'அவற்கடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான்' என்பது போல, அகத்தாலும், புறத்தாலும் Clientக்கே அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கப்பட்டுவிட்டதால், அவனுடைய பண்டிகைகளைக் கொண்டாடவிட்டலும், சம்பளமில்லா கட்டாய விடுப்பு எடுக்கவேண்டியாகியது.. இந்தமுறை கிட்டத்தட்ட 12 நாட்கள் விடுமுறை... வெள்ளை மழை (snow) - வேற்று நீர் (மழை) -கொஞ்சம் வெயில் என்று மாறி மாறி நிலையில்லாமல் இருப்பதால் நீண்ட நெடுந்தூரப் பயணமே 12 நாட்களைக் கழிக்க வழி.. தீபாவளி-பொங்கல் Ticket book பண்ற மாதிரி சுமார் 4 மாதம் முன்பே Airடிக்கெட் விற்பனை தொடங்கி 'நல்லா' Plan பண்ணி கிளம்புபவர்கள் இந்த ஊரை விட்டு ஓடிவிட்டார்கள்.. இப்படி போகக்கூடிய இடம் பெரும்பாலும் 2-3 தான்- Florida, Grand canyon, எதாவது Cruise பயணம்..
நம்ப பழக்க வழக்கத்திற்கு Long Drive கொஞ்சம் கஷ்டம் தான்.. சென்ற முறை Florida போனபோது இருந்த அனுபவமே சாட்சி; (தூய தமிழில் பேசாவிட்டாலும்) தமிழ் தெரிந்தவர்களின் மத்தியில் தமிழைத் தேடுவது போல, நானும் போகும் இடமெல்லாம் Pure-Veg உணவு தேடி இரண்டுமே கிடைக்காமல் போவதே வாடிக்கை.. 'இது தனி, அது தனியாகச் சமைப்பார்கள்' என்று Veg- NonVegக்கு நண்பர்கள் விளக்கம் கொடுத்தாலும் இன்னும் மனம் ஏற்காமல் 2 நாட்கள் ஆனாலும் உண்ணாமல் கழித்திருக்கிறேன்.. இம்முறை அது சாத்தியப்படாததால் Long Drive தவிர்த்தேன்.. கடந்த 1 வாரமா, Client தங்களுடைய பண்டிகைகளுக்கு (Chritmas, NewYear) என்னிடமும் வாழ்த்துக்கள் பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.. அது பரவாயில்லை.. இங்கு வந்து நம் மதத்தை, திருவிழாக்களை மறந்து இந்தப் பண்டிகைகளை போலியாகக் கொண்டாடும் நம்மவர்கள் அலட்டல் தான் அதிகம்.. இதிகாச, புராணங்களையும், கீதையும் தந்த நம் மண்..ஆனால் நம்மவர்களும் என்னிடம் வாழ்த்து பரிமாறியதால் கொஞ்சம் அதிகமான மனச் சோர்வோடு தான் இருந்தேன்.. Offshore Team, HR, Admin அனைவரிடமிருந்தும் வாழ்த்துக்கள்.. வெட்கம் கேட்ட பிழைப்பு.. சிலருக்கு 'New Yr celebrations பற்றி விளக்கமும் கொடுத்தேன்.. அவர்கள் கேட்காமல் போனாலும் பரவாயில்லை!
இந்த நம்மாழ்வார் பாடலும், விளக்கமும் தான் இன்று வரை மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது.. நம்மவர்கள் தொலைத்துவிட்டார்கள், அதை அவர்கள் பிடித்துக்கொண்டிருந்தார்கள் சனாதன தர்மத்தை, ஹரி பக்தியை.. நம்மவர்கள் திருந்தும் நாள் எந்நாளோ?
அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவ ரிறையவ ரெனவடி யடைவர்கள்
அவரவ ரிறையவர் குறைவில ரிறையவர்
அவரவ விதிவழி யடையநின் றனரே.
***அந்தந்த அதிகாரிகள் தங்கள் தங்களுடைய ஞானத்தாலே அறியப்படுகிற பலபல மார்க்கங்களில் அந்தந்த தெய்வங்களை ஸ்வாமிகளென்றெண்ணி வணங்குவார்கள்; அந்தந்த அதிகாரிகளால் தொழப்படுகிற தெய்வங்கள் அவரவர்கள் விரும்பின பலன்களைக் கொடுப்பதில் குறையற்றனவே; எதனாலே என்னில், அந்தந்த அதிகாரிகள் தங்கள் தங்கள் விதி வழி பலன்பெறும்படியாக அந்தந்த தேவதைகளுக்கு அந்தர்யாமியாக எழுந்தருளியுள்ளான் ஸர்வஸ்வாமியான ஸ்ரீமந் நாராயணன்! அத்தெய்வங்கள் தாமாகவே பலனளிப்பதில்லை; எம்பெருமான் தங்களிடத்தில் அந்தர்யாமியாக இருப்பதால் தான் தாங்கள் பலனளிக்கத் திறமை பெறுகிறார்களென்கிறார் ***
மத மாற்றம் பற்றி எழுத வேண்டுமென்று நினைத்தேன்.. காஞ்சி பெரியவரின் 'தெய்வத்தின் குரலில்' இது பற்றி மிக அழகாகக், நயமுடன் கூறியிருக்கிறார் அனைவரும் ஒரு முறை படித்தாலே போதும்., யாருக்கும் எந்தக் குழப்பமும் இருக்காது..
தெய்வத்தின் குரல் - மதங்களின் ஒற்றுமை:
"எல்லா சமயங்களும் கடவுளை வழிபட ஏற்பட்டனவே ஆகும். எல்லா சமயங்களும் கடவுள் ஒருவர் என்றே சொல்கின்றன. ஒருவரேயான அந்தக் கடவுள் எந்த சமயத்தின் மூலம் வழிபட்டாலும் அதை ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார். எனவே, எவருமே தாங்கள் பிறந்த மதத்தைவிட்டு இன்னோரு மதத்தைத் தழுவ வேண்டியதில்லை.
கோயில், சர்ச், மசூதி, விஹாரம் முதலிய கட்டடங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படலாம். உள்ளே இருக்கிற மூர்த்தி அல்லது சின்னம் மாறுபடலாம். ஒவ்வொன்றிலும் சடங்குகளும் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் அநுக்ரஹம் செய்கிற பரமாத்மா மாறவில்லை. ஒவ்வொரு தேச ஆசாரத்தையும், ஒவ்வொரு ஜனக்கூட்டத்தின் மனப்பான்மையும் பொறுத்துப் பல்வேறு சமயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் ஒரே பரமாத்மாவை அவரவர் மனோபாவப்படி பக்தி செய்து, அவரோடு சேருவதற்கு வழி செய்பவையே. எனவே எவரும், தங்கள் மதத்தை விட்டுவிட்டு இன்னொன்றுக்கு மாறவேண்டியதில்லை. இப்படி மதம் மாறுகிறவர்கள் தாங்கள் பிறந்த மதத்தைக் குறைவு படுத்துவது மட்டுமின்றி, தாங்கள் சேருகிற மதத்தையும் குறைவு படுத்துகிறார்கள்; கடவுளையும் குறைவு படுத்துகிறார்கள்.
'தங்களது பிறந்த மதத்தில் குறை தோன்றியதால்தான் ஒருவர் அதை விடுகிறார். ஆனால் புதிதாக சேருகிற மதத்தையும் அவர் குறைவுபடுத்துகிறார் என்று ஏன் ஸ்வாமிகள் சொல்கிறார்?' என்று உங்களுக்குத் தோன்றலாம். சொல்கிறேன்; கடவுள் எல்லா மதங்களுக்கும் பொதுவானவர் என்ற எண்ணம் இல்லாமல் அவரைக் குறுக்குவதால்தானே ஒரு மதத்தைவிட்டு இன்னொன்றில் சேருகிறார்கள்? தங்கள் மதத்துக் கடவுள் பிரயோஜனமில்லாதவர் என்று நினைத்து இன்னோரு மதத்துக்குத் தாவுகிறார்கள். மாறுகிற புதுமதக் கடவுளாவது எல்லோரையும் தழுவுவதாக நினைக்கிறார்களா? இல்லை. அப்படி நினைத்தால் மாறவே வேண்டாம். இவர்கள் தாங்கள் பிறந்த மதத்திலேயே இருந்து வழிபட்டாலும், இப்போது இவர்கள் மாறுகிற மதத்தின் கடவுள் இவர்களுக்கு அநுக்கிரகம் செய்வார் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இல்லாததால்தானே மதமாற்றத்துக்கே அவசியம் ஏற்பட்டது. அதாவது தாங்கள் மாறுகிற புது மதத்துக்கும், அதன் கடவுளுக்கும்கூட இவர்கள் குறுகலான எல்லை காட்டி விடுகின்றனர். ஒரு மதத்திடம் கௌரவ புத்தி இருப்பதாக நினைத்து அதற்கு மாறுகிறபோதே அதை வாஸ்தவத்தில் அகௌரவப்படுத்தி விடுகிறார்கள்.
மற்ற மதங்களும் ஹிந்து மதத்துக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம், நம்முடைய ஹிந்து மதம் ஒன்று தான். "இது ஒன்றே மோட்ச மார்க்கம்" என்று சொல்லாமலிருக்கிறது. நம்முடைய வைதீக மதம்தான் பிறரைத் தன் மதத்துக்கு மாற்றுவது என்பதே கிடையாது. ஏனென்றால் ஒரு பரமாத்மாவை அடைவதற்கான பல மார்கங்களே பல மதங்களும் என்று நம் முன்னோர்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். ஹிந்துவாகப் பிறந்த ஒவ்வொருவனும் இந்த விசால மனப்பான்மையைக் குறித்து பெருமைப்பட வேண்டும். வேதம் 'ஒரே ஸத்தியத்தைத்தான் ஞானிகள் பல பெயர்களில் சொல்கிறார்கள்' என்கிறது. கீதையில் பகவான், 'எவன் எந்த விதத்தில், எந்த ரூபத்தில் வழிபட்டாலும் அவனுடைய சிரத்தையை நானே விருத்தியாக்கி அவனை அதே வழிபாட்டில் நிலைப்படுத்துகிறேன்' என்கிறார். ஆழ்வார் 'அவரவர் தமதம தறிவறி வகைவகை அவரவர் இறையவர்' என்கிறார். இதனால்தான் மற்ற மதங்களில் செய்வதுபோல் மதமாற்றம் செய்வது (proselytisation) , அதற்காகத் தண்டிப்பது (Persecution, Crusade, Jehad) முதலான போர்களில் படையெடுத்துச் சென்று நிற்பந்தமாகத் தங்கள் மதத்துக்கு மற்றவரைத் திருப்புவது முதலான காரியங்களில் ஹிந்துக்கள் என்றுமே இறங்கியதில்லை. நம்முடைய நீண்ட கால சரித்திரமே இதற்குச் சான்று. சகல சரித்திர ஆராய்ச்சிகாரர்களும் ஒப்புக் கொள்கிற விஷயம் இது. தூரக்கிழக்கு (Far East) முதலான தேசங்களில் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யம் முதலிய ஹிந்து ராஜ்யங்கள் ஏற்பட்ட போதுகூட நிர்பந்த மத மாற்றமே இல்லை (Forced Conversion) என்றும் நம் கலாச்சாரத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டு அந்நியர்களே நம் மதத்தைத் தாங்களாக எடுத்துக் கொண்டார்கள் என்றும் சரித்திரக்காரர்கள் சொல்கிறார்கள். அநேக சமயங்களில் வியாபாரம் முலமே நம் மத அம்சங்கள் பிற தேசங்களில் புகுந்தது என்றும், வாள் மூலம் அல்ல என்றும் சொல்கிறார்கள்.
என் அபிப்ராயப்படி ரொம்பவும் ஆதி காலத்தில் லோகம் முழுவதிலும் வேத மதம்தான் இருந்தது. பிற்பாடு ஆங்காங்கே வெவ்வேறு மதங்கள் உண்டானாலும் நம் மதத்தின் அம்சம் குறைந்தபட்சம் இடிபாடுகளாக (Ruins) பழைய ஞாபகச் சின்னங்களாக (Relics) வாவது அங்கெல்லாம் இன்னும் காணப்படுகின்றன. இப்படி நான் சொல்வதை ஒப்புக் கொள்ளாத ஆராய்ச்சிகாரர்களும் நம் பரத நாகரீகத்தை மற்ற நாடுகளில் தாங்களாகவே விரும்பி ஏற்றும் கொண்டார்களேயன்றி பலவந்தத்தின் மீதல்ல என்று ஒப்புக் கொள்கிறார்கள்.
ஒருத்தனைப் புது மதத்துக்கு மாற்றுவது என்றால் அதற்கென ஒரு சங்கு (Ritual) இருக்க வேண்டும். இப்போது 'கன்வெர்ட்' செய்கிற மதங்களில் எல்லாம் அப்படி ஒன்று—ஞானஸ்தானம் (Baptism) என்கிற மாதிரி ஏதாவது ஒன்று—இருக்கிறது. மற்ற எந்த மதத்தையும்விட மிக அதிகமான சடங்குகளை சொல்கிற ஹிந்து சாஸ்திரங்களைப் பார்த்தால், இப்படி நம் மதத்துக்கு மற்ற மதஸ்தன் ஒருத்தனை மாற்ற ஒரு சடங்கும் இருக்கக் காணோம். இதுவே நாம் மதமாற்றத்தை விரும்புகிறவர்கள் அல்ல என்பதற்கு அத்தாட்சி.
ரயிலடியில் பிரயாணிகள் வந்திறங்கியதும் ஜட்காக்காரன், ரிக்ஷாக்காரன், டாக்ஸிக்காரன் என்று பல பேர் வந்து சூழ்ந்து கொள்கிறார்கள். எவனுடைய வண்டியில் ஏறிக் கொண்டாலும் போகவேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரலாம். வண்டிக்காரர்கள் கிராக்கி பிடிப்பதற்காகப் போட்டி போடுவதைப் தவறு என்று சொல்வதற்கில்லை. அது அவர்கள் பிழைப்பு. ஆனால் கடவுள் என்கிற ஒரே லக்ஷியத்துக்கு அழைத்துச் செல்வதற்காக வெவ்வேறு மதஸ்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு மதமாற்றத்தில் முனைவது அர்த்தமற்ற காரியம்.
நதியின் மேல் பாலம் போட்டிருக்கிறது. அதில் பல வளைவுகள் இருக்கின்றன. எல்லா வளைவுகளும் ஒரே அளவாகக் கட்டப்பட்டவைதாம். ஆனால் ஒவ்வொரு வளைவுக்கும் கிட்டத்தில் இருப்பவனுக்கு அந்தந்த வளைவே பெரிதாகவும், மற்றவை சின்னதாகவும் இருக்கும். இப்படியே அந்தந்த மதஸ்தர்களுக்கும் தங்கள் மதமே பெரிதாகத் தெரிவதால், பிறரை அதற்கு அழைக்கிறார்கள். ஆனால் எல்லா வளைவுகளும் ஒரே அளவுதான். யாரும் தாங்கள் பிறந்த மதத்தைவிட்டு விலகவேண்டியதில்லை.
மதங்களுக்கிடையே கோட்பாடுகளிலும், அநுஷ்டானங்களிலும் சில வித்தியாசங்கள் இருப்பதில் தவறில்லை. எல்லா மதங்களையும் ஒரே போல் ஆக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே மாதிரி ஆக்காமலே, எல்லா மதஸ்தர்களும் மனத்தில் ஒற்றுமையோடு இருப்பதுதான் அவசியம்; 'யூனிஃபார்மிடி' அவசியமில்லை. 'யூனிடி' இருப்பதே அவசியம்."
No comments:
Post a Comment