Tuesday, January 14, 2014

பெண்பிள்ளை வார்த்தைகள்

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
     பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல
     மாதர் அறிவைக் கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக்
     காட்சிக் கெடுத்திட லாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம்
     பேதைமை யற்றிடும் காணீர்!

                     மேல சொன்ன பாரதி வரிகள் இன்னிக்கு நிலைமைய தெளிவா கட்டறது. பெண்ணுக்கு ஞானம் பிறக்கும் போதே இருந்து அதை இந்த சமூகம் தான் கெடுத்துக் கொண்டிருக்கிறதுன்னு தெளிவா, 'பெண்ணுக்கும்' என்று எல்லாவற்றோடு சேர்த்துச் சொல்லாம, ஒரு உயர்ந்த நிலையில் பெண்ணை வைத்து தான் சொல்லறான்.. கண்டிப்பா இன்றைய சமூகம் பெண்ணை பேணி வளர்க்கவில்லை என்றாலும் பெண்ணியம் என்று மட்டுமே கூறி ஆண்களை விரோதிகளைப் போல் காணாமல் இருந்தாலே மகிழ்ச்சி.

                     என்னளவில் சினமா, நாடகம் தான் இதற்க்கு பொறுப்பு.. மக்களிடம் பெண்ணைப் பற்றி நல்ல விஷயமாகவே கொண்டு போகலை.. ஆனாலும் பெண்கள் மகளிர் (!) தினம் (women's day) என்று ஒன்று வைத்து ஆண்கள் எல்லாரும் பெண்களைத் தாழ்த்துவது போல சில பெண்ணியவாதிகள் முழங்குகிறார்கள்.அவர்கள் யாருக்கும் எந்தவித வரலாறும் தெரிவதில்லை, தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. 2 வாரங்களுக்கு முன்னாடியே HR-ரிடமிருந்து மெயில்  மேல் மெயில். ஆண்கள் இல்லாத சிறு, சிறு கூட்டங்கள், வழக்கம் போல ஒரு பாட்டு-டான்ஸ் கச்சேரிகள், ட்ரீட்-டீம் லஞ்ச்,மற்றபடி பொழுதைக் கழிக்க என்னென்ன உண்டோ இத்யாதிகள்; காலை முதல் வாழ்த்து மெயில்கள். இதுலயே எனக்குத் தெரிந்து ஒரு 2-3 நாட்கள் ஓடிவிடும். நம் கலாச்சாரத்திற்கு முரண்பட்ட விழாக்களைக் கொண்டாடத்துவங்கிவிட்டோம். அதில் இந்தபெண்கள் மகளிர் (!) தினம் (women's day) ஒன்னு. ஒரு நாளில் இந்தக் கொண்டாட்டத்தின் மூலம் மட்டுமே எதுவும் முன்னேறப் போவதில்லை. நம்முடைய வரலாறைப் படித்து சிலவற்றை மாற்றினாலே போதும்.

                       சங்ககாலமோ, வேதகாலமோ பெண்ணை சம தளத்தில் தான் வைத்தனர். பாரதி சொன்ன சில மூடர்கள் தான் அதை திரித்தனர்.  பெரும் புலவர்கள், அரசவையில் ஆலோசனை சொல்பவர்கள் என்று உயர்ந்த நிலையில் பெண்கள் இருந்திருக்கிறார்கள்.. சங்கப் புலவர்களில் முதற் சங்கத்தில் 549 புலவர்களும், இரண்டாம் சங்கத்தில் 449 புலவர்களும், மூன்றாம் சங்கத்தில் 468 புலவர்களும் தமிழ் வ்ளர்த்திருக்கின்றனர். இந்த 1446 புலவர்களில் பெண்பாற் புலவர்கள் 32 பேர் இருந்திருக்கின்றனர். சங்கஇலக்கியம், சமய இலக்கியம் என்று துறைகள்தோறும் பெண்கள் இருந்திருக்கிறார்கள்.. ஆண்டாள், காரைக்கால் அம்மையார், ஒவ்வையார், நச்சினார்கினியார், ஒக்கூர் மாசாத்தியார், வெள்ளி வீதியார், வெண்ணிக் குயத்தியார் என்று பலரும்.. அண்மையில் படித்த 'திருவரங்கன் உலா'வில் மேற்கோள் காட்டப்பட்ட 'மதுரா விஜயம்' என்ற வரலாற்று நூலும் கங்கா தேவி என்ற பெண்ணால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. இப்படிப் பல சொல்லலாம்.

                         சில தினங்களுக்கு முன் படித்தது - வைணவம் சம்பந்தப்பட்டது. சாதாரண குடும்பத்தில் இருக்கும் பெண்களும் எவ்வாறு படித்து, தேர்ந்த அறிவோடு இருந்தார்கள் என்று. அந்த நாளும் வந்திதாடோ என்று சிலநேரம் நினைக்கத் தோன்றுகிறது!


                       1. நவதிருப்பதி திவ்ய தேசங்களில் ஒன்று திருப்புளிங்குடி. நம்மாழ்வார் 12 பாசுரங்களினால் மங்களாசாசனம் செய்த கோவில். காய்சின வேந்தர் (காசினி வேந்தர்), பூமிபாலர் என்ற பெயர்களில் பள்ளி கொண்ட நிலையில் கிழக்கு நோக்கிய கோலத்துடன் காணப்படுகிறார்.இத்தலத்திலுள்ள லக்ஷ்மி தேவி (மலர்மகள்), பூமிப்பிராட்டி(நிலமகள்) , நாச்சியார்களின் திருவுருவங்கள் வேறெங்கும் காணமுடியாத அளவிற்கு மிகப் பெரியவைகள். அத்தோடு நீண்ட கர்ப்பக்க்ரகம். வேறு கோயில்களில் காணவியலாத காட்சியாக பெருமாளின் திருவயிற்றிலிருந்து (மற்ற இடங்களில் நாபியிலிருந்து தான் பிரமன் பிறந்ததாக இருக்கும்) செல்லும் தாமரைக் கொடி, சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரையோடு சேர்ந்து கொள்வது போன்ற அரியகாட்சியாக அமைக்கப்பட்டுள்ளது.சயன திருக்கோலத்தில் உள்ள திருமாலின் ஒரு பாதத்தை கருவறையைச் சுற்றி வருகையில் சுவற்றின் வெளிப்புறமுள்ள ஒரு துவாரம்/சன்னலின் வழியாகச் சேவிப்பதற்கு ஏற்றாற்போல் அமைந்துள்ள இக்கட்டிட அமைப்பு பிற தலங்களில் அமையப் பெறாத ஒன்றாகும்.


                   இந்த திவ்ய தேசத்தைத் தரிசிக்க ஸ்ரீமத் இராமனுசர் ஒரு முறை யாத்திரை சென்றிருந்தார் அவரின் கோஷ்டியார்களுடன். நவ திருப்பதிகளில் உள்ள மற்ற திவ்ய தேசங்கள் தரிசித்துவிட்டு திருப்புளிங்குடிக்கு எவ்வளவு தூரம் என்று தெரியாமல் அனைவரும் திகைத்து இருந்தனர். நடந்து செல்லும் வழியில் கண்ட ஒரு சிறுமியிடம் இராமானுஜர் வழி கேட்டார். அதற்க்கு அந்தச் சிறுமி கீழே உள்ள திருவாய்மொழி பாடலைக் கூறி, நம்மாழ்வார் 'கூவுதல் வருதல்' என்று சொல்வதால் திருப்புளிங்குடி ஆழ்வார்திருநகரியிலிருந்து கூப்பிடும் தூரம் என்ற விளக்கமும் தந்துள்ளார். இதைக் கேட்ட அனைவரும் சிறு பெண்கள் கூட இந்த ஊரில் இவ்வளவு முதிர்ந்த ஞானத்தோடு இருப்பது கண்டு வியந்தனர். (இந்த இரண்டு ஊருக்கும் உண்டான தூரம் ~3 மைல்).

கொடுவினைப் படைகள் வல்லையாய்
         அமரர்க்கு இடர்கெட அசுரர்கட்கு இடர் செய்
கடுவினை நஞ்சே என்னுடையமுதே
          கலிவயல் திருப்புளிங்குடியாய்
வடிவினை இல்லா மலர்மகள் மற்றை
          நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடுவினையேனும் பிடிக்க நீ ஒருநாள்
          கூவுதல் வருதல் செய்யாயே! (திருவாய்மொழி 9.2.10)

(கொடுந் தொழில் புரியவல்ல ஆயுதங்களை கொண்டு காரியஞ்செய்ய வல்லவனே! தேவர்களுக்கு இடர் கெடும்படியாக அசுரர்களுக்கு துக்கத்தை வினைக்குமிடத்து விரைவில் முடிக்கவல்ல நஞ்சானவனே! எனக்குப் பரம போக்யமான அம்ருதமே! செழித்த வயல் சூழ்ந்த திருப் புளிங்குடியில் வாழ்பவனே! வடிவழகில் ஒப்பற்ற பெரிய பிராட்டியாரும் அப்படிப்பட்ட பூமிப் பிராட்டியாரும் வருடுகின்ற ஸுகுமாரமான திருவடியை தௌர்ப்பாக்ய சாலியான நானும் வருடுமாறு ஒரு நாளாகிலும் என்னை யழைத்துக் கொள்வதோ வந்தருள்வதோ செய்ய வேணும்)


                 2.  ஸ்ரீமத் ராமாநுஜர் ஒரு சமயம், ஸ்ரீமதுரகவியாழ்வார் அவதாரம் செய்த திருக்கோளூர் செல்கிறார். அப்பொழுது எதிரே, ஒரு சாதாரண குடும்ப பெண்  ஊரை காலி செய்துவிட்டு வெளியே வருவதைக் கண்ட ராமாநுஜர், அவளை யாரென்று விசாரிக்க, அவள் திருக்கோளூரிலிருந்து வருவதாகச் சொன்னாள்.
                         ‘எல்லாரும் புகும் ஊர் உனக்கு புறப்படும் ஊராயிற்றே’ என்று ராமாநுஜர் கேட்க, அவள் -'தான் எளியவள்', என்று எண்பத்தோரு விளக்கங்கள் சொல்கிறாள் . அந்த விளக்கங்களே படிக்கச் சுவையானவை.அதை “திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள்” என்று நமக்கு தொகுத்து கொடுத்துள்ளர்கள். ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு வரி தான். ஆனால் அதில் உள்ள கதைகள், அதன் அர்த்தங்களை நாம் புரிந்து கொண்டால் , ஒவ்வொரு வரியும் , புராணத்தில் மற்றும் வரலாற்றில் இடம் பெற்ற ஒரு கதாப்பாத்திரத்தை பற்றியதாக இருக்கும் . ஒவ்வொன்றின் பின்னால் ஒரு கதை இருந்திடும் என்பதை அறியலாம். இதோ அந்த பொக்கிஷம்


1.அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே
2.அஹமொழித்து விட்டேனோ விதுரரைப் போலே
3.தேஹத்தை விட்டேனோ ருஷி பத்நியைப் போலே
4.தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5.பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6.பிண விருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7.தாய்க்கோலஞ் செய்தேனோ அநஸூயைப் போலே
8.தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9.மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10.முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே
11.பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே
12.எம்பெருமான் என்றேனோ பட்டர் பிரானைப் போலே
13.ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே
14.நான் (அவன்) சிறியன் என்றேனோ ஆழ்வாரைப் போலே
15.ஏதேனும் என்றேனோ குலசேகரர் போலே
16.யான் ஸத்யம் என்றேனோ க்ருஷ்ணனைப் போலே
17.அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே
18.அந்தரங்கம் சொன்னேனோ த்ரிஜடையைப் போலே
19.அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே
20.அஹம் வேத்மி என்றேனோ விசுவாமித்ரரைப் போலே
21.தேவு மற்றறியேன் என்றேனோ மதுரகவியைப் போலே
22.தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியார் போலே
23.ஆழி மறை என்றேனோ வசுதேவரைப் போலே
24.ஆயனை வளர்த்தேனோ யசோதையாரைப் போலே
25.அனுயாத்திரம் செய்தேனோ அணிலங்களைப் போலே
26.அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே
27.ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே
28.அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே
29.கர்மத்தால் பெற்றேனோ ஜனகரைப் போலே
30.கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கையார் போலே
31.குடை முதலானது ஆனேனோ அனந்தாழ்வான் போலே
32.கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே
33.இளைப்பு விடாய் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே
34.இடைகழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே
35.இரு மன்னர் பெற்றேனோ வால்மீகியைப் போலே
36.இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்பொடியார் போலே
37.அவன் உரைக்கப் பெற்றேனோ திருக்கச்சியார் போலே
38.அவன் மேனி ஆனேனோ திருப்பாணார் போலே
39.அனுப்பி வையும் என்றேனோ வசிஷ்டரைப் போலே
40.அடி வாங்கினேனோ கொங்கிற்பிராட்டியைப் போலே
41.மண் பூவை இட்டேனோ குரவநம்பியைப் போலே
42.மூலம் என்று அழைத்தேனோ கஜராஜனைப் போலே
43.பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே
44.பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே
45.வைத்து இடத்து இருந்தேனோ பரதனைப் போலே
46.வழி அடிமை செய்தேனோ லக்ஷ்மணனைப் போலே
47.அக்கரைக்கே விட்டேனோ குஹப்பெருமாளைப் போலே
48.அரக்கனுடன் பொருதேனோ பெரிய உடையாரைப் போலே
49.இக்கரைக்கே சென்றேனோ விபீஷணனைப் போலே
50.இனியது என்று வைத்தேனோ சபரியைப் போலே
51.இங்கும் உண்டு என்றேனோ ப்ரஹ்லாதனைப் போலே
52.இங்கு இல்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே
53.காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே
54.கண்டு வந்தேன் என்றேனோ திருவடியைப் போலே
55.இரு கையும் விட்டேனோ த்ரௌபதியைப் போலே
56.இங்கு பால் பொங்கும் என்றேனோ வடுகநம்பியைப் போலே
57.இரு மிடறு பிடித்தேனோ செல்வப்பிள்ளையைப் போலே
58.நில் என்று பெற்றேனோ இடையாற்றூர் நம்பியைப் போலே
59.நெடுந்தூரம் போனேனோ நாதமுனியைப் போலே
60.அவன் போனான் என்றேனோ மாருதியாண்டான் போலே
61.அவன் வேண்டாம் என்றேனோ ஆழ்வானைப் போலே
62.அத்வைதம் வென்றேனோ எம்பெருமானாரைப் போலே
63.அருளாழி கண்டேனோ நல்லானைப் போலே
64.அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப் போலே
65.ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வாரியாண்டான் போலே
66.அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே
67.அநுகூலம் சொன்னேனோ மால்யவானைப் போலே
68.கள்வன் இவன் என்றேனோ லோகுருவைப் போலே
69.கடலோசை என்றேனோ பெரியநம்பியைப் போலே
70.சுற்றி கிடந்தேனோ திருமாலையாண்டானை போலே
71.சூளுறவு கொண்டேனோ கோட்டியூரைப் போலே
72.உயிராய பெற்றேனோ ஊமையைப் போலே
73.உடம்பை வெறுத்தேனோ நறையூராரைப் போலே
74.என்னைப் போல் என்றேனோ உபரிசரனைப் போலே
75.யான் சிறியேன் என்றேனோ திருமலைநம்பியைப் போலே
76.நீரில் குதித்தேனோ கணபுரத்தாளைப் போலே
77.நீரோருகம் கொண்டேனோ காசிசிங்கனைப் போலே
78.வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே
79.வாயில் கையிட்டேனோ எம்பாரைப் போலே
80.தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே
81.துறை வேறு செய்தேனோ பகவரைப் போலே