batch ஆகா யாரும் காத்திருக்கப் போவதில்லை, வாசலில் ஆரத்தி சேர்க்கப் போவதில்லை. நான் பயன்படுத்திய புத்தகத்தில் நீர் நிலைகளில் நீராடி என்று அடிக்கடி இருந்தது. கொஞ்சம் பழைய புத்தகம் தான். அந்தக் காலத்தில் (10-15 வருஷம்) இது எல்லாம் இருந்திருக்கும். இயற்கையைத் தொலைத்து வாழக்கையைச் செயற்கையாய் மாற்றி வருகிறோம். பொறுமை, அனுசரித்துப் போறது இது மாதிரி பல விஷயங்கள் இது போல ஊர் கூடி கொண்டாரதல விஷேசங்களில் கத்துக்கலாம். நாம் தான் பக்கத்து வீட்டில் இருப்பவரைக் கூட அறியாமல் இருக்கிறோம். சரி.

              முன்னோர்கள் வேதத்தில் கண்டுபிக்காதது எதுவும் இல்லை. இன்றைய அறிவியலின் மூலம். சின்ன sample - இன்று செய்த சங்கல்பத்தில். பூமியில் எத்தனை கண்டங்கள் இருந்தன என்ற பலவற்றைப் பின்வரும் வேத வரிகள் கூறுகின்றன.

"அத்³ய ப்³ரஹ்மண​: த்³விதீயபரார்தே,ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வதமன்வந்தரே, அஷ்டாவிம்ʼஸ²திதமே கலியுகே³ ப்ரத²மே பாதே³ ஜம்பூ த்வீபே பாரத வர்ஷே பரதக்கண்டே மேரோஹோ, அஸ்மின் வர்தமானே வ்யாவஹாரிகாணாம்,ப்ரபவாதீ³னாம்ʼ ஷஷ்ட்யா​: ஸம்ʼவத்ஸராணாம்ʼ மத்யே  விஜய நாம ஸம்வத்ஸரே..."

சங்கல்பத்தில் எந்த கால கட்டத்தில், எந்த இடத்தில் இருந்து கொண்டு எதற்காக பூஜை செய்கிறோம் என்று தெளிவாக நினைவுறுத்திக் கொள்கிறோம்.
 இந்த உலகை ஸ்ருஷ்டித்து இரண்டு பரார்த்தகாலம் இருப்பவர் ப்ரஹ்மா. தற்போதுள்ள ப்ரம்ஹாவின் இரண்டாம் பரா வில் என்பது அத்³ய ப்³ரஹ்மண​: த்³விதீயபரார்தே.

ஸ்வேத வராஹ கல்பே - க்ருஷ்ண வராஹ கல்பம், ஸ்வேத வராஹ கல்பம் இரண்டில் இப்போது இருப்பது ஸ்வேத வராஹ கல்பம்.

வைவஸ்வதமன்வந்தரே - இப்போது ஆட்சி செய்யும் 7வது மனு வைவஸ்வத மனு (ஸ்வாயம்புவர்,ஸ்வாரோசிஷர்,உத்தமர்,தாமஸர், ரைவதர் ,சாக்ஷஷர், வைவஸ்வதர், ஸாவர்ணி ,தக்ஷஸாவர்ணி, ப்ரஹ்மஸாவர்ணி,   தர்மஸாவர்ணி, ருத்ரஸாவர்ணி,  ரௌச்யர் ,பௌத்யர் முதலிய 14 மனுக்கள்)

(அஷ்டாவிம்ʼஸ²திதமே) கலியுகே³ ப்ரத²மே பாதே³ - 28வது கலியுகத்தின் முதல் கால் பகுதி

ஜம்பூ த்வீபே - பூலோகம் ஏழு த்வீபங்கள் கொண்டது. ஜம்பு த்வீபம் எனச்சொல்லப்படும் த்வீபத்தில் இருக்கிறோம்.(ஜம்பூ, ப்ளக்ஷ, புஷ்கர, குஸ, க்ரௌஞ்ச, சக, ஸால்மல)

பாரத வர்ஷே - ஜம்பூத்வீபம் 9 தீவுகளால் ஆனது -பாரதம், கிம்புருஷம், ஹரி, இலாவ்ருதம், ரம்யகம், ஹிரண்மயம், குரு, பத்ராஶ்வம், கேதுமாலம் (இந்தியா, இமயமலைப்பகுதி, அரேபியா, திபேத், ரஷ்யா, மஞ்சூரியா, மங்கோலியா, சைனா, துருக்கி என்றும் கூறுவார்)

பரதக்கண்டே மேரோஹோ, - பாரத வர்ஷத்தில் இந்த்ர, சேரு, தாம்ர, கபஸ்தி, நாக, ஸௌம்ய, கந்தர்வ, சாரண, பாரத என்ற ஒன்பது கண்டங்களின் (பிரதேசங்களின்) இடையே பரத கண்டத்தில் இருக்கிறோம்.

இவைதாம் அந்த சங்கல்பத்தில் சொல்வது. துல்லியமாக நாம் எங்கு இருக்கிறோம், எந்த காலத்தில் இருக்கிறோம் என்று satellite உதவியே இல்லாமல் , பஞ்சாங்கத்தை வைத்துக் கொண்டே வேதத்தில் சொல்லிவிட்டனர்.

இந்த பூமி முழுதும் பாரதத்தின் ஒரு பகுதி தான். ஆதனால் USலும் - பாரத வர்ஷே பரதக்கண்டே தான்!. இது பற்றி விஷ்ணு புராணம்

उत्तरं यत्समुद्रस्य हिमाद्रेश्चैव दक्षिणम् ।
वर्षं तद् भारतं नाम भारती यत्र संततिः ।।
uttaraṃ yatsamudrasya himādreścaiva dakṣiṇam
varṣaṃ tadbhārataṃ nāma bhāratī yatra santatiḥ
"The country (varṣam) that lies north of the ocean and south of the snowy mountains is called Bhāratam; there dwell the descendants of Bharata." (Thanks to Srinivasan Ramasubramanian for sharing VishnuPuranam quotes)

நிறைவோடு உபகர்மா, ஜெபம் முடித்தேன். வாசலில் நின்னு ஆரத்தி எடுத்துக்கோடான்னு அம்மா phoneல் சொன்னார். சிரித்துக்கொண்டே சரி என்றேன்.

Sunday, August 18, 2013

கடலைச் சேராத வைகை நதி

நிறை கடல் முகந்து உராய், நிறைந்து,  நீர் துளும்பும் தம்
பொறை தவிர்பு அசைவிடப் பொழிந்தன்று, வானம்;
நிலம் மறைவது போல் மலிர் புனல் தலைத் தலைஇ,
மலைய இனம் கலங்க, மலைய மயில் அகவ,
மலை மாசு கழியக் கதழும் அருவி இழியும் (1 – 5)
புகை, பூ, அவி ஆராதனை, அழல், பல ஏந்தி,
நகை அமர் காதலரை நாள் அணிக் கூட்டும்
வகை சாலும், வையை வரவு.  (11-13)


வைகையில் வரும் வெள்ளம் பற்றிப் பரிபாடல் என்ற சங்க நூல் கூறுவது.

              "பிள்ளையார் மேடு ஆத்தங்கரைல குளிச்சிட்டு வர இவ்வளவு நேரமா? தளிகையாக இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும். பெருமாள் சேவிசிட்டு வாங்கடா. செல்லம்மாகிட்ட தயிர் வாங்கி வச்சிருக்கேன். கொஞ்சம் பழேதும் , மலை வடு, நார்த்தங்கா போடறேன். இப்போதைக்கு சாப்பிடுங்கோ. மத்யானம் தளிகை சாப்டலாம்" - இது எங்களுடைய சிறு வயதில் மதுரை-துவரிமானுக்கு விடுமுறைக்கு செல்லும் போது என் பாட்டியிடமிருந்து சொல்லும் வசனங்கள். அப்போது எல்லாம் (வெறும் 10-15 வருஷம் முன்னாடி தான் :( ). நாங்க வைகைல போய் தான் குளிப்போம்.
ஆண்-பெண் என்று தனியாக ஆற்றங்கரை.  'பிள்ளையார் மேடு' எனப்படும் எங்கள் வீட்டின் கொல்லைபுறம் உள்ள ஆற்றங்கரை சற்று மேடானது. ஒரு பிள்ளையார் சிலை இருக்கும். வெள்ளம் வரும் போது ரோட்டிற்க்கே வைகை வருவாள். போகும் வழியில் இருபுறமும் தென்னை மரம் , இலவம் பஞ்சு மரம், ஆற்றங்கரையில் நாணல், ஊமத்தம் பூ , காட்டுச் செடிகள் எல்லாம். பளிங்கு போல் ஆற்று நீர். வெள்ளத்தின் போது சற்றே செம்மண் நிறத்தில். அங்கு தான் பல் தேய்ப்பது , காலைக் கடன் , குளியல், சந்தியாவந்தனம் எல்லாம். முடித்துவிட்டு வீடு வர 10 மணி ஆகும். (பாட்டிகாலை 6 மணிக்கே ஆற்றங்கரை போய்விட்டு வந்திடுவாள்)அப்போது தான் மேல சொன்ன டயலாக் ஒலிக்கும். அப்படியே வாழ்க்கை இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. :(.
               அக்ரஹாரத்தின் கடைசியில்/முதலில் ரெங்கராஜ பெருமாள் சந்நிதி. நின்ற திருக்கோலம்-இரண்டு நாச்சிமார்களுடன். அதனருகில் அழகியசிங்கர் பிருந்தாவனம். 40-வது பட்ட ஜீயராக இருந்தவர் ரங்கநாத சடகோப யதீந்திரதேசிகர். 1913 ஏப்ரலில் அகோபிலமடத்தில் பட்டம் ஏற்றுக் கொண்டார். அக்காலத்தில் அகோபிலம்  ஷேத்திரத்திற்கு யாரும் போவதில்லை. மந்திரசித்தி கற்ற இவர் அங்கிருந்த பிரம்மராட்சஷர், ஜடாமுனிகளை விரட்டினார். இதன்பின், பக்தர்கள் அகோபிலம் வந்து நவ நரசிம்மரை வழிபடத் தொடங்கினர். 1923ல் யாத்திரையாக வந்து மதுரை கூடலழகரைத் தரிசித்தார். அப்போது துவரிமான் பகுதியில் தங்கியபோது நோய்வாய்ப்பட்டார்.1923 ஜனவரி 14ல் பரமபதம் அடைந்தார்.அங்கு பிருந்தாவனம் எழுப்பப்பட்டது.இன்றும் மேற்ச்சொன்ன நம்பிக்கையோடு பலரும் வந்து அவருடைய பிருந்தாவனத்தில் வணங்கிச் செல்கின்றனர்.பலரும் மிளகு வைத்து வணங்கி அதை மருந்தாகச் சாப்பிடுகின்றனர்.
               என்னுடைய தாத்தா -கோவிந்தையங்கார், அவருடைய அண்ணா-சுந்தராஜயையங்கார் ,அவர்களின் முன்னோர்கள் எல்லாம் அர்ச்சகர்களாக இருந்து பல ஆண்டுகள் வாழ்நாள் இறுதி வரை கைங்கர்யம் செய்துள்ளனர் இந்தக் கோவிலில். நானும் விடுமுறைக்குக் செல்லும் போது முடிந்ததைச் செய்வேன்.
 சரி, விஷயத்திற்கு வரேன். செல்லம்மா என்ற அந்த பாட்டி பசு-எருமை தயிர்ன்னு தனி-தனியா கொண்டுவருவாள். அழகர்  கோவில், புல்லூத்து (துவரிமான் அருகில் இருக்கும் ஒரு சிறு அருவியோடு சேர்ந்த காடு) இங்கெல்லாமிருந்து மாவடு வரும் -உருட்டு வடு மற்றும் கிளி மூக்கு வடு என்றெல்லாம். அது தான் ஊறுகாய்- மாசி மாதம் தொடங்கி அந்த வருடம் முழுதும். காலை சமையல் நேரமானால் பழைய சாதம்-மா வடு தான். ஆஹா! அதற்க்கு ஈடு -இணை எந்த உலகத்து உணவுக்கும் வராது. சில சமயம் அதனோடு மாம்பழம்!





                அந்த வாழ்க்கைப் பற்றி சொல்ல தனியாக ஒரு blog வேணும். இன்று அந்த வைகையும் இல்லை-அந்த வாழ்க்கையும் இனி வராது. இயற்கையோடு இயைந்த வாழ்வு , காலையில்  குளிப்பது, நாமே துவைப்பது, குளித்த பின் நம்மைப் படைத்த இறைவனுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்குவது , பிறகு உண்பது, இயற்கையாய் விளையும் பொருட்களை உண்பது இது போன்ற பலவற்றைக் கற்றுக் கொடுத்தது. இன்று வரை அப்படியே இருக்கிறேன்.
அப்போதெல்லாம் பசித்துப் புசி- குளித்துக் குடி-கசக்கிக் கட்டு இது போன்ற சங்க காலப் பாடல்கள் தெரியாது-எல்லாம் நம் வாழ்வோடு கலந்திருந்ததால்!. இவை எல்லாம் இக்கால சிறுவர்களிடம் குறைவது கொஞ்சம் வருத்தமே. அது இருக்கட்டும்.அந்த நேரத்தில் வைகை பற்றி ஒரு கவிதைப் போட்டி. 'கடலைச் சேராத வைகை நதி' என்ற தலைப்பில் DD-தமிழ் channelக்கு மரபு கவிதை எல்லாம் எழுதியிருக்கிறேன்.(இன்றும் வைகை கடலைச் சேர்வதில்லை நேரடியாக. இராமநாதபுரம் பெரிய கண்மாய் தான் அது சேருமிடம்) வைகை என்ற ஒரு நதியே இன்னும் கொஞ்ச காலத்தில் இல்லாமல் போகும். மணல் மாபியா, ஆக்கிரப்புகள்! உண்மையிலேயே இராமநாதபுரம்-RSபுரம் பெரிய கண்மாய் கூட சேராது! பரிபாடல் வரிகளை மீண்டும் படித்தேன். இயற்கையை விட்டு நாமும் விலகி வந்துவிட்டோம். இயற்க்கை நம்மை விலக்கவில்லை!

Wednesday, August 14, 2013

இந்தப் பூமியில் எவர்க்கும்இனி அடிமை செய்யோம்!


வணங்குகிறேன்:

"நாமிருக்கும் நாடு நமதுஎன்ப தறிந்தோம்
இது நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம்
இந்தப் பூமியில் எவர்க்கும்இனி அடிமை செய்யோம்
பரி பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம். "

                 எத்தனை கட்டைகள் எரிந்தது, இன்று நாம் இந்த சுதந்திர சோற்றைச் சுவைக்க! நான் எண்ணிப்பார்க்கிறேன். அந்த தியாகிகள் எல்லாம் வீதிக்கு வராமல் இருந்திருந்தால், இன்று நம் நிலை? நான் பார்த்த, கேள்விப்பட்ட 2 தியாகிகள். தன்னலமற்றவர்கள். விடுதலைப் போரட்ட தியாகிகள் மதுரை துவரிமான் இராமஸ்வாமி, திருமங்கலம் புலி ஐயர்.

               ஒருவர் துவரிமானில்(மதுரை) வாழ்ந்த இராமஸ்வாமி.அவர்கள் வீட்டிற்கு அருகில் தான் எங்கள் வீடு. விடுமுறைக்கு அங்கு செல்லும் போது நிறையப் பார்த்திருக்கிறேன். அக்ஹ்ரஹாரதில் பிறந்திருந்தாலும் நாடு என்று வந்தால் மற்றது எல்லாம் பின்னாடி தான் என்று வாழ்ந்து காட்டியவர். நாட்டின் மீது கொண்ட பற்றால் சுதந்திரத்திற்கு பின்பே திருமணம் செய்து கொண்டார். தன் கடைசி காலம் வரை மாதம் 1 நாள் உணவு உண்ண மாட்டார். காரணம் கேட்டேன் - நாட்டிற்காக 1 நாள் செலவை அர்ப்பணித்து அதை சேமிக்கிறேன் என்பார்.
              மற்றொருவர் - நான் படித்த திருமங்கலத்தில் (மதுரை) வாழ்ந்த புலி ஐயர். காமராஜரின் நெருங்கிய நண்பர். தனக்கென எந்த ஆசையும் இல்லாமல், முக்கிய வீதியில் (மீனாக்ஷி அம்மன் கோவில் அருகில்) இருந்த விசாலான தன் வீட்டைக் கூட இந்த நாட்டிற்கு எழுதி வைத்தார். காமராஜர் முதல்வராய் இருந்த போது இவருக்கு Rs.200 கண் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். அதில் மீதியைக் கூட இவர் திரும்ப அனுப்பி வைத்துவிட்டார்.
               
             நான் அறிந்த இருவருமே செல்வசெழிப்போடு இருந்தவர்கள். நாட்டிற்காக எல்லாவற்றையும் துறந்தார்கள். இவர்களால் தான் இன்று நாம் வாழ்கிறோம்!

Tuesday, August 13, 2013

ஆடுவோமே பள்ளு பாடுவோமே!



                           வழக்கம் போல் 7-8 அடுக்கு பலத்த காவல்துறையின் உச்சகட்ட பாதுகாப்புடன், தீவிரவாதிகள் அச்சுறுத்தலோடு சுதந்திர தினத்தைக் கொண்டாடயிருக்கிறோம். பிரமதரும்,முதல்வர்களும் பாதுகாப்பான கூண்டிருக்குள் நின்று உரையாற்றப் போகிறார்கள். 'ஆரஞ்சு' மிட்டாய்களைப் பள்ளிகளில் எண்ணி எண்ணி கொடுப்பார்கள். கல்லூரிகளில் கேட்கவே வேண்டாம். விரல்விட்டு எண்ணும் அளவிற்கே வந்திருப்பர். ஓய்வறியா சூரியன் போல் காவல்துறையும், போக்குவரத்துத் துறையும் செயல்படும். Corporate Company இந்தியாவிற்கு நேரடியாக வேலை செய்யாததால் நான் பார்த்தவரை இது போன்ற தேவை இல்லாததை எல்லாம் கொண்டாடியது இல்லை (அவர்களுக்கு christmas, women's day, valentine's day இது தான். அப்பறம் யாருக்காவது பிறந்தநாள்-treat). தொலைக்காட்சி நிகழ்சிகள் பற்றி கேட்கவே வேண்டாம்.

                          ஒரு தியாகி பற்றிக் கூட பேசப்போவதில்லை. நான் சொல்ல வந்தது சுதந்திர போராட்ட தியாகிகள். (தியாகி என்றால் இப்போது ஜாதிக்காகவோ, ஒரு நடிகருக்ககவோ இல்ல இது போன்ற சமூக முன்னேற்றத்திற்க்காகவோ உயிரைவிட்டவர்கள் என்று இன்றைய நிலைமை).  ஏதோ புரியாத படங்கள், அது பற்றிய நிகழ்ச்சிகள், உதவாத பட்டிமன்றம் இத்யாதிகள். அது சரி! இது போல் சந்தோசமாய் இருக்கத்தான அன்று போராடி சுதந்திரம் பெற்றோம். 'compulsory attendance' என்று சொன்னால் தான் மாணவன் கூட நாளை பள்ளிக்கு வருவான். பக்தி என்பது  தானாக வரவேண்டுமென்றாலும் சமுதாயமும் அதற்க்கு ஒரு காரணி தான்! அது தேச பக்தியோ, ஆன்மீக பக்தியோ!
என்றும் தியாகிகள் எல்லையில் நின்று போராடுபவர்களே! அவர்களையும் வணங்குகிறேன்!

ஆடுவோமே பள்ளு பாடுவோமே,ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று!

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே - பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மை
ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
இதைத் தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே.

எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே
பொய்யும் ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே
இனி நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே
கெட்ட நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
வீணில் உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம்
வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம்.

நாமிருக்கும் நாடு நமதுஎன்ப தறிந்தோம்
இது நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம்
இந்தப் பூமியில் எவர்க்கும்இனி அடிமை செய்யோம்
பரி பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்.