Friday, April 12, 2013

தமிழ் புத்தாண்டு




சீவக சிந்தாமணியில், ஒரு வருடத்தை நாநான்கு மாதங்கள் கொண்ட மூன்று பருவங்களாகவே பிரித்தனர். அதில் சித்திரையே முதலாவதாக இருந்தது. அதாவது வருடத்தின் முதல் மாதம்..
"தீயுமிழ் திங்கள் நான்கு, வானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்கு, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்"

"சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து" -- இந்திர விழா சித்திரை பௌர்ணமியன்று நிகழ்ந்தது என்பது சிலப்பதிகாரத்தில் தெளிவுபடக் குறிப்பிடப்படுகிறது.

இது போல சித்திரைக்கு இன்னும் பல சிறப்புகள்- மதுரையில் அழகர் வைகை வருதல், இரண்டு மிகப்பெரிய ஆச்சாரியர்கள் (ஆதிசங்கரர், இராமானுஜர்) பிறந்த மாதம்.

Wednesday, April 10, 2013

இராவணன்வதைப்படலம்!

இராவணன், இராமனின் போர் வீரத்தைக் கண்டு வியந்து கூறல்!

‘சிவனோ? அல்லன்; நான்முகன்
அல்லன்; திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய்வரம்
எல்லாம் அடுகின்றான்;
தவனோ என்னின், செய்து
முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேதமுதல்
காரணன்? ‘என்றான். (இராவணன்வதைப்படலம்)




**உண்மையான மிகச்சிறந்த வரபலங்களை எல்லாம் அழிக்கின்ற இராமன், மும்மூர்த்திகளில் அடங்குவர் அல்லர்! தவம் செய்து ஆற்றல் பெற்றவனும் அல்லன்!இத்தகைய பேராற்றலைத் தவத்தால் செய்து முடிக்கு தகுதியுடையவன் ஒருவனும் இல்லை; அந்தத் தொன்மையான வேதங்களுக்கெல்லாம் மூல காரணமான ஆதிப் பரம் பொருள் இவன் தானோ? வேத முதல்வன்* உண்மையை உணர்ந்து, பாராட்டி, தன்னுடைய செருக்கைத் தொலைத்துச் சொன்ன வரிகள்**

மாய மான் மாயச் செற்று!

மாய மான் மாயச் செற்று!


**மாய மானாகி இராமன் சீதை இருக்கும் இடம் அடைந்த மாரீசன், நச்சு நீரில் தப்பிக்க முடியாத மீன்போல் துடித்தான்.அழிவு உறுதி என்பதால் பிரிகின்ற சுற்றத்தை நினைத்து வருந்தினான். இராமனின் அம்பு இவனைத் துளைத்ததும் சீதையும், லக்ஷ்மணனையும் இராமன் குரலால் அழைத்தே மாண்டான்**

வெஞ் சுற்றம் நினைந்து
உகும்; வீரரை வேறு
அஞ்சுற்று மறுக்குறும்; ஆழ்
குழி நீர்
நஞ்சு உற்றுழி, மீனின்
நடுக்குறுவான்
நெஞ்சு உற்றது ஓர் பெற்றி
நினைப்பு அரிதால். (மாரீசன் மனநிலை-மாரீசன் வதைப் படலம்)




** 'இம்மானால் யாது பயன்' என்ற இலக்குவன் வினாவுக்கு விடை
கூறினாற்போல் சீதையின் பேச்சு பின்வரும் பாடலில்.வனவாசம் முடிந்து அயோத்தியில் செல்லும்போது இம் மான் எனக்கு விளையாட்டுத் துணையாக இருக்கும் என சீதை கூற, இராமனும் 'பொய் மான்' என்ற இளவல் பேச்சை மீறி மாய மானான மாரீசனைத் தொடர்ந்தான் தசரத மைந்தன்**

--சீதை மானைப் பிடித்துத் தரும்படி இராமனை வேண்டுதல்--
அற்று அவன் பகராமுன்னம்,
அழகனை, அழகியாளும்,
'கொற்றவன் மைந்த! மற்றைக்
குழைவுடை உழையை, வல்லை
பற்றினை தருதி ஆயின், பதியிடை
அவதி எய்தப்
பெற்றுழி, இனிது உண்டாடப் பெறற்கு
அருந் தகைமைத்து' என்றாள். (மாரீசன் வதைப் படலம்)

கைகேயி சூழ்வினைப் படலம்

***அது நாள் வரை நல்லவளாக இருந்து, மந்தரையின் சூழ்ச்சியால் இராமனைக் காடு புகப் பணித்தாள் கைகேயி. ஆயினும் நல் அரசனாய் வருவதற்குத் தவம் மேற்கொண்டு, புண்ணியத் துறைகள் நீராடி 14 ஆண்டுகள் கழித்து வா என்றும். 14 ஆண்டுகள் என்பதை ஏழு-இரண்டு ஆண்டுகள் என்று சுருக்கிக் கூறியும் , 'வா' என்றும் இராமன் மீதுள்ள அன்பினால் மட்டுமே கூறியதாக நான் பார்க்கிறேன். மேலும் ‘இயம்பினன்அரசன்’ என்பதால் அரசு ஆணை இது மீறுதற்கு அரிது என்பதைச் சுட்டினாள். 'பரதனே' என்பதில் அவளின் புத்திர பாசம் மேலோங்குகிறது***


‘ஆழி சூழ் உலகம் எல்லாம்
பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இரும் சடைகள் தாங்கித்,
தாங்க அரும் தவம் மேற் கொண்டு,
பூழி வெம் கானம் நண்ணிப்,
புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழ் இரண்டு ஆண்டின் வா ‘என்று
இயம்பினன் அரசன்‘‘ என்றாள். (அயோத்தியா காண்டம்-கைகேயி சூழ்வினைப் படலம்)

நகர் நீங்கு படலம்

***இராமன் கானகம் புகு முன் கோசலையிடம் சென்று விடை பெறும்போது கோசலை பரதனைப் பற்றி - மும்மையின்நிறை குணத்தவன் (மூன்று மடங்கு எல்லாரினும் மேம்பட்டு நிறைந்த குணத்தினை உடையவன்);
நின்னினும் நல்லன் (உன்னையும்விட நல்லவன்); குறைவு இலன் -
(கல்வி, இளமை, வீரம், குணம் முதலிய யாவற்றாலும் யாதொரு குறைவும் இல்லாதவன்);’ எனக் கூறினாலும், பாசத்தால் தயரதனைக் காணச் சென்றாள். ***


**காப்பியத்தில் சுமித்ரை பேசிய இடங்கள் மிகக்குறைவு என்றாலும், இலக்குவனுக்கு கூறிய மொழிகள் பெருமிதம் தருவதாகும்.இராமனுக்கு ஏதேனும் ஆபத்து வரின் அதனைத் தடுக்க உன் உயிரை விடவும் தயங்காதே என்றாள், ‘முன்னம் முடி’ என்ற சொல்லால். ‘இந் நெடுங் சிலைவலானுக்கு ஏவல் செய அடியன்யானே’ என்று அனுமனிடம் இலக்குவன் பின்னர்த் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வதும் உண்டு!**

பின்னும் பகர்வாள், ‘மகனே!
இவன்பின் செல்; தம்பி
என்னும்படி அன்று, அடியாரினின்
ஏவல் செய்தி;
மன்னும் நகர்க்கே இவன்
வந்திடின், வா; அது அன்றேல்,
முன்னம் முடி’ என்றனள்,
வார் விழி சோர நின்றாள்.
பின்னும் - மேலும்; பகர்வான் - கூறுவாள்; (நகர் நீங்கு படலம்)

**ராமகாதையில் என்னைக் கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று.
இவன்தம்பி என்கின்ற முறையில் நடந்துகொள்ள
அன்று; இவன்தொண்டர்களைப் போல இவன் இட்ட பணிகளைச் செய்;இவன் திரும்பி வருவானாயின் நீயும்வருக;அது அன்றேல் - இவனுக்கு முன்னம் நீ உயிரைத் துறந்துவிடு;’ என்றாள் சுமித்ரை! ***

பார்த்திபன் கனவு



செண்பகத் தீவின் வாசிகள், சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் கரிகால் சோழரின் காலத்தில் சோழ நாட்டிலிருந்து அங்கே போய்க் குடியேறிய தமிழர்களின் சந்ததிகள், அந்தத் தீவை ஆண்டு வந்த ராஜ வம்சம் சந்ததியில்லாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு நசிந்துப் போய்விட்டது. ஆகவே, செண்பகத் தீவு தற்சமயம் ராஜா இல்லாத ராஜ்யமாயிருந்து வருகிறது. இதை அறிந்ததும் பக்கத்துத் தேசங்களிலுள்ள மக்கள் - முக்கியமாகத் தட்டை மூக்குச் சாதியினர் - அடிக்கடி செண்பகத் தீவில் வந்திறங்கிக் கொள்ளையிட்டும், இன்னும் பலவித உபத்திரங்களை விளைவித்தும் செல்லுகிறார்கள். இதையெல்லாம் உத்தேசித்துச் செண்பகத் தீவின் ஜனங்கள் மகாசபை கூட்டி ஏக மனதாக ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதாவது தற்சமயம் தாய்நாட்டிலே பிரசித்த சக்கரவர்த்தியாய் விளங்கும் நரசிம்ம பல்லவேந்திரருக்குத் தூதனுப்பி, செண்பகத் தீவைப் பல்லவ சாம்ராஜ்யத்தில் சேர்த்துக் கொண்டு சக்கரவர்த்தியின் சார்பாகத் தீவை ஆட்சி புரிவதற்கு இராஜ வம்சத்தைச் சேர்ந்த வீர புருஷர் ஒருவரை அனுப்பும்படி பிரார்த்திக்க வேண்டியது.

இராமன் வீரனா? இராவணன் வீரனா?

அண்மையில் கேட்டது: எழுத்தாளர் சாண்டில்யன் ஒரு பட்டிமன்றத்திற்கு நடுவராய்ச் சென்றார். தலைப்பு- இராமன் வீரனா? இராவணன் வீரனா?. இராவணன் பற்றிப் பேசியவர்களே நன்றாகப் பேச, சண்டியனுக்குக் இக்கட்டான சூழ்நிலை! கூட்டத்தினர் அனைவரும் இராவணன் பக்கமே ஆரவாரம் செய்தனர். 'அடுத்தவன் மனைவியை கவர்ந்து செல்பவர்கள் வீரன் என்று நினைப்பவர்கள் எல்லாம் எழுந்து செல்லலாம்' என்று முடித்தார்.கூட்டமே அமைதியாய் இருந்தது.