Sunday, June 30, 2013

Edisonம், தானப்ப முதலி தெருவும்!

"வகை பெற எழுந்து வானம் மூழ்கி,
சில்காற்று இசைக்கும் பல் புழை நல் இல்,
யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்
பல் வேறு குழாஅத்து இசை எழுந்து ஒலிப்ப,
மா கால் எடுத்த முந்நீர் போல
முழங்கு இசை நன் பணை அறைவனர் நுவல,
கயம் குடைந்தன்ன இயம் தொட்டு, இமிழ் இசை
மகிழ்ந்தோர் ஆடும் கலி கொள் சும்மை,
ஓவுக் கண்டன்ன இரு பெரு நியமித்து".

                    இந்த வரிகள் 'மதுரைக் காஞ்சி' என்ற சங்க இலக்கிய நூலிருந்து. இதை இங்கு குறிப்பிடக் காரணம்-விளக்கம் பின்னர் பகர்கிறேன்.

        இன்று 'Vedics' குழுமத்தின் நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு. Edisonல் இருக்கும் நண்பரின் வீட்டிற்குக் காலை 9 மணிக்கே வருவதாய்ச் சொல்லிவிட்டு, அலுவலக வேலை காரணமாக 9:30க்கு தான் வீட்டிலிருந்து கிளம்பினேன். GPS இல்லாமல் பயணிக்க முடியவில்லை. ஏதோ ஒரு தொற்று நோய் போல்- எப்போதும் கார்ல் ஒலித்துக்கொண்டிருக்கும். 'continue 1 mile on East Main street then turn right on South Main street' என்றது GPS. எல்லாம் நம்ப ஊரு கீழத் தெரு - தெற்குத் தெரு தான். இங்க இப்படி சொல்றான்:) Edison-NewJerseyன் தமிழகம். கிட்டத்தட்ட எல்லாரும் நம் தமிழ் சொந்தங்கள் (தெலுங்கும் தமிழிலிருந்து பிறந்தது தானே:)). நான் கேட்டவரையில் ஸ்ரீரங்கத்திலும்-மதுரையிலும் இருக்கும் பூர்வீக வீட்டை மாற்றிவிட்டு, இங்கு ஒரு வீடும்- சென்னையில் ~2500 sq.ftல் ஒரு அடுக்ககத்தில் (apartment) ஒரு பகுதியும் வாங்கி இருப்பார்கள். தற்போது ஸ்ரீரங்கத்தில் மீண்டும் ஒரு apartment வாங்க முயல்வார்கள். எல்லாவற்றிக்கும் 'Bank Of America' கை கொடுக்கும் என்பது என் நம்பிக்கை. இது பற்றி எல்லாம் அதிகம் விசாரித்து இல்லை-எனக்குத் தேவை இல்லை என்பதால். சரி. அங்கு ஒரு 7 மாதம் நான் தங்கிருந்தாலும், GPS இல்லாமல் பயணிப்பது சற்று கடினமே. குறுகிய சாலைகள்-பல திருப்பங்கள்.  சற்றே கவனிக்காமல் ஓட்டினால் நம் வாழ்கையிலும் ஒரு திருப்பம் வரும். இந்தியாவில் 2 Wheeler ஓட்டுவது போலவே, இங்கு (edison) Car ஓட்டுவார்கள் நம்மவர்கள். இன்றும் இதைக் கவனித்தேன்.

              போன காரியம்- திவ்ய ப்ரபந்தம் சொல்வதற்குத் தான். 10-12 பேர் வந்திருந்தார்கள். என்வயதையொத்தவர் புருஷோத்தமன் மட்டும் தான் -அவரும் 5-6 வயது மூத்தவர்:). இங்கு புத்தகம் பார்த்துச் சொல்லும் பழக்கம் கிடையாது (!)-அடஎல்லாம் Ipad-Iphone; 'Go-Green' தான். ஆனாலும் தமிழை நல்ல உச்சரிப்புடன் சொல்கிறார்கள். இன்று மட்டுமல்ல. நான் இதுவரை சென்ற எல்லா இடத்திலும். சென்னை-மதுரையில் இருக்கும் குழந்தைகளே இன்று தமிழ் படிக்கச் சிரமப்படும் போது, இங்கு நான் கண்டது மகிழ்ச்சியை அளித்தது. ஏதோ என்னால் முடிந்தயளவு ஆழ்வார்களின் தமிழை அவ்வப்போது பருகுகின்றேன். பிள்ளைத்தமிழ்- மடல்-விருத்தம் ,ஆஹா! என்ன தமிழ்! 'சொன்னால் விரோதம் இது; ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ' (இதுவும் நம்மாழ்வார் வரி தான்:)). எனக்குத் தெரிந்தவரை இன்றைய எழுத்தாளர்கள் இவற்றை எல்லாம் படிக்கிறார்களா என்பது '?'. இதற்கும் ஒரு சமய முலாம் பூசப்பட்டதாகவே உணர்கிறேன். ஆனால் இவற்றால் எல்லாம் ஆழ்வார்களும், அவர்களின் ஈரச் சொற்களும் குறைந்து போகாது.மேன் மக்கள் மேன் மக்களே! நம்மாழ்வார் பாடிய 1000+ திருவாய்மொழியும் நெஞ்சை உருக்குமென்றாலும் , 'கங்குலும் பகலும்' என்று ஸ்ரீரங்கம் பற்றிப் பாடியது தான் என் நெஞ்சை என்றும் உருக்கும். இன்றும் அப்படித் தான் - 'கண்ணீர் மல்க இருக்கும்' என்ற போது உண்மையாகவே கண்ணீர் மல்கியது. ச்சே! என்ன தமிழ் -பக்தி. இவற்றை எல்லாம் அனுபவிக்க வேண்டும்; ஆராய்ந்தும் பார்க்க வேண்டும். (முக்கியமாக கறுப்புச் சட்டை போட்ட அக்ரஹாரத்துக்காரர்கள்).

               கொஞ்சம் ஸ்ரீரங்கத்தைப் பற்றி யோசித்தேன்-அன்றைய ஸ்ரீரங்கம் இன்று இருக்காது - ஏதோ 60-70 வயதான தத்தா-பாட்டிகள், புனரமைக்கப்பட்ட ஸ்ரீரங்கம் வீதிகளில், அடுக்ககங்களில், AC போட்டுக் கொண்டு , திவ்யப்ரபந்தம் படித்துக் கொண்டிருப்பார்கள். சுஜாதா சொன்னது போல், அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் கண்டிப்பாக இங்கு (America) தான் எங்கோ இருப்பார்கள். எல்லாம் கால மாற்றம்;யாரையும் குறை சொல்ல முடியாது. ஆனாலும் பலவற்றை இழந்து வருவது நிதர்சனம். அவற்றின் பாதிப்பு என்று தெரியும் என்று தெரியவில்லை. இதில் எந்த நகரமும் விதி விலக்கில்லை. சரி -Back to Edison 'கூடி இருந்து குளிர்ந்து' என்பதற்க்கேர்ப்ப, மிகுந்த மன நிறைவோடு கோஷ்டி முடிந்தது. புளியோதரை , 'மூட நெய் பெய்து' சர்க்கரைப் பொங்கல், அவியல் இத்யாதி. அதையும் நன்றாக அனுபவித்தோம்.(ச்சே, சும்மா சொல்லக்கூடாது, பிரமாதமான சமையல்.)

              பிறகு, வந்திருந்தவர்கள் அவரவர்களை அறிமுகம் செய்து கொண்டோம். நண்பர் Sri Kumar, நான் மதுரை என்றதும், மிகுந்த மகிழ்ச்சியோடு 'நானும் மதுரை தான்-தானப்பா முதலி தெரு' என்றார். நான் அனுமந்தராயன் தெருவில் வசித்த என் உறவினர் பெயரைச் சொன்னதும் சட்டென்று பிடித்துக் கொண்டார். என் கிராமத்தில் (திரளி) 80's மின்சாரம் இல்லாத வீட்டில் ஒரு நாள் தங்கியாதாகக் கூறினார். இன்று தமிழ்நாடு மொத்தமும் அந்த நிலையில் தான் இருக்கிறது:(. 80களில் தான் கண்ட மதுரை பற்றிச் சற்றே சொன்னார். இப்போ முன்னாடி சொன்ன 'மதுரைக் காஞ்சி' பாட்டுக்கு வரேன். 'விசாலமான தெருக்கள், வான் உயர்ந்த கட்டிடங்கள், கடைகள் எல்லாம் அமைந்தது எழிலான மதுரை' என்பது தான் அந்தப் பாடலின் சாராம்சம். தானப்ப முதலி தெரு, வக்கீல் புதுத் தெரு, அனுமந்தராயன் கோவில் தெரு, காக்கா தோப்புத் தெரு இங்கு எல்லாம் விசாலமாக அக்ரஹார வீடுகளை 90களில் நானே கண்டிருக்கிறேன். அவை எல்லாம் இன்று கால மாற்றத்தால் 'Commercial Building'ஆகா மாறிவிட்டன. நான் விளையாடிய அனுமந்தராயன் கோவில் தெரு வீடும் அப்படித்தான் மாறியது. நண்பரின் வீடு மட்டும் அப்படியே இருப்பதாகச் சொல்லி என்னை மகிழ்வித்தார்.

             மேற்ச் சொன்ன ஸ்ரீரங்கத்துக் கதை தான் இதற்கும். நகரம் சுருங்குகிறது மக்களின் தேவைகளுக்காக! நண்பரும் இதையே கொஞ்சம் கவலையோடு பகிர்ந்தார். 'நான் கால மாற்றத்தால் வாழ்க்கைத் தரத்தை மாற்ற நினைக்கும் போது, நான் வாழ்ந்த நகரமும், மக்களும் கட்டாயம் மாற வேண்டியது தான். யாரையும் குறை கூற முடியாது. நானுமொரு காரணம்.ஆனால் நகரம் விரிவடையாமல், இருக்குமிடத்தில் ஆக்கிரமிக்கப்படுகிறது' என்று தன்னுடைய ஆதங்கத்தை தெளிவான சிந்தனையோடு சொன்னார். 100% உண்மை தான். மனிதரிடம் படிக்க வேண்டியது நிறைய இருப்பதாக மனதிற்குள் கூறிக்கொண்டேன். பிறகு GC, Recent American Law on H1B,H4 etc என்று விவாதம் எனக்குத் தேவையில்லாத இடத்தைத் தொட்டுத் தொடர்ந்தது. என்னையும் ஒரு பொருட்டாக்கி அழைத்ததிற்கு நண்பர் Sampath-JeyaShri அவர்களிடம் நன்றிகள் கூறிக் கொண்டு மிகுந்த மன நிறைவோடு வீடு நோக்கிப் பயணிக்க GPSயை ON செய்தேன்!

No comments:

Post a Comment