Sunday, June 30, 2013

Edisonம், தானப்ப முதலி தெருவும்!

"வகை பெற எழுந்து வானம் மூழ்கி,
சில்காற்று இசைக்கும் பல் புழை நல் இல்,
யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்
பல் வேறு குழாஅத்து இசை எழுந்து ஒலிப்ப,
மா கால் எடுத்த முந்நீர் போல
முழங்கு இசை நன் பணை அறைவனர் நுவல,
கயம் குடைந்தன்ன இயம் தொட்டு, இமிழ் இசை
மகிழ்ந்தோர் ஆடும் கலி கொள் சும்மை,
ஓவுக் கண்டன்ன இரு பெரு நியமித்து".

                    இந்த வரிகள் 'மதுரைக் காஞ்சி' என்ற சங்க இலக்கிய நூலிருந்து. இதை இங்கு குறிப்பிடக் காரணம்-விளக்கம் பின்னர் பகர்கிறேன்.

        இன்று 'Vedics' குழுமத்தின் நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு. Edisonல் இருக்கும் நண்பரின் வீட்டிற்குக் காலை 9 மணிக்கே வருவதாய்ச் சொல்லிவிட்டு, அலுவலக வேலை காரணமாக 9:30க்கு தான் வீட்டிலிருந்து கிளம்பினேன். GPS இல்லாமல் பயணிக்க முடியவில்லை. ஏதோ ஒரு தொற்று நோய் போல்- எப்போதும் கார்ல் ஒலித்துக்கொண்டிருக்கும். 'continue 1 mile on East Main street then turn right on South Main street' என்றது GPS. எல்லாம் நம்ப ஊரு கீழத் தெரு - தெற்குத் தெரு தான். இங்க இப்படி சொல்றான்:) Edison-NewJerseyன் தமிழகம். கிட்டத்தட்ட எல்லாரும் நம் தமிழ் சொந்தங்கள் (தெலுங்கும் தமிழிலிருந்து பிறந்தது தானே:)). நான் கேட்டவரையில் ஸ்ரீரங்கத்திலும்-மதுரையிலும் இருக்கும் பூர்வீக வீட்டை மாற்றிவிட்டு, இங்கு ஒரு வீடும்- சென்னையில் ~2500 sq.ftல் ஒரு அடுக்ககத்தில் (apartment) ஒரு பகுதியும் வாங்கி இருப்பார்கள். தற்போது ஸ்ரீரங்கத்தில் மீண்டும் ஒரு apartment வாங்க முயல்வார்கள். எல்லாவற்றிக்கும் 'Bank Of America' கை கொடுக்கும் என்பது என் நம்பிக்கை. இது பற்றி எல்லாம் அதிகம் விசாரித்து இல்லை-எனக்குத் தேவை இல்லை என்பதால். சரி. அங்கு ஒரு 7 மாதம் நான் தங்கிருந்தாலும், GPS இல்லாமல் பயணிப்பது சற்று கடினமே. குறுகிய சாலைகள்-பல திருப்பங்கள்.  சற்றே கவனிக்காமல் ஓட்டினால் நம் வாழ்கையிலும் ஒரு திருப்பம் வரும். இந்தியாவில் 2 Wheeler ஓட்டுவது போலவே, இங்கு (edison) Car ஓட்டுவார்கள் நம்மவர்கள். இன்றும் இதைக் கவனித்தேன்.

              போன காரியம்- திவ்ய ப்ரபந்தம் சொல்வதற்குத் தான். 10-12 பேர் வந்திருந்தார்கள். என்வயதையொத்தவர் புருஷோத்தமன் மட்டும் தான் -அவரும் 5-6 வயது மூத்தவர்:). இங்கு புத்தகம் பார்த்துச் சொல்லும் பழக்கம் கிடையாது (!)-அடஎல்லாம் Ipad-Iphone; 'Go-Green' தான். ஆனாலும் தமிழை நல்ல உச்சரிப்புடன் சொல்கிறார்கள். இன்று மட்டுமல்ல. நான் இதுவரை சென்ற எல்லா இடத்திலும். சென்னை-மதுரையில் இருக்கும் குழந்தைகளே இன்று தமிழ் படிக்கச் சிரமப்படும் போது, இங்கு நான் கண்டது மகிழ்ச்சியை அளித்தது. ஏதோ என்னால் முடிந்தயளவு ஆழ்வார்களின் தமிழை அவ்வப்போது பருகுகின்றேன். பிள்ளைத்தமிழ்- மடல்-விருத்தம் ,ஆஹா! என்ன தமிழ்! 'சொன்னால் விரோதம் இது; ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ' (இதுவும் நம்மாழ்வார் வரி தான்:)). எனக்குத் தெரிந்தவரை இன்றைய எழுத்தாளர்கள் இவற்றை எல்லாம் படிக்கிறார்களா என்பது '?'. இதற்கும் ஒரு சமய முலாம் பூசப்பட்டதாகவே உணர்கிறேன். ஆனால் இவற்றால் எல்லாம் ஆழ்வார்களும், அவர்களின் ஈரச் சொற்களும் குறைந்து போகாது.மேன் மக்கள் மேன் மக்களே! நம்மாழ்வார் பாடிய 1000+ திருவாய்மொழியும் நெஞ்சை உருக்குமென்றாலும் , 'கங்குலும் பகலும்' என்று ஸ்ரீரங்கம் பற்றிப் பாடியது தான் என் நெஞ்சை என்றும் உருக்கும். இன்றும் அப்படித் தான் - 'கண்ணீர் மல்க இருக்கும்' என்ற போது உண்மையாகவே கண்ணீர் மல்கியது. ச்சே! என்ன தமிழ் -பக்தி. இவற்றை எல்லாம் அனுபவிக்க வேண்டும்; ஆராய்ந்தும் பார்க்க வேண்டும். (முக்கியமாக கறுப்புச் சட்டை போட்ட அக்ரஹாரத்துக்காரர்கள்).

               கொஞ்சம் ஸ்ரீரங்கத்தைப் பற்றி யோசித்தேன்-அன்றைய ஸ்ரீரங்கம் இன்று இருக்காது - ஏதோ 60-70 வயதான தத்தா-பாட்டிகள், புனரமைக்கப்பட்ட ஸ்ரீரங்கம் வீதிகளில், அடுக்ககங்களில், AC போட்டுக் கொண்டு , திவ்யப்ரபந்தம் படித்துக் கொண்டிருப்பார்கள். சுஜாதா சொன்னது போல், அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் கண்டிப்பாக இங்கு (America) தான் எங்கோ இருப்பார்கள். எல்லாம் கால மாற்றம்;யாரையும் குறை சொல்ல முடியாது. ஆனாலும் பலவற்றை இழந்து வருவது நிதர்சனம். அவற்றின் பாதிப்பு என்று தெரியும் என்று தெரியவில்லை. இதில் எந்த நகரமும் விதி விலக்கில்லை. சரி -Back to Edison 'கூடி இருந்து குளிர்ந்து' என்பதற்க்கேர்ப்ப, மிகுந்த மன நிறைவோடு கோஷ்டி முடிந்தது. புளியோதரை , 'மூட நெய் பெய்து' சர்க்கரைப் பொங்கல், அவியல் இத்யாதி. அதையும் நன்றாக அனுபவித்தோம்.(ச்சே, சும்மா சொல்லக்கூடாது, பிரமாதமான சமையல்.)

              பிறகு, வந்திருந்தவர்கள் அவரவர்களை அறிமுகம் செய்து கொண்டோம். நண்பர் Sri Kumar, நான் மதுரை என்றதும், மிகுந்த மகிழ்ச்சியோடு 'நானும் மதுரை தான்-தானப்பா முதலி தெரு' என்றார். நான் அனுமந்தராயன் தெருவில் வசித்த என் உறவினர் பெயரைச் சொன்னதும் சட்டென்று பிடித்துக் கொண்டார். என் கிராமத்தில் (திரளி) 80's மின்சாரம் இல்லாத வீட்டில் ஒரு நாள் தங்கியாதாகக் கூறினார். இன்று தமிழ்நாடு மொத்தமும் அந்த நிலையில் தான் இருக்கிறது:(. 80களில் தான் கண்ட மதுரை பற்றிச் சற்றே சொன்னார். இப்போ முன்னாடி சொன்ன 'மதுரைக் காஞ்சி' பாட்டுக்கு வரேன். 'விசாலமான தெருக்கள், வான் உயர்ந்த கட்டிடங்கள், கடைகள் எல்லாம் அமைந்தது எழிலான மதுரை' என்பது தான் அந்தப் பாடலின் சாராம்சம். தானப்ப முதலி தெரு, வக்கீல் புதுத் தெரு, அனுமந்தராயன் கோவில் தெரு, காக்கா தோப்புத் தெரு இங்கு எல்லாம் விசாலமாக அக்ரஹார வீடுகளை 90களில் நானே கண்டிருக்கிறேன். அவை எல்லாம் இன்று கால மாற்றத்தால் 'Commercial Building'ஆகா மாறிவிட்டன. நான் விளையாடிய அனுமந்தராயன் கோவில் தெரு வீடும் அப்படித்தான் மாறியது. நண்பரின் வீடு மட்டும் அப்படியே இருப்பதாகச் சொல்லி என்னை மகிழ்வித்தார்.

             மேற்ச் சொன்ன ஸ்ரீரங்கத்துக் கதை தான் இதற்கும். நகரம் சுருங்குகிறது மக்களின் தேவைகளுக்காக! நண்பரும் இதையே கொஞ்சம் கவலையோடு பகிர்ந்தார். 'நான் கால மாற்றத்தால் வாழ்க்கைத் தரத்தை மாற்ற நினைக்கும் போது, நான் வாழ்ந்த நகரமும், மக்களும் கட்டாயம் மாற வேண்டியது தான். யாரையும் குறை கூற முடியாது. நானுமொரு காரணம்.ஆனால் நகரம் விரிவடையாமல், இருக்குமிடத்தில் ஆக்கிரமிக்கப்படுகிறது' என்று தன்னுடைய ஆதங்கத்தை தெளிவான சிந்தனையோடு சொன்னார். 100% உண்மை தான். மனிதரிடம் படிக்க வேண்டியது நிறைய இருப்பதாக மனதிற்குள் கூறிக்கொண்டேன். பிறகு GC, Recent American Law on H1B,H4 etc என்று விவாதம் எனக்குத் தேவையில்லாத இடத்தைத் தொட்டுத் தொடர்ந்தது. என்னையும் ஒரு பொருட்டாக்கி அழைத்ததிற்கு நண்பர் Sampath-JeyaShri அவர்களிடம் நன்றிகள் கூறிக் கொண்டு மிகுந்த மன நிறைவோடு வீடு நோக்கிப் பயணிக்க GPSயை ON செய்தேன்!

Friday, June 28, 2013

வாங்கும் சக்தி

நேற்று ஒரு வித்யாசமாக உரையாடல் ஒரு நண்பரிடம். எங்கயோ ஆரம்பிச்ச பேச்சு, அங்க-இங்க எல்லாம் சுத்தி கடைசில வழக்கம் போல நம்ப நாட்டுல வந்து முடிஞ்சது. 'முன்ன எல்லாம் யாராவது கஷ்டம்ன்னு வந்தா நம்ப use பண்ணினதைத்தான் கொடுப்போம். இப்போ எல்லாம் நம்ப புதுசாவே வாங்கித் தரோம். அப்போ நாம வளர்ந்திருக்கோம்ன்னு தானே அர்த்தம்ன்னு' நம்ப நாட்டோட வளர்ச்சி பத்தி நண்பர் சொன்னார். அவர் என்ன சொல்லவரார்ன்னு ஒருவாறு யூகித்துக் கொண்டேன். வறியவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுப்பது நம் பண்பு தான். ஆனால் இல்லை என்று சொல்பவர்களே இல்லாத நிலையே வேண்டும். தெருவுக்கு ஒரு 'ATM' இருக்கு. ஆனா இன்னும் இல்லாமை இருக்கத்தான் செய்யறது. (அதுக்காக ATMம தூக்க முடியுமா:)) நானும் முடிந்தவரை அவரிடம் விளக்கினேன். கடைசியில் என்ன சொல்லவந்தார் என்பது எனக்கே புரியாமல் போய்விட்டது. இதைத்தான் ஒருவேளை வாங்கும் சக்தி அதிகரித்துள்ளதுன்னு சொன்னார்களோ?:(

Saturday, June 22, 2013

Bridgewater-சேது தீர்த்தம்

சனிக்கிழமையாதலால், வழக்கம் போல் இன்று Sri Venkateswara Temple, Bridge water சென்றேன். இதற்க்கு (Bridgewater) நம்மவர்கள் வைத்திருக்கும் பெயர் - 'சேது தீர்த்தம்'. அப்படியே தமிழ்ப்படுத்தி 2-3 தமிழ் blogல் பார்த்தேன். நம்மவர்கள் எங்க போனாலும் தனித் தன்மையோடு தான் இருக்கிறார்கள். அப்படியே Hi-fi micகுடன் அர்ச்சகர் சத்ய நாராயாண பூஜை செய்து கொண்டிருந்தார். நடுவில் அதன் மகத்துவத்தை English-Telugu-Hindi என்று மாறி மாறி விளக்கிக் கொண்டிருந்தார். மற்றொருவர் Lord பாலாஜி பூஜையில் இருந்தார். இரண்டு நம்மாழ்வார் தமிழ்ப் பாசுரங்கள் சொல்லி, 'சடகோபன் தண்தமிழ் நூல் வாழ... கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ' என்ற போது என் மெய் சிலிர்த்தது. கடல் கடந்து வந்தாலும், இவை எல்லாம் நடத்தி , நம் தமிழையும் வளர்க்கிறார்கள்/வாழ்த்துகிறார்கள். மன நிறைவோடு வெளியில் வந்தால் பௌர்ணமி நிலவு கண்ணுக்குக் குளிராக! அத பார்த்ததும் சற்றே 15-20 வருஷம் பின்னாடி போனேன். 'கிட்ட கோட்டை கட்டிருக்கு, எட்ட மழை பெய்யும்', இனிக்கு எட்ட கோட்டை கட்டிருக்கு, கிட்ட எங்கயோ மழை பெய்யறது' -- இப்படி எல்லாம் நிலாவைச் சுற்றி இருக்கும் வளையத்தைப் பற்றிப் பேசிய காலங்கள் கண் முன்னாடி வந்து சென்றது. இவை எல்லாம் உண்மையான்னு தெரியாது. 4-5 பேர் சேர்ந்து நிலாச் சோறு சாப்பிட்ட நினைவுகளுடன் வண்டியில் வீடு நோக்கிப் பயணித்தேன். எல்லாருக்கும் இது போன்ற சிறு வயது அனுபவம் இருக்கும். இனி வரும் Generationக்கு இவை எல்லாம் அனுபவிக்க முடியாத வரலாறு தான். இன்று கிட்ட கோட்டை கட்டி இருந்தது. எட்ட மழை பெய்யும் என்று நினைக்கிறேன்.:)

Wednesday, June 12, 2013

7 வருட வேலை


"என்னடா இன்னும் அங்க தான் இருக்கையா?; அவன் அப்படி தான்டா. என்ன சொன்னாலும் மாறமாட்டான்; உன்கூட படிச்சவன்,சேர்ந்தவன் எல்லாம் இப்போ இங்கயோ இருக்கான்" இப்படி எல்லாம் சுற்றமும்,நட்பும் கூறின-இன்னும் கூறுகின்றன. அதைவிட 'love your job but don't love your Company' என்று Abdul Kalam சொன்னதாகக் கூட எனக்குக்  குறுஞ்செய்திகள்  (SMS) & mail எல்லாம் என் நண்பர்கள் அனுப்பியிருக்கிறார்கள்.(என்ன வில்லத்தனம்:)). எல்லாம் ஒரு புறம் இருந்தாலும், என் வேலையைக் குறைவின்றி செய்து வந்தேன்-வருகிறேன். இன்று காலை மெயில் ஓபன் பண்ணியவுடன் தான் கண்டேன் , Managerயிடம் இருந்து வாழ்த்துக்கள் -'Comapnyயில் சேர்ந்து இன்றோடு 7 வருடம் முடிந்ததற்கு'. என்னோடு சேர்ந்தவர்களில் 1-2 பேர் தான் இங்கு இருக்கிறோம். அது என்னமோ - Software Company என்றாலே 2-3 வருடத்திற்கு 1 கம்பெனி jump அடிக்கனும்றது எழுதப்படாத நியதி. சென்றவர்கள் எல்லாம் 'சந்தர்ப்பவாதியும்' இல்ல, இருக்கறவன் எல்லாம் 'சந்தர்ப்பம்' கிடைக்காதவனும் இல்ல. எனக்குத் தெரிந்து, என் நண்பன் 'email id' பிடிக்கவில்லை என்பதற்காகக் கம்பெனி மாத்திறுக்கான். வழக்கமான உதாரணம் தான் - ஒரே வகுப்பில் இருக்கும் ஆசிரியர் ஏதும் அறியாதவர் இல்ல, வகுப்பு மாறும் மாணவன் 'எல்லாம்' அறிந்தவனும் இல்ல. சேர்ந்தது முதல் இன்று வரை பல சுவையான அனுபவங்கள். 4 company campus interview chance தவறவிட்டு , இங்கு சேர்ந்து 7 வருடம் ஆனாலும் இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கு. எனக்கும் சற்று வியப்பே. அவன் அவன் இது கூடக் கெடைக்காம இருக்கான்.இதாவது கிடச்சுதேன்னு சற்றே நிம்மதியாகத்தான் சேர்ந்தேன். வருடத்திருக்கு ஒரு தடவ நடக்கும் 'Appraisal' பத்தி முதல் 2 வருஷம் ஏதோ பெரிய விஷயமா இருந்தது. அப்பறம் 'O2 award'ன்னு  3 தடவ வாங்கி அதுவும் சாதாரணமாகப் போய்விட்டது. 2-3 நாட்கள் தொடர்ந்து தூங்காமல், சாப்பிடாமல் வேலை செய்த நாட்களும் உண்டு. என்ன ஆனாலும் இதுவரை மனதிற்குப் பிடித்து வேலை செய்து கொண்டிருக்கிறேன். 'வாழ்க்கையில் நிம்மதியும், செய்யும் வேலையில் உயர்வும் இருந்தால் மாற்றங்கள் வாழ்க்கையில் தேவை இராது'  என்று ஒரு அறிஞர்  (வேற யாரு, நான் தான்)  சொல்லியிருக்கிறார். ஆனாலும் 7 வருஷம் கொஞ்சம் ஓவர் தான் என்று இன்று கூட நண்பர்கள் அந்த மெயில் பார்த்ததும் சொன்னார்கள். 'Pillar' என்றுகூடக் கிண்டல் செய்பவர்கள் உண்டு:).. இதுக்கே இப்படி - 2 நாள் முன்னாடி ஒரு மெயில் - நண்பர் ஒருவர் 13+ ஆண்டுகள் ஒரே companyயில் (வேற எங்க, என்னோட company தான் ) இருந்ததற்காக ஒரு 'party/treat' .(நம்ப கலாசாரம் எங்கயோ போய்க் கொண்டிருக்கிறது). சற்றே யோசித்தேன் - நான் இன்னும் பணத்தின் தேவையை அதிகப்படுத்தவில்லை என்றே தெரிந்தது. அதுவரை வாழ்க்கையில் நிம்மதி தான். 'நான் கண்ட கம்பெனியும், மனிதர்களும்' என்று நீண்ட ஒருவித பயணக் கட்டுரை கூட எழுதலாம் என்று எண்ணியிருக்கிறேன் (இதுவும் ஒரு பயணம் தான்). பார்க்கலாம், நேரத்தையும் - வேலையும் பொறுத்தது.

Sunday, June 2, 2013

கடவுள் எப்படியிருப்பார் - பசும்பொன் தேவர்

( பசும்பொன் தேவர் - 1959-ல் பொள்ளாச்சி சிறீ குடலுருவி மாரியம்மன் கோவிலில் பேசியது.)


நக்ஷத்ரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பகலிலே பார்க்கிற ஒருவருக்கு நக்ஷத்ரம் தெரியாது.சூரியன் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், இரவிலே பார்த்தால் சூரியன் தோன்றாது.இரவிலே சூரியனை பார்த்து தவறாக சூரியன் என்பதே இல்லை என சொல்வது எவ்வளவு அவசர புத்தியோ... அவ்வளவு அவசர புத்திதான் தனக்கு நேரில் தெரியாதது அத்தனையும் இல்லை என வாதிக்க முன்வருவது.எல்லாம் எல்லாருக்கும் தெரிகிற நிலைமையில் அமைந்தது அல்ல உலகம்.உதாரணாமாக உங்களுடைய சரீரத்தையே... நீங்கள் பார்த்துக் கொள்வீர்களானால் சரீரத்தில் இருக்கின்ற கால்,கை முதலியவை எல்லாம் நீங்கள் பார்க்க முடியும், அதே நேரத்தில் கண்களை நீங்களே பார்க்க வேண்டும் என விரும்பினால் பார்க்க முடியுமா..?முடியாது !

அதற்காக ஒருவன் அவசரப்பட்டு ...என் கையை பார்த்தேன் இதோ இருக்கிறது,ஆகையால் எனக்கு 'கை' உண்டு.என் காலை பார்த்தேன் இதோ இருக்கிறது, ஆகையால் எனக்கு 'கால்' உண்டு.நான் என் கண்ணை பார்க்க நினைக்கிறேன் அது தெரியவில்லை, ஆகையால் எனக்கு கண்ணில்லை என்று பேசலாமா..? அது தவறு !கண்ணாடியில் பார்த்தால் கண்களின் பிம்பம் தெரியும்...! அதைப்போல் விக்ரஹங்கள் கடவுளின் பிம்பமாக இருக்கிறது.இதோ இங்கு ரோஜாப்பூ மாலை இருக்கிறது..இது என்ன பூ எனக்கேட்டால் அதன் பெயரை சொல்லலாம்..!
நிறத்தை கேட்டால் நிறத்தையும் சொல்லலாம்.இது எந்த இடத்தில் கிடைக்கும் என்வும் சொல்லிவிடலாம்..ஆனால்..அதன் வாசம் எப்படியிருக்கும் எனக்கேட்டால் "முகர்ந்து" பார் என்றுதான் சொல்லமுடியும்!கடவுள் எப்படியிருப்பார் என்று கேட்டால்..உணர்ந்துப்பார் என்றுதான் சொல்லமுடியும்!

*அண்மையில் எங்கோ படித்தது. தேசியமும், தெய்வீகமுமே இரண்டு கண்களாய் வாழ்ந்ததால் தான் உணர்ந்து பேசியிருக்கிறார். இதைப் படித்த பிறகு அவரின் 2-3 உரைகளைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு இணை அவர் தான்.*