Sunday, August 19, 2018

நூல் (புத்தகம்) - விற்பனை - 2018

ஒருமுறை தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் பேசுவதற்காக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டம் நடக்கவிருந்த இடம் ஓர் அரங்கத்தின் மாடியில் என்பதால் படி ஏறித்தான் செல்ல வேண்டும். உ.வே.சா.வை மாடிக்கு அழைத்துச் செல்ல ஒரு பதின்ம வயது சிறுவனை ஏற்பாடு செய்திருந்தனர். சிறுவன் கையைப் பிடித்த படி, ஒவ்வொரு படி ஏறும்போதும் "படிங்க தாத்தா, படிங்க தாத்தா...' என்று சொல்லிச் சொல்லி அழைத்துச் சென்றான். கூட்டத்தில் பேசும்போது உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள், "நான் நிறையப் படித்துவிட்டேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்தக் கூட்ட அறைக்குக் கூட்டி வந்த சிறுவன், என்னைப் பார்த்துப் "படிங்க தாத்தா... படிங்க தாத்தா...' என்று கூறிக்கொண்டே வந்தது, நான் இன்னும் நிறையப் படிக்க வேண்டியிருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் இருந்தது..'' என்று, நயமாக உரை நிகழ்த்தினார். (முன்னொரு முறை தூர்தர்ஷன்ல் பார்த்த நாடகத்தில் கொஞ்சம் வேறுமாதிரியிருந்தது.)

ஆம்.. வாழ்க்கையே ஒரு புத்தகம் தான். தினமும் எத்தனையோ படிப்புகள். ஆனாலும் தேடிப்பிடித்து படிப்பது தனி அனுபவம் தான். இனி வழக்கம் போல் நம்ப கதைக்கு வருவோம்.. இந்த ஐடி-யில், ஆரம்பிக்கறது ஒருத்தர், மாட்டுவது இன்னொருத்தர் என்பது எழுதப்படாத விதி.. யாராலும் மற்ற முடியாது. யாரோ எதுக்கோ ஒரு எஸ்டிமேஷன் போட, வழக்கம் போல் இதை முடிக்க போதிய ஆட்கள் இல்லாமல் இரவு-பகல் (கவனிக்க) பாராமல் 'உழைக்க' தள்ளப்படுவோம்.. வார நாட்களும். இப்போது அப்படி ஒரு நிலையில் ஒரு ப்ராஜெக்ட் ஓடிக்கொண்டிருக்கிறது. இது இயங்கும் 2-3 மாதத்திற்குள் 3-4 பேர் வேலையைவிட்டுப் போக சிக்கல் சிலந்திவலையானது. எதிர்பார்ப்பது போல் ஆன்சைட்ல் தெலுங்கில் பேசும் ஒருவர்.. மேற்கொண்டு விவரிக்க வேண்டாம். கருணாநிதி, வாஜ்பாயி எல்லாம் கற்றுக்கொடுத்து போனது 'ஓய்வில்லாமல் உழைக்கணும்' ஆம், அவர்கள் இறந்த விடுமுறைநாளிலும் 'கனெக்ட்' செய்திருந்தோம். சென்னை முழுதும் மழை பெய்தாலும் 'என்ன மழையா? எப்போ பேஞ்சது?' என்று அலுவலக வாசல் தண்ணீர் பாத்து தான் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.. பெரும்பாலும் இந்தமுறை நள்ளிரவு மழைஇல்லாததால், உணர முடியவில்லை. ஒரு நாள்  ப்ராஜெக்ட் பில்லிங் நிவாரணமாகத் தருகிறோம்ன்னு ஒரு வார்த்தைக்காவது சொல்லலாம் (அதற்குக்காரணம் காட்டி நம் சம்பளத்தில் கைவைத்தாலும் ஆச்சர்யமில்லை). கேரளா வெள்ளத்திற்கும் நம்மிடம் தான் பணம் கேட்டார்கள் அலுவலகத்தில் (கட்டாயமில்லை). இது தான் பிசினஸ். இது போலத் தான் இந்த புத்தக விற்பனையும்.

மன அழுத்தம் அதிகமாகிக்கொண்டே போக, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்ன்னு 'புத்தகக் கண்காட்சி' போனேன். வழக்கம் போல் வந்தியத்தேவன் தான் ஆக்கிரமித்திருந்தான். 'அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய். ஆனந்த பூர்த்தியாகி. அருளொடு நிறைந்ததெது' என்று தாயுமானவர் பாடியது போல, எங்கு புத்தகம் விற்றாலும் அங்கு கல்கி இல்லாம இருந்தா அது பில்லிங் சப்மிட் பண்ணாத ப்ராஜெக்ட் மாதிரி தான். இந்த முறை 'பொன்னியின் செல்வன்' சிறுவர்களுக்கான காமிக் என்று ஒரு கடை இருந்தது. அவ்வளவு பெரிய புதினத்தை எப்படி தர முடியும், அதுவும் ஆங்கிலத்தில்..!சிறு பகுதியை எடுத்திருந்தார்கள் போலும்.மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி நிறைய புத்தகம் இருந்தது. ஒவ்வொரு கடையிலும் அதன் அருகில் கண்ணதாசனின் 'மன வாசம்' இருந்தது.. தெரிந்து தான் வைத்தார்களான்னு தெரியல :). சுஜாதா புத்தகம் குறைவு எனலாம், ஸ்ரீரங்கத்து தேவதைகள் இல்லை.. அம்பேத்கார், சேகுவாரா, வீரப்பன், பிரபாகரன், இன்ன பிற சீன, மேற்கு-கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவரின் உருவம் போட்ட புத்தகம் நிறைய இருந்தது. வானதி, செண்பகம் மற்றும் சில இதற்க்கு விதிவிலக்கு. குழந்தைகளுக்கு என்று நிறைய கடைகள் இருந்தது. கண்டிப்பாக கிரெடிட் கார்டு இல்லாமல் அந்த கடைக்குள் போக முடியாது..

கோயம்பேடு, வைகை எக்ஸ்பிரஸ்களில் விற்கும் பத்து ரூபாய் புத்தகம் தாராளமாய் நிறைய கடைகளில் இருந்தது.பீர்பால், தெனாலிராமன்,  சித்த மருத்துவம், வசியம், நாடி, கட்டம், கோலம், 'தயிர் சாதம் செய்வது எப்படி' இத்யாதி  என பத்து ரூபாய்க்கு கிடைக்கிறது. அடுத்த தலைமுறையை அறிவு சார்ந்த தலைமுறையாக உருவாக்க வேண்டும் என்ற முனைப்போடு தான் இது போன்ற கண்காட்சி-விற்பனை இருக்கவேண்டும். தமிழாராய்ச்சி கழகம் இருந்தது. அங்கும் ஏறத்தாழ இதே நிலை தான். சாண்டில்யன் கொஞ்சம் குறைவு இம்முறை.உடையார் நிறைய இருந்தது.புறநானூறு, அகநானூறு இன்ன பிற இலக்கிய புத்தகங்கள் பார்க்க முடிந்தது..மருந்துக்குக்கூட யாரும் எடுத்துக் பார்க்கவில்லை. திருவரங்கன் உலா கணிசமாயிருந்தது. உ.வே. சா  'என் சரித்திரம்' இம்முறை 400 முதல் 500 வரை என்று விற்றார்கள். 'பாண்டியர்கள் வரலாறு' (சதாசிவ பண்டாரத்தார் - 1956) என்ற ஒரு புத்தகம் மட்டும் வாங்கினேன். 10% கழிவு இருந்தது

கிரி ட்ரடேர்ஸ்ல் கூட பொன்னியின் செல்வன் விற்றார்கள். மகிழ்ச்சி..! தினமலர் ஸ்டாலில் சொன்னது நான் தேடிய புத்தகம் அவர்களிடம் இல்லாத போது - 'சார் நாங்க எல்லா புத்தகத்துக்கும் சைட்ல் விளம்பரம் போடுவோம்.. ஏன், நீங்களே நாளைக்கு எழுதுங்க, அதுக்கும் நாங்க போடுவோம்'.. உண்மை தான்.. நாம் தான் தேட வேண்டும். தேடுதல் தர வேண்டும் நல்லவற்றை (தேடுவதும் நல்லதாய் அமைய வேண்டும்:)), உ.வே. சா போல்..!

* அமைதியான சூழலில் இது போல் இருக்க வேண்டும். அப்போது தான் புத்தகம் வாங்க-படிக்க முடியும்.. நேற்று ஏதோ இசை என்று, ஓரு மணி நேரம் காது கிழிந்தது தான் மிச்சம் .
* பட்டிமன்றம்-நாடகம் வைக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அதுவும் நடக்கிறது..  முடிந்தால் நல்ல பேச்சாளர்களைக் கொண்டு, அவர்களை படித்த புத்தகம் பற்றி பேசச் சொல்லலாம்..
* 'நூல்' என்று பெயர் இருப்பது தப்பாகிவிட்டது.. புத்தக விலை, 'பட்டு நூல்' அளவிற்குப் போய்க்கொண்டிருக்கிறது. அதைக் கட்டுப்படுத்த வேண்டும்.. இல்லையேல் பிரிண்டெட் காப்பி வாங்குவதற்கு பிரின்டிங் மெஷினே வாங்கிவிடலாம்.
* நாம் திரும்ப வரக்கூடாது என்பது போல் அவர்களே போர்டு வைத்துள்ளனர் - 'நன்றி மீண்டும் வருகை'. (தமிழன்டா)..
* எதிர்பார்த்தது போல் கரும்புச் சாறு, டெல்லி அப்பளம், ஊட்டி ட்ரை ப்ரூட்ஸ், பஜ்ஜிக் கடை எல்லாம் கூட்டம் நிரம்பியிருந்தது.. 'செவிக்குணவு இல்லாத போது.. ' இத்யாதி..

--கிரி, சென்னை; 03-ஆவணி..









Tuesday, April 3, 2018

சிந்து பூ மகிழும் சிந்துபட்டி


"சௌலப்யத்திற்கு எல்லை நிலம் அர்ச்சாவதாரம்"

"எய்துமவர்க்கு இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது" - மணவாள மாமுனிகள்

"தமர் உகந்தது எவ்வுருவம்? அவ்வுருவந் தானே;
தமருகந்தது எப்பேர்?மற் றப்பேர் - தமருகந்து,
எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே?
அவ்வண்ணம் ஆழியா னாம்" - பொய்கையார்

எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை, வானவர் வானவர் கோனொடும்,
சிந்துபூ மகிழும் திருவேங் கடத்து,
அந்த மில்புகழ்க் காரெழில் அண்ணலே - திருவாய்மொழி, நம்மாழ்வார்

(நித்யஸூரிகள் தங்களில் தலைவரான ஸேனை முதலியரோடு கூட
தூவின புஷ்பங்கள் செவ்விகுன்றாதிருக்கப்பெற்ற திருமலையில் மூடியில்லாத புகழையுடையவனும் நீலநிறத்தழகுடையனுமான எம்பெருமான் எம்குலநாதன் )

'வணங்கும் துறைகள் பலபலவாக்கி' என்ற ஆழ்வார் வாக்கிற்கிணங்க, எம்பெருமான் பல இடங்களில், நம்மில் ஒருவனாய் இருக்கிறான்.. அப்படியாக அர்ச்சவதாரங்களில் இருந்து 'பின்னானார் வணங்கும் சோதியாகி', பல திவ்ய தேசங்கள், அபிமான தளங்களில் இருந்து நம்மை காத்து வருகிறான்.. அது போல் மதுரை பக்கத்து தளங்களில், நிறைய உண்டு.. பெரும்பாலும் நாயக்கர்கள் அபிவிருத்தி பண்ணினது.. பாண்டியர்கள் பெரும்பாலும் சைவர்கள், ஜடாவர்மன் மட்டும் வைஷ்ணவனாகி நிறைய கைங்கர்யம் செய்துள்ளான்.. நாயக்கர்கள் இருபுறமும் இருந்தாலும் பெரும்பாலும் வைஷ்ணவ முறைப்படியே வாழ்ந்து, கோவில்களை நிர்மாணித்து, காத்து வந்துள்ளனர்.. அந்த வகையில், மதுரை-உசிலம்பட்டி அருகில் உள்ளது 'சிந்துபட்டி' என்ற கிராமத்து கோவில். முழுக்க முழுக்க நாயக்கர்கள் நிர்மாணம் செய்து, இன்று வரை அவர்களாலேயே பாதுகாக்கப்பட்டு வருகிறது.


இந்த ஊரில் மிகவும் பழைய வெங்கடாஜலபதி திருக்கோவில் இருக்கிறது.. இந்தப்பக்கம் உள்ள பலருக்கும் 'குல தெய்வம்'.. திருப்பதிக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகள் எல்லாம் இங்கு செலுத்துவார்கள். நான் இந்த முறை போனதும் திருமலைக்குப் போனமாதிரி தான் இருந்தது.. எவ்வளவோ நாம் ட்ரை பண்ணுவோம் திருமலைக்கு, கடைசியில் 'அவர்' தீர்மானிப்பது தான் நடக்கும்..அது போல இந்த ஊருக்கும் நடந்ததிலிருந்தே தெரிந்தது, இது திருமலை என்று.ஏதோ சிலநாட்களாய் கடுப்பான வேலையில் உழன்று வர,திடீரென்ற பிளான், அதுவும் சனிக்கிழமை. சரி போய்விடலாமென்று மதுரையிலிருந்து கிளம்பினோம்.

 'செக்கானூரணி ஊரிலிருந்து ஒரு 2-3 மைல் வந்து இடது பக்கம் திரும்புங்க, ஒரே பாதை தான். ஒத்தையடி பாதை கணக்கா போகும் திடியன் மலை வரைக்கும்.. அங்க இடதுபக்கம் திரும்புங்க.. அப்பறம் திருமங்கலம் ரோடு வரும்.. வழில யாரும் இருக்க மாட்டாங்க கேட்க கூட'.. நம்ப நிகில் ஆட்டோக்காரர் மதுரையிலிருந்து வந்த ஓலா (!) டிரைவர்கிட்ட சொன்னது.. சொன்னது போலவே ஒத்தையடி பாதை, இருபுறமும் வயல். நெல் இருந்திருக்கும்.. சில இடங்களில் வெண்டைக்காய், கத்தரிக்காய் போட்டிருந்தார்கள்.. வழியில் குழப்பம் வர, கேட்க ஆள் இல்லாமல், 'சார், கூகுளை பாருங்க' டிரைவர் சொன்னார்:).. இருந்த சிக்கனலில் மேப் லோட் ஆனது.. ஓரளவிற்கு மேல் டெக்னாலஜி கைகொடுக்கவில்லை.. வழியில் இருந்த கைலி கட்டிய ஒருவரிடம் கேட்டோம்.. 'ஸ்ட்ரெயிட்டா போங்க'.. சில நிமிடங்களில் 'சிந்துபட்டி' வந்தது...

கோவில் இருக்கும் இடமும், ஊருக்கும் சம்பந்தமில்லாமல் இருந்தது.. கிராமத்து கோவில் என்பது சரியாய் இருந்தது.. மாட வீதிகள், அஹ்ரகாரங்கள் எல்லாம் இப்போது இல்லை.. கோவிலுக்கு நேரே ஒரே வீதி, அதில் தான் உற்ஸவர் புறப்பாடு வருவார்.. ஆடு, மாடு , கோழி எல்லாம் ஓடிக்கொண்டிருந்தது.. முன்னொருமுறை போனபோது கோவில் வாசலில் ஒலித்த கண்ணதாசன் சினிமா பாடல் இந்த முறை இல்லை என்ற ஒரு ஆறுதல் .. கோவிலின் உட்புறம் நேர்மாறாய் அமைந்தது.. நாயக்கர்கள் கட்டிடக்கலை என்று பார்த்தவுடன் சொல்லலாம்.. தூணுக்குத்தூண் ஒரு நாயக்கரின் சிற்பம் இருக்கும்.

வாசலில் பெரிய கோபுரம்.. அதைக்கடந்து உள்ளே நுழையும் முன், கோபுர வாசலில், இரண்டு யானை சிலைகள், கவனிப்பாரற்று இருந்தது மேலும் வருத்தமாய் இருந்தது.. கொடி மரம்.. இங்கு கொஞ்சம் வித்தியாசமானது.. மேலே கருடன்.. இதற்க்கு இங்கே 'கம்பம்' என்று வழங்கி 'கம்பம் கழுவுதல்' நடக்கிறது.. அதாவது கொடிமரத்திற்கு திருமஞ்சனம், பூஜைகள் எல்லாம் தனி. 'விபூதி' தரப்படுகிறது.. இதில் 'கருப்பன்' இருப்பதாய் நம்புகிறார்கள்..

சற்றே உள்ளே போக, 'அலர்மேல் மங்கை' தாயார் திருச்சானூர் போலவே, 'அல்லி நாள் தாமரை மேல் ஆரணங்கின் இன் துணைவி'யாக தாமரை மேல் வீற்றிருக்கிறார்..  பெருமாள் சன்னதி தனி.. கூடலழகர் போல் சாயலில், நின்ற திருக்கோலத்தில் உபய நாச்சிமாரோடு வெங்கடாஜலபதி.. உற்ஸவர் அழகு சொல்லிமாளாது.. கொஞ்சம் கள்ளழகர் போல் இருந்தார், மூர்த்தி சிறியவராய்.. 'ஓங்கி உலகளந்த உத்தமன்', கீர்த்தி பெரிதாய் இருப்பார்.. நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், இராமானுசர், மணவாளமாமுனிகள் என்று எல்லாம் ஆச்சாரியர்களும் பழைய கால உற்ஸவ மூர்த்திகளாய் இருந்தார்கள் உற்ஸவ மூர்த்தியாய்.. எனக்கு அன்று  ஒரு யோகம், உபநிஷத், திராவிட வேதம் எல்லாம் தனியாய்ச் சொல்ல.. இது போன்ற கோவில்களில் தான் அமர்ந்து சொல்ல வேண்டும்.. பெருமான் அருமையாய் திருச்செவிமடுத்தார்.. நாம் என்ன சொன்னாலும் தடுக்க ஆள் இல்லை.. கேட்க பெருமான் இருந்தார்..அருகிலிருக்கும் திடியன் மலை சிவன் கோவில் நடராஜர் இங்கு இருக்கிறார் பாதுகாப்பு கருதி.. சற்றே வேதனை.. அவர்க்கென்ற நியமன பூஜைகள் இல்லை.. வைணவ முறையோடு வாழ்கிறார் அன்று நான் சொன்ன ஆழ்வார் பாசுரங்களை கேட்டுக்கொண்டு பொன்னார் மேனியன் அம்பலத்தாடும் கூத்தனாய்..

கோவிலைச் சுற்றி வந்தேன்.. கொஞ்சம் கவலையாய் இருந்தது. வசந்த மண்டபம், ஊஞ்சல் மண்டபம், யாகசாலை (மண்டபம்), பரமபத வாசல், வாகன மண்டபம் எல்லாம் பழைய காலக் கற்களால் கட்டப்பட்டு இருந்தது.. இவற்றில் எல்லாம் உட்சவம் கண்டருளி வருஷங்கள் பலவானது தெரிந்தது அங்கிருந்த குப்பைகளைக் காணும் போது..வேலி போட்ட வாகன மண்டபத்திலிருந்து யானையும் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது. 'ஆதிமூலமே' என்று அழைத்தவுடன் 'ஆணைக்கு நீ அருள் செய்தமையால்' என்ற ஆழ்வார் சொற்படி எப்போது இந்த ஸ்ரீனிவாசர் இந்த யானைக்கும் அருள் புரிவார் என்று தெரியவில்லை. கருடன் தன கைகளை உயர்த்தி 'எம்பெருமான் தன் வரவு பார்த்தே' அமர்ந்திருந்தார். மற்றை வாகனங்களும் இருந்தனர் அவர்களின் பயன் முழுமையடையாமல்.. ஒரே காரணம் உற்ஸவம் எதுவும் நடப்பதில்லை..

                 மேலும் என்னை வெகுவாய்க் கவர்ந்தது தூண்கள் தான்.. அனைத்துத் தூண்களிலும் ஒரு நாயக்கரின் சிலை, கையைக் கூப்பிக்கொண்டு, நம்மை அழைப்பது போலும், எம்பெருமானைத் தொழுவது போலவும்.. ஒரு இடத்தில் உற்றுக் கவனித்தேன்.. திருமலை நாயக்கரின் சிலை இருந்தது.. இடையில் குறுவாளுடன், கொஞ்சம் வயிறு பெருத்து.. அருகில் பாண்டிய சிறப்பச் சின்னமான 'யாழி' செதுக்கப்பட்திருந்தது.. இங்கும் பாண்டியர்களின் கைங்கர்யம் இருந்திருக்கலாம் என்றே நினைத்தேன். கொடிமரத்தின் மேலே கருடன் போன்று இருந்தது.. மதுரைப்பக்கங்களில் இது போல் பார்த்த நினைவில்லை. கேரளாவில் இதுபோல் இருந்தது.

மதியம் 12-க்கு மேல் ஆகியும் பக்தர்கள் ஒவ்வொருவராய் வந்து கொண்டுதான் இருந்தார்கள். கையில் வந்த பட்டர் ஸ்வாமி மிகவும் பொறுமையாய் தனித்தனியாய் அர்ச்சனை, கொடிமர (கம்பம்) பூஜை என்று மாறி மாறி செய்து கொண்டிருந்தார் உணவு கூட உண்ணாமல். ஒரு மணிக்கு அவரிடம் (உப்பிலி ஸ்ரீனிவாசன்) பேச்சுக்கொடுத்தேன்.. 'அண்ணா, இது நாயக்கர் கால கோவில்.. இப்போ அரசாங்கம் பாக்கறது.. ஆனா 20 பட்டி நாயக்கர்கள் தான் இன்னமும் கைங்கர்யம் பண்றா. அவாளோட கண்ட்ரோல் தான். 2003-ல ஸம்ப்ரோக்ஷணம் ஆச்சு. அப்பறம் ஒரு வருஷம் பிரம்மோற்சவம் ஆச்சு.. அப்பறம் உற்ஸவம் எடுத்துப்பண்ண ஆள் இல்லை. புரட்டாசி சனி, கார்த்திகை, ஸ்ரீ ஜெயந்தி, நவராத்ரி இது எல்லாம் விஷேஷம். பெருமாள் புறப்பாடு இருக்கும்.. இங்க ௩ பேர் தான்  பெருமாள் கைங்கர்யத்திற்கு இருக்கோம்..அது தான் கொஞ்சம் கஷ்டமாய் இருக்கு.. இருந்தாலும் பரம்பரையா பாக்கறோம்.. கோவில் தல வரலாறுன்னா, நிறைய குடும்பம் ஆந்திராவிலேர்ந்து தெற்கு நோக்கி வரா. இந்த ஊர்ல ஒரு நாள் தங்கரா.. இந்த பெருமாள் 'பழைய பெருமாள் கோவில்'ன்னு கண்மாய்க்குள்ள இருந்தார்.. போய் ஆராதனம் பண்ண முடியலை.. அதனால 'புளியந் தோப்பான' இந்த இடத்துல அந்த ஆந்திர நாயக்கர்கள் எல்லாம் கோவில் எழுப்பி, பெருமாளை கண்மாயிலிருந்து எழுந்தருளப்பணறா.. '.. சொல்லி முடிக்கும் போது கோவில் நடை சாத்த மணியானதை அரசாங்க அலுவலர் சுட்டிக்காட்டினார். 'சரி' என்று கிளம்பினோம். ஏதோ ஒரு குழப்பம்.. சட்டென்று தோன்றியது கோபுரத்தைத் தாண்டும் போது, 'நம்மாழ்வார் அவதரித்து இருந்ததும் புளிய மரம் தானே.. 'அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே' என்று திருமலை வேங்கடேசனிடம் சரணாகதி அடைந்ததும், 'ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழிவிலா அடிமை செய்ய வேண்டும்' என்று அதே திருமலையப்பனிடம் தானே கைங்கர்ய பிராப்தி வேண்டியதும் என்று இவர் புளிய மர நிழலைத் தேர்ந்தெடுத்த காரணம் தெரிந்தது.. வாசலில் வந்த போது மேலும் ஒரு அதிர்ச்சி.. கோபுரத்தின் இரண்டு புறமும் அழகிய கல் யானைகள் பராமரிப்பின்றி. எதிரே பெருமான் எழுந்தருளும் அருமையான மண்டபம், அக்ரஹார வீதியோடு..

இது அசப்பில் ஆழ்வார் திருநகரி அமைப்பில் இருந்தது.. ஒருபுறம் யாழி, மறுபுறம் யானை என்று.. பாவம், யானைகளும், யாழிகளும் இன்றைய சிமெண்ட் ரோடு கலாச்சாரத்திற்கு பலியாகி, பாதி தான் தெரிந்தார்கள்.. . ஆழ்வார் திருநகரியை ஒத்த அமைப்பு.. சிலவருடம் முன் போட்ட சிமெண்ட் ரோட்டில் அவற்றின் நெற்றி வரைமூடப்பட்டு மண்ணில் புதைந்து, மூச்சு விட சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. ~600 ஆண்டுகள் பழமையான கட்டிடக்கலை. கண்ணெதிரே மண்ணில் புதையுண்டு இருந்தது.இதைச் செதுக்கிய சிற்பி இப்போது இங்க வந்திருக்க வேண்டும்.. அவர் தான் இது போல் செய்தவர்களை கேள்வி கேட்பர்.. நமக்கு இதன் பழமையும், புராதானமும், மதிப்பும் தெரியவில்லை. . நேரமாக அங்கிருந்து கிளம்பினோம்.. கொஞ்சம் கூகிள் செய்ய, புளியந்தோப்பு என்பதற்கு தெலுங்கில் "சிந்தபண்டு தோப்பு" என்று போட்டிருந்தார்கள். நாயக்கர்களால் அதே மருவி  'சிந்து பட்டி' ஆகியிருக்கலாம் என்றும் சொன்னது..

எனக்கு ஓரளவே உடன்பாடு அதில்.. நம்மாழ்வார் திருவாய்மொழி மூன்றாம் பத்தில் 'சிந்து பூ மகிழும் திருவேங்கடம்' என்று மங்களாசாசனம் செய்கிறார்(பாசுர விளக்கம் மேலே) .. இதுவே மருவி 'சிந்து பட்டி' என்று வந்திருக்கலாம்.. ஆழ்வார் சூட்டின பெயர்.. சில நாள் முன் ஸ்ரீ. சுஜாதா தேசிகன் அவர்கள் ஒரு கோவில் பற்றி எழுதினர். வருவதற்கு ஆள் இல்லாமல் இருந்தது என்று.. இந்தக் கோவில் அது போல் இல்ல. 'அடியாரும் வானவரும் அரம்பையரும்' நிரம்ப வருகிறார்கள் ஆனால் எம்பெருமானிடத்தில் கைங்கர்யம் செய்ய ஆள் இல்லை. அதற்கும்,  நின்ற உற்ஸவம் தொடர்ந்து நடக்கவும் 'அவனல்லால் சரணில்லை' என்றபடி அவரே அதற்கும் அருள்புரியட்டும், அந்த யானைகளும், யாழிகளும் மூச்சுவிடவும் சேர்த்து.!

--கிரி, சென்னை, 04/04..










































Sunday, January 21, 2018

ஆண்டாள், தமிழையும் ஆண்டாள்

ஆண்டாள், தமிழையும் ஆண்டாள்

ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை,
நான் மறை முது நூல் முக்கட் செல்வன்,
ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய
பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர்
கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும் (அகநானூறு)

பொருள்: உலகமெல்லாம்பரவும் நன்மை பொருந்திய நற்புகழையுடைய, நான்குவேதங்களாய பழைய நூலை அருளிய முக்கண்ணையுடையபரமனது, ஆலமுற்றம் என்னுமிடத்து, அழகுபெற இயற்றப்பெற்ற, பொய்கையைச் சூழ்ந்துளபொழிலின்கண்ணே, சிற்றிலிழைத்துவிளையாடும் சிறுமிகளது, (கைசெய் பாவைத் துறைக்கண்) அழகுறச் செய்யப்பெற்ற பாவைகளையுடைய துறையின்கண்ணே, வந்து தங்குவதும், மகரக் கொடியினைஉச்சியிற்கொண்ட வானைத்தோயும் மதிலையும், முடிஅறியப்படாதவாறு சேணின்கண் உயர்ந்த நல்லமாடங்களையுடையதும் ஆகிய, காவிரிப் பூம் பட்டினத்தையுடைய நல்ல சோழநாட்டின் கண்ணதாகும்!

ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து 
மாயிருந் திங்கள் மறுநிரை ஆதிரை 
விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப் 
புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப 
வெம்பா தாக வியனில வரைப்பென 
அம்பா ஆடலின் --பரிபாடல் 

ஆண்டாள் என்ற பெயர் கூட எங்கள் வீடுகளில் வாழந்து தான் வருகிறது. சமீபத்தில் நூறு வயதை நெருங்கிய ஆண்டாள் என்ற பெயருடைய  பாட்டியொருவர் ஆசார்யன் திருவடி அடைந்தார்/இறந்தார். அவருக்கு இப்பெயர் நூறு வருஷங்களுக்கு முன் வைக்கப்பட்டுள்ளதென்றால் ஆண்டாள் என்ற தெய்வப்புலவரை எங்களைப் போன்றோர் இன்றும் போற்றி வருவது புதிதல்ல. இன்றும் தமிழகத்தில் நான் அறிந்த வரையில் ஆண்டாள் தவிர வேறு எந்த புலவரின்/கவியின் பெயர்கள் வைக்கப்படுவதில்லை. தமிழ் இனம்/தேசியம் என்று பேசுபவர்கள் கூட (ஆதி) தமிழ் புலவர்களின் பெயர்களை வைப்பதில்லை என்பதைவிட பெரும்பாலும் இயற்ப்பெயரை மறைத்து வேறு பெயர்களே வைத்திருக்கிறார்கள்.. சரி.. எது எப்படியோ போகட்டும்.. ஆண்டாள் தமிழை கொஞ்சம் பார்க்கலாம் என்ற எண்ணம் உருவாக்கிய அனைவருக்கும் நன்றி சொல்லவேண்டும்.'நான் கண்ட நல்லதுவே' என்பது போல் எனக்குத் தெரிந்த/படித்த சில தமிழ் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஆண்டாள் பாடல்களில் சொல்லலாம் என்ற சிறு முயற்சி ..


ஆண்டாளின் காலம் இன்ன தான் என கூறும் அளவிற்கு எனக்கு அருகதை இல்லை. வைஷ்ணவ குருபரம்பரைகள் படி, ஆழ்வார்களின் காலத்தை இது தான் என குறிக்க முடியாது., மிகவும் முற்பட்டது என்கிறது. இராகவையங்கார் உட்பட பலரும் பல்வேறு ஆராய்ச்சி செய்துள்ளனர். என்னைப் பொருத்தவரை, பெரியாழ்வார்-ஆண்டாள் இருவரும் 5-ம் நூற்றாண்டின் பிற்பகுதியோ, 6-ம் நூற்றாண்டின் முற்பகுதியோ இருக்கலாம். ஏழாம் நூற்றாண்டில் திருமங்கை ஆழ்வார் வந்துவிட்டபடியால் இவர்கள் அதற்க்கு வெகு முந்தியவர்களாய் இருப்பார்கள். இவர்களின் மொழி நடைகளும், இலக்கண வகைகளும் நம்மாழ்வாருக்கு பிந்தையதையும், திருமங்கை ஆழ்வாருக்கு முந்தையதையும் இருப்பதாய் அமைகிறது.

பெரியாழ்வார் பற்றி பிறிதொரு சமயத்தில் விரிவாய் எழுத வேண்டும். இப்போதைக்கு அவரின் பெண்/சிஷ்யை ஆண்டாள். இவருக்கு 'கோதா' என்றே திருநாமம் இட்டதாய் சொல்லப்படுகிறது. இதற்க்கு மாலை என்ற  பொருள்உள்ளதால் இப்பெயர் வைத்திருக்கலாம் என்றாலும் வேத காலத்தில் 'கோதா' என்ற சாமவேத பாண்டித்யம் பெற்ற பெண் ஒருவரின் பெயரையே இட்டதாயும் சொல்லலாம்.. 'வேத தொழிலாளர்கள் வாழ் வில்லிபுத்தூர்' என்பதனால் பெரியாழ்வார் இப்பெயர் வைத்தலில் ஆச்சர்யம் இல்லை. இவர்களின் தமிழ் புலமையை ஆராயக் கூடாது என்று வைணவ முறை சொன்னாலும், அந்த தமிழில் உள்ள இனிமையை,நடையை கண்டிப்பாக மேடையேற்ற வேண்டும்.





அதற்க்கு முன் இவர்கள் வாழ்ந்த இடத்தை கொஞ்சம் நோக்க வேண்டும். இருந்தது பாண்டிய நாடு. அதாவது கடைச்சங்க காலம். ஆம்! மொழிக்கு சங்கம் வைத்து வளர்த்ததும் இந்த நாட்டில், அதுவும் என் ஊரில் தான்.. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தெற்க்கே குமரிக்கடல் அருகில் இருந்த ஒரு பெரிய நில பரப்பில், இரண்டு ஆறுகளுக்கு நடுவில், வடமதுரையின் பரத வம்சத்தவரின் வாரிசுகளால் தெற்கே 'மதுரை' என்ற நாடு உருவாக்கப்பட்டது. முதல் சங்கம் 549 அறிஞர்களும், ஏழு பாண்டிய மன்னர்கள் உட்பட 4449 தமிழ் புலவர்களுடன் திகழ்ந்தது. தொல்காப்பியம், முதுநாரை, பரிபாடல் முதலான நூல்கள் உருவாயின. பின் இடை சங்க காலம் 3700 ஆண்டுகள் இருந்தது. ஐந்து பாண்டிய மன்னர்கள் உட்பட 3700 கற்றறிந்த தமிழ் புலவர்களால் அலங்கரிக்கப்பட்டு, கலி, குருகு, அகவல் முதலானவை உருவாயின.

இதையும் கடல் கொண்டுபோக, பாண்டியன் முடத்திருமாறன் தற்போது இருக்கும் மதுரையின் சற்றே தெற்கே மதுரையை வைகை நதியின் கரையில் நிர்மாணித்தான். இதில் வந்தது கடைச் சங்கம். இப்போ நமக்கு தேவையானது. இதில் 49 அறிஞர்கள், 449 புலவர்களும் இருக்க, எட்டுத்தொகை - பத்துப்பாட்டு நூல்களும் உருவாயின. இதன் முடிவில் பக்தி இலக்கியங்கள் தோன்றியிருக்கலாம். பாண்டிய நாட்டை ஏழு கூற்றங்களாகவும், 45 நாடுகளாகவும் பிரித்து, அவற்றில் ஏழு குழுக்களாக பிரித்து 'வளநாடு' என்று பெயரிட்டனர் நிர்வாக வசதிக்காக. இதில் (45 ) ஒரு நாடாக இருப்பது 'திருமல்லி வளநாடு'.. நம் பெரியாழ்வார், ஆண்டாள் அவதரித்த நாடு. இன்றும் 'திருமல்லிவளநாடு வாழியே' என்று நாங்கள் தினமும் 'ஆண்டாள் வாழிதிருநாமத்தில்' சொல்வதுண்டு, ஆண்டாளின் மீதும், அவர் தந்த தமிழின் மீதுள்ள பற்றினால். இப்போது கொஞ்சம் தெளிவாகும் இவர்களின் தமிழ் எப்படி உன்னதமானது என்று.. அவற்றை இன்றைய கால ஓட்டத்தில் காண்பது கூடாது.. மேலும், நான்காம் சங்கம் அமைத்தவர்களில் முக்கியமான 'செந்தமிழ்' நாராயண ஐயங்கார் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்தவர் என்பதும் இந்த ஊருக்கும்-தமிழுக்கும் உண்டான தொடர்பை அறிவிக்கும். என்னுடைய கொள்ளு பாட்டனார் திரளி ஸ்ரீ திருமலை ஐயங்கார்  செந்தமிழ் ஆசிரியரிடம் பயின்று நான்காம் தமிழ் சங்கத்தில் இருந்திருக்கிறார்.

ஆண்டாள் இரண்டு உயர்ந்த நூல்களைக் கொடுத்துள்ளார் தமிழ் இலக்கணம், தொன்மை மாறாமல் தன் தந்தையின் வழி கொண்டு. திருப்பாவை - இது பாவை நோன்பு பற்றியது என்று அவரே அறிவிக்கிறார் (நாமும் நம் பாவைக்கு.. (2 ) என்கிற வரிகளில்). சரி., இது தமிழர்களுக்கு ஏற்புடையதா? என்று ஒருவட்டம் கூறலாம். கண்ணனை அடைய ஆயர்கள் நோன்பு இருந்தபடிக்கு ஆண்டாளும் இருக்கிறார் என்று வைணவம் கூறுகிறது. இதோ, தமிழ் இலக்கிய சான்று.. மேலே கூறிய பாடல்கள், சங்க இலக்கியத்தில் பாவை விரதம் பற்றி கூறுகிறது. பெண்கள் மார்கழி பௌர்ணமி தொடங்கி , தை பௌர்ணமி வரை பொய்கைகளிலும், சுனைகளிலும் நீராடி பாவை நோன்பு இருந்தனர். இதை 'தைந்நீராட்டல்' என்கிறது மேலுள்ள பரிபாடல். ஆண்டாள் செய்வதும் அதுவே.. அவரே தன் முதல் பாடலில் சொல்கிறார், 'மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்' என்று.. இது தமிழரிடத்திலும் இருந்திருக்கிறது.

ஒரு வைணவ தமிழராய் ஆண்டாள் பயணிக்கிறார். திருப்பாவை ஒருவகை 'கலிப்பா' - எட்டடிநாற்சீர் ஒருவிகற்ப கொச்சகக்கலிப்பா. ஒரு நாளைக்கு ஒரு பாடல் வீதம் முப்பது பாடல்கள் இலக்கணம் மாறாமல்.
சில வியந்து பார்த்தது..
* இவருக்கு முன் தோன்றிய மற்றை ஆழ்வார்கள் தாலாட்டு பாடினாலும், 'பாவை பாட்டு' என்ற பெயரில் துயில் எழுப்பும் பாசுரம் பாடுகிறார், இறைவனுக்கும், அடியார்க்கும்.

* மார்கழி என்று ஒரு தமிழ் மாதத்தின் பெயர் கொண்டு தொடங்குவது வேறுயாரும் செய்யாதது.

* தீ/நெருப்பு தான் மற்றைய பூதங்களை தன்னகத்தே அடக்கும், ஆதலால் 'தீயினில் தூசாகும்' என்கிறார் ஏனைய பஞ்ச பூதங்களைக் கூறாமல்.

* மூன்று அடி கேட்ட வாமனன் விஷ்ணுவை மூன்று இடங்களில் கூப்பிடுகிறார் - 'ஓங்கி உலகளந்த', ' அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த'  'அன்று இவ்வுலகம் அளந்தாய்'

* நல்ல மழை பொழிவதும், நல்ல கணவன் அமைய வேண்டுவதும் பாவை நோன்பு என்று பரிபாடல் சொல்வது போல், 'ஆழி மழை' பாசுரத்தால் மழை வேண்டுகிறார், அதுவும் 'வாழ உலகினில்' என்று 'மழை தீங்கின்றி' பெய்ய வேண்டுகிறார்..

* தமிழுக்கே உண்டான சிறப்பு ழகரம் 11 இடங்களில் கையாளுகிறார். 'ஆழி, மழை, ஆழியுள், ஊழி, பாழியன், ஆழிபோல், தாழாதே, சர மழை,  வாழ, மார்கழி நீராட, மகிழ்ந்து'

* இது போல் ழகரத்தை இவரது தந்தை பெரியாழ்வார் ஒன்பது இடங்களில் சொல்கிறார் - குழலிருண்டு,குழல்முழைஞ்சு, குமிழ்த்து, கொழித்திழிந்த,குழல்முழவம்,விரித்ததமிழ்வல்லார்,குழலைவென்ற.. இதற்க்கு மேல் இவர்களின் கவித்துவத்தை, தமிழ் ஆளுமையை என்னவென்று சொல்வது..

*  பாடுதல் என்ற ஒரு செயலை முப்பது பாடல்களிலும் கொண்டுவருவது சிறப்பு. பதிமூன்று இடங்களில் பாடுதல் பற்றி குறிப்பிடுகிறார். 'பரமன் அடி பாடி' என்று தொடங்கி 'பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சன்மானம்' என்பது வரை..

* "பாடிப் பறை கொண்டு" என்ற இடத்தில் ஒரு விஷேஷ சந்தி காணலாம். 'பாடி பறை கொண்டு' என்றால் ஒரு அர்த்தமும், 'பாடிப் பறை கொண்டு' என்பதால் மற்றொரு அர்த்தமும் வரும். புணர்ச்சி/சந்தி இலக்கணத்தில் இது 'தோன்றுதல்' வகை. ஒரு மெய் எழுத்து தோன்றியது ஒரு விசேஷ அர்த்தம் தர என்பதை அப்படி அமைத்திருக்கிறார் ஆண்டாள். நிலைமொழியில் உயிர் ஈறும், வருமொழியில் மெய் முதல் வந்தாலும் சந்தி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், பாடப்படும் விஷேச அர்த்தம் கருதி, 'ப்' என்ற சந்தி சேர்க்கிறார். அதாவது பாடுதலையே ஒரு பறை(பலன்)யாக கேட்கிறார்.

* பிற்காலத்தில் இது போன்று இயற்கை இருந்தது தெரியாமல் போகும் என்பதை கணித்து, பறவைகள், காலங்கள் பற்றி பாடலோடு சொல்கிறார்.
   * புள் (கருடன்), கீசுகீசென்று கத்தும் ஆனைச் சாத்தன், கறவைகள், குயிலினங்கள், இளஞ்சிங்கம்
   * 'வெள்ளைவிளி சங்கின் பேரரவம்', 'ஆனைச் சாத்தன் கலந்து பேசின பேச்சரவம்',  'எருமை  சிறு வீடு மேய்வான்', 'தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய', 'கணங்கள் பல கறந்து', 'நினைத்து முலை வழியே நின்று பால் சோர',  'வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று', 'செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய்கூம்பின', 'தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்' என்று விடியற்காலை முதல் நடக்கும்  ஒவ்வொரு செயலையும், இயற்கையோடு நம் இணைந்த வாழ்வையும் அற்புதமாய் பாடல்கள் ஆறு முதல் பதினைந்து வரை விவரிக்கிறார்.

* 'பறை' என்ற சொல் அதிகஅளவில் கையாளப்படுகிறது வேறுவேறு அர்த்தங்களில்.. ஆனால் வைணவ உரையாசிரியர்கள் சொல்வது 'கண்ணனை அடைவது'..

* ' சிம்ம கர்ஜனை' என்ற வட மொழி சொல்லுக்கு தமிழ் மூலம் இல்லாமல், ஆண்டாள் 'முழக்கம்' என்று சொல்கிறார். 'மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு' என்ற படி.

* 'மெள்ள எழுந்து' என்று காலையில் மெதுவாய் எழவேண்டும்.. எப்படி என்று உரையாசிரியர்கள் சொல்வது 'கர்ப்பிணி தாய் எழுந்திருப்பது போல்'..
* கோவை, ஆற்றுப்படை, அந்தாதி, கலம்பகம், சதகம், உலா, பரணி, பிள்ளைத் தமிழ், தூது, மடல், பள்ளு, குறவஞ்சி, மாலை, பத்து, பதிகம் என்று சிற்றிலக்கிய வகைகளை தொல்காப்பியம் துணைகொண்டு பிரிக்கிறார்கள்.

* இவற்றில் ஆண்டாள் பத்து, பதிகம், தூது கொண்டு செய்கிறார். பத்து பாடல்கள் கொண்டது 'பத்து'; அதற்க்கு மேல் வருவது 'பதிகம்'.

* நாச்சியார் திருமொழி என்று ஒரு பிரபந்தம் பாட அதில் 11 பத்துக்களும், 3 பதிகங்களும் பாடியுள்ளார். மொத்தம் 143 பாடல்கள்.

* அன்னம், மயில், கிள்ளை (கிளி), மேகம், பூவை, பாங்கி, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு என்னும் பத்தும் தூது விடலாம் என்கிறது 'இரத்தின சுருக்கம்' என்ற நூல்.அந்த வழியில், 'விண்ணீலமேலப்பு' என்ற பத்தில் திருவேங்கடவனுக்கு 'மேகத்தை' தூதுவிடுகிறார்.

* தையொரு திங்கள், மாசி முன்னால், பங்குனி நாள் என்று தமிழ் மாதங்களை தன் பாடலில் குறிக்கிறார்.

* பிள்ளைத்தமிழ் என்பது ஒருவகை பிரபந்தங்களில் ஒன்று. அரசன், தெய்வம் ஆகியோரை குழந்தைகளாய்க் கொண்டு பாடுவது. காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் ஆகிய பத்து பருவங்கள் சொல்லலாம். பெரியாழ்வார் கண்ணனை குழந்தையாய்க் கொண்டு பிள்ளைத்தமிழ் இலக்கியம் பாடினார். ஆண்டாள் அவர் பாடாமல் விட்ட 'சிற்றில்' பருவத்தை 'நாமமாயிரம்' என்ற பத்தில் பாடுகிறார் 'சிற்றில் வந்து சிதையாதே' என்று கண்ணனிடம் 'தன் மணல் வீடுகளை கலைக்காதே'என்று பிள்ளைத் தமிழாய்ப் பாடுகிறார்.

* 'வாரணமாயிரம்' என்ற பதிகத்தில் இந்து முறை திருமணங்களை விரிவாய்ச் சொல்கிறார் - "தோரணம் நாட்டி, பரிசுடைப் பந்தர்க்கீழ், மந்திரக் கோடி உடுத்தி மணமாலை அந்தரி சூட்டி, காப்புநாண் கட்டி, மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றி, தீவலம் செய்து, அம்மி மிதித்து, பொறிமுகம் தட்டி, மஞ்சமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்".. இதுவே இந்து திருமண சட்டத்திலும் இப்போதுள்ள சடங்குகள். இது போல் விரிவாய் எந்த தமிழ் இலக்கியமும் சொல்லவில்லை. பின்னாளில் வந்த கந்தரநுபூதி மட்டும் கொஞ்சம் சொல்கிறது.

* பெருந்திரளான மக்களின் வாழ்வியல் சார்ந்த நிகழ்வுகளையும், அன்றாடம் பயன்படுத்தப்படும் செய்திகளையும்/சொற்களையும் ஆண்டாள் அந்தக் காலத்தில் சொல்வது, அதுவும் அவரின் ஐந்து வயதில் சொல்வது பக்தியல்லால் வேறு என்ன. அவர் சொல்லும் சில சொற்கள் - 'புழக்கடை', 'முள்ளுமில்லா சுள்ளி', 'மேலாப்பு', 'கண்ணாலம்', 'எல்லே', 'கட்டி அரிசி'  என்பன பல இன்றும் புழக்கத்தில் இருப்பது அவரின் தெய்வத்தன்மையே.

இது போல் இன்னும் பல தமிழ் சார்ந்த விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படியாக ஆண்டாள் அரங்கனையும், தமிழையும் ஆண்டாள். அவற்றதோடு நம்மையும் ஆள்கிறார் என்று சொல்லவும் வேண்டுமோ?.. 'இவையும் சிலவே' என்பது போல மேலும் பகிர்வோம் முடிந்தபோது அவனதருளால். இவையாவும் காலத்தால் அழிக்க முடியாத அருள் தங்கிய ஈரச் சொற்கள். நம்பிள்ளை தன் திருவாய்மொழி வ்யாக்யானத்தில் இவ்வாறு முடிப்பார் - 'ஆழ்வார்க்குப் பின்பு நூறாயிரம் கவிகள்போறும் உண்டாய்த்து. அவர்கள் கவிகளோடு கடலோசையோடு வாசியற்று'.. இன்றைய நிலைக்கு அது தான் சிறந்த வரிகள். ஆழ்வார்கள், நாயன்மார்கள், சங்க  புலவர்கள் போன்றோரின் இலக்கியங்கள் என்றும் நிலைத்து நிற்பவை, மற்றவை கடலோசையோடு கரைந்து போகும் தன்மை உடையது கண்கூடு..!

--கிரி பிரசாத் கண்ணன், திரளி.