Sunday, December 17, 2017

சங்கத் தமிழ்மாலை - திருப்பாவை

 பட்டர் பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை: 

       கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்*
        சோதி மணி மாடம் தோன்றும் ஊர்*
        நீதியால் நல்ல பக்தர் வாழும் ஊர்*
        நான்மறைகள் ஓதுமூர்*
        வில்லிபுத்தூர் வேதக் கோனூர்**

        பேதநன்கறி வார்களோடிவை பேசினால்பெரி திஞ்சுவை
        யாமொன்றறி யாதபிள்ளைக ளோமைநீநலிந் தென்பயன்
        ஓதமாகடல் வண்ணாஉன்மண வாட்டிமாரொடு சூழறும்
        சேதுபந்தம் திருத்தினாயெங்கள் சிற்றில்வந்து சிதையேலே
                                                            (நாச்சியார் திருமொழி - 2.7)

                                     பெரிய வீதியில் 'வெள்ளை நுண் மணல் கொண்டு தெருவணிந்து  வெள்வரைப்பதன்  முன்னம் துறை படிந்து' எல்லாம் கடந்து பல வருஷங்கள் ஆகிறது.. அகண்ட வீதியில் போட்டி போட்டு அம்மா போட்ட கோலத்திற்கு வண்ணம் தந்து ( காப்பி தூள் காய வைத்து, பூசணிப் பூவை சாண உருண்டையில் வைத்து), அதைப் பாதியில் நிறுத்தி மார்கழி பஜனை சேர்ந்து, திருப்பள்ளியெழுச்சி பொங்கல் வாங்கி வீடு வந்த அந்த துவரிமான் டிசம்பர் விடுமுறை நாட்களை மறக்க முடியாது. இப்போது காலம் மாறி, (நிஜ) பஜனை கூட வாட்சப் குழுவிலோ, கான்பெரென்ஸ் காலிலோ நடக்கலாம்.. அது தொலைவில் இல்லை.. இரண்டு நாள் முன்பாகவே இருக்கும் வாட்சப், முகநூல் நண்பர்கள்-குழுக்கள் எல்லாம் மார்கழி பற்றி பழைய புதிய செய்திகளைப் அனுப்பத்தொடங்கிவிட்டார்கள். இதுவும் ஒருவகையில் கூடி இருந்து குளிர்ந்து தான்.ஒரு மாதம் முழுதுமே ஒரு ஆழ்வார், ஒரு தமிழ் பதிகத்திற்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டது இது ஒன்று தான். ஒரு காரணம் ஆண்டாள், மற்றொன்று அவரின் அண்ணனான இராமானுசர் என்னும் மாமுனி செய்த உபகாரம்ன்னு சொல்லலாம். நான் தினமும் நெற்றில் திருநாமம் இட்டு செல்வதால் (அமெரிக்கா கிளைண்ட் லொகேஷன் உட்பட) சில ஆந்திர-தெலுங்கு நண்பர்கள் திருப்பாவை பற்றி பேசுவதுண்டு. அதில் ஒருவர் சொன்னபோது ஆச்சர்யப்பட்டேன் - ' திருப்பாவையை சந்தை முறையில், தீக்ஷை எடுத்து கத்துக்கணும் என்று என் வீட்டில் சொன்னார்கள்; யாராவது சொல்லித்தர இருக்கிறார்களா?' - சொன்னவர் தெலுங்கு நண்பர். நானோ பாட்டையே புத்தகம் வைத்து மனனம் செய்தவன். கிருஷ்ண தேவராயர் 'ஆமுக்த மால்யதா' என்று ஒரு இலக்கியமே தெலுங்கில் எழுதி ஆண்டாளின் மீதான தன் பக்தியைக் காட்டினார். இது நம் தமிழில் இருக்கும் ஐயம்பெரும் காப்பியம் போல் தெலுங்கில். வழக்கம் போல் தமிழில் உள்ள பக்தி இலக்கிய பெருமையை அடுத்தவர் சொல்லித் தெரியவேண்டிய நிலையில் இன்றைய சமூகம் உள்ளதென்பது வேறு.

இதை எழுதும் போது, சிலநாள் முன் நாசா சொன்ன 'இராமர் பாலம்' பற்றிய வீடியோ வந்தது வாட்சப் மூலம். இதற்க்கு 'சேது பந்தம்' என்று மங்களாசாசனம் செய்ததே ஆண்டாள் தான். இன்றும் அரசாங்க முத்திரை ஆண்டாள் கோபுரமே, ஆண்டாள் சொன்ன பேரே அந்த திட்டத்திற்கு. தமிழில் பெண்களுக்கு ஏழு பருவங்கள் சொல்வதுண்டு - பேதை, பெதும்பை,மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை,பேரிளம் பெண். இதில் பேதை பருவம் எட்டு வயது வரை.. ஆண்டாள் பேதை பருவத்திலேயே சொன்னது திருப்பாவை- நாச்சியார் திருமொழி. அது எப்படி சாத்தியமென்னில்,
               * அவரே பூமிபிராட்டியின் அவதாரம். இதை நாச்சியார் திருமொழியில் சொல்கிறார் - "பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்குப் பண்டொருநாள் மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம் தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசியிருப்பனகள்"  என்று வராஹர் தனக்கு உபதேசித்த வார்த்தைகளை சொல்கிறார்..
               * விஷ்ணுவை தன் சிந்தையில் எப்போதும் வைத்திருக்கும் பெரியாழ்வார் திருமகளாய் பிறந்தது. அதாவது அவரையே தனக்கு ஆச்சார்யனாய்ப் பற்றி, அவரிடம் தான் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக, ஆழ்வாருக்குப் ப்ரியமான எம்பெருமான் (விஷ்ணு) மீது பக்தியை வளர்த்துக் கொண்டு, கண்ணனைக் கொண்டாடியதோடு மட்டுமில்லாமல், தானே இடைப் பெண்ணாய் மாறி பாவை நோன்பும் நோற்றாள். இது விஷயமாக ஆண்டாளே நாச்சியார் திருமொழியில் சொல்வது ' வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டுமே '  என்று.

                      "ஹேமந்தே ப்ரதமே மாஸே.." என்ற ஸ்ரீமத் பாகவத புராண ஸ்லோகத்தில் ஆயர்பாடிச் சிறுமிகள் கண்ணனை வேண்டி கார்த்தியாயினி தேவியைக் குறித்து விரதம் இருந்தார்கள் என்று சொல்கிறது. அதையே தான் இருக்கும் தெற்குக் கோடியில் அனுஷ்டித்தாள் ஆண்டாள். எப்படி என்று பெரியவாச்சான் பிள்ளை திருப்பாவை அவதாரிகையில் சொல்கிறார் "அநுகாரம் முற்றி இடை நடையும், இடைப் பேச்சும், முடை நாற்றமும் தன்னடையே வந்து சேர்ந்தது".. அதாவது பக்தி (காதல்) மேலிட்டு,எல்லாவற்றிலும் 'நானே தானாயிடுக' என்ற நிலை.. இதே போல் நம்மாழ்வாரும் 'கடல் ஞாலம் செய்தேனும் யானே' என்ற திருவாய்மொழி முழுதும் அனுபவிக்கிறார். ஆண்டாளைப் பொறுத்தவரை, ஸ்ரீவில்லிபுத்தூர் தான் 'ஆயர்பாடி' (இது தென் மதுரையின் திருமல்லி வளநாடு, ஆகவே இது கோகுலம் ஆவதில் வியப்பில்லை); இங்குள்ளவர்களே ஆயர் குலத்தவர்கள்; வடபெரும் கோவிலுடையானே கண்ணன்; இவை எல்லாம் சேர்ந்த போது ஆண்டாளின், நடை, உடை, பேச்சு எல்லாம் மாறியது.. (பிராமணப் பெண்ணான ஆண்டாள் - கோழி அழைப்பது, எருமை சிறுவீடு என்றெல்லாம் தன் பாசுரத்தில் ஆயர் பேச்சுக்கள் பேசியது முதல்). இதெல்லாம் சரி, உடலின் நாற்றம் எப்படி மாறும் - அதீத பக்தியில் அதைப்பற்றிய நினைப்பே இருக்க 'முடை நாற்றம்' தோன்றியது..

சென்ற முறை திரளி போன போது 1935-ம் வருஷம் வெளியான ஒரு புத்தகத்திலிருந்து எடுத்தது



ஆழ்வார்கள் யாவரும் எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப்பெற்று, சம்சாரி சேதனர்களை அவர் தம் உறக்கத்துநின்று எழுப்பினார்கள்; ஆண்டாளோ தானே பூமிப்பிராட்டியானதால் தானே சென்று எம்பெருமானை எழுப்பிச் சேதனர் பால் அவனுக்குள்ள ரக்ஷண பாத்யதையை அறிவுறுத்தினாள். இதை "ஆழ்வார் எல்லாரும் எம்பெருமானிடத்திருந்து மயர்வற மதிநலம் அருளப் பெற்று நம்மை எழுப்பினார்கள் இந்த ஜீவாத்ம உஜ்ஜீவிக்கைக்காக. ஆண்டாள் நித்ய ஸூரியான படியால், எம்பெருமானை எழுப்பி நம்மை உஜ்ஜீவிக்கிறார் (நம்பிள்ளை திருவாய்மொழி, திருவிருத்த வ்யாக்யானம்) ". திருப்பாவை பெருமையை பலவாறும் வியக்கியானகர்த்தாக்கள் சொல்லியிருக்கிறார்கள் - 'வேதமனைத்திற்கும் வித்து கோதை தமிழ் ஐஐந்தும் ஐந்து' என்ற எளிய வரியில் சொல்லிவிடலாம். எம்பெருமான்-ஆச்சாயர் வைபவம் - பாகவத கைங்கர்யம் என்ற மூன்று முக்கிய நிலைகளில் திருப்பாவை பாடப்பட்டுள்ளது..இதை ஈட்டிலில் சொல்லப்பட்ட ஒரு கதையால் அறியலாம் - எம்பெருமானாரிடம் சிஷ்யர்கள் தேவரீர் திருப்பாவை வ்யாக்யாநித்தருள வேணுமென்னா நிற்க, அவர், “திருப்பல்லாண்டு எம்பெருமானுக்கு மங்களாசாசனஞ்செய்யும் ப்ரதம பர்வம் ஆரும் சொல்லலாம், திருப்பாவையோ பாகவத கைங்கர்யஞ்சொல்லும் சரம பர்வம் ஆராலும் சொல்லுப்போகாது” என்றாராம். எம்பெருமானார், மேலும், எம்பெருமானோடேயே எப்போதுமுள்ள நாய்ச்சிமாராலும் அவனோட்டை சம்பந்தத்தை ஆண்டாள் போலச் சொல்லவொண்ணாது, ஆழ்வார்கள் எல்லாரும் கூடினாலும் ஆண்டாள் போலச் சொல்லவோண்ணாது என்றாராம். (koyil.org)

ஊரின் பெருமையைச் சொல்லித் தலைக்கட்டமுடியாது.. இரண்டு ஆழ்வார்கள் அவதாரம் செய்தது. ஆயர்பாடியோடு ஒப்பீடும் படி தான் இந்த ஊர் இருந்தது என்பதற்கு பல மேற்கொள்கள் இருக்கின்றன.
** அன்னவயல் புதுவை - மென்னடை அன்னம் பறந்து விளையாடும் என்றவிடத்தில், எப்படி அன்னம் பால்-தண்ணீர் இரண்டையும் தனியாய் பிரிக்குமாப் போலே ஸ்ரீவில்லிபுத்தூர் மாந்தர்கள் எல்லாம் அன்னம் போல் எம்பெருமான்பக்கலில் மட்டும் தன்னை ஈடுபடுத்தினார்கள்.

** சீர்மல்கு ஆய்ப்பாடி என்று ஆய்ப்பாடிக்கு மங்களாசாசனம் செய்கிறார் ஆண்டாள் திருப்பாவையில்.. தான் ஆய்ப்பாடியாய்க் கண்ட ஸ்ரீவில்லிபுத்தூரும் அவ்விதமே என்பதனை மணவாள மாமுனிகள் 'பாரில் சீராரும் வில்லிபுத்தூர் மதியாரும் ஆண்டாள் தோன்றிய ஊர்' என்று தம் உபதேசரத்னமாலையில் சொல்கிறார். இதற்க்கு வ்யாக்யானம் செய்த பிள்ளை லோகம் ஜீயர்  "இவர்கள் தான் வாழ்வாக வந்துதித்தவர்களாகையாலே ஊர்களும் 'சீரும் செல்வமும் எங்கும் தழைத்திருக்கும் படி ஸம்பத் வ்ருத்தியை உடைய ஸ்ரீவில்லிபுத்தூர். அதாவது பொன்னும் மணியும் முத்தும் சேர்ந்தார்ப் போலே, பொன்னடியையுடைய ஸ்ரீவில்லிபுத்தூர் உறைவானையும், மணிவல்லி என்னும் படி ஸ்த்ரீரத்னமான நாச்சியாரையும், முத்தாகரமான சோதியில் அவதரித்து, 'இக்கரையேறி இளைத்திருந்தேன்' என்னும்படி ஒரு கரை சேர்ந்திருக்கிற முக்த ப்ராயரான ஆழ்வாரையும் உடைத்தாயிருக்கையாலே நிரவாதிக நித்ய ஸ்ரீயை உடையாதாயிருக்கை..... 'சீர்மல்கு ஆய்ப்பாடிச் செல்வத்திற்ப்போலே ஆழ்வாரும் திருமகளாரும் கோபஜந்மத்தை ஆஸ்தானம் பண்ணி குணானுபவைக யாத்திரையாய்ப் போருகையாலே 'மலிபுகழ்வண்குருகூர்' என்கிறபடியே கிருஷ்ண குணங்களாலே பூர்ணமாயிருக்கையைப் பற்றச் சொல்லவுமாம்"

திருப்பாவையின் அறிய கருத்து, செய்திகளை பலரும் வ்யாக்யானங்கள் செய்திருக்கிறார்கள்/செய்ய விழைந்திருக்கிறார்கள். அண்மையில் கேட்ட ஒரு உபன்யாசத்தின் சாரம்.. திருப்பாவை பாசுரங்களை மூன்று பகுதிகளாகப் பிரிக்கின்றனர் பூர்வர்கள். முதல் ஐந்து பாசுரங்கள், அடுத்த பத்து பாசுரங்கள், அடுத்த பதினைந்து பாசுரங்கள் என்று வகைப்படுத்தி அர்த்தம் சொல்லலாம். பெரியாழ்வார் சொல்வது போல் 'அப்போதைக்கப்போது என் ஆராவமுதமாய்' திருப்பாவை ஒவ்வொருமுறை படிக்கும் போதும் ஒரு விஷேச அர்த்தம் தரும், ஆனால் எல்லாம் ஒரே நேர் கோட்டில் செல்லும் - முடிவு 'இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாமாட் செய்வோம்'..

                               நம்மாழ்வார் முதல் பாசுரத்தில் பிரணவத்தை மறைத்து காட்டுகிறார் - உயர்வற-மயர்வற-அயர்வரும்; திருப்பாண் ஆழ்வார் மூன்று பாசுரங்களில் இதைக் காட்டுகிறார் - அமலன் - உகந்த - மந்தி எனத் தொடங்கும் பாசுரங்கள்... கம்பராமாயணமும், பரிபாடலும் - உலகம் என்றே தொடங்கும். ஆண்டாள் ப்ரணவத்தை விரித்துக் காட்ட திருப்பாவை முப்பதும் செப்பினாள். திருமந்திரம் என்பது சாஸ்திரம். அதில் ப்ரணவம் மந்த்ர ஷேசம். ப்ரணவம் அ-உ-ம என்ற எழுத்துக்களால் (குண சந்தி என்ற சம்ஸ்கிருத இலக்கணத்தால்) உருவானது. நாராயண உபநிஷத் இப்படிச் சொல்கிறது. "ப்ரத்யகானந்தம் பிரம்ம புருஷன் ப்ரணவஸ்யரூபம்|  அகார உகார மகார இதி|".. பரமபுருஷன் (பரமாத்மா) ப்ரணவ ரூபமாய் இருக்கிறார். அந்த ப்ரணவம் மூன்று எழுத்துக்களால் அமைகிறது. அகார உகார மகார ரூபமாய் இருக்கையாலே மூன்று அஷரமாய் இருக்கும்;
இவை ஓரோர் அஷரங்கள் ஓரோர் அர்த்தங்களுக்கு வாசகம் ஆகையாலே மூன்று பதமாய் இருக்கும்; இம் மூன்று பதமும் கூடி ஓர் அர்த்த விஷேஷத்தைக் கொடுக்கும். நம் திருப்பாவை, இந்த மூன்று அக்ஷரங்களை (எழுத்துக்களை) கொண்டதாய் இருக்கிறது என்று(ம்) அர்த்தம் காட்டப்படுகிறது.

முதல் ஐந்து பாசுரங்கள் - மார்கழி, வையம், ஓங்கி, ஆழிமழை, மாயனை எனத் தொடங்கும் பாசுரங்கள்..
  *  'அ'கார வாச்யனான எம்பெருமான் விஷ்ணுவைக் குறிக்கும். பாசுரங்கள் முழுதும் எம்பெருமான் பற்றியே வியாபித்து இருக்கும். அவன் ஒருவனே தஞ்சம் என்பதனை 'நாராயணனே நமக்கே' என்ற முதல் பாடலில் காட்டுகிறார்.
  * பகவதே விஷயம்- 'விண்ணோர்கருமணிக்கத்தை அமுதை' என்கிறபடி, நாராயண விஷயமான பஞ்ச ஸ்வரூபங்களை ஐந்து பாசுரங்களில் வைக்கிறார் ஆண்டாள் - பரத்வம், வியூகம், விபவம், அந்தர்யாமி , அர்ச்சை என்ற ஐந்து நிலைகள்.
 * சேஷித்த விஷயம்; அதாவது சேஷத்வம்;
* காரண விஷயம் - 'காரணம் தானே' என்று ஆழ்வார் சாதித்த படி.
* மந்தர சேஷமாய், ஸ்வரூப விஷயமாய், சாஸ்திரமாய் இருக்கும். கீதையின் பிரதம சர்க்கத்தின் பொருளைக் கொடுக்கும்.
* திருமந்திரத்தின் அர்த்தமான திருமொழியின் சாராம்சமாய், பர ஸ்வரூபத்தைக் காட்டுகிறது.
* 'நாராயணாய வித்மஹே' என்பதின் விவரணம்; வேதத்தின் சிரஸாய், பரம ரஹஸ்யமாய் இருக்கும் வேதம் சொன்ன எம்பெருமானின் வடிவைக் காட்டுகிறது..

இரண்டாவது பத்து பாசுரங்கள் - புள்ளும், கீசுகீசு, கீழ்வானம், தூமணி, நோற்றுச்சுவர்க்கம், கற்றுக்கறவை, கனைத்திளம், புள்ளின்வாய், உங்கள்புழக்கடை, எல்லே எனத் தொடங்கும் பாசுரங்கள்..

* 'உ' கார சப்தத்தின் வாசியைச் சொல்லும். அதாவது பாகவத விஷயமாய்   உள்ளது.
* அனைத்து பாசுரங்களில் பட்சி பற்றியே வரும். அதாவது அவற்றை ஆச்சாரியனாக கண்டு, எம்பெருமானிடத்தில் நம்மைச் சேர்க்கும் விஷயமாக காட்டுகிறார். 'சேர்ப்பார்களைப் பக்ஷிகளாக்கி' என்றது  'ஆச்சார்ய ஹிருதயம்' .
* நர விஷயம் - நர நாராயணனை உலகத்து என்ற திருமொழி படி.
* கருட விஷயம், ஜீவாத்ம உத்தாரணமாய், ஆச்சாரியனைப் பற்றி.
* சரண்ய விஷயம்- பாரதந்திரியம் பற்றிச் சொல்லும்
* ரூப, காரிய விஷயமாய், த்வயம் பற்றியது இப்பத்தும்.
* திருவாய்மொழியின் சாராத்தமாய், 'வாசு தேவாய தீமஹி'  என்ற அர்த்தம் பொருந்தி, ஆச்சரியனைப் பற்றினால் 'நாயகனாய்' கோவில் வாசல் புகலாம் என்கிறது இப்பாசுரங்கள்.

மூன்றாவது பதினைந்து பாசுரங்கள் - நாயகனாய், அம்பரமே, உந்துமதகளிற்றன், குத்துவிளக்கு, முப்பத்து, ஏற்ற, அங்கண், மாரிமழை, அன்றிவ்வுலகம், ஒருத்திமகனாய், மாலேமணிவண்ணா, கூடாரை, கறவைகள், சிற்றம் சிறுகாலே, வங்கக்கடல் எனத் தொடங்கும் பாசுரங்கள் ஜீவாத்மாக்கள் செய்யவேண்டிய அனுஷ்ட்டானங்கள் பற்றியது..

* 'ம'கார சப்தத்தின் பொருள் சொல்லும் பாசுரங்கள்.
* பக்தி-ப்ரபக்தி-அனுஷ்டான விஷயமாய் (நாயகனாய்) எம்பெருமானுக்கு மங்களாசாசனம் (அன்றிவுலகம் இத்யாதி).
* ஆச்சார விஷயமாய், போக்கியத்து விஷயம் கைங்கர்யம் என்பதைக் காட்டுகிறார் - 'உனக்கே நாமாட்ச் செய்வோம்'.
* சரம ஸ்லோக அர்த்தமாய் , இயற்பா சொல்லும் விஷயங்களை, வேதத்தின் அடி போல், 'விஷ்ணு ப்ரசோதயாத்' என்று சொல்லி, ஜீவாத்மாக்களை உஜ்ஜீவிக்க ஆச்சார அனுஷ்ட்டான விஷயங்களைச் சொல்கிறது இந்தப் பதினைந்து பாசுரங்களும்.

இவை போல் வராகர் சொல்லும் உபாயமாக 'நாம சங்கீத்தனம்' பற்றியே பூமிப்பிராட்டின் அவதாரமான ஆண்டாள் சொல்கிறார்.. 'பாடி' என்ற சப்தம் அநேக இடங்களில் திருப்பாவையில் வருவதும் இதை விளக்கும்..
'பரமன் அடி பாடி', 'உத்தமன் பேர் பாடி',  'வாயினால் பாடி' இத்யாதிகளோடு 'பாடிப்பறை கொண்டு' என்று முடிக்கிறார் ஆண்டாள் இறுதியில்.. 'பேசியிருப்பனகள்' என்று நாச்சியார் திருமொழியில் சொல்வது திண்ணம்...!


*திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே; பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே; மறுவாரும் திருமல்லி வளநாடு வாழியே; வண்புதுவை நகர் கோதை மலர் பாதங்கள் வாழியே*

Wednesday, September 20, 2017

சுண்டல்-புட்டு-செட்டியார் : கொலு அனுபவம்

சுண்டல்-புட்டு-செட்டியார் : கொலு அனுபவம்

"ம்ம்.. உங்களைக்கேட்டா தெரியும்" எதிர்ப்பட்ட அலுவலக நண்பர்கள் பேசியது..
'சொல்லுங்க'..
'இந்த பெருமாள் தசாவதாரம், கொஞ்சம் வரிசையா, சீக்குவன்சா சொல்லுங்க.. உங்களைத்தான் தேடினோம்'.. (நெற்றியில் திருமண்ணோடு அலுவலகம் போவதால் இந்த மாதிரி சில கேள்விகள் எனக்கு பாஸ் செய்யப்படும்:))
'சரி.. மீனோடு ஆமை கேழல் அரி குறல்....'(கடகடவென திருமங்கை ஆழ்வார் பாசுரம் சொன்னேன் தசாவதார வரிசை பற்றி)..
'அட.. மெதுவா தமிழ்ல்ல சொல்லுங்க...'
'!..ஓ..மீன், ஆமை, வராகம்..' , வரிசையில் சொன்னேன்.. 'இது எதுக்கு கேட்டீங்க?'..
'வீட்ல கொலு, தசாவதார செட் இருக்கு.. வரிசை தெரியாது.. அதான்..'..
'எத்தனை படி'
'அஞ்சு படி, கிட்டத்தட்ட பத்து வருஷமா வைக்கறேன்.. போனவருசம் என்னோட சித்தி வச்சாங்க., ஸோ, கவனிக்கல.. அந்த போட்டோ எடுத்து பாக்கணும். அப்போ அந்த புத்தா எந்த எடத்துல வருவாரு.?'
'புத்தர் பத்தி எனக்குத் தெரியாதுங்க.. நான் படிச்ச தமிழ் பாட்டுல அவரு வரல..'..
'இல்ல கடைல அப்படித்தான் இருந்தது..'
அதற்க்கு மேல் நான் ஒன்னும் சொல்லவில்லை.. பேச்சு டார்வின் உயிர் கோட்ப்பாடு பத்தி போக, நானும் வழக்கம் போல் 'டார்வின் புதுசா ஒன்னும் சொல்லல, நம்ப கிட்ட இருந்து சுட்டதுதான்' என்று வாதிட்டேன்.. இது நேற்று அலுவலகத்தில் டீம் நண்பர் ஒருவர் கேட்டது, தொடர்ந்து நடந்த சம்பாஷணைகள்..

                                   இந்த புரட்டாசி மாதம் துவங்கிவிட்டாலே திருவிழாவிற்க்குக் குறையிருக்காது. அலுவலக வேலைக்கும் தான் (ஏதோ மத்த நாளல்ல கம்மியா இருக்கிற மாதிரி). இந்த முறை பலமுனைத் தாக்குதல்-உரலில் அகப்பட்டது போல் இருக்கு இன்னமும்.. அந்த பிரச்சனை முடிந்த பிறகு விரிவாக எழுதறேன். ஒன்னு மட்டும் நன்கு தெரிஞ்சுண்டேன் - ஹானஸ்டி-நியாயமாக இருக்கணும் (ஆன்சைட்- ஆப்ஷோர்எங்க இருந்தாலும்) என்று சொல்லித்திரியும் என்னைப் போன்றவர்களுக்கு எப்போதும் கஷ்டம் தான்..அப்பறம் கொஞ்சமாவது பாலிடிக்ஸ் பண்ணனும். சரி., நானும் என் ப்ரொஜெக்ட்டும் மாறப் போறதில்ல.

கொலு பற்றி கொஞ்சம் சொல்லுங்க இல்ல எழுதுங்க என்று 2-3 நண்பர்கள் கேட்டார்கள்.. சரி பார்க்கலாம், எல்லாத்துக்கும் நேரம் கூடி வரணும்.. இந்த கொலு அனுபவம் பற்றி,  அமெரிக்காவில் இருக்கும் நம்மவர்கள் வீட்டில் நடக்கும் கொலு பார்த்து எழுத முற்பட(2013), முடியாமல் போய் இப்போது தொடர்ந்தேன்.. இந்த கொலு பற்றி நேரடியாக ஆழ்வார்கள் சொல்லவில்லை என்றாலும், இந்த வார்த்தை அப்போது புழக்கத்தில் இருந்திருக்காது.. இதற்கு சமமாக 'நிற்க, நிறுத்தல், வீற்றிருத்தல், திருவோலக்கம்' என்ற வார்த்தைகளை சொல்லலாம்.. முதல் மூன்று வார்த்தைகளும் அநேக இடங்களில் பாசுரங்களில் வருகிறது.. 'திருவோலக்கம்' உரையாசியர்களின் நடைகளில் வருகிறது.. திருவாசகத்தில் (கோயில் மூத்த திருப்பதிகம் ) இந்த வார்த்தை அப்படியே வந்து இன்றைய கொலுவின் அர்த்தத்தைக் காட்டுகிறது..

"தேசா நேசர் சூழ்ந்திருக்குந் திருவோ லக்கஞ் சேவிக்க
ஈசா பொன்னம் பலத்தாடும் எந்தாய் இனித்தான் இரங்காயே" (திருவோலக்கம் - அத்தாணி மண்டபத்தில் வீற்றிருக்கை)

இப்போ ஆழ்வார் பாசுரங்கள் சில... இந்த கொலு நம்மாழவார் காலம் தொட்டே இருந்தது.. ஆம், அவர் கோவிலில் இருக்கும் அர்ச்சாரூபமான பெருமானை கொலு வீற்றிருக்கும் அழகைப் பாடுகிறார்.. பின் ஆண்டாள் கொலு வைத்தாள்..

நம்மாழ்வார் சொல்வது..

வீற்றிருந்து ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம் மா பிளந்தான் தன்னை
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?  

வீற்றிருந்து ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல-
**திருநாட்டில் திருவனந்தாழ்வான் மீது பெரியபிராட்டியாரோடுகூட எழுந்தருளியிருந்து “பொங்கோதஞ் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும், அங்காதுஞ் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான்” என்கிறபடியே உலகமெல்லாம் செங்கோல் செலுத்தி நியமிப்பவனாய், இங்ஙனம் நியமிப்பதற்குறுப்பான ஞானம் சக்திமுதலிய திருக்குணங்கள் நிரம்பப்பெற்றவனாய் தன்னுடைய ப்ரபுத்வத்தினால் கொடுங்கோன்மை காட்டாதே சாந்தியோடே யிருந்து ஆள்பவனாய், ஸ்ரீக்ருஷ்ணாய்த் திருவததரித்துக் கேசிவதம் பண்ணினவெனக்கு எற்றைக்கு மேழேம்பிறவிக்கும் ஒரு குறையில்லை யென்றாராயிற்று.***

மேலும் வானமாலை பதிகத்தின் துவக்கத்தில் நம்மாழ்வார் சொல்வது இப்படி..

"சேற்றுத் தாமரை செந்நெலூடுமலர் சிரீவர மங்கலநகர்,
வீற்றிருந்த எந்தாய். உனக்கு மிகையல்லே னங்கே."

இன்னும் ஒரு படி மேல போய், இப்போ நாம பண்ற கொலுவுக்கு ஏற்ற மாதிரி ஒரு வரி, அதே வானமாலை பதிகத்தில்.,

"தேறு ஞானத்தர் வேத வேள்வியறாச் சிரீவர மங்கலநகர்,
ஏறிவீற்றிருந்தாய். உன்னை எங்கெய்தக் கூவுவனே?"

(வானமாமலைப் பதியிலே குடியேறி பெருமை தோற்ற எழுந்தருளியிருக்குமவனே என்று அர்த்தம்.. கொலுப்படிகளிலும் என்று இப்போ ஒரு ஸ்வாரஸ்யத்திற்கு வச்சுக்கலாம்)..

இப்போ ஆண்டாளுக்கு வரலாம்.. ஆண்டாள் எங்க கொலு வச்சா, அவளே குழந்தை என்று கேட்கலாம்.. "நாமம்ஆயிரம் ஏற்ற நின்ற" என்ற தம் நாச்சியார் திருமொழியில் 'சிற்றில் வந்து சிதையாமே' என கண்ணனைச் சொல்லுகிறார்.. அதாவது ஆண்டாள் உள்ளிட்ட ஆயர்பாடி சிறுமிகள் எல்லாரும் மணல் வீடு கட்டி விடையாடும் போது, கண்ணன் வந்து அதைக் களைத்தான் என்றும், அவ்வாறு செய்ய வேண்டாம் எனவும் ஆண்டாள் ப்ராத்திக்கிறார். இப்போ நம் வீடுகளில் குழந்தைகள் வைக்கும் கொலு போலத்தான் இது., இன்றைய நிலையில், பார்க், ஏர் போர்ட், ரயில்வே ஸ்டேஷன் என்றெல்லாம் குழந்தைகள் தங்கள் பங்கிற்கு வைப்பது போல, ஆண்டாள் அப்போதே இதை துவக்கிவைக்கிறார் என்று கொள்ளலாம்.. இன்னும் கொஞ்சம் அதிகமாக, அதே பதிகத்தின் துவக்கத்தில்,

"நாமமாயிர மேத்தநின்ற நாராயணாநர னேஉன்னை
மாமிதன்மக னாகப்பெற்றா லெமக்குவாதைதவிருமே.."

இதில் 'நின்ற' என்ற சொல்லிற்கு 'நித்ய விபூதியிலே ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கும்' என்றே சொல்கிறது வ்யாக்யானம்.. ஒரு முறை இராமானுசர் ஸ்ரீரங்கம்வீதியில் நடந்து வரும்போது, வாசலில் சிறுவர்கள் மணல் வீடுகட்டி, பெருமாள், புறப்பாடு எல்லாம் செய்வது போல் விளையாடுவதைக் கண்டு சந்தோஷித்தார்.. சிறுவர்களும் இவரை அழைத்து (பொய்க்கா பொய்க்கா)தீர்த்தம், சடாரி முதலின தந்தனர் என்று ஸ்ரீவைஷணவ குரு பரம்பரை சொல்கிறது.. இதுவும் இன்று காணும் கொலு விளையாட்டுக்கு ஒரு அடிப்படை தான்.. இது போல பல இடங்களில் இருக்கும் ஒரு விஷயம், இன்றும் பல்கிப்பெருகி, இரண்டு நாள் அலுவலகம் லீவு போட்டு கொலு பொம்மை அடுக்க, படி செட் பண்ண என்று வளர்ந்திருக்கிறது.. இதுவும் ஒரு வகை பக்தி தான்..

இப்போ நம்ப அனுபவத்திற்கு வருவோம்.. சுஜாதா தீபாவளி பற்றி சொல்லும் அனுபவம் போல, உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் கொலு போன அனுபவம். அதுவும் கரண்ட் இல்லா கிராமங்கள் முதல், கரண்டே போகாத வெளிநாடு வரை.. பெரும்பாலும் இந்த நவராத்ரி ஒட்டியே காலாண்டு தேர்வு விடுமுறை வரும்.. வழக்கம் போல் துவரிமான் போய் சில நாட்கள் தங்குவோம்.. அது இரண்டு புறமும் வீடுகளுள்ள பெரிய அக்ரஹாரம். கொலு வைக்காத வீடுகளே இருக்க முடியாது.. இப்போதிருப்பது போல் ஸ்டீல் படிகள் இருக்காது.. அப்போதைக்கு படிகள் தயார் செய்யப்படும். சிலரிடம் மரப்படிகள் இருக்கும்..

எங்க ஆத்தில் (வீட்டில்) தாத்தாவின் சேர், முக்காலி, பழைய குடங்கள், இரண்டு மூன்று தலைமுறை முந்தின ட்ரங்கு பெட்டிகள், உயர்ந்த கட்டில்கள் எல்லாம் சேர்த்து தான் படி செய்வோம்..மேலே ஒரு வெள்ளை நிற 10x5 வேஷ்டி விரித்தால் ஒன்னும் தெரியாது.. .. வீட்டில் கரண்டும்இருக்காது.. வெளிச்சத்தோடு இந்த ஏற்பாடு முடியும்.. துணியில் சுற்றி, போன வருஷம் வைத்த பொம்மைகளை நாம் தொட முடியாது.. நமக்கு தனியா கீழ பார்க் செய்து விளையாடலாம்.. இதற்க்கு கொல்லைப்புறம் இருக்கும் வைகை ஆற்றிலிருந்து மணல், ஒதுங்கும் கிளிஞ்சல்கள், கூலான் கற்கள், செடி, காட்டுப்பூ எல்லாம் நாங்கள் எடுத்து வருவோம். பெரிய விசாலமான கூடத்தில் இருக்கும் பெரிய ஊஞ்சல் கழற்றிவைக்கப்படும் கொலுவிற்காக.. நானும் பிடிக்கறேன்னு ஒருபக்கம் தூக்குவோம். பார்க்கில் அகழிகள், தெப்பக்குளம் எல்லாம் வைத்து பிளாஸ்டிக் மீன் மிதக்கவிடுவோம்.. காலை எழுந்தவுடன் பல் கூட தேய்க்காமல் அதை வந்து பார்த்து, இரசித்து பலரும் வந்து தூண்டியபின் பல் தேய்க்கவே போவோம். ஆண்பிள்ளைகள் வேலை இதோடு முடியாது.. சாயங்காலம் யார் வீட்டில் கொலு, எவ்வளவு படி, எது உயர்ந்த பொம்மை என்று ஒரு ரவுண்டு போக வேண்டும்.. கடைசிப் படியில் (மேலே) இருக்கும் பொம்மை கிட்டத்தட்ட சீலிங் இடிக்கும் அளவிற்கு இருக்கும் சில வீடுகளில், அவ்வளவு பெரிய பொம்மைகள். கண்டிப்பாக செட்டியார் பொம்மை இருக்கும் சிறு கடையோடு, தசாவதார செட் இதாயத்தி எல்லாம் வழக்கம்.. அந்த நாட்களில் போட்டோ வசதி இல்லாதது இப்போது வருத்தமாய் இருக்கிறது, இருந்தால் இது போல் எழுத மாட்டோம் என்பது வேற விஷயம்..இவையெல்லாம் சில தொலைத்த தருணங்கள் இப்போது. ஊஞ்சல் கட்டுமளவிற்கு கூடத்தை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. நாங்களும் இந்த அவசர யுகத்தில் வாழ்கிறோம் என்றே ஓடுகிறது..

ஒரு நாளைக்கு அதிகபட்சம் பத்து வீட்டிற்கு போவார்கள் பெரியவர்கள்.. அது போல் நம் வீட்டிற்கும் வருவார்கள்.. கண்டிப்பாக பாட்டு உண்டு.. சுஜாதா ஸ்ரீரங்கத்தில் சொல்வது போல் அபத்தமான இருக்காது.. இனிமையாகப்பாடுவார்கள், பக்க வாத்தியம் இல்லாமல்.. 'கிண்கிணி நாதமும் காதினுள் கேட்குதே, என்ன தவம், தாயே யசோதா, மாமவ பட்டாபி இராமா', அம்புஜம் கிருஷ்ணா, பாபநாசம் சிவம் பாடல்கள் என்று உருப்படிகள் போகும்.. ஒரு சிலருக்கு ஒரு பாட்டு மட்டுமே தெரியும்.. ஒன்பது நாளும் அதை அலுக்காமல் பாடுவதையும் கேட்டிருக்கிறேன். சித்தி, அம்மா கூடவே நாம போனதுதான் 'சுண்டல்'.கையில் ஓலையில் செய்த கொட்டான் இருக்கும்..அதில் சுண்டலை நிரப்பிக்கலாம்.. அவ்வப்போது புட்டு, ஏதாவது கேக் செய்வார்கள்.. பெரும்பாலும் சுண்டல் தான்.ஆனால் அந்த ஒன்பது நாளும் சாயங்காலம் போவதே தெரியாது.. 'டேய் இங்க வாங்கடா, இந்தா சுண்டல்' என அதிகமாய் செய்து வேறு வழி இல்லாமல் கொடுத்த வீடுகளும், வாங்கிய தருணங்களும் உண்டு.. இந்த நிகழ்வுகளுக்கு நேர் மாறாய் இருந்தது திருவல்லிக்கேணி கொலு என்று கேள்வி.. இது வரை போனதில்லை..

இந்த அனுபவங்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல் இருந்தது அமெரிக்கா கொலு அனுபவம்.முதல் முறை என்னை அழைத்தார்கள் நியூ ஜெர்சி சன்னதி தெரு (!) நண்பர்கள். நான் வழக்கம் போல் ஆழ்வார் பாசுரம் சொல்லலாம் என்றேன்.. சிறிய திருமடல்..(நமக்கு பாடத்தெரிந்தாலும் யாரும் கேட்கமுடியாது.. பிஎஸ் வீரப்பா பாடுவது போல் இருக்கும் என்பதால், நமக்குத் தெரிந்த ஒரு விஷயத்திற்கு ஐடியா தருவது.. இதுவும் இந்த ஐடி-யில் கத்துண்டது. :) ) எல்லாருக்கும் ஆனந்தம்.. முழு சம்மதமான்னு தெரியாது. ஆனால் மிகச் சிறப்பாய் போனது அந்த வருஷம்.. அமெரிக்காவிலுமா இப்படி கொலு என்று வியந்தேன். சின்ன வித்தாயசம்., சுண்டலோடு முடியாது, ஸ்னாக்ஸ்., நேரத்தைப் பொறுத்து டின்னர் வரை சென்றது. கொட்டான் தேவை இல்லை.. 'டு கோ' அவசியம் இல்லை, இருந்தாலும் தனி பேக் இருந்தது. இளைஞர்கள் வாய்ப்பாட்டு முதல் வாத்தியம் வரை கலங்கினார்கள்.அக்ரஹாரத்தில் நடந்து ஓடியது போல் இல்லாமல், காரை எடுத்துண்டு மத்தியானம் கிளம்பி ஒரு ரவுண்டு அடித்துவிட்டு வரலாம். என்ன வீக் எண்டு தான் போக முடியும். நான் கொலு வைத்து அவர்களை அழைக்கவில்லை என்ற ஒரு வருத்தம் தான்.. சரி எல்லாரும் இந்தியா வாங்கன்னு சொல்லிட்டு வந்தேன்., இங்கயும் வைக்கலைங்கறது வேற விஷயம் :)..பார்க் கட்ட மணல் தேடி ஓடவில்லை.. சில வீடுகளில் ரோபோ வைத்திருந்தார்கள்.. நம்ப மதுரைகாரர் ஸ்ரீ குமார் பழைய கிருஷ்ணரை இந்தியாவிலிருந்து அழைத்து வந்து கஷ்டப்பட்டு சரி செய்த கதையைச் சொன்னார் ஒரு முறை.. சிலர் பேஸ்மென்ட் முழுதும் படி வைத்து நிரப்பியிருந்தனர்.இன்னும் கொஞ்ச நாட்களில் வால்மார்ட்டில் கொலு பொம்மை விற்கும் நாள் வரும். ஸ்ரீ அரங்கராசன் அந்த வருஷம் வைஷ்ணவ கொலு வைத்திருந்தார். எல்லாரும் இந்தியாவையும், கலாச்சாரத்தையும் மறக்க, மாற்றவில்லை.. அங்குள்ள நிலைக்கு மேம்படுத்தி நம் கலாச்சாரத்தை உயர்த்திவருகிறார்கள் அந்த நாடுகளிலும்.. பொலிக, பொலிக, பொலிக!..

நியூ ஜெர்சி கொலு படங்கள்-2013: ஸ்ரீ ஸ்ரீநிவாசன்-ஸ்ரீமதிசாந்தி, ஸ்ரீகுமார், ஸ்ரீ.அரங்கஇராசன், ஸ்ரீ.வெங்கட் கோபி, ஸ்ரீ.புருஷோத்தமன்,ஸ்ரீ சுபாஷ் அவர்களின் இல்லங்களில்..

(20 வருஷத்துக்கு முன்ன துவரிமான்ல கொலு பார்த்த நினைவும், மகிழ்ச்சியும் நேத்து ஸ்ரீகுமார் கொலுவில்! வழக்கம் போல ஒரு ஏக்கமும் தான்!)




















அப்பறம் அந்த தசாவதாரப் பாடல்.. இப்படித்தான் சந்தேகம் வரும்ன்னு ஆழ்வார் வரிசைப்படுத்திப் பாடினது..

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்த்
தானாய் பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னைக் கண்ணபுரத்து அடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன்சொல் தமிழ்மாலை செப்பப் பாவம் நில்லாவே
(திருமங்கை ஆழ்வார் - பெரிய திருமொழி).

ஆனான் ஆளுடையா னென்றஃதேகொண் டுகந்துவந்து,
தானே யின்னருள்செய் தென்னைமுற்றவும் தானானான்,
மீனா யாமையுமாய் நரசிங்கமு மாய்க்குறளாய்,
கானா ரெனாமுமாய்க் கற்கியாமின்னம் கார்வண்ணனே (நம்மாழ்வார்-திருவாய்மொழி)

Saturday, September 16, 2017

ஒரு அணா பூவும், அரை அணா எண்ணெய்யும் - ஸ்ரீ ஜெயந்தி கொண்டாட்டம்

        கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும்||

       வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்*
       கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்**
       எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட*
       கண்ணன் முற்றம் கலந்தளறாயிற்றே**

ஒரு அணா பூவும், அரை அணா எண்ணெய்யும் - ஸ்ரீ ஜெயந்தி கொண்டாட்டம்

'தம்பி, வண்டி மெட்ராஸ் போகுது, நீங்க?'..
நானும் சென்னை தான்,.
சரி எங்க தம்பி?...
திருவல்லிக்கேணி...
ஓஹோ... மைலாப்பூர், கற்பகம் ஹோட்டல் தெரியுமா? வடக்கு மாட தெரு...
தெரியும் சார்..
அட, அது நம்ப ஹோட்டல் தான்..
ஹோ.. அப்படியா?..
என்ன, இப்படி கேட்டுட்டீங்க,. நம்ப மாப்பிளை தான்..
ம்ம்..
"என் கொழுந்தியாவோட, சகலை, அக்கா மாப்பிளை தான்.. திருவல்லிக்கேணியில் கூட நம்ப சொந்தக்காரங்க இருக்காங்க.. கோவில் பக்கத்துல அரிசிக்கடை,. கடை பேரு கூட... ஏம்மா அந்த பேரு ஏன்னா?..".. " இந்த.. நீ சும்மா இருக்கா மாட்ட, நானே காலைல எங்க தனரதுன்னு தெரியாம கடக்கேன்..".. வியாழன் இரவு இரயில் பயணம் சுவாரஸ்யமாய் போய்க்கொண்டிருந்தது இந்த சம்பாஷணைகளோடு.. அந்தம்மாவின் பதிலுக்குப் பின் நானும் அந்த முதியவரும் நேருக்கு நேர் பார்க்கவில்லை.. கிருஷ்ண ஜெயந்தி முடிந்து சென்னை திரும்புகையில், மதுரை இரயிலில் நடந்த உரையாடல்.. இது ஒரு துவக்கத்தின் முடிவு.

சென்ற சனிக்கிழமை வரை ஸ்ரீ ஜெயந்தி (கண்ணன் பிறப்பிற்கு) ஊருக்குப் போவது பற்றி ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கவில்லை.. சென்ற வருஷம் இதே போல் போக தீர்மானித்து கடைசியில் டாஸ்க் ஆர்டர், பில்லிங் இத்யாதிகள் எல்லாம் ஒருசேர்ந்து கம்சன் போல் தாக்க துவரிமான் போகும் பிளான் கேன்சல் ஆனது. இப்போதும் அப்படி ஆக நிறைய வாய்ப்பு இருந்தது. ஏற்கனவே டாஸ்க் ஆர்டர் புதுப்பிக்கும் வேலை துவங்கனும், அதை இந்த வாரம் பாக்கலாம்ன்னு மேனேஜர் சொன்னது நான் ஊர்க்குப் போவதை கிட்டத்தட்ட கைவிடும் நிலைக்கு வந்துவிட்டேன். ஆனால், சனிக்கிழமை வீட்டிலிருந்தது ஒரு போன், கொஞ்சம் உடல்நலம் சரியில்லை, நீ வந்தால் நன்னா இருக்கும் என்று.. சரி, ஏதாவது பேருந்து புடிக்கலாம்ன்னு போனா எல்லாம் புல்ன்னு ஒரு கதை., அப்பறம் ஒரு பேருந்து ஏறி ஊர் போனேன்.. மேனேஜரிடம் சொல்ல, 'சரி ஊருல போய் அந்த டாஸ்க் ஆர்டர் வேல பார்த்துக்கலாம்ன்னு' ஒரு சமாதானம் சொன்னார்..

எதுவுமே இல்லாததற்கு இதுவாவது கிடைத்ததேன்னு காற்றில் கடியனாய் ஓடி அகம் புகுந்தேன். மாற்றி மாற்றி வீட்டு வேலையும், அலுவலக வேலையும் பார்க்க, அவ்வப்போது மழையும் பெய்து பூமியையும் குளிரவைத்தது.
இன்-பேரலல், கிருஷ்ண ஜெயந்தி வேலைகளையும் செய்து வந்தேன். சென்னையிலிருந்து கூடவே ஒரு சின்ன கிருஷ்ணனையும் (தினமும் ஆராதிக்கும்) அழைத்துச் சென்றிருந்தேன்.. அவர் சென்னை வந்து ஒரு வருஷம் கூட ஆகவில்லை, அவருக்கும் ஊரைப்பார்க்கும் ஆசை போல.. இப்படி ஒரு ஏற்ப்பாட்டை அவர் பிறந்தநாளில் அவரே செய்தார் போலும். ஆயர் குல வேந்தன், 'அநுகாரம் முற்றி இடை நடையும், இடைப் பேச்சும், முடை நாற்றமும் தன்னடையே வந்து சேர்ந்த' ஆண்டாள் இருக்கும் சீமையில் கொண்டாடவே விரும்பினான் போலும் திருவல்லிக்கேணியைத் தவிர்த்து. பேக் டு ஸ்ரீஜெயந்தி டே.

பின்மாலை நாலு மணியளவிலிருந்து மழை துவங்கியது. காலை விடிந்தது கூடத் தெரியாதளவிற்கு கரிய மேகங்கள்.. 'கருவுடை மேகங்கள் கண்டால்உன்னைக் கண்டாலொக்கும் கண்கள், உருவுடையாய்உலகேழும் உண்டாக வந்து பிறந்தாய்' என்ற பெரியாழ்வார் சொற்படி தான்வருவதை 'கண்ணனென்னும் கருந்தெய்வம்' காட்டிக்கொண்டிருந்தார்.. பெரியாழ்வார் 'வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி' என்றும், ஆண்டாள் 'மாயனை மன்னு வடமதுரை மைந்தனை' என்றும் பல இடங்களில் மதுராவைக் குறிக்கும் போது 'வட' திசையைக் காட்டி மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.தாங்கள் இருக்கும் திருமல்லி நாட்டின் தலைநகரை
'தென்மதுரை' என்று குறிப்பால் உணர்த்தினார்கள். இதுவே பல்லாண்டு விளைந்த மண்.. இன்றும் மதுரையில் 'மெய் காட்டும் பொட்டல்' இருக்கிறது..(மேன்காட்டுப் பொட்டல் என்று மருவியது இப்போது).வருடத்துக்கு ஒருநாள் பல்லாண்டு வைபவம் அங்கு நடக்கிறது. அன்றும் அப்படியே மதுரா போலவே தோற்றமளித்தது..

ஊரிலே இருந்தும் இம்முறையும் துவரிமான் செல்ல முடியாது போக, காலை லேசான மழை விட்ட நேரத்தில் அங்கு தேர் நடந்திருக்கிறது. சிறிது நேரத்தில் எதிர்பாராமல் வாட்ஸாப்பில் துவரிமான் போட்டோ வந்தது. அந்த நாளில் ஸ்ரீஜெயந்தி எப்படி கொண்டாடினார்கள் என்று கொஞ்சம் பழைய கதைக்குப் போனோம்.. சிறுவர்கள், சிறுமிகள் நல்ல துணி உடுத்திக்கொண்டு (இப்போ இருக்கற மாதிரி கிருஷ்ணன்-ராதே வேஷம் போட்டு ஊர்வலம் போவது போன்ற எல்லாம் அப்போது இல்லை) ஒவ்வொரு வீடாகப் போய் இரண்டு-மூணு வசனங்கள்இருக்கும் அதைச் சொல்லி 'நாளை பிறக்கும் கிருஷ்ணனுக்கு எண்ணெய் கொடுங்கோ' என்று வீடு தோறும் எண்ணெய் வாங்கி கோவிலில் சேர்ப்பது.. 2-3 குழுக்கள் கூட இருக்கும்.. நாங்கள் இருந்த போது கூட அரிசியும், எண்ணெய்யும் வாங்கிய ஞாபகம்.. அப்போது விடுமுறைக்கு குழந்தைகள் நிறைய வருவார்கள்.. இப்போது கிராமங்களே இல்லை., வேற என்ன சொல்ல., இருக்கிற அர்ச்சகர், 3-4 பேர் தான் கடவுளுக்குக் கதி..

**துவரிமான் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி புறப்பாடு** - காளிங்க நர்த்தன கிருஷ்ணன்..






திரளி - சொந்த ஊர் பற்றி தனியாக எழுத நிறைய இருக்கிறது. இந்திய தொல் பொருள் ஆராய்ச்சிப்படி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மக்கள் குடியிருந்தனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இராணி மங்கம்மாள் பற்றிய செவி வழிச் செய்திகளில் திரளியும் வருகிறது.. வெற்றிலையை இடதுகையால் போட்ட தோஷம் நீங்க ஏழு பிராமண கிராமங்களை உருவாக்கி அதில் தெலுங்கு பேசும் பிராமணர்களைக் குடிவைத்து, பெருமாள் கோவிலையும் நிர்மாணம் பண்ணினார். திரளியும் அதில் ஒன்று. முன்னர் தெலுங்கு பேசும் தென்கலை ஸ்ரீ வைஷ்ணவர்கள் இருந்தார்கள் என்றும், பின் அவர்கள் போக தமிழ் பேசும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் வந்தார்கள் என்றும் அசைக்க முடியாத செவி வழிச் செய்தி இன்றும் ஊரில் உலவுகிறது. ஊரின் நடு மத்தியில் அஹ்ரகாரம் 2 பெரிய தெருக்களோடு. 300-400 வீடுகள். .ஆயர்களாய் ஆநிரை மேய்க்கும் கோனார் வீதி ஒருபுறம், மேலும் இரண்டு வீதிகள்.. இன்று அத்தனை வீடுகளும் இல்லை., தெருக்களுக்கான அடையாளங்களும் இல்லை. நல்லி சேர் வயல்கள், மச்சினி மாடங்கள் சூழ்ந்த, எழிலார்ந்த ஊர் எல்லாம் இல்லை.. மழை பெய்தால் மட்டுமே பசுமை, இல்லையேல் வறுமை தான். காரை வீடுகள் (சுண்ணாம்பு காரை) கொஞ்சம், மீதி மண் வீடுகள் தான். கருங்கல்லினாலான கோவில் நல்ல பரப்பளவுடன்.. கோட்டை வாசல் தாண்டி கோவிலுக்குப் போவதைவிட வயலுக்குப் போவதையே வழக்கமாய்க் கொண்டு வாழ்ந்துவந்தனர்.. யஜுர்-சாம வேதம் படித்ததை/கரைக்கண்ட பண்டிதர்கள் இருந்திருக்கிறார்கள், பாடசாலையும் நடந்திருக்கிறது ஒருபுறம், பல வித ஹோமங்களோடு.. (இன்றும் திருவல்லிக்கேணி/ஸ்ரீரங்கம் போன்ற இடங்களில் ஊர் பெயரைச் சொன்னால், அந்தநாளில் திரளியில் இருந்த படித்தவர்கள் பற்றி பலரும் பேசுகிறார்கள்).. மாற்றங்கள் பல வந்தது. இன்றைய நிலையில் வாட்ஸாப்பில் தான் குசலம் ஓடுகிறது.. இதற்க்கென்று தனியாக ஒரு குரூப் இருக்கிறது..

முன்னர் கிருஷ்ணனுக்கு சிறிய பல்லக்கு செய்து கொண்டு காலை- மாலை என்று வீதியில் ஓடுவோம் (என் நினைவில் 2-3 வருஷம் அப்படிப்போனதுண்டு), வீட்டிலுள்ள கிருஷ்ணன் படத்தை வைத்துக் கொண்டு. அவ்வளவு தான் எங்களுக்குத் தெரிந்தது. 'தன்னேறாயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு, வீதியார வருவான்' என்ற ஆழ்வார் பாசுரங்கள் எல்லாம் தெரியாது.வீடுகளில் கிருஷ்ணன் பாதம் இருக்கும், 'இருகாலும்கொண்டு அங்கங்கு எழுதினாற்போல்இலச்சினைப் பட நடந்து' என்ற பெரியாழ்வார் சொன்னதும் தெரியாது.. வீடுதோறும் ஏதாவது ஒரு பக்ஷணம் இருக்கும்.. 'அப்பம் கலந்த சிற்றுண்டி, கன்னலில் லட்டு அவற்றோடு சீடை கார் எள்ளின் உண்டை கலத்திலிட்டு' என்ற பெரியாழ்வார் பாசுரமும் அறியவில்லை எங்களுக்கு.. ஆனால் கண்ணன் எங்களுக்கு ஒரு நண்பன் போலத்தான்.

தலைப்பு பற்றி இன்னும் பேசவில்லை.. ஆம்., 'எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திரு வோணத் திருவிழவில்' என்ற ஊர் ஆழ்வார் (பெரியாழ்வார்) சொன்னது போல், ஊரிலுள்ள ஸ்ரீனிவாசர் திருக்கோவில் கைங்கர்யங்களில் ஈடுபட்டுள்ளனர் எம் முன்னோர்கள்(கிராம முன்சீப் என்ற என்ற எஜமானன் ஸ்தானம்.. வழி வழியா அந்த வேலைதான் (கிராம முன்சீப்)) . இப்போது இருப்பது போல் யாரிடமும் பண வசதி இந்த அளவிற்கு இல்லை., வயல்களும் வானம் பார்த்த பூமி தான். வருஷத்திற்கு இரண்டு-மூன்று முறை தான் பெரிய அளவில் திருமஞ்சனமே நடக்கும். ஸ்ரீ ரங்கம் பெரிய பெருமாள் போல், இங்கும் 'ஈரங்கொல்லி' இருப்பார் பக்கத்து ஊரில் (அச்சம்பட்டி) .. பெருமாள் வஸ்திரங்களை எல்லாம் துவைக்கும் கைங்கர்யம் அவருக்கு. தாயாருக்கு தனியாக வஸ்திரம் தைப்பார்கள். இப்போது அவற்றிக்கு எல்லாம் வேலை இல்லாமல் போனது. அவ்வாறு பெரிய உற்ஸவங்கள் இல்லாத காலத்தில் எங்கள் முன்னோர்கள், பெருமானுக்கு மூன்று உற்ஸவங்களை ஏற்படுத்தி அதற்க்கு கைங்கர்யச் செலவை தாங்கள் தருவதாய் பட்டயம் செய்துள்ளனர்.. அவற்றில் ஒன்று தான் கண்ணன் பிறப்பு.. பட்டையம் சொல்லும் விஷயம் இது தான் 'ஒரு அணாவிற்கு புஷ்பம்; அரை அணாவிற்கு எண்ணெய் சேர்த்து கர்ப்பக்கிரகம் முன் இருக்கும் சரவிளக்கை ஏற்ற வேணும்'.. அந்த நாட்களில் மின்சாரம் இல்லை.. ஸ்ரீனிவாசரை தீர்க்கமாய்ச் சேவிக்க பெரிய விளக்குகள் வேண்டும்., அதற்க்கே இந்த ஏற்பாடு.. இந்த கைங்கர்யம் 5-6 தலைமுறைகளுக்கு முன் வந்திருக்கலாம். எம்பெருமான் கிருபையால் இன்றும்கைங்கர்யம் சிறப்பாக நடக்கிறது..

**திரளி-கௌண்டின்ய நதி** (கௌண்டின்ய முனிவரின் பெயராலும், இங்குள்ள பலர் அந்த கோத்ரத்தைச் சேர்ந்தாலும் இப்பெயர் பெற்றிருக்கலாம்)




கிருஷ்ண ஜெயந்தியன்று, பெரியாழ்வார் திருமொழி முழுதும் சேவிக்கும் வாய்ப்பு இம்முறையும் கிடைத்தது. மொத்தமே 7 பேர் தான். பின்னாடி கோஷ்டி சொல்லக் கூட யாருமில்லை என்ற வருத்தம் வழக்கம் போல்.. இளைஞர்கள் சொந்த ஊருக்கு வருவதில்லை என்ற நிலை., காரணம் யாரைச் சொல்வது. கேட்பதற்கு எம்பெருமான் சித்தமாய் இருக்கிறான்.. இந்த முறை பெய்த மழையில் ஊரின் காட்டாறு 'கௌண்டின்ய நதி' பாலத்தைத் தொட்டுக்கொண்டு போனது. இயற்க்கையின் சூழல் மதுரா போலவே இருந்தது, எங்கும் பசுமை கலந்து., ஆநிரை மேய்க்க கண்ணன் போய் அருமருந்தான இடமாய் இருந்தது.. பெரியாழ்வார் பாசுரங்கள் பலவும் கண்ணன் விளையாட்டுக்களை சொன்னாலும், வேதாந்த அர்த்தங்களை சொல்லும் வண்ணம் இருந்தது.. ஒரு பாடல் மட்டும் என்னை மிகவும் புரட்டிப்போட்டது. ஊருக்குப் கிளம்பும் முன் ஏதோ ஒரு இஸ்யு.. வழக்கம் போல் 'செங்குத்து' (!) டீம் பிரச்சனை.. நானும் சூடாய் ஒரு மெயில் தட்டி, வழக்கம் போல் ப்ராஜெக்ட் ரிலீஸ் கேட்டு மனஜேர்க்கு ஒரு மெயில் போட்ட கையோடு கோவில் கிளம்பினேன்.. சன்னதியில் இந்த பாடல் சொன்ன போது, நான் என்னிடம் இல்லை...

"உனக்குப் பணி செய்திருக்கும் தவமுடையேன் இனி போய் ஒருவன் 
தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்க நின் சாயை அழிவு கண்டாய்
புனத்தினை கிள்ளிப் புதுவவி காட்டிஉன் பொன்னடி வாழ்கவென்று
இனக்குற வர்புதிய துண்ணும் எழில்திரு மாலிருஞ் சோலையெந்தாய்"(பெரியாழ்வார் திருமொழி - 5-3- திருமாலிருஞ்சோலை)

அவ்வளவு தான்!. இதற்குமேல் என்ன சொல்வது..பொட்டிலே அடித்தது போல் இருந்தது. 'பிறர்க்கே உழைத்து ஏழையானேன்' என்ற திருமங்கை ஆழ்வாரின் வரிகள் வந்துபோயின.சரி, இதுவும்-அதுவும் அவனது இன்னருளே என்ற வழக்கமான மன தேற்றலோடு இருந்தேன். வெண்ணெய் பிரசாதம் கண்டருளினார் இந்த வருஷம் விஷேசமாக.. சாற்றுமறை முடிந்து இல்லம் திரும்பினேன். ஆனால் அந்த 'செங்குத்துப்'  பிரச்சனை முடிந்த பாடில்லை, வீட்டிற்கு வந்து மீதமுள்ள மெயில்களுக்கு எல்லாம் ரிப்ளை செய்து இரவை ஓட்டினேன்.. மறு நாள் தான் இரயிலில் மேலுள்ள சம்பாஷணை.. 

Friday, September 8, 2017

செம்மஞ்சேரி ஆண்டாளும் சோழிங்கநல்லூர் பால்கோவாவும்

செம்மஞ்சேரி ஆண்டாளும் சோழிங்கநல்லூர் பால்கோவாவும் -
நாவலூர் அலுவலகம் நாலு வருசமா போனாலும், பேருந்தில் போகும் போது பார்ப்பதுண்டு - குறை தீர்க்கும் கோவிந்தன் ஆலயம் என்று பளீச் வடகலை திருமண்ணோடு.. சரி, இன்னிக்கு சாயங்காலம் போகலாம்ன்னு நினைத்து ஆபிஸ் போனாத்தான், இராத்திரி பத்து மணிக்காவது கிளம்பமுடியும். அப்போ எங்க கோவில் போறது, பெருமாளே ஆண்டாள் சொன்னது மாதிரி (பள்ளிகொள்ளுமிடத்து அடிகொட்டிட) ஸ்ரீரங்கம் போயிருப்பார் தாச்சிக்க(தூங்க). மறுநாளும் இதே கதை தான்.. ஒருமுறை நண்பரை அழைக்க, அவர் வேற ஏதோ தெய்வத்து கோவிலைக் கூறி அழைக்க, பிளான் கேன்சல். அப்பறம் சோழிங்கநல்லூர் வாசத்தில் (உறங்க மட்டும் வீட்டிற்க்கு வருவதால் அது வாசம் தான் ) அந்தக் கோவிலை நினைக்கவே இல்லை. 'என்னில் முன்னம் பாரித்து' என்பது இந்தப் பெருமானுக்கு இருக்காது போல.. அஞ்சு வருசமா பாரிக்கவே இல்லை, கோவில் பக்கத்தில் இருக்கும் கிரௌண்ட்ல் கிரிக்கெட் விளையாடப் போனாலும்.. இன்னிக்கு என்னாமோ பிளான் பண்ணி, கடைசில அங்க போக உத்தேசமானது..

நல்ல, பழமையான கிராமம். ஊரின் பழைய பெயர் 'செம்மன்னன் சேரி'.. இப்போ 'செம்மஞ்சேரி'.. சௌனகர் திருக்கடல்மல்லை போகும் முன் இங்கு வந்ததாகச் சொல்கிறது ஒரு வரலாறு.. கோவில் உடுப்பி மன்னர் ஆட்சியில் கட்டப்பட்டதாக இருக்கலாம். (ஆங்காங்கு தென்கலை திருமண்ணும் இருந்தது ). கோவில் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது.. அட 'சன்னதித் தெரு' என்ற பெரிய போர்டு. அப்பறம் கோவில் வாசல், வாசலில் பூக்கடை.. கிராமம் என்றாலும் ஐடி தாக்கம் நன்றாய் தெரிந்தது விலையில், 'துளசி முழம் 25 ரூவா, முல்லை முழம் 25 ரூவா சாமி'... சரி இந்த ஹெல்மெட் இங்க இருக்கட்டும், என்று பூ வாங்கிக்கொண்டு உள்ளே போக, கோவில் என்பதற்கு உறுதியாக, கார், டூவீலர் பூஜை நடந்து முடிந்திருந்தது, எலுமிச்சம்பழம் நசுக்கப்பட்டு, நம் கால்களிலும் மிதிப்பட்டது. சரி, இவர்கள் 'எல்லாம்' படித்தவர்கள் இல்லை என்ன செய்வது..

நல்ல விசாலமான இடம்.. இந்து சமய அறநிலையத்துறைக்கு நல்ல லக், விண்ணைமுட்டும் கட்டங்கள் நிரம்பி வழியும் இடத்தில் இப்படி ஒரு கோவில்... நுழையும் போதே, வேணுகோபாலன் சந்நிதி. கொடிமரத்தோடு கூடிய 6 சன்னதிகள் கொண்ட கோவில். பழைய கோவில் படத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், கோவில் இப்போது இழைக்கப்பட்டுள்ளது எனலாம். நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீனிவாசர் ஸ்ரீதேவி, பூதேவியோடு, தனிச் சந்நிதியில் அலர்மேல் மங்கை தாயார், ஆண்டாள் எல்லாரும்.. சக்கரத்தாழ்வார் - நரசிம்மர் இல்லாது இப்போ இருக்கற கோவிலா., இராமர் பரிவாரம், அனைத்து ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் திருமேனிகள்.. ,சிறிய வடிவில் அழகிய உற்ஸவ மூர்த்திகள்., சிறிய வாகனங்கள்.. பொதுவாக கும்பகோணம் பக்கம் காணப்படும் 'வெண்ணைக்கு ஆடும் கண்ணன்' (ஒரு கையில் வெண்ணையோடு கொஞ்சம் பிடிவாதமாய் ஆடும் கிருஷ்ணன்) இங்கு இருக்கிறார்.. சென்னையில் வேற எங்கையும் பக்க முடியாது.. ஏதோ நாயக்கர் நிர்வகித்திருப்பார் போல.. 

அர்ச்சகரிடம் சிறிது பேச்சுக் கொடுத்தேன் - 'அண்ணா, முன்ன யாரும் வறதில்ல, ஐடி வந்ததோ, நல்ல கூட்டம், கோவில் வருமானத்திற்கு குறைவில்லை.கோவில் கீழ இறங்கி விழற மாதிரி போயிருத்து.. இந்த ஐடிகாரா தான் முழுசா கட்டியிருக்கா.. வைகுண்ட ஏகாதசிக்கு 25,௦௦௦ பேர் வரா.. கோவில் நன்னா நடக்கறது, பட்டர் தான் இல்லை., நான் மைலாப்பூர், இங்கயே வந்துட்டேன்., அவர் தாசில்தார் ஆபிஸ்ல் வேலை பார்த்து ரிட்டயர்டு ஆனவர், இப்போ சன்னதி பார்க்கரா.. அரசாங்கக் கோவில், உற்ஸவம் எல்லாம் பண்ண முடியாது.. எல்லாத்துக்கும் இவ்வளவு தான்னு ஒரு தொகை சொல்றா...'.. தாயார் சன்னதியில் இருந்த அர்ச்சகர், ஒரு முதியவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்..'இப்போதாவது வந்து கைங்கர்யம் பண்ணனும்னு எண்ணம் வந்ததே, அதுவே தாயார் அனுக்கிரகம், அதுக்கே சந்தோசப்படணும்..' ஆஹா, என்ன ஒரு பெரிய அர்த்தம்.. வேதமும், ஆழ்வாரும் இதைத்தானே சொல்கிறார்கள் (இவையென்ன உலகியற்க்கை), இவரும் இந்த இந்தச் சின்ன கிராமத்தில் சொல்கிறாரே என்ற ஆச்சர்யம்.. திருப்பாவை கல்வெட்டாய் மிளிர்கிறது. அந்தப்பக்கம் அலுவலகம் போறவங்க எல்லாம் இங்க போய்ட்டுவாங்க.. அது வேற உலகம், அவ்வளவு அருமை!"ஓஎம்ஆர் திருப்பதி" என்று மாறும் காலம் வெகு தூரம் இல்லை..இப்போது வரும் தெலுங்கு பேசும் பக்தர் கூட்டம் இதை நிரூபிக்கிறது, மேற்கொண்டு செய்யப்படும் வாகன பூஜைகள் எல்லாம். சீக்கிரம் ப்ரம்மோற்ஸவம் காணுவார் பெருமாள்.. 

கோவிலிருந்து கிளம்பினோம்., நண்பரின் காலில் மீண்டும் எலுமிச்சம்பழம் மிதிப்பட்டது.. கோவிலின் நேர் எதிரில் சிரித்த முகத்தோடு ஜெ.. ஆம்., 'அம்மா உணவகம்'..இராணி மங்கம்மாள் ஒரு நிமிஷம் கண் முன் வந்து போனார்.. இராணி மங்கம்மாள் செய்த நற்காரியங்கள், பேரனாலும், விசுவாசமாய் இருந்தவர்களாலும் அவருக்கு ஏற்பட்ட வருந்தத்தக்க முடிவு/இறப்பு எல்லாம்..

வரும் வழியில் சோழிங்கநல்லூர் அரசு பால் பண்ணையில் பால் சாப்பிட்ட போது (பால்,தினம் வாங்கும் பாக்கெட்டை விட மிக சுவையாக இருந்தது.. இவர்கள் எல்லாம் ஐடி கம்பனிகளில் ஒரு கடை ஓபன் பண்ணலாம்., பணம் அரசுக்காவது போகும்), அங்க பால் கோவாவும் பேமஸ் என்று தெரிந்தது.. சரி ஆண்டாளையும் பார்த்தாச்சு, பால் கோவா வாங்க வேண்டியது தான்.. அட இது நம்ப அரசாங்க முத்திரையோடு, அதான் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தோடு..











more details & photos at temple site ..
http://semmancheri-srinivasa-temple.blogspot.in/

Tuesday, August 15, 2017

படைத்திறல் பல்லவர்கோனும் பரம வைஷ்ணவன் பாண்டியனும்

தம்பியொடு தாமொருவர் தந்துணைவி  காதல் துணை யாக முனநாள்
வெம்பியெரி கானகமு லாவுமவர் தாமினிது மேவு நகர்தான்
கொம்புகுதி கொண்டு குயில் கூவ மயிலாலு மெழிலார் புறவு சேர்
நம்பியுறை கின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நன்னு மனமே - பெரிய திருமொழி 5-10-6

(மரக்கொம்புகளில் தமது தோகைகளை அசைத்து அசைத்து குயில்கள்
கூவ, மயிலினங்கள் ஆடிக்கொண்டிருக்க எழில் நிறைந்த பொழில் சூழ்ந்த
சோலைகளால் சூழப்பட்ட இந்த நந்திபுர விண்ணகரத்தில்தான் தன்
மனைவியொடும் தம்பியொடும் கொடிய கானகமெல்லாஞ் சுற்றித்திரிந்த
ராம்பிரான் உறைகிறான் )

குடைத்திறல் மன்னவ னாயொருகால் குரங் கைப்படை யா,மலை யால்கடலை*
அடைத்தவ னெந்தைபி ரானதி டம்மணி மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி*
விடைத்திறல் வில்லவன் நென்மெலியில் வெருவச்செரு வேல்வலங் கைப்பிடித்த*

படைத்திறல் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே* -பெரிய திருமொழி 

(நென்மெலியென்னும் நகரத்தில் காளையின் வலிவுபோன்ற வலிவையுடையனான வில்லவனென்கிற அரசன் அஞ்சி நடுங்கும்படி யுத்தத்திற்குக் கருவியான வேற்படையை வலக்கையிலே பிடித்தவனும் ஆயதங்களை ஆளத்தக்க மிடுக்கை யுடையனுமான பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே) 


                                 இன்று, சுதந்திர தினம். அலுவலகத்தில் தேசியக் கொடி கொடுக்க முற்படும் போது (ஒரு ஈமெயில் மூலம் தகவல் சொல்லி), 'ஸ்வீட்ஸ் அட் மை டெஸ்க்' என்ற மெயில்-க்குக் காட்டும் அக்கரையில் பாதி கூட யாரும் காட்டவில்லை. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. ஒருவர் என்னிடம் வாதிட்டார், இன்று ஒரு உலக நடிகர் பேசுவது போல் -எது சுதந்திரம் என்று.. கொஞ்சமல்ல, நிறையவே கவலையாக இருக்கிறது.. நாம் சுதந்திரத்தின் பெருமையை, ஆனந்தத்தை இழந்து வருகிறோம்.நாம் பட்ட அடிமைத்தனம் என்ன என்பதைத் தெரியாமலே அடுத்த தலைமுறை வளர்கிறது, நம் கல்வியும் போதிக்கவில்லை. சரி அதிருக்கட்டும்.

                                    'பெற்ற தாயினும் பிறந்த பொன்னாடும், நற்றவ வானினும் நனி சிறந்தனவே'. இந்த பொன்மொழிகள் எந்தக் காலத்திலும் பொருந்தும்.  பொதுவாக, நம் நாட்டு விடுலைக்குப் பாடுபட்டவர்களைப் பற்றி எழுதுவது இந்த நாளில் என்றிருந்தது. சற்றே மாறுதலாக, பாண்டியன்-பல்லவன் பற்றி எழுத முற்பட, வழக்கம் போல் நம் 'சாண்டில்யன்' துணைகொண்டு. இவர்களுக்குள் நடந்ததும் ஒரு சுதந்திரப்போர் தான். பரங்கியர் நம் நாட்டில் ஊடுருவி, நம் சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டதால் நாம் போராடி அதை மீட்டோம். இதே நிலை தான் ஆதி முதல் ஆண்ட மன்னர்களிடத்தும். தங்கள் எல்லையை ஒரு மன்னர் விஸ்தீரிக்க நினைக்க, மற்றவரின் சுதந்திரம்  அதனால் பறிபோகிறது. பெரும் போர்கள் நிகழ்ந்தது, வாழை அடி வாழையாக.

                                  புத்தகத்தில் படங்கள் எதுவும் இல்லை. இந்த முறை நாமே ஒரு படம் வரையலாம் என்று எடுத்து சில மணிகள் செலவிட்டு வரைந்தது இந்தப்படம். உள்-வெளி கோட்டைகள், பல்லவ மன்னன் நிர்மாணித்த வைகுந்தப் பெருமாள் கோவில், மன்னன் (மல்லனோ, பாண்டியனோ உங்கள் யூகம்), நீள் விழி. இந்தப் புத்தகத்தின் மூலம், பள்ளியில்-கல்லூரியில் கற்ற வரைகலைக்கு புத்துயிர் கொடுக்க முடிந்தது. மெஷின் ட்ராயிங், இன்ஜினியரிங் ட்ராயிங் எல்லாம் வரைந்து, இப்போது மன்னர் முகம், கோட்டை எல்லாம் வரைய கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது. 

                                    'நீள்விழி' என்ற இந்த நாவல் ஜடிலன் பராந்தக நெடுஞ்சடையன் என்ற பாண்டிய மன்னனுக்கும், நரசிம்மவர்மன் (சிவகாமியின் சபதம்) வழியின் ஐந்தாவது தலைமுறைக்கும் சில நாட்களே நடந்த பெரும் போர். சிவகாமியின் சபதத்தில் கல்கி எப்படி மகேந்திர வர்மனின் இராஜ தந்திரங்கள், போர் முறை பற்றிக் கூறினாரோ, அது போல் இங்கு சாண்டில்யன் பாண்டியனை ஒரு சூப்பர் ஹீரோவாக சித்தரித்துள்ளார்., உண்மையும் அது தான். ஜடிலன் இருந்த வரை பல்லவர்கள் தலை எடுக்க முடியவில்லை. கதை நடக்கும் காலம் ஏழாம் நூற்றாண்டு. தமிழகத்தில் வைணவம் விரைந்து வளர்ந்து, பல சாம்ராஜ்யபதிகள் வைணவர்களாக இருந்தார்கள். பராந்தகனும், பல்லவ மல்லனும் 'பரம வைஷ்ணவர்கள்' என்று இந்த நூல் முடிவு வரை கூறுகிறது (நூல் மட்டுமல்ல, செப்பேடுகளும்) வைஷ்ணவ லக்ஷணம் என்ன என்பது உட்பட. 

                                   சாண்டில்யன் என்ற பாஷ்யம் ஐயங்கார் ஒரு வைஷ்ணவர். அவர் இது சம்பந்தமாக கற்ற கல்வி, கண்ட விஷயங்கள் எல்லாம் கற்பனையின் விழுதாய் கதையில் நுழைந்துள்ளது. ஜடிலன் ஒரு வேதாந்தி என்று அறிமுகம் செய்துவிட்டு வேதாந்த விஷயங்கள் எல்லாம் அவ்வப்போது நுழைக்கிறார்.  சாண்டில்யனின் சொல் விளையாட்டு இதில் கொஞ்சம் வெளிப்படுகிறது. அது பற்றி அவரின் நெருங்கிய உறவினர் சொன்ன ஒரு நிகழ்வு. நான் அமெரிக்காவில் பணியின் காரணமாய் இருந்த போது அங்கு கிடைத்த நண்பர்களில் முக்கியமானவர் - அரங்கராசன் ஸ்ரீநிவாசன் (http://rangasrinivasan.blogspot.in/). இவருக்கும் இந்தக்கதைக்கும் என்ன சம்பந்தம்- திருமங்கையாழ்வாரும், சாண்டில்யனும் தான். திருமங்கையாழ்வார்  எனில் மயலே பெருகும்  எண்ணமுடையவர் அரங்கராசன்., நந்திவர்மன்  வைஷ்ணவனாதலால் நிறைய கோவில் கைங்கர்யங்கள் செய்துள்ளான். பன்னிரு ஆழ்வார்களில் கடைசியான திருமங்கையாழ்வார், நந்திவர்மனின் போர்த் திறம், கோவில் திருப்பணி பற்றி 'பரமேச்சுவர விண்ணகரம்' என்ற திவ்ய தேசத்தைப்பற்றி சொல்லி, மன்னனையும் பாடியுள்ளார் (மேலுள்ள பாடல் பார்க்க. இது போல் பத்து பாடல்களை பாடியுள்ளார்). 
    
                                  நாதன் கோவில் என்ற நந்திபுர விண்ணகரம் என்ற ஊரையும் இந்த மன்னனே ஸ்தாபித்தார். மன்னர்கள் என்னதான் கோவில் கட்டிச் சென்றாலும் இன்று பாதுகாக்க வேண்டியது நம் கடமை. இல்லைன்னா யுனெஸ்கோ வரை நம் 'புகழ்' நாறிவிடும். நம்ப அரங்கராசன் இதை மட்டுமே ஒரு வேலையாக/கைங்கர்யமாக எடுத்து தஞ்சைச் சுற்றியுள்ள வைணவ கோவில்களில் 'பெரும்' பொருட்செலவு செய்து திருப்பணிகளை/கைங்கர்யங்களைச்  செய்து வருகிறார். முக்கியமாக, திருவாலி என்ற வைணவ திவ்ய தேசத்தை தன் சொந்த ஊராகவே மாற்றி கைங்கர்யம் (இவை பற்றி வேறு பதிவில் கூடுதலாக) பல செய்து வருகிறார். அரசன் கட்டியதைக் காக்க 'அரங்கத்தரசு' (அரங்கராசன்) தான் வர வேண்டும். அரசாங்க உதவி எதிர்பார்க்காமல் நாமே இது போன்ற புராதன கோவில்களைக் காக்க வேண்டும். இவர் சாண்டில்யனின் உறவினர் . ஒரு முறை சாண்டில்யன்,  இவரின் மிருதங்க அரங்கேற்றத்திற்கு வந்த போது சொன்னது இது  தன்னுடைய வாழ்த்துரையில் - "இவன் (அரங்கராசன்) பாட்டுக்கு வாசிக்கறானா?, இல்லை இவன்பாட்டுக்கு வாசிக்கறானா? என்றில்லாமல் அருமையாக வாசித்தான்". சாண்டில்யனின் வார்த்தை விளையாட்டுக்களில் இது ஒரு ரியல் டைம் சாம்பிள்.


பேக் டு நீள்விழி

                                          இரண்டாம் நந்திவர்மன் என்கிற பல்லவ மல்லன் 732 - 796-களில் தென்னிந்தியாவை ஆண்ட பல்லவ மன்னன். பல்லவ மன்னன் பரமேச்வரவர்மனுக்கு குழந்தை இல்லாததால், அமைச்சர்கள் கம்போடியா சென்று அங்கிருந்த பல்லவ வம்சாவளி அரசர்களை அழைக்கின்றனர். யாரும் வர மறுக்க, நந்திவர்மன் பன்னிரண்டு வயதில் அரியணை ஏறுகிறார் தமிழகம் வந்து, காஞ்சியைத் தலைமையாகக் கொண்டு. இவர் காலத்தில் பல்லவ சாம்ராஜ்யம் விரிகிறது என்பதை விட, பாண்டியர்களை எதிர்த்து காப்பாற்றினார் என்றே சொல்லலாம். அந்த தலைமுறை பாண்டியர்கள் மிகவும் வலு உடையவர்களாக இருந்தனர்..ஏழாம் நூற்றாண்டிற்கு முன் தமிழகத்தில் வாதாபி சாளுக்கியர்,காஞ்சி பல்லவர், மதுரை பாண்டியர்கள் மாமன்னர்களாக தன்னை உயர்த்திக்கொள்ள பெரும் போர்கள் செய்தனர். பின், சாளுக்கியர் சற்றே பின்வாங்க, பல்லவர் ஆதிக்கம் அதிகமானது. சோழநாடும் பல்லவர்களுக்கு அடிமைப்பட்டிருந்தலால் பாண்டியர்கள் சோழப் படையின் துணைகொண்டு பல்லவர்களை எதிர்த்தனர். சிலவற்றில் வெற்றியும் பெற்று, பல்லவர்கள் மேலும் தங்கள் எல்லையில் வராதவாறு பார்த்துக் கொண்டனர். ஆனால், முழுதும் பல்லவ சாம்ராஜ்யத்தை அழிக்க முற்படவில்லை. 

                                          கதை முழுதும் 'பெண்ணாகடம்' என்ற காவிரிக்கரை ஊரில் நடக்கிறது. சோழ நாடு, பல்லவ நாட்டிற்கு அடிமையாய் இருக்கிறது. தஞ்சை போகும் வழியில் காவிரிக்கரையில் ஒரு ஊரை கோட்டைகளோடு உருவாக்கி சோழ நாட்டைப் பலப்படுத்த நினைக்கிறார் சோழன், தர்மாதிகாரி துணையோடு. கதையில் 5-6 முக்கிய கதாபாத்திரங்கள் தான்.  தர்மாதிகாரி, ஜடிலன் பாண்டியனை (765-815) பல்லவர்களுக்கு எதிராக போர் புரிய அழைக்கிறார். நல்ல வீரனை அனுப்ப, நாமே போகலாம்ன்னு பாண்டியனே வாரான் இந்த பெண்ணாகடத்திற்கு. நீள்விழி, அழகும், நீள் விழிகளும் பொருந்திய சோழன் மகள். அவளை அடையவும் இந்த போர் எனலாம். கொங்கு தேச அரசரும், பல்லவனும் அதற்க்கு முயன்றனர். இடையில் நம்ப பாண்டியன், "கடைசியில் அவள் இடையைப் பற்றியதும் பாண்டியனே!" (சாண்டில்யன் பாஷையில் சொல்வதானால்). நீள்விழி இந்த பெண்ணாகடத்தில் இருக்கிறார், சொந்த நாட்டில் சிறை போல். இந்த ஊர் உள் கோட்டை, வெளிக்கோட்டை, வாவி, தோப்புகள் என்று நதிக்கரையில் சொர்க்கம் போல் நிர்மாணிக்கப்பட்டது.  ஊருக்கு ஒரு உளவாளி இருப்பது போல், சோழனின் தளபதி- விஜயன் பல்லவனின் உளவாளி. 

                                         பாண்டியன் ஒரு சாதாரண மனிதன் போல் உள்ளே நுழைகிறான். சோழர்களின் பரம்பரை வாள் இவனிடம் ஒப்படைக்கப்படுகிறது. அது மிகப்பழமையானது, கரிகாற்ச் சோழன் வீசிய, பிடியில் வைரங்கள், இரத்தினங்கள் பதித்த வாள். அதைவைத்து பல்லவ மன்னனோடு சண்டையிடுகிறார். கரிகாற்ச் சோழனுக்கு பின் ஏழு தலைமுறைக்கு இது பயன்படாது. ஒரு அரச வேதாந்தி தான் இதைப் பயன்படுத்தி நாட்டை மீட்பர் என்று ஓலையில் எழுதப்பட்டதாக சொல்கிறார் தர்மாதிகாரி-மாறன்காரி (இவரும் வைஷ்ணவர், மதுரைச் சேர்ந்தவர், சோழனிடன் இருந்தார் என்கிறது வரலாறு) . கேட்கவே வேண்டாம், ஜடிலன் வேதாந்த மழையே வர்ஷிக்கிறான். 'பெரிய சாம்ராஜ்யத்தை நிர்வகிக்க பெரிய படை வேண்டும், இல்லை வெற்றி கொள்ளப்பட்ட அரசர்கள் சிற்றரசர்களாக இருக்க வேண்டும்' .. இது இன்று வரை உண்மை என்பதை பல தருணங்களில் காணலாம்.

                                     அரச குமாரியின் தனி  'வாவி'யின் அழகை வர்ணிக்க சாண்டில்யனுக்கு கேட்கவா வேண்டும், கூடவே நீள்விழி வேறு. ஜடிலன் திட்டமிடுவது விஜயன் மூலமாக நந்திவர்மனுக்குத் தெரிகிறது. அதற்குள் ஜடிலன் உள்-வெளி கோட்டைகளைப் பலப்படுத்துகிறார். 'மதுரை' கூல வணிகன் அப்போது முதல் இருந்திருக்கிறார்கள். அவர்க்கு ஒரு ஓலை மூல செய்தி செல்கிறது ஜடிலனிடத்திருந்து. சில நாட்களில் மதுரை முத்துக்கள் எல்லாம் வந்து இறங்கி வியாபாரத்தளமாகிறது பெண்ணாகடம். காலத்திற்கு ஏற்றாற்போல், இதுல ஒரு வைஷ்ணவ துறவி தான் பல்லவனின் அந்தரங்க உளவாளி. பிற்காலங்களில் புத்த துறவிகள் இருந்திருக்கிறார்கள். நந்திவர்மன் படை வருவதற்குள் உட்கோட்டை முழுதும் இருந்த வணிகர்கள், பாண்டிய வீர்களாக மாறுகிறார்கள். பல்லவன் படை காவேரியின் அக்கரையில் தங்கி, படை எடுக்க தயாராகிறது. போர் முரசு கொட்டுகிறது., ஜடிலன் பொறுத்திருந்து பாய்ந்து, தாக்குகிறார். பல்லவன் புரவிப்படை மட்டும் வைத்துத் தாக்க, பாண்டியன் பாகுபலி படம் போல் சரம் போல் அம்புகளைப் பொழிந்து, புரவிப்படையை காலாட்படையாக மாற்றுகிறார். பல்லவன் நிலை குலைய, பாண்டியனை நேரடி சண்டைக்குப் போகிறார். கடும் சண்டைக்குப் பிறகு, பல்லவன் தலையில் பாண்டியன் அடிக்க பல்லவன் சரிக்கிறார். பாண்டியன் அவரைக் கொல்லாமல் 'மாவீரன், ஒரு வைஷ்ணவனைக் கொல்லக் கூடாது' என்கிறார். பல்லவர் படை பின்வாங்க பின் நடப்பது நமக்கே தெரியும். சாண்டில்யன் வரிகளில் முடிவுரை - 'புரவியின் மீதிருந்த  நீள்விழியின் இடையைச் சுற்றி பாண்டியன் இடது கையும் ஊர்ந்தது'.. 


மேலும் சில விஷயங்கள்:

* "பரம வைஷ்ணவன் தானாகி நின்றிலங்கு மணி நீள் முடி நில மன்னவன்" என்று பாண்டியனை சீவரமங்கல செப்பேடுகள் சொல்கிறது. 

* கதையில் வைஷ்ணவ சின்னங்கள் (ஸ்ரீ சூர்ணம்) தரித்து மன்னர்களும், மற்றவர்களும் இருந்ததாய் சொல்லப்படுகிறது. 

* நந்திவர்மன்-II அவரின் பேரன் நந்திவர்மன்-III .. இவருக்குத்தான் தமிழ் இலக்கியமான 'நந்திக் கலம்பகம்' பாடப்பட்டது. தமிழ் புலவர்கள் அறம் பாடி அழிப்பர் என்பதைக் காட்டவே இது எழுதப்பட்டு, அதை மன்னனே நிரூபிக்கிறார். அதில் வரும் பாடலுக்கு ஏற்ப அவரே இறக்கிறார் தமிழ் சொல்லை மெய்ப்பிக்க.. அதாவது, புலவர்களின் அறச் சொல்லுக்கு வலிமையுண்டு என்பதை விளக்க. இப்போது நினைக்கலாம் என்ன வகையில் தமிழ் பாடல்கள் உள்ளதென்று. 

* பல்லவ நாட்டை அறுபத்தைந்து ஆண்டுகள் ஆண்ட இரண்டாம் நந்திவர்ம பல்லவன் மிகச் சிறந்த திருமால் பக்தனாகத் திகழ்ந்தான். பல பழைய கோயில்களைப் புதுப்பித்தான். புதிய கோயில்களைக் கட்டினான். காஞ்சியில் உள்ள வைகுந்தப் பெருமாள் கோயில் (பரமேசுவர விண்ணகரம்), முக்தேசுவரர் கோயில், கூரத்தில் உள்ள கேசவப் பெருமாள் கோயில் முதலியன இரண்டாம் நந்திவர்ம பல்லவன் கட்டிய கோயில்களாம். சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சிபுரத்தின் மீது படையெடுத்து வந்து இரண்டாம் நந்திவர்ம பல்லவனை வென்று காஞ்சியைக் கைப்பற்றினான். கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட மற்றக் கோயில்களுக்குத் தாராளமாக நன்கொடைகள் தந்து, சில காலம் காஞ்சியில் தங்கியிருந்துப் பின்னர் சாளுக்கிய நாடு திரும்பினான். பகை அரசனையும் பக்தி எனும் சரடு பிணைத்திருந்ததை இதனால் அறிய முடிகிறது. (தமிழ் விர்ச்சுவல் லைப்ரரி - tamilvu)

* பாண்டியரது செல்வாக்கு வளர்வதைக் கண்ட நந்திவர்ம பல்லவன் கொங்கு மன்னருடனும், கேரள மன்னருடனும் தகடூரை ஆண்ட அதியமானுடனும் உடன்படிக்கை செய்து கொண்டு வலிய கூட்டணியை அமைத்தான். பாண்டியன் இக்கூட்டணியை வென்றான். கொங்கு நாடு பாண்டியர் வசமானது. கொங்கு அரசன் பாண்டியனால் சிறை பிடிக்கப்பட்டான். அதியமான் தோற்றான். பாண்டிய நாட்டுப் படை பல்லவ நாட்டை ஊடுருவிச் சென்றது. தஞ்சை மாவட்டத்தின் மையத்தில் உள்ள, ‘இடவை' எனும் இடத்தில் பாண்டியன் பாசறையை அமைத்தான். பாண்டியனை வெல்வதற்கு நந்திவர்ம பல்லவன் செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது. சாளுக்கிய மன்னன் இரண்டாவது விக்கிரமாதித்தன் காஞ்சியின் மீது படையெடுத்து, வந்து, வென்று கைலாசநாதர் கோவிலுக்கு நன்கொடைகள் வழங்கிச் சென்றான். இராட்டிரகூட மன்னன் தந்திதுர்கனுக்கும், பல்லவ நந்திவர்மனுக்கும் போர் நடந்தது. பல்லவமன்னன், இராட்டிரகூட மன்னன் மகள் ரேவாவை மணந்து கொள்ளவே, பகை நட்பாக மாறியது. பல்லவரது செல்வாக்கு சரியத் தொடங்கியதை இந்நூற்றாண்டு அரசியல் வரலாறு பதிவு செய்கிறது. (தமிழ் விர்ச்சுவல் லைப்ரரி - tamilvu)








Monday, August 7, 2017

மதுரையின் பெண்ணரசி - இராணி மங்கம்மாள்

இராணி மங்கம்மாள்
                                    இராணி மங்கம்மாள் அவர்களை பற்றி ஏதாவது படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தேடிய போது எழுத்தாளர் முத்து ஸ்ரீனிவாசன் அவர்கள் இந்தப் புத்தகத்தை சஜ்ஜஸ்ட் செய்தார். இந்த புத்தகத் திருவிழா போனதின் நோக்கம் இதையும் வாங்கத்தான். முதல் வரிசையிலேயே ஒரு கடையில் இருந்தது. எழுத்தாளர் நா.பார்த்தசாரதி, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் இருக்கும் நதிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். எனக்குத்தெரிந்து இந்த ஊர் மூன்று எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறது - நா.பார்த்தசாரதி, முத்து ஸ்ரீனிவாசன், நரசய்யா(நரசிம்மன்). மூவரிடத்திலும் நான் இராணி மங்கம்மாள் பற்றி ஒரு விஷயத்தைப் படித்திருக்கிறேன். நரசய்யா அவர்கள் 'ஆலவாய்-மதுரை மாநகரத்தின் கதை' என்று ஒரு ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதியுள்ளார். மதுரை பற்றி கல்வெட்டு சான்றுகளோடு, மிக ஆழமான விஷயமுள்ள புத்தகம்.. மதுரையில் பண்டைய காலம் எப்படி இருந்தது, கள்ளர்கள் வெள்ளையர்களை விரட்டி திருமோகூர்-அழகர் கோவில் நகைகளை மீட்டது, பாண்டிய-நாயக்கர்களின் ஆட்சி, மீனாட்சி கோவிலின் பூஜை முறை, அதை ஆங்கிலேயர்கள் முறைப்படுத்தியது, மிராசு நியமித்தல், மங்கம்மா ஆட்சி நிர்வாகம் இப்படி பல சுவாரஸ்ய தொகுப்புகளாக, ஆதாரங்களுடன் திரட்டியிருக்கிறார் நரசய்யா.
                                 தீபம். நா.பார்த்தசாரதி அவர்களின் இராணி மங்கம்மாள் கதை, ஆதாரங்களைக் குறிப்பிடாமல் இயல்பாக நடந்தது போல் நகர்கிறது. அவர் ஆராய்ந்து எழுதியிருந்தாலும், மேற்கொள் தரப்படவில்லை சாண்டில்யன் போல் ஆங்காங்கு. கண்டிப்பாக வாங்கி படித்து, பாதுகாக்க வேண்டிய புத்தகம்.. புத்தகத்தைப் படிக்கும் போது 'பாகுபலி-2' ஓடிக்கொண்டிருந்தது. அதில் வரும் மகிழ்மதி இராணி சிவகாமி (ரம்யா கிருஷ்ணன்) கனகச்சிதமாகப் பொருந்தினார்.கதை முழுவதும் எனக்கு அந்த முகம் தான் தெரிந்தது. மங்கம்மாள் போல் தான் அவரும், குழந்தைகளைக் காப்பாற்றி அரசை நிர்வகித்தார். பெண்கள் நேரடியாக போரில் இறங்குவது கிடையாது, ஜான்சி இராணி விதிவிலக்காக இருக்கலாம். இராணி மங்கம்மாளும் அவ்வாறே. திறமையான நிர்வாகி. நேரடிப் போர்களைத் தவிர்த்து, பணிய வேண்டிய இடத்தில் பணிந்து, போர் புரிய வேண்டிய இடத்தில் தளபதிகளை வைத்துப் போரிட்டு பதினெட்டு ஆண்டுகள் நிர்வாகம் சேர்த்தார் எனில் சாதாரண விஷயமில்லை. அது எப்படிசாத்தியம், நம்ப ஐடி-ல கூட இன்டெர்னல் ப்ராஜெக்ட் மட்டும் பார்ப்பவர்கள் இருப்பார்கள், அவர்கள் கிளைன்ட் கூட நேரடியா வேல செய்யாம ப்ராஜெக்ட் திறம்பட நடத்துவார்கள்., அது ஒரு கலை. அது மாதிரித் தான் மங்கம்மாளும். வரும் பிரச்சனை, வரப்போகும் பிரச்சனை எல்லாம் திறம்பட கையாண்டு, போர்களைக் குறைத்து நாட்டை பலப்படுத்தினார், என்பதை விட வளப்படுத்தினார்.
                                        1689 முதல் 1704 வரை மதுரையை ஆண்ட மங்கம்மாள் காப்பாட்சியாளராகவே இருந்தார். எழுத்தாளர் மதுரை என்பதால் பல இடங்களில் அந்த வாசனை வருகிறது. கதை சித்திரைத் திருவிழாவிலிருந்து துவங்குகிறது. இன்றைய காந்தி ம்யூசியம் தான் மங்கம்மாள் அரண்மனை. தமுக்கம் தான் தோட்டம், விளையாட்டுத் திடல் எல்லாம். மங்கம்மாள் திரிசிராமலையையும் (திருச்சி), மதுரையையும் தலைமையாகக் கொண்டு ஆண்டுள்ளார். திருமலை நாயக்கர் ஆட்சியின் கீழ் மதுரை, திருச்சி மட்டுமல்லாது, கோவை, சேலம் , திருவிதாங்கூர் என்று பரவி இருந்தது. அவரின் ஆட்சியில் விஜய நகர பேரரசு கொஞ்சம் வலுவில்லாமல் இருந்தது, இவரின் இறைப்பணி, மக்கள் பணி எல்லாம் இவரை ஒரு பொற்கால ஆட்சியாளராக மாற்றியது. அவரின் பின் அறுவர் ஆட்சி செய்தாலும் கடைசிவரை வரலாற்றில் நிலைத்தது இராணி மங்கம்மாள். நாயக்கர்க்கே இருந்த இறைபணி இவர் ஆட்சியிலும் தொடர்ந்தது. ஆனால், நாயக்கர் மகாலுக்கு இவர் போனதில்லை, அதை விரும்பவும் இல்லை என்று இப்புத்தகம் சொல்கிறது.
                                        தனக்கு தனி அரண்மையை ஏற்படுத்தி இரண்டு தலைமுறைகளை ஆட்சியில் வைத்தார். இவரின் தந்தை லிங்கப்ப நாயக்கர் பெரிய இன்ஸ்பிரஷன். 'ஆறு கரடு முரடாய் ஓடி, பின் அமைதியாகி, மக்களுக்கு பயன்பட்டு கடலில் கலக்கும். அது போல் இருக்க வேண்டும்' இது இராணி மங்கம்மாளுக்கு தந்தை சொல்லித்தந்து ஒரு தைரியசாலியாக வளர்த்தார். கணவர் சொக்கப்ப நாயக்கருக்கு பின் பெரிய அரசை பதினைந்து வயது மகன் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் மூலம் நிர்வகித்தார். எதிர்பாராமல் இவர் மகன் அரசனானான். பெரிய போர்கள் செய்யவில்லை. அன்னை மங்கம்மாள், பிரதானி-இராயசம் அச்சையாவிடமும் ஆலோசனை செய்து ஆட்சி நடத்தினார். கிழவன் சேதுபதி இராமநாதபுரம் சீமையை ஆண்டான். அவர், நாயக்கருக்கு கப்பம் கட்டாமல் இருந்து தன்னை தனி அரசனாக அறிவித்துக்கொண்டார். சேதுபதி புத்தியில் சிறந்தவர். மறவர் சாம்ராஜ்யம் அமைக்க முடிவு செய்தார். மக்களும் உதவினார். அவர் என்ன சொன்னாலும் செய்ய, உயிரையும் கொடுக்க. அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர், இராமநாதபுரம் போர் தொடுக்க அதை சாதுர்யமாகக் கையாண்டு, தீர்த்தயாத்திரையாக மாற்றினார் சேதுபதி. இவரின் பலத்தால் தான் இன்று வரை, இராமநாதபுரம், மதுரை, சிவகங்கை பகுதிகள் மறவர் மக்கள் உள்ளதாய் இருக்கிறது. இவர் கடைசிவரை சிம்மசொப்பனமாக இருந்தார்.
                                           ஏழே ஆண்டுகள் அரசராய் வாழ்ந்த அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் அம்மை நோயால் இறக்க, சில மாதங்களில் அவரின் ஒரே மனைவியும் இறக்க, மங்கம்மாள் மீண்டும் இராணியானார். பச்சிளம் குழந்தை, தன் பேரன் விஜயரங்க சொக்கநாத நாயக்கருக்கு (1706 முதல் 1731) காப்பாளராக இருந்து ஆட்சி நடத்தினார். இராணி எதிர்பார்த்தது போல் பேரன் இல்லை. ஒருநாள் பேரன் தன்னைக் கொலை செய்வது போல் கனவில் கண்டார். இவரின் கனவு பல பலித்தது. அது போல் இதுவும். பேரனை தான் நேரடியாக வளர்க்க முடியாமல், அரண்மைனயில் இருக்கும் சிலர் நாயக்கருக்கு துர்-புத்திமதி சொல்லி தூண்டிவிட்ட, இராணிக்கு எதிராகத் திரும்பினார். இராயசத்துடன் இவரை இணைத்துப் பேசி, தன்னை அரசராக்கும் படி நிர்பந்த்தித்தார். இராணியே இவரைக் காவலில் வைக்க, அதிலிருந்து தப்பித்து, மங்கம்மாளை சிறைப்படுத்தினார். சாதாரணமானதல்ல, தனி அறையில் பட்டினி சிறை. ஆட்சியைக் கைப்பற்ற மந்திரி, சேனை எல்லாவற்றையும் 'சரி' காட்டினார். அன்ன சத்திரம், கோவில் பணிகள், மக்கள் நல திட்டங்கள் எல்லாம் தந்து மதுரையை ஆண்ட பெண்ணரசி முடியில் பட்டினியில் 40 நாட்கள் வாடி இறந்தார். அதோடு நாயக்கர் சாம்ராஜ்யம் மறையத் தொடங்கியது. 1732 இல் நாயக்க மன்னர் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் வாரிசு இல்லாமல் இறந்தபோது அவனது மனைவி மீனாட்சிக்கு ஆட்சிப் பொறுப்புக் கிடைத்தது. எனினும் அரசுரிமைப் போட்டியில் அவருக்கு உதவி செய்யும் சாக்கில் தலையிட்ட கர்நாடக நவாப்பின் மருமகனான சாந்தா சாகிப் அவரை சிறைப்பிடித்து மதுரை அரசையும் கைக்கொண்டார். இதன் மூலம் மதுரை நாயக்கர் வம்சம் ஒரு முடிவுக்கு வந்தது.மங்கம்மாளின் ஆட்சித்திறமை, நிர்வாகம், மக்கள் பணி எல்லாம் பின்னர் வந்த எவராலும் நிறைவு செய்யப்படாமல், இன்று வரை வெற்றிடமாகவே உள்ளது. அந்த சமூகம் சார்ந்த சிந்தனையில் ஆட்சி சென்றிருந்தால் கூட மதுரையும், திருச்சியுமாவது முன்னேறியிருக்கும்.


சில ஸ்வாரயங்கள் (சில புத்தகத்தில் நேரடியாக சொல்லப்படவில்லை ) -

** திருவிதாங்கூர் போர், மைசூர் போர், இராமாநாதபுரம் முற்றுகை என சில வெற்றிகளை தளவாய் நரசிம்மரையா மூலம் பெற்றார். நம்ப கதை மாதிரி தான். எங்கனாலும் நல்ல டீம் லீட் வேணும். இல்ல ப்ராஜெக்ட் பிரச்சனை தான்.
** முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சி செய்த போது, அவுரங்கசீப் என்ற மொகலாய மன்னர், தம் செருப்பை, நாடெங்கும் ஊர்வலமாக அனுப்பினார். அச்செருப்புக்கு எல்லாரும் மரியாதை செய்ய வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் வீரமிக்க முத்துவீரப்பர் அந்தச் செருப்பைத் தன் காலில் அணிந்து கொண்டு “உங்கள் மன்னர் இன்னொரு செருப்பை அனுப்பவில்லையா?” எனக் கேட்டார்.
** முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் பிரச்சனைகளை திறம்பட தாயும், மகனும் தீர்த்து வைத்தனர்.
** சௌராட்டிர மக்கள் மதுரையில் நிறைய இருந்தனர். ஒரு பிரச்சனையில் ஒரு குழு அமைத்து, அவர்களும் ஆவணி அவிட்டம் செய்யலாம், பிராமணர்கள் போல் பூணல் அணிய ஒரு சட்டம் போட்டார். அதுபற்றி தெலுங்கில் சாசனம் உள்ளது.
** மைசூர் இராஜ சிக்கதேவர் காவேரியில் தண்ணீர் தர மறுத்தலால்,பெரும் படை திரட்டி தளவாய் மூலம் காவேரி அணையை உடைக்க திட்டமிட்டு பாதி தூரம் சென்றுவிட்டார். அதற்குள் மழை அதிகமாகி அணை தன்னாலேயே உடைந்தது.
** கோவில் பணிகள் அளவில்லாது செய்தார். பெரு வெள்ளத்தின் போது, ஒரு நாள் கனவில் கொள்ளிடத்தில் தாம் புதைந்துள்ளதாக இறைவன் இவர் கனவில் கூற, அப்போது காவேரி வெள்ளம் வந்தது. மக்களுக்கு உதவி செய்து, ஒரு இடத்தில் தோண்ட அங்கு கிடைத்த சிலைகளை வைத்து கோவில் கட்டினார்.
** ஒருமுறை, தன்னை மறந்து இடது கையால் வெற்றிலை போட, அதனால் ஆட்சிக்கு தீங்கு வரக்கூடாது என்று எண்ணி, பல திருக்கோவில்களுக்கு தர்மங்கள் செய்தார். ஏழு ஏகாதசி கிராமங்கள் அமைத்து அதில் பிராமணர்களைக் குடிஅமர்த்தினார். திரளி, நதிக்குடி, அச்சன்தவிர்த்தான் இன்னும் நான்கு கிராமங்கள் என்று ஒரு செவி வழி செய்தியும் உள்ளது. அங்கு தெலுங்கு பேசும் வைஷ்ணவர்களைக் குடிஅமர்த்தினார்... இது போல் காரணத்தால், உ.வே.சா. பிறந்த உத்தமதானபுரம் தஞ்சை மன்னரால் உருவாக்கப்பட்டது. ஒரு இடது கை வெற்றிலைக்கே இப்படி.. இப்போது ஒன்னும் சொல்றதுக்கில்லை.
** அன்ன சத்திரங்கள் கட்டினார். மனிதர்களுக்கு மட்டுமில்ல.. சாலை வழி நெடுக நீர் தொட்டிகள் அமைத்து, ஆடு-மாடு போன்ற உயிரினங்களுக்கும் பசியாற்றினார். இன்றும் மங்கம்மாள் சத்திரம் மதுரையில் உள்ளது.. ஆனால் சத்திரமாக இல்லை, வணிக நிறுவனங்கள், அரசு அலுவலங்கள் இருக்கு. பொது மக்களுக்காக குடிநீர் ஊரணிகள், கிணறுகள் ஆகியவற்றைத் தோண்டச்செய்தார்.
** ஒருமுறை, இராணியின் உறவினர் மரண தண்டனை தவறு செய்ய, நீதிபதிகள் செய்வதறியாது திகைத்தபோது, மங்கம்மாள் உரிய தீர்ப்பு வழங்கினார் உறவினர் என்றும் பாராமல்.
**மங்கம்மாள் மதுரை சித்திரை திருவிழாவை தவறவிட்டதில்லை, அழகர் வைகை வருவது உட்பட. திருவிழாவின் ஒரு நாள் மங்கம்மாள் செங்கோல் மீனாக்ஷி முன் வைத்து வழிபடுவார். அது இன்றும் நடைமுறையில் உள்ளது.
**கடைசி வரை கிழவன் சேதுபதி சூப்பர் ஹீரோவாகி, வெல்ல முடியாதவராக இருந்தார். மதுரையையும் பிடித்தார் மங்கம்மாள் மறைவுக்குப்பின்.
** அவர் ஆட்சிக்கு உட்பட்ட இடம் தவிர, எங்கும் கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சேதுபதியின் பங்காளி-தடியத்தேவர் மூன்று மனைவியர்களை விவகாரத்து செய்துவிட்டு கிறிஸ்துவமதம் மாறினார். இது பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி, தாக்குதல் அதிகமானது. மற்ற இடங்களில் நிறைய மத மாற்றங்கள், ஆசையினால் நடைபெற்றன. மங்கம்மாள் அவற்றை ஆதரிக்காமலும், எதிர்க்காமல் அனைவரையும் ஒருகுடி மக்களாகப் பார்த்தார்.
** திவ்ய பிரபந்தங்களுக்கும், அரங்கனுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். இறக்கும் தருவாயில் இவர் மகன் கூட திருவரங்க வைஷ்ணவரின் குரலில் 'துளங்கு நீள்முடி' பாசுரம் கேட்டதாக புத்தகம் சொல்கிறது.
** இன்றும் மதுரை பக்கம் சொல்லப்படும் பல செவிவழிச் செய்திகளுக்கும், கர்ண பரம்பரை கதைகளுக்கும் காரணமாகி இருந்தாலும், சிறந்த நிர்வாகியாகவும், ஆட்சியாளராகவும் சரித்திரத்தில் இடம் பெற்றார் மங்கம்மாள். சோழவந்தான் அருகில் அணைப்பட்டி என்ற கிராமத்தில் வைகை பாய்ந்து ஓடும் ஆற்றங்கரையில், பாலம் கட்ட முயல, பாலம் பல முறை இடிந்து போனது. மங்கம்மாள் அங்கு சென்று 3 நாள் உண்ணாமல் விரதம் இருந்தார். கனவில் ஆஞ்சநேயர் வந்து கோவில் கட்டக் சொல்ல, அங்கு ஒரு கோவில் கட்டினார். இது இன்றும் உள்ளது. நாங்கள் சென்ற போது கேட்ட கதை. இவை போன்ற பல செய்திகள் மக்களின் வாழ்வில் ஒன்றிக் கலந்துள்ளது. மக்கள் மனதில் என்றும் நிலைத்து நின்றார் மதுரை மீனாக்ஷி அம்மனைப்போல்.


Image may contain: 1 person


Image may contain: 1 person


Image may contain: one or more people and people standing

Image may contain: 1 person, standing